Advertisement

20
 
சிபி அவன் காதலை சொன்ன விதத்தில் வெண்மதிக்கு ஜுரமே வந்துவிட்டது. இரண்டு நாளாகிற்று அவள் பள்ளி சென்று. இன்னுமும் சிபியே அவள் கண் முன் வந்து நின்றான். ஓரிரு நிமிடத்தில் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது.
 
“உன் பேரை கேட்டேன்…” என்றான் சிபி அழுத்தி.
 
“வெ… வெண்மதி…”
 
“நல்ல பேர்”
 
“பிளஸ் டூ தானே??”
 
“பிளஸ் ஒன்”
 
“ஹ்ம்ம் பரவாயில்லை எதுவா இருந்தா என்ன…”
 
“வெண்மதி ஐ லவ் யூ…” என்றவன் சட்டென்று அவளை கைப்பிடித்திழுத்து அவள் கன்னத்தில் முத்தம் வைத்து சொல்லியிருந்தான் அதை.
 
சாதாரணமாய் அவன் சொல்லியிருந்தால் அது அவள் மனதில் பதிந்திருக்காதோ என்னவோ!! நடந்து முடிந்த நிகழ்வில் அவளால் அதை மறக்க முடியும் என்று தோன்றவில்லை.
 
வீட்டிற்கு சென்றதும் அன்னையிடம் சொல்ல வேண்டும் என்று எண்ணியிருந்தவள், விஷேச வீடு ஒன்றுக்கு சென்றுவிட்டு இரவு தாமதமாக வந்த அன்னையை தொந்திரவு செய்ய விரும்பவில்லை.
 
காலையில் சொல்லிக்கொள்ளலாம் என்றவள் இருக்க அவளால் மறுநாள் எழ முடிந்தால் தானே… இரவெல்லாம் சிபியின் செயலே அவளின் கண் முன்னே ஓடியது.
 
தூக்கம் தூரப் போனது, பயம், குழப்பம் போன்ற உணர்வுகள் ஆட்க்கொண்டன அவளை. விடியும் தருவாயில் உடல் சூடு கண்டு ஜுரம் கொதிக்க ஆரம்பித்தது.
 
எப்போதும் மயக்கமான ஒரு நிலையே அவளுக்கு. இரண்டு நாட்களுக்கு பின்னே தான் முழுதான விழிப்பு நிலை. மறுநாளில் இருந்து பள்ளிக்கு செல்லவாரம்பித்தாள்.
 
அப்போதும் சிபி வருவானோ என்ற பயம் அவளுக்கு. சிபியின் நண்பர்கள் பேருந்தில் ஏறுவதை கண்டாள், அங்கு நின்றிருந்த சிபி ஏறாமல் இருந்தது அவளுக்கு என்ன மாதிரியான உணர்வை கொடுத்தது என்பது இன்று வரையிலும் அவளுக்கு புரியவில்லை.
 
இரண்டு நாட்கள் அவளுக்கு போக்கு காட்டிவிட்டு மூன்றாம் நாள் அவன் அந்த பேருந்தில் ஏறினான். ‘நீ எனக்கு தண்ணி காட்டுறியா பார்டி நான் உனக்கு தண்ணி காட்டிட்டிடேன்ல… என்னை தேட வைச்சுட்டேன்ல’ என்று அவன் தன்னை குறித்து பெருமை பட்டுக்கொண்டான்.
 
வெண்மதி இரண்டு நாட்களாய் வராமல் இருந்ததை அவள் வேண்டுமென்றே செய்ததாகவே அவன் எண்ணியிருந்தான். அதற்கு பதிலாய் தான் அடுத்த இரண்டு நாட்கள் அவன் அவள் கண்ணில்பட்டும் நெருங்கி வர முயலவில்லை.
 
அவளை ஒரு பார்வை கூட பார்க்கவில்லை அவன். இன்று பஸ்சில் ஏறியவனின் பார்வை அவளையே தான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தது.
 
அன்புவும் வேணுவும் ஏதோ தங்களுக்குள் கமென்ட் அடித்து சிரித்துக் கொண்டிருந்தனர். அவர்களின் பேச்சு கடைசி சீட்டில் அமர்ந்திருந்த பெண்களை பற்றியது என்பதை உணர்ந்ததும் அவன் காதுகளை தீட்டினான் சிபி.
 
