Advertisement

1
 
திருமண மண்டபம்
 
இன்று அவனுக்கு திருமணம், அதற்கான மகிழ்ச்சியோ மலர்ச்சியோ எதுவும் அவனிடத்தில் இல்லை இறுக்கம் ஒன்றைத் தவிர.
 
பிடிக்காத திருமணமோ அவனைக் கேட்காமல் செய்ததுவோ என்ற எண்ணம் நமக்கு எழலாம். திருமண பேச்சு ஆரம்பத்தில் அவனுக்கு பிடித்தம் இல்லையென்றாலும் மறுப்பு என்று எதுவுமில்லை அவனுக்கு.
 
வீட்டில் பார்த்து வைத்த பெண் தான் அவள், நல்ல அழகான படித்த பெண்ணும் கூட, பார்த்ததும் அவனும் சரியென்று தான் சொன்னான்.
 
அதன்பின் வீட்டில் வேலைகள் மளமளவென்று தொடங்கி இதோ இன்னும் சில நிமிடங்களில் அவள் கழுத்தில் இவன் மங்கலநாண் பூட்டவேண்டும் என்றிருந்த நொடிகள் அது.
 
சென்ற வாரம் தான் இந்த திருமணம் வேண்டாம் என்று நினைப்போம் என்று இவன் கனவில் கூட நினைக்கவில்லை. இந்த நொடி திருமணம் நிற்க வேண்டும் என்பது இவன் வேண்டுதல்.
 
எல்லாம் அவளால் தான்!! அவள் மேல் அவ்வளவு கோபம் வந்தது அவனுக்கு. முகூர்த்தத்திற்கு இன்னும் சில நிமிடங்கள் இருந்தது. அவர்களுக்கு பெரிதாய் எந்த சடங்கும் இல்லை என்பதால் அவனறையில் தான் அவன் அமர்ந்திருந்தான்.
 
அவனருகில் நின்றிருந்தவனிடம் சொல்லி வெளியில் இருந்த ஒருவனை அழைத்து வரச்சொன்னான். அவனும் வெளியே சென்றுவிட்டு உள்ளே வந்தவன் “நீங்க எதுக்கு கூப்பிடுறீங்கன்னு அவரு கேட்குறாருண்ணே!!”
 
“ஏன் என்னன்னு சொன்னா தான் அவன் வருவானாமா?? அவன் இப்போ வரலைன்னா நான் வெளிய வந்து அவனை அடிச்சு இழுத்திட்டு வருவேன்னு அவன்ட்ட சொல்லு…” என்று சொல்ல அருகிருந்தவனோ கலவரமாய் அவனை பார்த்தான்.
“அண்ணே!!”
 
“என்னடா?? நான் சொன்னதை செய், போ இங்க இருந்து”
 
“எனக்கு என்னமோ நீ நடந்துக்கறதை பார்த்தா பயமாயிருக்குண்ணே…”
 
“என்ன பயம்??”
 
“தெரியலை, ஆனா நீ நீயா இல்லைண்ணே…”
 
அவன் முயன்று தன்னை கட்டுக்குள் கொண்டுவந்து சற்றே நிதானமாய் மற்றவனை ஏறிட்டான். இப்போது அதே நிதானத்துடன் “ப்ளீஸ் நான் சொன்னதை செய் குமாரு… எனக்கு அவனோட கொஞ்சம் பேசணும்…” என்றான்.
 
“ஹ்ம்ம் சரிண்ணே…” என்றவன் வெளியில் சென்றான்.
 
இவன் சிபிவர்மன் கதவை நன்றாய் திறந்து வைத்துக்கொண்டு இவன் யாரை அழைக்கச் சொன்னானோ அவனை பார்த்து நன்றாக முறைத்தான்.
 
