அத்தியாயம் 1 

உன்னைத் தவிர வேறு ஆசையே 

இல்லை என்று சொல்லும் மனதில் 

கூட ஆயிரம் ஆசைகள் பிறக்கும்

காதல் கொண்டால்!!! 

திருப்பாதிரிப்புலியூர் என்று அழைக்கப்படும் அழகான கடலூர் மாவட்டம், வங்காள விரிகுடாவின் அமைதியான கோரமண்டல் கடற்கரையில் அமைந்துள்ளது. கடலூர் ஒரு புனித சுற்றுலா தலம் என்பதால் இது ‘கோவில்களின் தேசம்’ என்ற புனைப்பெயரைப் பெற்றது.

அத்தகையை அழகான கடற்கரையின் அருகில் இருக்கும் பார்க்கில் தன்னுடைய நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சியை மேற்கொண்டிருந்தான் சத்யசீலன் என்ற சத்யா. தீனதயாளன் மற்றும் சத்யபாமா தம்பதியின் மூத்த மகன்.

தீனதயாளனுக்கு சொந்த ஊர் பண்ருட்டி. சொந்த அத்தை மகளான சத்யபாமாவை திருமணம் செய்து கடலூருக்கு வந்தவர் தான். இங்கேயே செட்டில் ஆகி விட்டார். கடலூரில் ‘சத்யா பேப்பர் மில்’ என்ற பேக்ட்டரியை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார். சத்யபாமா அழகும் மங்களமும் கொண்ட அருமையான இல்லத்தரசி. கணவனின் மீது உயிரையே வைத்திருக்கிறாள். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவன் சத்யசீலன் அடுத்தது சத்யஸ்ரீ.

பெற்றவர்களுக்கு பிள்ளைகள் தான் உலகம். இருவருக்கும் கடவுள் நம்பிக்கை இருந்தாலும் ஜாதகம் ஜோசியம் எதிலும் நம்பிக்கை இல்லை. ஏனென்றால் அவர்கள் திருமணம் செய்தது ஜாதகம் பார்த்து இல்லை. சத்யாவுக்கு கடந்த இரண்டு வருடமாக அவர்கள் ஜாதியில் தான் பெண் பார்க்கிறார்கள். ஆனாலும் எதுவும் சரியாக அமையவில்லை என்பதால் இந்த முறை ஜாதி மத பேதமில்லை. எம்மதமும் சம்மதம் என்று எண்ணி பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

சத்யா வயது இருபத்தி ஒன்பது, எம்.பி.ஏ முடித்து விட்டு அவனுடைய தந்தையுடன் சேர்ந்து அவர்களின் பேப்பர் மில்லை பார்த்துக் கொள்வான் என்று தான் அனைவரும் நினைத்தார்கள். அவனோ சிறிது நாட்கள் அனுபவம் தேவை என்று ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் மார்க்கெட்டிங் மேனேஜராக பணிபுரிகிறான். அவனது எம்.டி.யைத் தவிர வேறு யாருக்கும் அவன் சத்யா பேப்பர் மில்லின் முதலாளி என்று தெரியாது.

அவன் ஆருயிர் தங்கை சத்யஸ்ரீ. வீட்டினர் அழைப்பது ஸ்ரீ என்று தான். இன்ஜினியரிங் இரண்டாம் வருடம் படிக்கிறாள். பெற்றவர்கள் மீது பாசம் கொண்டவள். அண்ணன் மீது பயம் கலந்த மரியாதை உண்டு. அதே நேரம் அவனிடம் அடிக்கடி வம்பு வளர்த்து வாங்கிக் கட்டிக் கொள்வாள்.

 தன்னுடைய கடிகாரத்தில் மணி பார்த்த சத்யா வேலைக்குச் செல்ல நேரம் ஆனதால் தன்னுடைய உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சியை முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தான்.

ஏதோ யோசனையில் வந்தவன் கேட் பூட்டியிருப்பதைப் பார்த்து விட்டு என்ன செய்யலாம் என்று யோசித்தான். ஏனென்றால் கதவை தட்டினாலும் உள்ளே இருந்து அன்னை வந்து தான் திறக்க வேண்டும் என்பதால் அப்படியே சுவர் ஏறிக் குதித்து உள்ளே வந்தான்.

“குரங்கு தோத்துப் போயிரும் டா அண்ணா”, என்று அவனைக் கலாய்த்தாள் அவனது தங்கை ஸ்ரீ.

அவளை அந்நேரம் அவன் எதிர் பார்க்க வில்லை  என்பதால் ஒரு நொடி திகைத்தவன் “சே வாட்ச்மேன் கேட் கிட்ட நிக்குறது தெரியாம கஷ்டப் பட்டு சுவர் ஏறிக் குதிச்சிட்டேனே”, என்று சிரிக்காமல் அவளை வாரினான்.

அவன் அப்படிச் சொன்னதும் “அப்பா”, என்று சிணுங்கிய படி குரல் கொடுத்தாள். அவள் அழைத்ததும் “என்ன டா ஸ்ரீ?”, என்ற படி வந்தார் தீனதயாளன்.

“இவன் என்னை வாட்ச்மேன்னு சொல்றான் பா”, என்று சலுகையாக புகார் வாசித்தாள்.

“ஏன் டா அப்படி சொன்ன?”, என்று அவர் கேட்டதும் அவரை முறைத்துப் பார்த்தவன் “அவ என்னைக் குரங்குன்னு சொல்றது எல்லாம் உங்களுக்கு பெருசு இல்லை. ஓவர் செல்லம் கொடுக்குறீங்க இவளுக்கு. பாருங்க ஒரு நாள் இருக்கு”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டான்.

