ஒரு பாழ் அடைந்த கட்டிடத்தில் எரிச்சலுடன் அமர்ந்திருந்தான் அகில். இவ்வளவு சீக்கிரத்தில் மாட்டுவோம் என்று அவன் கனவில் கூட நினைக்க வில்லை. ஸ்ரீயை கடத்தியது தான் முதல் தவறு என்று புரிந்தது.
மீண்டும் மீண்டும் சத்யா மட்டுமே ஜெயித்துக் கொண்டிருக்கிறான் என்ற கோபம் அவனுக்குள் எழுந்தது. இந்த உலகத்தில் அகில் மொத்தமாக வெறுக்கும் விஷயங்களில் ஒன்று சத்யா.
ஒருவனின் சிரிப்பு இன்னொருவனின் மனதில் இத்தனை பெரிய வன்மத்தை தூண்டி விடுமா என்ன? ஆம் தூண்டி விடும். அகிலுக்கு அப்படி தான். சிறு வயதில் இருவரும் ஒன்றாக விளையாடியவர்கள் தான்.
எப்போது அகிலின் தந்தை இறந்தாரோ அப்போது இருந்தே அகில் மனதில் பல மாற்றம். அவனுடைய அன்னை சாரதா அவனுடைய தங்கைக்கு கொடுத்த முக்கியத்துவத்தை அவனுக்கு கொடுக்க வில்லை. அப்போதே தனிமை பட்டுப் போனான்.
சிறிது சிறிதாக அவனுக்குள் இருந்த தனிமை அவன் மனதை வேறு மாதிரி மாற்றியது. கோபம், முரட்டு குணம் என அவனுடைய எல்லா விஷயங்களுமே மாறியது.
இதை மன ரீதியாக சாரதா எப்போதோ சரி செய்திருக்கலாம். சிறு வயது மகனையும் கையில் கைக் குழந்தையையும் வைத்துக் கொண்டு கணவனை இழந்த கைம்பெண்ணான சாரதா கண்ணீரில் மூழ்கி இருக்க மகனை கவனிக்காமல் இருந்ததின் பலன் அகில் அவர்களின் கையை விட்டுச் சென்றிருந்தான்.
அவனை யாராவது கிண்டல் செய்தால் அடிப்பதில் ஆரம்பித்து தவறான சகவாசமும் அவனுக்கு வந்தது. ஒழுங்காக படிக்காதது, தேவையில்லாத வம்பில் சிக்குவது, யாரையாவது அடிப்பது என அவனது பேர் பள்ளியில் கெட ஆரம்பித்து வீட்டுக்கு புகார் சென்றது. பள்ளியில் இருந்து அவனை விரட்டி விடுவோம் என்று சொன்னார்கள்.
சாரதா தனக்கு இருந்த வாழ்வின் போராட்டத்தில் அண்ணன்களை நம்பி இருந்த நிலை என அனைத்தும் சேர்ந்து மகனை அடி வெளுத்து விட்டாள். அந்த தலைமை ஆசிரியரின் காலில் விழுந்து அவன் படிப்பை தொடர வைத்தாள். அன்னையின் நிலை அவனுக்கு என்ன சொன்னதோ பள்ளியில் சேட்டையை குறைத்தான். ஆனால் போதை பழக்கத்துக்கு அடிமையாக ஆரம்பித்தான்.
ஒரு கட்டத்தில் அந்த அடி வெறுத்துப் போனது சாரதாவுக்கு. போதா குறைக்கு “சத்யா எப்படி இருக்கான் பார்? அவனை மாதிரி தானே சாப்பிடுற? அவன் புத்தி உனக்கு எப்படி இல்லாம போச்சு? அவன் கிட்ட படிக்கணும் டா நீ? அவனை மாதிரி ஒரு பிள்ளை இல்லையேன்னு வேதனையா இருக்கு? உன் அப்பா போனதுக்கு பதிலா நீ செத்து போயிருக்கலாம்? நீ இப்படி எல்லாம் செய்வேன்னு தெரிஞ்சு தான் உன் அப்பா போய்ட்டாரோ?”, என்று அவனிடம் இப்படியே பேசி பேசி அவனை மூர்கமாக மாற்றி விட்டார் சாரதா. ஒரு அன்னையின் இயலாமை அவனை மனிதனாக வாழ விட வில்லை.
