Advertisement

 
9
 
பத்து நாட்கள் கடந்திருந்தது சிபிக்கு அந்த வீடே பிடிக்கவில்லை. வெறுப்பாய் இருந்தது, அவனை பார்த்து கன்னம் குழிய சிரிக்கும் பிஞ்சை அள்ளிக்கொஞ்ச முடியவில்லை.
 
தன் மேல் எப்போதும் கரிசனமாய் பாசமாய் அவ்வப்போது ஏசும் அன்னை கூட அவனிடம் அதிகம் பேசுவதில்லை இப்போது.
 
அவன் தந்தை பசுங்கிளி பகலில் பெரியகுளத்தில் இருக்கும் தோப்பை பார்க்க சென்றுவிடுவதால் இரவு உணவிற்கு பின்னே தான் மகனுடன் அளவளாவுவார்.
 
அவன் அண்ணி ரஞ்சனாவிடம் அவன் அதிகம் பேசியதில்லை. ஜெயவர்மன் மட்டுமே அவனிடம் ஒரு அண்ணனாய் நண்பனாய் புரிந்து பேசும் ஒருவன். அவனுமே வீட்டில் இல்லை.
 
தன் வீடே அந்நியமாய் உணர்ந்தான் அவன். தான் ஏன் வெண்மதியை மணந்தோம் என்று ஆழ்ந்து யோசிக்க ஆரம்பித்தான் இப்போது. ஆழ்மனத்தின் விருப்பம் தான் தன்னை அவ்வாறு செய்யத் தூண்டியது என்று மட்டும் புரிந்தது அப்போது.
 
அவ்வப்போது சவரம் செய்து டிப்டாப்பாக இருப்பவன், சில நாட்களாய் எதிலும் நாட்டமில்லாமல் சவரம் கூட செய்யப்படாத ஐந்து நாட்கள் தாடியுடன் இருந்தான்.
 
யோசனை கலையாது எங்கோ பார்த்துக்கொண்டு உணவை கொறித்துக்கொண்டிருந்த இளைய மகனை பார்த்த செல்வி “உன் பொண்டாட்டி எங்கே??” என்று கேட்க திடுக்கிட்டு பார்த்தான் அவன்.
 
“ஹ்ம்ம் உன்னைத்தான் கேட்டேன் உன் பொண்டாட்டி எங்கேன்னு??”
 
“உள்ள தான் இருப்பா…”
 
“கூப்பிடு… வேணாம் நானே கூப்பிடுறேன்…” என்றுவிட்டு எழுந்தவர் மூடியிருந்த அறைக்கதவை தட்டினார்.
 
அன்று அவளுக்கு விடுமுறை தினம் என்பதால் வீட்டில் தானிருந்தாள் வெண்மதி. கதவை தட்டாமல் தடாலடியாய் உள்ளே நுழைந்தவரை கண்டு கட்டிலில் படுத்திருந்தவள் சட்டென்று எழுந்து அமர்ந்தாள்.
 
“கொஞ்சம் வா உன்கிட்ட பேசணும்…” என்றுவிட்டு வெளியே செல்லப் போனவர் “உன்கிட்டன்னா உன்கிட்ட மட்டுமில்லை, எல்லார்கூடவும் தான்… சீக்கிரம் வா…” என்றுவிட்டு சென்றுவிட்டார்.
 
‘எதுக்கு கூப்பிடுறாங்க…’ என்று யோசித்துக்கொண்டே உறங்கிக் கொண்டிருந்த வானதிக்கு அணைவாய் தலையணை முட்டுக்கொடுத்துவிட்டு அறையை விட்டு வெளியே வந்தாள்.
 
சற்று நேரத்திற்க்கெல்லாம் ஜெயவர்மனும் வந்து சேர்ந்தான் அங்கு. ‘இதென்ன இன்னைக்கு ஜெய் இங்க வந்திருக்கான், நாளைக்கு தானே அவனுக்கு லீவு நாளு…’ என்றெண்ணிய சிபிவர்மன் அண்ணனை பார்த்தான்.
 
