Advertisement

 
10
 
இரவு பத்து மணியாகியிருந்தது, சிபிவர்மன் உடல் அலுப்பினால் விரைவாகவே படுத்து உறங்கிப் போனான். திடீரென்று வீட்டின் பின்புறத்தில் இருந்து அய்யோவென்ற அழுகுரல் கேட்க பதறிக்கொண்டு எழுந்தவன் அருகே பார்க்க வெண்மதியும் வானதியும் அங்கில்லை.
 
வேகமாய் எழுந்து பின்னால் ஓட அங்கு வைத்திருந்த தண்ணீர் சேமிக்கும் தொட்டியில் இறங்கிக் கொண்டிருந்தாள் வெண்மதி.
 
“மதி என்னாச்சு?? என்ன பண்ணிட்டு இருக்கே நீ??” என்று ஒரே எட்டில் அவளை பிடித்து தடுத்தவன், அவளை உலுக்க “பாப்பா… பாப்பா, வானதி உள்ள விழுந்துட்டா…” என்று அழுகையோடு சொல்ல அவன் உடனே தொட்டிக்குள் இறங்கிவிட்டான்.
 
கொஞ்சம் தரையோடு கட்டியிருந்த தொட்டி அது. அந்த தொட்டி சிபி மழை நீரை சேமிப்பதற்காக கட்டியது. மழை இல்லாத போதும் அதில் பத்து நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் சேமித்து வைப்பர். அத்தண்ணீர் வீட்டு உபயோகத்திற்கும் ஆடு மாடுகளுக்கு தண்ணீர் காட்டுவதற்கும் உபயோகப்படுத்துவர்.
 
ஐந்து அடி ஆழமும் ஏழு அடி அகலமும் மட்டுமே கொண்டது அந்த தொட்டி. இவன் இறங்கும் போது தண்ணீர் மூன்றரை அடி அளவிற்கு மட்டுமே இருக்க வானதி உள்ளே மூர்ச்சையாகி இருந்தாள்.
 
குழந்தையை அப்படியே அள்ளிக்கொண்டு வெளியில் வர ஆங்காங்கே ரத்தம் வேறு வந்தது. குழந்தை கால் இடரி கீழே விழுந்திருப்பாள் போலும், விழுந்த வேகத்தில் எதிலோ இடித்துவிட அதிர்ச்சியிலும் வலியிலும் மயங்கிய குழந்தை நீரை வேறு குடித்திருந்தது.
 
குழந்தைக்கு ஒன்றும் ஆகக்கூடாது என்று வேண்டிக்கொண்டு பயத்துடன் அவன் வெளியில் வர வெண்மதி பாய்ந்து வந்து அவனிடம் இருந்து குழந்தையை வாங்கினாள்.
 
“வானதி, பாப்பா எழுந்திருடா அம்மா பாருடா” என்று அவள் கூப்பிட குழந்தை பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தது அவளுக்கு மட்டுமல்லாமல் அவனுக்குமே பயத்தை கொடுத்தது.
 
அதைக்கண்டு வெண்மதி “நானே கொன்னுட்டேன் என் குழந்தையை… எல்லாம் என்னால தான்” என்று கதற “வாயை மூடுடி, குழந்தைக்கு ஒண்ணுமில்லை” என்றவன் வானதியை அவளிடமிருந்து வாங்கி வயிற்றில் தண்ணீர் இருக்கிறதா என்று சோதித்தான்.
 
அவள் அதிகம் தண்ணீர் குடித்திருக்க வாய்ப்பில்லை என்ற போதும் பயம் லேசாய் துளிர் விட வயிற்றை மெதுவாய் அமுக்கி தண்ணீரை வெளியில் எடுத்தான்.
 
அதன் பின்னும் குழந்தை கண் விழிக்காமலிருக்க தன் மூச்சுக்காற்றை இரண்டு மூன்று முறை கொடுத்து அவளை உலுக்க குழந்தை லேசாய் இருமினாள். அவனுக்கு அப்போது தான் உயிரே வந்தது. அவளின் மூச்சு இப்போது சீராய் ஏறி இறங்க குழந்தை இன்னமும் மயக்கத்தில் இருந்து முழுதாய் விடுப்பட்டிருக்கவில்லை.
 
“வானும்மா அம்மா பாருடா” என்று அவளருகே மண்டியிட்டு அமர “இதுக்கெல்லாம் நேரமில்லை மதி கிளம்பு ஆஸ்பிட்டல் போகணும்… எழுந்திரு” என்று கூறிவிட்டு வண்டியை எடுக்கச் சென்றான்.
 
