Advertisement

12
 
மாசுக்கட்டுப்பாடாம் காலையில் ஒரு மணி நேரம் இரவில் ஒரு மணி நேரம் மட்டும் தான் வேட்டு வைக்கலாமாம்.
 
ஆயிரம் வாகனங்களினால் உண்டாகாத மாசு, ப்ரிட்ஜ், ஏர் கண்டிஷ்னரினால் உண்டாகாத மாசு,  ஒரு நாளில் பட்டாசு வெடிப்பதில் தான் உண்டாகும் என்று கணிப்பதும் கட்டுப்படுத்துவதும் எவ்விதத்தில் நியாயமோ!!
 
பன்னாட்டு வியாபாரிகள் வாழ ஆயிரம் தொழிலாளிகளின் வயிற்றில் அடிப்பது தான் முறை போலும்!!
 
சிறு வயதில் தந்தை வாங்கித் தரும் பட்டாசுக்காய் ஒரு வாரம் முன்னில் இருந்தே அதே நினைப்பாய் நான் அந்த வெடி வெடிப்பேன், நான் இதை வெடிப்பேன் என்று உடன்பிறந்தோனுடன் நீயா நானா என்று போட்டி போட தீபாவளி திருநாள் அன்று புத்தாடை உடுத்தி பட்டாசு அடங்கிய பையை எடுத்துக்கொண்டு தன் அண்ணனுடன் சேர்ந்து சந்தோசமாய் பட்டாசு வெடித்த ஞாபகம் இன்றும் நிழலாய் மனதில் நீங்காது நிறைந்திருந்தது சிபிக்கு.
 
நீங்கள் என்ன வேண்டுமானாலும் சட்டம் போட்டுக்கொள்ளுங்கள் நாங்கள் செய்வதை தான் செய்வோம் என்று ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.
 
காலையிலேயே வேட்டுச்சத்தம் கேட்க ஆரம்பித்துவிட்டது. அதைக் கேட்டுக்கொண்டே இன்னமும் படுக்கையை விட்டு எழாதிருந்தான் சிபி.
 
கண்ணை மூடி படுத்துக் கொண்டிருந்தவனின் காலில் குறுகுறுவென்றிருக்க சட்டென்று கண் விழித்து பார்த்தான். வானதி தான் அவன் காலை சுரண்டிக் கொண்டிருந்தாள்.
 
இங்க வா என்று சைகையால் அழைத்தான் அவளை. அருகில் வந்தவளிடம் “என்னடா செல்லம்??” என்றான்.
 
“அப்பா, அம்மா வா… அப்பா வா… போதாம் வா…”
 
“அம்மா கூப்பிட்டாளா??”
 
குழந்தை ஆமென்று தலையசைக்க “ஏன் உங்கம்மா வந்து எழுப்ப மாட்டாளாமா??” என்றவனின் கேள்வி அவளுக்கு புரியாமல் அவனை ஒருவிதமாய் பார்த்து வைத்தது.
“சரி வா போவோம்” என்று எழுந்து அவளுடன் சென்றான்.
 
தீபாவளிக்கு முதல் நாளே சிபி தன் குடும்பத்துடன் ஜெயவர்மனின் வீட்டிற்கு வந்திருந்தான் பண்டிகையை கொண்டாடுவதற்கு.
 
ரஞ்சனாவின் வயிறு நன்றாய் மேடேறியிருந்தது இப்போது. பிரசவத்திற்கு இன்னமும் ஒரு மாதமிருந்தது. சிபி அனைவருக்கும் புதுத்துணி எடுத்து வந்திருந்தான்.
 
“மதி அதை எடுத்திட்டு வந்து எல்லார்க்கும் கொடு” என்று ஜாடை காட்ட வெண்மதி எடுத்து வந்திருந்த பையை செல்வியிடமும் ரஞ்சனாவிடமும் கொடுத்தாள்.
 
“நல்லாயிருக்கா பாருங்க” என்றாள் ஒருவித எதிர்பார்ப்புடன்.
 
திண்டுக்கல் கிளம்புமுன் சிபி தேனிக்கு அழைத்துச்சென்று அனைவருக்கும் உடை எடுக்க வேண்டும் என்று சொல்லி பொறுப்பை அவளிடம் ஒப்படைத்திருந்தான்.
 
