இருவரையும் பார்த்து சிரித்து விட்டு அங்கிருந்து சென்றான் சுதமன். அவன் போன பின்பு மகிழ்ச்சியுடன் வான்மதியை திரும்பி பார்த்த நரேந்திரவர்மன் திகைத்தான். அவள் அவனை தீ பார்வை பார்த்து கொண்டிருந்தாள்.
“தேவி, என் உயிரையே உருக்கும் உன் காதல் பார்வை எங்கே போனது? பார்வையாலே என்னை பொசுக்கி விடுவதை போல பார்க்கிறாயே? என்னவானது?”, என்று கேட்டான் நரேந்திரவர்மன்.
“யாது உரைத்தீர்கள்? தாங்கள் நண்பர் பெண் பிள்ளை போல வெட்கம் கொள்கிறாரா? ஆண் பிள்ளை போல தைரியம் கொள்ள வேண்டுமா? ஏன் பெண் பிள்ளைகள் தான் வெட்கம் கொள்வார்களா? அவர்களுக்கு தைரியம் இருக்காதா?”
“ஐயோ, வார்த்தை தவறுதலாக என்னை அறியாமலே வந்து விட்டது போலவே? ஆண்களுக்கும் வெட்கம் வரும் தேவி. ஒப்பு கொள்கிறேன். தயவு செய்து உன் சினத்தை என் மீது காட்டாதே. வெட்கமும், தைரியமும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானது போதுமா?”, என்று பணிவுடன் கூறினான் நரேந்திரவர்மன்.
“அப்படி வாருங்கள் வழிக்கு. சரி என் தைரியத்தையும், வெட்கத்தையும் தாங்கள் கண்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களின் தைரியத்தை மட்டும் தானே கண்டிருக்கிறேன். தாங்கள் எப்போது வெட்கத்தை எனக்கு காண்பிக்க போகிறீர்கள் இளவரசே?”, என்று புன்னகையுடன் கேட்டாள் வான்மதி.
அவளை நெருங்கியவன் “சாந்தா, சுதமன் திருமணம் நடந்து முடிந்த அன்றைய இரவு பொழுதில் உன்னிடம் காட்டுகிறேன் சரியா?”, என்று கிசுகிசுப்பாக கூறினான்.
அவன் கூறியதை கேட்டு சிலிர்த்தவள் “அப்போது தாங்கள் வெட்கம் கொள்வீர்களா? கூடலின் போது கூட ஆண்கள் பெண்களை தானே வெட்க பட வைப்பார்கள்? தாங்கள் எப்படி வெட்கம் கொள்வீர்கள்?”, என்று தலை குனிந்த படி கேட்டாள்.
இன்னும் அவளை நெருங்கியவன் அவளை பின்பக்கமாக இருந்து கட்டி கொண்டு அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து “ஆண்களும் பெண்கள் முன் வெட்க படும் தருணம் வரும் தேவி”, என்றான்.
அவன் நெஞ்சில் தலையை சாய்த்தவள் “அது தான் எப்போது என்று கேட்டேன்”, என கூறினாள்.
“எவன் ஒருவன் தன் மனைவியின் முன்னிலையில் ஒரு ஆடை கூட இல்லாமல் பிறந்த மேனியாக இருக்கிறானோ அப்போது வெட்கம் கொள்வான் தானே?”, என்று அவள் காதில் உதடு படுமாறு உரைத்தான்.
அதை கேட்டு அவன் அணைப்பில் இருந்து விலகியவள், முன் பக்கமாகவே அவனை அனைத்து கொண்டு அவன் நெஞ்சில் தன் முகத்தை மறைத்து கொண்டாள்.
அவளுடைய வெட்கத்தை ரசித்தவன் புன்னகைத்து கொண்டே “என்னவாயிற்று தேவி?”, என்று கேட்டான் நரேந்திரவர்மன்.
“இப்படி எல்லாம் என்னிடம் தாங்கள் கூறினால், தங்கள் முகத்தை நான் எப்படி காண்பது? எனக்கு வெட்கமாக இருக்கிறது”, என்று முகத்தை அவனுக்கு காட்டாமலே கூறினாள்.
