“எங்கள் இளவரசர் புத்திகூர்மை உடையவர் என்று நாங்கள் அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்த அளவுக்கு நான் எதிர் பார்க்க வில்லை நண்பா. எப்படி கண்டு பிடித்தாய், சாந்தா தான் அந்த பெண் என்று?”, என்று வியப்பாக கேட்டான் சுதமன்.
“இதை கண்டு பிடிக்க ஆராய்ச்சி தேவை இல்லை சுதமன். நேற்று அந்த பெண்ணை நீ பார்த்த பார்வையிலே கண்டு கொண்டேன்”
“நீ நடந்த கலவரத்தில் என்னை எங்கே கவனிக்க போகிறாய் என்று கவன குறைவாக இருந்து விட்டேன். என் முகத்தை வைத்தே கண்டு பிடித்த உன் புத்தி கூர்மை எனக்கு வியப்பளிக்கிறது”
“ப்ச். அதை விடு. என்னை மன்னித்து விடு சுதமன். நான் தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம். அந்த பெண் மனதில் என் மேல் இப்படி ஒரு அபிப்ராயம் வர நானே காரணம் ஆகி விட்டேனே. நேற்று அந்த பெண் மனதில் இருப்பது நான் என்று அறிந்து துடித்து போனேன். அந்த உண்மை அறிந்த என் தேவி எப்படி துடித்தாளோ, அதே போன்றதொரு வலியை தானே நீயும் அனுபவித்திருப்பாய்? என்னால் தானே உன் காதலுக்கும் பிரச்சனை. என்னை மன்னித்து விடு சுதமன்”
“உனக்கு புத்தி மழுங்கி விட்டதா நரேந்திரா? நீ என்னிடம் மன்னிப்பு கேட்கலாமா? இப்படி எல்லாம் இனி செய்யாதே. என் நண்பன் எப்போதும் கம்பீரமாக ஒரு ராஜாவுக்குரிய நன்மதிப்புடன் இருக்க வேண்டும். இதில் நீ மன்னிப்பு கேட்க எந்த அவசியமும் இல்லை. உனக்கு ஒன்று தெரியுமா சாந்தா மனதில் இருப்பதை நான் முன்பே அறிவேன். அவள் மனதில் இருப்பது நீ என்று முன்பே எனக்கு தெரியும்”
“சுதமன் நீ என்ன கூறுகிறாய்?”
“ஆம் நரேந்திரா. உனக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது நினைவில் இருக்காது. ஒரு மாந்தோப்புக்கு நாம் சென்ற போது தான் சாந்தாவை நாம் கண்டோம். அவள் காயத்துக்கு மருந்திட்ட உன் மேல் அவளுக்கு ஒரு ஈர்ப்பு. அதே போல் அவளை கண்டதும் என் மனம் சலன பட்டு விட்டது. அவள் மனதில் நீ இருப்பாய் என்று நான் அறிய வில்லை. ஒரு இளவரசன் மீது சாதாரண பெண் மையல் கொள்வாள் என்று நான் எப்படி நினைப்பேன். ஆனால் அதன் பின் அவளை நான் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கும் தருவாயில் அனைத்தும் அவள் என் அருகில் இருக்கும் உன்னையே தான் பார்ப்பாள்”
….
“அப்போது தான் அவள் மனதை நான் யூகித்து கொண்டேன். ஆனால் அது காதல் அல்ல என்று நானும் அறிவேன். இளவரசி கூறியது போல் தாய், தந்தை இல்லாத அனாதையான அவளுக்கு நீ மருந்திட்டு பரிவுடன் பேசியது மட்டும் தான் ஈர்ப்பை கொடுத்திருக்க வேண்டும். அதை அவள் காதல் என்று பிதற்றி கொண்டு திரிந்தாள். ஆனால் அவளிடம் சென்று நேற்று இளவரசி கூறியது போல் உன் மனதில் இருப்பது காதல் அல்ல. நான் உன் மீது வைத்திருப்பது தான் காதல் என்று எனக்கு கூற தைரியம் வர வில்லை. அதனால் அவள் உன்னை நினைக்க, நான் அவளை நினைத்து வாழ்ந்து கொண்டிருந்தேன். இப்போது அவள் தெளிவாகி விட்டாள். அவள் மனதில் இப்போது யார் மீதும் காதல் அல்ல. அவளுக்கு ஒரு துணை மட்டுமே தேவை. ஆதரவற்றவர்கள் துணை தேடுவது இயல்பு. அதனால் அவளுக்கு காலமெல்லாம் துணையாக இருப்பேன். என் மனைவியான பின்னர் அவளுக்கு கட்டாயம் என் மீது காதல் அரும்பும்”
“ஏய், அப்படி என்றால் அவளை திருமணம் செய்ய உனக்கு சம்மதமா?”, என்று மகிழ்ச்சியுடன் கேட்டான் நரேந்திரவர்மன்.
