அத்தியாயம் 11

காதலின் ஆழம்

கண்டு கொண்டேன்,

உந்தன் இதயக் கடலில்!!!

மாலினி சொன்ன உண்மையை யாராலும் ஏற்றுக் கொள்ள முடிய வில்லை. வேறு ஏதோ ஒரு பகைவன் தான் இந்த அளவுக்கு செய்கிறான் என்று எண்ணி இருந்தார்கள் சத்யாவும் தீனாவும். ஆனால் அவர்களின் குடும்பத்தையே கெடுக்க நினைக்கிறவன் அகிலாக இருக்கும் என்று எதிர் பார்க்கவே இல்லை.

“பிரகாஷ், இந்த பொண்ணை நம்ம கஷ்டடில வை. அந்த அகில் கிடைச்சதுக்கு அப்புறம் இவளை என்ன செய்யன்னு யோசிக்கணும்”, என்றார் தீனா.

“நான் தான் எல்லா உண்மையையும் சொல்லிட்டேன்ல அங்கிள்? என்னை விட்டுருங்களேன்”, என்றாள் மாலினி.

“என்னது உன்னை விடனுமா? என் வீட்டோட நிம்மதியை கெடுத்து என் பிள்ளைகள் மனசை நோகடிச்ச உன்னை அப்படியே விடனுமா? கேவலம் பணத்துக்காக இவ்வளவு பெரிய வேலையை செஞ்சிருக்கியே? அந்த பணத்தை வச்சு உன் குடும்பத்தை உன்னால தக்க வைக்க முடிஞ்சதா? அவங்க எல்லாம் சூடு சுரனை உள்ளவங்க. அதான் போய்ட்டாங்க. கேவலம் என் கிட்ட வந்து பணத்தை கேட்டுருந்தா கூட பிச்சையா போட்டிருப்பேன். முதல்ல அந்த அகில் கிடைக்கட்டும். அப்புறம் உனக்கு இருக்கு”, என்றவர் மற்றவர்களை அழைத்துக் கொண்டு வெளியே வந்தார்.

“இப்ப என்ன செய்ய போறோம் சம்பந்தி? அந்த அகில் யாரு? இப்ப நம்ம ஸ்ரீயை எப்படி கண்டு பிடிக்க போறோம்? இந்த பொண்ணு சொல்றதை பாத்தா விஷயம் ரொம்ப பெருசா இருக்கும் போலயே?”, என்று கேட்டார் குல்கர்னி.

“நான் கூட விஷயம் பெருசா இருக்கும்ன்னு தான் நினைச்சேன் சம்பந்தி. ஆனா அது அகிலா இருக்கவும் தான் நிம்மதியா இருக்கு. அவன் சரியான சைக்கோ சம்பந்தி. ஆனா இவன் இவ்வளவு கேவலமான வேலை பண்ணுவானு நினைக்கலை. அவன் என்னோட தங்கச்சி பையன் தான்?”

“என்னது தங்கச்சி பையனா?”, என்று எண்ணி மற்றவர்கள் அதிர்ந்து போனார்கள்.

“ஆமா சம்பந்தி, என் தங்கச்சி பையன் தான். வெறும் சொத்து தகராறு தான். அதுக்காக இப்படி பண்ணுவான்னு தெரியாது. அது மட்டும் இல்லாம அவனை எங்க குடும்பத்துல இருந்தே ஒதுக்கி தான் வச்சிருக்கோம். அவன் நம்ம சத்யா கூட தான் படிச்சான். சின்ன வயசுலே விளைஞ்சது. ஸ்கூல் படிக்கும் போதே சிகரட் கஞ்சான்னு ரொம்ப கெட்டுப் போய்ட்டான். என் தங்கச்சி வேற எதுக்கு எடுத்தாலும் சத்யா மாறி எதுக்கு டா இல்லைன்னு கேட்டு கேட்டு இவன் மேல வெறுப்பை தூண்டி விட்டுட்டா. அவன் மனசுல கொஞ்சம் கொஞ்சமா வெறுப்பு நஞ்சா வளந்துருக்கு போல? ஒரு நாள் என் தங்கச்சி பொண்ணோட வளைகாப்புக்கு போன அப்ப நல்லா குடிச்சிட்டு வந்து பிரச்சனை பண்ணினான். அப்பவே அவனை வீட்டை விட்டு விரட்டிட்டோம். நான் வேற கோபத்துல அவன் மேல கையை வச்சிட்டேன். அந்த கோபம் வேற என் மேல இருக்கும் அவனுக்கு. இப்ப எங்க இருக்கான் என்ன பண்ணுறான் எதுவுமே தெரியாது. முதல்ல இந்த மாலினிக்கு கொடுக்க இவ்வளவு பணம் எங்க இருந்து வந்துச்சுன்னு கூட தெரியலை. போலீஸ்ல சொல்லி தான் கண்டு பிடிக்கணும்”

