Advertisement

 
3
 
வெண்மதியை பற்றி
 
வெண்மதி பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்தவள் பின் நர்சிங் பயிற்சியை முடித்து தேனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியில் இருக்கிறாள்.
 
சொந்த அத்தையின் மகனான கதிர்வேலனை தான் மணந்திருந்தாள் இரண்டு வருடங்களுக்கு முன்பு. இராணுவத்தில் பணிபுரிந்தவன் விடுமுறை முடிந்து ஊருக்கு செல்லும் முன்னே விபத்து ஒன்றில் உயிர் பிரிந்து போனது.
 
வெண்மதியும் அவனுடன் சென்றிருந்தாள், அப்போது வானதி அவள் வயிற்றில் நான்கு மாத கருவாய்.
 
திருமண மண்டபத்தில்
 
வெண்மதி வாயிலின் அருகிலேயே மடங்கி அமர்ந்து அழுதுக் கொண்டிருந்தாள். ஒரு புறம் கோபம், ஆத்திரம் என்று வந்தாலும் இப்படி மற்றவர்கள் முன்னிலையில் சற்றே அவமானமாக உணர்ந்தாள் அவள்.
 
இனி ஊர் வேறு என்னென்ன பேசுமோ, எல்லாருக்கும் தான் ஒரு காட்சி பொருளாகி போனோம் என்ற எண்ணம் ஒரு புறம்.
 
இது எல்லாம் விட அவளின் ஒட்டுமொத்த கோபமும் இப்போது வர்மாவின் மீதே. அவளின் குழந்தையை வேறு தூக்கிச் சென்றிருக்கிறான். அடுத்து என்ன செய்ய என்று மூளை யோசிக்க ஆரம்பித்த வேளை அவளின் பெற்றோர் அவளை நோக்கி ஓடி வந்தனர்.
 
அவளின் அன்னை சங்கரிக்கு முதலில் கண்ணில் தெரிந்தது மகளின் கழுத்தில் இருந்த மாங்கல்யமே!! அத்தாயின் முகத்தில் ஒரு நொடி அப்படியொரு நிறைவு!! மகளின் வாழ்வு இப்படியே முடிந்துவிடுமோ என்றிருந்த வேளையில் தெய்வ சங்கல்பம் போல் நடந்த இச்செயல் அவரை பொறுத்தவரையில் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றே!!
 
தன் எண்ணங்களை சற்றே ஒதுக்கி மகளின் பார்வையில் இருந்து நடந்ததை பார்க்கும் போது அது அவளுக்கு பேரதிர்ச்சியே என்று அவர் அறியாததல்ல!!
 
வெண்மதி தன் தாயை கண்டதும் பசுவை பிரிந்த கன்று தன் தாயிடம் எப்படி ஒன்றுமோ அப்படி வந்து அவரை ஒன்றிக் கொண்டிருந்தாள்.
 
அவள் தந்தை கணேசனுக்கோ என்ன சொல்வது என்றே புரியவில்லை. மகள் அழுவது அவருக்கு பொறுக்கவில்லை, உடன் தன் பேத்தியையும் காணோம் என்றதும் அவருக்கு கோபம் எழுந்தது.
 
“எங்கம்மா இருக்கான் அவன்?? பாப்பா எங்கேம்மா??”
 
“குழந்தையை தூக்கிட்டு போயிட்டான்ப்பா…”
 
“அவனை…” என்று அவர் பல்லைக்கடிக்க சங்கரி கணவனை ஏறிட்டார். அந்த பார்வை என்ன சொல்லியதோ சற்றே அமைதி அவரிடத்தில்.
 
சங்கரி மெதுவாய் வெண்மதியிடம் பேச ஆரம்பித்த வேளை அவளே அவர் மடியில் இருந்து எழுந்திருந்தாள். ஜெயவர்மனும் ரஞ்சனாவும் இவர்கள் வந்திருப்பது தெரியவும் அவர்களை நோக்கி வந்துக் கொண்டிருந்தனர்.
 
வெண்மதி தன் கண்களை அழுந்த துடைத்துக் கொண்டாள். “நான் யாருன்னு அவனுக்கு தெரியலை, அதான் என்கிட்ட விளையாடிட்டான்… அவன் செஞ்சதுக்கு எல்லாம் நான் ஏன் மதிப்பு கொடுக்கணும்…” என்றவளின் கரம் தன் கழுத்தில் இருந்ததை பற்ற சங்கரி அவள் கையை தட்டிவிட்டார்.
 
