Advertisement

23
 
அவள் கண்கள் குளமாகியது அவனின் இக்கேள்வியில். அவளருகே வந்தவன் அவளை மெதுவாய் தன் மீது சாய்த்துக் கொண்டான்.
 
அவளின் விழி நீர் அவன் சட்டையை நனைக்க அவன் நெஞ்சமும் உடன் நனைந்தது அவளுக்காய்.
 
“உனக்கு சொல்லணும்ன்னு தோணிச்சுன்னா மட்டும் சொல்லு… அப்புறம் ஒரு விஷயம் எக்காரணத்தை கொண்டும் வானதியை நான் வெறுக்கவோ வேறாவோ நினைக்கவே மாட்டேன்…”
 
“என்னைக்கு இருந்தாலும் அவ தான் நம்மோட பொண்ணு தான்…”
 
“ஏன் அப்படி கேட்டீங்க?? அவன் என் பொண்ணு தான்…”
 
“நம்ம பொண்ணுண்ணே சொல்லலாம் மதி… வானதியை நான் அப்படி தான் நினைக்கிறேன்…”
 
“அன்னைக்கு திண்டுக்கல்ல பார்த்த டாக்டர் உங்ககிட்ட எதுவும் சொன்னாங்களா??”
 
“யாருமே எதுவும் சொல்லலை மதி… நானா தான் கேட்கறேன், சாரி மதி நான் இப்படி சொல்றேன்னு நினைக்காதே. உன்னை பர்ஸ்ட் டைம் கட்டிப்பிடிக்கும் போதே எனக்கு தோணிச்சு…”
 
“எ… என்னன்னு??”
 
“உன்னை நெருங்கிய ஆண் நான் தான்னு…”
 
இதை அவள் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. அப்படியே அங்கிருந்த கட்டிலில் அமர்ந்துவிட்டாள்.
 
“என்னாச்சு வெண்மதி, உனக்கு கஷ்டமாயிருக்க எதுவும் எனக்கு வேணாம்…”
 
“மனசுல ஒரு விஷயத்தை வைச்சுட்டு கேட்காம இருக்கக்கூடாதுன்னு தான் கேட்டுட்டேன்… உன்னை சந்தேகப்பட்டு நான் எதையும் கேட்டதா நினைக்காதே…” என்று அவன் சொல்லி முடித்திருக்கவில்லை அவள் கண்கள் கண்ணீரை பெருக்கியது.
 
“மதி ப்ளீஸ்ம்மா வேணாம்டா எதுக்கு அழறே??” என்றவன் அவள் கண்ணீரை துடைத்துவிட அவள் அவன் மீதே சாய்ந்துக் கொண்டாள்.
 
“வானதி யார் குழந்தைன்னு இனிமே எப்பவும் என்கிட்டநீங்க கேட்காதீங்க…” என்றாள் அழுகையோடு.
 
“சரி கேட்க மாட்டேன்…”
 
“ஏன்னா அவளை சுமந்தது நான் தான்…”
 
“அவளோட ஒவ்வொரு அசைவுகளையும் உணர்ந்து அவளோட பேசி சிரிச்சு அவளுக்காக அழுது, எல்லாம் செஞ்சது நான் தான்… அவ என் பொண்ணு…”
 
“டாக்டர் ஆபரேஷன் பண்ணணும்ன்னு சொன்னப்பக்கூட அவ எனக்கு நார்மலா பிறக்கணும் அதுக்கு என்ன செய்யணுமோ செய்ங்கன்னு சொல்லி பிரசவ  வலியனுப்பவிச்சு அவளை இந்த உலகத்தை பார்க்க வைச்சது நான் தான்…”
 
அவள் சொல்லச்சொல்ல சிபிவர்மன் அவளை தன்னோடு இன்னமும் இறுக்கிக் கொண்டிருந்தான். அவள் முதுகை ஆதரவாய் வருடவும் அவன் தவறவில்லை.
 
