Advertisement

19
 
“அம்மா எனக்கு இந்த ரெட்டை ஜடையே பிடிக்கலைம்மா, என் பிரண்ட்ஸ் எல்லாம் எவ்வளோ அழகா ஒத்தை ஜடை போட்டுட்டு வர்றாங்க தெரியுமா… நான் தான் இப்படி கன்றாவியா தெரியறேன்”
“எல்லாவளும் என்னை எப்படி கிண்டல் பண்றாங்க தெரியுமா!!”
 
“அது எவ உன்னை கிண்டல் பண்றவ, அவளுங்களை நம்ம வீட்டு பக்கமே சேர்க்காதே…” என்றார் சங்கரி.
 
“எண்ணெய் வேற ஏன்மா இவ்வளோ தேய்ச்ச, முகமெல்லாம் எண்ணெய் வடியுது பாரு… அசிங்கமா இருக்கு போ…” என்று சிணுங்கிக் கொண்டாள் வெண்மதி.
 
“ஸ்கூல் படிக்க பிள்ளைக்கு எதுக்கு அலங்காரமெல்லாம்… நல்லா படிச்சா மட்டும் போதும், உன்னை இப்போ எந்த ராஜா வந்து தூக்கிட்டு போக போறான்னு நீ இப்படி பண்றே…”
 
“நீ பண்ணண்டாவது முடிக்கவும் கதிரை வரச்சொல்லி உங்க கல்யாணத்தை முடிச்சிடணும்… என்னால உன்னோட மல்லுக்கட்ட முடியலைப்பா…”
 
“அம்மா அந்த பேச்செல்லாம் இப்போ எதுக்கும்மா?? எப்போ பார்த்தாலும் மாமாவை கட்டிக்கச் சொல்லிட்டு இருக்கீங்க… எனக்கு அப்படிலாம் எந்த ஐடியாவும் இல்லை… இனிமே இப்படி பேசாதீங்க…” என்றாள்.
 
“நீ சின்னப்புள்ள உனக்கு அதெல்லாம் தெரியாது… பெரியவங்க சொன்னா கேட்கணும், அவ்வளோ தான்… இப்போ ஸ்கூல்க்கு கிளம்புற வழியை பாரு, போ…”
 
“ஹ்ம்ம் போம்மா…” என்று சிணுங்கியவாறே எழுந்துச் சென்றாள்.
“ம்மா இன்னைக்கு என்ன டிபன்??”
 
“கம்மங்குழும் கருவாட்டு குழம்பும்…”
 
“ஆஹா அதான் வீடே மணக்குதேன்னு பார்த்தேன், சரி நான் சாப்பிட்டு கிளம்பறேன் நேரமாச்சு எனக்கு, மதியத்துக்கு நான் சத்துணவுல சாப்பிட்டுக்கறேன்ம்மா”
 
“ஹ்ம்ம் சரி… ஆமா பேச்சி வர்றா தானே உன்கூட”
 
“ஆமாம்மா வருவா…”
 
வெண்மதியின் தந்தைக்கு சின்னமனூரில் நிலபுலன்கள் இருந்தாலும் ஆறேழு வருடத்திற்கு முன்பு அவர்கள்  அய்யனார்புரத்தில் தான் வசித்திருந்தனர்.
 
வெண்மதி பதினோறாம் வகுப்பின் இறுதியில் இருந்தாள். அல்லிநகரத்தில் இருந்த மேல்நிலைபள்ளிக்கு அவள் பேருந்தில் தான் செல்வாள். பேருந்து சின்னமனூர் வழியாக தான் செல்லும், அப்படி தான் அவள் சிபிவர்மனை கண்டிருந்தாள்.
 
இவள் செல்லும் பேருந்தில் தான் அவனின் பயணமும், அவனின் கலைக்கல்லூரி வீரபாண்டியில் உள்ளது. அவளுக்கு முன்பே அவன் இறங்கும் நிறுத்தம் வந்துவிடும் என்றாலும் இறங்கும் வரை நண்பர்கள் செய்யும் சேட்டைகள் அதிகம்.
 
பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவிகள் என்று அந்த நேரத்தில் பேருந்தில் கூட்டத்திற்கு எப்போதும் குறைவில்லாமலே இருக்கும். பேருந்தின் அப்பயணத்தில் அவர்களுக்கு தோதான பாடல்கள் வேறு ஒலிக்கவிட்டு மாணவர்களை இன்னும் உசுப்பேத்தி விட ஆளுக்கு ஒன்றாய் ஜோடி சேர்த்து வைத்திருந்தனர் அவன் சகாக்கள்.
 
“டேய் மச்சான்” என்று சிபி அழைத்தவன் அவன் தோழன் அன்பு.
 
“சொல்றா மாப்ள” என்றான் சிபிவர்மன்.
 
“நேத்து ஒரு சூப்பர் படம் பார்த்தேன்டா…”
 
“என்ன படம்டா மாப்ள??”
 
“பேராடா முக்கியம், அதுல வந்த ஒரு சீன் இருக்கே, சீனு…” என்று அவன் சிலாகிப்பாய் சொல்ல “என்னடா மச்சான் ஓவரா பில்டப் கொடுக்கறான் இவன் நீயும் ஹ்ம்ம் கொட்டிட்டு இருக்க” என்றான் மற்றொரு நண்பன் வேணு.
 
“இருடா அவன் ஏதோ சொல்ல வர்றான் நீ வேற குறுக்க பேசிகிட்டு, என்னன்னு தான் கேட்போமே”
 
அந்த அன்பு என்றவனோ நேற்று பார்த்த படத்தின் நினைவிலேயே இன்னமும் இருந்தான் போலும்.
 
“டேய் மாப்ள அன்பு…” என்று இவர்கள் அவனை உலுக்கவும் தான் “இருங்கடா…”
 
“அடேய் என்னன்னு சொல்லப் போறியா இல்லையா…”
 
“செம கிஸ்ஸிங் சீன்டா அய்யோ அந்த ஹீரோ என்னமா இழுத்து…” என்று அவன் இழுக்க “இப்போ நான் இழுக்க போறேன் பார் ஒரு இழு உன்னை…” என்று கையை ஓங்கி காட்டினான் சிபி.
 
“வர்மா நீ பேசாம இருடா… நீ சொல்றா மாப்ள அது என்னா படம்டா எந்த சேனல்ல போட்டான். திரும்பவும் அந்த படத்தை போடுவானாடா” கேட்டது வேணு.
 
“அடேய் அவன் தான் ஓவரா பேசிட்டு இருக்கான் நீயும் ஏன்டா??”
 
“அட இவன் ஒரு சாமியார்டா. இவனும் அனுபவிக்க மாட்டான், மத்தவங்களையும் அனுபவிக்க விடமாட்டான், நீ சொல்றா மாப்ள…” என்று ஊக்கினான் வேணு.
 
“அடி வாங்க போறீங்கடா நீங்க”
 
“அடப்போடா நீயென்ன சாமியாராவா போகப் போறே… புத்தர் மாதிரி காந்தி மாதிரி பேசிக்கிட்டு”
 
“டேய் புத்தர் காந்தியை எதுக்குடா இழுக்கறே”
 
“அவங்க தான் சாமியாரா போய்ட்டாங்க…”
 
“அடிச்சேன் பல்லு எகிறிடும் பார்த்துக்க, புத்தர் வேணா சந்நியாசம் போய் இருக்கலாம். காந்தி எங்கடா சந்நியாசம் போனார், அவர் நம்ம தேசத் தலைவர்டா…”
“அதென்னமோபா வேட்டி கட்டினவங்க எல்லாம் என் கண்ணுக்கு சாமியாரா தான் தெரியறாங்க…”
 
“வேணு போன வாரம் ஒரு பக்கி இந்த பக்கமா வேட்டி கட்டிட்டு போச்சு. அதென்ன சந்நியாசமா வாங்கிருச்சு, போற போக்குல நாலு பொண்ணுங்களை வேற லுக் விட்டுட்டு அதுல ஒண்ணை…”
 
“போதும்டா இதுக்கு மேல என்னைய நீ வார வேணாம், மாப்பு இத்தோட ஸ்டாப்பு…” என்றான் அன்பு.
 
