Advertisement

 
7
 
சிபியின் இல்லம்
——————————–
 
வெண்மதி அவன் பின்னோடு கிளம்பியிருந்தாலும் அவன் வந்து சேர்ந்து ஐந்து நிமிடம் கழித்தே வீட்டை அடைந்தாள்.
 
“வர்மா என்ன நீ மட்டுமா வர்றே?? எங்க அவ?? அவ புள்ளைய உன்கிட்ட கொடுத்துட்டு எங்கன சுத்திட்டு வாரா??” என்ற அன்னையை கண்டிப்பாய் பார்த்தான்.
 
‘இவளை ஒரு வார்த்தை சொல்லக் கூடாதுங்கறானே…’ என்று மனதிற்குள்ளாகவே சொல்லிக்கொண்டார்.
 
“பாப்பாக்கு சாப்பிட என்ன இருக்கு??”
 
“ஏன் அவ ஆத்தாகாரி…” என்று ஆரம்பித்தவர் மகனின் பார்வையில் பேச்சை நிறுத்தி உள்ளே சென்றுவிட்டார்.
 
அவர் குழந்தைக்கு உணவை கொண்டு வரவும் வெண்மதி உள்ளே நுழையவும் சரியாக இருந்தது. “வர்றா பாரு ஆடி அசைஞ்சுட்டு…” என்று முணுமுணுத்தவாறே வந்தவர் உணவை மகனின் கையில் கொடுத்தார்.
 
“கொடுங்க அவளை” என்று சிபியின் முன் நின்றிருந்தாள் வெண்மதி.
 
“நீ போய் குளிச்சிட்டு சாப்பிடு… நான் சாப்பாடு ஊட்டிக்கறேன்…” என்றவன் குழந்தையை அவளிடம் தராமல் வெளியே கூட்டிச்செல்ல அவளும் பின்னோடு வந்தாள்.
 
சிபி அவளை சற்றும் கண்டுக்கொள்ளாமல் குழந்தைக்கு வேடிக்கை காட்டிக்கொண்டே உணவை ஊட்டவாரம்பித்தான்.
 
“மரியாதையா குழந்தையை என்கிட்டே கொடு” என்று சீறினாள்.
 
“அதே மரியாதையோட தான் நானும் சொல்றேன். உள்ள போ, காலையில இருந்து இவளை இங்க விடாம உங்கம்மா வீட்டில கூட்டிட்டு போய் விட்டுட்டல…”
 
“அப்போ எதுவும் நான் கேட்டனா, இப்போ தானே குழந்தையை தூக்கி இருக்கேன்… இப்போ வந்து எதுக்கு டிஸ்டர்ப் பண்றே…” என்று அவனும் பதிலுக்கு எகிறவே செய்தான் அவளிடம்.
 
அவள் வானதியை அவனிடம் இருந்து பிடிக்க முயற்சி செய்ய அதை லாவகமாய் தடுத்தவன் “போடி” என்றான்.
 
வெண்மதிக்கு அழுகை வரும் போல் இருந்தது. வானதியை அவளால் எப்போதும் யாருக்கும் விட்டுத்தரவே முடியாது.
 
குழந்தை பிறந்து ஒரு வருடம் வரை வேலைக்கு செல்லாமல் குழந்தையையே அடைக்காத்து கொண்டிருந்தவள் வீட்டினரின் பேச்சை கேட்டு கொஞ்சம் தன்னை மாற்றிக்கொண்டு வேலைக்கு சென்று வர ஆரம்பித்திருந்தாள்.
 
அம்மா வீட்டில் குழந்தையை அவள் விட்டுச் சென்றாலும் வீட்டிற்கு வந்ததும் குழந்தையை வேறு யாரிடமும் கொடுக்க மாட்டாள்.
 
குழந்தைக்காக மட்டுமே அவள் இங்கிருக்கிறாள்(?) இல்லையென்றால் என்ன செய்திருப்பாளோ!!
 
சிபி குழந்தையை கொடுக்காத கோபத்தில் அவளறைக்கு சென்றுவிட்டாள். சிறிது நேரம் கழித்து அறைக்கு வந்தவன் கரங்களில் வானதி தூங்கிக் கொண்டிருந்தாள்.
 
கட்டிலில் அவளை கிடத்திவிட்டு வெண்மதியை பார்த்தான். “சாப்பிட்டியா??”
 
அவனுக்கு பதிலொன்றும் சொல்லாமல் அவனை முறைத்தாள். “ப்பா செம பயர்” என்றான் அவள் கண்களை தெரிந்த கனலை கண்டு.
 
“என்ன??”
 