“என்ன ஜெய் சொல்லாம கொள்ளாம இன்னைக்கே வந்திருக்க, நாளைக்கு தானே வருவ”
 
“அம்மாகிட்ட நேத்தே சொல்லிட்டனே இன்னைக்கு வர்றேன்னு… அம்மா உன்கிட்ட சொல்லலையா…”
 
இப்போது சிபி அன்னையை பார்த்தான். அவர் அப்பார்வையை கண்டுக்கொள்ளவேயில்லை. ‘உனக்கே இவ்வளவு இருக்கும் போது உங்கம்மாடா நானு எனக்கு எவ்வளவு இருக்கும்’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார் செல்வி.
 
“நாங்க நாளைக்கு ஜெயா கூட திண்டுக்கல் போறோம்” என்றார் அவர் மொட்டையாய்.
 
“சரி போயிட்டு வாங்க, அதுக்கு எதுக்கு இவ்வளவு பில்டப்பு” என்றான் சிபி.
 
மகனை முறைத்த போதும் “இப்போ போனா உங்கண்ணிக்கு குழந்தை பிறந்த பிறகு தான் வருவோம்… இடையில வந்து போற சங்கதி எல்லாம் இல்லை”
 
“என்ன சொல்றீங்க?? ஏன்?? என்னாச்சு இப்போ?? யாராச்சும் உங்களை எதுவும் சொன்னாங்களா??” என்றவனின் பார்வை இப்போது தன் மனைவியின் மீதிருந்தது, நீதானா என்பது போல்.
 
“யாரும் எதுவும் சொல்லலை. உங்கண்ணிக்கு உங்க அண்ணன் கூட இருக்கணுமாம், இந்த மாதிரி நேரத்துல புருஷன் கூட இருக்கறது தான் எல்லா பொண்ணுங்களுக்கும் பிடிக்கும்…”
 
“இப்போ சரி, டெலிவரி அவங்க வீட்டுக்கு தானே அனுப்புவீங்க, அப்போ நீங்க இங்க வந்திடலாம்ல…”
 
“டெலிவரிக்கு யார் வீட்டுக்கும் அனுப்பறதா இல்லை. உங்கண்ணிக்கும் அங்க போக விருப்பமில்லை, எனக்கும் அனுப்ப இஷ்டமில்லை”
 
“அதான் அவ ஆசைப்படி உங்க அண்ணன் கூட இருக்கலாம்ன்னு இருக்கோம். இனி குழந்தை பிறந்து தான் வருவோம்…”
 
“அம்மா அப்போ நானு, என்னை தனியாவிட்டு நீ போய்டுவியாம்மா…” என்ன இருந்ததோ ஒரு கணம் அத்தாயுள்ளம் உருகித்தான் போனது.
 
“நீ தனியா எங்க இருக்க, கூடவே உன் பொண்டாட்டி இருக்கா, உம்புள்ளை இருக்கா அப்புறம் என்ன”
“ம்மா நான் சாப்பாட்டுக்கு என்ன செய்வேன்…” என்று முகத்தை பாவமாய் வைத்து கேட்க ஜெயவர்மன் சிரித்துவிட்டான்.
 
“டேய் நீ என்னடா இன்னும் அம்மா பிள்ளையாவே இருக்கே… உனக்குன்னு ஒரு குடும்பம் வந்தாச்சு, பொறுப்பா பேசுறதைவிட்டு இப்படி பேசுறே…”
 
“ஏன்மா வெண்மதி நீ அவனை பார்த்துக்க மாட்டே, சொல்லேன்ம்மா அவன்கிட்ட, என்னமோ சின்னப்புள்ள மாதிரி அடம் பிடிக்கிறான்…”
 
“ஆமா வெண்மதி அவன் நல்லா சாப்பிட்டு வளர்ந்த புள்ள, அவன் வயிறு வாடாம பார்த்துக்கோ… அவனை மட்டுமில்லை, சொல்றது புரியுதா… எது சொன்னாலும் பூம்பூம் மாடு மாதிரி தலையை ஆட்ட வேண்டியது…”
 
“மத்த நேரத்துல எல்லாம் வாய்க்கு வாய் பேச வருதுல, இப்போ வாயை திறந்து சரின்னு சொல்றதுக்கு என்ன” என்றுவிட்டு சின்ன மருமகளை பார்த்தார் செல்வி.
 
“ஹ்ம்ம் சரி…” என்றாள் வெண்மதி சுருக்கமாய்.
 