“முதல்ல நீ ஸ்டாப்பு… ரொம்ப ஓவரா தான் போய்க்கிட்டு இருக்கடா நீயி, நாளப்பின்ன எவனாட்டயாச்சும் சிக்கப்போறடியோ…”
 
“அதெல்லாம் நாங்க நேக்கா கழண்டிருவோம்டா என்னடா வேணு சொல்றா இவன்ட்ட ரொம்ப அட்வைஸ் பண்றான்…”
 
“ஆமா வர்மா நாங்க அதுலலாம் கைதேர்ந்தவங்க” என்றான் வேணு மற்றவனுக்கு ஆதரவாய்.
 
“ஆமாமா நீங்க ரெண்டு பேரும் நல்லா கெட்டுப் போறதுல கைதேர்ந்தவங்க தான்…”
 
“அதான் சொல்றோம் மச்சான் நீயும் வந்து இதுல ஐக்கியமாகுடா… நல்ல நல்ல பிகருங்க எல்லாம் வர்ற நேரம், பார்த்து ஒரு சைட்டை போட்டு போவோம் வருவியா…” என்று அவர்கள் அழைக்க இவனும் சேர்ந்துக் கொண்டான்.
சிபி ஒன்றும் தெரியாதவன் எல்லாம் இல்லை. திருவிழாவிற்கு வரும் பெண்களை சைட் அடிப்பது, பேருந்தில் சைட் அடிப்பது என்று எல்லாம் செய்வான் தான்.
 
அவனுக்கு காதலிப்பது என்பது தான் கொஞ்சம் அலர்ஜி. ஏனென்றால் வேணுவும் அன்புவும் மாதத்திற்கு ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறுவார்கள்.
 
அவர்களுக்காக செலவு செய்வார்கள், பின் புலம்புவார்கள் அதெல்லாம் அவனுக்கு பிடிக்காது.
 
வார நாட்களில் மட்டுமல்லாது நண்பர்கள் வாரயிறுதி நாட்களிலும் கூட ஒன்றாகவே ஊர் சுற்றிக் கொண்டிருப்பர்.
 
இதில் வேணுவும் அன்புவும் அவ்வப்போது இவனைவிட்டு கழண்டு கொள்வர்.
 
அன்று “டேய் மச்சான் மாப்ள நேத்து ஒரு காரியம் பண்ணியிருக்கான்டா… ஆனா மச்சான் அவனுக்கு எங்கயோ மச்சமிருக்குடா இல்லைன்னா இப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்குமா சொல்லு…”
 
“என்னடா என்ன பேசறே எனக்கு ஒண்ணும் புரியலை, புரியற மாதிரி சொல்லேன்டா”
 
“நேத்து அந்த புள்ள வனிதாவை பார்க்க போனான்ல”
 
“ஆமா அதான் தினமும் பார்க்க போறானே…”
“பார்க்க போவான் தான். ஆனா நேத்து ரொம்ப ஸ்பெஷல்”
 
“என்ன ஸ்பெஷல்??”
 
“அந்த புள்ளக்கு பொறந்த நாளாம்…”
 
“ஓ!!” என்றான் அவன் அசுவாரசியமாய்.
 
