Advertisement

13
 
“சிஸ்டர் ஒரு நிமிஷம்” என்று உள்ளே சென்றுக் கொண்டிருந்தவளை மறித்து நின்றிருந்தான் சந்தியாவின் கணவன்.
 
“சாரி சிஸ்டர்…”
 
“எதுக்கு??”
 
“நான் சந்தியாவோட ஹஸ்பெண்ட்”
 
“தெரியும்”
“அவ பேசினது எல்லாம் மனசுல வைச்சுக்காதீங்க சிஸ்டர்… எனக்கு தெரியும் உங்களுக்கு எல்லாம் கேட்டுச்சுன்னு…”
 
“அவங்க சொன்னதுல எதுவும் பொய்யில்லையே…”
 
“சிஸ்டர் ப்ளீஸ்…”
 
“பரவாயில்லை…” என்றவள் தன் வேலையை பார்க்க சென்றாள்.
 
அவனிடத்தில் ஒன்றும் காட்டாதிருந்தாலும் அவளுக்கு உள்ளுக்குள் வலிக்க தான் செய்தது. இதற்கெல்லாம் காரணம் என்று அந்த கோபம் மீண்டும் சிபியின் மீதே பாய்ந்தது.
 
அன்று மாலை வீட்டிற்குள் நுழையும் போதே கதவு திறந்திருப்பதை பார்த்தவள் சிபி நேரமாய் வீட்டிற்கு வந்திருப்பதை உணர்ந்தாள்.
 
குழந்தையுடன் அவள் உள்ளே நுழையவும் “அம்மு செல்லம் வந்தாச்சா… வாங்க வாங்க… இங்க வாங்க…” என்ற அவன் குரல் கேட்டு வானதி தன் அன்னையிடம் இருந்து இறங்க முற்பட்டாள்.
 
“கொஞ்சம் பேசாம இருக்கியா… வெளிய போயிட்டு வந்திருக்கோம், வீட்டுக்கு வந்து குளிக்க வேணாமா… அதுக்குள்ளே பாய்ஞ்சுக்கிட்டு போய்டணுமா உனக்கு…” என்று குழந்தையை அதட்டினாள்.
 
அவள் என்ன சொல்கிறாள் என்று முழுதாய் புரியாத போதும் அம்மாவின் கோப பாவனை கண்டு லேசாய் உதட்டை பிதுக்கி அழுகையை தொடங்கலாமா வேண்டாமா என்ற ரீதியில் வெம்ப ஆரம்பித்தது.
 
“எதுக்கு பாப்பாவை திட்டுற??”
 
“ஹான் உங்களை தான் திட்டணும், திட்டட்டுமா??”
 
“என்னாச்சு உனக்கு?? வேதாளம் மறுபடியும் முருங்கைமரம் ஏறுது…”
 
“ஓ!! அப்போ நான் வேதாளமா உங்களுக்கு…” என்று அவள் ஆரம்பித்த தினுசே அவனுக்கு சொன்னது நேரம் சரியில்லை வாயை கொடுக்காதேடா என்று.
 
“நான் எதுவும் சொல்லலை, வந்ததும் ஆரம்பிக்க வேணாம்…”
 
“அப்போ நான் வம்பு சண்டை இழுக்கறேனா… எதுக்கு அப்படி சொல்றீங்க, நானா பேச்சுக் கொடுத்தேன் உங்ககிட்ட” என்று மேலும் எகிறினாள்.
 
“சாரி தாயே!! உன்கிட்ட பேச்சு கொடுக்க நான் ஆளில்லை…”
 
“ஓ!! யார்கிட்ட பேச்சு கொடுக்க போறீங்க… உங்க இஷ்டத்துக்கு தாலி கட்டுவீங்க… இப்போ எனக்கென்ன போச்சுன்னு கிளம்புவீங்களா…”
 
“உங்களுக்கு என்னை பார்த்தா எப்படி தெரியுது?? இளிச்சவாய் மாதிரியா?? நீங்க பண்ண தப்புக்கு தண்டனை எனக்கா??”
 
