அத்தியாயம் 10 

உன்னைப் பார்க்க நிமிர்ந்த 

கண்களும் உன்னிடம் சரணடைய 

வைக்கிறது எந்தன் மனதை!!!

            ஸ்ரீ போதைக்கு அடிமையாகி இருக்கிறாள் என்று மிதுன் சொன்னதும் அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

“என்ன மிதுன் சொல்ற?”, என்று கேட்டாள் வீணா.

“ஆமா வீணா, அவ கூட படிக்கிற குணா அப்படின்னு ஒரு பையன் கூட அடிக்கடி அவ நம்ம பிரவுசிங் சென்டர்க்கு வருவா. முதல்ல எனக்கு மத்தவங்க மாதிரி தான் தோணுச்சு. ஆனா ஒழுங்கா வர பொண்ணு போகும் போது ஒரு மாதிரி போவா. தடுமாறி போற மாதிரி இருக்கும். கொஞ்ச நாள்ல எனக்கு சந்தேகம் வந்தப்ப தான் கேமரால பாத்தேன். குணா அவளுக்கு போதை மருந்தை கொடுத்தான். ஒரு டைம் வீணா கிட்ட எதுக்கு இப்படி பண்ணுறன்னு கேட்டேன். அவ நான் கண்டு பிடிச்சிட்டேன்னு ரொம்ப பயந்தா. இதை விடலைனா உங்க வீட்ல சொல்லிருவேன்னு சொன்னேன். அவ இனி இப்படி பண்ண மாட்டேன்னு தான் சொன்னா. ஆனா அவன் கூட தான் சுத்திக்கிட்டு இருந்தா. ஒரு வேளை அவன் அவளை மிரட்டி கூட வச்சிருக்கலாம். அன்னைக்கு காலேஜ்ல ஒரு பொண்ணுக்கு புராஜெக்ட் ரிப்போர்ட் கொடுக்க போனேன். அப்பவும் அந்த குணா அவளை எதுக்கோ கட்டாயப் படுத்திட்டு தான் இருந்தான். நான் போனதும் அவன் போய்ட்டான். அப்பவும் மிரட்டிட்டு தான் வந்தேன். ஆனா நேத்து காலைல தான் தெரியும் அவ இவங்க தங்கச்சின்னு. நான் இவங்க வீட்ல உள்ளவங்க கிட்ட ஏதாவது சொல்லிருவேன்னு தான் அவ பயந்தா. பயப்படாத சொல்ல மாட்டேன்னு சொன்ன அப்புறமும் அவ இயல்பா இல்லை. அவ அதுல இருந்து வெளிய வர நினைக்கிறாளா? அதை குணா தடுக்குறானா? எதுவுமே எனக்கு தெரியாது. எனக்கும் ஒரு அக்கா தங்கை இருக்காங்க. அப்படி நினைச்சு தான் அதை கூட அவளுக்கு அட்வைஸ் பண்ணினேன். மத்த படி எனக்கு வேற எந்த எண்ணமும் இல்லை. அதுக்கப்புறம் நான் அவளைப் பாக்கலை. இன்னும் சொல்லப் போனா இன்னைக்கு முழுக்க நான் வீட்டை விட்டு வெளிய போகலை. ஒரு பொண்ணை கடத்தி வைக்கிற அளவுக்கு நான் கேவலமானவன் இல்லை. அப்படி எங்க வீட்ல என்னை வளக்கலை. இப்ப தான் உங்க கோபத்தோட அர்த்தமும் எனக்கு புரியுது. அதைப் பத்தி அப்புறம் பேசலாம். இப்ப ஸ்ரீயை கண்டு பிடிக்கணும். நானும் உங்க கூட வேணா வரேன். முதல்ல அந்த குணாவை பிடிக்கணும். அவன் மேல கேஸ் கொடுக்கணும். போலீஸ் அவன் வீட்ல விசாரிக்கட்டும். அப்ப தான் முடிவு தெரியும்”, என்று மிதுன் சொல்லி முடிக்க சத்யா தளர்ந்து போய் அமர்ந்தான்.

இப்படி ஒரு விஷயம் இருக்கும் என்று அவன் எதிர் பார்க்கவே இல்லை. ஏதோ காதல் விவகாரம் என்ற அளவில் தான் அவன் யோசித்துக் கொண்டிருந்தான்.  இவ்வளவு சீரியஸான விஷயம் இருக்கும் என்று அவன் நினைக்கவே இல்லையே.

தந்தைக்கு தெரிந்தால் என்ன ஆகும் என்று இன்னும் பயமாக இருந்தது. ஸ்ரீயை எப்படி கண்டு பிடிக்க போகிறோம் என்றும் கவலையாக இருந்தது.

“இப்படியே யோசிச்சு நேரத்தை கடத்த முடியாது தம்பி. முதல்ல பிள்ளையைக் கண்டு பிடிக்கணும். மிதுன் சொல்ற மாதிரி போய் ஒரு கம்பலைன்ட் கொடுக்கணும்”, என்றார் குல்கர்னி.

அவர் குரல் கேட்டு எழுந்து நின்ற சத்யா “சாரி மிதுன். நான் உன்னை தப்பா நினைச்சிட்டேன்”, என்றான்.

அவன் மன்னிப்பு கேட்டாலும் மிதுனால் சரி பரவாயில்லை என்று சொல்ல முடியவில்லை. ஆனாலும்  இப்போதைக்கு அதைப் பற்றி பேச மனதில்லாமல் “போலீஸ் ஸ்டேஷன் போகலாமா?”, என்று கேட்டான்.

