Advertisement

 
8
 
அவர்கள் கிளம்பிச் செல்லும் வரையிலும்கூட அவள் சமையலறையில் இருந்து வெளியே வரவேயில்லை. வெளியே சென்றபின் சிபிவர்மன் சந்தியாவை அவள் பெற்றோரின் முன்னேயே எச்சரித்ததை அவளறியாள்!
தன் மேலேயே வெறுப்பாய்!! கோபமாய்!! ஆத்திரமாய்!! இயலாமையாய்!! என்று கலவையான உணர்வுகள் அவளுக்குள்.
 
அத்தனையும் சிபியின் மேல் திரும்பி எந்நேரத்திலும் அவனை குத்தி குதறி எடுத்துவிடும் அளவிற்கான கோபம் அவளுள் கனன்று கொண்டிருந்தது.
 
ஓரிரு நாட்களுக்கு பின்னே அக்கனல் எரிமலையாய் வெடித்து சிதறப்போவதறியாமல் சிபிவர்மன் மிகச் சாதாரணமாகவே அவன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தான்.
 
இரண்டு நாட்கள் அமைதியோடே கழிந்தது. அன்று காலை எப்போதும் போல் வெண்மதி குழந்தையை அழைத்துச் சென்று அவள் அன்னை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்றுவிட்டாள்.
 
சிபிவர்மனுக்கு அன்று பெரிதாய் எந்த வேலையுமில்லை. காய் அறுப்பு வேலை எல்லாம் முடிந்துவிட்டது. காலையிலேயே நீர் பாய்ச்சும் வேலையும் முடிந்து போனது.
 
ஆடு மாடுகளுக்கு வெள்ளையம்மா பாட்டியும் அவர் மகனுமே தண்ணி காட்டுவதும் தீவனம் போடுவதும் பார்த்துக் கொள்வார்கள் என்பதால் அவன் வேலை மேற்பார்வையுடனே முடிந்து போனது.
 
மறுநாள் தான் தீவனம் வாங்கவும் உரம் வாங்கவும் அவன் வெளியே செல்ல வேண்டிய இருந்தது. வேலை ஒன்றுமில்லாதது போல் தோன்ற மதியத்திற்கு பிறகு வெண்மதியின் வீட்டிற்கு சென்று வானதியை அவனே அழைத்து வந்துவிட்டான்.
 
அவன் பொழுது குழந்தையுடன் விளையாடுவதும் அவளை கவனிப்பதும் என்று மிக இனிதாக செல்ல அவன் அன்னை செல்வி தான் அவனை பார்த்து பொருமித் தீர்த்தார்.
 
‘அவன் புள்ளையை கொஞ்ச வேண்டியது விட்டு ஊரான் பெத்த பிள்ளையை கொஞ்சிட்டு இருக்கான்’ என்ற எண்ணம் உள்ளே ஓடிய போதும் அவருக்கு வானதியின் மேல் பெரிதாய் எந்த வெறுப்புமில்லை.
 
குழந்தையிடம் கோபமோ வெறுப்போ எவருக்கும் வருமோ?? செல்வியும் அதற்கு விதிவிலக்கல்ல. அவராய் தூக்கி குழந்தையை கொஞ்சியதில்லையே தவிர இருவரும் விளையாடுவதை பார்த்து ரசித்துக் கொண்டுதானிருந்தார்.
 
செல்வியை தவிர மற்ற அனைவருக்கும் வானதி என்றால் பிரியமே.
 
மாலை எப்போதும் போல் வெண்மதி அவள் அம்மா வீட்டிற்கு சென்று வானதியை கூட்டிவரச் சென்றாள்.
 
