அதற்கு பின் வந்த நாட்கள் எல்லாம் அவ்வளவு அழகானது. இருவரும் திகட்ட திகட்ட தங்களின் மண வாழ்க்கையை அவ்வளவு அழகாக வாழ்ந்தனர். இடையே தாலி பிரித்துக் கோர்ப்பது, ஆடி சீர், தலை தீபாவளி என அனைத்து நல்ல நாட்களும் வந்தது.
வீணாவின் வீட்டுக்கும் அடிக்கடி போய் வந்தனர். அவர்களும் இங்கே வந்தார்கள். அப்போதெல்லாம் பார்வதியின் கண்கள் தன்னாலே மிதுனையும் ஸ்ரீயையும் கவனிக்கும்.
இருவரும் நட்பின் அடிப்படையில் கூட ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள வில்லை. ஆனாலும் ஒருவருக்கு மற்றவரின் அருகாமை சிறு குறுகுறுப்பைத் தந்தது மட்டும் நிஜம்.
வீணா மற்றும் சத்யா இருவருக்கும் திருமணம் முடிந்து ஐந்து மாதம் கடந்திருந்தது. அன்று காலையில் எழும் போதே வீணா உடல் நிலை இயல்பாக இல்லை. ஒரு மாதிரி சோர்வும் தலை சுற்றலும் இருந்தது. லேசாக காய்ச்சலும் இருந்ததால் யாரும் குழந்தை பற்றி யோசிக்க வில்லை.
அன்று பள்ளிக்கு லீவ் போட்டு விட்டு ஓய்வு எடுத்தாள். அதற்கு பின்னரும் சரியாகாததால் தான் பாமாவுக்கு சந்தேகம் வந்தது. நேரடியாக மருமகளிடம் கேட்க அதற்கு பின் தான் வீணாவுக்கே அந்த எண்ணம் வந்தது.
உடனே சத்யாவை அழைத்து விஷயத்தைச் சொல்ல அவன் அலுவலகத்தில் இருந்து உடனே வந்து விட்டான். அவளை பத்திரமாக பெண் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல இருவருக்கும் எதிர்பார்ப்பு கிளர்ந்தது.
அவளை பரிசோதித்த மருத்துவர் அவர்கள் எதிர்பார்த்த படியே குழந்தை பற்றிய தகவலைச் சொல்ல இருவருக்கும் அவ்வளவு சந்தோஷம். வீட்டுக்கு வந்ததும் பெரியவர்களும் விஷயம் கேட்டு சந்தோஷப் பட்டனர்.
வீணாவின் வீட்டினருக்கும் தகவல் சொல்ல சொந்த பந்தத்துடன் மகளைப் பார்க்க வந்து விட்டார் குல்கர்னி. ஒரு இரண்டு நாட்கள் மட்டும் ஓய்வெடுத்து விட்டு வீணா மீண்டும் வேலையைத் தொடர்ந்தாள். ஆனால் கவனமாக இருக்கும் படி அறிவுறுத்தப் பட்டாள். அவளுக்கும் குழந்தைக்குமான சத்தான உணவைக் கொடுக்கும் பொறுப்பை பாமா ஏற்றுக் கொண்டாள்.
பேரனோ பேத்தியோ வரப் போகும் சந்தோஷத்தில் இருந்தார் தீனா. அவர் உடல் நிலையும் இப்போது சீராக இருந்தது. வீட்டில் எந்நேரமும் ஓய்வெடுக்க முடியாமல் தினமும் காலையில் இருந்து மதியம் வரை மகனுடன் அலுவலகம் வந்து விட்டு செல்வார்.
இப்போது சத்யா இன்னொரு கிளை ஆரம்பிப்பதில் பிஸியாக இருந்ததால் தந்தை அலுவலகத்திற்கு வருவது அவனுக்கு உதவியாக இருந்தது. ஆனாலும் அவரை அதிகம் வேலை எல்லாம் பார்க்க விட மாட்டார்கள் பிரகாஷும் அறிவழகனும்.
