Advertisement

 
2
 
சிபியை பற்றி
 
தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர் அவன் ஊர். பெயருக்கு ஒரு டிகிரி வேண்டும் என்று படித்து முடித்தான். படித்து மதிப்பெண்களை அள்ளிக்குவிப்பதில் அவனுக்கு எப்போதும் விருப்பமிருந்ததில்லை.
 
ஜெயவர்மன் இவனுக்கு நேர்மாறாய் நன்றாக படித்தான். அரசுத்தேர்வு எழுதி தற்போது திண்டுக்கல் மாவட்டத்தின் கலெக்டர் அலுவலகத்தில் பணியிலிருக்கிறான்.
சிபிக்கு படித்து மதிப்பெண்கள் எடுப்பதில் நாட்டமில்லையே தவிர நிறைய படித்து அறிவதில் நாட்டமுண்டு. அப்படி அவன் கொண்ட ஈடுபாடு மொத்தமும் விவசாயத்தின் புறம் தான் திரும்பியது.
 
நம்மாழ்வார் தான் இவனின் மானசீக குரு. இவனின் வீட்டில் சிறுவயதில் அவனும் அவன் தாத்தாவுமாக நட்டு வைத்த மரங்கள் இப்போது அவன் வீட்டில் வளர்ந்து விருட்சமாய் நிற்கிறது.
 
எப்போதும் ஒரு குளுமையை அவன் வீட்டில் உணரமுடியும். அந்த ஈடுபாடு தான் அவனுக்கு மரங்கள் வளர்ப்பதில் கவனம் செலுத்த வைத்தது.
 
அவன் ஊரில் யார் வீட்டிற்காவது மரம் வளர்க்க வேண்டும் செடிகள் நடவேண்டும் என்றால் அவனைத் தான் அழைப்பார்கள்.
 
அவன் ஆர்வம் கண்டு அவன் தந்தை பசுங்கிளி அவனுக்காய் ஒரு ஏக்கர் இடத்தை வாங்கி கொடுத்திருக்க அதை இப்போது முழுத் தோப்பாய் உருவாக்கியிருந்தான் அவன்.
அத்தனையும் அவன் வைத்த செடிகளும் மரங்களுமே!!
 
சிபிவர்மனின் இல்லம்
 
அவன் தோளில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை கட்டிலில் படுக்க வைத்தான். இருபுறமும் தலையணையை அணைவாக எடுத்து வைத்தவன் சற்று தள்ளி கட்டிலில் குறுக்காய் படுத்துக் கொண்டான்.
இந்நேரம் திருமண மண்டபத்தில் கலவரமாய் இருக்கும் என்று எண்ணிக்கொண்டான் சிபி. அவன் கைபேசியை எடுத்து ஜெயவர்மனுக்கு அழைப்பு விடுத்தான்.
 
முதல் அழைப்பு முழுதாய் அடித்து ஓய்ந்தது. மீண்டும் அழைக்க ஒரே ரிங்கிலேயே எடுத்த ஜெயவர்மன் “எங்கடா இருக்கே??” என்றான்.
 
“வீட்டில…”
 
“ஏன்டா இப்படி பண்ணே??”
 
“அதைவிடு அங்க இப்போ என்ன நடக்குது?? வெண்மதி என்ன செய்யறா??”
 
“வெண்மதி ஒரு ஓரமா உட்கார்ந்து அழுதிட்டு இருக்கா… அவங்க வீட்டு ஆளுங்களுக்கு சொல்லிவிட்டிருப்பாங்க போல அவங்க வந்திட்டு இருக்காங்க…”
 
“ஹ்ம்ம் சரி…”
 
“என்ன சரி??”
 
“நீங்க வரும்போது அவளையும் கூட்டிட்டு வந்திடுங்க…”
 
“என்ன விளையாடுறியா??” என்றான் அவன் சற்றே கோபமாக.
 