“இப்போது தானே கூறினேன். எனக்கு பரிபூரண சம்மதம். ஆனந்தமும் கூட. ஆனால்….”
“என்ன சுதமன் ஆனால் என்று இழுக்கிறாய்?”
“அவள் என்னை மணக்க நினைப்பாளா?”
“சிந்திக்க வேண்டிய விசயம் தான். அவள் திருமணத்துக்கு சம்மதம் கூற வேண்டும் தான் நானும் பிராத்திக்கிறேன். நேற்று உடனடியாக சம்மதம் கூறினாள். ஆனால் அவள் சிந்திக்க கொஞ்சம் நேரம் தர வேண்டும் என்று நினைத்து தான் இன்று கேட்டு வர வான்மதியை அனுப்பினேன். அவள் வந்து நல்ல செய்தி கூறிய பின்னர் தான் நிம்மதியாக இருக்கும்”, என்று நரேந்திரவர்மன் கூறும் போதே அங்கு முகம் முழுவதும் பூரிப்புடன் வந்தாள்.
இவர்கள் அருகே வந்தவள் “என்ன இளவரசரும் சேனாதிபதியாரும் தீவிரமாக உரையாடி கொண்டிருக்கிறீர்கள்?”, என்று கேட்டாள்.
“அதை பிறகு கூறுகிறோம். நீ போன காரியத்தை பற்றி கூறு தேவி. என்னவாயிற்று? சாந்தா என்ன கூறினாள்?”, என்று எதிர்பார்ப்புடன் கேட்டான் நரேந்திரவர்மன்.
சுதமனுக்கும் இதய துடிப்பு எகிற தான் செய்தது. அவர்களை பார்த்து புன்னகைத்த வான்மதி “அவளிடம் தெளிவாக கேட்டு விட்டேன் இளவரசே. அவளும் பரிபூரண சம்மதம் கூறி விட்டாள். மற்றொரு விசயம் தெரியுமா? நான் பார்த்த மாப்பிள்ளைக்கு அவள் சம்மதமும் கூறி விட்டாள்”, என்றாள்.
இருவரும் அதிர்ச்சியாக ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டார்கள்.
“என்ன தேவி உளறுகிறாய்? உன்னை யார் மாப்பிள்ளை பார்க்க சொன்னது? அவசர பட்டு தவறு செய்து விட்டாயே? நான் உன்னிடம் நேற்றே கூறினேன் தானே? நானே மாப்பிள்ளை பார்ப்பேன் என்று. ஏன் இவ்வாறு செய்தாய்?”, என்று கோபமாக கேட்டான் நரேந்திரவர்மன்.
சுதமனோ கிடைத்த வாய்ப்பும் பறிபோனதா என்று துடித்து போய் நின்றான். “அவள் வேறு மாப்பிள்ளைக்கு சம்மதம் கூறி விட்டாள். இனி எப்படி நான் என் காதலை அவளிடம் உரைக்க முடியும்? கடவுளே என்ன இது?”, என்று மனதுக்குள் குமுறினான்.
“சினம் கொள்ள வேண்டாம் இளவரசே? நான் அவள் நல்லதுக்கு தானே செய்தேன்? நான் பார்த்த மாப்பிள்ளை எவ்வளவு உயர்ந்தவர் தெரியுமா? அவளை கண்ணுக்குள் வைத்து பார்த்து கொள்வார். அது தானே நமக்கு வேண்டும்”, என்று சிரிப்புடன் கூறினாள் வான்மதி.
“நீ கூறுவது சரி தான் வான்மதி. ஆனால் என்னிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம் அல்லவா?”, என்றான் நரேந்திரவர்மன்.
“நல்ல கதையாக இருக்கிறதே? தாங்கள் தானே அவளிடம் திருமணத்துக்கு சம்மதம் வேண்டி வர என்னை அனுப்பினீர்கள்?”
“அனுப்பினேன் தான்? திருமணத்துக்கு சம்மதம் கேட்க தானே அனுப்பினேன்? உன்னை யார் மாப்பிள்ளை பார்க்க சொன்னது?”
