Advertisement

 
14
 
மணி பத்தாகியிருந்தது இப்போது. “மதி முடியலை ரொம்ப வலிக்குது, ஒரு எட்டு கூட எடுத்து வைக்க முடியாதுன்னு தோணுது… எதுவோ வெளிய வர்ற மாதிரி இருக்கு…”
 
“மாமா அக்காவை பார்த்துக்கோங்க ஒரு நிமிஷம்” என்றவள் மருத்துவரை அழைக்க சென்றாள்.
 
உடனே லேபர் வார்டுக்கு அவளை அழைத்துப் போக உள்ளே சென்ற சில நிமிடங்களிலேயே குழந்தை வீறிட்டு அழும் குரல் கேட்டு அனைவரையும் மகிழ்விக்க செய்தது.
 
ரஞ்சனாவிற்கு ஆண் குழந்தை பிறந்திருந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் குழந்தையை சுத்தம் செய்து கொண்டு வந்திருந்தனர்.
 
செல்வியின் கையில் கொடுக்க ஜெயவர்மன் குழந்தையை பார்க்க ஆர்வமாய் அருகில் வந்தான். “மாமா அக்காவை போய் பார்த்திட்டு வாங்க…” என்றவளின் குரலில் அவனுக்கு ஏதோ சேதி இருந்தது போல் உணர்ந்தவன் குழந்தையை பார்த்துவிட்டு மனைவியை பார்க்க உள்ளே சென்றான்.
 
சிறிது நேரத்தில் ரஞ்சனாவை அறைக்கு மாற்றியிருந்தார்கள். அங்கே அவள் சோர்ந்து படுத்திருக்க அவளை கண்டதும் என்னவோ போல் ஆனது அவனுக்கு.
 
“எப்படியிருக்க ரஞ்சு??”
 
“ஹ்ம்ம் ஓகேங்க, குழந்தை எங்கேங்க??”
 
“குழந்தை டாக்டர் ஏதோ ஊசி போடணும்ன்னு வாங்கிட்டு போனாங்க இப்போ தான்…”
 
“நீங்க பார்த்தீங்களா குட்டி பையனை…”
 
“ஹ்ம்ம் பார்த்தேன்….”
 
“எப்படி இருக்கான்?? என்கிட்ட காமிச்சாங்க, வலியில என்னால சரியா பார்க்க முடியலை… சிரிச்சானா, அழுதானா…” என்றாள்.
 
“நல்லாயிருக்கான் உன்னை மாதிரியே இருக்கான்…”
 
“நிஜமாவா…”
 
“நீயே பாரு, இப்போ வந்திடுவான்…”
 
“மதி எங்கே??”
 
“வெளிய தான் இருக்கா, பார்க்கணுமா??” என்றவனிடம் தலையாட்டினாள் அவள்.
 
வெளியில் நின்றிருந்தவர்கள் ஒவ்வொருவராய் வந்து நலம் விசாரித்தனர் அவளிடம். வெண்மதியை கண்டவள் அவள் கையை பிடித்துக்கொண்டு “தேங்க்ஸ் மதி…”
 
“எதுக்கு தேங்க்ஸ் சொல்றீங்க?? உங்க கூட சண்டை போட்டுடுவேன்…”
 
“போட்டுக்கோ பரவாயில்லை, ஆனா தேங்க்ஸ்…” என்று கண் கலங்கினாள் ரஞ்சனா.
 
“அக்கா…”
 
“இது தான் உன்கிட்ட எனக்கு பிடிக்கலை…”
 
“எது??”
“அக்கான்னு சொல்லி அந்நியப்படுத்துற…”
 
“சரிடி ரஞ்சனா இனிமே உன்னை அப்படி கூப்பிடமாட்டேன்டி, சரியாடி…”
 
“இது கூட நல்லாயிருக்கே, இனிமே இப்படியே கூப்பிடு…” என்று அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே குழந்தையை உள்ளே கொண்டு வந்தனர்.
 
அவர்களை தனியே விட்டு இவர்கள் வெளியில் வந்தனர். “சரிம்மா அப்போ நாங்க கிளம்புறோம்…” என்றவனை கோபமாய் பார்த்து வைத்தாள் வெண்மதி.
 
‘இவ என்னடா இவ என்ன ஏதுன்னு சொல்லாம என்னைய முறைக்கிறா… தப்பா எதுவும் பேசலையே…’ என்று ஆராய்ச்சியில் இறங்கினான் சிபிவர்மன்.
 
“சரி நீங்க கிளம்புங்க…” என்றார் செல்வியும்.
 
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே ரஞ்சனாவின் குடும்பத்தினர் வந்து சேர்ந்தனர், உடன் சந்தியாவும் வந்திருந்தாள்.
 
