Advertisement

 
16
 
“ஏன் மாமா அதுக்கும் அவங்க சம்மதிக்க மாட்டாங்களா??”
 
“தெரியலை மதி…” என்றவனின் குரலில் வேதனையின் சாயல்.
 
“மதி நமக்கு இப்போ நேரமில்லை, சீக்கிரம் போய் அவளை பார்க்கணும்… போகலாமா??”
“கண்டிப்பா மாமா…”
 
“ஆனா வீட்டில என்ன சொல்றது மதி??”
 
“நீங்க வேலை இருக்கு பிரண்ட் பார்க்க போறேன்னு சொல்லிட்டு கிளம்புங்க… நான் நர்சிங்ல ஒரு ட்ரைனிங்ன்னு சொல்லிட்டு சென்னை வர்றேன் மாமா…”
 
“மாமா இன்னொரு விஷயம்??”
 
“சொல்லு மதி…”
 
“அவங்க இந்த மாதிரி இருக்கும் போது டாக்டர்ஸ் இப்படி செய்ய அலோவ் பண்ண மாட்டாங்களே மாமா…”
 
“தெரியும் மதி, அதைப்பத்தி விசாரிக்க தான் நான் காலையில வெளிய போயிட்டு வந்தேன். என் பிரண்ட் நம்ம தேனி ஆஸ்பிட்டல்ல தான் வேலை செய்யறான்”
 
“அவனோட கூட வேலை செய்யற டாக்டர் எல்லாம் பார்த்து பேசி விசாரிச்சுட்டேன்… பார்கவிக்கு ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே அவளோட கருமுட்டையை பத்திரப்படுத்தி வைச்சா இதுக்கு சாத்தியம்ன்னு சொன்னாங்க…”
 
“பார்கவி… அதான் அவ பேரு…” என்றவன் “அடுத்த மாசம் தான் ஆஸ்பிட்டல்ல அட்மிட் ஆகப் போறா… ட்ரீட்மென்ட் போக முன்னாடி அவளை அதுக்கு தயார் பண்ணணும் இல்லையா, அதும் இல்லாம அவளுக்கு வீட்டில எல்லார்கூடவும் இருக்கணுங்கற ஆசை வேற” என்று வருத்தத்தோடு சொல்லி முடித்தான் அவன்.
 
“வருத்தப்படாதீங்க மாமா” என்று அவனை ஆறுதல்ப்படுத்தியவள் சொன்னது போல வீட்டில் ட்ரைனிங் இருப்பதாக சொல்லி சென்னை சென்றாள்.
 
இருவரும் சென்னையில் கதிரின் காதலி பார்கவியின் முன்னே இருந்தனர். அழகாய் இருந்தாள் அப்பெண், முன்பு இன்னும் அழகாய் இருந்திருப்பாள் என்று தோன்றியது.
 
இப்போது உடல் இளைத்து முகத்தில் ஒரு சோர்வு தெரிந்தது, ஆனாலும் பொலிவான முகம் அவளுக்கு. அணையப் போகும் ஜோதி மலர்ச்சியாய் தெரியும் என்பார்களே அது இது தானோ!! என்றெல்லாம் தோன்றியது வெண்மதிக்கு.
 
“மதி உங்க ரெண்டு பேரையும் இப்படி ஒண்ணா பார்க்க எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா…” என்றவளிடம் முதல் நாளே கதிர் அவர்களின் திருமணம் பற்றி சொல்லியிருப்பான் போலும்.
 
“கவி நாங்க உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும்…”
 
“உங்க கல்யாண விஷயம் தானே கதிர்…”
 
“அது மட்டுமில்லை… நான் முதல்லயே சொன்னது தான் எனக்கு உன் நினைவா நீ கொடுக்கறன்னு சொன்னது உனக்கு ஞாபகம் இருக்கு தானே… நேத்து உன்கிட்ட பேசும் போது நீ அதுக்கு சரின்னு சொல்லியிருந்த”
 
“அது நேத்து உங்ககிட்ட முடியாதுன்னு சொல்லக்கூடாதுன்னு ஒரு பேச்சுக்கு சொன்னேன்… அதெல்லாம் நடக்காது கதிர் விட்டுடுங்க ப்ளீஸ்…”
 
“நடக்கும் கவி…”
 
“நடக்கறதை பேசுங்க…” என்று அவனிடம் சொன்னவள் “மதி நீங்க தப்பா எடுத்துக்காதீங்க கதிர் பேசுனதை கேட்டு… அப்படி எல்லாம் எதுவும் நடக்காது…”
 
