பேச்சு வார்த்தை முடிந்ததும் அவர்கள் எழுந்து கொள்ள அவர்களை உணவு அருந்த சொன்னாள் அம்சவேணி. “இப்ப தானே டீ குடிச்சோம். வீட்ல போய் மாத்திரை போட்ட அப்புறம் தான் சாப்பிடணும். ஸ்ரீயும் தனியா இருப்பா. நாங்க கிளம்புறோம்”, என்று சொல்லி விட்டார் தீனா.

            அனைவரிடமும் சொல்லி விட்டு கிளம்ப வீணா அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள். சரியாக யாரும் பார்க்காத நேரம் அவளைப் பார்த்த சத்யா பட்டென்று கண்ணடித்து விட்டு காரில் ஏறினான். லேசாக ஜெர்க் ஆனாலும் அவனை முறைத்துப் பார்த்தாள் வீணா.

            அடுத்து வந்த நாட்கள் வேகமாக கடந்தது. திருமண வேலைகள் மிக வேகமாக நடந்தது. மகனின் திருமண பூரிப்பில் தீனாவின் உடல் நிலை கூட சரியாக இருந்தது. ஆனாலும் அவருக்கு வேலைகளை முடிந்த அளவு குறைத்துக் கொடுத்தான் சத்யா.

            வீணா வீட்டில் மிதுன் உதவியாக இருக்க குல்கர்னிக்கு பக்க பலமாக இருந்தது. தாலி எடுப்பது, உடைகள் எடுப்பது, அடித்து வந்த பத்திரிக்கைகளை உறவினர்களுக்கு கொடுப்பது என அனைவரும் பம்பரமாக சூழன்றார்கள். பத்து நாட்கள் குறைவு தான் என்றாலும் இந்த முகூர்த்தத்தை தவற விட யாருக்கும் விருப்பம் இல்லை.

            வீணாவுக்கு சத்யா மீது கோபம் இல்லை என்றாலும்  இருப்பது போல சும்மா வீம்பாக முகத்தை வைத்திருந்தாள். அவளுடன் தனியே பேச சந்தர்ப்பம் உடை எடுக்க போகும் போது தான் கிடைத்தது. அப்போதும் அவளுடன் ஸ்ரீ இருக்க அதிகம் பேச முடியவில்லை. அவன் பேச எண்ணினாலும் அவள் முறைத்த படியே இருக்க எப்படி பேசவாம்?

            ஆனாலும் கிடைத்த தனிமையில் “ரொம்ப பன்ற டி? அலைய விடுற என்னை”, என்றான் சலிப்பாக.

            “நான் ஒண்ணும் அலைய விடலை. நானா அலையச் சொன்னேன்?”

            “சரி மேடம்க்கு இந்த கோபம் எப்ப போகும்?”

            “எனக்கு கோபமெல்லாம் இல்லை. ஆனா வருத்தமா இருக்கு. கொஞ்ச நாள் எனக்கும் டைம் கொடுங்க. என் மனசு மாறிரும்”

            “கண்டிப்பா டைம் கொடுக்குறேன். ஆனா பாக்கும் போது பேசாம முகத்தை தூக்கி வச்சிட்டு இருக்காத. கஷ்டமா இருக்கு வீணா”, என்று சொல்ல அதற்கு மேல் அவளுக்கும்  எப்படி முகத்தைக் காட்ட என்று தெரிய வில்லை. அவன் தவறை உணர்ந்த பிறகு அதையே சொல்லிக் காட்டி என்ன பயன்?

            “சரி நான் மறந்துறேன் போதுமா? ஆமா ஐயா கிட்ட என்ன திடீர்னு இவ்வளவு மாற்றம்?”

            “என்ன டி மாற்றம்? எனக்கு புரியலை”

            “என்னை உங்களுக்கு பிடிக்கவே செய்யாது. ஆனாலும் என்னை சமாதானப் படுத்த இவ்வளவு துடிக்கிறீங்க?”

            “ஏய் அதான் சொன்னேனே? இப்ப உன்னை தவிர வேற யாரையும் பிடிக்க மாட்டிக்குது”

            “அப்ப பிடிக்கலை, இப்ப பிடிக்குது. அப்புறம் பிடிக்காம போகுமா?”

            “ஏய் வேணும்னு வம்பு பண்ணுறியா?”, என்று அவன் உண்மையிலே அலற வாய் விட்டு சிரித்தாள் வீணா.

            “அண்ணி அம்மா கூப்பிடுறாங்க”, என்று சொல்லிக் கொண்டே அங்கு வந்த ஸ்ரீ “என்ன இப்படி சிரிக்கிறீங்க? அதுவும் இந்த சிடு மூஞ்சி பக்கத்துல இருந்துகிட்டு?”, என்று சொல்லி அண்ணனை வார வீணா இன்னும் சிரித்தாள்.

