Advertisement

4
 
வெண்மதி அடிப்பாள் என்று அவன் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஒரு நொடி அதிர்ந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் விறைப்பாய் நின்றான் அவன்.
 
அதற்குள் மற்றவர்கள் அவனை நோக்கி வந்திருந்தனர். “சொல்லுடா என்னோட குழந்தை எங்கே??” என்றவளின் குரலில் அழுகையின் சாயை ஆரம்பமாகியது.
 
அவளுக்கு பதிலொன்றும் சொல்லாமல் அமைதியாகவே நின்றான் அவன். “வர்மா பாப்பா எங்கேடா?? நீ தானே தூக்கிட்டு வந்தே??”
 
“ஆமா அதுக்கென்ன இப்போ??”
 
“பாவம்டா அந்த பொண்ணு குழந்தையை கொடுடா…”
 
“கொடுக்கறேன், ஆனா…”
 
“என்னடா??”
 
அவன் ஜெயவர்மனுக்கு பதிலொன்றும் சொல்லாமல் கணேசனின் முன்பும் சங்கரியின் முன்பும் சென்று நின்றான்.
 
“உங்க பொண்ணை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்… யார்கிட்டயும் கேட்கலை, தப்பு தான் உங்ககிட்ட எல்லாம் சொல்லாம செஞ்சது… ஆனா இந்த கல்யாணம் தப்பில்லைன்னு எனக்கு தெரியும்…”
 
“அது உங்களுக்கும் தெரியும்ன்னு நினைக்கிறேன்… உங்க பொண்ணுகிட்ட சொல்லுங்க இனி இது தான் அவ வீடுன்னு… நாங்க எல்லாம் அவ உறவுன்னு…”
 
“இதெல்லாம் புரிஞ்சு தெரிஞ்சு அவ இங்க இருக்கறதா இருந்தா பாப்பாவை நான் கொடுக்கறேன்…”
 
சங்கரி அவன் பேச்சில் அதிர்ந்தாலும் வெளியில் ஒன்றும் காட்டிக்கொள்ளவில்லை. ‘யார் பிள்ளையை யாருக்கு தரமாட்டேன்னு சொல்றார்… பெத்தவளுக்கு காட்டாம இருக்க முடியுமா… இவர் பேசுறதுல எந்த நியாயமும் இல்லையே’ என்ற எண்ணம் தான் அவருக்கு.
 
அதே எண்ணம் தான் வெண்மதிக்கு அவள் வாயை திறக்கும் முன் அவளின் தந்தை கணேசனோ “அவ இங்க இருக்க சம்மதிக்கலைன்னா??”
 
“குழந்தையை கொடுக்க மாட்டேன்னு சொல்வேன்னு எதிர்பார்த்தீங்களா… அது தான் இல்லை…” என்றுவிட்டு நிறுத்தினான்.
 
‘அப்போ வேற என்ன செய்யப்போறான்…’ என்ற கேள்வியுடன் ஜெயவர்மன் முதற்கொண்டு அனைவரும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
 
“நான் உங்க வீட்டுக்கு வந்திடுவேன்… வீட்டோட மருமகன் சொல்ல கொஞ்சம் ஒரு மாதிரியா தான் இருக்கு… ஆனா வேற வழி இல்லை…” என்றானே பார்க்கலாம்.
 
சங்கரிக்கு அவன் பேச்சைக் கேட்டு சிரிப்பதா அழுவதா என்றே புரியவில்லை. ஆனால் ஒன்று மகளின் எதிர்காலம் குறித்த பயம் இப்போது அவரிடத்தில் இல்லை.
 
“என்னடா நீ உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கே??” என்று எகிறினாள் வெண்மதி.
 
“நிச்சயம் நான் உன்னையும் நீ என்னையும் நினைக்கவே இல்லைன்னு எனக்கு தெரியும்…”
 
“அப்புறம் எதுக்குடா எனக்கு தாலி கட்டினே?? வேலியில்லாத பயிர் தானேன்னு நினைப்பா உனக்கு??”
 
“வேலியில்லாத பயிர் இல்லை தாலியில்லாத கழுத்தா இருக்கேன்னு தான் கட்டிட்டேன்…” என்றவனின் பேச்சு ஜெயவர்மனுக்கு சிரிப்பையே வரவழைத்தது.
 
சீரியசாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் இவன் என்ன இப்படி இடக்கு மடக்கு பேசி காமெடி செய்கிறான் என்று தான் அவனுக்கு தோன்றியது. அவனுக்குமே புரியவில்லை இவன் ஏன் வெண்மதியின் கழுத்தில் தாலியை கட்டினான் என்று.
 
அவர்களுக்கு எங்கே தெரியும் இருவருக்குள்ளும் தீர்க்கப்படாத கணக்கு வழக்கு இருக்கிறதென்று!!
 
“என்னடா திமிரா உனக்கு… எனக்கு  பெரிசா வாழ்க்கை கொடுக்கறதா நினைப்பா??”
 
“உனக்கு யாரு வாழ்க்கை கொடுத்தா??” என்றான் நக்கலாய்.
 
அவன் பதில் பல்லைக் கடிக்க வைத்தது அவளை. அவள் அவனை முறைக்க மற்றவர்கள் இவன் என்ன தான் சொல்ல வருகிறான் என்று தான் பார்த்தார்கள் அவனை.
 
“எனக்கு ஒரு வாழ்க்கையை அமைச்சுக்கிட்டேன்…” என்று சொன்னவனை என்ன செய்ய என்று தான் பார்த்தாள்.
 
“அதுக்கு நான் தான் கிடைச்சனா உனக்கு… என்னை பார்த்தா இளிச்சவாய் மாதிரி தெரியுதா உனக்கு… வேற எவளும் உன் கண்ணுல படலையா…”
 
“கிடைக்கலை…” என்று பதில் சொன்னவனின் தலையில் ஓங்கி ஒன்று வைக்க வேண்டும் என்ற ஆத்திரம் வந்தது அவளுக்கு.
 
அதுவரை கொஞ்சம் இடக்காகவே பேசிக் கொண்டிருந்தவன் வெண்மதியின் பெற்றோரிடம் “நான் செஞ்சது தப்புன்னு நினைச்சா… மனசார கேட்கறேன் என்னை மன்னிச்சுடுங்க…”
 
“உங்க பொண்ணும் பாப்பாவும் எனக்கு வேணும்… அவங்ககிட்ட சொல்லி எனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுங்க…”
 
கணேசனுக்கு அவன் இடக்கு பேச்சில் விருப்பமில்லாமல் போனாலும் அவன் செய்த செயலில் மகளின் வாழ்க்கை குறித்த கவலையற்று தான் போயிருந்தது.
 
திரும்பி சங்கரியை பார்த்தார் அவர். மனைவி அவரை ஏறிட்டு ஒரு பார்வை பார்த்தவர் பின் மகளிடத்தில் பேசத்தயாரானார்.
 
“அம்மா அப்பா இவனுக்கு சப்போர்ட்டா நீங்க எது பேசுறதா இருந்தாலும் நான் அதை கேட்க தயாரா இல்லை… எனக்கு இப்போ என் குழந்தையை பார்க்கணும்…”
 
“முதல்ல வானதியை என்கிட்ட காட்டச் சொல்லுங்க…”
 
‘அப்பாடா குழந்தை பேரை இப்போவாச்சும் சொன்னாங்களே… எவ்வளோ நேரம் தான் பாப்பா, பாப்பான்னு சொல்லுறது…’ (இது சத்தியமாக சிபியின் மனக்குரலே…)
 
‘குழந்தை பேரு தெரியலை இதுல அவளை என் பொண்ணு என் பொண்ணுன்னு மார்தட்டிட்டு வந்திருக்க’ என்று அவன் மனசாட்சி அவனை எள்ளி நகையாடித்தான் போனது.
 
அதையெல்லாம் துடைத்து தூரப் போட்டவன் ‘அழகான பேரு’ என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டான்.
 
“ஜெய் வெள்ளையம்மா பாட்டிகிட்ட தான் பாப்பா இருக்கா… பாட்டி ஆடு கட்டி வைக்கற இடத்துல இருக்காங்கன்னு நினைக்கிறேன், கூட்டிட்டு வர்றியா…” என்று அவன் சொல்லி முடிக்கும் முன்னேயே குழந்தையுடன் அவரே வந்தார்.
 