“அப்புறம் என்னன்னு கேளுடா, அப்போ தானே ஒரு கிக்கு இருக்கும்”
 
“என்னன்னு நீயே சொல்லு”
 
“கம்மங்காட்டுக்கு கூட்டிட்டு போய் அந்த புள்ளைக்கு முத்தம் கொடுத்திட்டான்டா…”
 
“அறிவிருக்கா உனக்கு, இதை தான் பெரிய சாதனைன்னு சொல்லிட்டு இருக்க… அவன் காதலியோட அவன் சந்தோசமா இருக்கான் அதையெல்லாமா வந்து என்கிட்ட சொல்லுவ வெட்கமா இல்லை உனக்கு, சீய்!!”
 
“அடேய் என்னமோ நான் அதெல்லாம் நேர்ல பார்த்த மாதிரி சொல்லிக்கிட்டு இருக்க, அவன் சொல்லப் போய் தானே மச்சான் எனக்கே தெரியும்… அவனுக்கு இல்லாத வெட்கம் எனக்கு எதுக்குடா”
 
“இனிமே உங்க கூடவே சேரக்கூடாதுடா”
 
“என்னங்கடா என்னைவிட்டு இங்க என்ன மாநாடு நடக்குது…” என்று வந்து சேர்ந்தான் அன்பு.
 
“மாப்ள உன் திருவிளையாடல் பத்தி தான் சொல்லிட்டு இருந்தேன்…”
 
“நிப்பாட்டு வர்மா, நீ என்ன சொல்ல போறேன்னு எனக்கு தெரியும்… எப்பவும் போல அட்வைஸ் தானே அதெல்லாம் வேணாம்டா… இப்போ தான் எங்கம்மா பேசி பேசி கொஞ்சம் ப்ளட் வந்துச்சு நீ வேற ஆரம்பிக்காதப்பா என்னால முடியாது” என்றான் அன்பு
 
“ஏன்டா வர்மா நான் தெரியாம தான் கேக்குறேன்… நீயெல்லாம் எங்க பிரண்டாடா, எங்களை மாதிரி வேணாம். அட்லீஸ்ட் நீ ஒரு பொண்ணாச்சும் லவ் பண்ணியிருக்கியாடா, பார்க்கறதோட சரி… பார்த்தா மட்டும் போதுமாடா…” என்றான் வேணு.
 
“எதுக்கு உங்களை மாதிரி உருப்படாம போகவா??”
 
“ஆமாமா இவரு ரொம்ப உருப்பட்டுட்டாரு, பேசாம போவியா…” என்றது வேணு.
 
“டேய் வேணு, வடிவேல் சார் படத்துல வர்ற டயலாக் மாதிரி சொல்லணும்ன்னா மச்சான் அதுக்கெல்லாம் சரிபட்டு வரமாட்டான்டா…”
 
அவர்களின் பேச்சு சிபியை கொஞ்சம் சீண்டி தான் பார்த்தது. அப்போதும் பேசாமல் இருந்தவனை அவர்கள் மேலும் மேலும் பேசி கிளறிவிட அவனுக்கும் மனதில் தேவையில்லாத எண்ணங்கள் தோன்றியது.
 
அவர்கள் பேச்சின் தாக்கம் அடுத்த சில நாட்களில் சிபியின் மனதில் ஆழ வேரூன்றி காதலே அல்லாத காதலை சொல்லியிருந்தான் வெண்மதியினிடத்தில்.
 
அவனுக்கு ஒரு விஷயம் தொடங்கும் முன் தான் எப்போதும் தயக்கமே, ஆரம்பித்த பின் அதிவேகத்தில் செல்வான்.
 
இப்போதும் அப்படியே மூன்றே நாளில் வெண்மதியை பின் தொடர்ந்து அவன் செய்தது காதல் மட்டுமல்ல அதையும் மீறி தன் இதழ் முத்திரையை அவளின் கன்னத்தில் வேறு பதித்திருந்தான்.
 
வெண்மதிக்கு எதற்குமே அவகாசம் கொடவில்லை அவன். தனக்கு தோன்றியதை செய்துவிட்டான். நடந்தது இது தான்.
 
