Advertisement

17
 
“இப்போவும் நான் அதே தான் சொன்னேனா??” என்றான் அவளை உற்று நோக்கி. அவன் முகம் இப்போது அவளை காதலாய் பார்த்துக் கொண்டிருந்தது.
 
எந்த பார்வை அவனிடத்தில் இருந்து காண வேண்டும் என்று ஒரு காலத்தில் அவள் விரும்பினாளோ அந்த பார்வை இப்போது அவள் விரும்பாத நேரத்தில்.
 
விரும்பாத நேரமென்றாலும் அது விரும்பிய பார்வை தானே. கண்கள் கள்ளத்தனமாய் அந்த பார்வையை தன்னையுமறியாமல் ரசித்து வைத்தது. அவ்வளவு நேரமிருந்த மனப்பாரம் குறைந்தது கூட அவள் உணரவில்லை அந்நொடி.
 
“இதுக்கு என்ன அர்த்தம்??” கேள்வி அவளிடத்தில்.
 
“உனக்கு என்ன புரிஞ்சுதோ அது தான் அர்த்தம்…” என்றவன் அவளை அணைக்கும் நெருக்கத்தில் நின்றிருந்தான் இப்போது. அவனின் அருகாமை அவளுக்கு இப்போது அவஸ்தையை கொடுத்தது.
 
“என்ன மறுபடியும் முதல்ல இருந்தா” என்றாள் இருவருக்குமான இடைவெளியை சுட்டிக்காட்டி.
 
“ஆமா இப்போ அதுக்கு என்னாங்குற??”
 
“தேவையில்லை…”
 
“இப்போ நமக்கு அது தேவை தான்…” என்றவனின் ஒரு கரம் அவளின் இடையில் இருந்தது.
 
“கை… கை… கையை எடு…” என்றாள் மெதுவாய்.
 
“எடுக்கலைன்னா??” என்று புருவமுயர்த்தினான்.
 
“உன் கையை நான் எடுத்திடுவேன் உன் உடம்புல இருந்து…”
 
“ஆத்தி எனக்கு பயமாயிருக்கே…” என்றவனிடத்தில் மெல்லிய புன்னகை.
 
“எதுக்கு சிரிக்கற??”
 
“உன் வீரத்தை நினைச்சு சிரிச்சேன்…” என்றவனின் மறுகரமும் அவளின் இடையை அணைவாய் பற்றியது.
 
வெண்மதிக்கு அவனின் இச்செயல் அவதியாய் போனது. அவள் நெளிய அதுவும் கூட அவனுக்கு உவப்பாய் இருந்தது.
 
“வெண்மதி…” என்றவன் அவளை நெருங்கப் போக சட்டென்று அவன் மார்பில் கைவைத்து அவனை தள்ளிவிட்டாள்.
 
ஒரு மாயப்புன்னகையுடன் அவனும் விலகிச் சென்றான். இரவு ஆழ்ந்ததொரு உறக்கம் அவனிடத்தில். அவளுக்கோ உறங்கா இரவாய்.
 
விடிய விடிய உறங்கவில்லை அவள். சிபியின் போக்கு ஒரு புறம் இதம் தந்து அவனைப் பற்றிய எண்ணங்களை நோக்கி பயணிக்க இடையில் காலையில் பார்த்த டாக்டர் வேறு வரவும் மீண்டும் ஒரு கலவரம் அவளிடத்தில்.
 
காலையில் எழும் போது கண்கள் எரிந்தது அவளுக்கு. அவசரமாய் காலை உணவை முடித்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல ஏதுவாக பாத்திரத்தில் எடுத்து வைத்தாள்.
 
அவள் எழும்போதே கவனித்தாள் சிபி அங்கில்லை. ‘எங்க போயிருப்பான்??’
 
கண்கள் சிபியை எதிர்பார்த்திருக்க அவன் ஆளே கண்ணில் படவில்லை. வெளியில் சோபாவில் அமர்ந்திருந்த மாமனாரிடம் கேட்கலாம் என்றால் எதுவும் நினைத்துக் கொள்வாரோ என்று எண்ணி அமைதியாய் இருந்தாள்.
 
