Advertisement

 
 
5
 
அனைவரும் விரும்பியோ விரும்பாமலோ பெண் வீட்டிற்கும் மாப்பிள்ளை வீட்டிற்குமான பொதுவான சில வரைமுறைகளை மட்டும் இருவீட்டினரும் செய்து முடித்தனர்.
 
வெண்மதியின் வீட்டினருக்கு இதெல்லாம் செய்ய அதிக விருப்பமில்லாவிட்டாலும், சிபிக்கு இது முதல் முறை என்பதால் அவன் வீட்டினரின் விருப்பத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்திருந்தனர்.
 
சிபியின் அன்னை செல்விக்கு இதில் உடன்பாடு இல்லாவிட்டாலும் மகனுக்காய் முடிந்த வரை அனைத்தும் சிறப்பாகவே செய்வதாக காட்டிக் கொண்டார்.
 
பெண் வீட்டிற்கு அவர்கள் சென்றதும் மாப்பிள்ளை வீட்டிற்கு பெண்ணை அவர்கள் வந்து விட்டுச் சென்றதும் என்று அனைத்தும் முடிந்திருந்தது இப்போது.
 
முதன் முதலாய் அவன் அகம் நுழைந்திருக்கிறாள் அவள். திருமணம் நடந்த அன்று வந்திருந்தார்கள் தான் ஆனால் அப்போது வெளியே நின்று அப்படியே பேசிச் சென்றிருந்தனர்.
 
முறைப்படி இன்று தான் அந்த வீட்டிற்குள் வந்திருந்தாள் கையில் வானதியுடன். அங்கு வந்ததில் அவள் மனது  உணர்வது என்ன என்று புரியாவிட்டாலும் ஏதோவொரு விதத்தில் அது அமைதியை கொடுத்திருந்தது.
 
அந்த அமைதி அவளுள் மெதுவாய் இனிமையையே பரப்பியிருந்ததை அந்த கணம் உணர்ந்திருக்கவில்லை அவள். மாலை வரை எதுவும் தோன்றவில்லை அவளுக்கு. ஏனெனில் அவள் ரஞ்சனாவின் அறையில் அவளுக்கு துணையாய்(?) தான் அமரவைக்கப் பட்டிருந்தாள்.
ரஞ்சனாவிடம் பேசுவது அவளுக்கு சிரமமாயிருக்கவில்லை. சாதாரணமாய் அவளுடன் பேசினாள், அவள் உண்டாகியிருப்பது பேச்சுவாக்கில் தெரியவும் அவள் பயத்தை பேசியே கொஞ்சம் போக்கியிருந்தாள்.
 
வானதியை இப்போது ரஞ்சனா தூக்கியிருக்க குழந்தை உறங்கியிருந்தாள். “பாப்பாவை நான் என்னோட படுக்க வைச்சுக்கட்டுமா…” சாதாரணமாய் தான் கேட்டாள் ரஞ்சனா.
 
வெண்மதிக்கு என்ன தோன்றியது “அ… அவ என்னை தேடுவா…” என்றாள்.
 
“ஹ்ம்ம் சரி…”
 
“தப்பா எடுத்துக்காதீங்க…”
 
“இல்லை வெண்மதி நான் எதுவும் நினைக்கலை…” என்றவளுக்கு மற்றவளின் உணர்வு லேசாய் புரிவதாய்.
 
செல்வி முகத்தை தூக்கித்தான் வைத்திருந்தார் இப்போதும். மற்றவர்கள் அதை உணர்ந்தாலும் மேற்கொண்டு அதைப்பேசி பேச்சை வளர்த்திருக்கவில்லை.
 
இரவு உணவிற்கு மகன்களை அழைத்தார். ரஞ்சனாவின் அறைக்குள் நுழைந்தவர் அங்கு வெண்மதி மட்டுமே இருக்கவும் சட்டென்று ஒரு கோபம் அவருக்குள்.
 
இவளிடம் என்ன இருக்கிறது என்று மகன் இவளை திருமணம் செய்தான் என்ற ஆற்றாமை அவருக்கு. அவர் மனமே அவரை குட்டியது, இவளிடம் என்ன இல்லை.
 
நிறம் குறைவு தான், அழகுக்கு பெரிதாய் ஒன்றும் குறைவில்லை, நல்ல அறிவான பெண் தான், குணமானவளும் தானே. அவளுக்கு அது இரண்டாம் திருமணம் என்பதும் கையில் ஒரு குழந்தையுடன் அவள் இருப்பதும் தான் அவருக்கு பிடிக்கவில்லையா…
 
அந்த எண்ணமே தவறு என்று அவருக்கு புரிந்தது. எதுவோ ஆசை மகனின் திருமணத்தை பற்றி ஆயிரம் கனவு கொண்டிருந்தவர்க்கு இப்படியான ஒன்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை போலும்.
 