“ஒண்ணுமில்லை… சாப்பிட வா…”
 
“எனக்கு வேணாம்…”
 
“சரி போ…” என்றுவிட்டு சென்றுவிட்டான்.
நாட்கள் இப்படியே சென்றுக் கொண்டிருந்த ஓர் நாளில் ரஞ்சனாவின் குடும்பத்தினர் வந்திருந்தனர். அவளுக்கு ஏழாம் மாதம் செய்து வீட்டுடன் அழைத்து செல்லவென்று.
 
அவர்களுடன் சந்தியாவும் வந்திருந்தாள். அன்று விடுமுறை தினமென்பதால் வெண்மதியும் வீட்டில் தான் இருந்தாள்.
 
சிபிக்கு விடுமுறை தினமென்றாலும் மற்ற நாட்கள் என்றாலும் ஒன்று தான். அன்று மாந்தோப்பில் காய் அறுப்பு நடந்துக் கொண்டிருக்க அங்கு சென்றிருந்தான்.
 
உலக அதிசயமாய் அவர்கள் வந்ததும் வெண்மதி செல்விக்கு உதவும் பொருட்டு சமையலறையில் வந்து நின்றாள்.
 
செல்வி அவளை ஏற இறங்க பார்க்க “இல்லை எல்லாரும் வந்திருக்காங்களே, நான் எதுவும் ஹெல்ப் பண்ணவா…” என்று அவள் மெதுவாய் வார்த்தைகளை பாதி விழுங்கியும் விழுங்காமலும் கேட்க செல்வி வாயடைத்து தான் போனார் ‘என்ன அதிசயமடா இது’ என்று.
 
“இந்த காபியை போட்டு கொண்டு வர்றியா… நான் இந்த பலகாரம் கொடுத்திட்டு வர்றேன்…”
 
“எதுக்கு தனித்தனியா எடுத்திட்டு போகணும்… ஒரு ரெண்டு நிமிஷம் பொறுங்க, ரெண்டுமே ஒண்ணா எடுத்திட்டு போயிறலாம்” என்றவள் “நீங்க போய் அவங்ககிட்ட பேசிட்டு இருங்க… நான் எடுத்திட்டு வர்றேன்” என்று சொல்ல அவளைத் திரும்பிப் பார்த்தவாறே நகர்ந்தார் அவர்.
 
செல்விக்கு இன்று கண்டிப்பாய் மழை வரும் என்று தோன்றியது. எப்போதும் ஒருவரை ஒருவர் வெட்டும் பார்வையோ அல்லது பேச்சோ தான் இருவருக்குள்ளும் நடக்கும் இன்று இவ்வளவு தன்மையாக பேசிவிட்டாளே என்ற ஆச்சரியம் தான் அவருக்கு.
 
செல்விக்கு ரஞ்சனாவின் அப்பா, சித்தியுடன் சந்தியாவும் வந்திருந்தது ஒரு மாதிரியாக இருந்தது. சிபியின் வாழ்க்கை இப்படி ஆனதிற்கு காரணம் சந்தியா தான் என்ற கோபம் இன்னமும் இருந்தது அவருக்கு.
 
பொதுவாய் ரஞ்சனாவின் அப்பாவிடமும் சித்தியிடமும் மட்டுமே பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தார் அவர்.
 
சந்தியா தானாகவே எழுந்து வந்து அவரிடம் “என்ன அத்தை என்கிட்ட நீங்க ஒண்ணுமே பேசலை” என்று சொல்ல அவர் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.
 
“எனக்கு தெரியும் உங்களுக்கு கோபம் இருக்கும் என் மேலன்னு… என்னை மன்னிச்சிடுங்க அத்தை, அன்னைக்கு நடந்த விஷயத்துக்கு… உங்க கால்ல வேணா விழுந்து மன்னிப்பு கேட்குறேன்…” என்று அவள் அருகே வர செல்வி சற்று ஒதுங்கினார்.
 
அவள் அவர் முன்னே பணிந்து விழுந்து தான் எழுந்தாள். “எதுக்குமா இப்படியெல்லாம் பண்றே… எனக்கு கொஞ்சம் வருத்தம் தான் வேற ஒண்ணுமில்லை… உனக்கு பிடிச்ச வாழ்க்கையை நீ அமைச்சுக்கிட்ட அதுக்கு நான் என்ன பண்ண முடியும்” என்று பேச்சை கத்தரித்தார் போல் முடித்துக் கொண்டார்.
 
“தேங்க்ஸ் அத்தை…” என்றவள் பேச்சுவாக்கில் கேட்பது போல “எங்க அத்தை உங்க புது மருமக??” என்று வினயமாய் கேட்க செல்வி சாதாரணமாய் எடுத்துக் கொண்டிருந்தார் இப்போது.
 
பாவம், மன்னிப்பு எல்லாம் கேட்டுவிட்டாள் என்று கொஞ்சம் மனமிறங்கி இருந்தார். வந்ததும் அவள் வெண்மதியை பற்றிக் கேட்டிருந்தாள் சுதாரித்து அவளுக்கு நன்றாய் பதில் கொடுத்து அனுப்பியிருப்பார்.
 
