“நானே இதை எதிர் பாக்கலை மா. ஆனாலும் இது எவ்வளவு பெரிய விஷயம் பாரேன். நம்ம சம்பந்தி எவ்வளவு சொந்தங்களை சம்பாதிச்சு வச்சிருக்கார்? அதுவும் வட நாட்டுல இருந்து வந்து. வாழ்ந்தா இப்படி வாழனும்”, என்று சொன்ன தீனாவை எவ்வளவு முடியுமோ அவ்வளவு முறைத்துப் பார்த்தான்.

            “நானே இந்த பட்டிக்காட்டுக் கூட்டத்துல இருந்து எப்படி தப்பிக்கலாம்னு பாக்குறேன். இதுல இவருக்கு சம்பந்தியாம்?”, என்று முணுமுணுத்துக் கொண்டு தான் உள்ளே சென்றான்.

            உண்மையிலே வரவேற்பு பலமாக தான் இருந்தது. அவர்களை உள்ளே அழைத்துச் சென்று அமர வைத்ததாகட்டும் டீ, ஸ்னாக்ஸ் என கொடுப்பதாகட்டும் அவர்கள் எந்த குறையும் வைக்க வில்லை.

ஆனால் சத்யா “எப்படியும் இந்த கல்யாணம் நடக்க போறது இல்லை. இதுல இதை சாப்பிட்டுட்டு சும்மா போனா என்ன நினைப்பாங்க?”, என்று எண்ணியவன் திண்பண்டங்களை மறுத்து விட்டு டீ மட்டும் அருந்தினான்.

            அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். “மேட்ரிமோனில அத்தனை சம்மந்தம் வந்தாலும் நீங்க சாதி தடையில்லைன்னு போட்டுருந்ததுனால தான் உங்களை பொண்ணு பாக்கவே வரச் சொன்னோம்? நான் தான் பொண்ணோட அப்பா”, என்றார் கமலேஷ் குல்கர்னி. நன்றாக தமிழ் பேசினாலும் லேசாக வடநாட்டின் சாயல் வீசியது.

            வியப்பாய் அவரைப் பார்த்தான் சத்யா. ஏனென்றால் வந்ததில் இருந்து அவரைக் கவனித்துக் கொண்டு தான் இருந்தான். ஒவ்வொருவரும் மச்சான், மாமா, அண்ணா என அவரிடம் எல்லாமே கேட்டு கேட்டு செய்தார்கள். அவருக்கு அனைவரும் கொடுத்த மரியாதை அப்படி இருந்தது. அவர்கள் இருப்பது ஒரு கிராமத்தில் தான். அப்படி இருந்தும் ஒரு வட நாட்டுக் காரன் மேல் அவர்கள் காட்டும் அன்பு பெரியது தான் என்று தோன்றியது.

“நம்மளை எப்படி செலக்ட் பண்ணினாங்க. ஒரு வேளை இந்த பொண்ணுக்கு ஏதாவது பிரச்சனை இருக்குமோ? அதனால தான் என் கிட்ட தள்ளி விட பாக்குறாங்களோ?”, என்று எண்ணியவன் “அப்படி ஏதாவது பிரச்சனை இருந்தா அதைச் சொல்லி இந்த திருமணத்தை நிப்பாட்டிறலாம்”, என்று எண்ணிக் கொண்டு அவர்கள் பேச்சில் கவனம் செலுத்தினான்.

            அனைவரும் பெண்ணின் தந்தையைப் பார்க்க “இருக்குறதுலே மோசமான விஷயம் ஜாதி தான் சார். அதனால நான் அதை வெறுக்குறேன். நீங்களும் அந்த விஷயம் முக்கியம் இல்லைன்னு சொன்னது எங்களுக்கு பிடிச்சிருந்தது. அதனால தான் வரச் சொன்னோம்? மேற்கொண்டு பேசலாம் தானே?”, என்று கேட்டார் கமலேஷ்.

