Advertisement

 
21
 
இன்று
————
 
“விடு என்னை… இப்போ மட்டும் என்ன வந்தது உனக்கு…” என்று சொல்லி வெண்மதி சிபியை தன்னிடமிருந்து விலக்கப் பார்க்க அவனின் அணைப்போ இன்னமும் இறுகியது.
 
“இப்போ விடப்போறியா இல்லையா… பாரு நான் கத்தி ஊரை கூட்டிருவேன்…” என்று மிரட்டினாள்.
 
“கூட்டு கூட்டு ஒரே வந்து பார்க்கட்டும் நம்ம ரொமான்ஸ் பண்றதை” என்றான் அவன் கூலாக.
 
நொடிக்கு நொடி அவனின் அணைப்பு கூட கூட அவளால் வலி பொறுக்க முடியாமல் போனது. “விடுடா என்னால முடியலை… வலிக்குது” என்று சொல்லியேவிட்டாள்.
 
அவன் அப்போதும் விடுவேணா என்றிருந்தவன் அணைப்பை மட்டும் இளக்கியிருந்தான் அவ்வளவே. நல்லவேளையாக செல்வியின் குரல் அருகே கேட்க வெண்மதிக்கு இப்போது தான் நிம்மதி.
 
“அத்தை…” என்று கத்தியே அழைத்துவிட்டாள் அவரை.
 
“என்ன??” என்றவாறே அவர் வர சிபி சட்டென்று அவளை விடுவித்திருந்தான் இப்போது.
 
“என்னை யாரு கூப்பிட்டது??”
 
‘அத்தைன்னு உன் புள்ளையா கூப்பிடுவான்…’ என்று மனதிற்குள் அவருக்கு கவுண்ட்டர் கொடுத்தாலும் வெளியில் லேசாய் சிரித்து “நான் தான் அத்தை கூப்பிட்டேன்” என்றாள் வெண்மதி.
 
“எதுக்கு??”
 
“உங்க பி…” என்று ஆரம்பித்தவள் “எ… எலி அத்தை எலி தொல்லை தாங்கலை… அ… அதான் உங்களை கூப்பிட்டேன்…” என்றாள்.
 
“எலித்தொல்லை இருக்கத் தான் செய்யும், அதெல்லாம் பொருக்காம நீ என்ன பொண்ணோ??” என்றார் அவர் இருபொருள்பட!!
 
வெண்மதிக்கு புரிந்து போனது செல்விக்கு அங்கு நடந்தது தெரிந்திருக்கிறது என்று. சிபியோ அவளைப் பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தான்.
“நைட் தோப்புல இருக்க சின்ன வீட்டை ரெடி பண்ணச்சொல்லி இருக்கேன். அங்க எலியை அடிச்சாலும் புடிச்சாலும் எனக்கொண்ணுமில்லை. அங்க போய்டுங்க இன்னைக்கு…”
 
“ஏன்னா இங்க ஜெய் வருவான் இன்னைக்கு… ரொம்ப நாள் கழிச்சு வர்றான், அவன் பொண்டாட்டி புள்ளையோட சந்தோசமா இருக்க வேணாமா…”
 
“நீங்க இருந்தா அவனுக்கு தொல்லையா இருக்கும்… வானதி என் கூடவே இருக்கட்டும் நீங்க மட்டுமா போங்க…” என்று முடித்தவரை முடிந்த அளவிற்கு முறைத்தாள் வெண்மதி.
 
நீயெல்லாம் எனக்கு எம்மாத்திரம் என்ற பார்வை செல்வியிடத்தில். “அத்தை…” என்று பல்லைக்கடித்தாள் அவள்.
 
“போ… போயி சொன்னதை செய்… சும்மா மூலையில உட்கார்ந்து கண்ணைக் கசக்கிட்டு இருந்தா ஆச்சா… பேசினாத்தானே எல்லாம் சரியாகும்… சொன்னா கேளு, புரியுதா…” என்றார் மருமகளை பார்த்து.
 
அதட்டுவது போலத்தான் இருந்தது ஆனால் அதில் அக்கறையே அதிகமிருந்ததை உணர்ந்தாள் வெண்மதி.
 