ஜெயவர்மனும் வீட்டில் இல்லை, அவன் காலையிலேயே மருத்துவமனை கிளம்பிச் சென்றிருப்பான் போலும்.   சிபி இன்னமும் வரவில்லை, நேரம் செல்ல செல்ல அவளுக்கு பதட்டம் அதிகரித்தது.
 
குழந்தையை பெற்றவளுக்கு பசித்திருக்குமே இந்நேரம் என்ற கவலை அவளுக்கு. ‘எங்க தான் போனானோ’ என்று திட்டிக் கொண்டாள்.
 
ஒருவாறு தயங்கிக் கொண்டே வந்து பசுங்கிளியிடமே கேட்டுவிட்டாள். “மாமா அவர் எங்க?? ஆஸ்பிட்டல் போகணுமே நேரமாச்சே??”
 
“இங்க தானேம்மா இருந்தான்… நீ வேணா ஒரு போன் பண்ணி பாரும்மா…” என்றார் அவர்.
 
“சரி மாமா நான் போன் பண்றேன், நீங்க வந்து முதல்ல சாப்பிடுங்க உங்களுக்கு எடுத்து வைக்கறேன்…” அவருக்கு உணவு வைத்துவிட்டு சிபிவர்மனுக்கு அழைக்க முழு ரிங்கும் சென்று அழைப்பு எடுக்கப்படாமல் ஓய்ந்தது.
‘கோவமா இருக்கானா… ரொம்ப பலமா பிடிச்சு தள்ளிட்டமோ… நம்ம அவ்வளவு ஸ்ட்ரோங் பாடியா… இது உனக்கே கொஞ்சம் ஓவரா இல்லையா…’ என்று அவளின் மனசாட்சியே அவளை கிண்டலும் செய்தது.
 
‘இருந்தாலும் இவனுக்கு ரொம்ப திமிர் தான், என்ன தைரியமாகிட்ட வர்றான்… இனிமே வரவிடக்கூடாது, ஏதோ யோசனையில இருக்க போய் பக்கத்துல வந்ததை சரியா கவனிக்காம விட்டுட்டேன்…’ (நிஜமாவா… மீண்டும் அந்த மனசாட்சி சாட்சி சொல்ல வந்தது அது உண்மையில்லை என்று கூறுவது போல)
 
“என்னம்மா போன் எடுத்தானா??”
 
“இல்லை மாமா எடுக்கலை…”
 
“இரும்மா நான் சாப்பிட்டு வந்து போடுறேன்…”
 
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே சிபி உள்ளே வந்தான் “கூப்பிட்டீங்களாப்பா” என்று.
 
“ஆமாய்யா நீ எங்க போனய்யா, மருமக போன் போட்டா எடுக்கலையாம்”
 
“போன் சைலென்ட்ல இருக்கு கவனிக்கலைப்பா, என்ன விஷயம்??”
 
“டிபன் ரெடியா இருக்கு எடுத்திட்டு போகணும்ல, நீயும் என்னோட உட்கார்ந்து சாப்பிடு… அப்புறம் எடுத்திட்டு போவே…”
“இல்லைப்பா இப்போ வேணாம், கொஞ்ச நேரம் முன்னாடி தான் காபி சாப்பிட்டேன், உடனே என்னால சாப்பிட முடியாது. நான் முதல்ல ஆஸ்பிட்டலுக்கு கிளம்புறேன்…” என்றவன் மருந்துக்கும் அவள் புறம் கூட திரும்பவில்லை.
 
‘இவனுக்கு நான் காபி கொடுக்கவே இல்லையே. இவனைத்தான் காலையில இருந்து நான் பார்க்கவே இல்லையே… எதுக்கு இப்படி அளந்து விடறான்…’
 
‘ஆமா எனக்கு வரவேண்டிய கோபமெல்லாம் இவனுக்கு எதுக்கு வருது… சார் என்னை பார்த்து பேசமாட்டாராமா… ஒரு வேளை நைட் நாம நிஜமாவே ரொம்ப பலமா பிடிச்சு தள்ளிட்டமோ, வலிச்சிருக்குமோ…’ மீண்டும் அவள் சாகசத்தை எண்ணினாள்.
 
சிபிவர்மனோ ஓரக்கண்ணால் இவளின் முகத்தில் தெரியும் பாவனைகளை கண்டு ரசித்துக் கொண்டிருந்தான்.
 