“டேய் வேணு அந்தா லாஸ்ட் சீட்ல மூணு பொண்ணுங்க உட்கார்ந்து இருக்கே…”
 
“ஆமாடா அந்த ஒல்லிக்குச்சி மதி, சப்ப மூக்கி பேச்சி, அப்புறம் நம்ம தயாவோட தங்கச்சி வெண்டைக்காய் விமலா…” என்று அன்பு சொல்லிக்கொண்டே செல்ல சிபிக்கு லேசாய் கோபம் எட்டிப்பார்த்தது.
 
அவன் திரும்பி அருகே இருந்த நண்பர்களை முறைத்தான்.
 
“டேய் மச்சான் இவன் எதுக்குடா எப்போ பார்த்தாலும் நம்பளையே முறைச்சுக்கிட்டு இருக்கான்”
 
“இப்போ எதுக்கு அந்த பொண்ணுங்க பத்தி பேச்சு…” என்றான் சிபிவர்மன்.
 
“அதில்லை வர்மா அந்த தயா இருக்கான்ல அவனை நேத்து பார்த்தேன். நம்ம செட்ல எவனோ அந்த ஒல்லிக்குச்சி மக்கு மதிக்கு ஐ லவ் யூ சொல்லியிருப்பான் போல…”
 
“அது யாரு எவருன்னு என்ட விசாரிச்சான். நம்ம குரூப்ல நமக்கு தெரியாம யாரு அப்படி இருக்கா நீயே சொல்லு. வேணுக்கு வேற ஆளிருக்கு. நானெல்லாம் இப்படி சப்பை பிகரை போய் பார்ப்பேனா சொல்லு…”
 
“நீ கேட்கவே வேணாம். உனக்கு இந்த லவ்வெல்லாம் செட்டே ஆகாது… அதும் இதுல ஒண்ணு கூட உன் பக்கத்துலவே நிற்க முடியாது… கடைசியா இருக்கறது நம்ம கூடவே வர்ற சிவா தான்…”
 
“அவனையும் கூப்பிட்டு விசாரிச்சுட்டேன் அவனும் இல்லைன்னு சொல்லிட்டான். எனக்கென்னமோ மாப்ள அந்த பொண்ணு சும்மா சொல்லியிருக்கும்ன்னு… நீயே சொல்லு மாப்பு அதை பார்த்து எவனாச்சும் ஐ லவ் யூ சொல்வானா…” என்று அவன் பேசவும் சிபி வாயே திறக்கவில்லை.
 
எங்கே அவன் பேசினால் நண்பர்கள் மேலும் அவனை கலாய்ப்பார்கள் என்று எண்ணி அவன் அமைதியாகிப் போனான். அவர்கள் பேசப்பேச தான் என்னவோ பெரிய தவறை செய்துவிட்டோம் என்ற உணர்வு அவனுக்குள்.
 
அதன்பின் அவன் பார்வை வெண்மதியை தீண்டவேயில்லை. ஆனால் வெண்மதியின் பார்வையோ இப்போது அவனையே தான் சுற்றி வந்தது.
 
இது காதல் என்றெல்லாம் அவள் நினைக்கவில்லை. அவனை அவளுக்கு பிடித்திருந்தது அந்த அளவில் தான் இருந்தாள். சிபி விலக விலக வெண்மதியின் நினைவில் அவன் அவளை நெருங்கிக் கொண்டிருந்தான்.
 
சிபிக்கும் அவளது பார்வை புரிந்து போனது. அய்யோ இவளிடம் வேறு தேவையில்லாமல் பேசி ஆசையை வளர்த்துவிட்டோமோ என்றே எண்ணினான்.
 
இதை எப்படி சரி செய்ய என்ற யோசனை அவனுக்கு இப்போது. நண்பர்கள் இல்லாத நேரமாய் பார்த்து தான் அவளிடத்தில் பேச முடியும் என்று அதற்கான தருணத்திற்காய் காத்திருந்தான்.
 
அப்படி ஓர் நாளும் விரைவாகவே வந்திருந்தது. நடந்ததில் அவனுக்கு ஓர் நன்மை இருந்தது. அதை வைத்தே இதிலிருந்து அவன் மீள முடிவு செய்துவிட்டான் அவன்.
 