நீ இப்போது உள்ளே வரவில்லை என்றால் நானே வந்துவிடுவேன் என்பதாய் கண்களில் மிரட்ட அவனும் குமாரிடம் மறுத்துப்பேசாமல் இப்போது எழுந்திருந்தான் உள்ளே வரவென. குமாரும் அவனும் உள்ளே வர சிபி அவனிடம் “குமாரு நீ கொஞ்சம் வெளிய இரு. நான் சார்கிட்ட பேசிட்டு வர்றேன்…”
“அண்ணே முகூர்த்தத்துக்கு வேற நேரமாகுது. அடுத்து உன்னைய கூப்பிட்டிருவாங்க…”
 
“அவ்வளோ நேரமெல்லாம் ஆகாது, நான் அஞ்சு நிமிசத்துல பேசிடுவேன்…” என்று அவன் சொன்னாலும் குமார் என்பவன் சமாதானம் ஆகாமலே தான் சென்றான்.
 
அவன் சென்றதும் கதவை அடைத்தவன் “அப்புறம் என்ன செய்யறதா உத்தேசம்??” என்றான் மற்றவனை பார்த்து.
 
“என்… என்னையவா கேட்கறீங்க??” என்று தடுமாறினான் அவன்.
 
“இங்க நீ தானே இருக்கே??”
 
“நா… நான் என்ன செய்யணும்??”
 
“உனக்கு ஒண்ணுமே தெரியாது… அதை தான் நான் நம்பணும்…”
 
“நீங்க என்ன சொல்றீங்கன்னே எனக்கு புரியலை… ஏ… ஏதோ நீங்க கூப்பிட்டீங்கன்னு சொன்னாங்க அதான் வந்தேன்… வந்தா நீங்க என்னென்னமோ பேசிட்டு இருக்கீங்க… நான் போறேன்…” என்று நகரப் போனவனை நிறுத்தி சிபி ஏதோ சொல்ல மற்றவனின் முகம் கருத்தது.
 
பின் அவன் நிதானமாய் “தலைக்கு மேலே வெள்ளம் போய்டுச்சு… இனி சாண் போனா என்ன முழம் போனா என்ன…”
 
“என்ன தத்துவம் பேசறியா?? அவளுக்கு இருக்க அதே திமிர் உனக்கும் இருக்கு… இவன் என்னமோ பண்ணிக்கட்டும்ன்னு தானே நினைக்கறீங்க…” என்றான் சிபி உறுமலாய்.
 
மற்றவனோ “என்னைவிட்டுடுங்க என்னால இந்த விஷயத்துல ஒரு துரும்பை கூட கிள்ள முடியாது…”
 
“அப்புறம் என்ன ம… இதெல்லாம் நீங்க செஞ்சீங்க… என்னைய ஏன்டா உயிரை வாங்கறீங்க ரெண்டு பேரும்… உங்கப்பாம்மாகிட்ட சொல்ல வேண்டியதை என்கிட்ட எதுக்குடா சொன்னீங்க…”
 
“நான் சொல்லலை…” என்றான் மற்றவன் வீம்பாய்.
 
“உன் கூட இருப்பாளே அவ தான் சொன்னா… எதுக்கு வந்து சொன்னான்னு நீயே கேட்க வேண்டியது தானே…” என்ற சிபியின் கேள்விக்கு மற்றவன் அமைதி காத்தான்.
 
அதற்குள் வெளியில் கதவு தட்டப்படும் சத்தமும் “நேரமாகிடுச்சு வா வர்மா…” என்ற அவன் அன்னையின் குரலும் கேட்க “ப்ச்…” என்ற சலிப்புடன் சென்று கதவை திறந்தான்.
 
சிபியின் அன்னை செல்வியோ அவர் மகனையும் உள்ளே இருந்த மற்றவனையும் மாறி மாறிப் பார்த்தார்.
அன்னையின் பார்வையின் பொருள் உணர்ந்தவன் அவருக்கு பதில் சொல்லும் பொருட்டு “இவரு…” என்று ஆரம்பிக்க அவரோ “தெரியும் பொண்ணு வீட்டு சொந்தம் தானே…”
 
“ஹ்ம்ம் ஆமா…”
 
“என்னப்பா பொண்ணு எதுவும் மாப்பிள்ளைக்கிட்ட சேதி சொல்லிவிட்டுச்சா…” என்றார் அவர் ஆர்வமாய்.
 