“சரி விடு, குழந்தையை பார்க்க அவளே வந்திடுவா…” என்று சொல்லவும் ஜெயவர்மன் பல்லைக்கடித்தான் சிபியின் பேச்சில்.
 
“சரி அம்மா என்ன பண்றாங்க…”
 
“மாமா அம்மாகூட சண்டை போட்டுட்டு இருக்கார்டா…”
 
“நீ என்ன பண்ணறே?? அதை வேடிக்கையா பார்க்குற??”
 
“நீ ஏன்டா பேச மாட்டே, பண்ணுறது எல்லாம் பண்ணிட்டு நீ பாட்டுக்கு போய் உட்கார்ந்துகிட்ட, இங்க நாங்க தானே பேச்சு வாங்கிட்டு இருக்கோம்… அம்மாவும் அவரை நல்லா தான் கேட்குது…”
 
“என்னவாம் அந்தாளுக்கு??”
 
“நீ இப்படி பண்ணிட்டன்னு ஒரே கூப்பாடு போடுறார்…”
 
“அம்மா என்ன சொன்னாங்க அதுக்கு??”
 
“என் மவன் ஒண்ணும் சும்மா எல்லாம் இப்படி செய்யறவனில்லை… எதுனாலும் உங்க பொண்ணை விசாரிங்கன்னு சொன்னாங்க…”
 
‘அம்மான்னா அம்மா தான்…’ என்று மனதிற்குள் மெச்சிக்கொண்டான் அவன்.
 
“இப்போவாச்சும் சொல்லுடா நீ ஏன் இப்படி பண்ணே??”
 
“பின்ன அடுத்தவன் பொண்டாட்டிக்கு என்னை தாலி கட்ட சொல்றியா??”
 
“நீ என்ன பேசறன்னு தெரிஞ்சு தான் பேசறியா… அப்படி பார்த்தா வெண்மதி மட்டும் யாராம்…” என்று மனதில் பட்டதை பட்டென்று தம்பியிடத்தில் கேட்டுவிட்டான் அவன்.
 
“ஜெய்…” என்றான் இவன் அழுத்தமாய்.
 
“நீ சொன்ன விளக்கத்துக்கு தான் நானும் அதை சொன்னேன். நீ எதை மனசுல வைச்சுட்டு இப்படி பண்ணேன்னு எனக்கு தெரியலை வர்மா…”
 
“இங்க பாரு வெண்மதி கதை வேற… அவ புருஷன் இப்போ உயிரோட ஒண்ணும் இல்லை… ஆனா சந்தியா விஷயம் வேற, நான் அவ கழுத்துல தாலி கட்டியிருந்தாலும் சட்டப்படி அது செல்லுபடி ஆகாது…”
 
“அப்படின்னா??”
 
“அந்த சுந்தரும் அவளும் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டாங்க…”
 
“என்னடா சொல்றே?? இதை நீ இங்கவே சொல்லி இருக்க வேண்டியது தானே… அந்த பொண்ணை பார்த்தா அப்படி தெரியலையேடா”
 
“ஆமாமா உங்களுக்கு எல்லாம் அவளை அம்மாஞ்சி மாதிரி தானே தெரியும்… சரியான ஊமை குசும்பி, சந்தர்ப்பவாதி…”
 
“நான் சொன்ன விஷயம் உண்மை, அதை உறுதிப்படுத்திட்டு தான் சொல்றேன் ஜெய்… அந்த கதை விடு இப்போ ஒண்ணே ஒண்ணு மட்டும் நீ எனக்காக செய்…”
 
“என்ன செய்யணும்??”
 
“உன் மாமனார்கிட்ட எப்படியாச்சும் பேசி அந்த சுந்தரை அவளுக்கு கல்யாணம் பண்ணி வைச்சுடு…”
 
“நீ என்ன லூசாடா?? உன்னை தொங்கல்ல விட்டிருக்கா, அவளுக்கு போய் நீ நல்லது பண்ணிட்டு இருக்கே… அவ எக்கேடு கெட்டு போகட்டும் உனக்கென்ன வந்துச்சு…”
 
“நல்லதுலாம் பண்ணலை, அவ்வளோ நல்லவனெல்லாம் நானில்லை. என்னை மாதிரி வேற எவனும் சிக்கக்கூடாதுன்னு ஒரு நல்ல எண்ணம்ன்னு வேணா வைச்சுக்கோ..”
 
