Advertisement

22
 
“என்ன பண்ணிட்டேன்?? நான் என்ன பண்ணிட்டேன் இப்போ?? சொல்லுங்க?? உங்க மனசாட்சியை தொட்டு சொல்லுங்க நான் என்ன பண்ணிட்டேன் இப்போ??
 
“இதுவரைக்கும் நான் எதுவுமே பண்ணலை தெரியுமா… என்னை நீங்க காயப்படுத்திட்டு போனதுல இருந்து இப்போவரை நான் உங்களுக்கு எதிரா எதுவும் செய்யலையே…”
 
“மதி…”
 
“உண்மையை சொல்லுங்க உங்க கல்யாணம் சந்தியாவோட நடக்காம இருந்தா என்னை கல்யாணம் பண்ணி இருப்பீங்களா நீங்க??”
 
“மதி…”
 
“உங்ககிட்ட அதுக்கு பதில் இருக்கா முதல்ல… அன்னைக்கு கல்யாணம் நின்னுப்போச்சு… உங்க கவுரவத்தை நிலை நிறுத்தவும் உங்க கெத்து குறையாம இருக்கவும் சட்டுன்னு கண்ணுல பட்ட என் கழுத்துல தாலி கட்டிட்டீங்க…”
 
“லவ் பண்றேன்னு சொன்னப்பவும், அதெல்லாம் இல்லைன்னு சொன்னப்பவும் இவ அமைதியா தானே இருந்தா, இப்பவும் அப்படியே இருப்பான்னு நினைச்சுட்டீங்க…”
 
“அந்த தைரியத்துல தானே என் கழுத்துல இதை கட்டினீங்க…”
 
“மதி என்னைப் பேசவிடு…”
 
“முதல்ல நீங்க என்னைப் பேச விடுங்க” என்று சத்தமாய் சொன்னாள்.
 
கண்களில் இருந்து கண்ணீர் தன் போக்கில் வழிந்துக் கொண்டு தானிருந்தது.
 
“என் மனசைப்பத்தி உங்களுக்கு எப்பவும் கவலை இருந்ததில்லை அப்படி தானே… எவ்வளவு நாள் நான் இதெல்லாம் மறக்க முடியாம தவிச்சு போயிருப்பேன்னு உங்களுக்கு தெரியுமா…”
 
அவள் பேச்சில் அவளறியாமலே அவனை மரியாதையாய் பேசினாள். “எனக்கு கல்யாணமே வேணாம்ன்னு தான் இருந்தேன்… அப்புறம் என்னென்னவோ நடந்து போச்சு…” என்று முடிக்க முடியாமல் அழுகை முட்டிக்கொண்டு வந்தது அவளுக்கு.
 
“பேசிட்டியா… பேசி முடிச்சிட்டியா?? நான் பேசவா…”
 
‘இனிமே என்ன இருக்கு நீ பேச, நீ சொல்லப் போற நொண்டி சாக்கெல்லாம் என்னை அசைக்க முடியாது போடா’ என்ற எண்ணம் தான் அவளுக்கு இப்போது.
 
“ஆமா மதி நான் தப்பு தான் பண்ணிட்டேன்… அதை இன்னைகில்லை அன்னைக்கே நான் உன்கிட்ட ஒத்துக்கிட்டேன். அது உனக்கும் தெரியும் தானே… படிச்சுக்கிட்டு இருக்கற ஒரு பொண்ணு பின்னாடியே போய் அவளை விரும்பறேன்னு சொல்லி மேலயும்…” என்றவன் அதை தொடராது விட்டான்.
 
“அன்னைக்கு மனசுக்குள்ள தோணினது ஈர்ப்புன்னு எனக்கு சில நாள்லையே புரிஞ்சுது. அதோட வெளிப்பாடு தான் உன்கிட்ட இதெல்லாம் வேணாம்ன்னு நான் சொன்னது…”
 
அவள் இப்போதும் அவனை போடா என்ற பார்வை தான் பார்த்தாள். ‘என் மனதின் வலி இவனுக்கெங்கே புரியப்போகிறது’ என்ற எண்ணம் தான் அவளுக்கு.
“ஏன் மதி இவ்வளோ பேசுனியே… நான் பேசினது செஞ்சது தப்புன்னு சொன்னியே… நான் இப்போ கேட்கறேன் அதே மனசாட்சியை தொட்டு சொல்லு, அன்னைக்கு நான் உன்னை விரும்பறேன்னு சொன்னப்போ நீ எனக்கு எஸ் சொன்னியா…”
 
“சொல்லு மதி எஸ் சொன்னியா??”
 