அவளின் பள்ளி வரும் நிறுத்தத்திற்கு முன்னமே சிபியின் கல்லூரி நிறுத்தம் வந்துவிடும். முதலில் அவன் தான் இறங்குவான், இன்றோ ஒரு முடிவுடன் அவன் இறங்காமல் இருந்தான்.
அன்பு அன்று விடுப்பெடுத்திருந்தான். வேணு மட்டுமே உடனிருக்க அவனை சமாளிப்பது ஒன்றும் சிபிக்கு கஷ்டமாயில்லை.
 
தனக்கு தேனியில் ஒரு சிறு வேலை இருப்பதாகவும் அதை முடித்துவிட்டு கல்லூரிக்கு வந்துவிடுவதாகவும் சொல்லி அவனை கல்லூரி பேருந்து நிறுத்தத்திலேயே இறங்கச் சொல்லி வழியனுப்பி வைத்திருந்தான்.
 
வெண்மதிக்கு புரிந்து போனது சிபி தன்னிடம் பேச விரும்புகிறான் என்று. பேச்சியை முன்னே போகச்சொல்லிவிட்டு அவள் பின்தங்கி நடந்து வந்தாள்.
 
சிபியும் வேகமாய் வந்து அவளுடன் இணைந்துக் கொண்டான். “தேங்க்ஸ்…”
 
“எதுக்கு??” என்றாள்.
 
“என்னை புரிஞ்சுக்கிட்டதுக்கு…”
 
அவளிடம் பேச வேண்டும் என்று எண்ணியவன் எப்படி தொடங்க என்று அமைதியாயிருக்க பேசியதோ வெண்மதி. ஆம் வெண்மதியே தான்!!
 
இப்போதெல்லாம் சிபியின் பார்வை அவளை தவிர்ப்பதை கண்டிருந்தவளால் தாங்க முடியாது போயிற்று.
 
அவன் கேட்ட அன்று அவனுக்கு சரியென்றும் சொல்லவில்லை, இல்லையென்றும் சொல்லவில்லை.
அதனால் ஒரு வேளை அவன் விலகிச் செல்கிறானோ என்றே எண்ணினாள் அவள்.
 
அவள் மனதில் லேசுபாசாய் ஏற்பட்டிருந்த சலனம் அவனிடத்தில் பேசச்சொல்லி தூண்டியது. அதன் பொருட்டே இதோ அவன் முன் நிற்கிறாள் பேசுவதற்காய்.
 
பேச வேண்டும் என்று சொன்னவன் அவன் தான் ஆனால் முதலில் பேசியது அவளே!! அவன் தயங்கிக் கொண்டிருந்த நொடி இவள் பேசி முடித்திருக்க அவன் தான் இப்போது வாயடைத்து போயிருந்தான்.
 
அவள் கேட்டது இது தான் “என்னை நிஜமாவே உங்களுக்கு பிடிச்சிருக்கு தானே!!” என்று சொன்ன போது அவள் கண்களில் தோன்றிய அந்த மின்னலின் ஒளி அவன் என்றுமே மறக்க முடியாததாய்.
 
சிபி பதிலொன்றும் சொல்லவில்லை அப்படியே நின்றுவிட்டான். “ஆமா நீங்க ஏதோ பேசணும்ன்னு வந்தீங்களே?? என்ன பேசணும் உங்களுக்கு என்கிட்ட??” என்று நேரடியாகவே விஷயத்திற்கு வந்துவிட்டாள் வெண்மதி.
 
“அது… அது வந்து…” என்றவன் மீண்டும் அமைதியாகிவிட்டான். அவன் மனமோ ‘இந்த காதலெல்லாம் உனக்கும் சரி உன் குடும்பத்திற்கும் சரி, எப்போதுமே ஒத்துவராது’ என்றது.
 
‘இது தான் தக்க தருணம் அவளிடம் பேசிவிடு’ என்று மனம் உந்த “நீ கேட்டதுக்கு இப்போ என்ன பதில் சொல்றதுன்னு எனக்கு தெரியலை…”
 
“ஏன்னா நான் அன்னைக்கு அப்படி நடந்துக்கிட்டதுக்கு உன்கிட்ட சாரி கேட்கத்தான் வந்தேன் இப்போ… ரொம்ப ரொம்ப சாரி வெண்மதி… ப்ளீஸ் மன்னிச்சுடு என்னை… தேவையில்லாம நானும் குழம்பி உன்னையும் குழப்பிட்டேன்…”
 
“உனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்திருக்கும்ன்னு எனக்கு புரியுது… லவ்ன்னு சொல்லி உன்னை கஷ்டப்படுத்த மாட்டேன் இனிமே, சாரி வெண்மதி. நாம இனிமே பிரண்ட்ஸ் ஓகேவா…” என்று அவன் கைக்கொடுக்க வெண்மதி அவனை பார்த்த பார்வையில் என்ன இருந்தது என்று அவனுக்கு புரியவில்லை.
 
