Advertisement

 
11
 
“பா… ப்பா…” என்று வானதி அவன் கால்களை பிடித்தாள். வீம்புக்காரனாயிற்றே!! குழந்தையை தூக்கவில்லை அவன்.
 
வானதிக்கு அழுகை பொங்கியது, அன்னையும் தூக்கவில்லை, இப்போது சிபியும் தூக்கவில்லை என்றதும் ஓவென்று அழ ஆரம்பித்தாள்.
 
“மதி என்னாச்சு… எதுக்கு இப்படி உட்கார்ந்து இருக்கே??” என்று அவளை பிடித்து உலுக்கவும் தான் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
 
கண்கள் அவசரமாய் அவனை தலை முதல் கால் வரை கண்டது. அதுவரை அவளுக்கிருந்த அழுத்தம் அவனைக்கண்டதும் உச்சத்தை தொட்டிருக்க கண்கள் சொருகி அப்படியே மயங்கி விழுந்திருந்தாள்.
 
சிபிக்கு ஒன்றும் புரியவில்லை, ஒரு புறம் வானதி அழுதுக் கொண்டிருக்கிறாள். இன்னொருபுறம் வெண்மதி மயங்கி இருக்க யாரை கவனிப்பது என்றானது அவன் நிலை.
 
குழந்தையை தூக்கிக்கொண்டு சமையலறை சென்றவன் கையில் தண்ணீரோடு வந்தான். வெண்மதியின் முகத்தில் நீரை தெளிக்க அவளிடம் அசைவில்லை என்றதும் வெளியில் சென்று வெள்ளையம்மாவை அழைத்து வந்தான்.
 
வானதியை அவரிடம் ஒப்படைத்துவிட்டு ஆட்டோ ஒன்றை அழைத்து வரச்சொன்னான் வெண்மதியை மருத்துவமனை அழைத்துச்செல்ல…
 
அங்கு சென்ற அரைமணி நேரத்திலேயே வெண்மதி கண் விழித்தாள். “என்ன வெண்மதி?? என்னாச்சு உனக்கு?? திடீர்ன்னு மயங்கி விழுந்துட்டியாம், சார் ரொம்ப பயந்துட்டார் போல”
 
“இப்படி எல்லாம் நீ மயங்கி விழுகற ஆள் கிடையாதே??” என்றார் மருத்துவர். அவர் வெண்மதிக்கு தெரிந்தவர் போலும் “இல்லை அது ஒரு டென்ஷன் அதான்…”
 
“டென்ஷன் ஆக உனக்கு என்ன இருக்கு… ஏன் டென்ஷன் ஆகணும் நீ?? உன் ஹார்ட் பீட் கன்னாபின்னான்னு காட்டுச்சு உன்னை இங்க கூட்டிட்டு வந்தப்போ, இப்போ தான் கொஞ்சம் நார்மல் ஆகியிருக்கு…”
 
“பிபியும் வேற இருந்துச்சு, இது நல்லதில்லைம்மா… கொஞ்சம் கவனமா இரு…” என்று அவளிடம் அறிவுரை கூறியவர் பின் அவனிடமும் “சார் பார்த்துக்கோங்க வெண்மதியை… என்ன டென்ஷன்னு எனக்கு தெரியலை…”
 
“சண்டை எல்லாம் போடாதீங்க… கொஞ்சம் விட்டுக்கொடுத்து போங்க… அவ பல்ஸ் கொஞ்ச நேரத்துல என்னையவே பயமுறுத்திடுச்சு, பார்த்து இருந்துக்கோங்க…” என்று அவனுக்கு வேறு இல்லாத ஒன்றுக்காய் இலவச அறிவுரை வேறு வழங்கினார் அவர்.
 
அவரிடம் எதிர்த்து பேச விரும்பாதவனாய் அவரிடம் தலையை ஆட்டிவிட்டு அவளுக்கு கொடுக்க வேண்டிய மருந்து மாத்திரைகளை வாங்கிக்கொண்டு வெண்மதியை அழைத்துக்கொண்டு கிளம்பினான்.
 
வீட்டிற்கு வரும் வரையில் மட்டுமல்ல வீட்டிற்கு வந்தும் அவளிடம் எதுவும் பேசவில்லை அவன். அவளுக்கு தேவையானதை பார்த்து செய்தான் அவ்வளவே.
 
இடையில் வானதியையும் கவனித்துக்கொண்டான். வெண்மதிக்கு தான் அவன் எதுவும் பேசாதது உள்ளே அறுத்தது.
 
நாலு திட்டு திட்டியிருந்தால் கூட பதிலுக்கு சண்டை போட்டிருப்பாள். எதுவும் பேசாமல் செல்பவனிடம் என்ன கேட்பது என்று அவளுக்கும் புரியவில்லை.
 