“அப்புறம் எப்படி அவ என் குழந்தை இல்லாம போவான்னு சொல்லுங்க…” என்று கதறியவளிடம் “அவ நம்ம குழந்தை தான் மதி… நான் கேட்டது தப்பு தான். போதும் விடுடா அழாத…” என்றான் அவன்.
 
அழுகை குறைந்து விசும்பலாகி அதுவும் நின்று போக கதிர்வேலன் பார்கவியை பற்றியும் அதன் பின்னான நிகழ்வுகளையும் அவனிடம் கூறவாரம்பித்தாள்.
 
வெண்மதிக்கு நடந்ததெல்லாம் சிபியின் மறைக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை என்பதால் அவனிடத்தில் அனைத்தும் கூறி முடித்திருந்தாள்.
 
அவள் சொன்னதை கேட்டு சிபி இப்போது பிரமித்து போனான். என்ன மாதிரியான அன்பு அது என்று. ஆனால் அதை அனுபவிக்க அந்த இருவருக்குமே கொடுத்து வைக்கவில்லையே என்ற ஆற்றாமையும் அவளுக்குள் எழுந்தது.
 
அதை அவளிடம் சொல்லவும் செய்தான். “மதி நடந்தெல்லாம் எதுக்காக நடந்துச்சுன்னு தெரியலை… இப்படி எல்லாம் நடந்திருக்கவும் வேணாம் தான்…”
 
“நடந்துல நன்மைன்னு எடுத்துக்கணும்ன்னா அது நீயும் வானதியும் எனக்கு கிடைச்சது தான்…” என்றான் உள்ளார்ந்து.
 
பின் எதையோ யோசித்தவன் “மதி இந்த விஷயம் எக்காரணம் கொண்டும் வேற யாருக்கும் எப்பவும் தெரிய வேணாம்” என்று அவன் சொல்ல அவன் மீது இன்னமும் சலுகையாய் சாய்ந்துக் கொண்டாளவள்.
 
“மதி அப்போ அந்த டாக்டர்க்கு எல்லாம் தெரியுமா… நீ அவங்ககிட்ட பேசினியா… நான் கூட உன்கிட்ட அவங்க நம்பர் கொடுத்தேனே… ஆனா மதி நீ ஏன் அவங்களை பார்த்து பயந்த… அதனால தானே அன்னைக்கு மயக்கம் போட்டு விழுந்த” என்று மிகச்சரியாய் கேட்டான் சிபிவர்மன்.
 
“அவங்ககிட்ட போன்ல பேசிட்டேன்… என்னோட பயம் குழந்தை விஷயம் வெளிய தெரிஞ்சுடுமோன்னு தான். அது மட்டுமில்லாம எங்க பார்கவி அக்காவோட அப்பா அம்மாக்கு கதிர் மாமா இல்லைங்கற விஷயம் தெரிஞ்சு குழந்தையை அவங்க வாங்கிட்டு போய்டுவாங்களோன்னு எனக்குள்ள ஒரு அச்சம் இருந்தது…”
 
“அப்போ அவங்களுக்கு கதிர் இறந்த விஷயம் தெரியாதா??”
 
“தெரியாது… நான் சொல்லலை, நானும் அப்போ ஆஸ்பிட்டல்ல தானே இருந்தேன்… அதுக்கு அப்புறம் என் பிரண்ட் ஒருத்திகிட்ட சொல்லி அவங்களை பத்தி விசாரிச்சேன்”
 
“பார்கவி அக்காவோட அம்மா அப்பா அவங்களோட பெரிய பொண்ணு கூடவே போய் செட்டில் ஆகிட்டாங்கன்னு கேள்விப்பட்டேன்…”
 
“டாக்டர் பார்த்தப்போ குழந்தை விஷயம் தெரிஞ்சுடுமோன்னும் ஒரு வேளை பார்கவி அக்காவோட பேரன்ட்ஸ் அவங்களை வைச்சு என்னை விசாரிச்சு வந்திருவாங்களோன்னு பயந்திட்டேன் அதான் அன்னைக்கு ஆஸ்பிட்டல் வைச்சு அப்படி ஆகிப்போச்சு…”
 