“என்னால முடியாது…” என்றான் உடன்பிறந்தவன்.
 
“போனை அண்ணிக்கிட்ட கொடு…”
 
“பண்றேன்டா… ஆனா நான் சொன்னா அவர் செய்வாரா என்ன??” என்றானவன்.
 
“சொல்ற விதத்துல சொல்லு செய்வார்… நீ தான் அந்த வீட்டு மூத்த மருமகன் அந்த உரிமையில எடுத்து சொல்லு… இல்லைன்னா அண்ணியை பேசச்சொல்லு…”
 
“என்னமோ போ… உனக்காக தான்…” என்றுவிட்டு போனை வைத்துவிட்டான் ஜெயவர்மன்.
 
சந்தியா அவன் மனைவி ரஞ்சனாவின் தங்கை தான். இருவருக்கும் தாய் தான் வேறு. ரஞ்சனாவின் தாய் அவளின் சிறு வயதிலேயே உடல்நலம் குன்றி இறந்துவிட்டார்.
 
அப்போது ரஞ்சனாவின் தந்தைக்கு இளவயது தான், அதனால் அவரின் தாயார் மகனுக்கு உடனே வேறு திருமணம் செய்து வைத்துவிட்டார்.
 
பேத்தியை தன்னுடனே வைத்துக்கொண்டார் அவர். ரஞ்சனாவும் எப்போதாவது தான் தந்தையை பார்க்கச் செல்லுவாள். அவளுக்கு சந்தியாவின் மீது அவ்வளவு ஒட்டுதல் எல்லாம் இல்லை எப்போதும்.
 
இந்த திருமணம் கூட ரஞ்சனாவின் தந்தை தான் ஜெயவர்மனை போல சிபிவர்மனும் குணவான் சிறந்த உழைப்பாளி என்றறிந்து பெண் கொடுக்க முன் வந்தார்.
 
செல்விக்கும் பசுங்கிளிக்கும் கூட பெரிதாய் எந்த எண்ணமும் இல்லை, பெண்ணும் படித்த அழகான பெண் என்பதால் உடனே சம்மதித்திருந்தனர். ரஞ்சனா வேண்டும் என்றோ வேண்டாம் என்றோ எதையும் சொல்லியிருக்கவில்லை.
 
ஜெயவர்மன் சண்டை நடக்கும் இடத்திற்கு விரைந்து வந்தான். “என்ன நடக்குது இங்க?? கொஞ்சம் பேசாம இருக்கீங்களா…” என்று பொதுவாய் சொன்னவன் “மாமா உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும்…”
 
“தனியா போய் பேச என்னயிருக்கு… அதான் உங்க தம்பி எங்க குடும்பத்தை இப்படி ஊர் முன்னாடி சந்தி சிரிக்க வைச்சுட்டார்ல…” என்றார் அவன் மாமனார்.
 
“நீ எதுக்கு ஜெயா இந்த மனுஷன்கிட்ட பேசிக்கிட்டு… என்னமோ எல்லாமே நாம தான் செஞ்ச மாதிரி பேசிக்கிட்டு இருக்காரு… அந்த சுந்தர் தம்பி வர்மாகிட்ட தனியா பேச வந்தப்பவே எனக்கு என்னமோ வித்தியாசமா பட்டுச்சு… அது ஏன்னு இப்போ தானே விளங்குது சங்கதி” என்றார் செல்வி.
 
‘இது வேற நடந்துச்சா…’ என்று எண்ணிக்கொண்ட ஜெயவர்மன் சுந்தரை ஏறிட்டு பார்த்தான். அவன் தலை சட்டென்று தாழ்ந்தது.
 
