வெற்று மார்பில் அடர்த்தியாக முடி படர்ந்திருந்தது. அவனுடைய பள்ளியறை என்பதால் இளவரசனுக்குரிய அடையாளம், ஆபரணங்கள் இல்லாமல் சாதாரண நரேந்திரவர்மனாக சயனித்திருந்தான்.
அவனை காண காண அவன் மீது காதல் பெருக்கெடுத்தது அவளுக்கு. “இப்படி இருக்கும் ஒருவன் மீது பெண்கள் இச்சை கொள்ளாமல் இருப்பார்களா? எனக்கு கிடைத்த பொக்கிஷம் இவன். இவனுக்காக ஒரு சாந்தா என்ன? ஆயிரம் சாந்தா வாழ்வை கூட சரி செய்யலாம்”, என்று எண்ணி புன்னகைத்து கொண்டாள் வான்மதி.
நல்ல உறக்கத்தில் இருந்தவன் எதற்காகவோ கண்களை திறந்தான். திறந்த கண்களில் உதட்டில் குறுஞ்சிரிப்பும், கண்களில் காதலும் கொண்டு பார்த்திருந்த வான்மதி தான் விழுந்தாள்.
இத்தனை நாள்கள் அவன் பள்ளியறை அவனை மட்டுமே தாங்கி இருந்தது. இன்று எதிரே அமர்ந்தவளை கண்டதும் ஒரு நிமிடம் திகைத்தான். அதன் பின் தான் அவனுக்கு மணமானதே நினைவில் வந்தது.
“தேவி”, என்று காதலுடன் அழைத்தான்.
“தங்களை உறக்கத்தில் இருந்து எழுப்பி விட்டேனா இளவரசே?”, என்று கேட்டாள் வான்மதி.
“அல்ல தேவி. நானாக தான் கண் விழித்தேன். ஆனால் ஒரு நிமிடம் உன்னை கண்டு குழம்பி விட்டேன். எதுவோ ஒரு மாய மோகினி எதிரில் அமர்ந்திருக்கிறாள் என்று எண்ணி விட்டேன். அதன் பின் தான் அந்த மாயமோகினி என் மனம் கவர்ந்த மனைவி என்று புரிந்தது”, என்று புன்னகைத்தான்.
“தாங்கள் இருக்கிறீர்களே? நடு நிசியில் எழுந்து கொண்டு கவி பாடுகிறீர்கள். போங்கள்”
“உன்னை கண்டால், அறிவில்லாத பேதை கூட கவி படைப்பான் தேவி. அத்தனை அழகு நீ”
“நானும் தங்களை கண்டு இவ்வாறு தான் எண்ணி கொண்டிருந்தேன் தெரியுமா?”, என்று வியந்து கேட்டாள் வான்மதி.
“ஒத்த மனத்துடையவர்கள் ஒன்று போல் தான் எண்ணுவார்கள் தேவி. நீ என்னை பார்த்து கொண்டிருந்ததிலே என் அழகை தான் ரசிக்கிறாய் என்று கண்டு கொண்டேன். ஆனால் நான் உறங்கும் போதா காண்பது? நரேந்திரா எழுந்திரு என்று கூறி இருந்தால் என்னை பார், என் அழகை பார் என்று உன் முன்னே அமர்ந்திருக்க மாட்டேனா?”
“இப்படி பேசாமல் இப்போது உறங்க போகிறீர்களா இல்லையா? எனக்கு கூச்சமாக இருக்கிறது”
“ஹா ஹா, நான் உறங்குவது இருக்கட்டும். உனக்கு நித்திரை வரவில்லையா தேவி?”
“வரவில்லை இளவரசே. எனக்கு உங்களை கண்டு காதல் பொங்குகிறது. அதை வெளிப்படுத்த முடியாமல் துடிக்கிறேன். சாந்தாவுக்கு எப்படி நல்வாழ்க்கை ஏற்படுத்தி கொடுப்பது என்று தவிக்கிறேன். தங்களுடன் வாழ வேண்டும் என்று சுயநலமாக சிந்திக்கிறது என் மனது”, என்று கலக்கமாக கூறினாள்.
அவளை இழுத்து தன் மார்பில் போட்டு கொண்ட நரேந்திரவர்மன் “கலங்காதே தேவி. நீ கூறிய அனைத்து விருப்பங்களும் எனக்கும் இருக்கிறது. இப்போதே உன்னை எடுத்து கொண்டால் என்ன என்று என் மனமும் சுயநலமாக தான் சிந்திக்கிறது. ஆனால் விதி நம்மை இப்படி ஒன்றாக இணைத்து பிரித்து வைக்கிறதே? சாந்தா கட்டாயம் நல்ல முடிவை தான் எடுப்பாள். ஏற்கனவே அவள் திருமணத்துக்கு சம்மதம் கூறி விட்டாள். ஆனால் அவள் மனது மாறவும் நாம் அவகாசம் கொடுக்க வேண்டும். நாளை அவளிடம் பேசி மணமகன் பார்க்கவா என்று மட்டும் கேட்டு உறுதி படுத்தி விட்டு வா”, என்றான்.