சந்தியாவிற்கு கோபமெல்லாம் சிபியின் மீதே. அவள் திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று கேட்ட பின்னரும் கூட அவன் நிறுத்தாமல் அவளை மணமேடை வரை இழுத்து வந்ததை அவளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
 
அதுவும் தாலியை கையில் வைத்துக்கொண்டு அவன் பார்த்த பார்வையை அவளால் இன்றளவும் மறக்க முடியவில்லை.
 
வீட்டிற்கு தெரியாமல் காதலிக்க தெரிந்தவளுக்கு வீட்டிற்கு தெரியாமலேயே மணமுடிக்க தெரிந்தவளுக்கு அதை வீட்டினரிடம் சொல்ல தைரியம் எல்லாம் இல்லாமலில்லை.
 
இந்த விஷயம் வீட்டிற்கு தெரிந்தால் அவர்கள் இவளை மொத்தமாய் தலை முழுக வாய்ப்பிருந்தது. அவளின் தந்தை கோபத்தில் சொத்து முழுவதும் ரஞ்சனாவின் பேரில் எழுதி வைத்துவிடுவார் என்ற பயம் அவளுக்கு.
 
அவளுக்கு ஏனோ சுந்தரை மிகப்பிடித்தது போனது, அவன் அழகன் என்பதாலும் தான். சுந்தர் வீட்டினர் சற்று வசதி குறைவானவர்கள்.
 
வசதி ஒன்று தான் அவனிடத்தில் இல்லையே தவிர படித்தவன். ஆஹா ஓஹோ என்றில்லாவிட்டாலும் நல்ல வேலையில் இருப்பவனே.
 
சந்தியாவிற்கு அவள் விரும்பிய சுந்தரும் வேண்டும், பிறந்த வீட்டினரும் வேண்டும். அதனாலேயே திருமணத்தை நிறுத்திவிடுமாறு சிபியிடம் சொல்லியிருந்தாள்.
 
சுந்தரை உருட்டி மிரட்டி பதிவு திருமணமும் செய்திருந்தாள் சிபியுடனான திருமணத்திற்கு முன். சிபி கடைசி நொடிவரை தன்னை தவிக்க வைத்தது அவளுள் இன்னமும் கனன்று கொண்டே தானிருந்தது.
 
அவனை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் அவளுக்கு இல்லை. ஆனால் அவன் செய்ததிற்கு அவள் தரப்பில் அன்று ஒன்றுமே செய்ய முடியாததால் இன்று எதுவாவது செய்துவிட வேண்டும் என்று நினைத்தாள்.
 
ரஞ்சனாவை வீட்டிற்கு அழைக்க வேண்டும் என்று அவள் தந்தை பேசும் வரையிலும் கூட அவளுக்கு எந்த யோசனையுமில்லை. சிபியின் வீட்டிற்கு வரும் வழியில் தோட்டத்தில் வேலை செய்துக் கொண்டிருந்தவனை பார்த்ததும் தான் அப்படி எண்ணம் எல்லாம் உதித்தது அவளுக்கு.
 
செல்வி அவளின் சின்ன மருமகள் சமையலறையில் இருப்பதாய் சொன்னதை ஒரு சின்ன தலையசைப்புடன் கேட்டுக் கொண்டாள்.
 
மற்றவர்கள் கூடத்தில் பேசிக்கொண்டிருக்க சந்தியா மெதுவாய் சமையலறைக்குள் நுழைந்தாள். “கடைசில நீ தான் கிடைச்சியா அவனுக்கு… போயும் போயும் உன்னை தான் கல்யாணம் பண்ணிக்கிட்டானா??”
 
திடீரென்று கேட்ட குரலில் வெண்மதி அதிர்ந்து திரும்பியவள் சந்தியாவை கண்டதும் நீயா என்பது போல் அப்படியே நின்றாள்.
 
“நான் கூட அவன் என்னமோ ஒரு உலக அழகிய தான் கல்யாணம் பண்ணியிருக்கான்னு நினைச்சேன்…” என்று குரலில் நக்கல் இழையோட மென்மேலும் குத்திக் கொண்டிருந்தாள் வெண்மதியை.
 
பேச வேண்டியதை சிபியிடம் பேசாமல் வெண்மதியை கண்ட மாத்திரத்தில் வார்த்தை நிதானமில்லாமல் வந்து விழுந்துக் கொண்டிருந்தது அவளிடத்தில்.
 
நிதானமாய் கண்மூடி நின்றவள் சந்தியா பேசி முடித்ததும் மெதுவாய் கண் திறந்தாள் முடிந்ததா உன் பேச்சு என்பது போல்.
 