எல்லோருக்கும் தான் எடுத்தது பிடிக்குமோ பிடிக்காதோ என்று சிறு அச்சம் அவளுக்கு. செல்வியோ “நல்லா தான் இருக்கு, என்கிட்ட இந்த கலர் இல்லைன்னு தான் நினைக்கிறேன்…” என்று அவர் பாணியில் அவரின் பிடித்தத்தை சொன்னார்.
 
“ரொம்ப நல்லாயிருக்கு மதி, நீ தான் செலக்ட் பண்ணியா புடவையை… அண்ணன் தம்பிக்கு ஒண்ணு போல வேட்டி சட்டை எடுத்திருக்க போல ரொம்ப சூப்பர்” என்றாள் ரஞ்சனா தன் பங்கிற்கு.
 
“தேங்க்ஸ்கா… உங்களுக்குலாம் பிடிக்குமோ பிடிக்காதோன்னு ஒரு பயம், இப்போ தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு…” என்றாள் வெண்மதி.
 
“இதென்ன புதுசா அக்கான்னு சொல்லிட்டு, ரெண்டு பேருக்கும் ஒரு வயசு தான்னு நினைக்கிறேன். பேர் சொல்லியே கூப்பிடு மதி…” என்றவளை பார்த்து சிநேகமாய் புன்னகைத்தாள் மற்றவள்.
 
சிபி இன்னமும் அவளுக்கு அவன் வாங்கி வந்த உடையை கொடுத்திருக்கவில்லை. அன்று அழைத்ததும் அவள் வராததால் கோபத்தில் இருந்தவன் அவளே கேட்கட்டும் என்றிருக்க அவனே கொடுக்கட்டும் என்றிருந்தாள் அவள்.
 
வானதியின் உடையை மட்டும் அவளிடம் கொடுத்திருந்தான். மற்றவர்களுக்கு உடை வாங்கும் போது அவளையும் எடுத்துக்கொள்ள சொல்லியிருந்தான்.
 
வீம்பாய் வேண்டாம் என்றவளிடம் ரஞ்சனாவிற்கு எடுத்தது போல வேறு நிறத்தில் அவளுக்கும் ஒன்றை எடுத்து வைத்திருந்தான்.
 
படுக்கையறையில் இருந்து அவன் வெளியில் வர ரஞ்சனாவும் அவளும் ஒன்று போல அழகாய் புடவை உடுத்தியிருக்க அவன் மனைவி வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.
 
ரஞ்சனா அருகில் அமர்ந்து அவளுக்கு உதவி செய்துக் கொண்டிருந்தாள். பார்க்கவே ரம்மியமாய் இருக்க அந்த நிமிடம் உரிமையாய் தன்னவளை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான் வைத்த கண் வாங்காமல்.
 
“ஹ்க்கும்…” என்று லேசான கனைப்பு சத்தம் கேட்க சுயநினைவில் இருந்து மீண்டவன் அருகே நின்றிருந்தார் செல்வி.
 
“காலையில எழுந்து குளிக்காம இங்க வந்து நின்னுட்டு என்ன வேடிக்கை, போய் தலையில எண்ணெய் வைச்சு குளி… போ… போ… இதெல்லாம் பார்க்காம உன் பொண்டாட்டி என்னத்தை கோலம் போடுறாளோ…” என்று போகிற போக்கில் சொல்லிக்கொண்டே போனார் அவர்.
 
“இப்போ எதுக்கு அவளை இதுல இழுக்கறீங்க, அவ தான் பிசியா கோலம் போடுறால…”
 
“ஏன்யா பொண்டாட்டியை சொன்னதும் பொத்துக்கிட்டு வருதா, நான் ஒண்ணும் தப்பா சொல்லலையே… உன்னை எழுப்பி குளிக்க அனுப்ப சொன்னா கோலம் போட்டுக்கிட்டு இருக்கா…”
 
“ஹான்… அதெல்லாம் அவ எழுப்பிவிட்டு தான் போனா… நா… நான் தான் இப்போ என்ன அவசரம்ன்னு கோலத்தை வேடிக்கை பார்த்திட்டு இருந்தேன்…”
 
“கோலத்தை நீங்க வேடிக்கை பார்த்த கோலத்தை நானும் பார்த்தேன்…” என்றுவிட்டு அவர் நகர ‘ஆத்தி இந்தம்மா ரொம்ப கவனிக்குது, நாம கவனமா இருக்கணும்’ என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டு குழந்தையை பசுங்கிளியிடம் விட்டு குளிக்கச் சென்றான் அவன்.
 