“இல்லை அது…” என்று தயங்கினான் அவன்.
 
“நீ சொல்ல மாட்டா, சரி விடு… எனக்கு புரியாதா என்ன…” என்றவர் “ஆமா உன் பேரு என்ன??”
 
“சுந்தர்…” என்றுவிட்டு அவன் வேகமாய் வெளியேறி சென்றுவிட்டான், இன்னும் அங்கே நின்றால் என்னென்ன கேள்விகள் வருமோ என்ற பயத்தில்.
 
“சரி வா வர்மா…”
 
“நீங்க போங்கம்மா…”
 
“டேய் மணியாச்சுடா வா…” என்றவர் “உங்க அண்ணனை தான் இதெல்லாம் பார்க்கச் சொன்னேன். அவன் எங்க பொண்டாட்டியே கதின்னு கிடக்கான், அவனும் தான் என்ன செய்வான்…” என்று சொல்லிக்கொண்டார் அவர்.
 
வேறுவழியில்லாமல் சிபி கடுப்புடனே சென்று மணமேடையில் அமர்ந்தான். எங்கிருந்தோ அவன் அண்ணன் ஜெயவர்மன் அவனருகில் வந்திருந்தான் இப்போது.
 
“சாரிடா வர்மா, உங்கண்ணிக்கு லேசா மயக்கம் வர்ற  மாதிரி இருக்குன்னு சொன்னாடா… அதான் பக்கத்துலவே இருந்தேன்…” என்றான் அவன்.
 
‘இல்லனா மட்டும்…’ என்று மனதிற்குள்ளாகவே நினைத்துக் கொண்டான் உடன்பிறந்தவன்.
 
ஜெயவர்மனின் மனைவி ரஞ்சனாவிற்கு இது ஐந்தாம் மாதம். திருமணமாகி இரண்டு வருடங்களுக்கு பின் கருத்தரித்திருக்கிறாள்.
 
அதனாலேயே ஜெயவர்மன் அவளைச் சுற்றிக் கொண்டிருந்தான். செல்வியும் அதனால் தான் மூத்த மகனை அதிகம் திட்டவில்லை.
 
சிபி வந்து அமர்ந்ததும் திருமணத்திற்கு முன்னான சடங்குகள் தொடங்கின. பட்டுவேட்டி சட்டை அவனிடம் கொடுக்கப்பட அதை வாங்கிக்கொண்டு அவன் நகரவும் மணப்பெண் சந்தியா வரவும் சரியாய் இருந்தது. பின் அவளுக்கான உடைகள் கொடுக்கப்பட அவளும் நகர்ந்திருந்தாள்.
 
இருவரும் உடை மாற்றி ஒருவர் பின் ஒருவராக மணமேடை வந்தமர்ந்தனர். சிபி அருகிருந்தவளை திரும்பிப் பார்த்தான். அவளோ எதுவுமே நடக்காதது போன்ற பாவனையில் சொல்வதை செய்த வண்ணம் இருந்தாள்.
பிறர் அறியாவண்ணம் மெதுவாய் அவளருகே நெருங்கியவன் “உன்னால இந்த கல்யாணத்தை நிறுத்த முடியுமா?? முடியாதா??” என்று அடிக்குரலில் அவளுக்கு மட்டுமே கேட்குமாறு உறுமினான்.
 
அவள் அதையும் விட மெலிதான குரலில் “என்னால முடியாது…” என்றாள்.
 
“என்னைப் பார்த்தா உனக்கு எப்படி தெரியுது…” என்றவனின் கேள்விக்கு பதிலாய் அவனை பாவமாய் பார்த்து வைத்தாள்.
 
“எதுக்கு இப்போ இந்த பார்வை?? நான் என்னமோ தப்பு செஞ்சிட்ட மாதிரி என்னை உணர வைக்குறே??”
 
“நான் மட்டும் என்ன தப்பு செஞ்சேன், எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது??”
 
அவனுக்கோ ஜெயம் ரவி பாணியில் ‘எல்லா தப்பும் நீ தான் பண்ணே??’ என்று கத்த வேண்டும் போல் தோன்றியது.
 