அவன் பின்னேயே ஓடியவள் வண்டியில் ஏறி அமர “எந்த டாக்டர்கிட்ட போகலாம், உனக்கு தான் தெரியுமே, இந்த நேரத்துல டாக்டர்…” என்று சொல்லி முடிப்பதற்குள் “அமிர்தா டாக்டர் வீடு தேவர் நகர்ல இருக்கு, அங்க போய்டலாம்…” என்றவள் குழந்தையை இறுக்க அணைந்திருந்தாள் கண்களில் கண்ணீர் இன்னமும் வழிந்து கொண்டே தானிருந்தது.
 
“குழந்தைக்கு ஒண்ணும் இருக்காதுல… எனக்கு ரொம்ப பயமாயிருக்கு…” என்றவளின் குரலில் அழுகையும் நடுக்கமும் தெரிந்தது.
 
“ஒண்ணும் ஆகாது, நாம தான் உடனே தூக்கிட்டோம்ல… ஆமா பாப்பா ஏன் தண்ணி தொட்டி பக்கம் போனா…”
 
“இல்லை நான் தான் அவளை பாத்ரூம் கூட்டிட்டு வந்தேன். பக்கத்துல தண்ணி இல்லாததால தொட்டியில இருந்து தண்ணி எடுக்கலாம்ன்னு கொஞ்சம் திறந்தேன். தண்ணி அதுல குறைவா இருந்ததால வீட்டுக்குள்ள இருந்து எடுத்திட்டு வரலாம்ன்னு வந்தேன்…”
 
“நான் தண்ணி எடுத்திட்டு வெளிய வர்றதுக்குள்ள பாப்பா விழுந்த சத்தம் கேட்டுச்சு… எல்லாம் என்னால தான்…” என்று தலையில் அடித்துக்கொண்டு அழ “மதி கொஞ்சம் அமைதியா இரு, நீ நர்ஸ் தானே… பாப்பாக்கு ஏதாச்சும் முதலுதவி செய்யலாம்ல” என்று அவன் சொல்லவும் தான் அவள் விழிப்பிற்கு வந்தாள்.
 
வானதிக்கு ஒன்று என்றதும் அனைத்தும் மறந்து போனது அவளுக்கு. சிபி சொல்லவும் தான் அவளின் தாய்மை உணர்வு சற்று தள்ளிவைக்கப்பட்டு செவிலியாய் யோசிக்க ஆரம்பித்தாள்.
 
“எனக்கு அது தோணலையே, இப்… இப்போ என்ன செய்ய?? வீட்டில தான் எல்லாம் இருக்கும்…”
 
“பரவாயில்லை விடு சீக்கிரம் டாக்டர் வீட்டுக்கு போய்டலாம்” என்றான். வெண்மதி வழி சொல்ல டாக்டர் அம்ரிதாவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
 
அவன் புல்லட்டை நிறுத்தும் முன்னே வண்டியில் இருந்து குதிக்காத குறையாய் குதித்திருந்தாள் அவள். முதலில் அவள் குழந்தையை தூக்கிக்கொண்டு ஓட பின்னேயே வண்டியை நிறுத்திவிட்டு சிபியும் சென்றான்.
 
வீட்டுடன் கிளினிக்கும் அங்கேயே இருக்க ஏற்கனவே முதலுதவி செய்யப்பட்டுவிட்டதால் குழந்தைக்கு சிகிச்சையை தொடங்கினார் அம்மருத்துவர்.
 
மறுநாள் காலை வரை அவர்கள் அங்கேயே தானிருந்தனர். குழந்தைக்கு வலி நிவாரணிக்காய் ஊசி போடப்பட்டிருக்க அவள் அசந்து உறங்கிப் போயிருந்தாள்.
 
வானதி கண் விழித்த பின்னே தான் வெண்மதிக்கு உயிரே வந்தது, சிபிக்கும் தான். அதன்பின் அவர்கள் வீடு வந்து சேரவும் வெள்ளையம்மா வாயிலிலேயே நின்றிருந்தார்.
 
“எங்கய்யா போயிட்டீங்க?? காலையில இருந்து நான் இங்கன தான் இருக்கேன். என்னாச்சு புள்ளைக்கு, மேலுக்கு எதுவும் முடியலையா??”
 
“ஆமா பாட்டி பாப்பாக்கு உடம்புக்கு முடியலை, அதான் டாக்டர்கிட்ட காட்டிட்டு வர்றோம்” என்றான் சிபிவர்மன்.
 
அடுத்த இரண்டு நாளில் வானதி நன்றாகவே தேறி எழுந்து விளையாட ஆரம்பித்திருந்தாள்.
 