பத்தாயிரம் சரம் படபடவென வெடித்து சிதறிக் கொண்டிருக்க அருகில் ஜெய், சிபி அவன் கையில் வானதி நின்றுக்கொண்டு சத்தம் போட்டுக் கொண்டிருந்தனர்.
 
ஒருவழியாய் பட்டாசு எல்லாம் வெடித்து மூவரும் உள்ளே வர செல்வியோ சிபியை வறுத்துத்தெடுத்தார். “ஏன்யா வர்மா நீ என்ன சின்ன பிள்ளையா இன்னும் வெடி போட்டுக்கிட்டு இருக்க”
 
“ஏன் சின்ன பிள்ளைங்க தான் வெடிக்கணுமா??”
 
“ஆமா குழந்தைகளுக்கு தான் வெடி வெடிக்கறது ஒரு விளையாட்டு”
 
“பெரியவங்களும் வெடிக்கலாம்… இதெல்லாம் ஒரு சந்தோசம்மா”
 
“என்னத்தை சந்தோசமோ, காசெல்லாம் கரியாகுது…”
“வருஷத்துல ஒரு நாள் வெடிச்சா தப்பில்லை… நாம இப்படி நினைச்சா பட்டாசு தொழில் செய்யறவங்க வேலை என்னாகும்… எல்லாரும் பொழைக்க வேணாமா…”
 
“நீ ஒருத்தன் தான் அவங்களை வாழ வைக்க போறியா என்ன??”
 
“இப்படி ஒவ்வொருத்தனும் நினைச்சா எல்லா சிறு தொழிலும் அழிஞ்சு போகும்மா…”
 
“இவன் என்னடா பட்டாசு வெடிக்காதான்னு சொன்னா ரொம்ப சீரியஸா பேசிட்டு இருக்கான்…” என்று பெரிய மகனை துணைக்கு அழைத்தார் அவர்.
 
“அவன் சொல்றதுல என்னமா தப்பிருக்கு”
 
“அது சரி இதுல எல்லாம் கூட்டு சேர்ந்திடுங்க அண்ணனும் தம்பியும்… சரி சரி சாப்பிட வாங்க…” என்றுவிட்டு அடுத்த வேலை பார்க்க போனார் அவர்.
 
சாப்பிட்டு முடித்ததும் அனைவரும் சற்றே ஓய்வெடுக்க போக “எல்லாரும் வாங்க ஒரு செல்பி எடுக்கலாம்” அழைத்தது சிபிவர்மன்.
 
“என்னது குல்பியா எனக்கு வேணாம்…”
 
“செல்வி அது குல்பி இல்லை, உன் புள்ளை போட்டோ எடுக்க கூப்பிடுறான்…” என்றார் பசுங்கிளி விளக்கமாய்.
 
“இல்லைங்க இவன் குல்பின்னு தான் சொன்னான்… வர்மா நீ தானேடா சொன்னே குல்பின்னு…”
 
“அய்யோ அம்மா அது குல்பி இல்லை செல்பி, எல்லாரும் சேர்ந்து போட்டோ எடுத்துக்கறது…”
 
“க்கும்… எது நீ ஒரு பக்கம் முன்னாடி போய் நின்னுக்கிட்டு வாய் கோனிக்கிட்டு எடுப்பீங்களே அதுவா”
 
செல்வி சொன்ன தொனியை கேட்டு ரஞ்சனாவும் வெண்மதியும் சத்தமாக சிரித்துவிட்டனர்.
 
“என்ன சிரிப்பு?? நீ இப்படி போட்டோ எல்லாம் எடுக்க மாட்டியா??” என்று மனைவியை கேட்டவன் “ம்மா… செல்பின்னு சொன்னா குல்பின்னு சொல்லிட்டு எப்படி செல்பி எடுக்கறாங்கன்னு சரியா சொல்றே”
 
“அப்பாகிட்ட வேற நீ அடம்பிடிச்சு ஸ்மார்ட்போன் வாங்குனியாம், குல்பி எடுக்க தானா…” என்று தன் தாயை வாரினான் சிபி.
 