சிபி மட்டுமே அன்று கல்லூரிக்கு சென்றிருந்தான். வேணுவும் அன்புவும் அன்றைய தினம் ஒரு சேர விடுப்பில் இருந்தனர். அவர்கள் இருவருக்கும் பொதுவான உறவினர் ஒருவரின் திருமணம் என்று அங்கு சென்றுவிட்டிருந்தனர் அவர்கள்.
 
அன்று கல்லூரியில் இருந்து பாதியிலேயே கிளம்பிட்டான் சிபிவர்மன். வீட்டிற்கு செல்லும் பேருந்தில் ஏறியவனின் எண்ணங்களில் தோழர்களுடன் பேசியது ஞாபகம் வந்தது.
‘நாமளும் லவ் பண்ணினா என்ன??’ என்பது தான் அது. அவனுக்கு காதல் மேல் பெரிதாய் ஆர்வமில்லாததாலும் நண்பர்களின் செய்கையாலுமே அதில் அதிக நாட்டமில்லாமல் இருந்தான்.
 
அவர்கள் இப்போதெல்லாம் அவனை அவ்வப்போது ஊசுப்பேற்றுவது போல அவனை இகழ அதுவே அவனுக்குள் ஓடியது.
 
‘அதென்ன பெரிய குற்றமா செய்து தான் பார்ப்போமே!!’ என்ற எண்ணம் விதைக்க பின்னாலேயே செல்வி அவனை விளக்குமாறு கொண்டு அடிக்க வருவது போன்று ஒரு கற்பனை அவனுக்குள்.
 
ஜெயவர்மன் பத்தாவது படிக்கும் போது ஒரு பெண்ணின் பின்னால் சுற்றுகிறான் என்று தெரிந்ததும் செல்வி அவனை ஓட ஓட அடித்தார் என்பதும் அதன் பின்னே அவனை திண்டுக்கல்லில் இருக்கும் செல்வியின் தூரத்து சொந்தமான அவரின் அண்ணன் முறையுள்ள ஒருவரின் வீட்டில் அவனை தங்கவைத்து அங்கேயே படிக்க வைத்ததும் நினைவிலாடியது அவனுக்கு.
 
இரு மனதாய் ஊசலாடியது அவனுக்குள். அவன் மனதை அதில் இருந்த ஆசையே வென்றது. ‘இன்னைக்கு இவனுங்க வேற இல்லை, ஹ்ம்ம் ஓகே அதும் நல்லதா போச்சு, பொறுமையா சைட் அடிக்கலாம். இவனுங்க இருந்தா லொடலொடன்னு பேசியே பார்க்க விடமாட்டானுங்க…’
 
‘இப்போ எந்த பொண்ணை பர்ஸ்ட் பார்க்கறமோ அந்த பொண்ணை தான் லவ் பண்ணணும்’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவனின் கண்களில் கடைசி சீட்டில் அமர்ந்திருந்த வெண்மதி விழுந்தாள்.
 
‘அடடா இவளையா பார்த்தோம்… இவ்வளோ ஒல்லியா இருக்காளே குச்சி மாதிரி… கலரும் கம்மியா தான் இருக்கா… ஆனா ஆளு களையா தான் இருக்கா…’ என்று அவன் எண்ணம் அவளையே அளவெடுத்துக் கொண்டிருந்தது.
 
அவளை இதற்கு முன்பும் பார்த்திருக்கிறான் தான். ஆனால் அன்றைய தினத்தில் இருந்து அவன் பார்வை வேறாய் ஆனது அவளிடத்தில்.
 
முதலில் ஏதோ சாதாரணமாய் தான் பார்க்கத் தொடங்கினான். பின்னர் அவளின் ஒவ்வொரு செய்கையையும் அவன் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் நின்றால், நடந்தால், அமர்ந்தால் என்று அத்துனையும் அவன் மனதில் அவனறியாமலே பதிந்து போனது.
 