“இப்படி நீ என்னிடம் வெட்க பட்டால் பின் நானும் உன்னிடம் வெட்க படும் தருணம் வந்து விடும் தேவி”, என்றான் நரேந்திரவர்மன்.
அவன் கூறியதின் பொருளை உணர்ந்தவள், தன்னுடைய உள்ளங்கையை அவன் உதடு மீது வைத்து பேச விடாமல் செய்தாள்.
உதடுகளின் மீது வெண்டை பிஞ்சு போன்று மென்மையாக இருந்த அவள் விரலுக்கு முத்தமிட்டு அவளை சிவக்க வைத்தான் நரேந்திரவர்மன்.
அவசர அவசரமாக சாந்தா வீட்டுக்கு சென்ற சுதமனுக்கு நெஞ்சு திக் திக் என்று அடித்தது. படபடவென்று இருந்தது.
“திரும்பி போய் விடலாமா?”, என்று கூட யோசித்து விட்டான். “போய் விட்டால் சாந்தாவை எப்படி அடைவது?”, என்று நினைத்து அவள் வீட்டின் முன் புரவியை நிறுத்தினான்.
புரவியின் குளம்படி சத்தத்தில் விசாலம் தன் கணவனுடன் வெளியே வந்தாள். இருவரும் “வாருங்கள் சேனாதிபதியாரே?”, என்று கூறி அவனை வணங்கினார்கள்.
“தாங்கள் சாந்தாவிடம் திருமணம் பற்றி கூற வருவீர்கள் என்று இளவரசி கூறி விட்டு தான் சென்றார்கள். சாந்தா உள்ளே தான் இருக்கிறாள். போய் அவளிடம் உங்கள் முடிவை கூறுங்கள்”, என்று கூறி சிரித்தாள் விசாலம்.
“அவ்வாறே ஆகட்டும் சகோதரி”, என்று கூறி விட்டு உள்ளே சென்றான் சுதமன். அடுப்படியில் எதையோ செய்து கொண்டிருந்தாள் சாந்தா. அவள் காதில் அந்த சலங்கை சத்தம் விழுந்தது. வருவது யார் என்று அவள் மூளை அவளுக்கு அறிவுறுத்தியது. பட படத்த மனதை அடக்கி கொண்டு மெதுவாக திரும்பினாள்.’
அவள் திரும்பும் வரை தைரியமாக இருந்தவன் அவனை நோக்கி அவள் திரும்பியதும் படபடப்பானான்.
அவள் அவன் முகத்தையே நோக்கி கொண்டிருந்தாள். “தான் இப்போது உரைக்க வேண்டிய கட்டாயம்”, என்று உணர்ந்து “நான்….. சாந்தா… அது இளவரசி…”, என்று உளறி கொட்டினான்.
“தாங்கள் கூற வருவது எனக்கு புரிகிறது படை தளபதி”, என்று தலை குனிந்த படி கூறினாள் சாந்தா.
அதில் நிம்மதியுற்றவன் “நான் படைத்தளபதியாக இங்கே வரவில்லை. உன் மனதை அறிய தான் வந்தேன். உன் பதில் என்ன சாந்தா?”, என்று கேட்டான்.
“நான்…நான் நல்ல பெண் இல்லை. வேறு பெண்ணை… தாங்கள்..மணந்து கொள்ள வேண்டும்”, என்று திக்கி திணறி பேசினாள்.
“எனக்கு இந்த உலகத்தில் உன்னை விட வேறு பெண் முக்கியம் இல்லை. இந்த சலங்கையை என் கையில் சுற்றி கொண்டு உன் நினைவில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இப்போதும் உனக்கு விருப்பம் இல்லை என்றாலும் கடைசி வரை உன் நினைவில் வாழ்வேன்”
அவனை நிமிர்ந்து நோக்கியவள் “உங்களுடைய புனிதமான காதலுக்கு நான் அருகதை ஆனவள் கிடையாது”, என்றாள்.
“ஏன் அவ்வாறு கூறுகிறாய்?”