வெண்மதிக்கு அதுவரையில் மனதில் இருந்த உற்சாகம் மொத்தமும் வடிந்து போனது. மிக்க அவமானமாய் உணர்ந்தாள் அந்நொடி.
 
அவளாகவே சென்று அவனிடம் அவளை பிடித்திருக்கிறதா என்று கேட்டிருக்கிறாளே!! அவன் அவளைப்பற்றி இப்போது என்ன நினைத்திருப்பான் என்று எண்ணியது அவள் மனம்.
 
உள்ளுக்குள் மொத்தமாய் வெறுத்து போனது அவளுக்கு. அதற்கு மேல் அங்கிருக்க அவளுக்கு பிடிக்கவில்லை. ஒன்றும் சொல்லாமல் நகர்ந்துவிட்டாள்.
 
பின்னாலேயே சிபியின் குரல் “சாரி” என்பதும் “இனிமே நாம நல்ல பிரண்ட்ஸ்” என்று சொல்வதும் காதில் விழுந்தும் விழாதது போலவே சென்றுவிட்டாள்.
 
அன்றைய நிகழ்விற்கு பின் அவளை எப்போது வழியில் கண்டாலும் மீண்டும் அவளிடம் பிரண்ட்ஸ் என்று கை நீட்டி நிற்கும் அவன் செயலில் ஆத்திரம் தான் வந்தது அவளுக்கு.
 
அவன் செய்து வைத்த செயலின் விளைவால் அவள் மனதிலும் லேசாய் சலனம் எட்டிப்பார்க்க தொடங்கியிருந்தது.
 
அவ்வப்போது வந்து சிபி அப்படி பேசவும் அவளுக்குள் எதுவோ உடைந்து போனது. ஏமாற்றமாக இருந்தது, அவமானமாக உணர்ந்தாள் அக்கணம். அதை அவனிடம் காட்டிக்கொள்ளும் எண்ணமில்லை.
 
மனதில் ஒரே விஷயம் தான் அவளுக்கு இன்று வரை உறுத்திக் கொண்டிருக்கிறது. அது வேறொன்றுமல்ல எது கொடுத்த தைரியத்தில் அவன் அவளை முத்தமிட்டான் என்பதே அது.
 
இன்றளவிலும் அவளால் அதை மறக்கவே முடியவில்லை. பள்ளி முடிந்து அவள் நர்சிங்கில் சேர்ந்து படித்துக் கொண்டிருக்கும் தருவாயில் தான் கதிர்வேலனுடனான திருமண பேச்சு வீட்டில் எழுந்தது. சிபியின் நினைவில் திருமணமே வேண்டாம் என்றிருந்தவள் கதிர்வேலனின் பேச்சிற்கு பிறகு அவனை மணக்க தீர்மானித்தாள்.
ஒன்றுமே இல்லாத தன் காதலை நினைத்து தான் இனியும் உருகுவது வீண் என்று அவளுக்கு புரிந்து போனது. சிபி அவளிடத்தில் காதலை சொன்ன தருணத்தில் அவள் அதை பெரிதாய் உணர்ந்திருக்கவில்லை.
 
அந்த வயதின் ஈர்ப்பு மட்டுமே இருந்தது, சிபி சொன்னவிதம் எல்லாம் மனதில் பதிந்து அவன் மீதான ஈர்ப்பை அதிகரித்திருந்தது.
 
என்று அவன் அவளைவிட்டு விலகிச் சென்றானோ அன்றே அவள் மனதில் ஆழ இறங்கி அமர்ந்திருந்தான். நாட்கள் செல்ல செல்ல அவளுக்கு அவன் மீதான ஈர்ப்பு என்பது காதலாகிப் போயிருந்தது.
 