“ஏன் நடக்காதுன்னு சொல்றீங்க?? மாமா சொன்னதுக்காக மட்டும் நான் இங்க வரலை, உண்மையாவே எனக்கு உங்களை பார்க்கணும்ன்னு தான் வந்தேன்… அவங்க ஆசையை நான் மதிக்கறேன்”
 
“அது நடக்காது மதி, ப்ளீஸ் வேணாம்… என்னோட எந்த மிச்சமும் இந்த உலகத்துல வேணாம்…” என்று ஓய்ந்து பேசிவளிடம் காலில் விழுந்து கெஞ்சாத குறையாய் கதிர்வேலன் பேச அவள் மனம் இறங்கியது.
 
ஏதேதோ பேசி அவள் வீட்டினரையும் சம்மதிக்க வைத்திருந்தான் கதிர். அவனின் அந்த ஆசை மிக சவாலாகவே இருந்தது.
 
அதை நிறைவேற்றுவதற்குள் அவன் ஒருவழியாகி இருந்தான். எல்லாரும் ஒருமனதாகி நடக்கப் போகும் விஷயத்திற்கு சம்மதம் தெரிவித்திருக்க அடுத்து அவன் மருத்துவரை சம்மதிக்க வைக்க போராடினான்.
 
அவர் முடியாது என்று சொல்லவில்லை, அப்படி செய்யவது சரிவராது என்றார். மகப்பேறு மருத்துவருக்கு தன்னால் பரிந்துரை செய்ய முடியாது என்று அவளை பார்த்துக் கொண்டிருக்கும் மருத்துவர் மொத்தமாய் மறுத்தார்.
 
பின் அவனுக்கு தெரிந்த ஆர்மி மருத்துவர் ஒருவரின் உதவியுடன் வேறு ஒரு மகப்பேறு மருத்துவர் ஒருவரை அணுகி நடந்த விஷயத்தை சொல்லி கெஞ்சி அவரை ஒருவழியாய் சம்மதிக்க வைத்திருந்தான்.
 
அவரை வைத்தே பார்கவிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரை சம்மதிக்கச் செய்தான். அவர்கள் இருவரும் கலந்தாலோசித்து கடைசியாய் ஒப்புக்கொண்டனர்.
 
குழந்தை பிறந்தபின் வேறு மாதிரியான பிரச்சனைகள் இருந்தால் அக்குழந்தையை நல்லபடியாக வளர்ப்பதற்கு அவர்களே பொறுப்பு என்று கதிரிடமும் வெண்மதியிடமும் எழுத்துவாக்கில் எழுதி வாங்கிக்கொண்டனர்.
 
பார்கவியின் கருமுட்டை தானத்திற்கு தேவையானவற்றை இருவரும் அங்கிருந்து செய்து முடித்தனர்.
 
பின்னர் ஐவிஎப் செய்வதற்கான நாளை குறித்துக்கொண்டே அவர்களிருவரும் சென்னையை விட்டு கிளம்பினர். ஊருக்கு சென்றதும் கதிர் தன் மாமனிடம் பேசி அடுத்து வந்த நல்ல முகூர்த்தத்திலேயே வெண்மதியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டான்.
 
இரண்டொரு நாளில் அவர்கள் தேனிலவு செல்வதாக கூறி கிளம்பினர். சென்னைக்கு வந்ததும் ஐவிஎப்க்கான ஆயத்தங்கள் தொடங்கியது.
 
எல்லாம் முடியும் தருவாய் வெண்மதி ஒரே ஒரு வேண்டுகோள் மட்டும் வைத்தாள். “மதி இப்படி லாஸ்ட் மினிட்ல என்ன விளையாட்டு, உனக்கே தெரியும் எனக்கு இது எவ்வளவு முக்கியம்ன்னு…”
 
“மாமா நான் வேணாங்கலை, எனக்கு பார்கவிகிட்ட பேசணும்… அவங்க வீட்டுக்கு போயிட்டு அவங்களையும் கூட்டிட்டே ஆஸ்பிட்டல் போகலாம்…”
 
“அவங்க வீட்டுல இதுக்கு சம்மதிச்சதே பெரிசு மதி… நாம அங்க போறதை அவங்க விரும்பாம கூட இருக்கலாம்…”
 
“எனக்காக மாமா ப்ளீஸ் ஒரே ஒருவாட்டி கூட்டிட்டு போங்க…”
 
“உன்னோட இந்த பிடிவாதம் எதுக்குன்னு தெரியலை… சரி போவோம்” என்றவன் பார்கவியின் வீட்டிற்கு அவளை அழைத்துச் சென்றான்.
 