“ஏனென்று தாங்கள் அறிவீர்களே? என் மனது அழுக்கான ஒன்று. உங்களை அல்ல. வேறு எவரையுமே எனக்கு திருமணம் புரிய தகுதி இல்லை. ஆனால் இளவரசியின் மகிழ்ச்சிக்காக தான் திருமணத்துக்கு சம்மதம் கூறினேன்”
“சாந்தா, அது முடிந்து போன விசயம். அதை பற்றி எண்ண வேண்டாம்”
“எப்படி எண்ணாமல் இருப்பது? நேற்று இளவரசரை விரும்புகிறேன் என்று கூறி விட்டு இன்று தங்களை மணந்தால் அவரை எப்படி என்னால் எதிர் கொள்ள முடியும்? அவமானமாக இருக்கும்”
“உன்னை யாரும் அவமானமாக எண்ணமாட்டார்கள். காதல் என்று என்னவென்றே அறியாதவள் நீ. அப்படி பட்ட நீ காதல் என்று நினைத்து இத்தனை நாள் போலி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறாயே? இளவரசி கூறியதை தான் நானும் கூறுகிறேன். உனக்கு இருந்தது காதலே அல்ல. உன் மனசு அழுக்காக எல்லாம் இல்லை. இப்போது சுத்தமாக தான் இருக்கிறது. நீ தான் தேவை இல்லாமல் குழம்பி தவிக்கிறாய்”
“எனக்கு குழப்பமாக தான் இருக்கிறது. உண்மையாகவே நான் இளவரசர் மீது கொண்டிருந்தது காதல் இல்லையா? இளவரசிக்கு, இளவரசர் மீது இருப்பது காதல் என்கிறீர்கள். ஆனால் என் மனதில் இருப்பதை மட்டும் ஏன் ஈர்ப்பு என்று கூறுகிறீர்கள்? காதல் என்றால் என்ன?”, என்று சிறுபிள்ளை தனமாக கேட்டாள் சாந்தா.
அவளை ரசித்தவன் “இளவரசன் மீது இளவரசி கொண்டிருப்பது காதல் தான் சாந்தா. அதில் சந்தேகமே இல்லை. நீ நேற்று தெளிவாக தானே இருந்தாய். இன்று ஏன் குழம்புகிறாய்? காதலுக்காக எதையும் இழக்கலாம். ஆனால் எதற்காகவும் காதலை இழக்க கூடாது. இளவரசியின் மகிழ்ச்சிக்காக நீ வேறு திருமணம் புரிந்து கொள்ள சம்மதம் கூறி விட்டாயே. அதுவே நீ உண்மையாக காதலித்திருந்தால் யாருக்காகவும் இப்படி முடிவெடுத்திருக்க மாட்டாய். இளவரசியை கண்டாய் தானே? நிச்சயமே இல்லாத அடுத்த பிறவியில் கூட இளவரசரை விட்டு கொடுக்க மாட்டேன் என்று கூறி விட்டார்கள். ஆனால் நீ உண்மையான காதல் கொண்டிருந்தால் யாருக்காகவும் விட்டு கொடுக்காமல் காலம் முழுவதும் காதலை நினைத்து கொண்டு வாழ்வேன் என்று கூற வில்லையே. அவர்கள் நன்மைக்காக என்றாலும் அதை மறந்து அடுத்த வாழ்வை எண்ணி விட்டாயே”
“ஆம் சரி தான். நீங்கள் கூறுவது அப்பட்டமான உண்மை. என் மனது பச்சோந்தி போல் மாறுகிறது. நான் தவறான பெண் தானே?”
“அப்படி அல்ல சாந்தா. நீ தவறான பெண் அல்ல. தவறாக சிந்திக்கிறாய் என்று தான் கூறுகிறேன். தாய், தகப்பன் இல்லாமல் வளர்வது எவ்வளவு மனவலியை கொடுக்கும் என்று நான் அறிவேன். அந்த துயரத்தில் தான் இளவரசர் உன் மீது பரிவு காட்டியதும் அவரை உனக்கு பிடித்து விட்டது. அந்த சமையத்தில் நான் உன் மீது அன்பாக இருந்திருந்தால் கூட உனக்கு என்னை பிடித்திருக்கும்”
“அப்படி என்றால் தாங்கள் ஏன் அப்போதே என் மீது உள்ள அன்பை என்னிடம் கூற வில்லை. அப்படி தாங்கள் என் மீது அன்பு செலுத்தி இருந்தால் இன்று இளவரசிக்கும், இளவரசருக்கு மனம் வருத்தம் வந்திருக்காதே. தாங்கள் சலங்கை தொலைந்த அன்றில் இருந்து என்னை விரும்புகிறீர்கள் என்றால் அப்போதே வந்து என்னிடம் பேசி இருக்கலாம் அல்லவா? இந்த வீட்டில் எத்தனை முறை எனக்கு யாருமே இல்லை என்று தனிமையில் அழுதிருக்கிறேன் தெரியுமா? மற்ற பெண்களை அவர்களின் பெற்றோர்கள், சகோதரர்கள் என்று அனைவரும் அன்பு செலுத்தும் போது, அதை கண்டு பல முறை தவித்து போனேன். தங்களாவது எனக்காக இருந்திருக்கலாம் அல்லவா?”, என்று கூறி அழுது விட்டாள்.