சிபி, வெண்மதியின் உறவில் புதிதாய் ஒரு மாற்றம் நிகழ்ந்தது நடந்து முடிந்திருந்த அந்நிகழ்வினால்.
 
வெண்மதி மாலையில் விரைவாக வீட்டிற்கு வர ஆரம்பித்திருந்தாள். சிபியை தேடிச் செல்லும் வானதியை பிடித்து வைப்பதோ அதட்டுவதோ இல்லை.
 
ஆனால் சிபி தான் குழந்தையை தூக்கக்கூட முயற்சிக்கவில்லை. அன்று தொட்டியில் இருந்து தூக்கியதோடு சரி…
 
தள்ளி நின்றே தான் விளையாடுவான், அதுவும் வெண்மதியின் கண்பார்வையிலேயே!! அவள் பேசியது இன்னமும் அவன் நினைவில் நீங்காதிருந்தது.
 
மருத்துவமனைக்கு சென்ற வந்த தினமே சிபி ஒன்றை செய்தான். வீட்டின் பின்னே இருந்த அந்த தொட்டியை மூடியது தான் அது.
 
“எதுக்கு மூடறீங்க??” என்று வெண்மதி கூட கேட்டுவிட்டாள்.
 
“எப்போவும் ஒரே மாதிரி இருக்காது, நாம பக்கத்துல இருந்தோம். குழந்தை விழுந்தது தெரிஞ்சது, இல்லன்னா என்னாகியிருக்கும் நினைச்சு கூட பார்க்க முடியலை…”
 
“இல்லை அது நீங்க ஏதோ மழை நீர் சேமிப்புக்காக கட்ட சொன்னதுன்னு…”
 
“ஆமா… அதை அப்புறம் பார்த்துக்கலாம் இப்போ குழந்தை தான் முக்கியம்” என்றுவிட்டு அதற்கான வேலைகளில் மும்முரமாய் இறங்கினான். ஆட்களை கூட்டி வந்து அதை மூடிய பிறகே ஓய்ந்தான் அவன்.
 
செல்வி தனியே சென்ற அன்றிலிருந்தே இருவரும் தனித்தனியே தான் சமைத்துக் கொண்டிருந்தனர். சிபி வானதியிடம் காட்டும் அக்கறையில் வெண்மதி நெக்குருகி தான் போக ஆரம்பித்திருந்தாள்.
 
அதன் பொருட்டு அவளிடத்தில் மாற்றம் உருவாக ஆரம்பித்திருந்தது. ஒரேடியாக மாறாவிட்டாலும் சிறு சிறு மாற்றம் இருக்கத்தான் செய்தது. அன்று விடுமுறை தினம் அவளுக்கு.
 
சிபி காலையில் எங்கோ சென்றவன் இன்னமும் வீட்டுக்கு வந்திருக்கவில்லை. அவன் சமைத்தது போலவும் அவளுக்கு தெரியவில்லை.
 
அவளுக்காய் தோன்றி அவனுக்காய் சமைக்க ஆரம்பித்தாள். அவனுக்கு பிடித்ததை கைகள் தானாய் சமைத்தது.
 
வெள்ளையம்மாவிடம் சொல்லி ஆடும் கோழியும் வாங்கி வந்து சமைத்திருந்தாள். மணி ஒன்றாகிய போதும் கூட சிபி வந்திருக்கவில்லை.
 
இவ்வளவு நேரம் எல்லாம் இதுவரை அவன் வராமல் இருந்ததில்லை என்பதால் மனம் தன்னையுமறியாமல் அவன் நலன் குறித்து பயம் கொள்ள ஆரம்பித்திருந்தது.
 
வெள்ளையம்மாவிடம் கூட கேட்டுவிட்டாள் அவன் எங்கே சென்றிருக்கிறான் என்று. அவன் யாரிடமும் எங்கே செல்கிறேன் என்பதை பற்றி சொல்லி சென்றிருக்கவில்லை.
 
நேரம் செல்ல செல்ல அவள் கை கால்கள் நடுக்கம் கொள்ள ஆரம்பித்தது. ‘ஒரு வேளை அவன் வண்டியில் சென்றிருப்பானோ, வண்டி ஆக்சிடென்ட் ஆகி அவனுக்கு எதுவும்…’ என்று நினைத்து முடிக்கும் முன்னேயே கண்கள் கலங்கிப் போனது.
 
அந்த எண்ணம் தோன்றியதுமே வெளியில் வந்து பார்க்க நினைத்தது போல் அவன் புல்லட் அங்கிருக்கவில்லை. ‘அப்போ வண்டியில தான் போயிருக்கார், கடவுளே அவருக்கு எதுவும் ஆகக்கூடாது’ என்று வேண்டுதல் வைத்தாள்.
 