“அப்படி உறுதி படுத்தினால் அடுத்த நாளே அவளுக்கு சிறந்த மணமகனை பார்த்து விடுவீர்களா என்ன?”
“ஆம், கட்டாயமாக”
“பொய் உறைக்காதீர்கள்”
“நரேந்திரவர்மன் பொய் அறியான் தேவி. நீ மட்டும் மணமகன் பார்க்கலாமா என்று கேட்டு சம்மதம் வாங்கி வா. அவளுக்கு அடுத்த நொடியே சிறந்த துணையை ஏற்படுத்தி கொடுப்பேன்”
“அதையும் பார்க்கலாம்”
“அதை நாளை பார்க்கலாம். விடியல் வர போகிறது தேவி. சிறிது நேரம் ஓய்வெடு. இப்போது ஓய்வெடுத்தால் தான் உண்டு. உன்னுடன் வாழ ஆரம்பித்த பிறகு நீ உறக்கம் என்பதையே மறந்து விட வேண்டும்”, என்று கூறி அவளை கட்டி கொண்டான்.
புன்னகைத்தவாறே அவன் மார்பில் முகம் புதைத்தவள் நிம்மதியான தூக்கத்தை தழுவினாள்.
அடுத்த நாள் அரசவை கூடி நாட்டு மக்களின் நிலை, போர் கால நடவடிக்கைகள் அனைத்தும் விவாதிக்க பட்டது. சாந்தா மீது கத்தி வீசியவனுக்கு மரண தண்டனை வழங்க பட்டது.
இளவரசனின், இளவரசியாக நரேந்திரவர்மன் அருகே வீற்றிருந்தாள் வான்மதி. இருவர் அழகையும் பொருத்தத்தையும் அனைவரும் வியந்து பார்த்தார்கள்.
பின் அரசவை முடிந்ததும் வாசுதேவச்சக்கரவர்த்தி, அருந்ததி, மேகவேந்தன் அனைவரும் தங்கள் நாட்டிற்கு செல்ல கிளம்பினார்கள்.
பிரிவு துயர் அனைவருக்கும் கண்ணீரை வர வைத்தது. அவர்கள் சென்றதும் தனிமையில் கண்ணீர் விட்டு கொண்டிருந்த வான்மதியை தன்னுடன் அணைத்து சமாதானம் செய்தான் நரேந்திரவர்மன்.
பின் அவளை சாந்தாவை சென்று காணுமாறு அனுப்பி வைத்தான். அவனும் சுதமனிடம் திருமணம் பற்றி உரையாட சென்றான்.
ரதத்தில் இருந்து சாந்தா வீட்டு முன்பு இறங்கிய இளவரசியை அனைவரும் மெய் மறந்து பார்த்து கொண்டிருந்தார்கள். ஆர்பரிக்கவும் செய்தார்கள்.
சத்தம் கேட்டு வெளியே வந்த சாந்தா திகைத்தாள். “இளவரசி தாங்கள் என் வீடு தேடி வந்திருக்கிறீர்களா?”, என்று வியப்புடன் கேட்டாள்.
“வலி எப்படி இருக்கிறது சாந்தா? “, என்று கேட்டாள் வான்மதி.
“வலி எல்லாம் இல்லவே இல்லை. தாங்கள் இங்கு வந்தது என் பெரும் பாக்கியம் இளவரசி. இந்த ஏழையின் குடிசையில் தங்கள் பொற்பாதங்கள் பட வேண்டும். உள்ளே வாருங்கள்”
அவள் உள்ளே சென்றதும் விசாலமும் அங்கு வந்து விட்டாள். “வா விசாலம்”, என்று கூறி புன்னகைத்தாள் வான்மதி.
பின் சாந்தாவிடம் “நேற்று நான் திருமணம் பற்றி பேசும் போது, என்னை வறுபுறுத்த தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று நீ கூறி விட்டாய் சாந்தா. அதனால் அதை பற்றி பேச எனக்கு தயக்கமாக இருக்கிறது. ஆனாலும் வேறு வழி இல்லை. உன்னுடன் பேச வேண்டும்”, என்றாள் வான்மதி.
