முகம் முழுவதும் புன்னகையுடன் அவளை பார்த்த சுதமன், “நீ மெய்யாக தான் உரைக்கிறாயா?”, என்று கேட்டான்.
“ஆம், எனக்கு சம்மதம்”
“மிக்க மகிழ்ச்சி சாந்தா. நான் இப்போதே இளவரசரிடம் கூறி விடுகிறேன்”
“ம்ம், சரி”, என்று அவள் கூறியதும் அங்கிருந்து செல்ல பார்த்தான். “அந்த சலங்கை”, என்று கூறி அவனை தடுத்து நிறுத்தினாள் சாந்தா.
அவளை பார்த்து புன்னகைத்தவன் “நம் திருமணம் முடிந்த பிறகு சலங்கையை தருகிறேன்”, என்று கூறி விட்டு சென்று விட்டான். அவன் சென்ற பிறகு வந்த விசாலம் சாந்தாவை அணைத்து கொண்டாள்.
சுதமனை காண தான் நரேந்திரவர்மனும், வான்மதியும் காத்து கொண்டிருந்தார்கள். இருவருக்குள்ளும் எதிர்பார்ப்பு அலையென பொங்கியது. அவர்களை அதிகம் காக்க வைக்காமல் சுதமனும் அங்கே வந்தான்.
இளவரசியை வணங்கி விட்டு சாந்தா சம்மதம் கூறியதை கூறினான். “அப்படியா? மிக்க மகிழ்ச்சி சுதமன். நாங்களும் நல்ல நாளை பார்த்து வைத்து விட்டோம். நாளையே சுபதினம் என்று ஜோதிடர் குறித்து தந்திருக்கிறார்”, என்றான் நரேந்திரவர்மன்.
“நாளையா?”, என்று கேட்டான் சுதமன்.
“தங்களை விட்டால் இன்றே திருமணத்தை நடத்த கூறுவீர்கள். ஒரு இரவு தான் பொறுத்திருங்கள் தமையனே. நாளை உங்கள் காதல் உங்கள் கைகளில் இருக்கும். போய் ஓய்வெடுத்து கொண்டே கல்யாண கனவை காணுங்கள்”, என்று புன்னகையுடன் கூறினாள் வான்மதி.
வெட்கத்துடன் அவன் சென்றதும் “ஒரு இரவு நாமும் பொறுத்திருக்க வேண்டும் அல்லவா தேவி?”, என்று கேட்டான் நரேந்திரவர்மன்.
“என்ன நடந்தாலும் உங்கள் காரியத்தில் கண்ணாய் இருங்கள். போய் ஓவியம் வரைவதில் கவனத்தை செலுத்துங்கள். உங்களின் சிறுவயது சேட்டைகளை பற்றி மகாராணி என்னிடம் பிறகு கூறுவதாக சொன்னார். நான் அதை பற்றி அறிய போகிறேன்”, என்று கூறினாள் வான்மதி.
“அதன் பின் என் அருகில் வருவாய் தானே தேவி?”
“மாட்டேன். அதன் பின் சாந்தா திருமணத்துக்கான வேலைகளை ஏவ வேண்டும். ஆலயத்தில் அதற்கான ஏற்பாடுகளை செய்ய சொல்ல வேண்டும். பின் மணமக்களுக்காக பட்டாடையை நெய்ய சொல்ல வேண்டும். இன்னும் அநேக வேலைகள் இருக்கின்றன”, என்று அவள் கூறி கொண்டிருக்கும் போதே அங்கு வந்தார் மகாராஜா இந்திரவர்மர். கூடவே பாண்டிமாதேவியும் வந்தாள்.
மகன், மருமகள் முகத்தில் இருந்த மகிழ்ச்சியில் அவர்கள் முகமும் மலர்ந்தது. “என்ன நரேந்திரா உன் முகத்தில் இத்தனை உற்சாகம்?”, என்று கேட்டார் இந்திரவர்மர்.
“சுதமன் திருமணம் பற்றி தான் உரையாடி கொண்டிருந்தோம் தந்தையே. தங்களை காண தான் இப்போது வரலாம் என்று எண்ணினேன்”
“சாந்தா சம்மதம் கூறி விட்டாளா மகனே?”, என்று கேட்டாள் பாண்டிமாதேவி.
