Advertisement

 
15
 
வீட்டிற்கு வந்து அறைக்குள் நுழைந்தவள் தான் அப்படியே கட்டிலில் சாய்ந்துவிட்டாள். அவள் முகமே வாடியிருந்ததை உணர்ந்த சிபி அவள் பின்னோடே வந்திருந்தான்.
 
“மதி என்னாச்சு?? ஏன் டல்லாயிருக்கே??”
 
“ஒண்ணுமில்லை…”
 
“ஊடம்பு எதுவும் சரியில்லையா??”
 
“நான் தான் ஒண்ணுமில்லைன்னு சொல்லிட்டேனே அப்புறம் ஏன் கேள்வி கேட்டுட்டே இருக்கீங்க… நீங்க கேட்டதுல தான் எனக்கு தலைவலி வந்திருச்சு, பேசாம போங்க வெளியில… நான் கொஞ்ச நேரம் படுக்கணும்…” என்று கத்தினாள்.
 
அவன் தோளைக் குலுக்கி வெளியே செல்லப் போனவன் நின்று ஒரு நிமிடம் அவளைப் பார்த்தவனுக்கு என்ன தோன்றியதோ மீண்டும் வந்தான்.
 
அவன் சென்றிருப்பான் என்று எண்ணியவள் அவன் அவளருகில் வந்து நிற்கவும் சற்றே தடுமாறி நிமிர்ந்து பார்க்க அவனும் அவளைத் தான் பார்த்தான்.
 
“என்ன??”
 
“கொஞ்சம் எழுந்திரு…”
 
“எதுக்கு??”
 
“சொல்றேன்ல, சொன்னதை செய்…”
 
“என்ன வேணும் உனக்கு இப்போ??”
 
“நீ எழுந்துக்கறியா, இல்லை நான் எழுப்பிவிடட்டுமா??”
 
“இப்போ என்ன தான் வேணும் உனக்கு… நான் எழுந்து நிக்கணும் அவ்வளவு தானே… ஹ்ம்ம் நின்னுட்டேன், போதுமா… சொன்னா புரிஞ்சுக்கோயேன் எனக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணணும்… என்னை தனியா விட்டு போறியா”
 
“ஹ்ம்ம் போலாம் போலாம்…” என்றவன் அவள் மேலே ஏதோ பேச வர அவளை இழுத்து அணைத்திருந்தான் இப்போது.
 
ஒரு கணம் என்ன நடந்ததென்று புரியாவிட்டாலும் புரிந்தவுடன் அவனிடமிருந்து அவள் விலகப்போக அவன் அணைப்போ இறுகிக் கொண்டிருந்தது.
 
அவளின் முதுகை ஆறுதல் படுத்தும் விதமாய் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தான் அவன். அவளிடம் வேறு ஒன்றும் எதிர்பார்க்கவில்லை என்பது அந்த நொடி அவளுக்கு புரிந்து கண்களில் ஈரத்தை வரவழைத்தது.
“சரி நீ இப்போ ரெஸ்ட் எடு” என்று சொல்லி அவளிடமிருந்து விலகினான் அவன் இப்போது.
 
அவனின் ஆறுதலும் அணைப்பும் அவளுக்கு இதத்தையே கொடுத்தது. அந்நேரம் அவளுக்கு அது தேவையானதாகவும் இருந்தது. மனம் அவனின் அருகாமையை பெரிதும் விரும்பியது.
 
‘உன்னால தான் நான் இப்போ இங்க வந்து நிக்கறேன்… என்னை அழ வைச்சும் பார்க்கற, ஆறுதலும் படுத்துற…’ என்றவளின் கண்கள் மூட நினைவுகள் மருத்துவரின் பேச்சுக்கு காரணமாயிருந்த நிகழ்வை அசைப்போட்டது.
 
“மதி ஏய் மதி எங்கதா போவாளோ??” என்று மகளை கூவி அழைத்துக் கொண்டிருந்தார் சங்கரி.
 
