Advertisement

18
 
மருத்துவர் வெண்மதியை தெரியும் என்று சொன்னதும் அவர் அவனை பார்த்து இவள் உங்கள் மனைவி தானா என்று கேட்டதும் யோசித்தவன் ‘ஒருவேளை இவர் கதிரோடு இவளை முன்பே பார்த்திருப்பாரோ’ அதனால் தான் என்னைப்பற்றி விசாரிக்கிறார் போலும் என்று நினைத்தான்.
 
அவன் எண்ணத்தை அப்படியே அவரிடம் சொல்லவும் செய்தான். “நீங்க மதியை கதிரோட பார்த்து இருக்கீங்களா?? மூணு நாலு வருஷம் முன்னாடி…”
 
“ஆமாம்… அப்போ கதிர்??” என்றவருக்கு எதுவோ புரிவதாய்.
 
அவனும் அதை ஆமொத்தவனாக “ஆமாம் டாக்டர் ஆக்சிடென்ட்ல அவர் தவறிட்டார்…”
“எப்போ??”
 
“மூணு வருஷம் இருக்கும்ன்னு நினைக்கிறேன்…”
 
“அப்போ இவங்க குழந்தை…”
 
“நல்லாயிருக்காங்க… ஊர்ல இருக்கா??”
 
“என்ன குழந்தை பிறந்துச்சு?? குழந்தை நல்லபடியா இருக்கா??”
 
“பெண் குழந்தை தான், ஹ்ம்ம் நல்லா இருக்கா…”
 
“ஆமா டாக்டர் உங்களுக்கு இவளை எப்படி தெரியும்?? நீங்க தான் இவளுக்கு பிரசவம் பார்த்தீங்களா??”
 
“ஹ்ம்ம் அப்படியும் சொல்லலாம் மிஸ்டர்…” என்று அவர் இழுக்க “சிபி…” என்று முடித்தான் அவன்.
 
“அப்படின்னா எனக்கு அர்த்தம் புரியலையே… அப்போ நீங்க பார்க்கலையா இவங்களை… இல்லை பாப்பா பத்தி எல்லாம் விசாரிச்சீங்களே அதான் கேட்டேன்…”
 
“சாரி மிஸ்டர். சிபி, அதை உங்க மனைவி உங்ககிட்ட சொன்னாலேயொழிய நான் சொல்ல முடியாது…” என்று கிளம்பினார்.
 
அறைவாயில் வரை சென்றவர் பின் திரும்பி வந்து “நான் இவங்ககிட்ட பேசணும், எனக்கு போன் பண்ண சொல்றீங்களா??”
“எதுக்கு போன் எல்லாம், நான் கிளம்பும் போது கூட்டிட்டு வர்றேன்”
 
“அவங்க அதுக்கு ஓகே சொன்னா கூட்டிட்டு வாங்க… அவங்க ஓகேவா இருந்தா கூட்டிட்டு வாங்கன்னு சொன்னேன்” என்றவர் தன் கைப்பேசி எண்ணை அவனிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.
 
“இந்த டாக்டர் எதுக்கு இவ்வளவு பில்டப் பண்றாங்க… என்னவா இருக்கும்?? இவளுக்கு உடம்புக்கு எதுவுமா இருக்குமோ?? கடவுளே அப்படி மட்டும் எதுவும் இருக்கக்கூடாது…” என்று சத்தமாக சொல்லிக்கொண்டவன் “இப்போவே அவரை போய் கேட்டுட்டு வந்திடணும்…”
 
‘இவளை தனியா வேற விட்டு போக முடியாது… சரி கிளம்பும் போது போய் பார்த்திடலாம்’ என்று எண்ணி அந்த எண்ணத்தை அப்போதைக்கு தள்ளி வைத்தான்.
 
முதல் நாள் இரவு முழுதும் தூங்காது விழித்திருந்தது வேறு, எல்லாமாக சேர்ந்து மயக்கமும் உறக்கமும் இருந்தாள் வெண்மதி.
 
மூன்று மணி நேரத்திற்கு பின்னே சாதாரணமாய் தூங்கி எழுபவள் போல் அசுவாரசியமாய் கண் விழித்தாள் வெண்மதி. மெதுவாய் விழிகளை அப்புறமும் இப்புறமும் திருப்பி பார்க்க கையில் ஏதோ உறுத்தல் தோன்ற கையை தூக்க முயன்றாள்.
 