வீடு பூட்டியிருக்க “எங்க போயிருப்பாங்க…” என்று வாய்விட்டு முனகிவிட்டு அவள் அன்னைக்கு அழைத்தாள். “ஹலோம்மா… எங்கம்மா போயிட்டீங்க நான் வீட்டுக்கு வர்ற நேரத்துல”
“ஆண்டிபட்டி வரைக்கும் வந்திருக்கோம் உங்க அத்தையை பார்க்கலாம்ன்னு… உடம்பு சரியில்லாம இருந்து இப்போ தானே தேறி வந்திருக்காங்க… உங்கப்பா ஒரு எட்டு போய் பார்த்திட்டு வந்திடலாம்ன்னு சொன்னார் அதான்…”
 
“முன்னாடியே சொல்லியிருக்கலாம்ல சரிம்மா பாப்பா என்ன செய்யறா??”
 
“பாப்பாவை தான் மருமகன் வந்து கூட்டிட்டு போயிட்டாரேம்மா… அதுக்கு பிறகு தானே நானும் உங்கப்பாவும் இங்க வந்தோம்…”
 
“என்ன… என்னம்மா சொல்றீங்க?? யார் வந்து கூப்பிட்டாலும் நீங்க பாப்பாவை அனுப்பிடுவீங்களா??”
 
“என்ன பேசுறே மதி?? அவரு உன் புருஷன் அவர் வந்து குழந்தையை கூட்டிட்டு போறதுல என்ன தப்பிருக்கு, சும்மா தாம்தூம்ன்னு குதிக்காத…”
 
“ஓ!! என் கழுத்துல தாலி கட்டிட்டா அவன் என் புருஷன் ஆகிடுவானா… அதுனால தான் அவன் கூட என் புள்ளைய நீங்க அனுப்பிட்டீங்க அப்படி தானே…”
 
“மதி… நீ என்ன புரியா…” என்று அவர் பதில் சொல்லு முன் “நீங்க வேற எப்படி இருப்பீங்க, அவன் என் கழுத்துல தாலி கட்டிட்டான்னு என்னை அவன் கூட போம்மான்னு அனுப்பி வைச்சவங்க தானே நீங்க…”
 
“உங்களால பார்த்துக்க முடியலன்னா முன்னாடியே சொல்லியிருக்க வேண்டியது தானே… என் குழந்தையை நான் காப்பகத்துல விட்டுப் போயிருப்பேன்ல…” என்று சற்று ஆங்காரமாகவே கத்தினாள்.
 
“இனிமே என் புள்ளையை நான் உங்ககிட்ட விட மாட்டேன்” என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாள்.
 
அவள் அன்னையை பேசவே விடவில்லை. கோபம் கண்ணை மறைத்தது, ஆத்திரம் அறிவை மழுங்க செய்தது.
 
அதே ஆத்திரத்துடன் வீட்டிற்கு வண்டியை விரட்டினாள். அந்த கரடுமுரடான பாதையில் கொஞ்சமும் யோசிக்காமல் அவ்வளவு வேகமாக வந்திருந்தாள்.
 
உள்ளே நுழையும் போதே சிபி வானதியுடன் விளையாடுவது கண்ணில்பட்டது. இருவரும் அங்கிருந்த கோழியையும் அதன் குஞ்சுகளையும் விரட்டிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்.
 
வண்டியை ஸ்டான்ட் போட்டாளோ அன்றி சாய்த்து நிறுத்தினாளோ வேக வேகமாய் வந்து குழந்தையை தூக்கினாள்.
 
அவளின் அவசரம் கண்டவன் “என்னாச்சு?? எதுக்கு வந்ததும் வராததுமா குழந்தையை இப்படி தூக்குறே?? பாப்பா பயந்திட போறா…”
 
“என் குழந்தை நான் தூக்குறேன், உனக்கு என்ன வந்திச்சு??” என்றாள் எடுத்தெறிந்து.
 
“நான் இப்போ என்ன சொல்லிட்டேன்னு…”
 
“பேசாத, நீ பேசாத… எதுக்கு என் குழந்தையை தூக்கிட்டு வந்தே…”
 
“இல்லை இன்னைக்கு எனக்கு வேலை சீக்கிரம் முடிஞ்சு போச்சு… பாப்பா கூட விளையாடலாம்ன்னு தான் போய் கூட்டிட்டு வந்தேன்… ஏன் அதுல என்ன தப்பிருக்கு??”
 
