அவளுடைய முடிவில் வசுமதி உள்ளம் தான் கலங்கியது. “இந்த பெண் மீது காதல் கொண்ட நரேந்திரவர்மன் கட்டாயம் என்னவர் உயிரை பறித்து விடுவானே? விதியை எவரால் கட்டு படுத்த முடியும்?”, என்று எண்ணி கொண்டு வான்மதி பின்னே சென்ற வசுமதி அவளை சிறையில் இட்டு விட்டு அங்கே “யாரும் அவளை தொந்திரவு செய்ய கூடாது”, என்று கட்டளை பிறப்பித்து விட்டு வெளியே வந்தாள்.

அப்போது ஒரு வீரன் வந்து “மகாராணி, இளவரசர் இறந்து விட்டார். மன்னர் தங்களை அங்கே வரும் படி கூறினார்”, என்றான்.

அடுத்த நொடி அங்கே ஓடினாள் வசுமதி. அங்கே ரத்தமென சிவந்த கண்களுடன் இருந்தான் செங்கல்வராயன்.

அவன் முகம் சிறுத்தையின் சீற்றத்துடன் இருந்தது. அவனை  பார்த்து வசுமதிக்கே பயம் வந்தது. அவன் அருகில் சென்று “கலங்காதீர்கள் அரசே”, என்று உரைத்தாள்.

“எவ்வாறு கலங்காமல் இருக்க முடியும் வசுமதி? எனக்காக உயிரையே கொடுக்க கூடியவன் என் வல்லவரையன். இப்போது அவன் உடல் உயிர் அற்ற கூடாகிவிட்டதே. இதற்கு காரணமான அந்த வான்மதியை நான் கொல்லாமல் விட மாட்டேன். என் கையால் அவளை துடிக்க துடிக்க கொல்ல வேண்டும். அதன் பின்னர் தான் என் சகோதரனின் உடலுக்கு ஈம சடங்குகள் செய்வேன்”, என்று கூறி நகர்ந்தான்.

அதை பார்த்து திகைத்து நின்றாள் வசுமதி. “இப்படி நடக்கும் என்று அறிந்து தானே அந்த பெண்ணை சுரங்க பாதை வழியாக அனுப்ப முயன்றேன். கடவுளே அந்த பெண்ணை காப்பாற்று”, என்று மனதினுள் வேண்டினாள்.

அப்போது செங்கல்வராயனுக்கு ஓலை வந்தது விசாகதத்தனிடம் இருந்து. அதில் “செங்கல்வராயா நான் மேலை தேசத்தை நோக்கி படையை செலுத்தி விட்டேன். நீயும் படையை நகர்த்து”, என்று இருந்தது.

அடுத்த நொடி வான்மதியை மறந்தவன், வல்லவரையன் உடல் அருகில் சென்று “வல்லவரையா நம் எதிரிகளை கொன்று, உன்னை இந்த கதிக்கு ஆளாக்கிய அந்த வான்மதியையும் கொன்று விட்டு உனக்கு சடங்குகள் செய்கிறேன்”, என்று கூறி விட்டு படையை கிளப்ப சென்று விட்டான்.

இங்கே இந்திரவர்மரோ நரேந்திரன் மீது கொந்தளிப்பான சினத்தை காண்பித்து கொண்டிருந்தார்.

“நரேந்திரா, விசாகதத்தன் படை நம் தேசத்தை சூழ போகிறது. ஒரு படை தலைவனாக என்ன செய்து கொண்டிருக்கிறாய்? இன்னும் காதல் காதல் என்று தான் பிதற்ற போகிறாயா? நிலைமையை புரிந்து கொள். மூவர் படையை நம்மால் வெற்றி கொள்ள இயலாது”, என்றார் இந்திரவர்மர்.

அவனும் என்ன செய்வது என்று புரியாமல் தான் விழித்து கொண்டிருந்தான். அவன் மட்டும் விசாகதத்தனையும், செங்கல்வராயனையும் முகலாய மன்னரையும் வீழ்த்த வேண்டும் என்றாள் அவர்களுடன் வாள் சண்டை போட்டிருப்பான். ஆனால் நடக்க இருப்பதோ யுத்தம். அதில் எதிரிகளுக்கு சமமான வீரர்கள் வேண்டுமே. வாசுதேவச்சக்கரவர்த்தியிடம் இருந்து உதவியும் வர வில்லை. பதிலும் வர வில்லை. அதை வேறு குத்தி காட்டி பேசினார் இந்திரவர்மர்.

நண்பனின் நிலை அறிந்து சுதமன் தான் அவனை தேற்றினான்.   ஆசை கொண்டு மணந்த மனைவியையும் பிரிந்து, நாட்டிற்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்துக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் அவன் தவிக்கும் தவிப்பை சுதமன் தான் அறிவான்.

மன்னரின் சொற்களை கேட்க முடியாமல் இவனும் படையை கிளப்ப  சித்தமானான். அதற்கு அதிகாரம் கேட்டால் அமைதியாக இருந்தார் மகாராஜா.