வீட்டில் குழந்தை வரப் போகுது என்று ஸ்ரீயும் மதுவும் வேறு சந்தோஷமாக இருந்தார்கள். ஸ்ரீ இப்போது உயர் கல்வி படிப்பில் சேர்ந்திருந்தாள். கல்லூரியில் எந்த நட்பையும் அவள் வளர்த்துக் கொள்ள வில்லை. அவளுக்கு இருக்கும் ஒரே தோழி மது மட்டுமே.
தினமும் குழந்தையுடன் பேசிக் கொண்டே இருப்பது சத்யா தான். வீணாவின் வயிற்றைப் பிடித்துக் கொண்டு பேசுகிறேன் என்று வீணாவை ஒரு வழி செய்வான். கணவனில் இருந்து தந்தை என்ற ஸ்தானம் ஏற்ற பிறகு இன்னும் பொறுப்பு கூடியது போல ஒரு உணர்வு அவனுக்கு. வீணா மீதான அவனது காதல் இன்னும் அதிகரித்துக் கொண்டே தான் சென்றது. அவளை கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொண்டான் என்று சொல்லலாம்.
ஆனாலும் என்ன தான் காதல் அதிகம் இருந்தாலும் அவ்வபோது அவளை சீண்டி அவளிடம் வாங்கிக் கட்டியும் கொள்வான்.
அடுத்த மூன்று மாதத்தில் மதுவுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்கள். சும்மா சைட் அடிக்கிறேன் என்று மது சொல்லிக் கொண்டாலும் திருமணம் என்றதும் அவளுக்கு அறிவு நினைவு தான்.
ஏனோ அவனிடம் காதலைச் சொல்ல வில்லை என்றாலும் அவள் மனதுக்கு தெரியுமே அவன் மட்டுமே நெருக்கமானவன் என்று. கூடவே அவனும் அவளை ஆர்வமாக அவ்வபோது பார்த்தாலும் இது வரை காதல் என்று சொன்னதில்லை. அதனால் என்ன முடிவு எடுக்க என்று தெரியாமல் பெற்றோரிடம் மறுப்பும் சொல்ல முடியாமல் தவித்தாள்.
காதல் என்றாலே வலி தான் போலும். மதுவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் விஷயம் வீணா மூலம் சத்யாவுக்கு தெரிய வர உடனே நண்பனைத் தான் சத்யா தேடிச் சென்றான்.
“விஷயம் தெரியுமா தெரியாதா டா?”
“என்ன விஷயம் மச்சான்?”, என்று புரியாமல் கேட்டான் அறிவு.
“மதுவுக்கு அவங்க வீட்ல கல்யாணம் பேசுறாங்க. மாப்பிள்ளை வேற பாக்குறாங்க”, என்று சொன்னதும் அறிவிடம் ஒரு அமைதி.
“என்ன டா அமைதியா இருக்க?”
“என்னை என்ன சொல்ல சொல்ற?”
“மதுவை உனக்கு பிடிக்கும் தானே?”
“பிடிக்கும் தான். ஆனா அவளை பொண்ணு கேக்குற அளவுக்கு எல்லாம் எனக்கு தகுதி இருக்கா என்ன? அவங்க பணக்காரங்க. நாங்க அப்படி இல்லை. இப்ப தான் என் ரெண்டு தங்கச்சிக்கும் கல்யாணம் பண்ணி வச்சிருக்கேன். அந்த கடனையும் இனி தான் அடைக்கணும். அவங்க எல்லாம் பெரிய இடம் டா. அவளும் ஆர்வமா பாத்திருக்கா. ஆனா இது அவ்வளவு பெரிய விஷயம் இல்லை டா. அவளுக்கு என்னை விட நல்ல வாழ்க்கை அமையும். அவ நல்லா இருக்கட்டும். வா வேலையைப் பார்ப்போம்”, என்று நிதர்சனத்தை எடுத்துச் சொல்லி விட்டு சென்று விட்டான்.