‘அவனை மாதிரியே இவளுக்கும் அழுத்தம் அதிகம்… ஏதாச்சும் பேசுறாளா பாரு…’ என்று தான் ஓடிக்கொண்டிருந்தது சந்தியாவிற்கு.
 
“நான் உலக அழகி இல்லை தான் ஒத்துக்கறேன்… நீங்க தான் இந்த அண்டத்துலையே அழகாச்சே… அப்புறம் ஏன் உங்களை கல்யாணம் பண்ணலையாம்…” என்று சொல்லிவிட்டு ஒன்றுமே நடக்காதது போல  காபியையும் பலகாரத்தையும் ஒரே டிரேயில் வைத்து எடுத்துக்கொண்டு வெளியே சென்றாள் வெண்மதி.
 
வெண்மதியின் பதிலடியில் சந்தியாவின் முகம் சிறுத்துப் போனது. அவளை இன்னும் காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மேலும் தலைத்தூக்கியது சந்தியாவிற்கு.
 
வெளியில் சென்றுவிட்டு மீண்டும் உள்ளே அவள் வரும் வரையிலும் சந்தியா அங்கேயே தான் நின்றிருந்தாள். “இந்தாங்க…” என்று வெண்மதி அவளுக்கு காபியும் பலகாரம் அடங்கிய தட்டையும் நீட்ட மெதுவாய் நிகழ்வுக்கு வந்த சந்தியா அதை எடுத்துக் கொண்டாள்.
 
“பரவாயில்லை உனக்கு எல்லாம் சமாளிக்க வருது… அதான் ஏற்கனவே ஒரு முறை அனுபவம் இருக்கே… அதான் எல்லாம் சட்டுன்னு வருது போல… அனுபவம் எல்லாம் இதோட நின்னுடலையே… அய்யோ பாரேன், நான் மறந்தே போயிட்டேன் உனக்கு தான் குழந்தையே இருக்குல” என்று வெண்மதியை காயப்படுத்தவே பேசக்கூடாத வார்த்தை எல்லாம் பேச, கேட்டிருந்தவளுக்கோ கண்களில் நீர் நிறைந்தது.
 
அப்போது தான் தோட்டத்தில் இருந்து வந்த சிபிவர்மன் வீட்டின் பின்னால் இருந்த குளியலறையில் குளித்துவிட்டு அதே வழியே வீட்டிற்குள் நுழைந்தவனின் காதுகளில் சந்தியா பேசியது ஸ்பஷ்டமாக விழுந்து அவன் முகத்தை கோபத்தில் சிவக்க வைத்தது.
 
“உன்னோட அனுபவம் அதைவிட பெரிசாச்சே சந்தியா… உங்க வீட்டுக்கு தெரியாம எத்தனை தடவை நீ கல்யாணம் பண்ணியிருப்பே, காதலிச்சு இருப்பே…” என்று குத்தலாய் வந்து விழுந்தது சிபிவர்மனின் குரல்.
 
திடுக்கிட்டு போனவள் அவன் பேச்சுக்கு மறுப்பேச்சு பேச முடியாமல் வாயை கப்பென்று மூடிக்கொண்டாள். அவள் வந்தது என்னவோ அவனை காயப்படுத்த ஆனால் காயப்படுத்தியதோ வெண்மதியை.
சிபியின் பேச்சுக்கு அவளால் பதில் சொல்ல முடியாது என்றெண்ணியே அவள் வெண்மதியை காயப்படுத்தியிருப்பாள் போலும்.
 
கொழுத்தவனுக்கு இளைத்தவனைக் கண்டால் தோன்றும் ஏளனம் அவளிடத்தில் இருந்ததுவே உண்மை. அதனாலேயே வெண்மதியை பேசியிருக்க இப்போதோ சிபியின் சிறு குத்தலை கூட சமாளிக்க முடியாதவளாய் யாருமே அவளை அழைத்திராத போதும் “இதோ வர்றேன்ம்மா” என்றுவிட்டு வெளியே சென்றுவிட்டாள்.
 
சிபி அங்கேயே சிலைப்போல் நின்றிருந்த வெண்மதியை பார்த்தான். அழுகையை சமாளித்துக்கொண்டு நின்றிருந்தவளை என்ன சொல்லி தேற்ற என்று அவனுக்கும் புரியவில்லை.
 
வெண்மதியோ எல்லாம் உன்னால் தான் என்பதான எரிக்கும் பார்வையை அவனை நோக்கி வீசி நின்றாள் எப்போதும் போல்.
 
‘அவகிட்ட பதில் கொடுக்க மாட்டாளாம் என்னை மட்டும் சுட்டெரிப்பாளாம்’ என்று முணுமுணுத்தவாறே அங்கிருந்து நகர்ந்தான் அவன்.

Advertisement