“டாக்டர்கிட்ட பேசினேன், அவங்க என்னைப்பத்தியும் குழந்தை எப்படியிருக்கான்னும் தெரிஞ்சுக்க தான் விசாரிச்சாங்கன்னு அவங்க சொல்லித் தான் தெரியும்…”
 
“இனிமே எந்த குழப்பமும் இல்லை தானே…” என்றான் அவள் முகத்தை நிமிர்த்தி. அவள் தலை இல்லையென்பதாய் ஆடியது.
 
ஒரு வருடத்திற்கு பின்
———————————————
 
தமிழகத்தில் மலைவாசஸ்தலங்களில் ஒன்று சிறுமலை. இவை   திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது. இவை புராண காலத்தில் இருந்தே இந்த மலைக்கு என ஒரு தனி மகிமை உண்டு. 
ராமாயணத்தில் ராவணனுடன் நடந்த போரில் மயக்கமுற்ற லக்குமனனை எழுப்புவதற்கு மூலிகை தேவைப்பட்டது. அப்போது, அனுமன்  மூலிகைகள் நிறைந்த சஞ்சீவி மலையை இமயமலைக்கு தூக்கிச்சென்றபோது அதில் இருந்து ஒரு சிறு துண்டு திண்டுக்கல் பகுதியில் விழுந்ததாம். ஆகையால் இந்த மலைக்கு சிறுமலை என்று அழைக்கப்படுவதாக அப்பகுதி மக்களால் கூறப்படுகிறது.
சிறுமலை நகரை ஒட்டி வரலாற்று சிறப்பு மிக்க பாண்டியன் குளம் அமைந்துள்ளது. இது பாண்டியர்கள் காலத்தில் குடிநீர் ஆதாரத்திற்காக உருவாக்கப்பட்டது என கூறப்படுகிறது. சிறு மலை ஆண்டு முழுவதும் நடுத்தரமான சூழலில் இருக்க கூடிய காட்டுப் பகுதி. 
அது தனியாக அமைந்திருந்த குடில் வெண்மதி, சிபிவர்மன், வானதி மூவரும் ஒரு குடிலிலும், ஜெயவர்மனின் குடும்பம் மற்றொரு தனி குடிலிலும் தங்கியிருந்தனர்.
 
செல்வியும் பசுங்கிளியும் தேனியில் இருந்தனர். அண்ணன் தம்பி இருவரும் தங்கள் குடும்பத்தை சுற்றுலா அழைத்து வந்திருந்தனர் சிறுமலைக்கு. ஜெயவர்மன் தான் இந்த இடத்தை தேர்வு செய்திருந்தான்.
 
இரவு வானதி உறங்கியிருக்க “மதி” என்று கிசுகிசுத்தான் சிபிவர்மன். அவளோ உறக்கத்தில் இருப்பவள் போல் நடித்துக் கொண்டிருத்தாள்.
 
“மதி…” என்றான் இம்முறை சத்தமாய்.
 
“என்னங்க…”
 
“இங்க எதுக்குடி கூட்டிட்டு வந்தேன் உன்னை…”
 
“சுத்தி பார்க்கறதுக்கு…”
 
“நீ என்ன செஞ்சுட்டு இருக்க இப்போ… அதான் காலையில சுத்திப் பார்த்தோமே, இப்போ டயர்டா இருக்குங்க… தூங்குறனே” என்றாள் போர்வையை இழுத்து மூடி. உள்ளே நமுட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டாள்.
 