அவர் எண்ணம் தவறு என்று தெரிந்தாலும் சட்டென்று அதை மாற்றிக்கொள்ள முடியவில்லை அவரால். காலம் அவரின் மனதை மாற்றுமாயிருக்கும்.
 
செல்வி அங்கிருந்த அவரின் சின்ன மருமகளையே பார்த்துக் கொண்டிருந்தார். அவளிடம் என்ன பேசுவது என்று புரியவில்லை அவருக்கு, “ரஞ்சிம்மா எங்கே??” என்றார்.
 
“பாத்ரூம்ல இருக்காங்க…”
 
“சாப்பிட்டு போங்க…” என்று பொதுவாய் சொல்லிவிட்டு அவர் அங்கிருந்து நகர்ந்தார்.
 
வெண்மதிக்கு கோபம் சுறுசுறுவென்று தான் வந்தது. அவர் இருவரையும் தான் அழைக்கிறார் என்று புரிந்து தான் இருந்தது.
 
‘ஏன்?? அவர் என்னிடம் தனியாக சொல்லமாட்டராமா?? இருவரும் வாருங்கள் என்று சொல்லிச் சென்றால் முத்தா உதிர்ந்துவிடும்…’
 
‘உங்க பிள்ளை பண்ண தப்புக்கு என்கிட்ட மூஞ்சியை திருப்பினா நான் என்ன செய்வேன்… இந்த கதை எல்லாம் என்கிட்ட ஆகாது…
 
எதுவானாலும் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு நேரடியா என்ட தான் பேசணும்… உங்களையே என்கிட்ட பேச வைக்கிறேன்…’ என்று மனதிற்குள் சூளுரைத்துக் கொண்டாள்.
 
வானதியை சற்று முன் தான் ஜெயவர்மன் வந்து தூக்கிச் சென்றிருந்தான். அவனிடம் ஒன்றும் சொல்ல முடியாமல் குழந்தையை கொடுத்திருந்தாள்.
 
திருமண தினத்தன்று சிபி வானதியை தூக்கிச் சென்றதில் இருந்தே அவள் சற்று கவனமாய் தானிருக்கிறாள்.
 
அவன் புறம் கூட குழந்தையை திருப்பவில்லை, திரும்பவும் விடவில்லை அவள். ரஞ்சனா வெளியில் வரும் அரவம் கேட்டது.
 
“உங்களை அத்தை கூப்பிட்டாங்க…” என்று சொன்னாள் அவளிடத்தில்.
 
“ஓ!! சரி வெண்மதி நான் போய் என்னன்னு பார்த்திட்டு வந்திடறேன்…” என்றுவிட்டு அவள் நகர்ந்திருந்தாள்.
 
மூத்த மருமகள் மட்டும் தனியே அறையில் இருந்து வர செல்வி அவளுக்கு பின்னால் கண்களால் துழாவினாள்.
 
“என்ன அத்தை கூப்பிட்டீங்களாமே??” என்ற ரஞ்சனாவை ஏற இறங்க பார்த்தவர் “எதுக்குன்னு சொல்லலையா??” என்றார்.
 
மற்றவளோ உதட்டை பிதுக்கினாள். ‘திமிர் பிடிச்சவ, வந்ததுமே அவ ராங்கித்தனத்தை என்கிட்டவே காட்டுறா…’
 
“சாப்பிட வரச்சொன்னேன், நீ போய் அவளையும் கூட்டிட்டு வா…”
 
“அம்மா நேரமாச்சும்மா… அண்ணி சாப்பிடட்டும், வெண்மதியை நானே போய் கூட்டிட்டு வர்றேன்…” என்று எழுந்திருந்தான் சிபி.
 
ரஞ்சனாவின் அறை வாசலில் வந்து நின்றான். வெண்மதி கட்டிலின் ஒரு ஓரத்தில் அமர்ந்து கொண்டு எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள்.
 
“சாப்பிட வா…” என்றான் அவன் மொட்டையாய்.
அவன் குரல் கேட்டதும் நடப்புக்கு வந்திருந்தவளுக்கு இன்னமும் அவன் மீதான கோபம் அதிகமாகிக் கொண்டே சென்றது. அவளோ பதிலேதும் பேசாமல் அவன் பேசியது காதில் கூட விழாது போல அமர்ந்திருந்தாள்.
 