            “கண்டிப்பா உங்களுக்கு எங்க பையனை பிடிச்சிருந்தா எங்களுக்கு உங்க பொண்ணைப் பிடிச்சிருந்தா மேற்கொண்டு பேசலாம். வேற எதையும் நாங்க பெருசா நினைக்கலை. பிள்ளைங்களுக்கு மனசு ஒத்துப் போகணும் அவ்வளவு தான்”, என்றார் தீனா.

“கண்டிப்பா மனசு தான் ஒத்துப்போகணும். நாங்களும் அப்படி தாங்க. நான் ராஜஸ்தான். இங்க ஒரு வேலை விசயமா வந்தப்ப என் மனைவியை காதலித்து கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இப்ப என்னோட ஜாதியை இங்க சொல்ல முடியுமா? அதனால தான் எங்க பொண்ணுக்கும் அப்படி பாக்குறோம்”, என்றவர் அவருடைய மனைவி அம்சவேணியையும்  அனைவருக்கும் அறிமுகப் படுத்தி வைத்தார்.

இருவரும் பேசுவதை எரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருந்தான் சத்யா. “எப்படா முடிப்பீங்க?”, என்று தான் அவன் எண்ணம் சென்றது. அப்பாவை மனதுக்குள் வறுத்த எடுத்து தாளித்துக் கொண்டிருக்க அவர்கள் மாற்றி மாற்றி கல்யாணக் கதையை சொல்லிக் கொண்டிருந்தார்கள். சத்யா அன்னையை முறைத்துப் பார்க்க மகன் பார்வை புரிந்து “சரி பொண்ணைப் பாப்போமா?”, என்று கேட்டாள் பாமா.

“இதோ அழைச்சிட்டு வரேன்ங்க”, என்று சொல்லி உள்ளே சென்றாள் அம்சவேணி.  சிறிது நேரத்தில் அழகுப் பதுமை போல அங்கே வந்தாள் வீணா. சந்தன வண்ண சேலையில் அரக்கு கலரில் பட்டு, அதற்கு பொருத்தமான நகைகள் என அம்சமாக இருந்தாள். சத்யா அவளை நிமிர்ந்து பார்க்கவே இல்லை. ஏதோ அனைவரும் தன்னையே பார்ப்பது போன்ற ஒரு உணர்வு அவனுக்கு. அதனால் தலை குனிந்தே இருந்தான்.

“போட்டோல பாத்ததை விட நேர்ல ரொம்ப அழகா இருக்கா. இங்க வா மா. இங்க வந்து உக்காரு”, என்றாள் பாமா.

வீணா சிறு தயக்கத்துடன் பாமா அருகில் வந்து அமர்ந்தாள். “அவன் தான் மா எங்க பையன். பேர் சத்யா. உனக்கு பிடிச்சிருக்கா?”, என்று கேட்க ஒரு நொடி அவனை நிமிர்ந்து பார்த்தாள். ஆனால் எதுவும் சொல்ல வில்லை.

“எங்களுக்கு பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு. நாங்க வீட்டுக்கு போய்ட்டு நல்ல நாள் பாத்து சொல்றோம். அன்னைக்கே நிச்சயம் வச்சிக்கலாம்”, என்று தீனதயாளன் சொல்ல அதிர்ந்து தந்தையைப் பார்த்தான் சத்யா. அவனிடம் பேருக்கு கூட யாரும் சம்மதம் கேட்க வில்லை.

தந்தை அப்படிச் சொல்வார் என்று அவன் கனவில் கூட நினைக்க வில்லை. அவனுக்கு ஒரு வாய்ப்பு வரும் கல்யாணத்தை மறுக்க என்று எண்ணி அவன் காத்திருக்க தீனா அதை அவனுக்கு கொடுக்கவே இல்லை.

