“சரி கூப்பிடட்டும். அதுக்கு முன்னாடி நாம ஒரு முக்கியமான ஆளைப் பாக்க வேண்டியது இருக்கு. வாங்க”, என்று சொல்லி உள்ளே அழைத்துச் சென்றார்.
மூவரும் குழப்பமாக உள்ளே செல்ல அங்கே கட்டிப் போட்டிருந்த ஆளைப் பார்த்து மூவரின் கண்களும் அதிர்ச்சியில் விரிந்தது. அதிர்வாக “அப்பா”, என்றான் சத்யா.
“இது யார் சம்பந்தி?”, என்று கேட்டார் குல்கர்னி.
“இவ தான் மாலினி. நிச்சயதார்த்தம் அன்னைக்கு சத்யா பத்தி தப்பா பேசினால்ல? அவ தான் இவ”, என்றார் தீனா.
“அப்பா எதுக்கு மாலினியை கட்டி வச்சிருக்கீங்க? அவ என்னோட பிரண்ட்”, என்ற சத்யா அவள் கட்டை அவிழ்க்க போக “ஒரு நிமிஷம் இரு சத்யா”, என்றார் தீனா.
“அம்மா சும்மா இருங்க. இவளுக்கும் அந்த விஷயத்துக்கும் எதுவும் சம்பந்தம் இல்லைன்னு அன்னைக்கே அவன் சொன்னான் தானே? இவளையும் மிரட்டி வச்சிருக்காங்க. இவ ஒரு அப்பாவி”, என்றவன் அவள் கட்டை அவிழ்த்து விட பயந்து கண்ணீர் விட்ட படி எழுந்து நின்ற மாலினி சத்யா பின்னால் மறைந்து நின்றாள்.
“அவ உன் பிரண்டா இருக்கட்டும் வேற யாராவும் இருக்கட்டும். இப்ப நடக்குற பிரச்சனைக்கு இருக்குற ஒரே துருப்பு சீட்டு இவ மட்டும் தான். இவளை வச்சு தான் நாம எல்லாம் கண்டு பிடிக்க முடியும்”
“அவளுக்கு ஒண்ணும் தெரியாது பா. அவ பாவம்”
“இப்ப காணாம போயிருக்குறது என்னோட பொண்ணு சத்யா. உனக்கு உன் தங்கச்சி பத்தி அக்கறை இல்லாம இருக்கலாம். ஆனா எனக்கு என் ஸ்ரீ வேணும். அவளுக்காக நான் எந்த எல்லைக்கும் போவேன். நான் இப்ப அவளை விசாரிக்கணும். நீ நகரு”, என்றார். தங்கை அவனுக்கும் முக்கியம் தானே? அதனால் சத்யா அமைதியாக விலகி நிற்க பயத்துடன் மிரண்டு போய் நின்றாள் மாலினி.
“ஏய் பொண்ணு இங்க வா”, என்று தீனா ஒரு அரட்டல் போட பயத்துடன் அவர் அருகே வந்து நின்றாள்.
“என்ன நடந்துச்சுன்னு சொல்லு”
“எனக்கு ஒண்ணும் தெரியாது அங்கிள். என்னை விட்டுருங்க”
“உனக்கு எல்லாம் தெரியும்னு நானும் சொல்லலை மா. என்ன நடந்துச்சுன்னு மட்டும் சொல்லு”
“அது.. ஒரு நாள் நான் ஆபீஸ் போய்ட்டு வீட்டுக்கு போய்ட்டு இருக்கும் போது ஒரு ஆள் வந்து இதோ இவர் கிட்ட அவன் சொல்ற மாதிரி சொல்ல சொன்னான். சொல்லலைனா என் குடும்பத்தையே ஒண்ணும் இல்லாம பண்ணிருவேன்னு மிரட்டினான். அதனால தான் வேற வழி இல்லாம சத்யா பத்தி தப்பா பேசிட்டேன். என்னை மன்னிச்சிருங்க, எனக்கு வேற ஒண்ணும் தெரியாது”, என்றாள் மாலினி.
