“கிட்டத்தட்ட அப்படி தான். பொண்ணோட அப்பா வடநாட்டுக் காரர். செல்ஃபோன் கடை மூணு இடத்துல வச்சிருக்கார். பொண்ணோட அம்மா பேர் அம்சவேணி. பிஸினஸ் விஷயமா வந்த இடத்துல தான் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிருக்காங்க. வீட்ல பயங்கர எதிர்ப்பு. அப்புறம் அவங்க பொண்ணு பிறந்ததும் அவங்களை ஏத்துக்கிட்டு இங்கயே இருக்க வச்சிட்டாங்க. உன் ஆபீஸ் பக்கத்துல கூட அவங்க கடை ஒண்ணு இருக்கு. அது போக நிறைய காம்ப்ளக்ஸ்ல கடை கட்டி வாடகைக்கு விட்டுருக்காங்க. பொண்ணோட அம்மா சொத்து முழுக்க அந்த பொண்ணுக்கு தான்”
“இப்ப எதுக்கு பா அவங்க குடும்பத்துக்கு இப்படி விளம்பரம் பண்ணுறீங்க?”
“ஒ நேரடியா பொண்ணைப் பத்தி சொல்லு டா மடையான்னு சொல்லுறியா?”, என்று அவர் கேட்க மனதுக்குள் தலையில் அடித்துக் கொண்டவன் அவரைப் பார்த்தான்.
“பொண்ணு பேர் வீணா. வயசு இருபத்தி அஞ்சு. ஒரு பிரைவேட் ஸ்கூல்ல சைன்ஸ் டீச்சரா இருக்கா. போட்டோ அனுப்புனாங்க டா. எனக்கும் உங்க அம்மாவுக்கும் பாத்ததும் பிடிச்சிருச்சு. அவ தான் நம்ம வீட்டுக்கு மருமகளா வரணும்ன்னு நாங்க முடிவு பண்ணிட்டோம்”, என்றார் தீனா.
“அப்படினா எனக்கு பிடிக்கலை”, என்றான் வேண்டும் என்றே.
“பாக்காம எதுவும் சொல்லக் கூடாது டா. மாமா அந்த போட்டோவை அவன் கிட்ட காட்டுங்க”, என்றாள் பாமா.
“போட்டோ காட்டினா உன் மவன் ஆயிரம் நொட்டை சொல்லுவான். நேர்லே பாத்துக்கட்டும். நாளைக்கு காலைல பத்து மணிக்கு கிளம்பனும்”
“எனக்கு நாளைக்கு ஆடிட்டிங் இருக்கு. என் கிட்ட கேட்டுட்டு முடிவு பண்ண மாட்டீங்களா? எனக்கு இன்னைக்கு தான் ஃப்ரீ. இன்னும் ஒரு வாரத்துக்கு பிரீ இல்லை”, என்றான் வீம்பாக.
“ரொம்ப சந்தோஷம். இன்னைக்கு ஃப்ரீ தானே? இன்னைக்கே போகலாம். நான் ஏற்கனவே பொண்ணு வீட்ல சொல்லி இருந்தேன். இன்னைக்கு இல்லைன்னா நாளைக்கு வருவோம்ன்னு. இப்ப கால் பண்ணி இன்னைக்கே வரோம்ன்னு சொல்லிறேன்”, என்றவர் போனை எடுத்தார்.
“அப்பா எதுனாலும் உடனே தானா? நாம நாளைக்கே போவோம்”, என்றான் சத்யா.
“அப்ப உன் ஆடிட்டிங்?”, என்று நக்கலாக கேட்டார் தீனா.
“இல்லாத ஆடிட்டிங்க்கு அவன் எப்படிப்பா போவான்?”, என்று கேட்ட ஸ்ரீ சிரிக்க அவள் தலையில் கொட்டி விட்டு தன்னுடைய அறைக்குள் புகுந்து கொண்டான்.
“அப்பா பாருங்க பா”, என்று அவள் செல்லம் கொஞ்சுவதும் “வாயடிச்சது போதும். போய் காலேஜ்க்கு கிளம்பு போ”, என்று தாய் அவளை விரட்டுவதும் கேட்டது. ஆனால் அது எதுவும் அவன் மனதில் பதிய வில்லை. நாளைய நிகழ்வை எப்படி நிறுத்த என்று தான் அவன் எண்ணிக் கொண்டிருந்தான்.
ஆனால் தீனதயாளன் முடிவு எடுத்து விட்டால் அதில் இருந்து பின் வாங்க மாட்டார் என்று அவனுக்கே தெரியும். நல்ல தந்தை தான், மனைவி பிள்ளைகள் மீது உயிரையே வைத்திருக்கிறார். நட்புடன் தான் பழகுவார். ஆனால் அவருக்கு வார்த்தை மாறுவதோ, பொய் சொல்வதோ அடுத்தவர்களின் நம்பிக்கையை உடைப்பதோ அறவே பிடிக்காது. அதனால் தான் இந்த திருமணத்தை உடனே நடத்தி விடுவாரோ என்று பயந்தான் சத்யா.
அவனுக்கு இருக்கும் ஒரே ஆசை அவனது மில்லை இன்னொரு இடத்தில் நிறுவ வேண்டும் என்று தான். தந்தையை பழைய மில்லில் மேனேஜிங் டேரக்டர் என்ற பதவியில் இருந்து அவனுக்கு இறக்க மனதில்லை. கடைசி வரை அவர் தான் அங்கே சிம்ம சொப்பணமாக இருக்க வேண்டும். ஆனால் அவரோ அவனுக்கு திருமணம் செய்து அவனை அந்த மில்லில் உரிமையாளனாக பதவியில் அமர வைக்க வேண்டும் என்ற திட்டத்தில் இருந்தாள். அதனாலே அவன் திருமணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தான். அந்த வேலையையும் அவர் விடச் சொல்லி கட்டாயப் படுத்திக் கொண்டிருக்க ஆயிரம் காரணம் காட்டி தான் அங்கே சென்று கொண்டிருக்கிறான்.