அடுத்தடுத்து நடந்த சின்ன சின்ன சடங்குகளில் மனம் லயிக்கவில்லை. திருமணத்தை நிறுத்திவிடு என்றே மனம் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தது. அனைவருக்கும் அட்சதை கூட கொடுக்கப்பட்டுவிட்டது.
 
இதோ சில நொடிகளில் தாலி அவன் கைகளுக்கு வந்துவிடும். கடைசியாய் ஒரு முறை அருகில் இருந்தவளை பார்த்தான், ஏதாவது செய்யேன் என்று.
அவளோ இன்னமும் பாவமாய் அழுதுவிடும் முகத்தை வைத்துக்கொண்டு அவனை பார்த்தாள். ‘எல்லாம் நடிப்பு கடைசியில நான் தான் முட்டாள்…’ என்று கடுகடுத்துக் கொண்டான்.
 
அடுத்தவன் காதலியை சூழ்நிலையின் பொருட்டு மணக்கலாம், ஆனால் அடுத்தவனின் மனைவியை எப்படி மணக்க முடியும், அதுவும் அவளின் கணவன் அவனெதிரிலேயே இருக்கும் போது.
 
கடவுளே என்னை ஏன் இப்படி ஒரு சூழலில் சிக்கவைத்தாய் என்று மனமார கடவுளையும் நிந்தனை செய்தான் இப்போது.
 
நான் செய்வேன் என்று தானே இப்படி கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறாள் இவள் என்று எண்ணிக்கொண்டு அருகிருந்தவளை எரித்துவிடும் பார்வை பார்த்தான்.
 
இனி இவளை நம்பி எதுவும் நடக்கப் போவதில்லை. இவள் ஒரு துரும்பைக் கூட கிள்ளப் போவதில்லை என்று உறுதியாய் அவனுக்கு புரிந்துவிட்டது.
 
முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்தவள் அதை தனக்கு மட்டும் சொல்வானேன். எல்லாம் விஷம் என்று திட்டவும் தவறவில்லை அவன்.
 
இப்போது அவன் கைகளில் மங்கலநாண் வந்துவிட்டது. அருகில் அமர்ந்திருந்தவளின் முகம் பயத்தில் வெளுத்திருந்தது. ‘சாவுடி’ என்று திருப்தியாய் எண்ணிக்கொண்டு அவளருகே அதைக் கொண்டு சென்றவன் அப்படியே எழுந்துவிட்டான்.
 
அங்கு சட்டென ஒரு சலசலப்பு என்ன நடக்கிறது என்பதாய். சிபியின் அன்னை செல்வி தான் “எடேய் என்னடா செஞ்சுகிட்டு இருக்க, இப்போ எதுக்கு எழுந்த” என்று அதட்டல் போட்டார்.
 
அதையெல்லாம் அவன் கண்டுக்கொள்ளவே இல்லை. அவன் தந்தை பசுங்கிளி அங்கு நிற்பதை பார்த்தவன் அவரையும் கடந்து பாதி தூரம் சென்றான்.
 
‘என் கல்யாணம் நிற்பதா, அதுவும் நானே நிறுத்துவதா… எவ்வளவு கற்பனை ஆசைகள் என்று மனதில் வைத்திருந்தேன். இப்படி திருமணம் நின்று போகவா’ என்ற ஆற்றாமை மனதில் எழுந்தது.
 
‘எல்லாம் அவளால் தானே…’ என்ற ஆங்காரமும் எழுந்தது. ‘என் திருமணமும் நிற்கக்கூடாது அவளையும் சும்மா விடக்கூடாது’ என்று தான் தோன்றியது அக்கணம்.
 
ஒரு நொடி நின்று அந்த வரிசையில் அமர்ந்திருந்தவளை பார்த்தான். மண்டபத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிய அனைவரும் கிட்டத்தட்ட எழுந்து தான் நின்றிருந்தனர்.
 