“வேற ஒண்ணும் தெரியாது அப்படி தானே?”
“தெரியாது அங்கிள்”
“அதுக்கப்புறம் அவன் உன் கிட்ட பேசலையா?”
“இல்லை பேசலை”
“சத்யா உன் கிட்ட இது வரைக்கும் தப்பா நடந்துருக்கானா?”
“இல்லை, அவன் எனக்கு ஒரு நல்ல பிரண்ட்”
“அப்ப பிரண்ட் வாழ்க்கையை எதுக்கு கெடுக்க நினைச்ச?”
“அதான் சொல்றேன்ல அவன் மிரட்டினான்னு”
“மிரட்டினானா? இல்லை இப்படி நீ பண்ணினா உனக்கு பணம் தரேனு சொன்னானா?”
“மிரட்ட தான் செஞ்சான் அங்கிள். யாராவது பிரண்ட் வாழ்க்கையை கெடுக்க பணம் வாங்குவாங்களா?”
“அப்ப நீ எதுக்கு மா பணம் வாங்கின?”
“அங்கிள் என்ன சொல்றீங்க?”
“நடிக்காத மாலினி. இந்த ஒரு மாசத்துல உன் வீட்டு நிலைமை எப்படி மாறிருக்குன்னு விசாரிச்சிட்டேன். புது கார், தம்பிக்கு புது பைக், வீட்டுக்கு தேவையான நிறைய புது பொருள்கள். அது போக பிரபல நகை கடைல அக்காவுக்கும் தங்கைக்கும் நகை வாங்கி குவிச்சிருக்கீங்க போல?”
“அது.. அது எங்க பூர்வீக சொத்து ஒண்ணு வித்தோம். ரொம்ப நாளா நல்ல விலை அமையாம இருந்துச்சு. இப்ப தான் அம்பது லட்சத்துக்கு போச்சு”
“அப்படியா மா? சரி நீ சொல்றது உண்மையா இருக்கட்டும். சொத்து ரிஜிஸ்டர் பண்ண யாரெல்லாம் போனீங்க?”
“இது என்ன கேள்வி? எங்க வீட்ல இருக்குற எல்லாரும் தான். ஒரு ஆள் இல்லைனா கூட எப்படி சொத்தை விக்க முடியும்?”
“எல்லாரும் போட்டாச்சா?”
“ஆமா, பாரு சத்யா உங்க அப்பா என்னை குற்றவாளி மாதிரியே விசாரிக்கிறார்”, என்று சொல்ல அவன் எதுவும் சொல்ல வில்லை. அவனுக்கு தெரியும் தந்தை செயலில் ஒரு அர்த்தம் இருக்கும் என்று.
“ஆக உங்க குடும்பத்துல இருக்குற எல்லாரும் சேந்து தான் சொத்தை வித்துருக்கீங்க? அதுல வந்த பணத்துல தான் இப்படி வீட்டுக்கு தேவையான எல்லாம் வாங்கிருக்கீங்க? அப்படி தானே?”
“ஆமா”
“சரி இப்ப வரவங்களும் நீ சொன்னதையே சொல்றாங்களான்னு பாப்போம்”, என்று சொன்னதும் அவளுக்கு திக்கென்று இருந்தது.
குல்கர்னி மற்றும் மிதுன் இருவரும் கூட குழப்பமாக நடப்பதை வேடிக்கை பார்க்க “பிரகாஷ் எல்லாரையும் கூட்டிட்டு வா”, என்றார் தீனா.
பிரகாஷ் தீனாவின் உதவியாளன். இப்போது சத்யாவுக்கு கீழே வேலை பார்க்கிறான். தீனாவின் நம்பிக்கைக்குரியவன். தீனா குரல் கொடுத்ததும் அடுத்த நொடி மாலினி வீட்டில் உள்ள அனைவரும் அங்கே வந்தார்கள்.
மாலினி முகத்தில் அப்படி ஒரு அதிர்வு. அவள் அதிர்ந்து விழிக்க “என்ன மா விசாரிச்சிறலாமா அவங்க கிட்டயும்?”, என்றார் தீனா.