“நான் போன் உடைஞ்சு போச்சு வேற போன் வாங்கி தாங்கன்னு தான் அடம் பிடிச்சேன்… உங்கப்பா தான் இந்த தடவுற போன் வாங்கி கொடுத்து இருக்காரு… போனா இது ஒரு பட்டன் இல்லை, மொழுகட்டின்னு இருக்கு…” என்று அவர் சொன்ன அனைவருடன் சேர்ந்து சிபியும் சத்தமாய் சிரித்தான்.
 
பண்டிகை நாள் அங்கிருந்த அனைவருக்கும் மிக இனிமையான தருணமாய் அமைந்தது. குடும்பமாய் ஒன்றாய் வீடே கலகலவென்றிருந்தது ரஞ்சனாவிற்கு மிகப் பிடித்திருந்தது.
 
சிபியையும் வெண்மதியையும் மேலும் இரண்டு நாட்கள் தங்கிப்போகுமாறு அவள் சொல்ல தம்பதிகள் அதை தட்டாமல் செய்தனர்.
 
தீபாவளிக்கு மாமியார் வீட்டிற்கு சென்று வந்து இன்றோடு ஒரு வாரம் ஓடிவிட்டது. அங்கு சென்று வந்ததில் இருந்து சிபியின் போக்கில் பல மாற்றமிருந்தது.
 
வெண்மதி போகும் போது வரும்போதெல்லாம் அவளை துளைக்கும் பார்வை பார்க்கும் சிபியின் போக்கு அவளுக்கு புதிதாய்.
 
‘இவன்கிட்ட பாவம் பார்த்து பேசியிருக்க கூடாது போல, எப்பவும் போல இருந்திருக்கணும். ரொம்ப ஓவரா அட்வான்டேஜ் எடுத்துக்கறானே’ என்று மனதிற்குள் பொருமினாள்.
 
அவளின் எண்ணத்திற்கு எண்ணெய் ஊற்றுவது போல் வந்து சேர்ந்தாள் சந்தியா. வெண்மதி வேலை செய்யும் நர்சிங் ஹோமிற்கு வந்திருந்தாள் அவள்.
 
“மதி சிஸ்டர் ஓமனா சிஸ்டர் வந்தா என்னை வந்து பார்க்க சொல்லுங்க” என்ற மருத்துவரின் குரலில் நிமிர்ந்த வெண்மதி “அவங்க செகண்ட் ப்ளோர்ல ஆபரேஷன் கேஸ்ல இருக்காங்க டாக்டர். வனிதா டாக்டர்க்கு அசிஸ்ட் பண்ண போயிருக்காங்க…”
 
“இப்போ தான் போனாங்க, அவங்க வர்றதுக்கு ஒரு அரைமணி நேரம் ஆகுமே டாக்டர். உங்களுக்கு எதுவும் ஹெல்ப் பண்ணனுமா, நான் வேணா செய்யட்டுமா” என்றாள் அவள்.
 
“கொஞ்ச பேருக்கு ஸ்கேன் பண்ணணும் அதுக்காக அவங்களை கூட கூட்டிப் போகலாம்ன்னு கேட்டேன். உங்களுக்கு வேற எதுவும் வேலை இல்லன்னா என்னோட வாங்க… ஒரு நாலஞ்சு பேரு இருப்பாங்க, முடிஞ்சதும் உங்களை அனுப்பிடறேன்…”
 
“இப்போ லஞ்ச் டைம் தான் டாக்டர் நான் சாப்பிட்டு முடிச்சிட்டேன், ப்ரீயா தான் இருக்கேன்… போகலாம் டாக்டர்” என்றுவிட்டு அம்மருத்துவரின் பின்னே சென்றாள்.
 
“சிஸ்டர் நான் சொல்ற டீடைல்ஸ் எல்லாம் கொஞ்சம் நோட்ஸ் எடுத்திட்டே வாங்க, அப்போ தான் எனக்கு ரிப்போர்ட் அடிக்க ஈஸியா இருக்கும்…” என்று மருத்துவர் சொல்ல இவள் குறிப்பெடுக்க ஆரம்பித்தாள்.
 