வானதிக்கு உணவு கொடுத்து உறங்க வைத்திருந்தான். வெண்மதி எதுவோ யோசித்துக்கொண்டு படுத்திருப்பது கண்ணில் விழுந்தது அவனுக்கு. அவளிடம் பேசலாமா என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே வெளியில் வெள்ளையம்மா பாட்டியின் குரல் கேட்டது.
 
அவசரமாய் எழுந்து வெளியில் சென்றான். “இப்படி உட்காருய்யா…” என்று அவர் சொல்லவும் தட்டாமல் அங்கிருந்த திண்ணையில் அமர்ந்தான்.
 
“சொல்லுங்க பாட்டி, என்கிட்ட என்ன பேசணும்??”
 
“நான் கூப்பிட்டது உன்கிட்ட பேசத்தான்னு சரியா புரிஞ்சுகிட்டய்யா, இது மாதிரி உன் பொண்டாட்டி மனசும் புரிஞ்சுகிட்டா நல்லாயிருக்கும்லய்யா… நான் கூட நீ அந்த புள்ளைய கட்டிட்டு வரும்போது இதெல்லாம் சரியா வருமான்னு யோசிச்சேன்”
 
“உங்களுக்கு ஒரேதா பிடிக்காம எல்லாம் நீங்க எதுவும் செஞ்சிருக்க மாட்டீகன்னு தெரியும். ஆனா அந்த பபுள்ள கண்ணுல உன் மேல இருந்த வெறுப்பை தான் பார்த்தேன் அப்போ…”
 
‘அப்போ மட்டுமில்லை இப்போ வரை அதானே…’ என்று சிபியின் மனதில் ஓடியது.
 
“இப்போ அந்த கண்ல வெறுப்பில்லை” என்றுவிட்டு அவர் நிறுத்தவும் அவன் புரியாமல் அவரை ஏறிட்டான்.
 
“இப்போ அதுல விருப்பம் தான் தெரியுது உங்க மேல உள்ள விருப்பம் தான் அது…” என்று போட்டு உடைத்தார் அவர்.
 
அப்படியிருக்க வாய்ப்பே இல்லை என்று தான் தோன்றியது அவனுக்கு. அவளை அவன் சிறுவயதில் பலமுறை மனம் நோகச் செய்திருக்கிறான்.
 
அவனை கடைசியாய் பார்த்த போது கூட “உன்னை நான் பார்க்கறது இதுவே கடைசியா இருக்கட்டும்ன்னு நான் வேண்டிக்கறேன்” என்று வெறுப்பாய் தான் சொல்லிவிட்டுச் சென்றாள் அன்று.
 
அப்போது விளையாட்டாய் அவன் செய்தது. அது பின்னாளில் தனக்கு புரிந்தது போல் அவளுக்கும் புரிந்திருக்கும் என்று அவனாகவே அப்போது கற்பனை செய்துக் கொண்டான்.
 
இப்போது வரையிலும் அது தவறென்றோ அது அவளை பாதித்திருக்கிறது என்றோ அவன் உணரவேயில்லை.
 
இப்போது கூட அவன் அவளின் விருப்பம் கூட கேட்காமல் அவள் கழுத்தில் தாலி கட்டியதில் அவன் மீதான அவளின் வெறுப்பை விருப்பமின்மையை நன்கறிவான்.
 
பாட்டி சொல்லும் சேதி இப்போது அவனுக்கு புதிதாய், சற்றே சுவாரசியமாய்.
 
“என்ன சொல்றீங்க பாட்டி??” என்று புரியாதவனாய் கேட்டவனின் குரலில் இப்போது ஒரு புது உற்சாகம் பிறந்திருந்தது.
 
“இன்னைக்கு காலையில நீங்க எங்க போனீங்கய்யா… அதைச் சொல்லுங்க முதல்ல”
 
“ஹ்ம்ம்… அது மாரியப்பன் குத்தகை பணம் கொடுக்கறேன்னு சொன்னான், அதான் பெரியகுளம் வரைக்கும் போயிருந்தேன்…”
 
“அப்படியே தோப்புக்கும் போயிட்டு வந்தேன்… இன்னைக்கு அப்பாவை வீட்டில ரெஸ்ட் எடுக்கச் சொல்லிட்டேன். சரி நாம அவ்வளவு தூரம் போறோமே அதையும் பார்த்திடுவோம்ன்னு அங்க போயிட்டேன்”
 
“மாரி புதுசா ஒரு தோப்பு வந்திருக்குன்னு சொன்னாப்புல, சரின்னு அதையும் ஒரு எட்டு போய் பார்த்திட்டு வந்தேன்…”
“யார்கிட்டயாச்சும் இங்க போறீங்கன்னு சொல்லிட்டு போனீங்களா??”
 