“உன் கழுத்துல ஒரு தரம் ஏறினது தான் இறங்கிப் போச்சு… இதை நீயா இறக்கி வைக்க வேணாம் மதி… அம்மா சொல்றதை கேளு, உனக்கு பிடிக்கலைன்னா நீ ஒதுங்கிக்கோ, ஆனா இது மட்டும் வேண்டாம்…” என்றார் குரலில் சற்றே அழுத்தத்தை கூட்டி
 
‘பேசுறது நீதானாம்மா’ என்றொரு பார்வையை அன்னையை நோக்கி வீசியவளின் கரம் இன்னமும் அழுத்தமாய் அவன் கட்டியிருந்த தாலியை பற்றியது.
 
அதை கழற்றி வீச வேண்டும் என்றெல்லாம் அவள் நினைத்திருக்கவில்லை. எதுவோ ஒரு கோபத்தில் தான் அதை பற்றினாள், அன்னையின் பேச்சில் தான் அவள் கரம் அதனை பற்றியிருந்ததை உணர்ந்தவள் இன்னமும் அதை இறுக்கிப் பிடித்தாள்.
 
சட்டென்று எழுந்து நின்றவள் அங்கு வந்துக் கொண்டிருந்த ஜெயவர்மனை பார்த்தாள். “உங்கம்மா எங்கே??” என்றாள் அவனிடத்தில்.
 
“வீட்டுக்கு…”
 
“உங்க தம்பியை பார்க்கணும்…”
“எங்களோட வாம்மா…” என்றவன் ரஞ்சனாவை பார்க்க அவளோ “வாங்க…” என்றாள் மற்றவளை பார்த்து.
 
“நீங்களும் வாங்கம்மா… வாங்கப்பா…” என்று சங்கரி, கணேசனைப் பார்த்தும் சொன்னாள்.
 
ஜெயவர்மன் காரை எடுத்துக்கொண்டு வந்து அவர்கள் முன் நிறுத்தினான். “ரஞ்சு…” என்று குரல் கொடுக்க அவள் மற்றவர்களை அழைத்துக்கொண்டு வண்டியில் ஏறினாள்.
 
அவர்களின் வீடு ஊரைவிட்டு சற்றே வெளியில் அமைந்திருந்தது. சுற்றி மரங்களும் கொடிகளும் உள்ள தோப்பில் தான் அவர்களின் வீடிருந்தது.
 
அன்னக்கிளி மகனுக்கு வாங்கிக் கொடுத்த இடத்தில் அவன் தோப்பை மட்டும் அமைத்திருக்கவில்லை. அவர்கள் தங்கியிருக்க வீட்டையும் கட்டியிருந்தான்.
 
குழந்தை வானதி உறக்கத்திலிருந்து விழித்து அழ முதலில் என்ன செய்வதென்றே புரியவில்லை சிபிவர்மனுக்கு.
 
குழந்தையை வெண்மதியிடம் இருந்து பிரித்து வந்திருக்கக்கூடாதோ என்ற எண்ணம் எழுந்தது அவனுக்கு அப்போது.
 
பின் ‘கூட்டிட்டு வந்திருக்கலைன்னா அவளா இங்க வரமாட்டாளே!! எதாச்சும் செய்வோம், குழந்தைக்கு என்கிட்ட வித்தியாசம் தெரியக்கூடாது…’ என்று எண்ணியவன் அழும் அவளை தூக்கி தோளில் தட்டி சமாதானம் செய்தான்.
 
அந்தோ பரிதாபம் குழந்தை இன்னமும் அதிகமாய் அழுதது. அவர்கள் வீட்டில் வேறு குழந்தை இருந்தாலாவது அவனுக்கு தெரிந்திருக்கும் அக்குழந்தை எதற்கு அழுகிறாள் என்று.
 
அவனுக்கு என்ன செய்து குழந்தையை அமர்த்துவது என்று புரியவில்லை. அப்போது தான் ஒன்று உரைக்க குழந்தையை தூக்கிக்கொண்டு சமையலறைக்கு ஓடினான்.
 
அவர்கள் வீட்டில் பசும்பால் எப்போதும் இருக்கும். பிரிட்ஜில் இருந்து பாலை எடுத்து சூடு செய்தான். ரஞ்சனாவிற்காக ஹார்லிக்ஸ் வாங்கி வைத்திருந்தனர்.
 