“ஏன்மா இப்படி கத்திட்டு இருக்கீங்க??” என்றவாறே வந்து சேர்ந்தாள் மகள்.
 
“உன் மாமன் வர்றானாம் நாளைக்கு, இப்போ தான் போன் பண்ணான்…”
 
“சரி அதுக்கு என்ன இப்போ??”
 
“என்னடி இப்படி பேசறே??”
 
“வேற என்ன பண்ணணும் நான் இப்போ…”
 
“என்னாச்சு உனக்கு?? கொஞ்ச நாளாவே நீ சரியே இல்லை… முன்ன மாதிரி நீ இல்லை… என்ன தான்மா உன் பிரச்சனை அம்மாட்ட சொல்லுடா…” என்றார் அவர்.
 
அவரின் கனிவில் கரிசனத்தில் மனம் உருகிப் போய்விட “அப்படிலாம் ஒண்ணுமில்லைம்மா…”
 
“என்னவோ நான் எப்போ கேட்டாலும் நீ இதே தான் சொல்ற போ…”
 
“சரி சரி நாளைக்கு உன் மாமன் வந்ததும் அவனுக்கும் உனக்கும் கல்யாணம் பேசிறலாம் உங்கப்பா சொன்னாரு…”
 
“ம்மா… எனக்கு கல்யாணம்லாம் வேணாம் சொல்லிட்டேன்…”
 
“இதென்ன மதி இப்படி சொல்ற, நானும் உங்கப்பாவும் கதிருக்கு தான் உன்னைய கட்டி வைக்கணும்ன்னு ஆசையா இருக்கோம்… உங்க அத்தைக்கு கூட அது தான் ஆசை…”
 
“அவ ஆசையை நிறைவேத்த வேணாமா… உன் மாமனை எங்க கையில ஒப்படைக்கும் போது சொல்லித்தான்டா கொடுத்தா… உங்களுக்கு எம் புள்ளை மகனாவும் மருமகனாவும் இருப்பான்னு…”
 
“அம்மா ப்ளீஸ் கொஞ்சம் என்னை விடுங்களேன்… இந்த மாதிரி எண்ணமெல்லாம் வேணாமே…”
 
“எனக்கு தெரியாது, உங்கப்பா சொன்னாரு நான் உன்கிட்ட சொல்லிட்டேன் அவ்வளவு தான்…” என்றுவிட்டு நகர்ந்துவிட்டார் அவர்.
 
நின்று மேலும் மேலும் பேசினால் மகள் பேசியே தன்னை மாற்றிவிடுவாள் என்று எண்ணி சென்றுவிட்டார் அவர்.
 
வெண்மதிக்கு அடிவயிற்றில் இருந்து ஒரு பயம் உருண்டு திரண்டு மேலேறி வந்துக் கொண்டிருந்தது இப்போது.
 
மறுநாள் கதிர்வேலனை கண்டதும் அது வாயின் வழியே வந்து வெளியே விழுந்துவிடும் போல் ஒரு உணர்வு.
 
ஒரு வருடம் கழித்து வீட்டிற்கு வந்திருக்கிறான், அவனை வாவென்று அழைக்கக் கூட தோன்றாமல் வெறுமே பார்த்துக் கொண்டிருந்தாள்.
 
தான் சிறுவயதில் இவனுடன் சந்தோசமாய் விளையாடியிருக்கிறோம். ஊருக்கு செல்லும் முன் வந்து சென்றவனிடம் கூட கொஞ்சம் நன்றாகவே பேசியிருக்கிறோம் என்பதெல்லாம் மறந்து போக அவனை அந்நியனாகவே பார்த்தாள் இப்போது.
 
கதிரின் பதினைந்தாவது வயதில் அவன் தாயை இழந்திருந்தான். தந்தை அவன் சிறுவயதாய் இருக்கும் போதே தோட்டத்தில் பாம்பு கடித்து இறந்து போயிருந்தார்.
 