“மாமா கொஞ்சம் உள்ள வாங்க… எல்லாம் நல்லதுக்கு தான் என்னோட வாங்க” என்று இம்முறை அழுத்திச் சொல்ல அவரும் அவன் பின்னே சென்றார்.
 
“அத்தையும் கூப்பிடுங்க…” என்றுவிட்டு திறந்திருந்த அறைக்கதவுக்குள் நுழைந்தான். பின்னோடே அவர்கள் உள்ளே நுழைந்தனர்.
 
“இப்போ என்ன செய்யப் போறதா உத்தேசம்??”
 
“நீங்களே இப்படி கேட்டா எப்படி மாப்பிள்ளை?? உங்க தம்பி பண்ணது நியாயமா?? அவரை யாரும் ஒரு வார்த்தை கேட்கலை… எங்க பொண்ணை இப்படி மணமேடை வரை கொண்டு வந்து நிப்பாட்டி விட்டீங்களே…” என்று கோபமாய் ஆரம்பித்து ஆதங்கமாய் முடித்தார் அவர்.
 
“என் தம்பி பண்ணது நியாயமா அநியாயமான்னு அப்புறம் பேசுவோம்…”
 
“அதெப்படி அப்புறம் பேசுவீங்க, அது நியாயமில்லைன்னு உங்களுக்கே தெரியுது… அதான் அப்படி சொல்றீங்க…” என்று சற்றே குரலுயர்த்தி தான் பேசினார் அவர்.
 
“இங்க பாருங்க நானும் பேச வேணாம்ன்னு பார்க்கறேன்… அவன் சபையில சொல்லாம விட்டதை எனக்கென்ன போச்சுன்னு என்னை சொல்ல வச்சிராதீங்க…”
 
“என்ன மாப்பிள்ளை மிரட்டறீங்களா??”
 
“மாமா நான் நிதானமா பேசிட்டு இருக்கேன்…”
 
“இப்போ நான் என்ன பண்ணணும்ன்னு சொல்ல வர்றீங்க…”
 
ஜெயவர்மன் நடந்து கொண்டிருந்த களேபரத்தில் இப்போது தான் சில விஷயங்களை உன்னிப்பாய் கவனித்தான். அது இவ்வளவு கலவரம் நடந்தும் மணப்பெண் சந்தியா மற்றும் அவளின் அன்னை வாயே திறக்கவில்லை என்பதே!!
 
“சுந்தர்க்கும் சந்தியாக்கும் கல்யாணம் பண்ணணும் மாமா…”
 
“அது முடியாது மாப்பிள்ளை… அவங்க வீடும் அவ்வளவு ஒண்ணும் வசதி இல்லை…”
 
“மாமா…” என்றான் அவன் அழுத்தமாய்.
 
“கடைசில நீங்களும் உங்க தம்பி பேச்சை கேட்டுட்டு என் பொண்ணை தப்புன்னு நினைச்சுட்டீங்கள்ள மாப்பிள்ளை…”
 
“அப்போ என் தம்பி பொய் சொல்றான்னு சொல்ல வர்றீங்களா மாமா… இதுக்கு மேல உங்க இஷ்டம் மாமா… நாளைக்கு ஏதாவதுன்னா எங்களை எதுக்கும் நீங்க கூப்பிடக்கூடாது அவ்வளவு தான்…” என்றுவிட்டு வாசலை நோக்கி நடைப்போட்டான்.
“ஒரு நிமிஷம்” என்றது சந்தியாவின் தாயே.
 
நின்றவன் திரும்பி பார்த்தான் அவர்களை. “என்னங்க சும்மாவே நிக்கறீங்க நமக்கு எல்லாரும் வேணுங்க… அவுங்க சொல்றதை கேளுங்களேன்…”
 
“சுந்தர் யாரு என்னோட அண்ணன் பையன் தானேங்க… அண்ணிக்கிட்ட நான் பேசறேன்…” என்று கணவரை சமாதானம் செய்தார் அவர்.
 