“நீ அன்னைக்கும் பதில் சொல்லலை, நான் வேணாம்ன்னு சொன்னப்பவும் பதில் சொல்லலை…”
 
“நான் என்ன நினைச்சு இருப்பேன்னு நீ நினைக்கிறே… ஓ!! இந்த பொண்ணுக்கு நம்மளை பிடிக்கலை அதான் எந்த பதிலும் சொல்லலைன்னு தான் அப்போ எனக்கு தோணிச்சு…”
 
“ஆனா இப்போ சொல்றேன் கேட்டுக்கோ மதி… உன்னை விரும்பறேன்னு உன்கிட்ட சொன்னது உள்ளார்ந்து சொன்னேனான்னு எனக்கு தெரியாது, அதே போல தான் நீ வேணாம்ன்னு நான் சொன்னதும் உள்ளார்ந்து நான் சொல்லலை…”
 
“அதை உன் நல்லதுன்னு நினைச்சு, நானே தான் வேணாம்ன்னு சொல்லிட்டேன்… அதே நீ என்னை பார்த்து வேணாம்ன்னு சொல்லியிருந்தா என்னால தாங்கியிருக்க முடியுமான்னு தெரியலை…”
 
“நான் உங்கக்கிட்ட கேட்டேன் தானே, என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கு தானேன்னு கேட்டேன் தானே… அதுக்கு நீங்க அன்னைக்கு பதில் சொல்லியிருந்தா இன்னைக்கு வரைக்கும் நான் அதை நினைச்சுட்டு இருந்திருக்க மாட்டேன்ல”
 
“அப்போ நீங்க வேணாம்ன்னு சொன்னதும் எனக்கு எவ்வளவு வலிச்சிருக்கும்ன்னு உங்களுக்கு தெரியுமா… உங்களுக்கு என்ன நாலு பேரை பார்ப்பீங்க, அதுல உங்களுக்கு யார் சரியா வர்றாங்களோ அவங்ககிட்ட பேசுவீங்க, வேண்டாம்ன்னா விட்டுட்டு போவீங்க அப்படித்தானே…”
 
“என் பிரண்ட்ஸ் எல்லாம் சொன்னாங்க, உங்களோட பிரண்ட்ஸ் எல்லாம் அப்பப்போ ஜோடியை மாத்துவாங்க, ஆனா நீங்க அப்படியில்லைன்னு சொன்னப்போ எனக்கு தோணினது நீங்க உண்மையாவே என்னை விரும்பியிருக்கீங்கன்னு முட்டாள்த்தனமா நினைச்சிருக்கேன் அன்னைக்கு”
 
“உங்க பிரண்ட்ஸ் என்ன சொன்னாங்க அன்னைக்கு, என்னை யாரும் பார்க்கக்கூட மாட்டாங்களா!! அவ்வளவு மோசமாவா இருந்தேன் நான் அன்னைக்கு… ஒத்துக்கறேன் நான் ஒண்ணும் உலக அழகி இல்லை தான்…”
 
“மதி ப்ளீஸ் அது அவங்க பேசினது நான் எதுவும் சொல்லலையே”
 
“சொல்லலை ஆனா வேடிக்கை பார்த்தீங்க… அப்போக்கூட உங்களை நம்பினேன், நீங்க எனக்காக பேசுவீங்கன்னு…”
 
“அந்த மனத்தாங்கலோட நான் இருக்கும் போது தான் நீங்க என்கிட்ட பேசணும்ன்னு வந்தீங்க. அந்த நிமிஷம் அவ்வளவு சந்தோசமா இருந்துச்சு எனக்கு. உங்க அன்பை உறுதிப்படுத்திக்கணும்ன்னு தான் உங்ககிட்ட பிடிச்சிருக்கான்னு கேட்டேன்”
 