அதை எடுத்து பாலில் கலந்து சீனியை போட்டு ஆற்றி மிதமான சூட்டில் ஒரு கோப்பையில் அதை ஊற்றி குழந்தைக்கு கொடுக்க அவள் மிச்சம் வைக்காமல் குடித்ததில் இருந்தே அவனுக்கு புரிந்து போனது குழந்தை பசியில் இருந்திருக்கிறாள் என்று.
 
அச்சோ மதிய வேளையில் உணவைக் கொடுக்காமல் பாலைக் கொடுத்துவிட்டோமே என்று தன்னை லேசாகக் குட்டிக்கொண்டான்.
 
வாசலில் அரவம் கேட்க அவனுக்கு புரிந்து போனது கலவரம் ஒன்று தன்னை நோக்கி வந்துக் கொண்டிருக்கிறது என்று.
குழந்தையை தூக்கிக்கொண்டே வந்தவன் எதிரில் அவனை முறைத்துக்கொண்டே வந்த அவன் அன்னை செல்வியை கண்டுக்கொள்ளாமல் வெளியில் சென்றவன் அவர்கள் தோட்டத்தை உடன் பார்த்துக்கொண்டு அங்கேயே ஒரு மூலையில் குடிசை போட்டு தங்கியிருந்த வெள்ளையம்மாளை அழைத்தான்.
 
“வெள்ளையம்மா பாட்டி…”
 
“என்னய்யா வர்மா?? எப்போ வந்தீங்க நீங்க?? நான் நீங்க வந்ததை பார்க்கலையே?? பொண்ணும் வந்தாச்சா??”
 
“அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்… இன்னைக்கு உங்க வீட்டுல என்ன சமையல்??”
 
“சாம்பாரு வைச்சேன்… ராசாவும் வேணியும் கல்யாண சாப்பாட்டுக்கு அங்க வந்துட்டாகள்ள, அதான் நான் எனக்கு காரமில்லாம இதை செஞ்சேன்…”
 
“கொஞ்சம் சாதம் போட்டு குழம்பு ஊத்தி கொடுங்க, குழந்தை பசியா இருக்கா??” என்று அவன் சொல்லவும் தான் அவர் அக்குழந்தையை பார்த்தார்.
 
அவருக்கு எழுபது வயதுக்கு மேல் ஆகிறது. கண்பார்வை கொஞ்சம் குறைவு தான், தூரத்தில் இருந்த போது சரியாய் கவனிக்காதவர் அவன் அருகே வரவும் அவன் தோளில் சாய்ந்திருந்த குழந்தையை தான் பார்த்திருந்தார்.
“உங்களுக்கு பசிக்குதா??” என்று அவர் தன் பொக்கை வாய் விரிய கேட்க குழந்தைக்கு என்ன புரிந்ததோ அவரை பார்த்து சிரித்து வைத்தது.
 
“பாட்டி நான் கேட்டது??” என்று சிபி ஞாபகப்படுத்தினான்.
 
“இந்தா வாரேன்யா” என்றவர் அந்த தோட்டத்தில் ஒரு மூலையில் இருந்த அந்த குடிசைக்குள் நுழைந்திருந்தார்.
 
சற்று நேரத்தில் வெளியில் வந்தவரின் கையில் வட்டியில் சோறும் குழம்பு ஊற்றி பிசைந்து வைக்கப்பட்டிருந்தது.
 
அவரை ஒரு நன்றி பார்வை பார்த்தவன் தோட்டத்தில் இருந்த ஒரு மாமரத்தின் கீழே சென்று அமர்ந்தான். ஏதேதோ பேசியவாறே கொஞ்சம் கொஞ்சமாய் குழந்தைக்கு சோறு ஊட்டி முடித்திருந்தான்.
 
‘பரவாயில்லைடா சிபி உனக்கு ஒரு குழந்தையை பார்த்துக்க எல்லாம் தெரிஞ்சிருக்கு…’ என்று அவனை அவனே பாராட்டிக் கொண்டான்.
 
அந்த பாராட்டுதலுக்கு கொட்டு வைத்தார் போன்று வெள்ளையம்மா ஒரு தம்ளரில் தண்ணீரை கொண்டு வந்தார். “என்னய்யா நீ வெறும் சோறு மட்டும் ஊட்டினா போதுமா, தண்ணீ கொடுக்க வேணாமா… அப்புறம் புரப்பேரிடாது…”
 
“சாரி பாட்டி, முன்னப்பின்ன இதெல்லாம் பழக்கமில்லையா அதான்…” என்றவன் அவர் கையில் இருந்த தண்ணீரை வாங்கி குழந்தைக்கு புகட்டினான்.
 