சிபிக்கு சத்தியமாய் இதில் உடன்பாடில்லை. ஆனால் ரஞ்சனாவின் ஆசையை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. ஜெய் வேறு பாவம் வாரம் வாரம் வந்து செல்கிறான் அவனுக்கும் அலைச்சல் தானே என்று தோன்றியது.
 
“என்ன வர்மா ஏன்டா டல்லாகிட்டே??” என்றான் ஜெயவர்மன்.
 
“ஒண்ணுமில்லைடா வீட்டில எல்லாரும் போய்ட்டா வீடே வெறிச்சுன்னு ஆகிடும்ல அதான்… சரி விடு பார்த்துக்கலாம்…” என்றவன் “உங்கம்மாகிட்ட சொல்லி இன்னைக்கு ஆடு அடிச்சு குழம்பு வைக்க சொல்லு, சிக்கன் 65 போடச்சொல்லு, இனி தினமும் அம்மா கையால சாப்பிட முடியாதுல”
 
“ஏன் நீ சொல்ல வேண்டியது தானே??”
 
“அம்மா கோவமா இருக்காங்க என் மேல… போன வாரம் நான் கொஞ்சம் எடக்குமடக்கா பேசிட்டேன் அதான்…”
 
“ஜெயா அந்த முருகன்கிட்ட காலம்பரவே ஆடு அடிச்சு கொடுக்க சொல்லிட்டேன். அவனை போய் வாங்கியாற சொல்லு…”
 
மறுநாள் காலையிலேயே ஜெயவர்மனுடன் அனைவருமே கிளம்பிவிட்டனர் திண்டுக்கல்லிற்கு.
 
வீடு வெறுமையாய் காட்சியளித்தது. திட்டினாலும் அவன் அன்னையின் குரல் அவனுக்கு தினமும் கேட்க வேண்டும், இதோ கிளம்பி சென்றுவிட்டார்கள் அனைவரும்.
 
தன் வீட்டிலேயே தான் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்தான் முதன் முறையாக. இதுநாள் வரையிலும் இந்தளவிற்கு தனிமை உணர்ந்ததில்லை அவன்.
அன்னையைவிட்டு செல்ல முடியாமலே வெளியூருக்கு சென்று படிப்பதை கூட நினையாதவனவன்.
 
இரண்டு நாட்களுக்கு மேல் அவனால் அந்த வீட்டில் இருக்க முடியும் போல் தோன்றவில்லை, பைத்தியமே பிடித்துவிடும் போலானது அவன் நிலை.
 
வெண்மதி அவனுடன் இயல்பாய் பேசி சிரித்தாலோ அன்றி வானதி முன் போல் அவனுடன் அவள் இருக்கவிட்டிருந்தாலும் கூட இப்படி தோன்றியிருக்காது போலும்.
 
தோட்டத்து வேலையை இழுத்துப்போட்டுக் கொண்டு செய்தான். உடல் நோக நோக வேலை பார்க்க ஆரம்பித்தான்.
 
சிபிக்கு மட்டுமல்ல செல்வி ஜெயவர்மனுடன் சென்றது வெண்மதிக்குமே பிடிக்காமல் தான் போனது. தான் மற்றவர்களுடன் கலகலப்பாய் இல்லாவிடினும் அந்த வீட்டில் ஒரு உயிர்ப்பு இருந்தது.
 
செல்வி அப்படி இருக்கச் செய்திருந்தார் என்பது அவர் இல்லாத இந்நாளில் அவளுக்கு புரிந்தது. இருவரும் சேர்ந்திருந்தால் எப்போதும் முட்டிக் கொண்டிருந்த போதிலும் செல்வியின் பிடித்தமின்மை இயல்பாய் இருந்ததாய் உணர்ந்தாள்.
 
அந்த வீட்டில் எல்லாருமே அவளை சிபிக்காக ஏற்றுக் கொண்டிருந்தாகவே தோன்றியது. அதில் செல்வி மட்டுமே விதிவிலக்கு.
எதுஎதுவோ எண்ணக்குமிழ்கள் ஓட வானதியின் குரலில் நடப்பிற்கு வந்தவள், அவளை கவனிக்க ஆரம்பித்தாள்.
 
சமையலறைக்கு சென்று உணவு சமைக்க ஆரம்பித்தாள். மூவர் மட்டுமே இருந்த போதும் அவள் இருவருக்கு மட்டுமே சமைத்தாள்.
 