“ஹே… ஹேய்… என்ன பண்றே நீ?? கையை தூக்காதே, அப்படியே வை, ட்ரிப்ஸ் இன்னும் கொஞ்ச நேரத்துல முடிஞ்சிரும்…”
 
“ட்ரிப்ஸா எதுக்கு??”
 
“எதுக்கா… உனக்கு தான்மா போட்டிருக்கு, நீ மயக்கம் போட்டு விழுந்த டாக்டர் தான் நீ அனிமிக்கா இருக்கேன்னு ட்ரிப்ஸ் போட்டு போனாங்க…”
 
‘அய்யோ அப்போ இன்னும் நாம ஆஸ்பிட்டல்ல தான் இருக்கோமா, கிளம்பலையா…’
 
“அத்தை, மாமா எல்லாம்…”
 
“வீட்டுக்கு போக சொல்லிட்டேன், நல்ல நேரம் முடியறதுக்குள்ள..”
 
“ஓ!!”
 
“உனக்கு என்ன பிரச்சனை??”
 
“என்ன??”
 
“என்னன்னா?? நான் என்ன கேட்கறேன்னு உனக்கு புரியலையா??”
 
“இல்லை திடீர்ன்னு ஏன் இப்படி கேட்கறீங்க??”
 
“இந்த கல்யாணம் தான் உன் மனஅழுத்தத்துக்கு காரணமா??” என்றான் அவளிடத்தில். அவனுக்கு அதை தெரிந்து கொள்ள வேண்டி இருந்தது, டாக்டர் வேறு அவளிடத்தில் சண்டையா என்று கேட்டது அவனை யோசிக்க வைத்து அப்படி கேட்டிருந்தான் அவளிடத்தில்.
 
“இப்போ ஏன் இதெல்லாம் கேட்கறீங்க நீங்க…”
 
“நீ இப்படி மயங்கி விழுறது உனக்கு ரொம்ப ஈசியா போச்சா, அன்னைக்கு ஊர்ல வைச்சும் இப்படி தான் ஆச்சு… இப்போ மறுபடியும்”
 
“ஒரு ஒரு முறையும் டாக்டர் என்னவோ நான் தான் அதுக்கு காரணம் போல எனக்கு அட்வைஸ் பண்றாங்க… எனக்கு புரியலை… நீ தான் சொல்லணும்…”
 
“புரியாம தான் என் கழுத்துல தாலி கட்டினீங்களா??” என்றாள் குத்தலாய்.
 
அவன் முகத்தில் லேசாய் கோப ரேகைகள் தோன்ற ஆரம்பித்தது. “தாலி கட்டினது குத்தம்ன்னு சொல்றியா??”
 
“நான் நல்லா தெளிவா யோசிச்சு தான் உன் கழுத்துல கட்டினேன்…”
 
அவள் நக்கலாய் சிரித்தாள் இப்போது. “எவ்வளவு நாள் யோசிச்சீங்க, ஹ்ம்ம் சரி எவ்வளவு நேரம் யோசிச்சீங்கன்னு சொல்லுங்க பார்ப்போம்…” என்றாள் இன்னமும் குத்தலாய்.
 
அவள் பேச்சு அவனை மேலும் கோபப்படுத்துவதாய் இருந்தது. “ஐஞ்சு நிமிஷமே ஆனாலும் என் முடிவுல நான் தெளிவா தான் இருந்தேன்…”
 
“உங்களை பத்தி நீங்க முடிவெடுத்தீங்க ஓகே, என்னைப்பத்தி முடிவெடுக்க நீங்க யாரு…”
 
“மதி…” என்றான் அழுத்தமாய்.
 
“என்கிட்ட அப்போ கேட்டீங்களா… இப்போ மட்டும் மன அழுத்தமா அதுவா இதுவான்னு கேட்கறீங்க…”
 
“இப்போ என்ன தெரியணும் உனக்கு… இந்த கல்யாணம் எனக்கு பிடிக்கலையான்னு தானே… ஆமா பிடிக்கலை… இந்த கல்யாணம் பிடிக்கலை, உன்னையும் பிடிக்கலை… இப்போ அதுக்கு என்ன செய்யப்போறே??” என்று தன் உடல்நிலையை மீறி சற்று சத்தமாகவே சொன்னாள்.
 