“நேற்று நான் செய்த பிழைக்காக என்னை மன்னியுங்கள் இளவரசி. என்னை வறுபுறுத்த என்ன? தாங்கள் என்னை கொன்று கூட போடலாம். திருமணம் பற்றி நான் நேற்றே கூறிவிட்டேனே? தாங்களும், இளவரசரும் எனக்கு என்ன செய்தாலும் அதை முழுமனதுடன் ஏற்று கொள்வேன்”, என்றாள் சாந்தா.
அவளை அணைத்து கொண்டாள் விசாலம். “உன் பெரிய வயிறு என்னை இடிக்கிறது விசாலம்”, என்று சிரித்தாள் சாந்தா.
அதை கேட்டு வான்மதியும் சிரித்தாள். “நேற்று இருந்த சாந்தாவுக்கும், இப்போது இருப்பவளும் எவ்வளவு வேறுபாடு”, என்று நினைத்து மகிழ்ச்சி கொண்டாள் வான்மதி.
“இரு மனதுக்கு இனிய முடிவை கூறி இருக்கிறாய். நான் சர்க்கரை தண்ணீர் கொண்டு வருகிறேன்”, என்று எழுந்து போனாள் விசாலம்.
சிரித்து கொண்டே “உனக்கு மாப்பிள்ளை பார்க்கலாம் அல்லவா சாந்தா?”, என்று கேட்ட வான்மதியின் கண்களில் ஒரு கட்டையில் மாட்டி இருந்த அந்த ஒற்றை சலங்கை பட்டது.
அதிர்ச்சியாக அதனை பார்த்த வான்மதி அந்த சலங்கை அருகில் சென்றாள். “அப்படி என்றால் சேனாதிபதி விரும்புவது சாந்தாவையா? ஐயோ! அவர் முன்னிலையில் நேற்று பேச்சு வார்த்தையை தொடங்கி விட்டேனே?”, என்று எண்ணி மனம் கலங்கினாள்.
“ஆனாலும் நேற்று இளவரசர் அடுத்த நொடி மணமகனை காட்டுவேன் என்று சொன்னது அவரை தானா? இந்த திருமணம் மட்டும் நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?”, என்று எண்ணி ஆனந்த பட்டாள்.
பின் அதை கையில் எடுத்து கொண்டு சாந்தா அருகில் சென்ற வான்மதி “இதன் ஜோடி சலங்கை எங்கே சாந்தா?”, என்று கேட்டாள்.
“சில ஆண்டுகளுக்கு முன் தொலைந்து போனது இளவரசி. அது என் அன்னை எனக்காக செய்து போட்டது. அதனால் அவள் நினைவாக இந்த ஒன்றை மட்டும் மாட்டி வைத்திருக்கிறேன்”, என்றாள் சாந்தா.
“மற்றொரு சலங்கை இருந்தால் உன் காலை அலங்கரிக்கும். எங்கே தொலைத்தாய் சாந்தா?”
“இதுவரை நான் அறியேன் இளவரசி. ஆனால் நேற்று தொலைந்து போன சலங்கை எங்கிருக்கிறது என்று கண்டு கொண்டேன்”, என்று தலை குனிந்த படி கூறினாள்.
“சாந்தா”, என்று ஆனந்தமாக அழைத்த வான்மதி “உண்மையாகவா? நீ கண்டாயா? சேனாதிபதி கரத்தில் இருப்பது உன்னுடையது தானா?”, என்று கேட்டாள்.
“ஆம் இளவரசி. ஊர் உலகமே பார்க்கும் இடத்தில் இருக்கும் சலங்கையை நான் இத்தனை நாள் பார்க்காமல் இருந்ததே வியப்பு. ஆனால் அந்த உண்மையை கண்ணால் கண்ட பிறகு தான் மனது வெகுவாக துயர படுகிறது?”
“துயரமா? என்ன கூறுகிறாய் சாந்தா?”
“இளவரசரின் நெருங்கிய நண்பரும், மகாராஜாவின் தத்து பிள்ளை போன்றவரும், நம் தேசத்தின் படை தலைவர் அவர். இத்தனை உயர்ந்த அடையாளங்களை கொண்ட ஒரு மனிதர் மதி இழந்து குப்பையில் எறிய வேண்டியதை கரத்தில் அணிந்திருப்பதை எண்ணி தான் துயரம் இளவரசி”
“சாந்தா”
“ஆம் இளவரசி. அவர் உயர்ந்தவர். அவர் கையில் என் சலங்கையை கண்ட போதே அதற்கான விடையையும் கண்டு கொண்டேன். பருவ வயதில் தொலைந்து போன சலங்கை அவர் கையில் இருக்கிறதென்றால் அந்த சலங்கையை அவர் கட்டி கொண்டிருப்பதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும். அது என் மீது அவருக்குள்ள காதல். ஆனால் அவர் அல்ல. யாருடைய காதலுக்கும் நான் தகுதி இல்லாதவள் இளவரசி”, என்று கண்ணீருடன் கூறினாள்.