அவளிடம் சொல்லிவிட்டோம் என்று எண்ணி திரும்பி செல்லப் போனவன் எதுவோ தோன்ற மீண்டும் அறையை திரும்பி பார்த்தான்.
 
அவள் இடித்த புளி போல் அதே இடத்தில் தான் அமர்ந்திருந்தாள். ‘என்னாச்சு இவளுக்கு??’ என்று எண்ணிக்கொண்டு அறைக்குள் வந்திருந்தான்.
 
“உன்னை சாப்பிட வரச்சொன்னேன்…”
 
அவனை நிமிர்ந்து ஏற இறங்க பார்த்தவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
 
“ஹேய் என்னடி நினைச்சுட்டு இருக்கே?? உன்கிட்ட தானே பேசிட்டு இருக்கேன், முகத்தை திருப்புற…” என்றவனுக்கு சட்டென்று கோபம் வந்திருந்தது அவளின் செயலில்.
 
“என்னடா வேணும் உனக்கு??”
 
“நான் என்ன பேசினேன்னு உனக்கு தெரியாதா??”
 
“என்ன பேசுனீங்க??”
 
“உன்னை சாப்பிட வரச்சொன்னேன்…” என்றான் அவனும் இழுத்து வைத்த பொறுமையுடன்.
 
“அப்படியா…”
 
“அப்படியான்னா என்ன அர்த்தம்??”
 
“நீங்க என்னை தான் கூப்பிட்டீங்களா??”
 
“அப்போ வேற யாரை கூப்பிட்டதா நினைச்சுட்டு இருக்கே??”
 
“என் கழுத்துல எதுக்கு தாலி கட்டுனே?? நான் உன்னை கேட்டனா, சொல்லு நான் கேட்டனா…”
 
“இங்க பாரு இதுக்கு பதில் நான் உனக்கு ஏற்கனவே சொல்லிட்டேன்… சும்மா சும்மா மறுபடியும் ஆரம்பிக்காதே… இப்போ உன்னை சாப்பிட கூப்பிட்டேன் எழுந்து வா…” என்றான் கட்டளை போல்.
 
“நீ யாருடா என் தலையெழுத்தை மாத்த, உன்னால ஒரே நாள்ல எல்லாமே மாறிப்போச்சு தெரியுமா உனக்கு…”
 
“என்னமோ நான் தான் உன்னை வளைச்சுப்போட்டுடேன் ரேஞ்சுக்கு உங்கம்மா என்னை லுக்கு விடுறாங்க… ஏன் என்னை பார்த்து சாப்பிட வாம்மான்னு கூப்பிட்டா அவங்க என்ன குறைஞ்சா போய்டுவாங்க…”
 
“நீ பண்ண தப்புக்கு அவங்க என்கிட்ட என்னமோ முகம் திருப்பிட்டு போறாங்க… இந்த கல்யாணம் பிடிக்கலைன்னாலும் எங்கம்மா, அப்பா, குழந்தைக்காகன்னு நானும் எதுவும் பேசக்கூடாதுன்னு தான் அமைதியா இருக்கேன்…”
 
“நீங்க என்னை பேச வைப்பீங்க போல… பிடிக்கலைன்னா எதுக்கு அவங்க அன்னைக்கு எல்லார் முன்னாடியும் நான் இங்க வரணுங்கறது போல பேசணும், இன்னைக்கு இப்படி நடக்கணும்…”
 
அவள் அவ்வளவு நீளமாய் பேசியிருக்க அவனோ “அம்மா என்ன சொன்னாங்க??” என்றான் சின்னதாய்.
 
இவ்வளவு சொல்கிறேன் இவன் என்னவென்று கேட்கிறான் பார் என்று எரிச்சல் வந்தாலும் அவர் வந்ததும் நடந்ததும் சொன்னாள்.
 
“இதுல என்ன தப்பு??”
 
அவன் பேச்சு அவள் கோபத்தில் பெட்ரோலை ஊற்றியது போலானது. “உன்னையும் தானே சாப்பிட கூப்பிட்டாங்க…”
 
“என்னை கூப்பிடலை??”
 
“சரி ஒத்துக்கறேன், உன்னை தனியா வெத்தலை பாக்கு வைச்சு கூப்பிடலை தான்… பொதுவா சொல்லிட்டு தானே போனாங்க…”
 
“ஏன் என்னை தனியா கூப்பிட முடியாதாமா… சரி தனியா கூட சொல்ல வேணாம், ரெண்டு பேரும் சாப்பிட வாங்கன்னு சொல்லியிருக்கலாம்ல…”
 
சிபிக்கு கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது. ‘கடவுளே சாப்பிட கூப்பிடாததிற்கே இவ்வளவு அலப்பறை, இன்னும் என்னென்ன ஏழரை கூடுமோ’ என்று தானிருந்தது.
 