“அவன் கிடக்கான் நீ வா பாப்பா”, என்று சொல்லி அழைத்துச் சென்றார் அந்த பாசமிகு தந்தை.

அவர்கள் உள்ளே போன போது “அம்மா ஒரு டீ”, என்ற சத்யாவின் குரல் தான் கேட்டது.

இவர்கள் இருவரும் அவனுக்கு எதிரே சென்று அமர அவர்களை ஒரு பார்வை பார்த்தவன் ரிமோட்டை எடுத்து நியூஸ் சேனல் வைத்தான்.

“அண்ணா ரிமோட் தாயேன். இந்த நேரம் சூப்பர் பாட்டா போடுவான்”, என்று கேட்டாள் ஸ்ரீ. அவளை முறைத்துப் பார்த்தவன் எதுவோ சொல்ல வரும் போது அங்கு அவன் கேட்ட டீயுடன் வந்த அவன் அன்னை சத்யபாமா “ஏன் டி அவன் கிட்ட வேணும்னு உனக்கு வம்பு வளக்கணுமா? இவ்வளவு நேரம் அந்த டிவி சும்மா தானே இருந்துச்சு? அப்ப வந்து பாக்க வேண்டியது தானே? அவன் பாக்கும் போது தான் நீ பாட்டு கேக்கணுமா?”, என்று கேட்டாள்.

அவள் அன்னையை முறைத்துப் பார்க்க “அவ என்ன சும்மாவா இருந்தா? செடிக்கு தண்ணி ஊத்திட்டு இருந்தா”, என்று மகளுக்காக பரிந்து வந்தார் தீனதயாளன். அவர்களை எரிச்சலுடன் பார்த்தான் சத்யா.

இந்த எரிச்சல் முன்பு எல்லாம் அவனுக்கு வந்ததில்லை. இப்போது சமீபகாலமாக தான் அவனுக்கு வருகிறது. ஏனோ அவனுக்கு சில நாட்களாக தங்கையின் நடவடிக்கையில் மாற்றங்கள் தெரிகிறது. ஏதோ அவள் தவறான பாதையில் செல்கிறாளோ என்ற எண்ணம் அவனுக்கு. இதற்கெல்லாம் தந்தை அதிகமாக கொடுக்கும் சலுகை என்று அவனுக்கு எண்ணம்.

ஸ்ரீ இப்போதெல்லாம் அதிக நேரம் போனை பார்க்கிறாள். படிக்கிறேன் என்று சொல்லி அறைக்குள் அதிக நேரம் தூங்காமல் இருக்கிறாள். காதல் பாட்டுக்கள் அடிக்கடி வீட்டில் கேட்கிறது. அவ்வபோது சிரித்துக் கொள்கிறாள். கல்லூரியில் இருந்து வர தாமதம் ஆகிறது. இவற்றை எல்லாம் ஒரு அண்ணனாக அவன் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறான்.

ஆனால் எந்த ஆதாரமும் இல்லாமல் அவளைப் பற்றி அன்னை தந்தையிடம் சொல்லி அவளை கீழிறக்க அவன் தயாராக இல்லை. ஆனாலும் தந்தை அவளுக்கு இவ்வளவு செல்லம் கொடுக்க வேண்டுமா என்ற எண்ணம் தான்.

அவள் என்ன சொன்னாலும் தீனா தலையாட்டி விடுவார். அவள் பணம் கேட்டாலும் ஏன் எதற்கு என்று கேட்காமல் கொடுத்து விடுவார், எங்கேயாவது அவள் வெளியே செல்ல வேண்டும் என்று கேட்டால் கூட அனுப்பி விடுவார். பாமா ஏன் எதற்கு என்று கேட்டாலும் அவளை வாயை மூட வைத்து விடுவார். அதனால் தான் அப்பா மற்றும் தங்கையை முறைத்துப் பார்த்தான்.

இப்போதும் அவன் அவளை முறைத்துப் பார்க்க “அவளை எதுக்கு டா சத்யா முறைக்கிற? சரி உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்”, என்று சொன்ன தீனா பாமாவைப் பார்த்தார்.

“நீங்களே சொல்லுங்க”, என்று பாமா சொல்ல “அப்படி என்ன விஷயம்? யாராவது சொல்லுங்க”, என்ற சத்யா புருவச் சுளிப்போடு அவர்களைப் பார்த்தான்.

“நாளைக்கு உனக்கு பொண்ணு பாக்க போறோம் டா”, என்றார் பாமா.

“அம்மா எத்தனை தடவை சொல்றேன். சட்டுனு பொண்ணு பாக்க எல்லாம் அரெஞ்ச் பண்ணாதீங்கன்னு. எனக்கு முதல்ல கல்யாணத்துலே விருப்பம் வரலை. ஒரு முப்பத்தி ரெண்டு வயசு ஆகட்டுமே?”

“அது அது அந்த வயசுல நடக்கணும்”

“அப்படினாலும் நேரடியா பொண்ணு பாக்க தான் போகனுமா? அவங்களுக்கும் டைம் வேஸ்ட். நமக்கும் டைம் வேஸ்ட். முதல்ல போட்டோ அனுப்புங்க. அப்புறம் ஜாதகம் பாக்க சொல்லுங்க. அப்புறம் பேசலாமே?”

“நாங்க எல்லாம் பேசிட்டோம் சத்யா. பொண்ணு வீட்ல ஜாதி, ஜாதகம் எல்லாம் பாக்குறது இல்லையாம். அவங்களும் எங்களை மாதிரி லவ் மேரேஜ் தான். அவங்க அப்பா பேர் என்ன தெரியுமா? கமலேஷ் குல்கர்னி”, என்றார் தீனா.