“ஆனா நீங்க, அதெல்லாம் பேசாம வேணாம்ன்னு சொல்லிட்டு போயிட்டீங்க”
 
“மதி ப்ளீஸ் புரிஞ்சுக்கோ, உனக்கும் என்னை பிடிக்கும்ன்னு அன்னைக்கு எப்படி எனக்கு தெரியும்… ஏன்னா நீ தான் என் விருப்பத்தை ஏத்துக்கவே இல்லையே அந்த நேரத்துல… உனக்கு பிடிச்சிருக்கான்னு கேட்டியே தவிர எனக்கு உங்களை பிடிச்சிருக்குன்னு நீ ஒரு வார்த்தை சொல்லவேயில்லையே மதி”
 
சிபிவர்மன் சொல்லியது நிஜமே அவள் ஒப்புக்கொண்டிருக்கவில்லை தான். ஆனால் அதை அவனிடம் பகிரங்கமாய் ஒப்புக்கொள்ள மனதில்லை அவளுக்கு.
 
“அதுக்காக நான் எவ்வளவு நாள் பீல் பண்ணியிருப்பேன்னு உனக்கு நான் சொன்னாலும் புரியாது மதி. எனக்கு வீட்டில கல்யாணம் பேசும் போது உன்னைத் தான் கைக்காட்டணும்ன்னு நினைச்சிருந்தேன்…” என்று அவன் சொன்ன போது மனத்தில் ஏனென்று அறியாமல் சோவென்ற அருவி ஆர்ப்பாட்டமாய் குதித்தோடியது சந்தோசத்தில்.
 
“அதுக்குள்ள நீ மணக்கோலத்தில வந்த… கஷ்டமா தான் இருந்துச்சு.. அப்போ தோணிச்சு, ஒரு வேளை உன் மனசுல நானில்லையோன்னு அதனால தான் உன்னால கல்யாணம் பண்ணிக்க முடிஞ்சுதுன்னு…”
 
“ஆரம்பத்தில உன்கிட்ட காதலை நான் விளையாட்டா சொல்லியிருக்கலாம் மதி, ஆனா நானே எதிர்பார்க்கலை நான் சொன்னது விளையாட்டில்லை என்னோட வாழ்க்கைன்னு…”
 
“கதிருக்கும் உனக்கும் கல்யாணம் முடிஞ்சுது தெரிஞ்சப்போ எனக்கு ஒண்ணுமே ஓடலை. ஒரு மாசத்துக்கும் மேலாச்சு நான் சரியாக. அப்போ தான் நான் பண்ணையில இறங்கி வேலை பார்த்த நேரம்…”
 
“ஆனா எல்லாத்தையும் விட்டுட்டு அந்த ஒரு மாசமும் நான் வெளியூர் போயிட்டேன்… இந்த ஊர்ல என்னால இருக்க முடியலை…”
 
“மனசு கொஞ்சம் சமாதானம் ஆனதும் திரும்பி வந்தேன். அப்படியே ரெண்டு வருஷம் போச்சு வீட்டில கல்யாணம் பேசினாங்க…”
 
“எனக்காக இல்லைன்னாலும் அவங்களுக்காக செஞ்சுக்கணும்ன்னு முடிவு பண்ணேன்… அவங்க பார்க்கற பொண்ணை கட்டிக்கறேன்னு சொன்னேன்…”
 
“உன் பார்வை என்ன சொல்ல வருதுன்னு எனக்கு புரியுது மதி… கதிருக்கும் உனக்கும் கல்யாணம் முடிஞ்சு கதிர் சில மாசத்துலவே இறந்துட்டாரே அப்போ கூட வந்து நான் பேசலைன்னு நீ நினைச்சிருப்ப”
 
“தெரியும் மதி, உனக்குள்ள அப்படியொரு கேள்வி இருக்கும்ன்னு எனக்கு தெரியும்… அதுக்கான பதிலையும் தெரிஞ்சுக்கோ, நீ நம்புறியோ இல்லையோ இன்னைக்கு இதெல்லாம் உன்கிட்ட பேசிடணும்ன்னு தான் வந்தேன்…”
 