            இருவர் காதையும் திருகிய சத்யா “என்னையா கிண்டல் பண்ணுறீங்க? வாலுங்களா”, என்று கேட்டு சிரித்தான்.

            ஒரு வழியாக வீணாவுக்கும் சத்யாவுக்குமான திருமண நாளும் வந்தது. மணமக்களுக்கு மண்டபத்தில் இருக்கும் தனித் தனி அறைகளில் அலங்காரம் நடந்து கொண்டிருந்தது.

            ஸ்ரீ தான் அங்கே இங்கே என அலைந்து எல்லாம் எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள். மாம்பழ நிறத்தில் பட்டுப் புடவை அணிந்திருக்க அனைவரின் கண்களையும் கவர்ந்தாள்.

            மிதுன் அந்த பக்கமாக செல்ல “மிதுன் இங்க வாங்களேன்”, என்று அழைத்தாள் ஸ்ரீ.

            “என்ன ஸ்ரீ?”

            “டைனிங் ஹால்ல எங்க அப்பா இருப்பாங்க. கொஞ்சம் ஐயர் கூப்பிடுறார்ன்னு வரச் சொல்றீங்களா?”, என்று கேட்டதும் சரி என்று சொல்லிச் சென்றான்.

            “அது யாரு பார்வதி நம்ம மிதுன் கிட்ட பேசிட்டு இருக்குறது?”, என்று மிதுனின் அன்னையிடம் கேட்டாள் மிதுனின் பெரியம்மா.

            “அது தான் நம்ம வீணாவோட நாத்தனார் அக்கா”

            “பொண்ணு மகாலக்ஷ்மியாட்டம் இருக்கா. பேசாம மிதுனுக்கு முடிச்சிறலாமா?”

            “பாக்க நல்லா இருந்து என்னத்துக்கு?”, என்று கேட்ட மிதுனின் அன்னை அடுத்த வார்த்தை பேச வரும் போது “அம்மா”, என்ற மிதுனின் அரட்டல் கேட்டது.

            இருவரும் திரும்பிப் பார்க்க அங்கே வந்த மிதுன் “பெரியம்மா உங்களை பெரியப்பா கூப்பிடுறாங்க. நம்ம அண்ணி வீட்டு சொந்தக்காரங்க யாரோ உங்களைப் பாக்கனும்ன்னு சொன்னாங்களாம்”, என்றான்.

            “இதோ போறேன் மிதுன்”, என்று சொல்லி விட்டு பெரியம்மா சென்றதும் “நீ என்ன மா பண்ணுற?”, என்று அரட்டலாக கேட்டான் மிதுன்.

            “என்ன டா?”

            “ஸ்ரீ பத்தி என்ன சொல்ல வந்த?”

            “ஆமா அவ தான் நல்லவ மாதிரி உனக்கு அவளை அக்கா பொண்ணு கேக்க சொல்லுச்சு. அந்த கடுப்புல சொல்ல வந்தேன். நான் ஒண்ணும் இல்லாதத சொல்லலையே? போதை மருந்து எடுத்து கடத்திட்டு வேற போயிருக்காங்க. அங்க என்ன நடந்துச்சுன்னு கூட தெரியலை”

            “அம்மா”

            “இங்க பாரு மித்து என்னை மிரட்டுற வேலையெல்லாம் வச்சிக்காத. இனி அவ கிட்ட பேசின நான் மனுஷியா இருக்க மாட்டேன்”, என்று சொல்லி விட்டுச் சென்றாள்.

            அவள் சென்றதும் அவன் கண்கள் தன்னால் ஸ்ரீ புறம் செல்ல ஏனோ அவன் கண்களுக்கு முதல் முறை  அவள் அதீத அழகோடு இருப்பது போல இருந்தது. ஆனால் அன்னை பேச்சு நினைவில் வர நிச்சயம் அது சாத்தியப் படாது என்று எண்ணிக் கொண்டு அவன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க எதற்கோ திரும்பிப் பார்த்த ஸ்ரீ அவன் பார்வையைக் கண்டு கொண்டாள்.

            அவள் பார்த்ததும் அவன் அப்படியே சாதாரணமாக அவளைப் பார்த்து புன்னகைத்திருந்தால் அவளும் அதை கடந்திருப்பாள். ஆனால் அவளை ரசித்துக் கொண்டிருந்தவன் அவள் திரும்பியதும் பதட்டத்தில் பட்டென்று பார்வையை வேறு பக்கம் மாற்றி மீண்டும் திருட்டுத் தனமாக அவளைப் பார்க்க இப்போது அவளுக்குள் மெல்லிய படபடப்பு.