அப்படி இருக்க இப்போது இந்த திருமணம் நடந்தால் அவனது எதிர்கால திட்டம் அனைத்தும் மாறி விடும். இன்னும் சொல்லப் போனால் அவனுக்கு நன்றாக பிஸினஸ் பற்றி தெரிந்த எம்.பி.ஏ படித்த பெண்ணை திருமணம் செய்ய தான் ஆசை. ஏனென்றால் அவனது அன்னை போல அவளும் சமையல் அறையில் மூழ்க கூடாது என்ற எண்ணம். இப்போது பார்த்திருக்கும் பெண் படித்து டீச்சர் வேலை பார்த்தாலும் அவன் எதிர்பார்த்த எம்.பி.ஏ இல்லையே என்ற எண்ணம் அவனுக்கு.
அடுத்த நாள் யாருக்கும் நிற்காமல் விடிந்தது. பாமா, ஸ்ரீ மற்றும் தீனா மூவரும் ஆவலாக கிளம்பிக் கொண்டிருக்க வேண்டா வெறுப்பாக முகத்தை வைத்துக் கொண்டு இருந்தான் சத்யா. அனைவரும் கிளம்பி வெளியே வந்த பிறகும் அவன் உடை மாற்றாமல் இருக்க “சத்யா டைம் ஆகுது பாரு. பதினொரு மணிக்கு வந்துருவோம்ன்னு சொல்லிருக்கேன்”, என்று குரல் கொடுத்தார் தீனா. அதற்கு மேல் அவனுக்கும் வேறு வழியில்லை என்பதால் கிளம்பி வந்தான்.
கடைசியாக தான் காரில் கூட ஏறினான். அவன் தான் டிரைவ் செய்யவும் செய்தான். “நான் வேணா ஒட்டவா?”, என்று தீனா கேட்டதற்கும் மறுத்து விட்டான்.
அவர்கள் பார்க்க போகும் வீணாவுக்கும் அதே கடலூர் தான். ஆனால் ஒரு கிராமம். தந்தை வழி சொல்ல அவன் காரை செலுத்திக் கொண்டிருந்தான். முகம் மட்டும் உர்ரென்று இருந்தது.
“உன்னை என்ன கடத்திட்டா போறோம்? பொண்ணு பாக்க தானே போறோம்? முகத்தை எதுக்கு இப்படி வச்சிருக்க?”, என்று கேட்டாள் அவன் அன்னை பாமா.
“நீங்க என்ன சமாதானம் சொன்னாலும் அவன் இப்படி தான் வரப் போறான்? விடுங்க. சுத்தி வியூ செமையா இருக்கு. அதை ரசிக்கிற வேலையைப் பாருங்க. இப்படி எங்கயாவது போனா தான் உண்டு”, என்று சொன்ன தந்தையை இன்னும் முறைத்துப் பார்த்தான்.
“என்ன டா பார்வை?”
“நான் இப்ப கல்யாணம் வேண்டாம், இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்ன்னு சொன்னா கட்டாயப் படுத்தி கூட்டிட்டு வந்துட்டு இப்ப வீயு பாக்குறியா பா நீ? எனக்கு வர கோபத்துக்கு..”, என்று எரிச்சலுடன் முணுமுணுத்தான்.
“அட போடா”, என்ற பார்வையை பார்த்தவர் “ஏய் பாமா அங்க பாரேன், அந்த மலை நல்லா இருக்குல்ல? வரும் போது கண்டிப்பா காரை நிறுத்தி பாத்துட்டு தான் போகணும்”, என்று சொல்ல “ஆமாங்க”, என்றாள் பாமா.
“இதுக திருந்தாத கேஸ்”, என்று எண்ணிக் கொண்டு அவன் கார் ஓட்டுவதிலும் பாடல் மாற்றுவதிலும் கவனம் செலுத்த “என்னங்க, அங்க வந்து ஏதாவது சொதப்பி வைப்பானா?”, என்று கணவருக்கு மட்டும் கேட்கும் படி முணுமுணுத்தாள் பாமா.
“நம்ம பையன் கண்டிப்பா நம்மளை அவமானப் படுத்த மாட்டான். எல்லாம் நல்ல படியா நடக்கும். கவலையை விடு. அந்த பொண்ணைப் பாத்ததும் அவனுக்கும் பிடிக்கும்”, என்று மனைவியை சமாதானப் படுத்தினார்.
ஒரு வழியாக பெண் வீட்டுக்கு வந்ததும் சத்யா மட்டும் அல்ல அவர்களை வரவேற்க ஒரு பெரிய கூட்டமே வாசலில் கூடி நின்றது. சத்யாவுக்கு அப்படியே ஓடி விட வேண்டும் போல தான் இருந்தது. அவன் தனிமை விரும்பி கிடையாது. அவனுக்கு என்று நட்பு வட்டம் உண்டு. ஆனாலும் இந்த கூட்டம் கொஞ்சம் அலர்ஜி தான்.
“என்னப்பா இது? இங்க ஒரு ஊரே கூடியிருக்கு. ஒரே பொண்ணுன்னு சொன்னீங்க?”, என்று கேட்டாள் ஸ்ரீ.