“கதிர் இறந்து போனது கேள்விப்பட்டதும் அன்னைக்கு உன்னை ஆஸ்பிட்டல்ல வந்து பார்த்தேன்… நீ முழுகாம இருந்ததும் நீயும் கதிர் கூட நீயும் போனதும் நீ செத்து பிழைச்சிருக்கன்னும் தெரிஞ்சது…”
 
“அதனால தான் நான் வந்து திரும்ப உன்கிட்ட பேசலை…”
 
வெண்மதி ஏதோ சொல்ல வந்து பின் அப்படியே அமைதியானாள்.
 
“உடனே கேட்குறது எவ்வளவு முட்டாள்த்தனமோ அந்தளவுக்கு முட்டாள்த்தனம் தானே கணவனை இழந்து குழந்தையோட இருக்க உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்றதும்”
 
“நாம பிரண்ட்ஸ் சொல்லி உன்கிட்ட எத்தனையோ முறை திரும்ப பேச முயற்சி பண்ணேன், ஆனா நீ அதுக்கு  இடம் கொடுக்கவே இல்லை… உனக்கு கணவனா வரட்டுமான்னு கேட்டா மட்டும் நீ சம்மதம் சொல்லியிருப்பியா என்ன…”
 
“ஒரு முறை நான் விலகிட்டேன்… விலகுனது விலகுனதாவே இருக்கட்டும்… திரும்பவும் உன் வாழ்க்கையில வந்து உனக்கு எந்த சங்கடமும் கொடுக்கக் கூடாதுன்னு தான் பேசாம இருந்தேன்”
 
“அதனால தான் வீட்டில பார்த்த பொண்ணுக்கு சரின்னு சொன்னேன். அப்புறம் தான் சந்தியா பத்தி தெரிய வந்தது, கல்யாண மண்டபத்துல இருந்து எழுந்து போய்டணும்ன்னு தான் நினைச்சேன்…”
 
“உன்னைப் பார்க்கலைன்னா கண்டிப்பா அதைத்தான் செஞ்சிருப்பேன்… ஏற்கனவே உன்கிட்ட என்னை கல்யாணம் பண்ணிக்கறியான்னு கேட்க முடியாம தான் உன்னைவிட்டு விலகி இருந்தேன். அந்த மாதிரி நேரத்தில தான் சந்தியாவை கட்டிக்க சம்மதம் சொல்லியிருந்தேன்…”
 
“கல்யாண மண்டபத்துல சத்தியமா உன்னைப் பார்ப்பேன்னு நான் நினைக்கலை… அந்த நிமிஷம் எது வந்தாலும் பரவாயில்லை நீ தான் வேணும்ன்னு முடிவு பண்ணேன்…”
 
“எது வந்தாலும் பார்த்துக்கலாம்ன்னு நினைச்சு தான் உனக்கு தாலி கட்டினேன்”
 
அவன் இவ்வளவு நீளமாய் தன்னிலை விளக்கம் அளித்தும் அவள் இறங்கியிருக்கவில்லை இளகியிருக்கவில்லை அப்படியே தான் நின்றிருந்தாள் சொல்லி முடிச்சிட்டியா என்பது போல்.
 
“மதி நான் இவ்வளவு பேசியிருக்கேன் நீ எதுவும் பேசாம அமைதியா இருந்தா என்ன அர்த்தம்…”
 
அவள் இன்னமும் பதில் கொடுக்கவில்லை.
 
“மதி…” அழைத்தான் மீண்டும்.
 
“பேசு மதி…”
 
“அதான் நீங்க எல்லாம் பேசி முடிச்சிட்டீங்களே, இனிமே வீட்டுக்கு கிளம்பலாம் தானே…” என்றாள்.
 