நான்காவதாய் ஸ்கேன் எடுக்க உள்ளே நுழைந்தவளை வெண்மதி முதலில் கவனித்திருக்கவில்லை. குறிப்பில் பெயர் எழுதும் போது தான் வந்திருந்தவளை தற்செயலாய் திரும்பி பார்க்க அவளும் இவளைத்தான் பார்த்திருந்தாள்.
 
சந்தியா கருவுற்றிருந்தாள் அதற்கான செக்கபிற்காக வந்திருந்தாள். ஒரு நொடி மட்டுமே பார்வையை சந்தியாவின் மீது திருப்பிய வெண்மதி பின் வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.
 
மேலும் இரண்டு பேர் வந்து சென்றிருக்க அம்மருத்துவர் அவளிடம் “தேங்க்ஸ் மதி, அவ்வளவு தான் வேலை முடிஞ்சது… இன்னும் ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணு மதி…”
 
“இந்த ரிப்போர்ட் அடிச்சு கொடுத்திடறேன், அதை அவங்ககிட்ட கொடுத்திடுங்க…” என்றார்.
 
“ஓகே டாக்டர்…”
 
வேலை முடிந்ததும் அனைவரிடமும் ரிப்போர்ட் கொடுத்துவிட்டு அவள் நகரப்போகும் சமயம் வந்து சேர்ந்தார் இன்னொரு மருத்துவர் “மதி” என்ற அதட்டல் குரலில்.
 
“சொல்லுங்க டாக்டர்”
 
“என்ன சொல்ல சொல்றீங்க?? நான் உங்களை எங்கல்லாம் தேடுறது, இங்க என்னமோ வந்து சாவகாசமா வேலை பார்த்திட்டு இருக்கீங்க??”
 
“உங்களை அந்த 105 இருக்க பேஷன்ட்டை டெஸ்ட்க்கு கூட்டிட்டு போங்கன்னு தானே சொன்னேன். இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க நீங்க…”
 
அவர் பேசியது அனைத்தும் சந்தியாவின் முன்னேயே. அவளின் பார்வை இவளை இளக்காரமாய் பார்ப்பது திரும்பி பாராமலே உணர்ந்தாள் வெண்மதி.
 
“இல்லை டாக்டர் லஞ்ச் டைம்… முடிச்சு…”
 
“இவ்வளோ நேரமாவா லஞ்ச் டைம் உங்களுக்கு… நான் உங்களை ரெண்டு மணிக்கு அந்த பேஷன்ட் கூட்டிட்டு போகச் சொன்னேன். மணி என்னாகுது இப்போ, பத்து நிமிஷமா நீங்க அங்க வரலைன்னு பேஷன்ட் வந்து கம்பிளைன்ட் பண்றாங்க…”
 
“அங்க பேஷன்ட்ஸ் காக்க வைச்சுட்டு இங்க வந்து அரட்டை அடிச்சுட்டு இருந்திருப்பீங்க… உங்களுக்குலாம் எதுக்கு சம்பளம் கொடுத்து வைச்சிருக்காங்கன்னு தெரியலை. கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம இருக்கீங்க… போங்க போய் நான் சொன்னதை செய்ங்க…”
 
“சாரி டாக்டர்…” என்றவளுக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வரும் போல் இருந்தது. சந்தியாவின் முன்னே காட்டிக்கொள்ளாமல் அங்கிருந்து விரைவாக நகர்ந்திருந்தாள்.
 
முதல் மாடியில் அவள் வேலை எல்லாம் முடித்து கீழே இருந்த ஓய்வறைக்கு வர சந்தியா இன்னமும் அங்கேயே அமர்ந்திருப்பது கண்ணில்ப்பட்டது, உடன் ஒருவன் அமர்ந்திருந்தான். அவள் கணவனாய் இருப்பான் என்று ஊகிக்க முடிந்தது.
 
“மதி சிஸ்டர் இங்க கொஞ்சம் வாங்களேன்” என்ற வரவேற்பு பெண் நித்யாவை நோக்கிச் சென்றாள்.
 