“ஆம் தாயே. அவள் சம்மதம் கூறி விட்டாள். புரோகிதரும் நாளையே சுபமுகூர்த்தம் என்று கூறினார். அதை பற்றி தங்களிடம் உரையாட எண்ணி இருந்தேன்”
“இதில் உரையாட என்ன இருக்கிறது நரேந்திரா? சுதமன் நம் வீட்டு பிள்ளை. உன் உயிரை காப்பாற்றி இப்போது சாந்தாவும் நம் வீட்டு பெண்ணாகிவிட்டாள். அவர்கள் திருமணத்தை சிறப்பாக நான் செய்ய சொல்கிறேன். நீ புது மாப்பிள்ளை. ஓய்வெடு. வா தேவி”, என்று கூறி பாண்டிமாதேவியை அழைத்து கொண்டு சென்று விட்டார் இந்திரவர்மர்.
“நானும் மகாராணியுடன் உரையாட செல்கிறேன்”, என்று கூறி விட்டு அவர்களுடனே சென்று விட்டாள் வான்மதி.
அவளை பார்த்து புன்னகைத்து கொண்டே அங்கே இருந்த தூரிகையை எடுத்தவன் மனதில் பதிந்த அவளுடைய பிம்பத்தையை ஓவியமாக வரைய ஆரம்பித்தான்.
அடுத்த நாள் சுதமன் திருமணம் சாதாரண குடிமகனின் திருமணம் போல் அல்லாமல் கோலாகலமாகவே கொண்டாட பட்டது. சாந்தாவுக்கு தமையனாக இருந்து நரேந்திரவர்மன் தான் அனைத்து சடங்குகளையும் செய்தான். அதில் வான்மதி மனம் அமைதி அடைந்தது.
மகாராஜா, மகாராணி கால்களில் விழுந்து வணங்கினார்கள் இருவரும். நரேந்திரவர்மன் நண்பனை அணைத்து கொண்டான். பின் அனைவருக்கும் விருந்து கொடுக்க பட்டது. பின் மணமக்களை அழைத்து கொண்டு சுதமனின் சிறிய மாளிகைக்கு அனைவரும் சென்றார்கள்.
“மனமகிழ்ச்சியுடன் உன் காதல் வாழ்வை தொடங்கு சுதமன். சாந்தாவின் வீட்டில் இருக்கும் பொருள்களை எல்லாம் இங்கே கொண்டு வர பணியாட்களிடம் கூறி விட்டேன். இப்போது வந்து விடுவார்கள். நாங்கள் செல்கிறோம். போகலாமா தேவி?”, என்று கேட்டான் நரேந்திரவர்மன்.
“செல்லலாம் இளவரசே. இருவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்”, என்று புன்னகைத்தாள் வான்மதி.
அவர்கள் சென்று சிறிது நேரத்திலே சாந்தாவின் பொருள்கள் அனைத்தையும் இங்கே கொண்டு வந்து விட்டார்கள். அனைத்தையும் ஒரு அறையில் வைத்து கொண்டிருந்தாள் சாந்தா.
அவள் அருகில் வந்த சுதமன், “அதை பிறகு பார்க்கலாம். இப்போது நீ இங்கே வா”, என்று அழைத்தான்.
“என்னவாயிற்று சுவாமி?”, என்று கேட்டாள் சாந்தா.
அவள் கையை பிடித்து மஞ்சத்தில் அமர வைத்தவன் “நல்ல வேளை சுவாமி என்று அழைத்தாய். இப்போதும் படை தலைவன் என்று அழைத்து விடுவாயோ என்று பயந்து போனேன்”, என்று சிரித்தான்.
அவனும் அவனை பார்த்து புன்னகைத்தாள். பின் தன் கைகளில் இருந்த சலங்கையை அவிழ்த்து விட்டு “உன் காலை காட்டு சாந்தா?”, என்றான்.
“இப்போது இது எதற்காக சுவாமி? என் காலில் தான் புது சலங்கை இருக்கிறதே? இளவரசி ஏக பட்ட நகைகளை எனக்காக தந்திருக்கிறார்கள். நான் எவ்வளவோ மறுத்து பார்த்தும் வலுக்கட்டாயமா கொடுத்து விட்டார்கள்”
“அன்புடன் கொடுத்ததை மறுக்க முடியாது என்று நானும் அறிவேன் சாந்தா. இந்த புது சலங்கையை சில நாள்களுக்கு பிறகு அணிந்து கொள்”
“ஹ்ம்ம் அவ்வாறே ஆகட்டும்”, என்று கூறி அதை கழட்டினாள். அவள் கழட்டியதும் ஏற்கனவே அவள் வீட்டில் இருந்த சலங்கையையும் எடுத்தவன் இரண்டையும் அவள் கால்களில் அணிவித்தான். பின் அவள் முகத்தை பார்த்தவன் “இப்படி நீ அருகில் இருக்கும் நாளுக்காக தவம் இருந்திருக்கிறேன் சாந்தா. இன்று தான் நிறைவேறி இருக்கிறது. இப்போது கூட இது கனவு என்று தோன்றுகிறது”, என்றான்.