“போலீஸ்ல சொன்னா பிரச்சனை வருமே? நம்ம ஸ்ரீ அவன் கிட்ட மாட்டிக்கிட்டு இருக்கா. சின்ன பொண்ணு வேற”

“அதுவும் கொஞ்சம் யோசனையா தான் இருக்கு”, என்று சொன்ன தீனா சத்யா புறம் திரும்பி “இப்ப என்ன சத்யா பண்ணுறது?”, என்று கேட்டார்.

“எனக்கும் ஒண்ணும் புரியலை பா. அவனை நாம ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி தான் பாத்தோம். அத்தையை தவிர வேற யாரும் அவனைப் பத்தி யோசிக்கலை? இங்க இருந்து இந்த வேலை எல்லாம் பண்ணுறான்னு தெரியலை. மாலினி கிட்ட விசாரிச்சு பாப்போமா?”

“எனக்கு தெரிஞ்சு அவன் இவ்வளவு தெளிவா பிளான் பண்ணிருக்கான்னா கண்டிப்பா அவளுக்கு தெரிஞ்ச மாதிரி எதுவும் பண்ணிருக்க மாட்டான். வேணும்னா விசாரிச்சு பாரேன்”, என்று சொல்ல உள்ளே சென்றவன் “உனக்கு அகில் இருக்குற இடம் தெரியுமா மாலினி?”, என்று கேட்டான்.

“தெரியாது”

“ஏய், ஒழுங்கா உண்மையைச் சொல்லு. உன்னை எல்லாம் பிரண்டுன்னு நினைச்சு பக்கத்துல வச்சிருந்ததுக்கு பெரிய கைமாறு செஞ்சிட்ட? இப்ப மாட்டிக்கிட்டு இருக்குறது என் தங்கச்சி. அவளுக்கு ஏதாவது ஆச்சுன்னா உன்னை உருத் தெரியாம அழிச்சிருவேன். ஒழுங்கா உண்மையைச் சொல்லு”

“சத்தியமா எனக்கு தெரியாது சத்யா. எங்கயாவது பொது இடத்துல வச்சு தான் பாப்போம். அவனா தான் கூப்பிடுவான். இப்ப ரெண்டு நாளா என் கிட்ட பேசுற அவன் நம்பர் கூட ஸ்விட்ச் ஆப்”

“உன் ஆள் இருக்கான்ல? அவனுக்கு அகிலைப் பத்தி தெரியுமா?”

“தெரியாது. அவனுக்கு இந்த விஷயமே தெரியாது. அவன் அவன் குடும்பத்தோட நிம்மதியா இருக்கான். அவனை எதுவும் தொல்லை பண்ணாத சத்யா”

“அவ்வளவு நல்லவளா நீ? அப்படி நல்லவளா இருந்திருந்தா ஏற்கனவே பொண்டாட்டி பிள்ளைங்க கூட வாழ்ந்துட்டு இருக்குறவங்களை தேடி பிடிச்சிருக்க மாட்ட. கடைசில அவனுக்கும் உண்மையா இல்லாம பணத்துக்கு விலை போயிருக்க? உன்னை எல்லாம் பொண்ணுன்னு சொல்லவே கேவலமா இருக்கு. கடைசியா கேக்குறேன். உனக்கு தெரிஞ்ச ஏதாவது ஒரு உண்மை சொல்லு. பாவம் பண்ணின உன் கிட்டயே கேக்குறதுக்கு எனக்கு கேவலமா தான் இருக்கு. ஆனா எங்களுக்கு வேற வழி இல்லை. எனக்கு என் தங்கச்சி முக்கியம்”

“உண்மையிலே எனக்கு தெரியாது சத்யா. ஆனா அவன் நீங்க நினைக்கிற மாதிரி சாதாரண ஆள் இல்லை”

“அது நல்லாவே தெரியாது. வெறும் கையா வீட்டை விட்டு வெளிய போனவன் உனக்கு லட்ச கணக்குல பணம் கொடுத்துருக்கும் போதே தெரியலையா? கண்டிப்பா தப்பான தொழிலை தான் பண்ணுவான். அவனை எப்படி கண்டு பிடிக்க? ஏதாவது உன் கிட்ட உளறிருக்கானா?”