“உனக்கு என்ன உரிமையிருக்குன்னு என் குழந்தையை நீ தூக்கிட்டு வந்தே??”
 
“நீ என்ன லூசா??”
 
“ஆமா லூசு தான், நீ என் கழுத்துல ஒரு மஞ்ச கயிறை கட்டிட்டேன்னு உன் கூட போக சொன்னாங்கன்னு புடிக்கலைன்னாலும் வந்தேன்ல… அப்போ நான் லூசு தானே…”
 
“ஹேய் என்ன பேசுறே நீ?? இப்போ எதுக்கு அந்த பேச்செல்லாம்…”
 
“பேசுவேன் அப்படி தான் பேசுவேன், இனிமே என் குழந்தைய நீ தொட்டே அவ்வளோ தான் சொல்லிட்டேன்…”
 
வெண்மதி கன்னாபின்னாவென்று பேச சிபிக்கு குழந்தையை தொடக்கூடாது என்று சொன்னதும் ஒரு கோபம், வீம்பாய் குழந்தையை அவளிடம் இருந்து பறித்தான், உடன் ‘உன்னால இப்போ என்ன செய்ய முடியும்’ என்பதான பார்வை வேறு பார்த்து வைக்க அவளின் கோபம் உச்சத்தை தொட்டு அடுத்து அவள் சற்றும் யோசிக்காமல் பேசிய பேச்சில் அவன் கைகள் அவளை ஓங்கி அறைந்திருந்தது.
 
அவன் அடித்ததில் முகம் சிவக்க நின்றிருந்த வெண்மதி. “எதுக்கு என்னை அடிச்சே??” என்றாள் இன்னும் ஆத்திரமாய்.
 
“நீ என்ன பேசறேன்னு புரிஞ்சு தான் பேசறியா??” என்றான் அவனும் கோபம் கொப்பளிக்கும் குரலில்.
 
“உன்னை இன்னைக்கு நேத்தா நான் பார்க்கறேன். நீ எப்படின்னு நான் சொல்லணுமா?? சொல்லு நான் சொல்லணுமா?? உன்னை எனக்கு நல்லாவே தெரியும்… அதை வைச்சு தான் சொல்றேன்…” என்று அழுத்தந்திருத்தமாக அவள் சொல்லவும் அவன் வாயடைத்து தான் போனான்.
 
“என்ன தெரியும் உனக்கு என்னைப்பத்தி?? எதையும் எதையும் முடிச்சு போடுறே??”
 
“போடுவேன் அப்படி தான் முடிச்சு போட்டு பேசுவேன். மறக்கக்கூடிய மாதிரியானதா அது. ஏன் எல்லாம் மறந்து போச்சா உனக்கு?? அப்போவே நீ அவ்வளவு கேவலமானவன் தானே… இப்போ மட்டும் என்ன புதுசா மாறியிருக்கவா போறே??” என்றவளின் பேச்சு அவன் எண்ணத்தில் ஓடிக்கொண்டேயிருந்தது.
 
இன்னும் என்னென்னவோ பேசி பேச்சால் அவன் உள்ளத்தை குத்திக் கிழித்து ரணமாக்கினாள் அவள்.
 
“நீ ஒண்ணும் என் குழந்தைக்கு அப்பா இல்லை… தவிர நீ ஒரு ஆண், உன்னோட எண்ணம் எப்பவுமே தவறான எண்ணம் தான்… நீயே தப்பானவன் தான்”
 
“உன்னை நம்பி என் குழந்தையை உன்கிட்ட எப்பவும் கொடுக்க முடியாது, கொடுக்கவும் மாட்டேன்…” என்றிருந்தவளை தான் கோபத்தில் அடித்திருந்தான் அவன்.
 
தான் கெட்டவன் பெண்களை போகப் பொருளாய் பார்ப்பவன் என்பது போல் தான் இருந்தது அவள் பேசியதின் சாராம்சம்.
 