செல்வி திண்டுக்கல் சென்ற அன்றே சொல்லிவிட்டான் சிபி. “எனக்காக யாரும் சமைக்க வேணாம், எனக்கு தேவையானதை நானே செஞ்சுக்குவேன்…” என்று எங்கோ பார்த்து சொல்லிவிட்டு சென்ற போதும் அவள் அதை அலட்சியப்படுத்தி முதன் முறையாய் அவனுக்கும் சேர்த்தே உணவு செய்தாள்.
 
அதை அவன் உண்டால் தானே, வீட்டிற்கு வந்தவன் அவனுக்கு தேவையானது அவனே செய்துக்கொண்டான். ‘போடா பெரிய இவன், உங்கம்மா சொன்னாங்கன்னு உனக்கு எல்லாம் பாவம் பார்த்து செய்தேன்ல என்னை உதைக்கணும்’ என்று மனதார திட்டிக்கொண்டாள்.
 
இரு வாரங்கள் சென்றிருக்கும் அன்று காலையே சொல்லாமல் கொள்ளாமல் செல்வியும் பசுங்கிளியும் வீட்டிற்கு வந்திருந்தனர்.
 
வெண்மதியும் குழந்தையும் தான் வீட்டிலிருந்தனர். சிபி காலையிலேயே தோட்டத்திற்கு சென்றுவிட்டிருந்தான்.
 
“வாங்க அத்தை!! வாங்க மாமா!!” என்று முதன் முறையாக முறை அவர்களை முறைசொல்லி அவங்களின் முன்னே அழைத்தாள்.
இதுநாள் வரை மற்றவர்களிடம் சொல்லும் போது அத்தை, மாமா என்று உறவு சொல்லியிருக்கிறாள். அதிகம் சொல்லியதில்லை என்றாலும் பேச்சுவாக்கில் சொல்வதுண்டு.
 
“காபி போடட்டுமா உங்களுக்கு?? இல்லை டிபன் சாப்பிடறீங்களா??”
 
“டிபன் எல்லாம் பெரியவன் வீட்டிலவே ஆச்சு, காபி வேணா போடு உங்க மாமா குடிப்பாக, எனக்கு டீத்தண்ணி தான் எப்போவும்…”
 
“தெரியும் அத்தை, கொண்டு வரேன்” என்று நகர்ந்தாள்.
 
“என்ன செல்வி மருமககிட்ட மாற்றம் தெரியுதுல” என்றார் பசுங்கிளி.
 
“ஹ்ம்ம்…” என்று மெல்ல முணுமுணுத்தார் செல்வி.
 
“கொஞ்சம் நல்லா தான் சந்தோசப்படுவியா, அதையும் சுணக்கமாவே சொல்லுத”
 
“எல்லாம் எனக்கு தெரியும் நீங்க கொஞ்சம் பேசாம இருங்க” என்று கணவனை அடக்கினார் அவர்.
 
“எங்க சின்னவனை காணோம், எப்பவும் இந்நேரம் வீட்டுக்கு வந்திடுவானே” என்று மெதுவாய் அந்த மாமியார் தன் வேலையை ஆரம்பித்தார்.
 
‘ஆமா, இவுங்க பிள்ளை என்கிட்ட சொல்லிட்டு தான் போறாராக்கும் என்கிட்ட வந்து கேட்டுக்கிட்டு’ என்ற முனகினாள் அவள்.
 
“தெரியலை அத்தை…”
 
“தெரியலையா, இது கூட தெரியாம நீ என்ன பொம்பள… என்ன குடித்தனம் பண்ணிட்டு இருக்க நீ…” என்று நேரடியாகவே சண்டையை தொடங்கினார்.
 
“எதுக்கு இப்போ வந்ததும் வராததும் என் மேலே பாயறீங்க நீங்க… எதுவா இருந்தாலும் உங்க பிள்ளைகிட்ட கேளுங்க…”
 
“என்னமோ தினமும் என்கிட்ட அவர் சொல்லிட்டு போற மாதிரியில்ல நீங்க என்கிட்ட கேட்கறீங்க…”
 
“அவரு எப்போ வர்றாரு எப்போ போறாருன்னே எங்களுக்கு தெரியாது. வீட்டில ரெண்டு பேரு தனியா இருப்பாங்கன்னு கூட இல்லாம பொறுப்பில்லாம இருக்காரு…”
 
“ஆமாமா நீ வேலைக்கு போகும் போது தினமும் எல்லார்கிட்டயும் சொல்லிட்டு போனில்ல, அப்போ உன்கிட்ட அவனும் சொல்லிட்டு தானே போகணும்” என்று குத்தினார் செல்வி.
 