“சொல்லு நித்யா…”
 
“சிஸ்டர் உங்க போன் என்னாச்சு, உங்க பொண்ணு கிரச்ல இருந்து ரெண்டு தடவை கூப்பிட்டாங்க…  உங்களுக்கு பண்ணாங்களாம் நீங்க எடுக்கலையாம்…”
 
“இல்லை நித்யா கொஞ்சம் வேலையா இருந்தேன், போன் சைலென்ட்ல இருந்துச்சு… இதோ இப்போவே அவங்களுக்கு பேசறேன்…” என்றவள் அவள் பாக்கெட்டில் இருந்த போனை வெளியில் எடுத்தாள்.
 
“என்னங்க அவங்க யாருன்னு உங்களுக்கு தெரியுதா??” இது சந்தியாவின் குரல்.
 
வெண்மதியின் காதில் அது தெளிவாய் விழுந்த போதும் ‘இவகிட்ட பெரிசா ரியாக்ட் பண்ணா மேல மேல ஏதாச்சும் பேசுவா…’ என்று தான் நினைத்தவள் கிரச்சுக்கு போன் செய்தாள்.
 
“ஹலோ கால் பண்ணியிருந்தீங்களா மேடம்… பீஸ் நான் வரும் போது கொண்டு வர்றேன் மேடம்… சாப்பாடு  சாப்பிடலையா… அந்த பிளாஸ்க்ல இருக்கற பாலை ஆத்தி கொடுத்திடுங்க குடிச்சிடுவா…” என்று பேசி வைத்தாள்.
 
அதற்குள் சந்தியா தன் கணவனிடம் விளக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள்.
“ஏங்க எங்க அக்கா வீட்டுக்காரர் ஜெய் மாமா இருக்கார்ல…”
 
“அதுக்கென்ன இப்போ…”
 
“சொல்றதை முழுசா கேளுங்க… ஜெய் மாமாவோட தம்பி இருக்கார்…” என்று சொல்லவும் அவன் முகம் சுருங்கியது.
 
“இப்போ அவருக்கென்ன… அந்த பேச்செல்லாம் நமக்கெதுக்கு இப்போ…”
 
“யோவ் கொஞ்சம் பேசாம என்னன்னு கேளு…” என்றவள் “அவன் ஒரு பொண்ணு கழுத்துல தாலி கட்டினான்ல அவ தான் இவ…”
 
“இவளுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி ஒரு குழந்தையும் இருக்கு. இவ புருஷன் இவளை கட்டின நேரம் போய் சேர்ந்துட்டான் ஒரு ஆக்சிடென்ட்ல…” என்று அவள் சொல்லிக்கொண்டிருக்க “கொஞ்சம் வாயை மூடுறியா…”
 
“எதுக்கு இப்படி பேசிகிட்டு இருக்க, அவங்க காதுல விழுக போகுது…”
 
“விழுகட்டும் எனக்கென்ன வந்துச்சு… இவ சரியான ராங்கிக்காரி, அந்த ரவுடிக்கு இவ தான் சரி…” என்று அவள் தொடர “நீ இப்போ வாயை மூடலை நடக்கறதே வேற” என்று அடிக்குரலில் கத்தினான் அவள் கணவன்.
 
“இப்போ என்னாச்சு?? எதுக்கு நீங்க இந்த குதி குதிக்கறீங்க??”
 
“அந்த மனுஷன் மட்டும் அன்னைக்கு இப்படி ஒரு காரியம் செய்யலைன்னா இன்னைக்கு நீயும் நானும் இப்படி இருந்திருக்க மாட்டோம். அதை நினைச்சு பாரு…” என்று மிகச்சரியாய் யோசித்தான் அவன்.
 
“அன்னைக்கு அவன் என்னை எவ்வளவு மனஉளைச்சலுக்கு நான் ஆளானேன்னு எனக்கு தான் தெரியும்… கடைசி நிமிஷம் வரைக்கும் என்னை பதற வைச்சுட்டான்…”
 
“உன்கிட்ட இப்போ பேச எனக்கு விருப்பமில்லை… நாம வீட்டுல போய் பேசிக்கலாம்… நீ கொஞ்சம் இங்க இரு…” என்றவன் வெண்மதியை நோக்கிச் சென்றான்.
 

Advertisement