வெண்மதி பாய்ந்து சென்று குழந்தையை கட்டிக்கொண்டாள். கண்ணில் இருந்து கண்ணீர் அருவியாய் பெருகியது.
 
சற்று நேரம் குழந்தையை கட்டியணைத்து உச்சி முகர்ந்து அழுது என்று கலவையான உணர்வுகள் எல்லாம் முடிந்திருந்தது இப்போது.
 
“அம்மா கிளம்பலாம்…” என்றாள் அவள்.
 
“மதி இனிமே நீ இங்க தான்…” என்று அவர் முடிப்பதற்குள் “இருக்க மாட்டேன்…”
 
“நான் கிளம்பிட்டேன் அத்தை போகலாம்…” என்று அவர்கள் முன் வந்து நின்றான் சிபிவர்மன்.
 
அங்கு நடந்த கூத்து அத்தனையும் பார்த்துக் கொண்டிருந்த செல்விக்கு கொதித்து தான் போனது. எப்போதும் தன்னுடனே இருக்கும் தன் சின்ன மகன் எதையும் பொருட்படுத்தாது அவர்களுடன் செல்கிறேன் என்று கிளம்பி நிற்கிறானே…
 
அவன் வீட்டை விட்டு போவேன் என்று ஒரு வார்த்தைக்கு சொன்னதற்கே அவரால் தாங்க முடியவில்லை.
 
அப்போது மகன் தன்னிடம் பேசியது கூட தான் இதை ஒத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக தான் என்று புரியாதவர் அல்ல அவர்.
 
இப்போது என்னவென்றால் அவன் நிஜமாகவே அவர்களுடன் கிளம்பிவிடுவான் போலிருக்கிறதே. இருந்திருந்து இரு மகன்களுடன் ஒன்றாக ஒரே வீட்டில் இருப்பதற்கு இப்போது தான் வாய்ப்பே அமைந்திருக்கிறது. மருமகளும் உண்டாகியிருக்கிறாள் என்ற சந்தோசம் வேறு.
 
இந்த நேரத்தில் இரண்டாமவன் இப்படி செல்கிறான் என்று சொல்கிறானே!! மற்றவர்களும் அதை ஆமோதிப்பது போலவே பார்த்துக் கொண்டிருக்கிறார்களே என்று கோபம் வந்தது அவருக்கு.
 
ஆனாலும் இது கோபப்பட வேண்டிய நேரமல்ல என்று அவருக்கு புரிந்தது. எப்படியாவது தனக்கு பிடிக்காவிட்டாலும் வெண்மதியை இங்கேயே இருக்க வைத்தால் மகன் எங்கும் செல்ல மாட்டான் என்ற முடிவுக்கு வந்தார்.
 
அவர் எங்கே அறிவார் அவரை பேச வைக்க மகன் செய்த தந்திரம் அதுவென்று. “நான் கொஞ்சம் பேசணும்…” என்றார் செல்வி முன்னே வந்து.
 
சிபிவர்மன் முகத்தில் லேசாய் ஒரு புன்னகை, ‘இதை தான் எதிர்ப்பார்த்தேன்’ என்பதைப் போல்.
 
“பிடிச்சு நடந்துச்சோ பிடிக்காம நடந்துச்சோ இந்த கல்யாணம் நடந்தது நடந்தது தான்!! அதை மாத்த முடியாது தானே!! உங்க பொண்ணுக்கு தான் இந்த வீட்டோட ரெண்டாவது மருமக…”
 
“அதையும் மாத்த முடியாது… சொல்லுங்க அவகிட்ட இனிமே இது தான் அவ வீடுன்னு… இதுநாள் வரை அவ எப்படி அங்க இருந்தாலோ அதே மாதிரி இங்கயும் இருக்கலாம்… அதுக்கு நாங்க யாரும் தடையா இருக்க மாட்டோம்…” என்றார் செல்வி உறுதியான குரலில்.
 
பின் தன் கணவரை திரும்பி பார்க்க அவரோ என்னவென்று பார்த்தார் மனைவியை. ‘எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கு பாரு… அந்தம்மா கண்ணை காட்டுது அவரு புருஷன் அதை புரிஞ்சுக்கறாரு… நான் பார்த்தா இவருக்கு புரியாதாமா…’ என்று தன் கணவரை மனதிற்குள் நொடித்துக் கொண்டார் அவர்.
 