சிபிவர்மனின் முகமோ கருத்தது. சாதாரணமாய் ஆரம்பித்த பேச்சு எங்கோ சென்று இப்படி முடியும் என்று அவன் எண்ணியிருக்கவில்லை.
 
அவளுக்கு வந்த மன அழுத்தம் இப்போது அவனிடத்தில். மெதுவாய் கண்களை மூடி திறந்தான், “நீ வலிக்க வலிக்க பேசுறதும் அதை நான் கேட்கறதும் போதும்ன்னு நினைக்கிறேன்…”
 
“இப்போ உனக்கு என்ன வேணும் சொல்லு…”
 
“சொன்ன செஞ்சுடுவியா??”
“சொல்லு செய்யறேன் அப்போவாச்சும் நீ சந்தோசமா இருக்கியான்னு பார்க்கறேன்” என்றுவிட்டு நிறுத்தினான்.
 
எதுவும் சொல்வாளென்று அவளையே அவன் பார்த்துக் கொண்டிருக்க அவளோ ஒன்றும் சொல்லாமல் அமைதியாய் இருந்தாள்.
 
“என்ன எதுவும் சொல்லலை??” என்று அவனே ஆரம்பித்தான்.
 
“உன்கிட்ட இருந்து எனக்கு விடுதலை வேணும் கொடுக்கறியா சொல்லு” என்றாள்.
 
அவள் கேட்டதிற்கு பதில் சொல்லாமல் “ட்ரிப்ஸ் முடிஞ்சதும் டாக்டர் கிளம்பலாம்ன்னு சொன்னாங்க… முடிஞ்சிருச்சுன்னு நினைக்கிறேன், நான் போய் அவங்களை கூட்டிட்டு வர்றேன்…” என்று அவன் எழவும் அவரே உள்ளே வந்தார்.
 
மீண்டும் அதே மருத்துவரை பார்த்ததும் முகம் மொத்தமாய் விழுந்தது வெண்மதிக்கு. ஒளியத் தெரியாதவன் தலையாரி வீட்டில் ஒளிந்த கதையாகி போனதே என்று வருந்தினாள்.
 
யாரை எண்ணி பயந்தோமோ அவரே மருத்துவம் பார்க்க வைத்த தன் மீதே கோபம் வந்தது அவளுக்கு. வந்தவர் ஒன்றும் பேசவில்லை அவளின் இதயத்துடிப்பை சரி பார்த்தார், கண்களை பார்த்தார் பின் சிபிவர்மனிடம் திரும்பி “ஷி இஸ் ஓகே, நீங்க கூட்டிட்டு போகலாம்…”
 
“தேங்க்ஸ் டாக்டர்…” என்றவனிடம் லேசாய் தலையசைத்து பின் சென்றுவிட்டார் அவர்.
 
“ஏன் மதி நீ இப்படி இருக்கே?? அந்த டாக்டர்க்கு ஒரு தேங்க்ஸ் கூட சொல்ல முடியாதா உன்னால…”
 
“எதுக்கு தேங்க்ஸ் சொல்லணும்??”
 
“என்ன கேள்வி இது, நீ மயங்கி விழுந்ததும் உன்னை அவங்க தான் பார்த்தாங்க…”
 
“அது அவங்க கடமை…”
 
“நீ பேசுறது சரியில்லை மதி…” என்றான் அவன் இருபொருள்பட!!
 
“என்ன சரியில்லை, இல்லை இப்போ என்ன சரியில்லைன்னு சொல்லுங்க?? அந்த டாக்டர் உங்ககிட்ட எதுவும் சொன்னாங்களா?? அதை தான் என்கிட்ட நீங்க போட்டு வாங்க ட்ரை பண்றீங்களா…” என்று அவளாகவே ஒன்றை புரிந்துக்கொண்டு கத்தினாள்.
 
“போதும் நிறுத்து… உன்கிட்ட பேசவே கூடாதுன்னு நினைச்சேன்… திரும்ப அந்த தப்பை செய்ய மாட்டேன், வீட்டுக்கு போகலாம் கிளம்பு…” என்றவன் அவள் எழ கைக் கொடுத்தான்.
 