அவள் மனதை துல்லியமாக அறிந்தவன் “இவள் ஒரு வளர்ந்த மழலை”, என்று எண்ணி கொண்டே அவள் அருகில் சென்றான். அவளை இழுத்து தன்னுடன் அணைக்க எழுந்த ஆவலை அடக்கி கொண்டு அவள் கண்ணீரை மட்டும் விரலால் துடைத்து விட்டான்.
“என்னை மன்னித்து விடு சாந்தா. இப்போது நீ கேட்டது போல் நான் முன்பே உன்னிடம் என் காதலை கூறி இருந்தால் நீ அன்பை தேடி அலைகழிந்திருக்க மாட்டாய். படை தலைவனாக பல நாடுகளுக்கு போருக்கு சென்ற எனக்கு மனதில் உள்ள காதலை சொல்ல தைரியம் வர வில்லை. அப்படி சொன்னாலும் நீ மறுத்து விடுவாயோ என்ற பயம்? இளவரசர் மீது உள்ள ஈர்ப்பை நீ நாள் ஆக ஆக மாயை என்று புரிந்து கொள்வாய் என்று எண்ணி விட்டேன். என்னை மன்னித்து விடு சாந்தா”
“தாங்கள் என்னிடம் மன்னிப்பை எல்லாம் வேண்ட வேண்டாம். தாங்கள் என்னை தவறாக எண்ண வில்லை அல்லவா?”
“நிச்சயமாக சாந்தா? உன்னை எப்படி தவறாக எண்ணுவேன்?”
“இளவரசரும், இளவரசியும் என் மீது கோபம் கொள்வார்களா?”
“கட்டாயம் உன் மீது கோபம் கொள்ள மாட்டார்கள். உண்மை உணர்ந்து உனக்கு நல்வாழ்வை அமைத்து தர தான் அவர்கள் எண்ணுகிறார்கள். நீ என்னை திருமணம் புரிந்து கொண்டால் மகிழ்ச்சியாக வாழலாம். அதன் பின் அவர்கள் ஏன் உன்னை பற்றி எண்ண வேண்டும். நான் உன்னை கண்ணுக்குள் வைத்து பார்த்து கொள்வேன்”
“என் தாய், தந்தை போல பார்த்து கொள்வீர்களா?”
“அதை விட அதிகமாக பார்த்து கொள்வேன் சாந்தா”
“குழந்தைக்கு தாய் உணவு ஊட்டுவதை போல எனக்கு உணவு ஊட்டுவீர்களா?”
“கட்டாயம் செய்வேன் சாந்தா”
“இரவில் உங்கள் மடியில் என்னை படுக்க வைத்து தாலாட்டுவீர்களா?”
“அது மட்டும் அல்ல. உனக்கு விருப்பமான அனைத்தையும் செய்வேன். உனக்கு எல்லாமுமாக நான் இருப்பேன். நீ இழந்த அனைத்து மகிழ்ச்சியையும் நான் உனக்கு தருவேன் சாந்தா? உனக்கு என்னை பிடித்திருக்கிறதா? என்னை திருமணம் புரிந்து கொள்கிறாயா?”
“ஹ்ம்ம், நமக்கு திருமணம் நடப்பதில் எனக்கு சம்மதம் தான்”, என்று கூறி அவன் காதலை வாழ வைத்தாள் சாந்தா.