அதுவும் வீட்டுக்கு வரும் சொந்த பந்தங்களிடமும் இவனை நினைச்சா தான் கவலையா இருக்கு? என்ற ரீதியில் பேசி வைக்க அவர்கள் அவனைப் பார்க்கும் பார்வை நடத்தும் விதம் எல்லாம் சேர்ந்து உறவுகளையே வெறுக்க வைத்தது.
வளர வளர கூட பிறந்த தங்கை கூட அவனிடம் பயந்து விலகி சத்யாவிடம் ஒட்ட வாழ்வே வெறுத்துப் போனது அகிலுக்கு.
அவன் வாழ்வே திசை மாறிப் போனாலும் கல்லூரி வரை படித்தான். டிகிரி வாங்கினானா இல்லையா என்று யாருக்குமே தெரியாது. ஆனால் கஞ்சா என்னும் போதை அவனை சந்தோஷமாக வைத்திருந்தது. அதற்கு அடிமையானான். அவனுக்கென்று சில கிறுக்கு நண்பர்கள், அவனுக்கென்று தனி உலகம். அவன் இருக்கிறானா செத்தானா என்று யாரும் கேட்பதில்லை. சாப்பிட்டானா இல்லையா என்று கூட யாரும் கவலைப் படுவதும் இல்லை. அவன் வீட்டுக்கு வரவில்லை என்றால் கூட எங்கே குடிச்சிட்டு கிடக்கானோ என்று தான் பேசினார்கள்.
ஒரு முறை அடி பட்டு மருத்துவமனையில் மூன்று நாள் இருந்து வந்தவனை அவனது அன்னையும் சரி மாமாமார்களும் சரி தவறாக பேச அன்றில் இருந்து அடிக்கடி வெளியே தங்க ஆரம்பித்தான்.
அவனது தங்கை திருமணத்திலும் அவன் ஒதுக்கப் பட்டான். மாப்பிள்ளை யார் என்ன என்று கூட சொல்லாமல் திருமணமே முடிந்து விட்டது. வீட்டுக்கு வந்த மாப்பிள்ளை சுந்தர் ஜட்ஜ் வீட்டுக் குடும்பத்தில் இருந்து வந்தவன். சுந்தர் ஆடிட்டர் என்றாலும் அவர்கள் குடும்பமே கொஞ்சம் பகட்டாக ஒழுக்கத்தோடு தான் இருக்கும். அவர்களிடம் அகிலால் நெருங்க கூட முடிய வில்லை.
“மாப்பிள்ளை வீட்டுக்கு வந்துருக்கார் டா. அவருக்கு இந்த கஞ்சா போதை எல்லாம் பிடிக்காது. என் பொண்ணாவது நல்லா வாழ்ந்துட்டு இருக்கான்னு நிம்மதியா இருக்கேன். அதுல மண்ணள்ளி போட்டுறாத. ஒரு ரெண்டு நாளைக்கு வீட்டு பக்கமே வராத”, என்று சாரதாவே சொல்ல அவர்கள் வந்தால் இவன் அங்கே செல்லவே மாட்டான்.
இப்படியே நாட்கள் கடக்க அவனது தங்கைக்கு பிரம்மாண்டமாக வளைகாப்பு நடந்தது. அன்று அதீத கஞ்சா போதையில் அகில் வீட்டுக்கு சென்று விட்டான்.
அவன் வந்த நிலையும் அவனது உடையும் அனைவருக்கும் சிறு வெறுப்பைத் தான் கொடுத்தது. அனைவரும் அவனை ஏன் வந்த என்ற முறையில் பேச சின்ன மாமா அடிக்க வர பெரிய மாமா வெளியே விரட்ட இவனும் போதையில் அனைவரையும் தாருமாறாக பேசி விட்டான். என்ன பேசினான் என்று கூட அவனுக்கு தெரியாது.
வந்திருக்கும் மாப்பிள்ளை வீட்டினர் முன்னால் அவன் இப்படி நடந்து கொண்டதை மன்னிக்க முடியாமல் “இனி நீ இந்த வீட்டு பிள்ளையே இல்லை”, என்று சொல்லி தான் தீனா அவனை அடித்து விரட்டினார்.