கணேசன் தன் மருமகனை தன் வீட்டிற்கு அழைத்து வந்தாலும் அவனை கம்பத்தில் உள்ள போர்டிங் பள்ளியிலேயே படிக்க வைத்தார்.
 
அவன் விடுமுறைக்கு மட்டுமே வீட்டிற்கு வருவான். சங்கரி “ஏங்க கதிரு இங்கவே இருக்கட்டுங்க…”
 
“அதெல்லாம் வேணாம் சங்கரி… இங்கவே இருந்தா அதுகளுக்கு கட்டிக்கணும்ன்னு தோணாம கூட போயிறலாம். எட்ட இருந்தா ஒரு பிடிப்பு வந்தாலும் வரும், நாம நாளைக்கு அவங்க கல்யாணம் காட்சின்னு பேசும் போது அவங்களுக்கும் ஒத்துக்குவாங்க…” என்றார் அவர்.
 
சங்கரிக்கும் அவர் கருத்தில் கொஞ்சம் உடன்பாடு இருக்க அவரும் அமைதியாயிருந்தார்.
 
“மதி என்னடி அப்படியே நிக்க, வந்தவுகளை வாங்கன்னு கூட கேட்காம” என்றவர் மகளை அதட்டிவிட்டு “நீங்க வாங்க மருமகனே எப்படி இருக்கீங்கய்யா?? ஆளு ரொம்ப ஒடுங்கி போயிட்டீங்க…”
 
“நல்லா சாப்பாடு எல்லாம் அங்க உங்களுக்கு கிடைக்காதா…” என்று அவர் தன் போக்கில் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார் கதிரை.
 
“அத்தை அப்படியெல்லாம் எதுவுமில்லை?? நான் நல்லா தான் இருக்கேன்… ஆமா அத்தை மதி என்ன வாயே திறக்காம இருக்கா…”
 
“ஏன் மதி என்னாச்சு உடம்புக்கு எதுவும் முடியலையா??” என்று உண்மையான அக்கறையாகவே விசாரித்தான் அவன்.
 
“ஒண்ணும், ஒண்ணுமில்லை…நான் நல்லா தான் இருக்கேன்…”
 
“அது சரி… ரொம்ப டல்லா தான் தெரியற, வேணா போய் ரெஸ்ட் எடு…” என்று அவன் சொல்ல, விட்டால் போதும் என்று அவள் உள்ளே சென்றுவிட்டாள்.
 
சங்கரி தான் கணேசனிடம் புலம்பினாள். “உங்க பொண்ணு ஏன் தான் இப்படி செய்யறாளோ??” என்று.
 
மதிய உணவுக்கு பின் வெளியே சென்று வந்த கதிரின் முகம் சோர்வாய் இருந்தது. “அத்தை மதி எங்க??” என்றான் சங்கரியிடம்.
 
“உள்ள இருக்கா கதிரு, கூப்பிடவா…” என்றார் அவர்.
 
“நான் போய் பார்க்கறேன் அத்தை…”என்றவன் எழுந்து அவளின் அறைக்கு சென்றான்.
 
லேசாய் திறந்திருந்த கதவை ஒரு முறை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான். கதிரை அங்கு எதிர்பார்க்காததால் கட்டில் படுத்திருந்தவள் வாரி சுருட்டிக்கொண்டு எழுந்தாள்.
 
“வாங்க வாங்க மாமா…”
 
“என்ன இங்க??”
 
“உன்கிட்ட கொஞ்சம் பேசணும் மதி, வெளிய போகலாமா??”
 
“மாமா அது… அது வந்து…” என்று யோசித்தவள் ‘மாமா கூட இப்போ வெளிய போறதும் நல்லது தான், அவங்க கல்யாணத்தை பத்தி பேசினா நாம வேணாம்ன்னு சொல்லிற வேண்டியது தான்’ என்று எண்ணி சரியென்றாள் அவளிடம் இப்போது.
 