“நான் உன் கால்ல வந்து விழுந்தேனா எனக்கு வாழ்க்கை கொடுன்னு… கண்டவளும் பேசுறதை எல்லாம் நான் ஏன் கேட்டுக்கணும்…” என்று சொல்லும் போதே அழுகை வந்தது.
 
“என் மாமா என்னை கல்யாணம் பண்ணதுனால தான் செத்து போயிட்டார்ன்னு பேசுறாங்க… அவர் விதி அந்த ஆக்சிடென்ட்ல முடிஞ்சு போச்சு அதுக்கு நானா காரணம்…”
 
“அன்னைக்கு நானும் தானே போனேன், என் விதி இன்னமும் உங்ககிட்ட எல்லாம் படணும்ன்னு இருக்கு போல, அதுக்கு தான் இப்படி பேச்சு வாங்கிட்டு சீரழிஞ்சுக்கிட்டு இருக்கேன் போல…” என்று முடிக்கும் போதே கண்ணீர் வழிந்தோடியது.
 
“எல்லாம் முடிஞ்சு போச்சு இதான் என் வாழ்க்கை, என் குழந்தை தான் உலகம்ன்னு நான் பாட்டுக்கு தானேடா இருந்தேன்… நீ என்னத்துக்குடா இப்படி செஞ்சே, நான் கேட்டனா இதெல்லாம்”
 
“முத முதல்ல என்னை பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டு வேணாம்ன்னு சொல்லிட்டு போனவன் தானே நீ… அப்புறமும் ஏன் வந்தே?? சொல்லுடா ஏன் வந்தே??” என்றவள் அப்படியே தரையில் மடிந்து அமர்ந்து ஓவென்று அழுதாள்.
சிபி அவளின் இந்த செய்கையை எதிர்பார்த்திருக்கவில்லை. வழக்கம் போலான பேச்சே என்றெண்ணி வெளியே செல்லப் போனவன் அவள் பேசியதனைத்தும் கேட்டு அப்படியே நின்றுவிட்டான்.
 
தாய் அழுவது கண்டு பொறுக்காத அந்த குழந்தையும் என்னவென்று புரியாமல் உடன் சேர்ந்து அழுக, சிபிக்கு அவளை அச்சமயம் சமாதானம் செய்ய முடியும் என்று தோன்றவில்லை.
 
குழந்தையையாவது சமாதானம் செய்யலாம் எட்ன்று எண்ணி அவளை தூக்கிக்கொண்டு வெளியில் சென்றுவிட்டான்.
 
எவ்வளவு நேரம் சென்றிருக்குமோ அழுகை ஓய்ந்து சுற்றுப்புறம் உணர்ந்து நிமிர்ந்தாள் வெண்மதி. அறையின் இருட்டு வெகு நேரமாய் அவள் அங்கிருப்பதையும் வானதியும் சிபியும் அங்கில்லாததையும் சொல்ல மெதுவாய் எழுந்து மின்விளக்கை போட்டாள்.
 
திடீரென்ற ஒளி கண்ணை ஒரு கணம் கூசச் செய்தது. எங்கோ கைப்பேசியின் அழைப்பு சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. வெகு நேரமாய் அடித்திருக்கும் என்று தோன்றியது.
 
சில நிமிடங்களுக்கு முன் கூட அந்த ஒலி கேட்ட நினைவு வந்தது அவளுக்கு. கைப்பையில் இருந்த அவள் கைப்பேசியை எடுக்க அழைப்பு அவளதில் இல்லை என்று உணர சுற்றுமுற்றும் தேடினாள்.
மீண்டும் கைப்பேசியின் ஒலி, இப்போது அவளதில். அதிலிருந்த எண்ணைக் கண்டு எடுப்பதா வேண்டாமா என்று யோசித்தவள் பொத்தானை அழுத்தி “ஹலோ” என்றிருந்தாள்.
 