“எங்களுக்கும் உங்களையும் உங்க குடும்பத்தையும் ரொம்ப பிடிச்சிருக்கு. மாப்பிள்ளைக்கு பிடிச்சிருந்தா எங்களுக்கும் சம்மதம் தான். எதுக்கும் ரெண்டு பேரும் கொஞ்சம் தனியா பேசட்டும்”, என்றார் குல்கர்னி. சத்யாவுக்கு அவரைக் கொஞ்ச வேண்டும் போல இருந்தது.

“இது தான் டா நல்ல வாய்ப்பு. காரியத்தைக் கெடுத்துறாத. அந்த பொண்ணு வாயாலே இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்ல வைக்கணும்”, என்று எண்ணிக் கொண்டு தீனாவைப் பார்க்க “போ சத்யா, போய் பேசிட்டு வா”, என்றார்.

அவனும் சந்தோஷமாக எழுந்து கொள்ள “வீணா மா, மாப்பிள்ளையை மாடிக்கு கூட்டிட்டு போ மா”, என்றார் குல்கர்னி.

சிறிது தயக்கத்துடன் அவனுக்கு முன்னே சென்றாள் வீணா. அவள் பின்னே சென்றவன் என்ன சொல்லலாம் எப்படி ஆரம்பிக்கலாம் என்ற யோசனையில் சென்றான்.

திடீரென்று அவள் சேலை தடுக்கியதால் அவள் படியில் நின்று விட இவன் அதைக் கவனிக்காமல் ஏறி அவள் மீது இடித்து விட்டு பின் நகர்ந்து நின்றான்.

“சாரி, சேலை தடுக்கிருச்சு”, என்று சொன்னாள் வீணா. ஏனோ அவள் குரலில் ஒரு மென்மை இருப்பது போல அவனுக்கு தோன்றியது. ஆனால் அந்த ரசனையை அவன் மனதுக்கு கொண்டு செல்ல வில்லை.

“பாத்து போங்க”, என்று மட்டும் சொன்னான். அவளும் அதற்கு பின் கவனமாக ஏற அவனும் பின்னே சென்றான்.

மேலே சென்ற பின் எப்படி பேச்சை ஆரம்பிக்க என்று இருவருக்கும் தயக்கம். ஆனால் சிறிது நேரத்துக்கு மேல் அந்த அமைதியை தாங்க முடியாமல் “எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை. நீங்களே உங்க வீட்ல சொல்லிருங்க”, என்றான் சத்யா.

இதை அவள் எதிர் பார்க்க வில்லையே. அதனால் சட்டென்று ஒரு திகைப்பு. “என்ன சொல்றீங்க?”, என்று கேட்டாள்.

“ஆமா எனக்கு இதுல விருப்பம் இல்லை. என்ன காரணம் வேணும்னாலும் நினைச்சிக்கோங்க. எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம். முக்கியமா நீங்க வேண்டாம்”, என்று சொல்ல சட்டென்று ஒரு கடுப்பு அவளுக்கு வந்தது. நிராகரிப்பின் வலி அனைவருக்கும் இருக்கும் தானே?

“கல்யாணம் வேண்டாம் வேண்டாம்னு சொன்னா யாரும் நிப்பாட்ட மாட்டாங்க சார். என்ன காரணம்னு சொன்னா தான் நான் ஏதாவது செய்ய முடியும்? எனக்கு தெரியணும்”, என்றவள் கை கட்டிக் கொண்டு அவனைப் பார்த்தாள்.

“அதெல்லாம் என்னால சொல்ல முடியாது. நீங்க நிறுத்தி தான் ஆகணும்”

“அப்படின்னா கண்டிப்பா என்னால ஒண்ணும் செய்ய முடியாது. ரெண்டு பேர் வீட்லயும் பேசுறதைப் பாத்தா கல்யாணம் நடந்து தான் ஆகும்”, என்றாள் அவளும்.

அவன் அதிர்ச்சியாக அவளைப் பார்க்க அவளும் சளைக்காமல் அவன் பார்வையை எதிர்க்கொண்டாள்.

தொடரும்..