“அத்தை… நான் ஒண்ணும் அவர் என்கிட்ட சொல்லிட்டு போகணும்ன்னு எல்லாம் நினைக்கலை, நீங்க கேட்டதுக்கு தான் பதில் சொன்னேன்”
“அப்புறம் இன்னொரு விஷயம் நீங்க சொன்னீங்களேன்னு தான் உங்க புள்ளைக்கு சமைச்சு போடலாம்ன்னு நினைச்சேன்…”
 
“ஆனா அவரு தனியா தான் சமைச்சுக்குவாராம் தனியா தான் சாப்பிட்டுக்குவாராம்… நான் செஞ்சு வைச்சாலும் அவர் சாப்பிடலை, அதுக்கும் என்னை குறை சொல்ற வேலை எல்லாம் வைச்சுக்காதீங்க…” என்று நேராகவே சொன்னாள் செல்வியிடம்.
 
“வித்தாரக்கள்ளி விறகொடிக்க போனாளாம், கத்தாழை முள்ளு கொத்தோட வந்துச்சாம்… நீ சொல்ற நொண்டி சாக்கு இப்படி தான் இருக்கு…”
 
“மொத்ததுல என் புள்ளையை பட்டினி போட்டிருக்க அப்படி தானே” என்று சொன்னவர் அவளை ஆழ ஊன்றி பார்க்க ‘இவங்க என்ன சொல்றாங்க’ என்று மிரட்சியாய் அவரை ஏறிட்டாள் வெண்மதி.
 
பசுங்கிளி இவர்கள் பேச்சுவார்த்தை கண்டு நமக்கேன் வம்பு என்று வெளியே என்றுவிட்டார். சிபி வேலையில் ஆழ்ந்துவிட்டால் கைப்பேசி எல்லாம் தூரம் தானிருக்கும் எப்போதும்.
 
அழைப்பேதும் வந்தாலும் அவனுக்கு தெரியாது. சுவிட்ச் ஆப் வேறு செய்திருந்தான். மதியம் போல் வீட்டிற்கு வந்தவன் செல்வியை கண்டு சந்தோஷித்து போனான்.
 
“அம்மா எப்போம்மா வந்தே?? எவ்வளோ நாளாச்சும்மா உன்னை பார்த்து” என்றான் குதூகலத்துடன்.
“ஏன்ய்யா உனக்கே இது நியாயமாயிருக்கா ரெண்டு நாள் முன்னாடி தானே நீ எங்களை பார்க்க திண்டுக்கல் வந்தே… என்னமோ ஒரு வருஷமா பார்க்காதவன் மாதிரி பேசுறே”
 
“இந்த வீட்டுல உன்னை இப்போ தானேம்மா பார்க்குறேன்”
 
செல்வி அன்று முழுவதும் அங்கு தானிருந்தார். என்ன கண்டாரோ ஏது காண வந்தாரோ அன்று மாலை வேலை முடிந்தது என்பது போல் திண்டுக்கல் கிளம்பிச் சென்றுவிட்டார் கணவருடன்.
 
கிளம்புமுன் மகனுக்கும் மருமகளுக்கும் மண்டகப்படி நடத்திவிட்டு தான் சென்றார் அவர்.
 
அவர் கிளம்பிச்சென்று ஓரிரு நாட்கள் எந்த மாற்றமுமில்லாமலே செல்ல அடுத்தடுத்த நிகழ்வுகள் இருவரையும் ஒரே நேர்கோட்டில் நிறுத்தியது.
 
தண்டவாளம் போல் இணைந்திருந்தாலும் சேராமல் இருந்தவர்கள் அதை இணைக்கும் ரயில்பெட்டியை போல் வானதியினால் ஒன்று சேரும் நன்னாளை நோக்கிப் பயணித்தது அவர்கள் வாழ்வு.

Advertisement