குழந்தை ஒரு கிளாஸ் தண்ணீர் முழுவதும் குடித்துவிட்டு இப்போது அவனைப் பார்த்து சிரித்தது.
 
‘ஒரு சின்ன குழந்தையை உன்னால பார்த்துக்க முடியலை, எந்த தைரியத்துல வெண்மதி கழுத்துல நீ தாலி கட்டினே…’ என்று மனசாட்சி லேசாய் அவனை குத்திக்காட்டியது.
 
‘இதுவரைக்கும் தெரியலைன்னா என்ன இனிமே தெரிஞ்சுக்கறேன்…’ என்று அதற்கு பதில் சொல்லி உள்ளே அனுப்பி வைத்தான்.
 
செல்வி அவன் முன் ரௌத்திரமாய் வந்து நின்றிருந்தார் இப்போது. இதற்கு மேல் அவரை தவிர்க்க முடியாது என்றுணர்ந்தவன் “பாட்டி பாப்பாவை கொஞ்சம் நேரம் பார்த்துக்கறீங்களா…”
 
“அப்படி கூட்டிட்டு போய் விளையாட்டு காட்டுங்க… நான் அம்மாகிட்ட கொஞ்சம் பேசிட்டு வந்திடறேன்…” என்று சொல்லி குழந்தையை அவரிடம் கொடுக்க அவர் அங்கிருந்து நகர்ந்திருந்தார்.
 
“ஹ்ம்ம் சொல்லுங்கம்மா…”
“நான் என்னய்யா சொல்றதுக்கு இருக்கு… நீங்க என்ன பண்ணிட்டு வந்திருக்கீங்கன்னு நீங்க தான் சொல்லணும்… என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்ல வர்மா…”
 
“என்ன சொல்லியிருக்கணும்??”
 
“அந்த கல்யாண பொண்ணைப்பத்தி…”
 
“சொல்லியிருந்தா…” என்றான் இழுவையாய்.
 
“கல்யாணத்தை நிறுத்திட்டு உனக்கு வேற நல்ல பொண்ணா பார்த்து கட்டி வைச்சிருப்பேன்…”
 
“இப்போ மட்டும் என்ன நடந்துச்சு…” என்ற அவன் இடக்கு அவருக்கு புரியாமல் இல்லை.
 
“வர்மா…” என்றார் அவர் அழுத்தமாய்.
 
“சொல்லுங்கம்மா…”
 
“நீ பண்ணது கொஞ்சம் கூட சரியில்லை… இப்படி யார்கிட்டயும் கேட்காம நீ அவ கழுத்துல தாலி கட்டினது கொஞ்சமும் சரியில்லை…”
 
“நான் தாலி கட்டின அந்த பொண்ணுகிட்டேயே கேட்கலை…” என்றான் ஒரு மாதிரியாய்.
 
“அதுவும் குழந்தையோட ஒரு பெண்ணை எப்படிடா??”
 
“அம்மா…” என்றான் அதட்டலாய்.
 
“எனக்கு பிடிக்கலை வர்மா…”
 
“அப்போ நான் என்ன பண்ணனும்ன்னு நீங்க நினைக்கறீங்க இப்போ…”
 
“அந்த பொண்ணு நமக்கு வேணாம்… விட்டிரு…”
 
“ஹ்ம்ம் அப்புறம்…”
 
“அப்புறம் என்னடா உனக்கு வேற நல்ல பொண்ணை பார்த்து கட்டி வைக்கறேன்…”
 
“அதுக்கு அந்த பொண்ணு சம்மதிக்குமா…”
 
“ஏன்டா சம்மதிக்காது… உனக்கு என்னய்யா குறை, நல்லா அறிவா சம்பாதிக்கற புருஷனை ஒரு பொண்ணு வேணாம்ன்னா சொல்லுவா…”
 
“அந்த பொண்ணை பொறுத்தவரைக்கும் நீங்க சொல்றது சரியா இருக்கலாம். ஆனா எனக்கு இது இரண்டாவது கல்யாணம் ஆகிடுமே!!”
 