“நீங்க ஆஸ்பிட்டல் போகலையா… நான் அங்க வந்து உங்களை பார்க்கலாம்ன்னு நினைச்சனே” என்றாள் அப்பெண் பார்கவி.
 
“அதுக்கு முன்னாடி உங்களை பார்க்கணும்ன்னு நான் தான் மாமாவை இங்க கூட்டிட்டு வந்தேன்… நீங்க இன்னும் ஆஸ்பிட்டல்ல அட்மிட் ஆகலையா??”
“நாளைக்கு ஆகறேன்” என்றவள் “சொல்லுங்க மதி, என்ன விஷயம் இவ்வளவு தூரம் என்னைப் பார்க்க வந்திருக்கீங்கன்னா…” என்று முடிக்காமல் மற்றவளை பார்த்தாள்.
 
“நீங்க எங்க மாமாவை கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கணும்”
 
கேட்ட பார்கவிக்கும் கதிர்வேலனுக்கும் அதிர்ச்சி என்றால் மிகையாகாது. பார்கவியின் பெற்றோரும் கூட அவளை அதிர்ச்சியாய் தான் பார்த்தனர்.
 
“நீ என்ன லூசா?? எந்த பொண்டாட்டியாச்சும் இப்படி சொல்வாளா?? முட்டாளா நீ??” என்று சீறினாள் அவள்.
 
“என்னை என்ன வேணா சொல்லிக்கோங்க நீங்க… கடைசிவரை மாமாவை கல்யாணம் பண்ணிக்க முடியாம போச்சேன்னு உங்களுக்கு எந்த எண்ணமும் இருக்கக்கூடாதுன்னு நினைக்கிறேன்…”
 
“மாமாவோட நூறு வருஷம் வாழலைன்னாலும் உங்க கடைசி நொடி வரை அவரோட மனைவியா இருக்கறதை நீங்க விரும்ப மாட்டீங்களான்னு சொல்லுங்க”
 
“நீ பேசறதே எனக்கு பிடிக்கலை மதி… எனக்கு அப்படி எந்த ஆசையும் இப்போ இல்லை…”
 
“சரி இது உங்க ஆசை இல்லை… என்னோட ஆசைன்னே வைச்சுக்கலாம், உங்கம்மா அப்பாவுக்கும் கூட பொண்ணுக்கு எதுவும் செய்யலைன்னு கஷ்டமா இருக்காதா… அவங்களுக்காக யோசிக்க மாட்டீங்களா”
 
“உங்களுக்கு இருந்த ஒரே பிரச்சனை மாமாக்கு கல்யாணம் ஆகறதுல எதுவும் பிரச்சனை வருமோன்னு தானே… அதான் எங்க கல்யாணம் நடந்திடுச்சுல”
 
“நீ என்ன சொன்னாலும் சரி நான் இதுக்கு சம்மதிக்க மாட்டேன்…” என்று பிடிவாதமாக மறுத்தாள் பார்கவி.
 
“சரி கடைசியா ஒண்ணே ஒண்ணு அதுக்காச்சும் ஒத்துக்கோங்க ப்ளீஸ்… இல்லைன்னா என் மனசாட்சி என்னை உறுத்தும்… மாமாக்கும் ஒரு நிம்மதி கிடைக்கும்…”
 
“என்ன சொல்றே?? அவர் நிம்மதிக்காக தானே நான் இதுக்கு சம்மதிச்சேன்… அப்புறம் அவர் நிம்மதிக்கு என்னாகும்ன்னு நீ நினைக்கிறே”
 
“மாமா வெளிய சொல்லலைனாலும் எனக்கு அவங்க நியாயம் செய்யலைன்னு அவங்களுக்கு ஒரு உறுத்தல் இருக்கு”
 
“அவங்க காதலியோட கருவை சுமக்க சொல்றோமே அதுவும் மனைவிகிட்டன்னு அவங்களுக்கு குற்றவுணர்ச்சி இருக்கு… அதுவே தன்னோட மனைவியோட கருன்னு நினைக்கும் போது அந்த அந்நியம் தோணாது இல்லையா”
 