சங்கரியின் ஒரு பார்வையை கணேசன் புரிந்து கொள்வது போல பசுங்கிளி புரிந்துக்கொள்ளவில்லையே என்று செல்விக்கு கோபம் வந்தது.
 
கணவரின் அருகே வந்தவர் “நானே தான் பேசணுமா, நீங்க ஏதும் வாயை திறந்து பேச மாட்டீங்களா… வீட்டுக்கு ஆம்பளையா லட்சணமா நீங்க பேசுங்க…” என்று காதில் வந்து கிசுகிசுத்தார்.
 
மனைவியின் பார்வைக்கு அர்த்தம் அவர் பேசிய பின்னே தான் புரிந்தது அம்மனிதருக்கு. “நீங்க இப்படி பேசாம இருந்தா என்ன சம்மந்தி அர்த்தம்…”
 
“அதான் செல்வி சொல்லிட்டால்ல வெண்மதி இனிமே இந்த வீட்டு பொண்ணு. அவளை இங்க விட்டுட்டு போங்க… நாங்க நல்லா பார்த்துப்போம்…” என்றார் அவர்.
 
‘சம்மந்தியாம் சம்மந்தி… இதெல்லாமா நான் சொல்லச் சொன்னேன்… இவரை பேசச் சொன்னதுக்கு நானே பேசியிருக்கலாம் போல…’ என்று அதற்கும் கணவரை தாளித்துக் கொண்டார் செல்வி.
 
செல்வியும் பசுங்கிளியும் இவ்வளவு தூரம் இறங்கி வந்து பேசுவார்கள் என்று சங்கரியும் கணேசனும் நினைத்திருக்கவில்லை.
 
அவர்களே சொல்லும் போது இதற்கு மேலும் தாங்கள் அமைதியாய் இருப்பது நல்லதல்ல என்றே அவர்களுக்கு தோன்றியது.
 
திரும்பி அவர்கள் மகளைப் பார்க்க அவளோ அதையெல்லாம் கண்டுக்கொள்ளாது முகத்தில் எந்த பாவமும் காட்டாது நின்றிருந்தாள்.
 
‘ராங்கி பிடிச்சவ, நானே எம்புள்ளைய அடிச்சதில்லை… இவ வந்து எம்புள்ளையை அடிச்சிட்டாலே… என் வாயாலேயே இவளை உள்ளக் கூப்பிடுற மாதிரி பண்ணிட்டாளே’ என்று செல்வி கொஞ்ச நஞ்சமல்ல நன்றாகவே கொதித்துக் கொண்டிருந்தார்.
 
மற்றவர்களின் முன்னே மகளிடம் பேசினால் சரிவராது என்று எண்ணிய சங்கரி “வெண்மதி உன்கிட்ட பேசணும்…” என்று சொல்லி தனியே அழைத்துச் சென்றார்.
 
“வெண்மதி…”
 
“அம்மா ப்ளீஸ் எதுவும் சொல்லாதீங்க??”
 
“என்னால மாமாவை மறக்க முடியாது…”
 
“நீ யாரையும் மறக்க வேணாம்…”
 
“அப்போ என்ன தான் சொல்ல வர்றீங்க…”
 
“இந்த வீட்டில இரு…”
 
“அதெப்படிமா முடியும்… நான் தான் சொல்றேன்ல என்னால மாமாவை மறக்க முடியாதுன்னு…”
 
“நீ மறந்திடுன்னு நான் சொல்லவேயில்லை… அதைப்பத்தி நான் இப்போ எதுவும் சொல்லவும் வரலை… வானதியை…”
 
“அவளுக்கு அம்மா நான் இருக்கேன்ம்மா, என்னால என் குழந்தையை பார்த்துக்க முடியும்…”
 
“நீயே பார்த்துக்கோ உனக்கு தான் யாருமே வேணாமே!! அம்மா வேணாம், அப்பா வேணாம் யார் பேச்சும் நீ கேட்கவும் வேணாம்… இனிமே உன் விஷயத்துல நாங்க தலையிடறதா இல்லை…”
 
“என்னங்க வாங்க கிளம்பலாம்…” என்று சட்டென்று கோபம் காட்டிய சங்கரி தன் கணவரை அழைத்தார்.
 