அதை கண்டுக்கொள்ளாமல் கட்டிலை பிடித்துக்கொண்டே அவள் எழுந்து நின்றாள். அவன் முன்னே செல்ல அவள் பின்னே சென்றாள்.
சிபி வெண்மதியிடம் சுத்தமாய் பேச்சை நிறுத்தியிருந்தான். வானதியிடம் மட்டுமே அவன் பேச்சு. ஆயிற்று அவர்கள் ஊருக்கு வந்து ஒரு மாதம் தன்னைப் போல ஓடிப்போயிருந்தது.
 
அன்று வெண்மதி வீட்டுக்கு வந்த பின்னே செல்வியும் ரஞ்சனாவும் அவளுக்காய் வருந்தி ஓய்ந்து போனார்கள். இப்போதெல்லாம் செல்வி ரஞ்சனாவை கவனிக்கும் போது வெண்மதியையும் கவனித்துக்கொண்டார்.
 
“இப்படி கொறிச்சு தின்னா எப்படி, நல்லா அள்ளி சாப்பிட வேணாமா…” என்று வெண்மதிக்கும் “பிள்ளைக்கு பாலு கொடுக்கறவ கொறிக்காம நல்லா சாப்பிடு” என்று ரஞ்சனாவிற்கும் சொல்வார்.
 
ரஞ்சனாவை வீட்டிற்கு அழைத்துப் போக அவள் தந்தைக்கு அவ்வளவு விருப்பம் இருந்த போதும் வீட்டிலிருந்த மற்றவர் யாருக்கும் அதில் விருப்பமில்லாததால் நாசூக்காய் மறுத்தனர்.
 
“சந்தியாவும் வேற இப்போ மாசமாயிருக்குன்னு சொல்றீங்க… மசக்கையாய் இருக்க பிள்ளையை முதல்ல கவனிங்க, நாங்க இத்தனை பேர் இருக்கோம் உங்க பேரனையும் பொண்ணையும் நல்லா பார்த்துக்க மாட்டோமா” என்றுவிட்டார் செல்வி.
 
அவரை மறுத்து ஒன்றும் சொல்லாமல் கிளம்பிவிட்டார் ரஞ்சனாவின் தந்தை. அவர் பேசவில்லை என்றாலும் சந்தியா அக்கம் பக்கத்தினரிடம் குறை பேசியதை கேட்டவர் வந்து சொல்லிச் சென்றனர்.
செல்வி பார்த்துக் கொண்டு தானிருந்தார் சிபிக்கும் வெண்மதிக்கும் இடையில் நிகழும் பனிப்போரை.
 
அவளிடம் எதையாவது சொல்லி வா என்று சொன்னால் நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள் என்று சொல்லிச் செல்லும் மகனின் போக்கு அவருக்கு புரியவில்லை.
 
ஏதோ ஒரு வகையில் பிடித்து தான் மகன் திருமணம் செய்திருந்தான் என்பதில் அவருக்கு இப்போதும் அசைக்க முடியாத நம்பிக்கையே!!
 
ஆனால் அதெல்லாம் இல்லை என்பது போல் இருந்தது இப்போதைய அவனின் போக்கு. வெண்மதியும் தான் அவனிடம் பேச முயல்வது போல தோன்றவில்லை.
 
அவ்வப்போது தனிமையில் சென்று இருந்துக்கொண்டு கண்ணீர் விடுவதையும் அவர் கண்டுவிட்டார் ஓர் நாள். என்ன செய்து அவர்களை சேர்க்க என்று அவருக்கு புரியாவிடினும் ஏதாவதொன்று செய்தாக வேண்டும் என்றே தோன்றியது. விரைவில் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டார்.
 
வெண்மதி இதை சுத்தமாய் எதிர்பார்க்கவில்லை. பத்து நாட்களுக்கு முன் நடந்த அந்நிகழ்வு அவள் கண்ணில் வந்து போனது.
 