“அடியே நீ ஊர் சுத்தி பார்க்க வந்த சரி, நான் உன்னை தானே சுத்தி பார்க்க வந்தேன்…”
“எனக்கு தெரியாது, இன்னும் பத்து மாசத்துல நமக்கு இன்னொரு பாப்பா வந்தே ஆகணும்… நீ இப்படி இருந்தா என் கனவு என்னாகறது…”
 
“இங்க பாரு நீ இப்படியே பண்ண, நான் வானதியை எழுப்பி விட்டிருவேன், அப்புறம் அவ எனக்கு தம்பி வேணும்ன்னு உன்னை கேட்பா பார்த்துக்கோ…”
 
“அவ கேட்டா நான் சமாளிச்சுக்கறேன் நீங்க படுங்க…”
 
“அடியேய் நீ தூங்குறதுக்கா உன்னை இங்க கூட்டிட்டு வந்தேன்… போடி நல்லா தூங்கு…” என்று சொல்லி அவன் எழுந்து சென்றுவிட்டான்.
 
;அச்சச்சோ சார்க்கு கோவம் வந்திட்டு போல’ என்று எண்ணி மெதுவாய் போர்வைக்குள் இருந்து எட்டிப்பார்க்க அவன் அறையிலேயே இல்லை.
 
கட்டிலை விட்டிறங்கி அறையை ஒட்டியிருந்த பால்கனியில் பார்க்க அவன் அங்கு தானிருந்தான். ஓசைப்படாமல் அவனருகே சென்றவள் அவனை அணைக்கும் முன்னே எட்டி வந்து அவன் அணைத்திருந்தான்.
 
“ஓஹோ இதெல்லாம் உங்க பிளான் தானா…”
 
“ஆமா பிளான் தான் இப்போ என்ன அதுக்கு!! சிபி வர்மனுக்கு ஒரு மாற வர்மன் பிறக்க வேணாமா… வானதிக்கு குட்டித்தம்பி வேணாமா… நான் மட்டும் நினைச்சா போதுமா நீ ஒத்துழைக்க மாட்டேங்குறியே”
“நான் எப்போ வேணாம்ன்னு சொன்னேன்” என்றாள் எங்கோ பார்த்துக்கொண்டு.
 
“அடி கள்ளி மனசுக்குள்ள ஆசையை வைச்சுக்கிட்டு தான் சொல்லாம இருந்தியா…”
 
“மதி…”
 
“ஹ்ம்ம்…”
 
“இன்னைக்கு தான் நமக்கு நிஜமான ஹனிமூன் மதி…”
 
“என்னது?? அப்போ போன மாசம் கொடைக்கானல் போனது… அதுக்கு முன்னாடி மூணார் போனது எல்லாம் எந்த கணக்குல சேர்க்கறது…”
 
“அதெல்லாம் வேற…”
 
“இங்க வாயேன்” என்றவன் அவளை தன் மேல் சாய்த்துக்கொண்டு  அணைத்தவாறே அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான்.
 
“அங்க பாரு இன்னைக்கு முழுமதி இந்த வானத்துல… அதனால தான் சொன்னேன் இது தான் நம்மோட தேனிலவுன்னு…”
 
“அய்யே ஆளைப்பாரு…” என்று பழிப்பு காட்டினாள்.
 
“அந்த வானத்துல இருக்க வெண்மதி இப்போ என் வாழ்க்கையிலும் இருக்கு, இப்போ என் அணைப்புகுள்ள சிறைப்பட்டிருக்கு” என்றான் அவள் காதோரம் மெல்லிய குரலில்.
 
“எனக்கே எனக்கான நிலவு நீ, இந்த வர்மனுக்கு சொந்தமான வெண்மதி… வர்மனின் வெண்மதி…”
 
முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது விழியாகும்
மௌனங்கள் அவளது மொழியாகும்
மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்
 
என்ற பாடலை அவன் கைபேசியில் ஒலிக்கவிட்டு அவன் அவளோடு உறவாட ஆரம்பிக்க அதை பார்க்க வெட்கப்பட்டு ஒளிவது போல் வானில் தெரிந்த வெண்மதி முகிலில் சென்று மறைந்துக்கொண்டாள்…
 
 
 

Advertisement