ஆனால் இதை சத்யாவால் அப்படியே விட முடிய வில்லை. என்ன இருந்தாலும் நண்பன் ஆயிற்றே. அதை விட நல்லவன். மதுவுக்கு இவனை விட வேறு நல்லவன் எங்கே கிடைப்பான் என்று எண்ணியவன் உடனே மிதுனை அழைத்து விட்டான். ‘
“சொல்லுங்க மாம்ஸ்”
“எங்க மாப்பிள்ளை இருக்க?”
“வீட்ல தான்”
“சரி அங்கயே இரு. நான் இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க வரேன்”, என்று சொன்னவன் நேராக சென்றது தந்தையிடம் தான்.
அவரிடம் விஷயத்தைச் சொல்ல அவருக்கும் மகன் முடிவே சரி என்று பட்டது. இருவரும் உடனே மிதுனை தான் காணச் சென்றார்கள்.
சத்யா வருகிறான் என்று மிதுன் சொன்னதுமே பார்வதிக்கு ஒரு படபடப்பு. மிதுன் மற்றும் ஸ்ரீ திருமண விஷயம் பேச வருகிறார்களோ என்று நினைத்துக் கொண்டாள்.
மனதுக்குள் அவளுக்கு சம்மதம் தான். ஏனென்றால் இத்தனை நாட்களாக ஸ்ரீயை அவள் கவனித்துக் கொண்டு தானே இருக்கிறாள். அதனால் இப்போது தடை எதுவும் இல்லை. மகனுக்கு பெண் தேடினால் முதல் சாய்ஸ் ஸ்ரீ தான் என்று ஏற்கனவே முடிவு எடுத்திருந்தாள்.
அதனால் அவர்கள் வந்ததும் ஆர்வமாகவே அவர்களை வரவேற்று அமர வைத்தாள். அவர்கள் வரும் தகவல் கேட்டு சேகர் மற்றும் குல்கர்னியும் அங்கே வந்து விட்டார்கள்.
யார் பேச்சை ஆரம்பிக்க என்று தெரியாமல் அமைதியாக இருக்க “என்ன ஆச்சு மாம்ஸ் அவசரமா வந்த மாதிரி இருக்கு?”, என்று கேட்டான் மிதுன்.
“இல்லை உன் தங்கச்சி மதுவுக்கு மாப்பிள்ளை பாக்குறதா வீணா சொன்னா. அதான் அது விஷயமா உங்க கிட்ட பேசிட்டு போகலாம்னு தான் வந்தோம்”, என்றான் சத்யா. பார்வதிக்கு சப்பென்று போனது.
“மது கல்யாண விஷயமா நாம மதுவோட அம்மா அப்பா கிட்ட தானே பேசணும்?”, என்று கேட்டான் மிதுன்.
“ஆமா தான், ஆனா நாங்க நேரா போய் என்ன பேசன்னு தெரியலை. அதான் நீங்களும் வந்தா நல்லா இருக்கும். மாமாவும் சின்ன மாமாவும் வரணும் எங்க கூட. என் நண்பன் அறிவு இருக்கான்ல? அவனுக்கு மதுவை கேக்கலாம்ன்னு ஒரு எண்ணம்”, என்று விஷயத்தைச் சொல்லி விட்டான்.
“அறிவு அண்ணனுக்கா? நல்ல சாய்ஸ் தான்”, என்று மிதுன் சொல்ல “ஆமா மாப்பிள்ளை, அறிவு நல்ல பையன் தான். உங்க நண்பன் வேற. வாங்க நாம மது வீட்ல போய் பேசலாம்”, என்றார் குல்கர்னி.
“நானும் வரேன்”, என்று சொல்லி சேகரும் எழுந்து கொண்டார்.
ஆண்கள் ஐந்து பேரும் மது வீட்டுக்குச் செல்ல அவர்களுக்கு திகைப்பு தான். மதுவின் பெற்றோர் மீனா மற்றும் சுந்தர் இருவரும் “வாங்க வாங்க, உக்காருங்க”, என்று வரவேற்றார்கள்.