கடைசியில் “நம்மால் மூன்று படைகளை வெல்ல இயலாது”, என்று மன்னரும் கூறி விட்டார்.

பதில் பேசமுடியாமல் தவித்தான் நரேந்திரவர்மன்.

“இங்கே பார் நரேந்திரா. எனக்கு என் மக்கள் முக்கியம். நீ விசாகதத்தன் மகளை மணந்து கொள்ள வேண்டும்”

“என்னால் அது இயலாது தந்தையே”

“சரி பிறகு விதியை எவரால் வெல்ல இயலும்? போர் ஆரம்பிக்கும் கடைசி நிமிடம் வரை உனக்கு அவகாசம் தருகிறேன். என் நாட்டு மக்களுக்காக நீயும் உன் முடிவை மாற்றி கொள்ள தான் வேண்டும். அப்படி முடியாது என்று மறுத்தால் கடைசி நிமிடம் போரை நிறுத்த விசாகதத்தனிடம் வேண்டி கொள்வேன். அது மட்டும் அல்லாமல் என் இளையராணியின் மகனான சோமவர்மனுக்கு விசாகதத்தனின் மகளை மணமுடித்து இருவரையும் அரியாசனத்தில் அமர வைத்து விடுவேன். இதுவே என் முடிவு”, என்று குண்டை தூக்கி போட்டார்.

அனைவரும் அதிர்ச்சியானார்கள். வராகசித்தரும் இந்திரவர்மரை கடிந்து கொண்டார். பாண்டிமாதேவியோ சினத்தில் இந்திரவர்மரை திட்டி தீர்த்தாள். நரேந்திரவர்மனுக்கும் அதிர்ச்சி தான். பின் அவன் உதட்டில் சிறு முறுவல் வந்தது. இந்திரவர்மரை பார்த்தவன் “ஒரு நாட்டின் மகாராஜாவாக தாங்கள் சரியான முடிவை தான் எடுத்துருக்கிறீர்கள் தந்தையே. தங்களுடைய  முடிவுக்கு நான் கட்டு படுகிறேன்”, என்றான்.

“நரேந்திரா, நீ என்ன கூறுகிறாய் என்று புரிந்து கொண்டிருக்கிறாயா? அவசரம் வேண்டாம் மகனே”, என்றார் வராக சித்தர்.

“அவசரம் தற்போது நேர்ந்து விட்டது தந்தையே. மகாராஜா கூறியதை கேட்டீர்கள்  அல்லவா?”

“அதற்காக நீ அரியாசனத்தை இழக்க வேண்டுமா?”

“எனக்கு என் வான்மதி மட்டுமே  முக்கியம். என்னால்  அவளுக்கு துரோகம் செய்ய இயலாது. மனதளவில் கூட மற்றொரு பெண்ணை எண்ண மாட்டேன். அரியாசனம் என் சகோதரனுக்கே கிடைக்கட்டும். என்னால் என் படை கொண்டு போர் புரிய இயலாது என்று மன்னர் நினைத்து விட்டார். கடைசி நிமிடம் என்ன? இப்போதே என் படைத்தலைவன் பதவியையும் துறந்து விடுகிறேன். அவள் காதல் அல்லாமல் இந்த உலகத்தில் வாழ இயலாது. எனக்கு  அரச பதவியும், அரியாசனமும் முக்கியம் இல்லை. என் வான்மதி தான் முக்கியம். அவளுக்காக எதையுமே இழப்பேன்”, என்று கூறும் போதே அங்கு வந்து நின்றார் வாசுதேவச்சக்கரவர்த்தி.

தன் மகள் மீது அவனுக்கிருக்கும் காதலை கண்டு ஒரு தகப்பனாக அவர் உள்ளம் பூரித்தது. அவன் அருகில் வந்து அவனை தழுவி கொண்டார். அவரை அந்நேரம் கண்டதும் அனைவருக்கும் வியப்பு.

“என் மகள் மீது தாங்கள் உயிரை வைத்திருப்பதை நான் அறிவேன் இளவரசே. ஆனால் அதற்காக அரியாசனத்தையே இழக்க துணிந்த உமது காதல் என்னை வியப்புக்குள்ளாக்குகிறது”, என்றார் வாசுதேவச்சக்கரவர்த்தி.

“நாட்டை சுற்றி படை மேகம் சூழ்ந்திருக்கிறது வாசுதேவரே. இப்போது வந்து உமது மருமகனை பாராட்டுகிறீர்கள். நரேந்திரனை இவன் தாய் ஈன்ற போதில் இருந்து இப்போது வரை இவனே எனக்கடுத்து அரியாசனத்தை அலங்கரிக்கும் அரசன் என்று கனா கண்டு கொண்டிருக்கிறேன். இவனோ காதல் என்று பிதற்றுகிறான். உம்மிடம் உதவி கேட்டாலும் நாம் வெல்வது அரிது. தாமே பல மணங்கள் புரிந்தவர் தானே? நரேந்திரனுக்கு விளக்குங்கள். அவன் அரியணையை துறப்பதை என்னாலே ஏற்று கொள்ள இயல வில்லை. விசாகதத்தன் மகளை நரேந்திரவர்மன் மணந்து கொண்டால் போர் நின்று விடும். வான்மதியையும் மீட்டு விடலாம். பின் வான்மதிக்கும் நரேந்திரவர்மனுக்கும் முடிசூட்டி விடலாம்”, என்று கலங்கிய குரலுடன் உரைத்தார் இந்திரவர்மர்.