“சோ நான் சொன்னது எதையும் நீ நம்பலை அப்படித்தானே…”
 
“அதுக்கு நான் பதில் சொல்ல விரும்பலை… என்ன சொல்றதும்ன்னு எனக்கு தெரியலை… ரொம்ப எதிர்பார்த்து ஏமாந்து போனதோட வலி இன்னமும் மிச்சமிருக்கு…”
 
“அந்த காயம் உடனே ஆறாது தானே… இப்போ தான் ஆற ஆரம்பிச்சு இருக்கு பார்ப்போம் எவ்வளவு சீக்கிரம் ஆறும்ன்னு”
 
“சரி இதுக்கு நீ பதில் சொல்லு” என்றவன் “என்னோட கல்யாணத்துக்கு நீ ஏன் வந்தே??”
 
‘சரியான கேள்வியை கேட்டுவிட்டானே’ என்று உள்ளம் படபடப்பானது அவளுக்கு. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் “அதான் உங்களுக்கே தெரியுமே, எங்கம்மாப்பா வேற கல்யாணத்துக்கு போனதுனால நான் இங்க வரவேண்டியதா போச்சு…”
 
“நம்ம ஊர்ல யார் வீட்டில விசேஷம்ன்னாலும் இப்படி தானே. வீட்டுக்கு ஒருத்தராச்சும் போய் அந்த கல்யாணத்துக்கு கலந்துக்குவோம் தானே…” என்றாள்.
 
“உங்க அம்மாவும் அப்பாவும் போன கல்யாண வீடு யாருக்கு சொந்தம்??”
 
“இதென்ன கேள்வி அவங்க எங்க குடும்பத்துக்கு சொந்தமானவங்க, யாருக்கு சொந்தம் எதுக்கு சொந்தம்ன்னு சம்மந்தா சம்மந்தமில்லாம என்ன கேள்வி இது…” என்று சிடுசிடுத்தாள்.
 
“நீ மறைக்கிற உன் அம்மா அப்பா போனது கதிரோட அப்பா வழி சொந்தத்துல நடந்த கல்யாணம். அன்னைக்கு நீ உனக்கு வேலையிருக்கு வரமுடியாதுன்னு தான் அவங்களை அந்த கல்யாணத்துக்கு அனுப்பி வைச்சே”
 
“அதை செஞ்ச நீ என் கல்யாணத்துக்கு மட்டும் ஏன் வந்தே??”
 
வெண்மதி வாயே திறக்கவில்லை இப்போது.
 
“சொல்லு மதி… நீ சொல்ற வரைக்கும் நான் விடப்போறதில்லை சொல்லு…”
 
“ஆமா வந்தேன், நீ யாரை கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு பார்க்க வந்தேன்… போதுமா… உன் மனசுல நான் இல்லாதப்பவும் என் மனசுல இருந்த நீ நல்லாயிருக்கணும்ன்னு நினைச்சேன்…”
 
“உன்னையும் நீ கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணையும் ஒண்ணா சேர்த்து பார்க்கணும்ன்னு ஒரு ஆசை அதான் வந்தேன் போதுமா”
 
“போதும் மதி… நான் கேட்டதுக்கு பதில் நீயே சொல்லிட்ட”
 
“என்… என்ன சொன்னேன்…”
 
“என்னைப் பார்க்க தான் வந்தேன்னு சொன்னல”
 
“அதுக்கு…”
 
“அப்பவும் உன் மனசுல நான் தான் இருந்திருக்கேன், இப்பவும் இருக்கேன், எப்பவும் இருப்பேன் சரி தானே” என்று சொல்லும் போதே அவன் குரல் இறங்கி ஒலித்தது.
 
வெண்மதியால் அங்கிருக்க முடியவில்லை சட்டென்று எழுந்து உள்ளே சென்றுவிட்டாள். அவள் பின்னோடே வந்த சிபிவர்மன் பின்னிருந்து மென்மையாய் அவளை அணைக்க உடலில் மெல்லிய அதிர்வு அவளுக்கு.
 
“விடுங்க…” என்று அவள் சொன்னது அவளுக்கே கேட்டிருக்கவில்லை.
 