என்ன பேசணும் எதுக்காக பேசணும் என்ற யோசனை இருந்தாலும் அவர் சொன்னதை செய்யத் தோன்றியது அவளுக்கு.
 
“இப்போவே கிளம்புங்க, இதுல சோறும் குழம்பும் இருக்கு… பசிச்சா சாப்பிடுங்க, எதுவா இருந்தாலும் பேசி நல்ல முடிவுக்கு வாங்க…” என்றார் அவளிடத்தில்.
 
மகனை தனியே அழைத்து “வர்மா உனக்கும் தான்யா சொல்றேன். உன் மனசுல என்ன இருக்கு, இருந்துச்சுன்னு தெளிவா பேசு, உம் மேல தப்பிருந்தா அவகிட்ட மன்னிப்பு கேட்க எல்லாம் யோசிக்காத… சட்டுன்னு கால்ல விழுந்துடு…”
 
“ம்மா… என்னம்மா உன் புள்ளைய போய் கால்ல விழச் சொல்றே??”
 
“விழுந்தா என்ன தப்புங்கறேன், உங்கப்பாரு செய்யாததா…” என்று அவர் போகிறபோக்கில் சொல்லிச் சென்றார்.
 
உண்மையிலேயே பசுங்கிளி அப்படியெல்லாம் அவரிடம் மன்னிப்பு கேட்டதில்லை. செல்வி வேண்டுமென்று தான் சிபிக்கு அப்படிச் சொன்னார்.
 
எவ்வளவு சமாதானங்கள் வெளிப்படையாக செய்தாலும் அதில் திருப்தியுராதவளாய் வெண்மதி இருந்த போதே அவருக்கு ஓரளவு ஊகித்தார்.
 
மகன் ஏதோவொரு விதத்தில் வெண்மதியின் தன்மானத்தை சீண்டியிருக்கிறான் என்று அவருக்கு புரிந்தது. என்னவென்று அது தெரியாத போதும் அவரால் உணர முடிந்தது.
 
பெண்கள் சமாதானங்களையும் சாக்குகளையும் பெரிதும் விரும்புவதில்லை. மாறாய் உண்மையை சொல்லி மன்னிப்பை யாசகமாக்கினால் அவர்களே இறங்கி வந்துவிடுவார். அன்பு ஒன்றே அவர்களை அடக்கும் அடக்கியாளும் ஆயுதமென்பது பல ஆண்கள் அறியாத ஒன்று.
 
திருமணத்திற்கு முன்பு வரை அதை தாராளமாய் அள்ளி வழங்கும் அவர்கள், தேவைப்படும் சமயத்தில் அதை கொடுக்காமல் விடுவதே பல சண்டைகளுக்கு காரணம் என்பதை என்று அவர்கள் புரிவரோ.
 
இங்கு செல்வி தன் மகனை வெண்மதியின் காலில் விழுந்தே ஆக வேண்டும் என்று சொன்னாலும் அதன் உள்ளர்த்தம் அந்த அளவிற்கு நீ இறங்கி வரவேண்டும் என்பதே!!
 
இருவருமாய் தென்னந்தோப்பில் காய்களை இறக்கி வைக்கும் அந்த வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தனர். காலையில் தான் அவ்வளவு காய்கள் அங்கே இறங்கி வைத்திருந்தான் சிபி.
 
இப்போதோ அங்கு எதுவுமேயில்லை, துடைத்து வைக்கப்பட்டிருந்தது. புதிதாய் ஒரு கயிற்று கட்டிலும் பாயும் தலையணையும் அங்கிருந்தது.
 
வெண்மதிக்கு தயக்கமாயிருந்தது. அது நேரம் வரை ஏதோ செல்வி சொல்கிறார் என்று கிளம்பிவிட்டாள். இப்போது படபடப்பாய் வந்தது.
 
கிளம்பும் தருவாயில் உறங்கிக் கொண்டிருந்த வானதியை தன்னுடனே அழைத்துச் செல்ல எண்ணி அவள் தோளில் கிடத்தியிருக்க செல்வி வந்து அவளைத் தூக்கிக் கொண்டார்.
 