இதற்கு நடுவில் வெண்மதியின் கையில் இருந்த வானதி சிபியை பார்த்து “ப்பா பா… ப்பா பா…” என்று சொல்லி அவனை அழைக்க அத்தனை பேரும் ஆச்சரியமாய் தான் பார்த்தனர் ஒருவரை தவிர.
 
‘செல்லக்குட்டி சாப்பாடு ஊட்டும் போதும் ஹார்லிக்ஸ் கொடுக்கும் போதும் நான் திரும்ப திரும்ப சொல்லிக் கொடுத்ததை மறக்காம சொல்லிட்டியே என் ராஜாத்தி… நீ தான்டி என் வெல்லக்கட்டி…’ என்று வானதியை மெச்சிக்கொண்டவன் சிபியே.
 
மற்றவர்களோ குழந்தை தானாய் கூப்பிடுக்கிறாள் என்னவொரு ஆச்சரியம் என்ற ரீதியில் பார்த்துக் கொண்டிருக்க வெண்மதி மட்டுமே சிபியை முறைத்துக் கொண்டிருந்தாள்.
 
ஒருவழியாய் வெண்மதி அங்கேயே இருக்க சம்மதிக்க சில பல கண்டிஷன்களுடன் ஒப்புக் கொண்டிருந்தாள்.
 
மணமக்கள் முறையாய் பெண் வீட்டிற்கு சென்று பின் இருவருமாய் மாப்பிள்ளை வீட்டிற்கு வருவதாய் ஒரு வழியாய் தங்களுக்குள் பேசி முடித்திருந்தனர்.
 
பெரியவர்கள் ஒரு புறம் பேசிக் கொண்டிருந்த வேளை தன் தம்பி சிபிவர்மனை தனியே இழுத்துச் சென்றான் ஜெயவர்மன்.
 
“டேய் உண்மையை சொல்லு இங்க என்ன நடக்குது??”
 
“அதான் பார்த்தியே…”
 
“இல்லை நீ வெண்மதி கழுத்துல தாலி கட்டினதுக்கு பின்னாடி என்னவோ ஒரு விஷயமிருக்கு!! எனக்கு சரியா சொல்லத் தெரியலை… எனக்கு இப்போ பெரிய சந்தேகம் ஒண்ணு வந்திருக்கு…”
 
“என்ன??”
 
“சந்தியாவோட உன்னோட கல்யாணத்தை நிறுத்தினதுக்கு காரணம் நீ தானா??”
 
“நான் பொய் சொல்வேன்னு நீ நினைக்கறியா ஜெய்…”
 
“இல்லை… நீ பொய் சொல்வேன்னு நினைக்கலை… ஆனா கண்டிப்பா நீ ஏதோ ஒரு உண்மையை மறைக்கிறேன்னு மட்டும் நான் நினைக்கிறேன்… நேராவே கேட்கட்டுமா??”
 
“நீ என்ன கேட்பேன்னு நான் சொல்லவா??”
 
“அதான் உனக்கே கேள்வி தெரிஞ்சிருக்கே… பதிலை நீ சொல்லிடு…”
 
“கேள்விக்கான பதில், பதிலுக்கான கேள்வி எல்லாம் காலம் வரும் போது தெரியும்… சந்தியாவோட எனக்கு நிச்சயம் ஆனா கல்யாணத்துக்கு நான் முழுமனசோட தான் சம்மதம் சொன்னேன்… சில பல காரணங்கள் அதுக்கு உண்டு…”
 
“அந்த கல்யாணத்தை நிறுத்துன காரணம் உனக்கே தெரியும்… வெண்மதியோட தான் என் கல்யாணம்ன்னு நானே அந்த நிமிஷம் வரை எதிர்பார்க்காத ஒண்ணு தான்… ஆனா அது நான் விரும்பாத ஒண்ணு இல்லை…” என்று தெளிவாய் குழப்பினான்.
 
விசு சொன்ன பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்க வந்த வைத்தியர் கதை போல் தான் ஆனது சிபி சொன்ன கதை. ஜெயவர்மனுக்கு முடியை பிய்த்துக் கொள்ளாத குறை தான்… (நமக்கும் தான்…) இனி…

Advertisement