நண்பர்களுடன் இருந்தாலும் அவன் பார்வை மற்ற பெண்களிடத்தில் இல்லாது அவளையே மொய்த்தது. அவளை பார்த்த மூன்றே நாளில் அவளிடம் தன் விருப்பத்தை அவள் செல்லும் வழியை மறித்து அவளிடம் சொல்லியிருந்தான்.
 
சிபியின் பார்வை வெண்மதியை தொடர்வதை முதல் நாள் உணராதவள் இரண்டாம் நாள் உணர்ந்தாள். அவள் பார்வையும் அவனை தொடர்வதை கண்டதுமே சிபி முடிவு செய்துவிட்டான் அவளிடம் பேசுவது என்று.
 
வெண்மதியுமே அதை எதிர்பார்க்கவில்லை. சிபியின் தோழர்கள் அன்புவும் வேணுவும் இன்னமும் கல்லூரிக்கு வந்திடவில்லை. அவர்கள் இருந்திருந்தால் சிபி என்ன செய்திருப்பானோ அவனே அறியான்.
 
இப்போது அவனால் அப்படி இருந்திட முடியவில்லை. யாருமில்லா பாதையில் அவளை மறித்தவாறு வந்து நின்ற சிபியை கண்டு அரண்டு தான் போனது.
 
வெண்மதியின் தோழி பேச்சி வழியில் கண்ட அவள் அத்தையிடம் பேசச் சென்றுவிட சிபிக்கு அது வசதியாய் போனது.
 
“ஹேய் நில்லு…” என்று அவன் சொன்னதும் சுவிட்ச் போட்டது போல அப்படியே நின்றாள். முகத்தில் அதிர்ச்சி பயம் என்று கலவையான உணர்வுகள்.
 
“உன்கிட்ட பேசணும்…”
 
அவளிடத்தில் பதிலொன்றும் இல்லை.
 
“ஹேய் நான் பேசறது உனக்கு கேட்குதா, உன்கிட்ட தான் சொன்னேன். பதிலுக்கு சரி, ஹ்ம்ம் இப்படி ஏதாச்சும் சொல்லு… அப்போ தானே எனக்கு தெரியும் உனக்கு காது கேட்குதா இல்லையான்னு…”
 
அவளின் “ம்” ஈனஸ்வரத்தில் ஒலித்தது.
“இதுக்கு நீ சொல்லாமலே இருந்திருக்கலாம்…”
 
அவள் மேலே எதுவும் பேசுவாளோ என்று அவன் பார்த்திருக்க அவளோ பயத்தில் உடல் வெடவெடக்க நின்றிருந்தாள்.
 
‘என்ன சொல்வானோ?? ஏது சொல்வானோ??’ என்று.
 
“என்னன்னு கேட்க மாட்டியா?? வாயில என்ன கொழுக்கட்டையா வைச்சிருக்க…”
 
“என்ன??”
 
“குட் இப்படி தான் கேட்கணும், ஆமா உன் பேரு என்ன??”
 
‘அடேய் இது தெரியாம தான் நீ இத்தனை நாளா என்னைய பார்த்தியா… மதி இவன் வேற யாருக்கோ ரூட் போட்டு இருக்கான், அதுக்கு உன்னைய தூது அனுப்ப போறான் போல’ என்றது அவள் மனசாட்சி.
 
அவன் அவளை பார்க்கவில்லை என்று தோன்றிய மாத்திரம் அவளுக்குள் எதுவோ ஓர் உணர்வு. ஏமாற்றமா, கோபமா, வெறுப்பா இல்லை நிம்மதியா என்று கூட அவளால் உணர முடியவில்லை.
 
“தெரிஞ்சுட்டு இப்போ என்ன பண்ணப் போறீங்க??” என்றாள் வெடுக்கென்று.
 
“பேர் தெரிஞ்சா ஐ லவ் யூ சொல்ல ஈசியா இருக்கும்… இல்லைனாலும் சொல்லுவேன், எப்படி தெரியுமா??”

Advertisement