“இதுக்காக தான் நான் இதெல்லாம் வேணாம்ன்னு சொன்னேன்…”
 
“நீங்க திரும்பவும் முதல்ல இருந்து ஆரம்பிக்கறீங்க… மாமாவோட அன்புக்கு நீங்க நியாயம் செய்ய வேணாமா… உங்க மேல எந்தளவுக்கு அவங்களுக்கு பிரியம் இருந்தா இப்படி ஒரு காரியம் செய்ய துணிவாங்க…”
 
“அவங்களோட இந்த காதல் எனக்கு பிடிக்குது… அதை நான் மதிக்கறேன்… கடைசியா உங்களை ஒண்ணு தான் நான் கேட்கறேன்… நீங்க தாலி கட்டிக்க வேணாம், உங்க அன்புக்கு சாட்சியா ப்ளீஸ் எங்களுக்காக இந்த மோதிரத்தை மட்டுமாச்சும் மாத்திக்கணும்”
 
பார்கவிக்கு அதற்கு மேல் வாதாட மனதில்லை. வெண்மதி கதிர்வேலனுக்காய் மட்டுமல்லாது தன் விருப்பம் என்பதையும் உணர்ந்தே தான் இதை செய்கிறாள் என்பது அவளுக்கு மிகத்தெளிவாய் புரிந்தது.
 
ஒருவழியாய் வெண்மதி சொன்னதிற்கு சம்மதம் தெரிவித்தாள். மற்றவர்களின் முன்னே இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டார்கள். கதிர்வேலன் வெண்மதியை நன்றியாய் பார்த்தான் என்றால் பார்கவி தன் கடைசி ஆசையை நிறைவேற்றிய தெய்வமாகவே பார்த்தாள்.
 
ஐவிஎப் நல்லபடியாக முடிந்தது. கணவன் மனைவி இருவரும் தேனிக்கு பயணப்பட்டனர். சென்னைக்கு வந்து அதே மருத்துவ மனையில் சிகிச்சை பெற முடியாது என்பதால் வெண்மதிக்கு தேனியில் இருந்த மருத்துவரை பரிந்துரை செய்து அங்கேயே அவள் சிகிச்சையை தொடர ஏற்பாடு செய்தார் சென்னை மருத்துவர்.
 
இவர்கள் ஊருக்கு சென்ற பத்து நாட்களிலேயே பார்கவியின் உயிர் ஓர் இரவில் பிரிந்திருந்தது. செய்தி கேட்டவன் முகம் அதீத வேதனையில் இருக்க வெண்மதி தான் அவனை சமாதானம் செய்து சென்னைக்கு அனுப்பி வைத்தாள்.
 
எல்லாம் முடிந்து அவன் இரண்டே நாளில் ஊருக்கு திரும்பியிருந்தான். விரைவிலேயே அவர்கள் எதிர்பார்த்த அந்த சந்தோஷ திருநாளும் வந்தது வெண்மதி கருவுற்றாள். அன்று கதிர்வேலன் அடைந்த சந்தோசத்திற்கு அளவேயில்லை.
 
தன்னுயிர் மீண்டும் வந்துவிட்டதாகவே அவனுக்கு தோன்றியது. பார்கவி தான் தனக்கு மீண்டும் பிறக்கப் போகிறாள் என்றே சொல்லிக் கொண்டிருந்தான் ஒவ்வொரு நொடியும்.
 
நான்கு மாத விடுமுறையில் வந்திருந்தவன் தன் விடுமுறையை நீட்டித்திருந்தான். இன்னும் ஒரு முறை சென்று வந்த பின்னே வேலையைவிட்டு விடலாம் என்று எண்ணியிருந்தான்.
 
வெண்மதிக்கு நான்காம் மாதம் நடந்துக் கொண்டிருந்தது. மாதாந்திர செக்கபிற்காய் தேனி சென்றிருந்தனர் இருவரும்.
 
திரும்பி வரும் வழியில் தான் அந்த கோர விபத்து நடந்திருந்தது. எப்போதும் கவனமாய் தான் வண்டி ஓட்டுவான் கதிர்வேலன்.
 
வண்டியில் ஏதோ பழுது ஏற்பட்டிருந்ததை கவனிக்காமல் அவனும் வண்டியை எடுத்திருந்தான் அன்று.
 