அவளறியவில்லை தானே அவனிடம் தன்னை திருமணம் செய்துக்கொள்ள சொல்வோம் என்று. யார் தான் யோசித்து பேசுகிறார்கள் அந்தந்த சூழ்நிலை தானே பேசுவதை தீர்மானிக்கிறது.
 
பேசுபவன் சூழ்நிலையை கையாளத் தெரிந்தவன் என்றால் நிதானித்து யோசித்து பதிலிறுப்பான். அவசரக்காரனோ ஆத்திரக்காரனோ மட்டுமே வார்த்தையை விட்டுவிடுவான்.
 
வெண்மதி அவசரத்தில் தான் பேசியிருந்தாள், ஆனால் அதற்காய் அவள் வருத்தம் எல்லாம் கொள்ளவில்லை இன்று வரையிலும் கூட!!
 
“அத்தை நான் மதியை வெளிய கூட்டிட்டு போயிட்டு வரட்டுமா, தேனிக்கு கூட்டிட்டு போறேன். டிரஸ் எல்லாம் வாங்கணும்…”
 
“தாராளமா கூட்டிட்டு போய்யா கதிரு” என்றார் சங்கரி.
“மதி எங்காச்சும் தனியா இருக்க இடத்துக்கு கூட்டிட்டு போ, நீ இந்த ஊர்ல தானே இருக்கே, உனக்கு நெறைய இடம் தெரிஞ்சிருக்கும்…” என்றான் அவளிடம் ரகசியமாய்.
 
“மாமா அப்பாவோட வண்டி இங்க தான் இருக்கு… அம்மாட்ட கேட்டு அதை எடுத்திட்டு போவோம்… ஊருக்குள்ள வேணாம் ஊர் தாண்டினதும் போற வழியில தோப்பு ஒண்ணு இருக்கு அங்க போய்டலாம்…”
 
அதன்படி இருவரும் அங்கு வந்து சேர்ந்தனர். சிறிது நேரம் எந்த பேச்சு வார்த்தையும் இல்லை இருவரிடத்திலும். பின் கதிர்வேலனே ஆரம்பித்தான்.
 
“மதி இந்த போட்டோவை பாரேன்…” என்று அவளிடத்தில் ஒரு பெண்ணின் புகைப்படத்தை காட்டினான்.
 
அதைப்பார்த்ததும் லேசாய் ஒரு மலர்ச்சி வெண்மதியினிடத்தில். அந்த புகைப்படத்தில் இருக்கும் பெண் கதிர் விரும்பும் பெண்ணாய் இருக்குமோ என்று தோன்றியதன் வெளிப்பாடு தான் அது.
 
“மாமா இவங்க…”
 
“நான் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு ஆசைப்பட்ட பொண்ணு…” என்றான் அவன்.
 
“மாமா நிஜமாவா சொல்றீங்க, ரொம்ப சந்தோசம் மாமா…”
 
அவன் விரக்தியாய் புன்னகைத்தான்.
“என்ன மாமா விசனப்படுறீங்க??”
 
“ஆசைப்பட்டேன்னு தானே சொன்னேன், இந்த கல்யாணம் நடக்காது மதி.. எனக்கு உன் உதவி தேவை மதி இப்போ…”
 
“சொல்லுங்க மாமா, அப்பாகிட்ட பேசணுமா உங்களுக்காக… நான் பேசறேன் மாமா…”
 
“அது வேணாம் மதி…” என்றவன் அடுத்து சொன்னதை சத்தியமாய் அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.
 
யாரிடமாவது அவன் திருமணத்திற்காய் தூது பேசச்சொல்வான் என்று அவள் எதிர்பார்த்திருக்க அவன் கேட்டதோ வேறு.
 