இரவு அறைக்கு வந்த சிபியிடத்தில் ஒரு காகிதம். அதை அவள் முன்னே அவன் நீட்டவும் ‘என்னவென்று’ பார்த்தாள் அவனை.
“நீ ஆஸ்பிட்டல்ல வைச்சு என்கிட்ட ஒண்ணு கேட்டியே, அது தான் இது…”
 
‘அவளுக்கு ஒன்றும் புரியவில்லை, என்ன கேட்டோம் இவனிடத்தில்’ என்று யோசிக்க ஆரம்பித்தாள்.
 
“என்கிட்ட இருந்து உனக்கு சீக்கிரமே விடுதலை கிடைச்சிடும். அதோட பேப்பர்ஸ் தான் இது, கையெழுத்து போட்டு வை… அடுத்த வாரம் பைல் பண்ணணும்” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டான்.
 
அன்று மருத்துவமனையில் தான் ஏதோ கோபத்தில் சொன்னோம் அதையே பிடித்துக்கொண்டு இவன் இப்படி செய்வான் என்று அவள் நினைத்திருக்கவில்லை.
 
அன்று அவளிடத்தில் பேச மாட்டேன் என்று சொன்னவன் தான் விடுதலை பத்திரம் நீட்டிய போது தான் அதிக வார்த்தைகள் பேசியிருக்கிறான்.
 
சிபி ஏதோ கோபத்தில் சொல்லியிருப்பான், பிறகு வந்து பேசுவான் என்றே அவள் நினைத்திருக்க நடந்ததோ வேறு. அவள் இந்த புறம் வந்தால் அவன் மறுபுறம் செல்வான், அவள் அந்த புறம் வந்தால் இவன் கண்டுக்கொள்ளாமல் இருப்பான்.
 
சிபி வெண்மதியின் கழுத்தில் தாலி கட்டிய புதிது, அவ்வப்போது அவள் சண்டையிடுவாள், நிறைய திட்டியும் இருக்கிறாள். அப்போதெல்லாம் கோபம் வந்தாலும் சிபி அதை மனதில் வைத்ததில்லை. மீண்டும் மீண்டும் வந்து பேசுவான் அவளிடத்தில்.
இப்போது போல அவன் சுத்தமாய் பேசாமல் இருந்ததில்லை. ஏன் அவளை வேண்டாம் என்று முன்னே சொல்லிப் போனவன், அதன் பின்னே வந்து இவளிடத்தில் பிரண்ட்ஸ் பிரண்ட்ஸ் என்று பேசத்தான் செய்வான்.
 
அவள் மனமோ ‘மறுபடியும் அவனுக்கு நான் வேணாம்ன்னு நினைக்கறான் போல… இதொண்ணும் உனக்கு புதிசில்லையே வெண்மதி’ என்று நொந்து கொண்டாலும் தன்னைத்தானே சமாதானமும் செய்துக் கொண்டது.
 
அவளுக்கே புரியவில்லை தான் அவனிடத்தில் என்ன எதிர்பார்க்கிறோம் என்று. ஒன்றும் மட்டும் உணர்ந்தாள் அது அவன் மீது அவளுக்கிருந்த நேசம் இன்னும் நீர்த்து போகவில்லை என்று.
 
அன்று விதையாய் விழுந்தது, இன்று விருட்சமாகியிருக்கிறது. புரியாத பிரியம் பிரியும் போது புரியும் என்பதே நிஜமாய்!!
 
அவளின் கவலை ‘இப்பவும் நான் பிரியணும்ன்னு நினைக்கலையே’ என்பது தான் அது. அவளின் பொறுமையும் கரைந்து கொண்டிருந்தது.
 
அதற்கு தோதாய் செல்வியின் குத்தல் பேச்சு வேறு இருக்க வெண்மதியே அவனிடத்தில் பேசும் நாளும் விரைவில் வந்தது.
 
“அத்தை இந்த குழம்புல மிளகாத்தூள் ரெண்டு ஸ்பூன் போட்டு இருக்கேன், உப்பு எல்லாம் போட்டாச்சு… நீங்க காரம் சரியா இருக்கான்னு பாருங்க” என்றாள்.
 