“அவ்வாறு கூறாதே சாந்தா”
“உண்மையை தான் கூறினேன் இளவரசி. கடவுளாக எண்ணி பூஜிக்க வேண்டிய இளவரசரை போய் என்னவாக எண்ணி விட்டேன். நான் கலங்க பட்டவள். என் மீது ஆழ்ந்த காதலை வைத்திருந்த சேனாதிபதி என் அழுக்கான உள்ளம் கண்டு எப்படி துடித்திருப்பார்? என் மீது வெறுப்பும் கொண்டிருப்பார்”
“சாந்தா. உண்மையான காதலில் வெறுப்பென்பதே கிடையாது. என் தமையன் உன்னை தவறாக எண்ணமாட்டார். நீ அவருக்காக எண்ணி துயரம் கொள்வதே எவ்வளவு பெரிய செயல் தெரியுமா? உன் அருமை தெரிந்து தான் அவர் உன்னை இத்தனை ஆண்டுகளாக விரும்பி இருக்கிறார். அவரே உனக்கு மணமகனாக வந்தால் எப்படி இருக்கும்?”
“கனவில் தான் நடக்கும் இளவரசி. அவருக்கு நிச்சயம் என் மீது வெறுப்பு வந்திருக்கும். அது மட்டும் அல்லாமல் அவருடைய தூய்மையான காதலுக்கு நான் உகந்தவள் அல்ல”
“அதை நீ கூற கூடாது சாந்தா. தமையன் தான் கூற வேண்டும். அவரே வந்து உன்னை மணக்க கேட்டால் உனக்கு விருப்பமா?”
“அவர் அல்ல, தாங்கள் எவரை அழைத்து வந்து கட்டி வைத்தாலும் அவரை கட்டி கொண்டு காதல் செய்வேன்”, என்று புன்னகைத்தாள் சாந்தா.
நெகிழ்ச்சியுடன் அவளை கட்டி கொண்ட வான்மதி “உனக்கு அருமையான மணவாழ்வு கிடைக்கும் சாந்தா. கூடிய விரைவில் நல்ல செய்தியுடன் வருகிறேன்”, என்று கூறி விட்டு விடை பெற்றாள்.
“இவ்வளவு வருடம் ஒருவனால் என் நினைவில் இருக்க முடியுமா? ஒரு வேளை முன்பு தொலைந்து போன சலங்கை சமீபத்தில் அவன் கையில் கிடைத்திருக்குமா? காதலாக அல்லாமல் ஆபரணம் மாதிரி அணிந்து கொண்டிருக்கிறானோ? நான் தான் காதல் என்று எண்ணி கொண்டேனா?”, என்று கவலை கொண்டாள் சாந்தா.
எதனால் அவனை இப்போது நினைவு கூர்ந்தாள் என்று அவளே அறியாள்.
அதே நேரம் நரேந்திரவர்மன் சுதமன் அருகில் அமர்ந்திருந்தான். “என்ன நண்பா எதையோ கூற வேண்டும் என்று கூறி விட்டு அமைதியாக இருக்கிறாய்?”, என்று கேட்டான் சுதமன்.
“அதை பற்றி தான் சிந்தித்து கொண்டிருந்தேன். எப்படி ஆரம்பிக்க வேண்டும் என்று யோசித்தேன். சரி நீ எப்போது திருமணம் செய்ய போகிறாய்?”, என்று கேட்டான் நரேந்திரவர்மன்.
“ஓ என் திருமணம் பற்றி உரையாட தான் தனியாக அழைத்தாயா? இப்போது திருமணம் செய்து கொள்ள எனக்கு எந்த தடையும் அல்ல. கூடிய விரைவில் செய்ய வேண்டும் “
“அப்படியா? சரி இந்த சலங்கைக்கு சொந்த காரி யார் என்று கூறு. உடனே இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும்”
“அவள் யார் என்று கூற எனக்கு தயக்கமாக இருக்கிறது நண்பா”
“உன் காதலியை பற்றி எனக்கு ஒரு யூகம் இருக்கிறது. இதோ பார் சுதமன். உன் மனதில் இருக்கும் பெண் சாந்தா என்று எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. அவள் அல்லாமல் கூட இருக்கலாம். அப்படி அவளாக இருந்தால் நேற்று நடந்த விசயங்களை வைத்து நீ அவளை தவறாக எடை போட வேண்டாம்”, என்று தயக்கத்துடன் கூறினான் நரேந்திரவர்மன்.