‘ஒரு வேளை அத்தையை பார்க்க திண்டுக்கல் போயிருப்பாரோ’ என்ற யோசனை வர செல்விக்கு போன் செய்தாள்.
 
“அதிசயம் தான்…” என்று சொல்லியவாறே போனை எடுத்தார் செல்வி.
 
“எப்ப… எப்படியிருக்கீங்க அத்தை??”
 
“இன்னைக்கு கண்டிப்பா மழை வரும்…”
 
“அத்தை… என்கிட்டே தான் பேசறீங்களா, ஹலோ… ஹலோ…” என்றாள் வெண்மதி.
 
செல்வி அவளைத் தான் சொல்கிறார் என்று அவள் நினைத்திருக்கவில்லை. யாரிடமோ பேசிக்கொண்டிருக்கிறார் போல என்று எண்ணிக்கொண்டாள் அவள்.
 
செல்வி அப்படி சொல்லியதற்கும் காரணம் உண்டு. இதுவரை வெண்மதி அவளாய் செல்விக்கு ஒரு நாளும் அழைத்திருந்ததில்லை. செல்வி தான் எப்போதும் அழைப்பார்.
 
அவர் நலன் எல்லாம் குறித்து விசாரித்ததே இல்லை. அவள் அவருக்கு போன் செய்ததே புதிதென்றால் இதில் அவர் நலனை விசாரித்தது அவருக்கு அதிசயமாய் தானே இருந்திருக்கும்.
 
பிடிக்காத மருமகள் என்றாலும் அவளிடம் அவ்வப்போது பேசுவதுண்டு. வானதியை பற்றி விசாரிப்பார், மகன் ஒழுங்காக சாப்பிடுகிறானா என்பது பற்றியும் விசாரிப்பார்.
 
“உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன். நீங்க எனக்கு போன் பண்ணி அக்கறையா விசாரிக்கறது எல்லாம் புதுசில்லையா அதான் மழை வரும்ன்னு சொன்னேன்”
 
“நாங்க எல்லாம் நல்லாயிருக்கோம்… நீங்க எப்படி இருக்கீங்க??” என்று பதிலுக்கு விசாரித்தார் அவர்.
 
வெண்மதிக்கு திக்கென்றிருந்தது செல்வி விசாரிப்பதை பார்த்தால் சிபி அங்கே சென்றிருப்பது போல தோன்றவில்லை அவளுக்கு.
 
அவன் சென்றிருந்தால் தான் சிபி வந்ததை பற்றி அவர் சொல்லியிருப்பாரே!!
 
“வெண்மதி லைன்ல தான் இருக்கியா… ஹலோ…ஹலோ… என்னது லைன் கட்டாகிருச்சா… ரஞ்சனா இந்த போனை பாரும்மா சத்தமே வரமாட்டேங்குது…” என்ற செல்வியின் குரல் எதிர்புறத்தில் தேய்ந்து மறைய அதைப்பற்றிய அக்கறை எதுவும் இல்லாதவளாய் போனை வைத்துவிட்டாள்.
 
ஒரு மணி நேரமாக சிபியின் எண்ணுக்கு அடித்துக் கொண்டிருக்கிறாள். லைன் சென்றுக் கொண்டிருந்ததே தவிர அழைப்பு ஏற்கப்படவில்லை.
 
செல்வியிடம் பேசி வைத்த பின்னே மீண்டும் சிபிக்கு அழைக்க இப்போது அது சுவிட்ச் ஆப் என்று வந்தது. அப்படியே மடங்கி அமர்ந்துவிட்டாள். வானதி வந்து “அம்மா… ம்மா…” என்று அழைப்பது எங்கோ கேட்டது அவளுக்கு.
 
உள்ளுக்குள் பயம் சிறிதாய் ஆரம்பித்திருந்தது இப்போது பெரிதாய் வளர்ந்து எந்நேரமும் கரையுடைக்கும் என்பதாய் இருந்தது. அவள் நெஞ்சில் பாரம் ஏறிக்கொண்டிருக்க பயம் தொண்டை குழி வரை வந்து அடைத்து நின்றது.
 
நொடிகள் நிமிடங்களாய் கரைந்து போக அவள் கைபேசியின் அழைப்பு மணியோ வானதி அவளை அழைப்பதோ மட்டுமல்லாமல் வெளியில் புல்லட் வந்து நிற்கும் சத்தம் கூட அவள் செவிப்பறையில் விழுந்திருக்கவில்லை அவளெதிரில் சிபி வந்து நிற்கும் வரை…

Advertisement