“என்னது மிளகாத்தூள் போட்டியா?? என்ன சொல்றே நீ?? கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கா உனக்கு. பிள்ளை பெத்தவளுக்கு இப்படியா காரம் போடுவே, நான் மிளகுத்தூள் போட்டு செய்யச் சொன்னா இப்படி மிளகாய்த்தூள் போட்டு வைச்சிருக்கியே”
 
“முன்னாடியே பிள்ளை பெத்தவ தானே இதெல்லாம் தெரிய வேணாமா உனக்கு… உனக்கு எல்லாம் தெரியும்ன்னு தானே நானும் நினைச்சேன்”
 
“நானும் பார்த்திட்டு தான் இருக்கேன் உன்னை, இப்போலாம் உன் மூளை இங்க இருக்கவே மாட்டேங்குது… யார் மேலயோ இருக்க கோவத்தை இதுல தான் காட்டுவியா…”
 
“ஒரு வேலை உருப்படியா செய்யறதில்லை… உன்னையலாம் என்னன்னு தான் வளர்த்தாங்களோ உங்க வீட்டில…”
 
தன் வீட்டினரை குறை சொன்னதும் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. “அத்தை…” என்று கத்தினாள் வெண்மதி.
 
“அம்மா…” என்ற அதட்டல் குரலும் பின்னே கேட்டது.
 
“என்னடா அம்மா?? வந்திருவான் பொண்டாட்டியை எதுவும் சொல்லிற கூடாது இவனுக்கு. இவ இப்படி இருக்கும் போதே நீ இந்த ஆட்டம் ஆடுற, இவ ரதி மாதிரி இருந்தா உன்னையலாம் கையிலவே புடிக்க முடியாது போல…”
 
வெண்மதிக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. ‘இவரும் இவன் போலவே பேசுகிறாரே, பிள்ளையை மாதிரியே தாய், இல்லையில்லை தாயை போல தான் பிள்ளை…’
 
‘ஆக இவங்க கண்ணுக்கு நான் ரதியா இருந்தா தான் என்னை ஏத்துக்குவாங்க அப்படி தானே ஆளாளுக்கு பேசுறாங்க’ என்ற ஓலக்குரல் அவளிடத்தில்.
 
“என்னம்மா பேசறீங்க நீங்க?? உங்களுக்கு இப்போ என்ன பிரச்சனை?? நானும் என் பொண்டாட்டியும் இங்க இருக்கக் கூடாதுன்னு தான் இப்படி பேசறீங்களா…”
 
“ஆஹா என்னவொரு நடிப்பு, உங்கம்மா என்னை பேசுவாங்க… நீங்க எனக்கு சப்போர்ட் பண்ற மாதிரி நடிப்பீங்க, இதை நான் நம்பணுமா, என்னை என்ன முட்டாள்ன்னு நினைச்சீங்களா ரெண்டு பேரும்”
 
“உங்களுக்கு ரதி மாதிரி தான் பொண்ணு வேணும்ன்னா அந்த ரதியவே கட்டி கூட்டிட்டு வந்திருக்க வேண்டியது தானே… என்னை ஏன் கட்டினீங்க??”
 
“உன்னைவிட நான் மட்டமா தெரியணும் அதானே வேணும் உனக்கு… அப்புறம் உங்கம்மாக்கும் உன் நினைப்பு தான் போல… ஆக நீங்க திட்டம் போட்டு தான் இதை செஞ்சு இருக்கீங்க சரியா…” என்று ஆங்காரமாய் பேசினாள்.
 
வெண்மதி கத்திக்கொண்டிருக்க சிபியின் முகத்தில் புன்னகையே!! அவனை திரும்பி அவள் கோபமாய் பார்க்க அவனோ காதலாய் பார்த்து வைத்தான்.
 
“அம்மா அண்ணி கூப்பிடுறாங்க உள்ள போயேன்”
 
“அப்படி ஒண்ணும் தெரியலையே… நான் அவளை எதுவும் சொல்லிடுவேன்னு என்கிட்ட இருந்து அவளை காப்பாத்த போறியா??”
 
“அதெல்லாம் இல்லைம்மா குட்டி தம்பி அழறான் பாரேன்…”
 
“அப்படியா…” என்றவர் வேக வேகமாய் இடத்தை காலி செய்தார்.
 
சிபி கண் இமைக்கும் நேரத்தில் வெண்மதியை கட்டி அணைத்திருந்தான் இப்போது. “வெண்மதி ஐ லவ் யூ…” என்றவாறே.
 

Advertisement