அந்நேரம் அவளின் கைப்பேசி சிணுங்க பொத்தானை அழுத்தி காதில் வைத்தாள். “சொல்லுங்க அத்தை…” என்று அவள் சொல்வது காதில் விழவும் அவன் பார்வை நேராகவே அவளைப் பார்த்தது இப்போது.
 
“நானா… அங்கேயா… அப்போ இங்க… நீங்க மாமா கூட வந்திடறீங்களா… ஹ்ம்ம் சரி அத்தை நான் இப்போ அவர் கூட வர்றேன்… சீக்கிரம் வந்திடறோம்…” என்றுவிட்டு போனை வைத்தாள்.
 
“என்னாச்சும்மா??”
 
“மாமா அத்தை என்னையும் வரச்சொல்றாங்க… நீங்களும் இப்போ எங்க கூட கிளம்புவீங்களாம்… நானும் அவரும் அங்க இருந்து அவங்களை டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு வருவோம்…”
 
“நீங்க ஆஸ்பிட்டல் போனதும் அத்தையை கூட்டிட்டு வீட்டுக்கு வருவீங்களாம்… அத்தை இங்க வந்து எல்லாம் ரெடி பண்ணணுமாம் கொஞ்சம்”
 
“உங்க அத்தை சொன்னா சரியா தான் இருக்கும், நீ போய் சாப்பிட்டு கிளம்பும்மா…”
 
அவளின் பார்வை சிபியை நோக்கிச் சென்றது. ‘இப்போ எதுக்கு என்னை லுக்கு விடறா… பெரிய இவ இவ நாங்க சாப்பிடலைன்னா இவங்க சாப்பிட மாட்டாங்களாமா…’ என்று எங்கோ பார்த்தவாறே அவள் பார்வைக்கு பதில் கொடுத்துக் கொண்டான்.
 
”பின் பசுங்கிளியிடம் “இல்லை மாமா நான் வந்து சாப்பிட்டுக்கறேன், இப்போ போய் கிளம்பறேன்” என்றுவிட்டு கிளம்பச் சென்றுவிட்டாள்.
 
“வர்மா நீ டிரைவர்கிட்ட சொல்லி வண்டியை திருப்பி ரெடியா இருக்கச் சொல்லு, நாம கிளம்புவோம்…”
 
நெற்றியில் விரல் தேய்த்து என்னவோ யோசித்தபடி நின்றவன் “அப்பா நீங்க போய் டிரைவர்கிட்ட சொல்லுங்க, நாங்க ஒரு ஐஞ்சு நிமிஷத்துல சாப்பிட்டு வந்திடறோம்…”
 
வெண்மதி தயாராகி வெளியில் வந்ததும் போகலாம் என்பது போல் தலையை ஆட்ட “எனக்கு பசிக்குது சாப்பிட்டு போகலாம்” என்றான்.
 
“அப்போ காபி சாப்பிட்டேன்னு சொன்னது பொய்யா…”
 
“காபி சாப்பிட்டது உண்மை தான்…”
 
“நான் தான் காலையில இருந்து உங்களை பார்க்கவே இல்லையே…” என்று அவள் காபி தராததிற்கு விளக்கம் போல் சொல்ல சிபிவர்மனோ அவள் தன்னை தேடியிருக்கிறாள் என்று மகிழ்ந்து போனான்.
 
“நீ தூங்கிட்டு இருந்த, டிஸ்டர்ப் பண்ண வேணாம்ன்னு வெளிய போய் சாப்பிட்டேன்… டிபன் எடுத்துட்டு வா ரெண்டு பேரும் சேர்ந்தே சாப்பிட்டு கிளம்புவோம்…” என்று அவன் சொல்ல உள்ளே சென்றவள் டிபன் அடங்கிய தட்டுடன் வெளியில் வந்தாள்.
 
இருவரும் வேகமாய் உண்டு முடித்து மருத்துவமனை கிளம்பினர். வெண்மதி முகம் ஏதோ யோசனையாய் இருப்பதை சிபி கண்டுக்கொண்டாலும் அவளிடம் ஒன்றும் கேட்டுக்கொள்ளவில்லை.
 