“வர்மா…”
 
“அம்மா இந்த பேச்சை இன்னையோட விட்டிருங்க… நீங்க ஒரு பொண்ணை எனக்காக பார்த்தீங்க… நான் வேணாம்ன்னு எதுவும் அப்போ சொன்னேனா…”
 
“இல்லை தானே… மணமேடை வரைக்கும் வந்தேன் தானே… அவ்வளவு தூரம் வந்தபிறகு தான் சில விஷயங்கள் தெரிய வந்துச்சு… அதான் நான் விலகிட்டேன்…”
 
“என் மனசுக்கு சரின்னு பட்டதை செஞ்சேன்… வெண்மதி தான் இந்த ஜென்மத்துல என்னோட மனைவி, அந்த பாப்பாவும் என்னோட பாப்பா தான்… எங்க குழந்தை அவ…”
 
“உங்களுக்கு எங்களை ஏத்துக்க முடியலைன்னா சொல்லிடுங்க… நாங்க இப்போவே வீட்டைவிட்டு வெளிய போறோம்…” என்று அவன் நீளமாய் பேசி முடிக்க செல்வி வாயடைத்து நின்றார்.
 
ஆயிரம் தான் இருந்தாலும் சிபிவர்மன் அவருக்கு செல்ல மகன், மூத்தவன் ஜெயவர்மனை செல்வியின் மாமியார் தான் அதிகம் பார்த்துக்கொண்டார்.
 
சிபி தான் எப்போதும் அவரையே சுற்றி சுற்றி வருவான், அதனாலேயே அவன் அவருக்கு மிகுந்த செல்லமாகிப் போனான். அவன் அதிகம் படிக்காததற்கு கூட அதனால் தான் அந்த தாய் வருந்தவேயில்லை.
 
ஜெயவர்மன் படிக்க வேண்டும் என்று வெளியூர் சென்று படித்து வந்திருக்க படிப்பில் அதிக நாட்டமில்லாத சிபி அனைத்துமே அருகில் இருந்த ஊர்களிலேயே படித்து முடித்திருந்தான்.
 
ஒரு மகனாவது உடன் இருந்ததில் அவரும் அம்மகனிடம் அதிக பாசத்தை பொழிந்தார். ஜெயவர்மன் வேலையின் பொருட்டு திண்டுக்கல்லில் தனியாய் தானிருக்கிறான். இப்போது தான் அவன் மனைவி மாசமாயிருப்பதால் தனியாய் அவளை அங்கு விடமுடியாதென்று இங்கு வந்திருக்கிறான்.
 
“கடைசியா என்ன தான் சொல்றய்யா??”
 
“முதலும் கடைசியுமா சொல்றேன்ம்மா வெண்மதி தான் என்னோட பொண்டாட்டி, அதை இந்த ஜென்மத்துல மாத்த முடியாது அவ்வளவு தான்…” என்றுவிட்டு நகர்ந்தான்.
 
மகனின் பிடிவாதம் அறிந்தாலும் அவரால் ஏனோ இந்த திருமணத்தை முழுதாய் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
 
ஒன்றும் சொல்லாமல் தன் கணவரை மட்டும் கசங்கிய முகத்துடன் ஏறிட்டுவிட்டு உள்ளே சென்றுவிட்டார் அவர்.
 
ஒரு பேச்சு வார்த்தை முடிந்திருக்க வாசலில் வந்து வண்டி நிற்கும் சத்தம் கேட்கவுமே சிபிவர்மனுக்கு புரிந்து போனது, தான் இனி அடுத்த களேபரத்தை சமாளிக்க வேண்டும் என்று.
 
ஜெயவர்மன் கிளம்பும்முன்னே தம்பிக்கு அழைத்து அங்கு வந்துக் கொண்டிருப்பதாக சொல்லியிருந்தான்.
 
ஜெயவர்மன் வண்டியை முழுதாய் நிறுத்திக் கூட இருக்கவில்லை. கதவை திறந்து கிட்டத்தட்ட குதித்திருந்த வெண்மதி சிபிவர்மனை நோக்கி ஓடினாள்.
 
வெள்ளையம்மா பாட்டி குழந்தைக்கு விளையாட்டு காட்டுவதற்காய் அத்தோப்பை ஒட்டியிருந்த ஆடுகளை வைத்திருந்த கொட்டகைக்கு கூட்டிச் சென்றிருந்தார்.
 
வெண்மதி வருவதை தூரத்திலேயே கண்டுவிட்டிருந்த சிபி மடித்துக் கட்டியிருந்த வேட்டியை கீழே இறக்கிவிட்டு இருந்த இடத்திலேயே அசராது நின்றிருந்தான்.
 
வந்தவள் இருகரங்களாலும் அவன் சட்டையை கொத்தாக பற்றியிருந்தாள்…
 
“எங்க என்னோட குழந்தை??” என்ற அவளின் கேள்விக்கு “தெரியாது…” என்றிருந்தவனை கோபத்தில் யோசிக்காது அறைந்திருந்தாள்….
 

Advertisement