திருப்பத்தில் வந்த லாரியை கண்டு அவன் பிரேக் பிடிக்க முயல அது நடவாமல் போகவும் அதைத்தடுக்க அவன் வண்டியை இடது புறமாய் ஒடிக்க வேண்டியவன் ஏதோ ஒரு வேகத்தில் வலது புறமாய் ஒடித்திருக்க பின்னே அமர்ந்திருந்தவள் அந்த வேகத்தில் ரோட்டில் உருண்டு இடது புறத்தில் இருந்த வைக்கோல் போரில் சென்று விழுந்தாள்.
 
விழுந்தவள் குழந்தைக்கு எதுவும் ஆகக்கூடாது என்று வயிற்றை பத்திரமாய் இரு கைகளாலும் பிடித்துக் கொண்டாள்.
 
மெதுவாய் கண் விழித்தவள் நிமிர்ந்து பார்க்க எதிர்சாரியில் ரோட்டில் விழுந்திருந்தவனின் மீது பின்னால் வந்த பஸ்சின் சக்கரம் ஏறி இறங்கியிருக்க இவளை ஒரு முறை திரும்பி பார்த்தவனின் உயிர் அக்கணமே பிரிந்திருந்தது. அத்தனையும் சில நிமிடங்களில் நடந்து முடிந்திருந்தது.
 
குழந்தையை பற்றிய கதிரின் கனவை அவளறிவாள். அத்தனையும் ஒரு நொடியில் பாழாகி போனதை இன்றளவும் அவளால் மறக்க முடியவில்லை.
கண்களில் இருந்து நிற்காமல் கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது. அறையில் திடிரென்று ஒளிர்ந்த விளக்கு கண்ணைக் கூச செய்ய மெதுவாய் எழுந்து அமர்ந்தவளின் முன்னே சிபிவர்மன்.
 
மதிய உணவு கொடுத்துவிட்டு மருத்துவமனையில் இருந்து வந்தவள் தான். இவ்வளவு நேரமாகவா இங்கேயே அமர்ந்திருக்கிறோம் என்று தோன்ற மெல்ல அவன் முகம் பார்த்தாள்.
 
“சாரி நான் கொஞ்சம் தலைவலி…”
 
“ஹ்ம்ம் பரவாயில்லை… அவங்களுக்கு நைட் சாப்பாடு வாங்கி கொடுத்திட்டேன், நம்ம எல்லார்க்கும் வாங்கிட்டு வந்திட்டேன்…” என்றான் அவன்.
 
‘என்ன நைட் சாப்பாடா?? அப்போ இப்போ என்ன மணி ஆகுது…’ என்ற அவளின் மனக்குரல் அவனை எட்டியது போலும்.
 
“ஒன்பதரை மணி ஆகுது சாப்பிட வர்றியா??”
 
“என்னது இவ்வளவு நேரமா… என்னை எழுப்பி இருக்கலாம்ல…”
 
“அதான் பரவாயில்லைன்னு சொல்லிட்டேன்ல”
 
“என்ன பரவாயில்லை… எல்லாரும் என்ன நினைச்சு இருப்பாங்க…”
 
“உனக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லிட்டேன் போதுமா… ரொம்ப அதிகமா சீன் போடாம வந்து சாப்பிடு…”
 
“யார் சீன் போடுறது… இப்படிலாம் பேசுறதா இருந்தா என்கிட்ட பேச வேணாம்…”
 
“சரி பேசலை இப்போ சாப்பிடு…” என்று இறங்கி வந்தான்.
 
இருவருமாய் உண்டு முடித்திருந்தனர். “டாக்டர் டிஸ்சார்ஜ் பத்தி எதுவும் சொன்னாங்களா??”
 
“பாரு அதை சொல்ல மறந்திட்டேன், நாளைக்கு அனுப்பறேன்னு சொல்லிட்டாங்க… அம்மா உன்கிட்ட சொல்லச் சொன்னாங்க…”
 
“காலையில டிபன் மட்டும் எடுத்திட்டு வரச் சொன்னாங்க, சாப்பாடு வேணாம் சொல்லிட்டாங்க…”
 
“அப்புறம் நாளைக்கே நாள் நல்லா இருக்காம்… இங்க வந்திட்டு தேவையானது எல்லாம் எடுத்திட்டு தேனிக்கு கிளம்பிடலாம்ன்னு உன்கிட்ட சொல்லச் சொன்னாங்க…”
 
“அப்போ காலையில நாம ஆஸ்பிட்டல் போகணுமா??” என்றவளின் குரலில் அவளும் அங்கு செல்ல வேண்டுமா என்று யோசனை.
 