வெண்மதி காரில் இருந்து இறங்கும் போதே அந்த மருத்துவர் இவளை கவனித்துவிட்டார். அவளுமே இவரை கவனிக்கத் தான் செய்தாள். மனம் படபடவென்று அடித்துக்கொண்டது.
 
‘கடவுளே இவரின் கண்ணில் படாமல் இங்கிருந்து கிளம்பிட வேண்டும்’ என்ற வேண்டுதல் அவளிடத்தில்.
 
மருத்துவரோ அவளிடம் பேச வேண்டும் என்று பின்னாலேயே வர அதற்குள் அவர்கள் உள்ளே சென்று மறைந்திருந்தனர்.
 
அம்மருத்துவரும் சரி பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து சென்றுவிட்டார். எத்தனை வேலைகள் செய்த போதிலும் அவருக்கு இதுவே மண்டைக்குள் ஓடிக் கொண்டிருந்தது.
 
எவ்வளவு ரிஸ்க் எடுத்து செய்த ஒரு வேலை அது, அதன் பலன் என்ன என்று அறிய அவருக்குமே ஆர்வமாய். அதனாலேயே அவருக்கு வெண்மதியின் நலனும் குழந்தையின் நலனும் பற்றி அறிய வேண்டி இருந்தது.
 
வெண்மதி கொண்டு வந்த காலை உணவை உண்டுவிட்டு அனைவரும் வீட்டிற்கு கிளம்பத் தயாராயினர். செல்வியும் பசுங்கிளியும் முன்னரே கிளம்புவதாய் இருக்க அவர்கள் வீட்டிற்கு செல்ல தேவையானதை முன்னரே எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர்.
 
“மதி இந்த மருந்து எல்லாம் எப்போ கொடுக்கணும்ன்னு டாக்டர்கிட்ட கேட்டுட்டு வந்துடறியாம்மா…”
 
வெண்மதியின் முகம் வெளுத்தது. எங்கே அந்த மருத்துவரை பார்த்துவிடுவோமோ குழந்தையை என்னிடம் இருந்து பிரித்துவிடுவார்களோ என்ற பயம் அவளிடத்தில்.
 
“இல்லை… அது…” என்று தயங்கியவள் “அந்த சீட்டு கொடுங்க அத்தை நான் பார்க்கறேன்…” என்றாள்.
 
“அவங்க தெளிவா தான் எழுதி இருக்காங்க அத்தை…” என்றவள் அவருக்கு விளக்கினாள்.
 
‘நல்ல வேளை நாம பார்க்கற வேலை நம்மை காப்பாத்துச்சு…’ என்று அவள் எண்ணி முடிப்பதற்குள் செல்வி அடுத்தொரு வேலை சொன்னார் அவளுக்கு.
 
ஜெயவர்மனும் சிபிவர்மனும் டிஸ்சார்ஜ் சம்மரி வாங்கிவிட்டு பணத்தை செட்டில் செய்வதற்காக சென்றிருந்தனர்.
 
“அச்சோ மதி மறந்துட்டேன், டாக்டர் கிளம்புற அன்னைக்கு பாப்பாக்கு ஏதோ ஊசி போடணும் சொன்னாங்க… நான் மறந்துட்டேன், குழந்தை டாக்டர் அந்த ரெண்டாவது ரூம்ல இருப்பாங்க… நீ போய் சொல்லிட்டு வந்திடறியா…”
 
இதற்கு மேல அவரிடம் மறுப்பதற்கு எதுவுமில்லை என்ற எண்ணத்தில் “சரிங்க அத்தை நான் போய் டாக்டர்கிட்ட சொல்லிட்டு வர்றேன்…” என்று நகர்ந்தாள் அவள்.
 
குழந்தை மருத்துவரிடம் சொல்லிவிட்டு இவள் வரவும் சிபியும் ஜெய்யும் எதிரில் வந்தனர். “எங்கம்மா போயிட்டு வர்றே??” என்றான் ஜெய்.
 