அவருக்கு வேறு வழி தோன்றவில்லை, வீட்டின் மூத்த மருமகன் நாளை எதற்கும் எங்களை எதிர்பார்க்காதீர்கள் என்றது அவருக்கு சற்றே உறுத்தலாகிப் போனது.
 
அவருக்கு எங்கேயோ தவறு நடந்திருக்கிறது என்று லேசாய் புரிவதாய்!! இருந்தாலும் மகளை விட்டுக்கொடுக்க மனமில்லை அவருக்கு.
 
மனைவியின் பேச்சை எப்போதும் கேட்காதவர், இப்போது கேட்பதாய் பாவனை செய்துக் கொண்டார். “உங்க இஷ்டப்படியே அவளுக்கு கல்யாணம் பண்ணி வைச்சுடுறோம் மாப்பிள்ளை…” என்றார்.
 
அதற்குள் சம்மந்தப்பட்ட சுந்தர் அவன் அன்னையுடன் திருமண மண்டபத்தை விட்டு வெளியேறப் போனான். அவனுக்கு தந்தையில்லை, தாயின் சொல் அவனுக்கு வேதவாக்கு.
 
அவன் தாய்க்கு தன் மகன் மற்றவர் வாயில் வீணாய் விழுகிறான் என்ற எண்ணத்தில் அவனை அழைத்துக் கொண்டு வெளியேறப் பார்த்தார்.
 
அதற்குள் சந்தியாவின் தாய் வந்து அவர்களிடம் பேச அவசரமாய் புதுத்தாலி வாங்கி வந்து சுந்தர் சந்தியா திருமணமும் அங்கேயே நடந்து முடிந்தது.
 
ஜெயவர்மன் கைப்பேசி மீண்டும் அழைத்தது. “சொல்லு வர்மா…” என்றவாறே அழைப்பை ஏற்றான்.
 
“என்னாச்சு??”
 
“நீ சொன்னதை செஞ்சாச்சு…”
 
“அம்மா எங்க??”
 
“போனை வைச்சுட்டு பாரு வீட்டில தான் இருப்பாங்க…”
 
“அப்புறம்…” என்று அவன் இழுக்க “வெண்மதி வீட்டில இருந்து இப்போ தான் வந்திருக்காங்க. அவகிட்ட பேசிட்டு இருக்காங்க… என்ன முடிவு பண்ணி இருக்காங்கன்னு எனக்கு தெரியலை…”
 
“ஆனா வர்மா நீ ஏன் இப்படி பண்ணே?? அந்த பொண்ணு பாவமில்லையா…”
 
“என்ன பாவம்??”
 
“அதுவே அது வாழ்க்கையை தொலைச்சுட்டு நிக்குது…”
“அதான் நீயே சொல்லிட்டியே வாழ்க்கையை தொலைச்சுடுச்சுன்னு நான் கண்டுப்பிடிச்சு கொடுத்திட்டேன்னு நினைச்சுக்கோ…” என்றுவிட்டு போனை வைத்துவிட்டான்.
 
“இவன் சரியான அழுத்தக்காரன்” என்று தன் தம்பியை திட்டிக் கொண்டான்.
 
ஒரு வாரம் கடந்திருந்தது திருமண களேபரங்கள் முற்றிலும் ஆறாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பேச்சுக்கள் காதில் விழத்தான் செய்தது. வெண்மதி மறுத்தும் கேளாமல் அவள் வீட்டினர் அவளை சிபியின் வீட்டில் கொண்டு வந்து விட்டுச் சென்றிருந்தனர்.
 
நடந்த இந்த திடீர் திருமணம் யாருக்கும் உவப்பை கொடுக்கவில்லை. பசுங்கிளி ஏதோவொரு சிந்தனையிலேயே இருந்தார், மகன் ஒன்று செய்தால் அதில் தவறொன்றும் இருக்காது என்ற நம்பிக்கையில் அவர் எதுவும் பேசவில்லை.
 