அவளை கண்டும் காணாமல் நின்றாள் வெண்மதி. வந்தவர்கள் செல்வியிடம் பேச இவள் யாரோ எவரோ என்பது போல் தள்ளி நின்று பார்த்தாள்.
 
சந்தியா இவளை முறைப்பதை இவனுமே பார்த்துக் கொண்டிருந்தான். “இவ வேற மாசமா இருக்கா, இங்க வர வேணாம்ன்னு சொன்னா கூட கேட்கலை…”
“அக்காவை பார்க்கணும், குழந்தையை பார்க்கணும்ன்னு எங்ககூடவே ஓடி வந்திட்டா…” என்றார் ரஞ்சனாவின் சித்தி மேகலா.
 
“நாம வீட்டுக்கு போகலாங்க…” என்றாள் வெண்மதி இப்போது அவனைப் பார்த்து.
 
‘கொஞ்ச நேரம் முன்னாடி இதையே தான் நான் சொன்னேன், அதுக்கு என்னை முறைச்சா இப்போ இவளே போகலாம்ன்னு சொல்றா…’ என்று தன்னையே நொந்துக் கொண்டான் சிபி வர்மன்.
 
“நீங்க உள்ள போய் பாருங்க…” என்று அவர்களுக்கு சொல்லிவிட்டு “நீங்க கிளம்புங்க…” என்றார் செல்வி இவர்களிடம்.
 
“அத்தை வீட்டு சாவி கொடுங்க, நாங்க திண்டுக்கல்ல தான் இருக்க போறோம்”
 
“ஏன்?? தேனிக்கு போகலையா??”
 
“இங்க நீங்க அக்கா கூட இருந்தா வீட்டில யார் பார்த்துப்பாங்க… நான் உங்களுக்கு சாப்பாடு கொடுத்து அனுப்பறேன், நார்மல் தானே எப்படியும் நாளைக்கு இல்லேன்னா நாளானக்கி அனுப்பிருவாங்க…”
 
“அப்போ நாம எல்லாரும் சேர்ந்து தேனிக்கு போய்டலாம்…”
 
‘இதை நாம யோசிக்கவே இல்லையே…’ என்று தான் நினைத்தார் செல்வி.
 
ரஞ்சனாவை வீட்டிற்கு அழைத்துச்சென்ற பின் திண்டுக்கல்லில் வைத்தே பார்த்துக் கொள்ளலாம் என்று தான் நினைத்திருந்தார். வெண்மதி சொன்னதும் தான் ஏன் தேனிக்கு செல்லக் கூடாது என்று யோசித்தார்.
 
“ஆமாம்மா மதி சொல்றது தான் சரி, நாம சின்னமனூர்க்கு கூட்டிட்டு போய்டலாம் அண்ணியை….”
 
“இல்லை திண்டுக்கல்லவே…”
 
“இல்லை அத்தை அங்க போய்ட்டா நானும் உங்க கூட இருப்பேன், ரெண்டு பேரும் சேர்ந்து பார்த்துக்கலாம்…”
 
“நீ வேலைக்கு போயிட்டு வீட்டுலயும் பார்க்கணும்…”
 
“இல்லை அத்தை நான் வேலையை விடலாம்ன்னு இருக்கேன்…”
 
அவள் சொன்ன இந்த விஷயம் சிபிக்கு புதிது. இதுநாள் வரை அவள் அவனிடம் எல்லாம் சொல்லிவிட்டு தான் செய்தாளா என்றால் இல்லை என்று தான் சொல்வான். ஆனாலும் அவள் வேலையை விடப்போகும் விஷயம் ஒரு வார்த்தை அவளிடம் சொல்லியிருக்கலாம் என்று தோன்றியது அவனுக்கு.
 
“ஏன்மா??”
 
“வானதி கூட இருக்க முடியலை, இப்போ வீட்டில ரெண்டு குழந்தைங்க வேற… அதான் வேலையை விட்டிடலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன், இது நீங்க திண்டுக்கல்க்கு கிளம்பி வந்தப்போவே யோசிச்சது தான்…”
 
செல்வியின் மனதில் வெண்மதி எங்கோ பல படிகள் மேலே ஏறிக் கொண்டிருந்தாள். யாரையும் உருவத்தை பார்த்தோ அவர்களின் நிலைக்கண்டோ நம் மனத்தில் அவர்களை பற்றி தவறான எண்ணம் கொள்வது சரியில்லை என்பதை உணர்ந்தார் அப்பெண்மணி.
 
வள்ளுவன் அன்றே சொல்லியிருக்கிறானே
 
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து
 
என்று சொல்லியிருக்கிறானே. அச்சாணி சிறியது என்றாலும் உருளுகின்ற பெரிய தேருக்கு அது உதவுவது போல, மன உறுதி உடையவர்கள் வடிவத்தால் சிறியர் எனினும் செயலில் பெரியவர் என்பதால் அவரை இகழக்கூடாது என்பதே குறள் சொல்லும் நீதி.
 