அங்கிருந்தவர்களுக்கு அவனால் தான் அவமானம் ஆனது. கனவுகளுடன் வயிற்றில் பிள்ளையை சுமந்திருந்த அவள் தங்கை கூட அழுது கொண்டிருந்தாள். ஆனால் அகிலுக்கு அவனுக்கு மட்டும் தான் அவமானம் நடந்தது போல இருந்தது. அன்று அனைவரின் முன்னிலையில் அவன் பட்ட அவமானம் அனைவரும் சேர்ந்து அவனை வீட்டை விட்டு வெளியே அனுப்பியது எல்லாம் சேர்ந்து மொத்தமாக வீட்டை விட்டு வந்து விட்டான்.
அப்படி வந்தவன் எந்நேரமும் போதையில் திளைக்க ஆரம்பித்தான். கழுத்தில் போட்டிருந்த நகையை விற்று கஞ்சா வாங்கும் அளவுக்கு அவன் நிலைமை மோசமானது. கையில் இருந்த பணமும் தீர்ந்து போதையும் தேவைப்பட ஒருவனின் பர்சை திருடத் தெரியாமல் திருடி அனைவரிடமும் அடி வாங்கியவனை ஒருவன் காப்பாற்றி தன்னுடன் அழைத்துச் சென்றான்.
அங்கே போன பிறகு தான் தெரிந்தது அது பெரிய போதை கடத்தல் கும்பல் என்று. அங்கே போன பிறகு அவனுக்கு என்று தனி உலகம் உருவானது. கையில் பணம் அதிகமாக புழங்கியது. ஆனால் போதை பழக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர ஆரம்பித்தான். முற்றிலும் விட்டுவிட்டான் என்று சொல்ல முடியாது. அவனுக்கு பொறுப்புகள் அதிகம் ஆனது.
“இங்க பாரு அகில், இத்தனை நாள் உன்னை நான் பாத்துட்டு தான் இருக்கேன். உன்னை முழுசா நம்பவும் செய்றேன். நான் நாளைக்கு பாரின் போறேன். நான் போன அப்புறம் இங்க எல்லாத்தையும் நீ தான் பாத்துக்கணும். இந்த வீடு இங்க இருக்குற நம்ம பசங்க முக்கியமா சரக்கு எல்லாம் உன் வசம் தான். நாம செய்ற தொழில் தப்பு தான். ஆனா நாம பண்ணலைனா வேற யாராவது பண்ணப் போறாங்க. நீ என்னோட வலது கை மாதிரி. உன்னை நம்பி இதை விட்டுட்டுப் போறேன். பாத்துக்கோ. அதுக்கப்புறம் உனக்கு ரெண்டு முகம் இருக்கணும். அப்ப தான் ஏதாவது ஆபத்து வந்தா தப்பிக்க முடியும், நான் அதுக்கு ஏற்பாடு பண்ணுறேன்”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டார்.
அன்றில் இருந்து முதலாளிக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணி போதை விற்பனையில் தான் அவன் கவனம் சென்றது. மிகப் பெரிய லாபத்தை கொண்டு வந்தான். தொழிலும் வளர்ந்தது.
அப்போது ஒரு நாள் தீனா தன்னுடைய குடும்பத்துடன் சந்தோஷமாக சிரித்த படி ஒரு ரெஸ்டாரண்டில் அமர்ந்திருந்தார். அனைவரின் சிரிப்பும் அவனுக்கு மிளகாயை அறைத்துப் பூசியது போல இருந்தது.
அவர்களைப் பழி வாங்கவே அவர்கள் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று நோட்டம் விட ஆரம்பித்தான். அந்த தலைவனுக்கு செல்லப் பிள்ளையாக அவன் இருக்க ஏகப் பட்ட சலுகை அவனுக்கு. கையில் கோடிக் கணக்கில் பணம் என தனி சாம்ராஜியத்தில் வாழ்ந்து கொண்டிருந்தான். அவனுக்கு என தனி முகமூடிக்கு கூட பல லட்சம் செலவானது. அச்சு அசல் வேறு ஒரு மனிதன் போலவே அவனை மாற்றி விடும். நிறைய இடத்தில் அதை வைத்து தான் தப்பித்துக் கொள்வான்.