“கிளம்பற அன்னைக்கு குட்டி பையனுக்கு ஊசி போடணும்ன்னு டாக்டர் சொன்னாங்கன்னு அத்தை சொன்னாங்க… அதான் டாக்டர் பார்த்து சொல்லிட்டு போகலாம்ன்னு வந்தேன் மாமா”
 
“இந்தம்மாக்கு இதே வேலையா போச்சு… நாங்க இப்போ தானே வெளிய வந்தோம் எங்ககிட்ட சொல்லியிருக்க வேண்டியது தானே… இல்லை அப்பாகிட்டயாச்சும் சொல்லிவிட்டிருக்கலாம்ல, சரிம்மா டாக்டர் என்ன சொன்னாங்க…”
 
“குழந்தையை தூக்கிட்டு வரச்சொன்னாங்க மாமா…”
 
“சரிம்மா நீ அம்மாகிட்ட சொல்லு, டிஸ்சார்ஜ் சம்மரி கிடைக்க கொஞ்ச நேரம் ஆகுமாம், வெயிட் பண்ண சொல்லியிருக்காங்க… நாங்க பார்த்து வாங்கிட்டு வந்திடறோம்”
 
“ஹ்ம்ம் சரி மாமா…” என்று நகரப்போனவள் எதிரில் வந்துக் கொண்டிருந்தவரை பார்த்ததும் கை கால் எல்லாம் சில்லிட்டு போனது அவளுக்கு. கண்கள் இருட்டிக்கொண்டு வர அப்படியே மயங்கி சரிந்தாள்.
 
பின்னால் இவள் விழும் சத்தம் கேட்கவும் சிபி வேகமாய் வந்து அவளை தன் மேல் சாய்த்துக் கொண்டு எழுப்ப முயல எதிரே வந்துக் கொண்டிருந்த அம்மருத்துவர் வெண்மதியையும் அவளைத் தாங்கிக் கொண்டிருந்த சிபியையும் ஒரு பார்வை பார்த்துக்கொண்டார்.
 
அவரின் ஸ்டெத்தை கொண்டு அவளை பரிசோதித்தார். “நீங்க இவங்களோட??”
 
“ஹஸ்பன்ட் டாக்டர்…” என்றவன் சொன்னதும் ‘என்ன இவரு ஹஸ்பன்ட்டா அப்போ??’ என்ற கேள்வி அவருக்கு எழுந்த போதும் ஒன்றும் பேசவில்லை அவர்.
 
“உள்ளே கூட்டிட்டு வாங்க…” என்றார்
 
“வர்மா என்னாச்சுடா மதிக்கு…”
 
“தெரியலை ஜெய் நான் போய் டாக்டரை பார்க்கறேன், நீ அம்மாகிட்ட சொல்லிடு…” என்றுவிட்டு மருத்துவரின் பின்னே சென்றான்.
 
அவளை மீண்டும் ஒரு முறை பரிசோதித்தவர் “காலையில சாப்பிட்டாங்களா??” என்று விசாரித்தார் அவனிடம்.
 
“சாப்பிட்டாங்க டாக்டர்…”
 
“ஏதோ ஸ்ட்ரெஸ் மாதிரி இருக்கு, ரொம்ப டென்ஷன் ஆவாங்களோ?? இதுக்கு முன்னாடி இப்படி ஆகியிருக்கா?? தப்பா எடுத்துக்க வேண்டாம், உங்க ரெண்டு பேருக்குள்ள சண்டை, இப்படி ஏதாவது…”
 
“அப்படிலாம் ஒண்ணுமில்லை டாக்டர்”
‘இதென்னடா வம்பா போச்சு, இவ மயக்கம் போட்டு விழுகறதும் அதுக்கு நான் தான் காரணம்ன்னு எல்லாரும் பேசுறதும்… நான் என்னய்யா செஞ்சேன்…’ என்ற புலம்பல் உள்ளூர இருந்த போதும் சமாளித்துக் கொண்டு மருத்துவருக்கு பதில் கொடுத்தான்.
 
“இதுக்கு முன்ன ஒரு முறை இப்படி ஆகி இருக்கு… திரும்பவும் சொல்றேன் நாங்க சண்டை எல்லாம் ஒண்ணும் போடலை டாக்டர், ஆனா நீங்க ஏன் அப்படி கேட்டீங்க??”
 
“வீட்டில இருக்க லேடீஸ் பெரும்பாலும் இது போல விஷயத்துக்கு தான் டென்ஷன் ஆவாங்க அதான் அப்படி கேட்டேன்…”
 
“இப்போ எப்படி இருக்கா டாக்டர்??”
 