“இல்லை”, என்று முடிவாக சொல்ல எரிச்சலுடன் வெளியே வந்தான். அனைவரும் அவனை ஆவலாக பார்க்க அவன் இல்லை என்னும் விதமாய் உதட்டை பிதுக்கினான்.

“பேசாம அந்த குணாவை தேடிப் போகலாமா?”, என்று கேட்டான் மிதுன்.

“நான் போலீஸ் கிட்ட கம்பலைன்ட் கொடுக்க போகும் போது அகில் கம்பலைன்ட் கொடுக்க வேண்டாம்னு சொன்னாலும் நான் எஸ்.பியா இருக்குற கணேஷ் மாமா கிட்ட கால் பண்ணி எல்லாம் சொல்லிட்டேன். அது அவனுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பு இல்லை. அவங்க அப்பவே குணாவை தேடிட்டு இருப்பாங்க. அவங்க காலேஜ் போய் விசாரிச்சிட்டு அவன் வீட்டுக்கு போயிருப்பாங்க”, என்று சத்யா சொல்லி வாய் மூட வில்லை. சத்யாவுக்கு அழைப்பு வந்தது.

அதை எடுத்தவன் “சொல்லுங்க மாமா அந்த குணா பத்தி தகவல் வந்துச்சா?”, என்று கேட்டான்.

“அந்த குணா பய ஆள் எஸ்கேப் சத்யா. அவன் வீட்ல உள்ளவங்களை மிரட்டினா உண்மை தெரியலாம். ஆனா அவன் காலேஜ்ல கொடுத்த அட்ரஸ் தப்பு. இன்னும் அவனை புராப்பரா தேடினும்னா நீ லீகலா ஒரு கம்பலைன்ட் கொடுக்கணும். ஆனா அப்படி பண்ணினாலும் குணாவை தேடும் போது அவனை அனுப்புனவன் உஷார் ஆகிறக் கூடாது”

“ஆமா மாமா, வேற ஏதாவது தான் பண்ணனும். ஸ்ரீ பேர் இருக்குறதுனால லீகலா கம்பலைன்ட் கொடுக்க முடியாது. அப்புறம் இது எல்லாத்துக்கும் காரணம் யாருன்னு தெரிஞ்சிருச்சு மாமா”

“யாரு சத்யா?”

“அந்த வில்லன் யாரும் இல்லை மாமா. எங்க அத்தை பையன்  அகில் தான். ஒரு குடும்பத் தகராறு. இந்த அளவுக்கு போகும்னு நினைக்கலை. அவன் வீட்டை விட்டு போனதுக்கு நான் தான் காரணம்ன்னு நினைக்கிறான். அதனால தான் என் குடும்பத்து மேல அவனுக்கு வெறுப்பு. அவனை எப்படியாவது கண்டு பிடிக்கணும் மாமா. ஸ்ரீக்கு ஒண்ணும் ஆக கூடாது”

“கண்டு பிடிச்சிறலாம் சத்யா. ஆனா நம்ம கிட்ட எந்த குழுவும் இல்லை. நேரடியா விசாரிச்சா அவனுக்கு விஷயம் போயிரும். அந்த அகில் பத்தி ஏதாவது தடயம் கிடைச்சா சொல்லுங்க. அதுக்கு முன்னாடி அவன் போட்டோவை எனக்கு அனுப்பி விடு. ஏதாவது கிரிமினல் ரெக்கார்ட்ல அவன் பேர்  இருக்கான்னு பாக்குறேன்”, என்று சொல்ல சரி என்று சொல்லி போனை வைத்தவன் அவர் பேசியதைச் சொல்ல கடைசியாக இருந்த வழியும் அடை பட்டது போல இருந்தது.