“கனவல்ல சுவாமி. எனக்கும் எப்பேர்ப்பட்ட வாழ்க்கை கிடைத்திருக்கிறது என்று பெருமையாக இருக்கிறது. என் மீது தங்களுக்கு கோபம் எதுவும் இல்லை தானே?”
“முடிந்து போன விஷயங்களை மறந்து விட கூறினேன் தானே? உன் மீது எனக்கு எப்போதும் கோபம் வராது கண்ணே. ஏனென்றால் நீ எனக்கு முதல் குழந்தை”
அவன் பதிலில் நெகிழ்ந்தவள் புன்னகைத்து கொண்டே “அப்படியா? ஆனால் எனக்கு தங்கள் மீது ஒரு கோபம் இருக்கிறது?”, என்றாள்
“என்ன? என் மீது கோபமா? நான் ஒன்றும் தவறு செய்ய வில்லையே”
“உங்கள் மீது தவறு இல்லை தான். ஆனால் நீங்கள் தான் காரணம். எப்படி கூறவென்று தான் தெரியவில்லை”
“என்னிடம் என்ன தயக்கம் சாந்தா? என்னிடம் உரிமை உள்ளவள் நீ மட்டுமே”
“அல்ல படைத்தலைவரே. தங்கள் மீது உரிமை உள்ள மற்றொருவரும் இருக்கிறார்களே”
“மீண்டும் படைத்தலைவரே என்று அழைத்து விட்டாயா? நீ என்னை நாதா என்று அழைப்பதற்காக தான் என் மனது ஏங்கி தவிக்கிறது. சரி நீ யாரை பற்றி கூறுகிறாய் சாந்தா?”
“தங்களுடைய மாமன் மகள் அம்சவேணியை தான் கூறுகிறேன்”
“சாந்தா இப்போது அவளை பற்றி என்ன பேச்சு?”
“தங்களை அவளுக்கு தான் மணமுடிக்க காத்திருந்தார்களாம்”, என்று சிறு சிணுங்கலுடன் கூறினாள்.
“அவ்வாறு கூறி உன் மனதை காய படுத்திவிட்டார்களா? அவர்கள் என் உறவுக்காரர்கள் அவ்வளவே. மற்ற படி உன்னை மாதிரி நானும் தாய் தகப்பன் இல்லாதவன் தான் சாந்தா. என் பெற்றோரை நான் பறிகொடுத்த போது அவர்களும் என்னை துரத்தி விட்டார்கள். என்னை அன்புடன் ஏற்று கொண்டது இளவரசர் தான். அதன் பின் தான் உன் மீது காதல் அரும்பியது. அதன் பின் நீ மட்டுமே என் உலகம். வேறு எவருக்கும் அதில் இடம் இல்லை. ஆனால் ஒரு விஷயம் கவனித்தாயா சாந்தா?”
“என்ன சுவாமி?”
“அவளை பற்றி பேசியதால் உன் மனதில் சிறு பொறாமை பொங்குகிறதே? அது ஏன் என்று அறிவாயா?”
“இல்லை என்னும் விதமாய் தலை அசைத்தாள். இப்போது என் மீது உனக்கு உரிமை உணர்வு வந்திருக்கிறது சாந்தா. கூடிய விரைவில் அது கட்டாயம் காதலாக மாறும்”, என்று கூறி கொண்டே அவள் கரத்தை பிடித்தான்.
அவன் தொடுகையில் சிலிர்த்தவள் அவன் கண்களை காண முடியாமல் கண்களை மூடி கொண்டாள். மெதுவாக நகர்ந்து அவளருகே வந்தான் சுதமன். அவளை நெருங்கி அவள் கழுத்தில் உதடு பதிக்கும் போது அவனை தடுத்தாள் சாந்தா.
“என்னவாயிற்று சாந்தா? பிடிக்கவில்லையா? என் செயல் உன்னை காய படுத்தி விட்டதா?”, என்று கேட்டான்.
“அப்படி ஒன்றும் இல்லை. நல்ல நேரம் ஆரம்பிக்க இன்னும் சில மணி நேரங்கள் இருக்கின்றன. அப்போது தான் தங்களுடன் கூட வேண்டும் என்று இளவரசி கூறி விட்டு சென்றார்”
“ஹா ஹா, அவ்வளவு தானா? நான் கொஞ்சமே கொஞ்சம் பயந்து போனேன். அதுவரை எதை பற்றியாவது உரையாடலாம்”, என்று புன்னகைத்தான் சுதமன். அவளும் சரி என்று தலையை ஆட்டினாள்.