ஓரிருவர் மட்டுமே அமர்ந்திருந்தனர், அதில் அவளும் ஒருத்தி. அவன் நின்றிருந்த இடத்தில் இருந்து இரண்டு வரிசை தள்ளி ஓரமாய் அமர்ந்திருந்தாள் அவள்.
அவளருகே வந்தவன் சற்றும் யோசிக்கவில்லை அவள் கழுத்தில் மூன்று முடிச்சிட்டுவிட்டான். கூட்டம் மொத்தமும் அதிர்ச்சியாய் அவனைத் தான் பார்த்திருந்தது.
 
அத்தனை பேருக்கும் இன்று தான் தான் அவல் என்று அவனுக்கே நன்றாய் தெரியும். எதுவும் அவன் கருத்தில் இல்லை, குனிந்து அவள் மடியில் சுகமாய் உறங்கிக் கொண்டிருந்த அவளின் மகளை அள்ளிக்கொண்டான் இப்போது.
 
குழந்தை உறங்கியிருக்கவே அவள் அவ்வளவு நேரமும் அமர்ந்திருந்தாள். இப்போது விசுக்கென எழுந்து நின்றாள்.
 
இப்போது தான் அவன் மனதில் இருந்த கசப்பு நீங்கியது. உள்ளுக்குள் நெருப்பாய் தகித்திருந்த வெப்பம் வேம்பின் குளிர்ச்சியாய் மாறியிருந்தது அவன் உள்ளத்தில்.
 
முகம் நிதானத்தை சுமந்தது இப்போது. குழந்தையை தூக்கிக்கொண்டு அவன் நடக்க ஆரம்பித்தான் எதுவும் சொல்லாமல்.
 
பின் ஏதோ தோன்றியவனாய் “என்னடா இப்படி பண்ணிட்டானே இவன், சந்தியா பாவம் அவளை இப்போ எவன் கட்டிப்பான்… இப்படியெல்லாம் உங்களுக்கு தோணும்… அவளுக்குன்னு அவ மாமன் மகன் சுந்தர் இருக்கான்… அவனையே அவளுக்கு கட்டிவைங்க…”
 
“அதை சொல்ல நீ யாருடா??” என்று எகிறிக் கொண்டு வந்தார் சந்தியாவின் தந்தை.
 
“நான் சொல்லாம வேற எவன் சொல்லுவான்…” என்று பதிலுக்கு அவனும் எகிறத் தான் செய்தான்.
 
சட்டென்று ஒரு அமைதி சூழ்ந்தது அங்கு. செல்வி இப்போது அவனை நோக்கி வந்துக் கொண்டிருந்தார். “என்னடா இப்படி பண்ணிட்டே” என்றவாறே.
 
“என்ன பண்ணிட்டேன்…”
 
“இவ கழுத்துல ஏன்டா தாலி கட்டினே??”
 
“இனி அவ தான் உங்க மருமக… என் பொண்டாட்டிக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை ஒழுங்கா கொடுங்க…” என்று அவன் சொல்ல ஆவென்று தான் பார்த்திருந்தார் அவர்.
 
அப்பெண் வெண்மதி சற்று முன் அவன் தாலி கட்டியவள் இப்போது அவன் முன்னே நின்றாள். “ஏன் இப்படி பண்ணே??” என்றாள் விழிகளில் நிறைந்திருந்த கண்ணீரோடு.
 
அவன் பதிலொன்றும் சொல்லவில்லை அவளுக்கு. வெறுமே அவளை பார்த்தான், பின் திரும்பி நடக்கத் தொடங்கினான்.
 
“என் குழந்தையை கொடுடா, எங்கடா தூக்கிட்டு போறே??” என்று பின்னாடியே ஓடினாள். அவனிடமிருந்து குழந்தையை பிடுங்க முயற்சி செய்ய அனைத்தும் வீணாய் போனது.சிபி குழந்தையை இறுக்கமாய் பற்றியிருந்தான்.
 
“இனிமே இவ நம்ம குழந்தை, அப்படி தான் சொல்லணும் புரிஞ்சுதா…” என்றவன் “நம்ம வீட்டுக்கு தான் போறேன்… குழந்தை வேணும்ன்னா நீ அங்க வா…” என்றுவிட்டு சென்றே விட்டான்.

Advertisement