“கவலை கொள்ளாதீர்கள் மகாராஜா. இளவரசர் இந்த இக்கட்டான சூழ்நிலையில் கூட அவர் காதலை நிரூபித்து விட்டார். இதை அறிந்தால் என் மகள் பூரித்து போவாள். தங்களுடைய கவலையும் அவசியம் அற்றது. இளவரசரே நாளைய மகாராஜா. அவருக்கே இந்த அரியணை. இளவரசரின் வாள் எளிதாக எதிரிகளின் தலைகளை கொய்து விடும் மகாராஜா. அவர் திறமையை நேரில் கண்டிருக்கிறேன் நான். ஆனால் அவர் மட்டும் போர் புரிய போவதில்லையே. வீரர்களின் கூட்டு முயற்சியும் அவசியம். அப்படி பார்த்தால் எதிரிகளை விட தங்கள் படை சிறியது தான். என்னுடைய படை  உதவினாலும், தங்களால் வெற்றி கொள்ள இயலாது. ஆனால் நான் கூட்டி வந்திருப்பது என் படையை மட்டும் அல்ல. என்னுடைய ஐந்து நட்பு நாடுகளின் படைகளையும் சேர்த்து தான் அழைத்து வந்திருக்கிறேன். அதனால் இளவரசர் கட்டாயம் வெற்றி கொள்வார்”

“என்ன? ஐந்து நட்பு நாடுகளின் படையா?”, என்று அதிர்ச்சியானார் மன்னர். வாசுதேவர் தன்னுடைய மருமகனுக்காக இவ்வளவு பெரிய காரியம் செய்ததை எண்ணி வியந்தார். தன் படையை மட்டும் அல்லாமல் மேலும் ஐந்து நாட்டு படையை இணைப்பது அவ்வளவு எளிதான காரியமா? அவரிடம் இருந்து ஓலைக்கு பதில் வரவில்லை என்று அவமான படுத்தி பேசியதை எண்ணி வெட்கம் கொண்டவர் அவருடைய பெண்ணை மருமகளாக அடைந்ததில் பெருமை கொண்டார். அவர் மனதில் சூழ்ந்திருந்த அச்சம் மாயமாய் மறைந்தது.

நரேந்திரவர்மன் முகத்தில் நிம்மதி வந்திருந்தது. கவலையில் தோழனாக தோள் கொடுக்கும் ஒரு நண்பனாக, அவன் கண்களுக்கு தெரிந்தார் வாசுதேவர். அவன் மீது நம்பிக்கை வைத்து பேசிய அவரை பாராட்டுதலுடன் பார்த்தான். “தன் பெண்ணுக்கு தகப்பனாக மிக பெரிய காரியத்தை அவர் செய்து விட்டார்”, என்று எண்ணி கொண்டான்.

“தாங்கள் கூறியதை போலவே நாம் இந்த போரில் வெற்றி கொள்வோம் மாமா. நான் அரியணையை துறக்க வேண்டும் என்று என் தந்தை அரைமனதுடன், நெஞ்சில் வலியுடன் தான் கூறினார். இப்போது எனக்கு நம்பிக்கை வந்து விட்டது. நாம் அனைவரும் இணைந்து எதிரிகளை ஓட விடுவோம். செங்கல்வராயனின் தலையை கொய்து என் வான்மதியை மீட்பேன். பின் என் தந்தை, தாய் விருப்ப படி மேலை சாம்ராஜ்யத்தின் அரசனாக நானும்,  என்னுடைய பட்டத்து ராணியாக வான்மதியும் அரியணையில் அமர்வோம்.  என் பெரிய தந்தையும், தந்தையும் எனக்கு பட்டாபிஷேகம் செய்து வைப்பார்கள். இப்போதே யுத்தக்களம் செல்வோம். எங்களை வழி நடத்த மகாராஜா இந்திரவர்மர் அரசனாக தேரில் வீற்றிருக்க வேண்டும். இதுவே அவருடைய கடைசி யுத்தமாகவும் இருக்கும்”, என்றான் நரேந்திரவர்மன்.

அனைவருடைய முகத்திலும் புன்னகை மலர்ந்தது. பாண்டிமாதேவி இந்திரவர்மருக்கும், நரேந்திரவர்மனுக்கும், சுதமனுக்கும் திலகமிட்டு வழி அனுப்பி வைத்தாள். அவர்களுடன் வாசுதேவச்சக்கரவர்த்தியும் போர்க்களம் கிளம்பினார். அனைவரையும் வாழ்த்தி அனுப்பி வைத்தார் வராகசித்தர்.