அடுத்து அவள் மேலே எதுவும் சொல்லும் முன் அவன் கைகள் வானதியை அவளிடம் கொடுத்துவிட அவள் முகம் ஒரு வித நிம்மதியை சுமந்தது. தன்னிடம் இருந்து பிடுங்கிய பொம்மையை மீண்டும் அடைந்துவிட்ட குழந்தையின் செய்கை அது.
 
சிபிவர்மனின் முகமோ கசங்கியது அவளின் நெஞ்சை கிழிக்கும் வார்த்தையில்.
 
“எதுக்கு அப்படி சொன்னே??” என்றான் முகத்தில் இன்னமும் கோபமும் குழப்பமும் புரியா பாவமுமே. தன்னை ஏன் இப்படி சொன்னாள் இவள் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது அவனுக்கு.
 
“மறக்க நினைக்கிறதை நினைச்சு பார்க்க விரும்பலை…” என்று முகத்தில் அடித்தது போல் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றாளவள் குழந்தையுடன்.
 
அந்நிகழ்வுக்கு பின் அவளிடம் அவன் அதிகம் பேசிக்கொள்ளவில்லை. ஒரே அறையில் இருந்தாலும் தனித்தீவாகவே இருந்தனர் இருவரும்.
 
அவ்வப்போது அவனை பார்த்து சிரிக்கும் வானதியை தூக்கி கொஞ்ச கூட முடியாதது அவனுக்கு பெரும் கவலையாகவே இருந்தது.
 
‘சரி தான் போடி நீயும் உன் அறிவும்’ என்று சமயத்தில் அவளை திட்டிவிட கூட தோன்றும் அவனுக்கு. ஆனாலும் அவள் பேசிய பேச்சு அவனை எதுவும் பேசவிடாமல் தடுத்தது.
 
என்றோ ஒரு நாள் வாலிபத்தின் ஆரம்பத்தில் இருந்தவன் விளையாட்டாய் செய்தது இன்று அவனுக்கே வினையாய் போகும் என்று அவன் அன்று அறிந்திருக்கவில்லை.
 
அந்நிகழ்வினால் வெண்மதி எவ்வளவு தூரம் பாதித்திருந்தால் இந்தளவிற்கு அவன் மீது வெறுப்பாகி போயிருப்பாள் என்று இப்போதும் அவனுக்கு புரிந்திருக்கவில்லை.
 
புரிந்தால் தான் அவன் வாழ்வின் புது அத்தியாயம் தொடங்கும் என்பதறிந்தால் அவளிடம் பேசியிருப்பானோ!! என்னவோ!!
 
வெண்மதி ஒரு வாரம் ஆகிய போதும் வேலைக்கு செல்லாமல் குழந்தையை தன் கைக்குள்ளேயே வைத்து அடைக்காத்தாள்.
 
செல்வி சிபியிடம் “டேய் என்னவாம் உன் பொண்டாட்டி வீட்டுக்குள்ளவே அடைஞ்சு கிடக்குறா. உனக்கும் அவளுக்கும் எதுவும் சண்டையா??”
 
‘சண்டையா… என்னைக்கி நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா டூயட் பாடிட்டு இருந்தோம். இன்னைக்கு தான் புதுசா நாங்க சண்டை போடுறது கணக்கா கேட்குறாங்க…’ என்ற எண்ணம் தான் அவனுக்கு.
 
“வர்மா நான் பாட்டுக்கு கேட்டுக்கிட்டே இருக்கேன். நீ பேசாம இருந்தா என்ன அர்த்தம்??”
 
“ஹான்… ஒண்ணுமில்லைம்மா…”
 
“என்னவோ இருக்கு… என்னவாம் அவளுக்கு ரொம்ப தான் சிலுப்பிக்கிட்டு திரியறா… குழந்தையை கூட கண்ணுல காட்டாம அப்படி என்ன தான் செய்யறா”
 
“நீயும் அந்த ரூம்ல தானே படுக்குற, நீ தான் சொல்லணும்…” என்றவரை முறைத்தான் சிபிவர்மன்.
 