“மதி… எங்கம்மா இருக்க?? சிபி எங்க போய்ட்டான் போன் போட்டா ரிங் போயிட்டே இருக்கு…” எதிர்முனையில் செல்வி.
 
“போன் இங்க வீட்டில வைச்சுட்டு வெளிய போயிருக்கார் போல அத்தை… சொல்லுங்க அத்தை…”
 
“ரஞ்சனாவுக்கு இடுப்பு வலி எடுத்திருச்சு… நாங்க ஆஸ்பத்திரிக்கு போய்க்கிட்டு இருக்கோம்… நீயும் சிபியும் வந்திடறீங்களா…”
 
“இன்னும் ஒரு மாசம் இருக்கே அத்தை…”
 
“ஆமா ஆனா அவ ரொம்ப வலியில துடிக்கிறா, பிரசவ வலியா தான் தெரியுது… நீங்க பார்த்து புறப்பட்டு வாங்க, இல்லைன்னா நான் குழந்தை பிறந்ததும் போன் பண்ணுறேன், அப்புறமா வாங்க…”
 
“இல்லையில்ல நாங்க இப்போவே கிளம்புறோம், சீக்கிரமே அங்க வந்திடறோம்… எந்த ஆஸ்பிட்டல் அத்தை??” என்று கேட்டு விபரம் வாங்கிக்கொண்டவள் சிபியை தேடி வெளியே ஓடினாள்.
 
அவன் வானதியுடன் ஆடு, கோழிகள் இருந்த பண்ணையில் இருந்தான் போலும்.
இவள் வெள்ளையம்மாளிடம் கேட்டுக்கொண்டு அங்கு செல்லப் போக எதிரில் அவனே வந்தான்.
 
“அத்தை போன் பண்ணாங்க, அக்காக்கு பெயின் வந்திடுச்சாம், ஆஸ்பிட்டல் கூட்டிட்டு போறாங்களாம்…”
 
“எப்போ போன் பண்ணாங்க??”
 
“இப்போ தான்…”
 
“சரி நான் இப்போவே கிளம்பி அங்க போறேன்…” என்றவனை ஏகத்துக்கும் முறைத்தாள் அவள்.
 
“நானும் வர்றேன், நீங்க மட்டும் தனியா போவீங்களா என்னைவிட்டு…”
 
வெள்ளையம்மாவும் அங்கு தானிருந்தார் இவர்கள் பேச்சு வார்த்தையின் போது. “ஆமாய்யா நீங்க மட்டும் போய் என்ன செய்ய போறீக… கூட ஒரு பொம்பளை துணை இருந்தா நல்லது தானே…”
 
“அதுமில்லாம இவுங்க நர்ஸ்க்கு படிச்சு இருக்காங்க, தோதான துணை இருக்குமில்லை…” என்று அவரும் சொல்லவும் அவனுக்கும் அதுவே சரியென பட்டது.
 
“அப்போ பாப்பா…”
 
“அம்மா வீட்டுல அவ இருந்துக்குவா, அங்கவே விட்டுட்டு போவோம்…” என்றவளை என்னடா இது என்பது போல் பார்த்து வைத்தான்.
“எதுக்கு இந்த பார்வை?? அம்மா பொண்ணு சண்டை போட்டுக்க கூடாதா… நாங்க சண்டையும் போடுவோம், சமாதானமும் ஆவோம்…” என்று அவன் பார்வைக்கான பதிலை அவளே சொல்லியிருந்தாள்.
 
இருவருமாய் கிளம்பி வானதியை வெண்மதியின் அன்னையின் வீட்டில் விட்டுவிட்டு அவர்களிடம் விஷயம் சொல்லி திண்டுக்கல்லிற்கு கிளம்பினர்.
 
தானும் வருவேன் என்று அடம் பிடித்தவள் அங்கு தனக்கு ஓர் அதிர்ச்சி காத்திருக்கும் என்றறிந்திருந்தால் சென்றிருக்க மாட்டாளோ??
 