“இல்லை சொல்லலை… அம்மா இருந்தா சொல்லிட்டு போவேன், இப்போ…” என்றுவிட்டு நிறுத்திவிட்டான்.
 
“ஹ்ம்ம்… சொல்லிட்டு போகலையா??”
 
அவர் கேள்விக்கு பதிலாய் லேசாய் தலை குனிந்தான். “சரி என்கிட்ட எப்பவும் எதாச்சும் வேலைன்னா சொல்லிட்டு போவீங்களே…”
 
“உங்கட்ட சொல்லலாம்ன்னு காலையில வந்தேன், நீங்க பண்ணைக்கு போயிருந்தீங்க… சரி அப்புறம் போன் பண்ணிக்கலாம்ன்னு நான் கிளம்பி போயிட்டேன்… ராஜா அண்ணனுக்கு போன் பண்ணி சொன்னனே…”
 
“ராசா என்ட சொல்ல மறந்துட்டான் போல” என்றவர் “உன் பொண்டாட்டி நீ வீட்டுக்கு வரலைன்னதும் வாசலுக்கும் வீட்டுக்கும் அலைஞ்சுட்டு இருந்தா…”
 
“எனக்கும் நீங்க எங்க போயிருக்கீங்கன்னு தெரியலை… என்கிட்ட கேட்டப்போ நான் அதைத்தான் சொன்னேன்… அந்த புள்ள அதை நினைச்சு தான் கவலையா இருந்திருக்கும் நினைக்கிறேன்…” என்றார்.
 
“இனி எப்போ எங்க போனாலும் சொல்லிட்டு போங்கய்யா, பார்த்து பொழைங்க… உங்க ஆத்தா என்ன நினைச்சு மூத்தவரு கூட போனாகளோ அது நல்லபடியா நடக்கட்டும்…” என்று கடைசியாய் சொன்னதை முணுமுணுப்பாய் சொல்லியவாறே எழுந்து சென்றிருந்தார் அவர்.
 
அவர் மெதுவாய் சொல்லியிருந்தாலும் அது சிபியின் செவியில் விழுந்திருந்தது. உள்ளுக்குள் லேசாய் சிரித்துக் கொண்டான்.
 
நாட்கள் அதன் போக்கில் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. இடையில் தீபாவளி நாள் வந்திருக்க சங்கரியும் கணேசனும் அதற்கு அழைக்கவென்று வந்திருந்தனர்.
 
வந்தவர்களை வரவேற்று அவள் உபசரிக்க சிபியும் வீட்டில் தானிருந்தான். “அடுத்த வாரம் தீபாவளி வருது…”
 
‘அதை சொல்ல தான் இவங்க இப்போ இங்க வந்தாங்களா’ என்ற கவுண்ட்டர் மனதிற்குள் ஓடியது அவனுக்கு.
 
“அதான் எங்களுக்கே தெரியுமே” என்று வெடுக்கென்று சொன்னாள் வெண்மதி. அவளுக்கு அவர்கள் எதற்காய் வந்திருக்கிறார்கள் என்று உடனே புரிந்திருந்தது.
 
“இல்லை அது வந்து…” என்று சங்கரி இழுக்க “நாங்க அன்னைக்கு திண்டுக்கல் போறோம் தீபாவளி கொண்டாடுறதுக்கு. அக்காவுக்கு மாசம் நெருங்கிட்டு வருதுல அவங்க யாரும் இங்க வரமுடியாது அதனால தான்” என்று சிபி பேசும் முன் அவள் முந்திக்கொண்டு பதில் சொல்லியிருந்தாள்.
 
‘இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே, இந்த வருஷம் வெறும் தீபாவளியா இருக்கும்ன்னு நினைச்சேன். கொண்டாட்டமா தான் இருக்கும் போல’ என்றது சிபியின் உள்ளம்.
 
“நீ கொஞ்சம் சும்மா இரும்மா, நாங்க அவர்கிட்ட தானே பேசிட்டு இருக்கோம்… அவர் சொல்லட்டும், நீங்க சொல்லுங்க மருமகனே, தீபாவளிக்கு நீங்க அங்க வந்திடுவீங்க தானே…” என்றார் கணேசன்.
 
“தப்பா எடுத்துக்காதீங்க மாமா, மதி சொன்னது தான் நாங்க திண்டுக்கல் போகலாம்ன்னு தான் முடிவு பண்ணி இருக்கோம்…”
 
“வருஷா வருஷம் நாங்க எல்லாரும் ஒண்ணா கொண்டாடுறது தான், அதை மாத்த வேணாம்ன்னு நினைக்கிறேன். இந்த வருஷம் அவங்க எல்லாம் இங்க இல்லை அதான் நாங்க போயிட்டு வரலாம்ன்னு இருக்கோம்…” என்று முடிவாய் சொல்லிவிட்டான்.
 