“நீ… எனக்கு உன்கிட்ட கேட்க சங்கடமாய் தான் இருக்கு மதி… நான் வேற ஒரு விஷயமும் மனசுல வைச்சுட்டு தான் இதை முதல்ல உன்கிட்ட கேட்டுப்பார்க்கலாம்ன்னு…”
 
“நீ எங்க குழந்தைக்கு வாடகை தாயாய் இருப்பியா மதி…”
 
“என்ன என்ன சொல்றீங்க மாமா… புரிஞ்சு தான் பேசறீங்களா… நான் நான் ஏன்?? என்னாச்சு மாமா உங்களுக்கும் அவங்களுக்கும் கல்யாணம் ஆகிடுச்சா…”
 
“டாக்டர் குழந்தை பிறக்காதுன்னு சொல்லிட்டாங்களா?? இந்த காலத்துல இதெல்லாம் சகஜமா நடக்கறது தானே மாமா, நம்பிக்கையை விடாதீங்க நல்லதே நடக்கும்…”
“மதி ப்ளீஸ் கொஞ்சம் நான் பேசறதை கேளு… எங்களுக்கு கல்யாணம் நடக்கலை, அது நடக்கவும் நடக்காது… ஏன்னா அவளுக்கு பிரைன் டியூமர்… அவளோட நாட்களை அவ எண்ணிக்கிட்டு இருக்கா…” என்றவனின் கண்கள் லேசாய் கலங்கி சிவந்திருந்தது இப்போது.
 
“என்ன மாமா என்னென்னவோ சொல்றீங்க??” என்றவள் அப்படியே தரையில் அமர்ந்துவிட்டாள்.
 
“அதுக்காக நீங்க இப்படி ஒரு முடிவு எடுப்பீங்களா?? உங்க… உங்களுக்கு அவங்க மேல அவ்வளவு லவ்வா மாமா…” என்ற வெண்மதிக்கு உண்மையிலேயே அவன் காதலின் மேல் அவ்வளவு ஆச்சரியம் தான். எப்படி இது சாத்தியம் என்ற கேள்வியும் அவளுக்கு.
 
“எப்போல இருந்து லவ் பண்றீங்க மாமா நீங்க??”
 
“போர்டிங் ஸ்கூல் தான் எங்களை சேர்த்து வைச்சது மதி. அவ சென்னை பொண்ணு இங்க வந்து படிச்சா… எங்க தோழமை எங்க எப்போ காதலா மாறிச்சுன்னு தெரியாது மதி…”
 
“ஸ்கூல் முடிஞ்சு நாங்க பிரியறப்போ தான் அதை உணர்ந்தோம்… என்னால அவ இல்லாம இருக்க முடியாதுன்னு தோணிச்சு, அதனால தான் நான் சென்னையில இருக்க காலேஜ்க்கு படிக்க போனேன்…”
 
வெண்மதிக்கும் ஞாபகம் இருக்கிறது கதிர் ஒற்றைக்காலில் நின்றான் சென்னையில் சென்று படிக்கவேண்டும் என்று. கணேசனுக்கு அவன் தள்ளியிருக்க வேண்டும் என்ற எண்ணம் தான்.
 
ஆனால் சென்னை வரை சென்று அவன் படிப்பதில் அவருக்கு விருப்பமில்லை. மதுரையிலோ திண்டுக்கல்லோ திருச்சியோ என்று தான் எண்ணினார் அவர்.
 