அந்த மருத்துவர் அங்கிருந்தால் தன்னை பார்த்து பேசுவாரே. வானதியை என்னிடம் இருந்து பிரித்துவிட்டால் என்று அவள் எண்ணங்கள் தாறுமாறாய் எங்கோ ஓடியது.
 
இவளை அம்மருத்துவர் இன்னமும் நினைவில் எப்படி வைத்திருக்க முடியும், அவ்வளவு ஞாபகசக்தி அவருக்கு எங்கிருந்து வந்ததோ என்று இவள் சபித்துக் கொண்டிருந்தாள்.
 
இவர்களின் கேசை அம்மருத்துவர் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடுவாரா என்ன!! இப்படி ஒரு ஐவிஎப்பை அவர் இதுவரை செய்திருப்பாரோ என்னவோ அவரை பொறுத்தவரை அதுவே முதல் முறை.
 
அம்மருத்துவருக்கு குழந்தை எப்படியிருக்கிறது என்று அறியும் ஆர்வம் மட்டுமே இருந்தது. வெண்மதி நின்று நிதானமாய் அவரிடம் பேசியிருந்தால் இவ்வளவு யோசிக்க வேண்டியதில்லை என்பதை அவள் உணரவில்லை.
 
கதிர்வேலன் இறந்ததும் இவள் தெய்வாதீனமாய் பிழைத்ததும், அதிசயத்திலும் அதிசயமாய் இவள் வயிற்றில் இருந்த கருவிற்கு எந்த சேதாரமும் இன்றி உயிர் பிழைத்தது அத்தனையும் கடவுள் செயல்.
 
அதன் பின்னே இவர்கள் பார்த்த மருத்துவரே வேறு. வெண்மதி விரும்பி அதை செய்யவில்லை என்றாலும் வீட்டினர் இவளின் உடல் நலன் கருத்தில் கொண்டு மதுரையில் இருந்தனர் அப்போது. அவளுக்காகவும் வயிற்றில் இருந்த சிசுவின் நலன் கொண்டும் அவள் மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள்.
“என்னாச்சு உனக்கு அப்பப்போ மைன்ட் ஆப் ஆகிடுது…”
 
“ஒண்ணுமில்லை…”
 
“இதை தானே அப்போல இருந்து சொல்றே??”
 
“ஏன் சொன்னா என்ன இப்போ??”
 
“உன்கிட்ட சண்டை போட எனக்கு இப்போ தெம்பில்லை, நல்லா தூக்கம் வருது எனக்கு… நான் தூங்க போறேன், நம்மோட ரொமான்ஸ் எல்லாம் நாளைக்கு வைச்சுக்கலாம்… ஓகேவா டியர், குட் நைட் பேபி” என்றவனை முறைத்தாள் அவள்.
 
“டியர்ன்னு யாரை சொன்னே??”
 
“உன்னை தான்…”
 
“எதுக்கு அப்படி சொன்னே??”
 
“பொண்டாட்டியை டியர்ன்னு சொன்னது ஒரு குத்தமாய்யா…”
 
“அடுத்தவன் பொண்டாட்டியை சொல்லக்கூடாது…” என்றவளின் பேச்சு அவனுக்கு கோபத்தை வரவழைத்தது.
 
“இப்போ அவ என் பொண்டாட்டி, நான் சொல்லுவேன்…” என்றான் அழுத்தி.
 
“நீ என் விருப்பத்தோட இதை கட்டலை…”
 
படுக்கையில் விழுந்திருந்தவன் அவளின் இந்த பேச்சில் எழுந்து அமர்ந்தான். பின் மெதுவாய் எழுந்தவன் அவளருகே வந்தான்.
 
“விருப்பமில்லைன்னு என்னை பார்த்து சொல்லு, என் கண்ணை பார்த்து சொல்லு…”
 
அவனின் உருவம் சட்டென்று அருகே வந்து நிற்கவும் ஒரு நொடி அதிர்ந்தவள் “இல்லை…” என்று தலை தாழ்த்தி சொன்னாள்.
 
“என்னை பார்த்து சொல்ல சொன்னேன்…”
 
“உனக்கு தான் நான் வேணாம்ன்னு சொன்னேல இப்போ என் விருப்பத்தை பத்தி ஏன் கேட்குறே??” என்று ஜிவ்வென்று முகம் சிவக்க கூறினாள்.
 

Advertisement