“அப்புறம் உங்க இஷ்டம்” என்று விட்டுவிட்டனர் சங்கரியும் கணேசனும்.
 
அன்று சிபி மதிய சாப்பாட்டிற்கு வந்தவன் வீட்டுக்குள்ளேயே அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருந்தான்.
 
இப்போதெல்லாம் வெண்மதி சமைப்பதை தான் அவனும் உண்பது, தனியே சமைப்பதில்லை.
 
வெள்ளையம்மா பாட்டியிடம் பேசிவிட்டு வீட்டிற்கு வந்த பின்னே வெண்மதி அவனிடம் “உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்ற குரலில் திரும்பியவன் என்னைத்தானா என்பது போல் பார்க்க அவளின் பாவம் ஆம் என்றது.
 
‘என்னவென்ற’ கேள்வி முகத்தில் தொக்கி நிற்க அவளை ஏறிட்டான். “உங்களுக்கும் சேர்த்து தான் சமைச்சிருக்கேன், இனிமே ஒரே சமையலே இருக்கட்டும்” என்று எங்கோ பார்த்துக்கொண்டு சொல்ல அவன் பதிலொன்றும் சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்திருந்தான்.
 
“பதில் சொல்லாம போனா என்ன அர்த்தமாம், எல்லாம் என்னை சொல்லணும்… மாங்கு மாங்குன்னு சமைச்சேன்ல, என்னை நானே அடிச்சுக்கணும்” என்று சத்தமில்லாமல் முணுமுணுத்தாள்.
 
சற்று நேரத்தில் சமையலறையில் அரவம் கேட்க படுத்திருந்தவள் மெதுவாய் படுக்கையறை கதவை திறந்து எட்டிப்பார்த்தாள்.
 
சிபிவர்மன் அங்கிருந்த டேபிளில் உணவை எடுத்து வைத்துக்கொண்டு சாப்பிடுவதை கண்டதும் மனம் குளிர்ந்து போனது அவளுக்கு.
 
அன்றிலிருந்து இருவருக்குள்ளும் கண்ணுக்கு புலப்படாத ஒரு ஒட்டுதல் தோன்ற ஆரம்பித்திருந்தது.
 
தீபாவளிக்கு இன்னும் இரண்டு நாட்களே இருந்தது. வானதி உறங்கியிருக்க வெண்மதி இரவு உணவு தயாரித்துக் கொண்டிருக்க சிபி அப்போது தான் வீட்டிற்குள் நுழைந்தான். உடலெல்லாம் மண்ணாய் இருக்க பின்புறம் சென்று குளித்துவிட்டு வந்தான்.
 
“சாப்பாடு எடுத்து வைக்கவா??” என்ற குரல் உள்ளிருந்து கேட்க இவனோ “வேணாம்…”
 
“ஏன்??” கேள்வி மீண்டும் உள்ளிருந்து.
 
“கொஞ்சம் வெளிய வர்றியா??”
 
“என்ன விஷயம்ன்னு சொல்லுங்க??”
 
அவள் வெளியில் வராத கடுப்பில் “ஒண்ணுமில்லை நீ உன் வேலையை பாரு…” என்றுவிட்டு எழுந்து சென்றுவிட்டான்.
 
“கூப்பிட்டா வரமாட்டாளாம் என்ன விஷயம்ன்னு நாங்க சொல்லணுமாம், போடி…” என்ற அவன் குரல் தேய்ந்து அவள் காதில் ஒலித்தது.
 
வெண்மதி சற்று நேரத்தில் வெளியில் வந்து பார்க்க சிபி அங்கில்லை. இரண்டு கவர்கள் மட்டுமே இருந்தது.
 
“என்னது இது??” என்று எண்ணியவாறே அருகே சென்று அதை எடுத்து கையில் பார்க்க, பார்த்ததுமே புரிந்து போனது அது புத்தாடை என்று.
 
‘யாருக்கு வாங்கி இருப்பான், நமக்கு தானா?? அதுக்கு தான் அவ்வளவு அவசரமா கூப்பிட்டானா?? நான் கேட்டனா இவன்கிட்ட டிரஸ் எடுத்து கொடுக்கச் சொல்லி, பெரிய இவன்… அதை இவன் கையால கொடுக்க மாட்டானாமா… வேலையா இருந்தா கொஞ்சம் வெயிட் பண்ணி கொடுக்கலாம்ல…’ என்று மனதார அவனை திட்டியவள் அந்த கவரை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டாள்.
 
“நீயா கொடுத்தா தான் வாங்கிக்குவேன்…” என்று முணுமுணுப்பாகவே சொன்னாள்.
 

Advertisement