“ஓ நான் அப்படி மாப்பிள்ளை பார்த்தது தங்களுக்கு பிடிக்க வில்லையா? சாந்தாவின் சலங்கையை கையில் சுற்றி கொண்டிருக்கிறாரே இந்த தமையன். இவருக்கு அவள் மீது தீரா காதல் என்று எண்ணி இவரை தான் மாப்பிள்ளை என்று அவளிடம் கூறினேன். அவளும் எனக்கு விருப்பம் தான் என்று கூறி விட்டாள். ஆனால் இப்போது தானே தெரிகிறது. தங்களுக்கும், தமையனுக்கும் அதில் விருப்பம் இல்லை என்று. சரி தாங்களே வேறு மாப்பிள்ளை பாருங்கள். நான் அவளிடம் தமையன் மாப்பிள்ளை அல்ல என்று கூறி விடுகிறேன்”, என்று குறுஞ்சிரிப்புடன் கூறினாள்.
அதை கேட்டு இருவர் முகமும் மகிழ்ச்சியில் மலர்ந்தது.
“சுதமன் ஒரு நிமிடம் உன் கண்களை மூடி கொள்ளேன்”, என்றான் நரேந்திரவர்மன்.
“எதற்காக இப்படி கூறுகிறான்?”, என்று எண்ணிக்கொண்டு “கட்டாயம் செய்கிறேன் இளவரசே”, என்று புன்னகையுடன் கூறி விட்டு கண்களை மூடி கொண்டான் சுதமன்.
அடுத்த நிமிடம் வான்மதியை எலும்புகள் நொறுங்கும் அளவுக்கு இறுக அணைத்த நரேந்திரவர்மன் அவளுடைய உதடுகளில் அழுத்தமாக ஒரு அவசர முத்தத்தை பதித்தான். வெட்கத்துடன் சிரித்தாள் வான்மதி.
தன்னவனின் முகத்தில் இருந்த ஆனந்தத்தை பார்த்தவள் சுதமனை ஒரு பார்வை பார்த்து விட்டு நரேந்திரவர்மனின் கன்னத்தில் உதடு பதித்தாள்.
கண் முன் அரங்கேறிக்கொண்டிருக்கும் காதல் நாடகத்தை அறியாமல் “நான் கண்களை திறக்கலாமா இளவரசே?”, என்று கேட்டான் சுதமன்.
அவன் குரலில் இருவரும் விலகி நின்று புன்முறுவல் பூத்தார்கள். “நீ இப்போது கண்களை திறக்கலாம்”, என்று சிரித்தான் நரேந்திரவர்மன். அவர்களின் சிரிப்பு சுதமனையும் தொற்றி கொண்டது. “தேவி சுதமன் மனதில் இருப்பது சாந்தா தான் என்று நீ எவ்வாறு அறிந்தாய்?”, என்று கேட்டான் நரேந்திரவர்மன்.
“சாந்தா வீட்டில் ஒற்றை சலங்கையை கண்டதும் நானே அவ்வாறு எண்ணி கொண்டேன்”, என்று சிரித்தாள் வான்மதி.
“நான் இளவரசனின் அறிவுக்கூர்மையை இப்போது தான் மெச்சினேன். ஆனால் அவரை விட தாங்கள் புத்தி கூர்மை உடையவர்கள் என்று நிரூபித்து விட்டீர்கள் இளவரசி. இருவரும் பொருத்தமான தம்பதிகள் தான்”, என்றான் சுதமன்.
“தமையனாரே, உங்கள் கையில் இருந்த சலங்கையை கண்டு உங்கள் காதலியும் நீங்கள் அவளை விரும்புவதை உணர்ந்து கொண்டாள். நான் உண்மையை கூறுவதுக்கு முன்பே உங்கள் காதல் அவளுக்கு தெரிந்து விட்டது”, என்றாள் வான்மதி.
“அப்படியா? அதற்கு அவள் என்ன கூறினாள்? என்னை மணக்க அவள் சம்மதம் கூறியதாக தாங்கள் கூறியது மெய்தானா இளவரசி?”
“ஆம் மெய் தான். அவளுக்கு சம்மதம் தான். ஆனால் தாங்கள் அவளிடம் போய் நேராக ஒரு வார்த்தை கேட்டு விடுங்கள் தமையனாரே”
“என்ன நானா?”
“ஆம் தாங்கள் தான். தாங்களே உங்கள் திருவாயால் அவள் மீது உள்ள காதலை கூறி மணக்க கேளுங்கள். இப்போதே போங்கள்”
“நானா? நான் போக மாட்டேன். என்னால் அவள் கண்களை பார்த்து காதலை கூற முடியாது”, என்று வெட்க பட்டான் சுதமன்.
“பெண் பிள்ளை போல வெட்க படுகிறாயே. ஒழுங்காக போய் அவளிடம் பேசு சுதமன். நீ ஆண் பிள்ளை. தைரியமாக போ. நாங்கள் உனக்கு திருமண நாள் பார்த்து வைக்கிறோம்”, என்று அவன் தோளை பிடித்து தள்ளினான் நரேந்திரவர்மன்.