“ஏன்மா உனக்கு இப்போ என்ன பிரச்சனை?? நாங்க என்ன பண்றோம் ஏது பண்றோம்ன்னு பார்க்கறது தான் உன் வேலையா… புருஷன் பொண்டாட்டிக்குள்ள நீ எதுக்கும்மா நடுவுல வர்றே??” என்று அவன் சொல்லிவிட செல்வி பொருமி தீர்த்துவிட்டார்.
 
“நீ ஏன்யா சொல்ல மாட்டே, அப்பனும் ஆத்தாளும் உன்னைய இம்புட்டு தூரம் வளர்த்து ஆளாக்கிவிட்டோம்ல நீ அவுகள எதுத்து பேசத்தேன் செய்வே…”
 
“பெத்தவுக உங்களுக்கு அறிவுரை சொன்னா, உங்க நல்லதுக்கு சொன்னா, கேள்வி கேட்டா புருஷன் பொண்டாட்டிக்குள்ள வராதீங்கன்னு பேசுவீகளோ… பார்க்குறேன், இன்னும் எத்தனை நாளுக்கு தான் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுதீயன்னு பார்க்குறேன்…”
 
“கத்திரிக்காய் முத்துனா சந்தைக்கு வந்து தானே ஆகும்… பெத்தவக பெரியவக சொல்லுறது எல்லாம் இப்போ கசக்கத்தான் செய்யும்… அவங்க நல்லதுக்கு தான் சொல்லுதாகன்னு காலம் புரிய வைக்கும்…”
 
“ம்மா இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு நீங்க இப்படி மூச்சு பிடிச்சுட்டு பேசிட்டு இருக்கீங்க…”
 
“உங்கக்கூட இனி நான் பேசுறதா இல்லை சாமி. நீயாச்சு உன் பொண்டாட்டியாச்சு. இனி உங்க விஷயத்துல நான் தலையிடல சாமி…”
 
“எங்கயோ போன மாரியாத்தா எம் மேல வந்து ஏறு ஆத்தான்னு இங்க வந்து ஏறிக்கிட்டவ, எம்புள்ளைய என்கிட்ட இருந்து பிரிச்சிட்டாலே” என்று புலம்பிக்கொண்டே வீட்டின் பின்புறம் சென்றார்.
 
செல்வியின் பேச்சு இன்னமும் தேய்ந்த குரலில் அவன் காதிலும் விழத்தான் செய்தது.
 
இரவில் அவனும் அதே அறையில் படுத்தாலும் அந்த அறையில் உள்ள பொருட்களை போல் அவனும் இருந்து கொள்வான் அவ்வளவே!
 
அவனுக்குமே வெண்மதி இப்படி வேலைக்கும் செல்லாமல் பகலில் கூட அதிகம் அறையைவிட்டு வாராமல் இருப்பது கண்டு எரிச்சலும் கோபமும் வரத்தான் செய்தது.
 
நான்கு நாட்களுக்கு முன் வீட்டிற்கு வந்த அவளின் அன்னை சங்கரியையும், அவள் தந்தை கணேசனையுமே அவள் அந்த வாங்கு வாங்கிவிட்டாள். சங்கரியும் மகளை நன்றாகவே திட்டிச் சென்றுவிட்டார்.
 
இதில் தான் வேறு மீண்டும் அவளிடம் பேசப்போய் அவள் இன்னமும் அதிகம் பேசிவிடுவாள் என்றே அமைதியாய் போனான்.
 
மறுநாள் வழக்கம் போல் வேலைக்கு செல்ல ஆரம்பித்திருந்தாள், வழமை போல் வானதியையும் அவளுடனே அழைத்துச் சென்றாள்.
 
குழந்தையை ஏதோ காப்பகத்தில் விட்டு அவள் வேலைவிட்டு வரும் போது அழைத்து வருவாள் போலும். முதலில் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டிருந்தாள். பகல் வேலை மட்டுமே செய்ய முடிந்த அந்த சிறிய நர்சிங் ஹோமில் வேலைக்கு சேர்ந்திருந்தாள்.

Advertisement