ரஞ்சனா யாரையும் எதுவும் எப்போதுமே சொன்னதில்லை. ஜெயவர்மனும் தம்பியின் செயலை ஆதரிக்காவிட்டாலும் எந்தவித எதிர்ப்பும் தெரிவித்திருக்கவில்லை.
 
அத்தனை எதிர்ப்பும் கோபமும் ஆத்திரமும் இயலாமையும் இன்னும் என்னவெல்லாம் உண்டோ எல்லாமே இருந்தது செல்விக்கு தான்.
 
அவருக்கு மகன் இப்படி ஒரு குழந்தையுடன் உள்ள ஒரு பெண்ணை மணமுடித்துவிட்டானே என்ற கோபம் நிறையவே இருந்தது.
 
அவர் ஒன்றும் மறுமணத்திற்கு எதிரியெல்லாம் இல்லை. ஆனால் அது தன் வீட்டில் என்ற போது அதை ஏற்றுக்கொள்ள மனதில்லை அவருக்கு.
 
பொழுது நன்றாய் புலரவாரம்பித்தது. வெண்மதி குழந்தை அழுததால் சமாதானம் செய்யவென வெளியே தூக்கிக்கொண்டு வந்தாள்.
 
“வந்துட்டா காலையிலயே விடியாமூஞ்சி…” என்று இடித்துக்கொண்டார் செல்வி.
 
“யாரைப் பார்த்து சொன்னீங்க??”
 
“ஹ்ம்ம் உன்னைத் தான்… நீ தானே இந்த வீட்டுக்கு சொல்லாம கொள்ளாம சிந்தாம சிதறாம வந்தே…”
 
“நானா கேட்டேன் இதெல்லாம்…” என்றாள் அவளும் பதிலுக்கு.
 
“நீ கேட்டியோ கேட்கலையோ, புறவாசல் வழிய வந்துட்ட தானே…” என்று மோவாய் இடித்துக்கொண்டார் அவர்.
 
அவள் ஏதோ பதில் கொடுக்க வாயெடுக்க சிபிவர்மன் இருவருக்கும் இடையில் வந்து நின்றான். இருவருமே அவனைக்கண்டு வாயை மூடிக்கொண்டனர்.
செல்வி அப்புறம் நகர்ந்ததும் “எல்லாம் உன்னால தான் என்னைக் கேட்காம ஏன்டா இப்படி பண்ணே… உங்கம்மா மட்டுமில்லை ஊர்ல எல்லாரும் பேசறாங்க…”
 
“நான் என்னமோ உன்னை வளைச்சு போட்டுட்டேன்னு… கண்டவனும் என்னை பேசற மாதிரி வைச்சுட்டல்ல…” என்று ஐநூறாவது முறையாக பொரிந்தாள் இவனிடத்தில்.
 
இந்த ஒருவாரமாய் அதை தானே சொல்கிறாள் அவள். அவள் பேசியது காதில் விழுந்தும் விழாதது போல் விரலால் காதை நோண்டினான்.
 
பின் மெதுவாய் “அதுக்கு இப்போ என்ன பண்ண சொல்றே??” என்றான்.
 
“இன்னும் நீ திமிரா பேசறதை விடலைல…”
 
“விடலை பையன்ல இருந்தே நான் இப்படி தான்னு உனக்கு தெரியாதா வெண்மதி…” என்றவனின் குரல் சட்டென்று தாழ்ந்து மெலிந்து ஒலிக்க அவனை முறைத்துவிட்டு சென்றாள் வெண்மதி.
 
அவள் அங்கு வந்து ஒரு வாரம் கடந்திருந்தது. சிபி காலையிலயே எங்கோ கிளம்பிச் சென்றுவிட்டான் போலும். வீட்டிலும் வேறு யாருமில்லை, வெண்மதிக்கு யோசிக்க சற்றே அவகாசம் கிடைத்தது. மனம் திருமணம் நடந்த அன்று நடந்த நிகழ்வுகளை அசைப்போட்டது.

Advertisement