“தப்பு தான் அவங்களை வேணும்ன்னா உன்கிட்ட வந்து மன்னிப்பு கேட்கச் சொல்லவா…” என்றவளின் குரலில் இருந்தது என்னவென்று அவளுக்கு புரியவில்லை.
 
‘நிறைய பேசிவிட்டோமோ…’ என்று அவளுக்கு தோன்றியது இப்போது. அதற்கு மேல் ஒன்றும் சொல்லவில்லை அவள்.
 
அவளிடம் பதிலில்லாது போக அவன் எழுந்திருந்தான் இப்போது, “நான் போய் அம்மாவை வரச்சொல்றேன்…” என்றவாறே.
 
அவன் பேச்சு சட்டென்று உறைக்க கோபத்தில் அவள் பேச்சு யோசியாமலும் நிதானமில்லாமலும் போனது இன்னும் அழுத்தமாய் அவளுக்கு புரிவது போலிருந்தது.
 
‘எனக்கு எப்படி இந்த வீட்டில் ஒட்ட முடியவில்லையோ அப்படி தானே அவருக்கும் என்னிடத்தில்  இருக்கும். மற்றவர்களால் சட்டென்று ஏற்றுக்கொள்ள முடியாவிடினும் தன்னிடம் சாதாரணமாய் பேசுகிறார்கள்…’
இவருக்கு என்னிடம் அந்த சகஜம் வரவில்லை அவ்வளவு தானே… அதற்காய் அவரை என்னிடத்தில் மன்னிப்பு கேட்கும் அளவிற்கு கொண்டு செல்வதென்பது அதிகப்படியே!! என்று உறைத்தது.
 
“சாப்பிட போகலாம்…” என்று எழுந்திருந்தாள் அவள் இப்போது.
 
அவன் இதழ் கடையில் குறுஞ்சிரிப்பு இப்போது. அவள் பார்க்கும் அதை தனக்குள் ஒளித்தவன் முன்னே செல்லப் போக “ஒரு நிமிஷம்” என்றிருந்தாள்.
 
என்னவென்பது போல் அவளை பார்த்தான். “ஒரு தரம் இல்லை ஓராயிரம் தரம் லட்சம் தரத்துக்கு மேல கூட கேட்பேன்…” என்றுவிட்டு நிறுத்தினாள்.
 
‘என்ன கேட்பாள்??’ என்பது போல் கண்கள் சுருக்கி யோசனையாய் அவளையே பார்த்தான்.
 
“என்னை ஏன் கல்யாணம் பண்ணே?? என்னை கேட்காம ஏன் அப்படி செஞ்சே?? எதுக்கு செஞ்சே?? இப்படியான கேள்வி தான்… சாகற வரைக்கும் கேட்டுட்டே தான் இருப்பேன்… நான் எப்போ கேட்டாலும் அதுக்கு நீங்க பதில் சொல்லித் தான் ஆகணும்…”
 
“இப்போ தான் வாழ்க்கையை தொடங்கி இருக்கோம், அதுக்குள்ளே சாகற வரை ஏன் போகணும்…”
 
‘இதுக்கு ஒண்ணும் குறைச்சலில்லை…’ என்பதான பார்வை பார்த்தாள்.
“நீ மாறவே இல்லை வெண்மதி… ஒரு கேள்வி கேட்டா அதை திருப்பி திருப்பி கேட்டுட்டே தான் இருக்கே… ரொம்ப வருஷமாச்சு, அந்த கேள்வியை நீ கேட்டு மறந்திட்டியா… அதுக்கான பதிலை தான் நான் இப்போ சொல்லியிருக்கேன்” என்று அவன் சொல்லவும் அவள் முகம் இருண்டது.
 
‘இவனிடத்தில் அதிகம் பேசக்கூடாது’ என்ற எண்ணத்தை அது தோற்றுவிக்க அவனை மறக்காமல் முறைக்கவும் செய்தாள். அவள் அப்படி எண்ணியிருப்பாள் என்று அறிந்திருந்தால் அவன் அக்கேள்வியை பற்றி ஞாபகம் செய்திருக்கவே மாட்டான்.
 
என்ன கேட்டிருப்பாள்?? என்ன சொல்லியிருப்பான்?? விடையறியா கேள்வியும் விடை சொல்லும் காலமும் கூடி வரும் அந்நாளும் எந்நாளோ??
 

Advertisement