எந்த உண்மை யாருக்கும் தெரியாமல் பாதுகாத்தாளோ அது வெளியில் தெரியப் போகும் நாள் விரைவில் என்று உணர்ந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்காதோ என்னவோ??
 
“இப்போவே மணி ஏழாச்சு… இந்த வண்டியில தான் போகணுமா, பேசாம கார் சொல்லிக்கலாமா…”
 
“ஏன்??”
 
“நைட் நேரம் வண்டி வேகமா ஓட்டுவீங்க…”
 
“அதுக்கு…”
 
“அவ சொல்றதும் சரி தான் மருமகனே நீங்க கார்ல போங்களேன். நான் வேணா பக்கத்து வீட்டு முனியாண்டியை கார் எடுக்க சொல்லவா…”
“இப்போ என்னாச்சு, கார்ல போகலாம்ன்னு சொல்லிட்டு இருக்கீங்க… ஒண்ணும் பயமில்லை நான் வண்டி நல்லாவே ஓட்டுவேன்…” என்று விளக்கம் கொடுத்த சிபியை முறைத்தாள் அவன் மனைவி.
 
“இப்படி சொல்லி தான் என் தங்கச்சி பையனும் போனான்…” என்றுவிட்டு நிறுத்திக்கொண்டார் வெண்மதியின் தந்தை கணேசன்.
 
அவர் சொல்லாமல் விட்டதை சட்டென புரிந்துக் கொண்ட சிபிக்கு மேற்கொண்டு என்ன சொல்ல என்று புரியவில்லை. வெண்மதியை பார்க்க அவள் முகமோ இறுகிப் போயிருந்தது.
 
அதற்கு மேல் வீம்பு செய்யவில்லை அவன். “சரிங்க மாமா வண்டியை வரச்சொல்லுங்க… ஒரு ரெண்டு மூணு நாளைக்கு வண்டி எங்க கூடவே இருக்கட்டும், அவர்க்கு என்ன கொடுக்கணுமோ பார்த்து செஞ்சுக்கலாம்ன்னு சொல்லிருங்க மாமா…”
 
“சரி நான் போய் வண்டி பேசி கூட்டிட்டு வந்திடறேன்…” என்று வெளியில் சென்றவர் ஐந்து நிமிடத்தில் வண்டியுடன் வர அவர்கள் கிளம்பினர்.
 
அடுத்த ஒண்ணே முக்கால் மணி நேரத்தில் அவர்கள் மருத்துவமனையை வந்தடைந்திருந்தனர். ரஞ்சனாவிற்கு இன்னமும் குழந்தை பிறந்திருக்கவில்லை.
 
அறை வாயிலிலேயே நின்றிருந்த செல்வியிடம் “என்னாச்சு அத்தை இன்னும் பிறக்கலையா??”
 
“ஆமாம்மா வலி விட்டுவிட்டு தான் வந்திட்டு இருக்கு, இன்னும் கொஞ்ச நேரம் ஆகும்ன்னு சொல்றாங்க… நடக்க சொல்றாங்க, இவ நடக்க மாட்டேங்குறா…” என்றார் அவர்.
 
“நான் பார்த்துக்கறேன் அத்தை…” என்றவள் “மாமா…” என்று இழுத்தாள்.
 
“சுடுதண்ணி வாங்கிட்டு வரச்சொல்லி இப்போ தான் உங்க மாமாவை கான்டீன் அனுப்பினேன்…”
 
“அதில்லை தான் ஜெய் மாமாவை கேட்டேன்…”
 
“உள்ள தான் இருக்கான்…” என்று கைக்காட்டினார் அவர்.
 
“நீங்களும் உள்ள வாங்க அத்தை…” என்று சொல்ல அவரும் வந்தார்.
 
உள்ளே ரஞ்சனா வலி பொறுக்க முடியாமல் அனத்திக் கொண்டிருந்தாள். “முடியலைங்க வலிக்குதுங்க…” என்றவளின் கஷ்டம் முழுதாய் உணர்ந்திருந்தாள் வெண்மதி.
 
அவளை கண்டதும் ஜெய் “வாம்மா” என்றான்.
 