முகத்தில் முத்து முத்தாக வியர்த்தது மாலினிக்கு. இப்போது முழுமையாக மாட்டிக் கொண்டோம் என்று புரிந்தது. தீனா சத்யாவுக்கு உண்மை தெரிந்தாலும் பரவாயில்லை. ஆனால் அவளது வீட்டினருக்கு தெரிந்தால் அவ்வளவு தான். கஷ்ட பட்ட குடும்பம் தான். ஆனால் நேர்மையாக வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். யாருக்கும் அடுத்தவரைக் கெடுக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது.
“இதுக்கு மேல நீ தப்பிக்க முடியாது மாலினி. உண்மையைச் சொல்லு. எதுக்கு இப்படி எல்லாம் பண்ணின?”, என்று கேட்டார் தீனா.
“எதையும் நானா பண்ணலை. என்னை பண்ணச் சொன்னாங்க”, என்றாள் தலை குனிந்த படி.
“யாரு?”
“அகில்”, என்று சொல்ல தீனா மற்றும் சத்யா முகம் அதிர்ந்து போனது.
“வாட்? அகிலா இப்படி பண்ண சொன்னான்?”, என்றான் சத்யா.
ஆம் என்னும் விதமாய் அவள் தலையசைக்க “அவன் பண்ண சொன்னான் சரி, அவனுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம் மாலினி?”, என்று சரியாக அவளை அவளுடைய குடும்பத்தினரிடம் கோர்த்து விட்டார் தீனா.
தன்னுடைய குடும்பத்தை ஒரு பார்வை பார்த்தவள் “இல்லை என்னை மிரட்டினான். அதனால தான் செஞ்சேன்? மத்த படி தொடர்பு எதுவும் இல்லை”, என்றாள்.
“ஓஹோ, இதை நான் நம்பனுமா? உங்க அப்பா மேல சத்தியம் பண்ணு நான் நம்புறேன்”, என்று சொல்ல அவள் முகத்தில் ஈயாட வில்லை. அடுத்த நொடி வேறு வழியில்லாமல் உண்மையை ஒப்புக் கொண்டாள்.
அகிலின் நண்பன் ஜோசப் என்பவனுக்கும் மாலினிக்கும் தவறான உறவு உண்டு. அந்த ஜோசப்க்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் வேறு இருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் மாலினி அந்த ஜோசப்க்கு இரண்டாவது மனைவி மாதிரி தான். அந்த அடிப்படையில் தான் மாலினியை அகிலுக்கு தெரியும். மாலினிக்கு தேவை பணம். அகிலுக்கு தேவை தீனாவின் குடும்ப நிம்மதி. இருவரும் கூட்டு சேர்ந்து செய்த சதி தான் இது.
அனைத்தையும் சொல்லி முடித்த மாலினியை அவளது குடும்பம் அவ்வளவு இழிவாக பார்த்தது. “இதுக்கு தான் கல்யாணம் வேண்டாம் வேண்டாம்னு சுத்திக்கிட்டு இருக்கியா? உன் தம்பி தங்கச்சியோட நல்ல வாழ்க்கைக்காக தான் நீ இப்படி தியாகியா இருக்கேன்னு நினைச்சோம். ஆனா நீ இவ்வளவு கீழ்த்தரமா ஒருத்தன் கூட தொடர்புல இருக்குறதும் இல்லாம பணத்துக்காக இந்த வேலை எல்லாம் செய்யுற? இனி நீ எங்களுக்கு பொண்ணே கிடையாது. வாங்க போகலாம்”, என்ற அவளது தந்தை மற்றவர்களை அங்கிருந்து அழைத்துச் சென்று விட்டார்.
போகும் முன் தீனாவைப் பார்த்தவர் “கடத்தல் வரைக்கும் போயிருக்கா. போலீஸ்ல கூட பிடிச்சு கொடுங்க. நாங்க கேக்க மாட்டோம்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டார்.