            அவன் பார்க்கிறானா என்று அவள் மீண்டும் மீண்டும் பார்க்க “அச்சோ நான் பாத்ததைப் பாத்துட்டாளே?”, என்ற பதட்டத்தில் அவனும் அடிக்கடி பார்த்துக் கொண்டிருக்க ஏனோ இருவருக்குள்ளும் அழகான உறவு மலர்ந்தது.

            ஆனால் இதை யார் கவனிக்க வில்லை என்றாலும் மிதுனின் அன்னை பார்த்து விட்டாள். மகனைத் தவிர அவளுக்கு வேறு என்ன முக்கியம் இருக்கிறது? அதனால் எதையோ எடுப்பது போல ஸ்ரீ அருகில் சென்ற பார்வதி “என்ன பார்வை எல்லாம் தினுஷா இருக்கு ஸ்ரீ? இந்த ஊரும் ரெண்டு வீட்டு சொந்தமும் கூடி இருக்கு. பொம்பளைப் பிள்ளையா கண்ணையும் மனசையும் அலைபாய விடாம இரு. மறுபடி ஒரு கெட்ட பேர் வந்தா உங்க அப்பா தாங்குவாரான்னு பாரு. எங்க வீணாவோட நாத்தனார்ன்னு தான் அக்கரையா சொல்றேன். தப்பா எடுத்துக்காத சரியா மா?”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டாள்.

            அன்னை அவளிடம் பேசுவதும் அதற்கு ஸ்ரீ முகம் சுருங்கிப் போவதும் அவள் கண்கள் கலங்குவதும் அதை அவள் அடக்குவதும் நன்கு தெரிந்தது மிதுனுக்கு.

            அப்போது “மாப்பிள்ளையை அழைச்சிட்டு வாங்கோ”, என்று ஐயர் குரல் கொடுக்க ஸ்ரீயை விட்டு பார்வையை திருப்பியவன் சத்யாவை அழைக்கச் சென்றான். ஆனால் மனது மட்டும் அவனுக்கு பாரமாக இருந்தது.

            சத்யாவை கை பிடித்து மேடைக்கு அழைத்து வந்த மிதுனின் கண்கள் ஸ்ரீயைத் தேட அவள் அங்கே இல்லை. ஒரு மாதிரி பரபரப்பாக அனைத்து இடத்திலும் அவன் கண்கள் அவளைத் தேடியது.

            பாத்ரூமில் இருந்த ஸ்ரீ ஒரு மூச்சு அழுது தீர்த்தாள். பின் “அவங்க சொன்னதும் சரி தானே? நீ உன் பார்வையை மிதுன் நோக்கி அலைய விட்ட தானே? நேத்து வரைக்கும் குணா, இன்னைக்கு மிதுன், நாளைக்கு யாரோன்னு தானே நினைப்பாங்க? இதுல போதை வேற? அவங்க நல்லவங்களா இருக்கப் போய் தான் அமைதியா உன் கிட்ட மட்டும் வந்து சொல்லிருக்காங்க? வேற யாராவது இருந்தா அவங்க பையனை பாத்ததுக்கு அசிங்கப் படுத்திருப்பாங்க. நீ பண்ணின பாவம் உன் வாழ்க்கை முழுசும் உன்னை துரத்தும். இனி எந்த ஆம்பளையும் உனக்கு வேண்டாம். மிதுன் நல்லவன். அவனை டிஸ்டர்ப் பண்ணாத. அவன் சாதாரணமா கூட உன்னைப் பாத்துருக்கலாம்”, என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டவள் அவளுக்கு கொடுத்திருந்த அறையில் முகத்துக்கு லேசாக மேக்கப் போட்டு விட்டு வெளியே வந்தாள்.

            “பொண்ணை நீ தான் கூட்டிட்டு வரணும். எங்க போய்ட்ட ஸ்ரீ?”, என்று பாமா கேட்க “ரெஸ்ட் ரூம் போனேன் மா”, என்று சொல்லி சமாளித்தவள் அடுத்து வந்த நிமிடங்களில் முகத்தை  சாதாரணமாக வைக்க முயற்சி செய்தாள். மற்ற யாரும் கண்டு பிடிக்க வில்லை என்றாலும் அவள் உணர்வுகள் மிதுனுக்கு நன்கு புரிந்தது.

            ஒருவரை நமக்கு பிடிக்க வேண்டும் என்றால் அதற்கு பல மாதங்களோ பல ஆண்டுகளோ வேண்டும் என்று இல்லையே. சில நிமிடங்கள் போதுமே. அப்படிப் பட்ட நிமிடம் அது மிதுனுக்கு. ஆனால் அவன் அன்பை ஏற்றுக் கொள்ள ஸ்ரீ தயாராக இருக்க வேண்டுமே?

தொடரும்..