“என்னக்கா இப்போ எப்படியிருக்கு??” என்றாள் ரஞ்சனாவை பார்த்து.
“முடியலை மதி… விட்டுவிட்டு வலிச்சுட்டே இருக்கு… வலி உயிர் போகுது மதி…” என்றாள் கண்களில் கண்ணீர் வழிய.
 
யாரிடமும் அதிகம் பேசாத மூத்த மருமகள் இளையவளிடம் சகஜமாய் பேசுவதை பார்த்துக் கொண்டிருந்தார் செல்வி.
 
“நான் ஒண்ணு சொல்வேன் செய்வீங்களா??”
 
“சொல்லு மதி…”
 
“என் மேல உங்களுக்கு நம்பிக்கை இருக்கு தானே…”
 
“ஹ்ம்ம்…”
 
“அப்போ எழுந்து உட்காருங்க முதல்ல” என்று சொல்லி அவள் எழுந்து அமர உதவி புரிந்தாள்.
 
“இப்போ என் கையை ஒரு பக்கம் பிடிச்சுக்குவீங்கலாம், இன்னொரு பக்கம் மாமா இருப்பாங்க… எங்களை புடிச்சுட்டே இந்த காரிடர்ல நடக்கணும்…”
 
“மதி எனக்கு பயமாயிருக்கு, என்னால நடக்க முடியும்ன்னு தோணலை…”
 
“முடியும் உங்களால கண்டிப்பா முடியும்… உங்களுக்கு பாப்பாவை பார்க்கணும் தானே…”
 
தலையாட்டினாள் மற்றவள், “எவ்வளோ சீக்கிரம் பார்க்கணும்ன்னு நினைக்கறீங்க??”
 
“எப்போ பார்ப்பேன்னு காத்திட்டு இருக்கேன் மதி… இப்போவே பார்க்க ஆசையா இருக்கு, பேசாம ஆபரேஷன் பண்ணச்சொல்லி பாப்பாவை எடுத்திட சொல்லலாம்ல…” என்றவளின் முகம் பயத்தில் வெளுத்திருந்தது.
 
வலி ஒரு புறம் பயம் மறு புறம் என்று அவளை படுத்தியிருந்தது. தாயில்லா பிள்ளை என்பது மிகச்சரியாய், செல்விக்கு எதையும் அதட்டி சொல்லியே பழக்கம். அதனால் மருமகள் எட்டி நின்றே பேசுவாள்.
 
அதுவுமில்லாமல் அவர் மெதுவாய் பேசினாலும் கூட நாலு வீடு தள்ளியிருப்பவருக்கு கூட கேட்கும். அவர் குரலே அப்படித்தான்.
 
இதெல்லாம் சேர்த்து ரஞ்சனா அவரை தாயாய் பார்க்காமல் மாமியாராய் பார்த்தாள். அதிர்ந்து கூட பேசாதவள் அவள், தோழிகள் என்று பெரிதாய் யாருமில்லை.
 
சந்தியா உடன் வளர்ந்திருந்தாலும் ஏனோ அவளோடு பெரிதாய் எந்த ஒட்டுதலும் இல்லை அவளுக்கு. ரஞ்சனா அவள் பாட்டியிடம் தான் அதிகம் வளர்ந்திருந்தாள். அவர் காலம் முடிந்த பின்னே தான் தந்தையுடன் இருக்க நேரிட்டது அவளுக்கு.
 
“அக்கா அப்படி எல்லாம் சொல்லக்கூடாது…”
“வலி எல்லாருக்கும் பொது தான், வலிக்காம பிள்ளை பெத்துக்க முடியாதுன்னு சும்மாவா சொன்னாங்க… ஆபரேஷன் மட்டும் ஈசின்னு உங்களுக்கு யார் சொன்னது, எல்லாத்துக்கும் பின்னாடி ஒரு வலி இருக்கத் தான் செய்யும்”
 
“உங்களுக்கு பாப்பாவை சீக்கிரம் பார்க்கணும்ன்னா நான் சொன்னது போல செய்ங்க… நானும் மாமாவும் உங்க கூடவே தான் இருக்கோம்… நீங்க எவ்வளவு தூரம் நடக்கறீங்களோ அவ்வளவு சீக்கிரம் நீங்க குழந்தையை பார்க்கலாம்…” என்று சிறு குழந்தைக்கு சொல்வது போல விளக்கினாள் மூத்தவளுக்கு.
 