அவனைத் தவறாக நினைத்து விட்டு அவனையே உதவிக்கு அழைக்க ஒரு மாதிரி இருக்க “இல்லை நான் பாத்துக்குறேன்”, என்றவன் வீணாவை நிமிர்ந்து கூட பார்க்க முடியாமல் அங்கிருந்து சென்று விட்டான்.

வீணா என்ன சொல்ல என்று தெரியாமல் அமைதியாக இருக்க “இந்த கல்யாணம் வேணுமா அண்ணா? எனக்கு என்னமோ நம்ம பொண்ணுக்கு வேற மாப்பிள்ளை பாக்கலாம்னு தோணுது. கொஞ்ச நேரத்துல மிதுன் மேல கையை வச்சிட்டானே? இப்ப அந்த பொண்ணும் தப்பான வழில போற மாதிரி இருக்கு”, என்றார் வீணாவின் சித்தப்பா.

“உன் கவலையும் கோபமும் புரியுது சுந்தரா. மாப்பிள்ளை தம்பிக்கு கொஞ்சம் அவசர புத்தி உண்டு தான். அது மனுசங்க இயல்பு. ஆனா நல்லவர். அவர் தங்கச்சிக்கு ஏதோ ஒண்ணுன்னு பதறிட்டார். இவனும் அவர் கண் படவே அந்த பிள்ளையை மிரட்டிருக்கான். நானும் அன்னைக்கு வீணா வாழ்க்கை தான் முக்கியம்ன்னு நினைச்சு அந்த தம்பி மேல பழி போடலையா? அது மாதிரி தான். அந்த பொண்ணும் வேணும்னு அப்படி செஞ்சிருக்க மாட்டா. நல்ல குடும்பம் தான். குற்றம் கண்டு பிடிச்சிட்டு இருந்தா நல்ல உறவுகளை இழந்துருவோம் சுந்தரா. ஆனா எனக்கு நீங்களும் முக்கியம் தான். மிதுன் எனக்கும் பையன் தான். அவர் சார்பா நான் உங்க எல்லார் கிட்டயும் மன்னிப்பு கேட்டுக்குறேன்”, என்றார்.

“என்ன பெரியப்பா இது? நான் உங்களுக்கு பையன்னு சொல்லிட்டீங்க? அப்ப நீங்க என் கிட்ட மன்னிப்பு கேக்கலாமா? மதுவுக்கு இல்லைன்னா வீணாவுக்கு இப்படி ஒரு பிரச்சனை வந்தா நானும் அப்படி தான் நடந்துக்குவேன். எனக்கு மாம்ஸ் மேல எந்த கோபமும் இல்லை. ஆனா வேற ஒரு ஆள் தான் கோபமா இருக்காங்க. பேசி சமாளிங்க”, என்றவன் வீணாவை காட்ட அவள் முகம் உண்மையிலே கோபமாக தான் இருந்தது.

யார் என்ன சமாதானம் சொன்னாலும் அவள் கோபம் அவங்க எப்படி என் தம்பியை தவறாக நினைக்கலாம் என்பது தான்? என்ன தான் சந்தேகம் வந்தாலும் விசாரிக்கலாம் தான். அதற்காக சட்டையை பிடிப்பதா? அதையே மிதுன் செய்திருந்தால் மன்னிப்பார்களா என்று அவள் மனது நியாயம் பேசியது.

மகள் மனது புரிந்த குல்கர்னி “எதுவும் இப்போதைக்கு யோசிக்க வேண்டாம். முதல்ல நான் சம்பந்தி வீட்டுக்கு போறேன். மாப்பிள்ளை நம்ம கிட்ட உதவி கேக்க கூச்ச பட்டு போயிருக்கலாம். ஆனா நம்ம அவங்களுக்காக போய் நிக்கணும்”, என்றார் குல்கர்னி.

வீணா எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க “நானும் வரேன் சித்தப்பா. இருங்க சட்டையை மாத்திட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்றான்.

மகனை அப்படி பேசியதால் கொஞ்சம் மனத்தாங்கல் இருந்தாலும் வீணாவுக்காகவும் குல்கர்னிக்காகவும் அவனது பெற்றவர்கள் அமைதி காத்தனர்.

சத்யா நேராக சென்றது அவனுக்கு தெரிந்த போலீசை பார்ப்பதற்காக தான். எஸ்பி வேலையாக இருந்ததால் ஒரு ஐந்து நிமிடம் காத்திருக்க சொன்னார்கள். சத்யா பதட்டத்துடன் அமர்ந்திருக்க அப்போது அவனுக்கு அழைப்பு வந்தது, வேறு ஒரு தெரியாத எண்ணில் இருந்து.

ஒரு வேளை ஸ்ரீயோ என்று எண்ணி அவசரமாக அழைப்பை எடுத்தான். “ஹலோ”, என்று சத்யா சொல்ல “என்ன சத்யா? போலீசை பாக்க போயிருக்க போல?”, என்றான் அகில்.

“இங்க பாரு, நான் இப்ப வந்துருக்குறது உன் விஷயமா இல்லை. இது வேற. என் தங்கச்சியை காணும்., அவளைக் கண்டு பிடிக்கணும். நீயே முதல்ல எனக்கு யாரு என்னனு தெரியலை. நான் தெரிஞ்சு யாருக்கும் எந்த கெடுதலும் நினைக்கலை. உனக்கு நான் என்ன கெடுதல் பண்ணினேன்னு தெரியலை. அப்படி ஏதாவது பண்ணிருந்தா மன்னிச்சிக்கோ. இப்ப நான் என் தங்கச்சியை கண்டு பிடிக்கணும். போனை வை”, என்றான் சத்யா,.