“கொஞ்சம் அனிமிக்கா இருக்காங்க, நான் நர்ஸ் கூப்பிட்டு ட்ரிப்ஸ் போடச் சொல்றேன்… மாத்திரை எல்லாம் எழுதித் தர்றேன், கவனமா பார்த்துக்கோங்க…” என்றார்.
 
“கண்டிப்பா டாக்டர்…”
 
“ட்ரிப்ஸ் இங்கவே போடுறீங்களா??”
 
“ஏன்?? என்னாச்சு??”
 
“இல்லை எங்க அண்ணிக்கு குழந்தை பிறந்து இருக்கு அவங்க ரூம்லவே வைச்சு போட்டிறலாமே அதான் கேட்டேன்…”
 
“மயக்கமா இருக்காங்களே, இவங்களை எப்படி கூட்டிட்டு போவீங்க??”
 
“நான் பார்த்துக்கறேன் டாக்டர்…” என்றவன் அவளை தாங்கிக் கொண்டு அவர்கள் இருந்த அறைக்கு சென்றான்.
 
மருத்துவரும் பின்னோடு வந்து அவளுக்கு ட்ரிப்ஸ் மாட்டச் செய்து ஊசி போட்டுவிட்டு சென்றார்.
 
“என்னாச்சுய்யா வர்மா??”
 
“ஒண்ணுமில்லைம்மா மயக்கம் தான்…”
 
“அதான் ஏன்??”
 
“அனிமிக்கா இருக்காளாம்…”
 
“அப்படின்னா??”
 
“சோகையா இருக்காளாம்மா…”
 
“ரத்த சோகையா!!” என்று அதிர்ந்தார் செல்வி.
 
“ஐயோ அம்மா அதெல்லாம் இல்லை… கொஞ்சம் சத்து குறைவா இருக்கா… போதுமா” என்று விளக்கினான் அவன் அன்னைக்கு.
 
“நீங்க வீட்டுக்கு கிளம்புங்க, நல்ல நேரம் முடிஞ்சிட போகுது… இவளுக்கு ட்ரிப்ஸ் முடிஞ்சதும் நான் இவளை கூட்டிட்டு வர்றேன்…”
 
“இல்லைடா நாங்க இருக்கோம்…”
 
“ஆமாங்க நாங்க இருக்கோமே, வெண்மதி பாவம் என்னால தான் இவளுக்கு ரொம்ப வேலை… அதான் இப்படி ஆகிப்போச்சு போல…” என்று ரஞ்சனா வருந்த “ஐயோ அதெல்லாம் இல்லை அண்ணி…”
 
“நீங்க நல்ல நேரத்துல வீட்டுக்கு கிளம்புங்க… அப்புறம் குட்டி பையனுக்கு ஊசி போட்டாச்சா…”
 
“போட்டாச்சு, இப்போ தான் போட்டுட்டு வந்தோம்”
 
“நல்லது நீங்க கிளம்புங்க, நாங்க சீக்கிரம் வீட்டுக்கு வந்திடறோம். ஜெய் கூட்டிட்டு போ, அப்பா சொல்லுங்க” என்றான் அவர்களையும் துணைக்கழைத்து.
 
“அதான் அவன் சொல்றான்ல கிளம்பு செல்வி…” என்றார் பசுங்கிளி மனைவியிடம்.
 
“டேய் வர்மா கொஞ்ச நேரம் தானேடா, நாம எல்லாரும் ஒண்ணாவே வீட்டுக்கு போகலாம்…” என்றான் உடன்பிறந்தவன்.
“சொல்றதை கேளு ஜெய்…” என்று அவன் அழுத்திச் சொல்லவும் மற்றவர்கள் மனமேயில்லாமல் கிளம்பினர்.
 
அவர்கள் சென்ற சில நிமிடங்களில் மருத்துவர் மீண்டும் வந்து அவளை பரிசோதித்தார். பின் அவனிடம் “இவங்க உங்க மனைவி தானா…” என்று அவர் மீண்டும் கேட்கவும் “என்னாச்சு டாக்டர்?? எதுக்கு அப்படி கேட்கறீங்க?? மதியை உங்களுக்கு முன்னாடியே தெரியுமா??” என்றான் அவன்.
 
“ஹ்ம்ம் தெரியும்…”
 

Advertisement