“பாப்பா இங்க இருக்கட்டும்…”
 
“இல்லை அத்தை… அது…”
 
“நான் நல்லா பார்த்துக்க மாட்டேன்னு உனக்கு தோணிச்சுன்னா நீயே கூட்டிட்டு போ…” என்று ஒரே போடாய் போட கப்சிப்பென்று தான் கிளம்பினாள் அவள்.
கையில் இருந்த கூடையை கீழே வைத்தவள் என்ன நினைத்தாலோ அவனிடம் “சாப்பிடறீங்களா” என்றாள்.
 
“இப்போ வேணாம்…”
 
‘வேணாம்னா போ’ என்று சொல்லிக்கொண்டு அவள் தட்டை எடுத்து வைத்துக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள்.
 
‘அத்தைன்னா அத்தை தான், மணக்க மணக்க நாட்டு கோழி குழம்பு வைச்சு, கறியை வறுத்தும் வேற கொடுத்து விட்டிருக்காங்க… என்னா ருசி என்னா ருசி’ என்று சப்புக்கொட்டிக் கொண்டே சாப்பிட்டாள் வெண்மதி.
 
சிபி முதலில் அவளை கவனிக்கவில்லை, அவனுக்கு சாப்பாடு வேண்டாம் என்றதும் அவனருகில் வந்து பேசுவாள் என்று அவன் எதிர்பார்த்திருக்க அவளோ தட்டில் உணவை வைத்து சாப்பிடுவாள் என்று எண்ணவில்லை.
 
கட்டிலில் அமர்ந்திருந்தவன் அங்கிருந்த சன்னலை திறக்க எழும் போது தான் அவளை பார்த்தான். ‘ராட்சசி ஒத்தையா உட்கார்ந்து மொத்தமா கொட்டிக்கறாளே…’
 
‘நான் ஆசையா அவ கூட பேச காத்திட்டு இருக்கேன், இவ பாட்டுக்கு சாப்பிட்டுக்கிட்டு இருக்கா… கொஞ்சமாச்சும் என்னையும் சாப்பிட சொல்லணும்ன்னு தோணுதா பாரு’ என்று திட்டினான் அவளை.
 
‘இனிமே வெயிட் பண்ணுறது எல்லாம் வேலைக்கு ஆகாதுடா… நீயே வெட்கத்தைவிட்டு அவகிட்ட கேட்டிரு, இல்லையோ உனக்கு வேணுங்கறதை எடுத்துக்கோ’ என்று மனசாட்சி அறிவுரை சொல்ல அவள் முன்னே சென்று நின்றான்.
 
அவள் அதெல்லாம் கண்டுக்கொள்ளாது சாப்பிடுவதிலே குறியாய் இருக்க சட்டென்று அவள் கையை பிடித்து சாப்பிட விடாமல் தடுத்தான்.
 
“என்ன வேணும் உனக்கு??”
 
“இதான்…” என்றுவிட்டு அவள் கையில் எடுத்து வைத்திருந்த உணவை அப்படியே அவன் வாய்க்கு கொண்டு சென்றான்.
 
உணவை மட்டுமல்லாது அவள் விரலையும் அவன் ருசி பார்க்க உடலுக்குள் சிலிர்ப்பொன்று ஓட, சட்டென்று சுதாரித்தவள் “விடு” என்று கையை உதறினாள்.
 
“சாப்பாடு வேணும்ன்னா சாப்பிட வேண்டியது தானே” என்று முறைத்தாள்.
 
“இது மாதிரி ருசி வராதே” என்றான் அவன் விடாமல்.
 
“நீயே சாப்பிடு…” என்று பாதியிலேயே எழுந்துவிட்டாள் அவள். அதற்காகவெல்லாம் அவன் கவலையே படவில்லை. அவள் மிச்சம் வைத்திருந்ததை முழுதாய் சாப்பிட்டு தான் எழுந்தான்.
 
வெண்மதிக்கு அங்கு இருப்பே கொள்ளவில்லை, செல்வி சொன்னார் என்று இங்கு வந்திருக்கக்கூடாது என்றே தோன்றியது.
 