“காலேஜ் முடிஞ்சது… எனக்கு ஆர்மில வொர்க் பண்ணணுங்கறது சின்ன வயசு கனவு, எங்கப்பா அவங்க போகணும்ன்னு ஆசைப்பட்டாங்களாம், ஒத்தைப்பிள்ளைன்னு தாத்தா சம்மதிக்கலையாம்… அம்மா சொல்லி கேட்டிருக்கேன்…”
 
“எனக்கு தான் யாருமில்லையே போகாதன்னு சொல்றதுக்கு… தவிர அப்பாவோட கனவை நாம நிறைவேத்தினா என்னன்னு தோணிச்சு…”
 
“என்னாச்சு மதி பேசிட்டு இருக்கும் போதே நீ ஏன் இவ்வளவு வருத்தப்படுற”
 
“ஏன் மாமா இப்படி பொசுக்குன்னு எனக்கு யாருமில்லைன்னு சொல்லிட்டீங்க… அப்போ நீங்க எங்களை சொந்தமா நினைக்கலையா… நாங்கலாம் யாரு மாமா உங்களுக்கு…”
 
“சொந்தமில்லைன்னு நான் எப்போ சொன்னேன் மதி… ஆனாலும் பெத்த அம்மா அப்பா வேற தானே, நீயே சொல்லு… நீங்க என்னை தடுத்து இருப்பீங்க ஆனாலும் எல்லாமே ஒரு அளவோட தான் நிக்கும்…”
“புரியுது மாமா… நீங்க மேல சொல்லுங்க…”
 
“நான் சென்னையில இருக்கப்போ ஆர்மில சேர்றதுக்கு என்ன செய்யணுமோ அதெல்லாம் செஞ்சுட்டு தான் இருந்தேன். படிப்பு முடிஞ்சதும் முதல் வேலையா அதுல தீவிரமா இறங்கினேன்…”
 
“அதுக்காக நான் பயிற்சிக்கு போக வேண்டி இருந்துச்சு… அப்போ தான் நாங்க பிரிஞ்சோம்…”
 
“அப்புறம் நான் ஆர்மில சேர்ந்துட்டேன்… இரண்டு வருஷம் கழிச்சு தான் திரும்பி வந்தேன்… லீவ் எல்லாம் எடுக்கலை நானு…”
 
“மொத்தமா எங்க கல்யாணத்துக்கு பெரிசா லீவு எடுக்கணும்ன்னு இருந்தேன்… போன வருஷம் லீவுல வந்திருக்கும் போது அவளை போய் பார்த்தேன்…”
 
“கல்யாணத்தை பத்தி பேசினேன், அவளோட அக்காவுக்கு அப்போ தான் கல்யாணம் பேசி இருந்தாங்க… அது முடியவும் வீட்டில பேசறதா சொல்லியிருந்தா”
 
“சரின்னு திரும்பவும் நான் ஊருக்கு போயிட்டேன், அப்பப்போ நடுவுல அவளுக்கு போன் பண்ணி பேசியிருக்கேன்… கடைசியா ஒரு மூணு நாலு மாசமா அவகிட்ட சரியா பேச முடியலை…”
 
“அது குறைஞ்சு ஒரேடியா நின்னு போச்சு, அவளுக்காக திரும்பி வந்தேன்… நான் ஊருக்கு வந்து பத்து நாளாச்சு, இவ்வளோ நாள் சென்னையில தான் இருந்தேன்…”
“அவ வீட்டுக்கு போயிருந்தேன், எல்லாரும் அங்க இடிஞ்சு போய் உட்கார்ந்து இருந்தாங்க… என்னை பார்த்ததும் அவங்களுக்கு ஷாக் போலன்னு நினைச்சேன்…”
 
“அவ அம்மா அழுதுட்டே இருந்தாங்க, கூடவே அவங்க அக்காவும்… என்னன்னு விசாரிச்சப்போ தான் பதினஞ்சு நாள் முன்னாடி தான் அவளுக்கு பிரைன் டியூமர் இருக்கறது கன்பார்ம் ஆச்சுன்னு சொன்னாங்க… கொஞ்ச நாளா அவளுக்கு உடம்பு முடியாத இருக்கப் போய் தான் என்கிட்ட கூட அவ சரியா பேசலையாம்”
 