இங்கு செல்வி முதலில் அவளின் நிலைக்கண்டும் பின்பு தான் அவளின் உருவு கண்டும் அவளை சற்றே எள்ளலாக நினைத்துவிட்டார்.
 
வெண்மதியின் பெயருக்கு ஏற்றார் போல் பால்நிலா போன்றவள் அல்ல, அழகிய கோதுமை நிறம் என்று தான் சொல்ல வேண்டும், அவள் மனது உண்மையில் பால் நிலா போன்றது தான்.
 
“சரி அப்படியே செய்வோம்… வீட்டுச்சாவி…” என்று சொல்லி நீட்டியவரிடம் அதை பெற்றுக்கொண்டாள்.
 
“வானதி இருந்துக்குவாளா??”
 
“ரெண்டு நாள் தானே ஒரு பிரச்சனையும் இல்லை…”
 
“அத்தைக்கு இப்போ சாப்பிட வாங்கி கொடுங்க, அவங்க எல்லாம் வந்திருக்காங்க, காபி வேணுமா இல்லை டிபன் சாப்பிடுறாங்களான்னு கேட்டு வாங்கி கொடுங்க…”
 
“அதுக்கெல்லாம் முன்னாடி ஸ்வீட் வாங்கி மாமா கையில கொடுங்க எல்லாருக்கும் கொடுக்கச்சொல்லி…”
 
“ஸ்வீட் வேணாம்யா வர்மா, கொஞ்ச நேரத்துல எல்லாம் மறந்து போச்சும்மா… டென்ஷன் ஆகிட்டேன்…” என்றார் செல்வி.
 
“உங்க மாமாவை நான் அப்போவே ஸ்வீட் வாங்க அனுப்பினேன், இதோ வர்றார் பாரு ஆடி அசைஞ்சு…” என்றார்.
 
பின் அவர்கள் பசுங்கிளியையும் அழைத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினர். மணி அப்போது பதினொன்றை ஆகியிருந்தது. வீட்டிற்கு வந்ததும் “சரி நான் ஊருக்கு கிளம்பறேன்” என்று வாசலில் இறக்கிவிட்ட கையோடு அவன் சொல்ல அவனை எரிக்காத குறை தான்.
“முதல்ல உள்ள வாங்க…”
 
அறைக்கு சென்றதும் ஆர்வமாய் அவள் பின்னே சென்றான். ஆசையாய் அழைத்திருப்பாளோ என்ற எண்ணத்தில், அப்படி இருக்காது என்று தெரியும், இருந்தாலும் ஒரு நப்பாசை தானே…
 
“உங்களுக்கு அறிவிருக்கா இல்லையா??”
 
“ஏய் என்னடி கொழுப்பா எதுக்கு இப்படி கேட்குறே??”
 
“பின்ன வேற எப்படி கேட்பாங்களாம், வீட்டுக்கு கூட்டிட்டு வந்திட்டு வாசலோடவே கிளம்பறேன்னு சொன்னா என்ன அர்த்தம்”
 
“எனக்கு வேலை இருக்குன்னு அர்த்தம்…”
 
“என்ன பெரிய வேலை??”
 
“என் வேலையை பத்தி உனக்கு தெரியாதா?? காலையில நேரமா எழுந்து நான் போய் தண்ணி போட்டுவிடணும்… ஆடு, மாடு எல்லாம் பார்க்கணும் எவ்வளவோ வேலை இருக்கும் எனக்கு…”
 
“வேலை வேலைன்னு அதையே கட்டிட்டு அழுதா நாளைக்கு பிள்ளை பிறந்து நான் ஆஸ்பிட்டல்ல இருந்தாலும் எனக்கு வேலை இருக்குன்னு இப்படி தான் கிளம்பி போய்டுவீங்களா…” என்றாள் ஒரு வேகத்தில்.
 
பேசி முடித்த பின்னே தான், தான் கண்டபடி உளறியிருக்கிறோம் என்று புரிய அவள் குரல் மொத்தமாய் உள்ளே இறங்கி போனது இப்போது.
 
“இல்… இல்லை அது அப்படியில்லை, இங்க உங்கப்பாவும் அண்ணாவும் மட்டும் தான் இருக்காங்க… நா… நான் மட்டும் எப்படி இங்க, என… எனக்கு சங்கடமா இருக்காதா… அதான் ப்ளீஸ் ஒரு ரெண்டு நாள் தானே…” என்றிருந்தாள் இப்போது.
 
சிபிக்கு அவளின் பேச்சு அவ்வளவு சந்தோசமாய் இருந்தது. இவளை எப்படி மலையிறக்க போகிறோம் என்று பெரிதாய் யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு இப்போது பெரும் நிம்மதி.
 