வாசலில் சென்று அமர்ந்துக்கொண்டாள். நிலவின் ஒளியில் தென்னை மரங்களின் நிழலும் அங்கு வீசிய மெல்லிய காற்றினால் கீற்றுகள் அசைந்தாடும் அழகும் மனதில் பெரும் அமைதியை விதைப்பதாய்!!
 
வானில் இருந்த வெண்மதி இன்னும் சில தினங்களில் முழுமதி ஆகிடுவிடும். வாசலில் அமர்ந்திருந்த வெண்மதியின் மனதோ இன்னமும் அமாவாசை இருட்டாய் தானிருந்தது.
 
அதை முழுமதியாக்கிடவே அவளருகில் சத்தமில்லாமல் வந்து அமர்ந்தான் சிபிவர்மன்.
அவன் இருப்பை உணர்ந்து அவள் எழ முயற்சி செய்ய அவளின் இடக்கரம் இப்போது அவனின் வலக்கரத்தினுள் அடங்கியிருந்தது. அதை விடுவிக்க அவள் எடுத்த முயற்சி வீணானது.
 
“என்னைவிட்டு எங்க போக பாக்குறே??” என்றான் அவள் புறம் திரும்பாமலே.
 
“நான் போகலை… விட்டுட்டு போனவங்க இதை கேட்கக்கூடாது” என்று சூடாகவே வந்து விழுந்தது வார்த்தைகள்.
 
“என்னைப்பாரு மதி??” என்றவன் இப்போது அவளின் புறம் திரும்பியிருந்தான். அவளின் பார்வையோ தூரத்தே வெறித்திருந்தது.
 
அவன் சொல்லியும் முகம் திருப்பாதிருந்தவளின் தாடையை மெதுவாய் பிடித்து தன் புறம் திருப்பினான்.
 
“அப்படியே போயிட்டேன்னு தான் இப்போ வரைக்கும் நினைச்சுட்டு இருக்கியா??” என்றான் அவள் கண்களை ஆழ ஊன்றி.
 
இப்போது அவள் விழிகளில் ஓர் அலைப்புருதல் ‘இதற்கென்ன அர்த்தம், நான் எதுவும் தவறாய் புரிந்து கொண்டேனா’
 
அவளின் இதழ்கள் எழுப்பாத கேள்வியை இங்குமங்கும் ஓடிய அந்த கருமணிகள் கேட்க “நீ தான் என் கூட பேசவே மாட்டேங்குறியே, நான் பேசுறதை முழுசா இன்னைக்காச்சும் கேப்பியா வெண்மதி…” என்றான் இன்னமும் அவள் விழிகளில் இருந்து பார்வையை அகற்றாதவனாக.
 
அவன் விரல்களும் அவள் தாடையை இன்னமும் பிடித்து தானிருந்தது. அவளின் இமையிரண்டும் தாழ்ந்து அவனுக்கு பதில் சொல்லிற்று இப்போதும் சொல் என்பது போல.
 
ஆனால் அவனுக்கு அது மட்டும் தேவையாயிருக்கவில்லை. நீ வாய் திறந்தால் தான் நான் பேசுவேன் என்பது போலிருந்தான் அவன்.
அவனிடத்தில் இருந்து எந்த பதிலும் இல்லாது போக அவள் விரல் கொண்டு தாடையை பிடித்திருந்த அவன் விரல்களை விலக்கப் பார்த்தாள்.
 
“ஏன் மதி நான் என்ன சொல்ல வர்றேன்னு கூட உனக்கு கேட்க விருப்பமில்லையா??”
 
“சொல்லணும்ன்னா இந்நேரம் நீங்க சொல்லியிருக்கலாமே…”
 
“நான் சொல்லணும்ன்னு உன் வாய் சொல்லலியே…”
 
அவளுக்கு அவன் நேரம் கடத்துவதாய் பட்டது. மீண்டும் எழ முயற்சி செய்தாள்.
 
“அவ்வளவு என்ன பிடிவாதம் மதி… நான் ஒரு தரம் தான் தப்பு செஞ்சேன், அதுக்காக இவ்வளவு பண்ணுறியே நீ”

Advertisement