“சரி மதி… நீ சொல்றதுனால நான் நடக்கறேன், ஆனா கால் வலிச்சா கொஞ்ச நேரம் உட்காருவேன், ஓகே வா…”
 
“சரி உட்காரலாம்…”
 
“தேங்க்ஸ்மா… இவ்வளோ நேரம் நானும் அம்மாவும் கெஞ்சிட்டு இருந்தோம் இவளை நடக்கச் சொல்லி, டாக்டர் அப்போவே சொல்லிட்டு போனாங்க…”
 
“இவ கொஞ்ச நேரம் நின்னுட்டு முடியலைன்னு படுத்திட்டா…”
 
“எனக்கு எதுக்கு மாமா தேங்க்ஸ் எல்லாம்… ஒரு கை புடிங்க மாமா…” என்று சொல்லிவிட்டு ஆளுக்கு ஒரு புறம் அவளை தாங்கியவாறு நடந்தனர்.
 
வெண்மதி ஏதேதோ சுவாரசியமாய் கதைகள் பேசி மற்றவளை நடக்க வைத்திருந்தாள். வலி இருந்த போதும் அதை பொறுத்து அவர்களுடன் நடந்தாள் ரஞ்சனா.
 
“ஏன்யா வர்மா எனக்கு ஒரு உண்மையை சொல்லு??” என்றார் செல்வி தன் இளைய மகனை பார்த்து.
 
மகனின் பார்வையோ அவன் மனைவி மீதே இருந்தது. தன் மீதான அவளின் பிடித்தமின்மை அறிந்தவன் தான் அவன், ஆனால் அது பொய்யோ என்ற ரீதியில் தான் இருந்தது அவளின் செய்கை எல்லாம்.
 
“ஹ்ம்ம் சொல்லும்மா…”
 
“நீ அந்த புள்ளை மேல ஆசைப்பட்ட தானே??”
 
“ம்மா…” என்றவனின் பார்வை மனைவியை விட்டு தன் அன்னையின் மீது திரும்பியது.
 
“ஏன்யா என்கிட்ட சொல்லலை??”
 
“அம்மா…”
 
“ஒரு வார்த்தை நீ முன்னாடியே சொல்லியிருக்கலாம்…”
 
“அம்மா அப்படில்லாம் எதுவும் இல்லை…”
 
“எனக்கு அப்படி தோணலை… நான் கூட நீ இப்படி பண்ணிட்டியேன்னு கோவமா இருந்தேன். ஏன் இப்போ கூட சொல்றனே நீ அந்த பிள்ளையை கல்யாணம் பண்ணது எனக்கு பிடிக்கலை தான்…”
 
“அதுக்காக நான் அவங்களை வெறுக்கறதா அர்த்தமில்லை… எனக்கு மனசுக்கு ஒப்பலை அவ்வளோ தான்… ஆனா அதெல்லாம் சீக்கிரமே மாறிடும்ன்னு நினைக்கிறேன்…”
 
“என்னம்மா சொல்றீங்க??”
 
“ஆமாய்யா அந்த பொண்ணு பெரிய ராங்கியா இருப்பான்னு நினைச்சேன். ஆனா அவ அப்படிலாம் இல்லை, ரொம்ப பூஞ்சையா இருக்கா… அவளை நீ புரிஞ்சுகிட்டா உன் வாழ்க்கை சொர்க்கம்” என்றார் நூற்றிலும் ஒரு வார்த்தையாய்.
 
அது கொண்டவனுக்கு புரிய வேண்டுமே!!

Advertisement