அவள் தன்னைப்பற்றி அதிகம் நினைக்கிறாள் என்பதும் யோசிக்கிறாள் என்பதும் அவள் பேச்சில் புரிய உவப்பாய் இருந்தது அவனுக்கு.
 
“சரி இருக்கேன்… ரெண்டு நாள் இல்லை நீ சொன்னா எவ்வளவு நாள் வேணாலும் இருக்கேன்…” என்றான் சற்றே விஜய் சேதுபதியின் பாணியில்.
 
“தேங்க்ஸ்…” என்றுவிட்டு கட்டிலில் சென்றுபடுத்துக் கொண்டாள்.
 
“நீ பாட்டுக்கு படுத்திட்டா, நான் எங்க படுக்கறதாம்…”
 
“ஹ்ம்ம் போய் வெளியில மாமாவோட படுங்க, இல்லைன்னா அவ்வளோ தூரம் கூட்டிட்டு வந்தோம்ல கார் டிரைவர், அவர் எங்க படுப்பாருன்னு யோசிச்சீங்களா…”
 
“அவருக்கு இடத்தை ரெடி பண்ணிட்டு நீங்களும் வேணா அவரோடவே போய் படுங்க… குட் நைட்…” என்றுவிட்டு திரும்பிக் கொண்டாள்.
 
அவளின் முதுகின் பின்னே சிபியின் புன்னகை முகம் அவளால் பாராமலே உணர முடிந்தது. ‘வேணாம்… வேணாம்’ என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டாள்.
 
காலையில் வீட்டில் வேலை முடித்து பசுங்கிளியிடம் காலை உணவை கொடுத்து விட்டிருந்தாள். மதிய உணவை அவளும் சிபியுமாக எடுத்துக்கொண்டு மருத்துவமனை சென்றனர்.
 
ரஞ்சனா வெண்மதியிடம் தனியே “மதி டாக்டர் என்னவோ காப்பர்-டி அது இதுன்னு ஏதோ சொன்னாங்க… நான் என்ன பண்ணட்டும்?? நீ போய் அவங்ககிட்ட பேசறியா, எனக்கு அவரை அனுப்ப என்னவோ போல இருக்கு… எப்போ போடலாம் என்னன்னு மட்டும் கேட்டுக்கோயேன்”
 
“ஹ்ம்ம் சரி ரஞ்சு…” என்றவள் அறியவில்லை அவள் சந்திக்கப் போகும் மருத்துவரால் அவள் மனம் நோகுமென்று. எந்த உண்மை யாருக்கும் தெரியாமல் அவள் பாதுக்காக்கிறாளோ அது தெரிந்துவிடுமோ என்ற பயம் எழப்போவது அறியாமல் அவரை பார்க்கச் சென்றாள்.
“எக்ஸ்கியூஸ் மீ டாக்டர்…” என்றாள் லேசாய் கதவை தட்டி.
 
“வாங்க…”
 
“ஹேய் உன்னை எங்கயோ பார்த்திருக்கேன்… நீ… நீ…” என்று அவர் யோசிக்க அவரை கண்டு அதிர்ந்து நின்றிருந்த வெண்மதி பதில் எதுவும் சொல்லத் தோன்றாமல் அப்படியே நின்றிருந்தாள்.
 
 
‘கடவுளே இவங்களுக்கு ஞாபகம் வரக்கூடாது…’ என்று அவள் எண்ணியிருக்க அவள் பிரார்த்தனை வீண் போனது.
 
“எஸ் ஞாபகம் வந்திடுச்சு… நீ ரெண்டு வருஷம் முன்னாடி உனக்கு ஐவிஎப் பண்ணோம் தானே, உங்க மாமாவோட குழந்தையை நீ பெத்துக் கொடுக்கறேன்னு சொன்னல…”
 
“உங்க மாமா எப்படியிருக்கார்?? அத பொண்ணு பொழைச்சாலா?? இல்லையா??” என்று அவர் கேள்வியாய் அடுக்கிக் கொண்டிருக்க இவளோ சிலையாகவே உறைந்து போனாள்.
 
“என்னம்மா என்னாச்சு உனக்கு?? ஏன் இப்படி நிக்கறே??”
 
“ஒண்ணும் ஒண்ணுமில்லை டாக்டர்… ஒண்ணுமில்லை, எனக்கு வேலையிருக்கு, நான் கிளம்ப… கிளம்பறேன்…” என்றவள் அங்கிருந்து வேகமாய் கிளம்பியிருந்தாள்.
 
அனைவரிடம் ஏதேதோ பேசிவிட்டு நேரமாகவே வீட்டிற்கு கிளம்பிவிட்டாள் அவள்…

Advertisement