“நான் அவளை பார்க்கணும்ன்னு சொன்னேன், என்னை பார்க்கவே மாட்டேன்னு சொல்லிட்டா, ரொம்ப கெஞ்சி தான் அவளை பார்த்தேன்…”
 
“கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு கூட சொல்லிட்டேன், முடியவே முடியாதுன்னு மறுத்திட்டா… என் வாழ்க்கை பாழாகிடுமாம் வேணாம்ன்னு சொல்றா, அவளோட அப்பா அம்மாக்கு பொண்ணா இருந்துட்டு அப்படியே போய்டுவாளாம்”  என்று சொல்லும் போது மீண்டும் அவன் கண்கள் கலங்கி உதடு துடித்தது.
 
“என்னால முடியலை மதி, அவ இல்லாத வாழ்க்கையை வாழ முடியாது மதி என்னால…”
 
“என்கிட்ட ஒரு ப்ராமிஸ் பண்ண சொன்னா, முடியாதுன்னு சொல்லிட்டு நான் இங்க வந்திட்டேன்… ட்ரைன்ல வரும் போது தான் இந்த குழந்தை விஷயம் யோசிச்சேன்…”
“நாங்க அதைப்பத்தி எல்லாம் எவ்வளவு பேசியிருப்போம் தெரியுமா மதி… அப்போ அவ கண்கள் அவ்வளவு ஒரு ஆர்வம் தெரிஞ்சது… அந்த குழந்தையை அப்படி பார்த்துக்கணும் இப்படி பார்த்துக்கணும்ன்னு சொல்லுவா”
 
“அவளோட ஆசையை நான் பூர்த்தி செய்ய வேணாமா மதி… அவளோட நினைவா எனக்கு அவளோட அம்சமா ஒரு குழந்தை வேணும்ன்னு தோணிச்சு மதி…”
 
அவன் சொல்லச்சொல்ல அவள் அப்படியே பிரமித்து நின்றாள். ‘இது என்ன மாதிரியான காதல், சத்தியமாய் அவளுக்கு புரியவில்லை…’
 
‘ஒரு புறம் இது பைத்தியக்காரத்தனம்’ என்று அவளுக்கு தோன்றாமலில்லை. அதையும் மீறி அவளின் மீதான அவனின் காதல் தான் அதிகம் தெரிந்தது அவளுக்கு.
 
அதை அவள் மதித்தாள், சற்று யோசித்தவள் அவனுக்கு சம்மதம் சொல்லியிருந்தாள். குழந்தைக்கு வாடகை தாயாய் அவள் இருக்க ஒப்புக்கொண்டிருந்தாள்.
 
“ஆனா மாமா நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்கணும்…”
 
“தேங்க்ஸ் மதி, ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்… உன்னை எப்படி சம்மதிக்க வைக்க போறோம்ன்னு யோசிச்சேன்… நீ சரி சொல்லலைன்னா வாடகை தாய் தேடணும்ன்னு நினைச்சேன்…”
 
“உனக்கு எவ்வளோ நன்றி சொன்னாலும் பத்தாது. அப்புறம் உன்னை கல்யாணம் பண்ணிக்கற முடிவுல தான் நானும் இருக்கேன் மதி. அவகிட்ட நான் சொல்ல போறதே அது தான்…”
 
“நான் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னா என் விருப்பத்தை அவளோட பிம்பத்தை அவ எனக்கு கொடுக்கணும்”
 
“மாமா நான் ஒண்ணு சொல்லவா??”
 
“சொல்லு மதி…”
 
“நீங்க அவங்களை கல்யாணம் பண்ணிக்கோங்களேன். அவங்ககிட்ட சொல்லுங்க அவங்களுக்கு பிறகு நீங்க என்னை கல்யாணம் செஞ்சுக்குவீங்கன்னு…”
 
“மதி சத்தியமா உன்கிட்ட இப்படி ஒரு வார்த்தை வரும்ன்னு நான் எதிர்ப்பார்க்கலை

Advertisement