தன்னை வேண்டாமென்று போனவனின் மீது கோபமும் வெறுப்பும் இருந்தாலும் அவன் நினைவுகளை அவளுக்கு பிடித்து தானிருந்தது.
 
அந்த நினைவுகளுடனே இருந்தவளின் முன் இதெல்லாம் என்ன காதல் இது தான் உண்மையான காதலும் நேசமும் என்று சொல்லாமல் சொல்வது போலிருந்தது கதிர்வேலன் பார்கவியின் மீது வைத்திருந்த அன்பு.
 
என்னுடையது எல்லாம் காதலே அல்ல என்று அந்த நிமிடம் தான் முடிவு செய்தாள். உண்மையான நேசத்திற்கும் தூய்மையான அன்பிற்கும் துணை நிற்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் கதிரின் வேண்டுகோளுக்கு அவள் உடனே சம்மதம் தெரிவித்தாள்.
இவளின் எண்ணங்கள் இப்படியிருக்க சிபிக்கு அவளிடம் வேண்டாம் என்று சொன்னது ஏதோ பெரும் நிம்மதியாய் தோன்றியது அந்த கணம்.
 
ஆனால் உண்மையிலேயே அந்த நொடிக்கு பின் தான் அவன் நெஞ்சில் பாரம் குடி கொண்டது என்றே சொல்லலாம்.
 
அவளிடம் பல முறை பிரண்ட்ஸ் என்று கையை நீட்டி சொல்லியாயிற்று. அவள் ஒரு முறை கூட பதிலுக்கு இவன் கைப்பிடித்திருக்கவில்லை. அது அவனுக்கு பெரும் உறுத்தலாய் இருந்தது.
 
அன்று அவள் அவனிடம் “என்னை நிஜமாவே உங்களுக்கு பிடிச்சிருக்கு தானே!!” என்றது அவன் நினைவைவிட்டு நீங்காது போனது.
 
‘ஒரு வேளை அவள் தன் காதலை என்னிடம் சொல்லத்தான் வந்திருப்பாளோ’ என்ற எண்ணம் இப்போது தோன்றியது அவனுக்கு.
 
‘பிடிச்சிருக்கு தானே’ என்று கேட்டபோது சந்தேகமாய் கேட்பது போல இருந்தது. இன்று யோசிக்கும் போது அது அப்படியில்லை என்றே நினைக்கத் தோன்றியது அவனுக்கு.
 
அன்றைய நாளுக்குப்பின் வெண்மதி இவனை கண்டுக்கொள்ளக்கூட இல்லை. பள்ளிப்படிப்பு முடிந்ததுமே தேனியில் நர்சிங் படிக்கச் சென்றுவிட்டாள்.
 
வீட்டிலிருந்து படிக்க அப்போது அவளுக்கு விருப்பமிருந்திருக்கவில்லை. ஹாஸ்டலில் தான் தங்கி படித்தாள். வாரயிறுதி நாட்களில் மட்டுமே வீட்டிற்கு வருவாள்.
 
அதனால் அவளை பார்ப்பதும் அரிதாகிப் போனது அவனுக்கு. ஒரு வகையில் அவன் சொன்னது சரியே என்றும் தோன்றியது அவனுக்கு. ஆனால் கடைசியாய் அன்று அவள் பார்த்த பார்வை ஏனோ இப்போதும் அவன் நினைவைவிட்டு அகலாதிருந்தது.
 
அய்யனார்புரத்தில் இருந்த அவளின் வீட்டினர் கதிரின் சொந்த வீடு இருந்த சின்னமனூருக்கு குடிபெயர்ந்தனர். அதன் பின் அவ்வப்போது அவளை பார்த்துக் கொண்டு தானிருந்தான் சிபிவர்மன். வீட்டில் அவனுக்கு திருமணப்பேச்சு எடுத்தால் வெண்மதியை தான் கட்டுவது என்று மனதிற்குள் தீர்மானித்திருந்தான்.
 
ஏனோ தான் அவளுக்கு நியாயம் செய்யவில்லை என்ற உணர்வு அவனுக்கு. அது கதிர்வேலன் வெண்மதியின் திருமணத்தில் உடைந்து போக அதன்பின் அவள் வாழ்வில் தான் எக்காரணம் கொண்டும் நுழையக்கூடாது என்று தான் இருந்தான்.

Advertisement