“ப்ளீஸ் மதி… அன்னைக்கு நான் பண்ண தப்புக்கு இனியும் என்னை தண்டிக்கணுமா நீ… நம்ம வாழ்க்கை இப்படியே போகணுமா சொல்லு…”
 
“அன்னைக்கு எப்படியோ இன்னைக்கு என் மனசு முழுக்க நீ தான் இருக்க, நீ மட்டும் தான் இருக்க… நம்ம கல்யாணம் ஆகி இந்த ஏழெட்டு மாசமா உன்னை இப்படி பார்த்துக்கிட்டு மட்டும் தான் இருக்கேன்…”
 
‘இவன் என்ன சொல்ல வர்றான்’ என்று தான் பார்த்தாள் அவள். “இப்போ தான் கட்டியே பிடிக்கறேன்… எப்போ கிஸ் பண்ணப் போறேன்னு…”
 
“போதும் நிருந்துங்க… என்னமோ நீங்க எனக்கு முத்தமே கொடுக்காத மாதிரி புதுசா பேசிட்டு இருக்கீங்க…” என்றாள் திரும்பி அவனை நேருக்கு நேரே பார்த்தவாறே.
 
“சோ நீ அதை இப்பவும் மறக்கலை, அப்படித்தானே”
 
இதற்கு அவள் என்ன பதிலை சொல்லுவாள், அமைதியாய் தலை குனிந்தாள் அவள். ‘இவன் என்னவோ பேசி என்னை டைவர்ட் பண்ணப் பார்க்குறான்’ என்று மூளை எச்சரிக்கை மணி அடித்தது.
 
மனமோ அவன் இவ்வளவு விளக்கம் கொடுத்தும் இன்னமுமா நீ இறங்கவில்லை, பாவமில்லையா அவன் என்று அவனுக்காய் வக்காலத்து வாங்கியது.
 
மனதிற்கும் புத்திக்கும் இடையிலான போராட்டத்தில் மனம் கொஞ்சம் கொஞ்சமாக ஜெயித்துக் கொண்டிருந்தது.
 
“மறுபடியும் ஒரு டிரையல்” என்றவன் “டிரையல் எல்லாம் வேணாம்” என்று சொல்லி அவள் இடையோடு கைசேர்த்து அவளை நெருங்கி நின்றான்.
 
முகத்தோடு முகம் உரசும் நெருக்கம் இப்போது இருவருக்குள்ளும். அந்த நெருக்கத்தின் இடைவெளியை அவனிதழ்கள் அவளிதழ்களின் உறவாடி அடியோடு குறைத்தது.
 
அவள் விழிகளிரண்டும் மூடிக்கொள்ள மெதுவாய் அவளை விடுவித்தவன் இப்போது அவள் இமைகளின் மீது தன் முத்திரையை பதித்தான். முகம் முழுவதும் அவன் முத்திரைகள் பதிக்க அதைத்தாளாதவள் அவன் மேலே சாய்ந்து கொண்டாள்.
 
இது என்னிருப்பிடம் என்ற உணர்வு எழுந்ததில் இன்னமும் உரிமையாய் அவன் நெஞ்சின் மீது சாய்ந்து அவனை அணைத்துக் கொண்டாளவள். அவளின் மனதில் இப்போது எவ்வித குழப்பமுமில்லை. மனம் அமைதியடைந்துவிட்டது.
 
மெதுவாய் நிமிர்ந்து அவன் முகம் பார்க்க அது இப்போது வெகு தீவிரமாய் மாறியிருந்தது.
 
அவனுக்குள் அடுத்தொரு கேள்வி அதை கேட்கலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தான் அவன். ‘மனதிலேயே வைத்து குழம்புவதை விட அவளிடமே கேட்டுவிடலாம்’ என்று எண்ணினான்.
 
‘ஹ்ம்ம்’ என்று இழுத்து ஆழ்ந்த பெருமூச்சை வெளியேற்றியவன் “வெண்மதி கடைசியா ஒண்ணு உன்கிட்ட கேட்கணும்…”
 
“கேளுங்க??”
 
“வானதி யாரோட குழந்தை??” என்று அவன் கேட்டதும் தூக்கிவாரிப்போட்டது அவளுக்கு. விழிகள் விரிய அவனையே பார்த்தாள்.
 

Advertisement