அவளை தன் அருகே இழுத்து கொண்ட நரேந்திரவர்மன் அவள் காதில் “இன்று இரவு முழுவதும் நாம் உரையாடி கொண்டே இருக்கலாம்”, என்றான்.
“ஹா ஹா, அப்படி செய்தால் நாளை அரண்மனையில் சபை கூடும் போது தாங்கள் உறங்கி கொண்டிருப்பீர்கள்”, என்று புன்னகைத்தாள் வான்மதி.
“நீ கூறுவதும் சரி தான். பின் என் தந்தை அரசவையில் உறங்குகிறாயா? உன்னை என்ன செய்கிறேன் பார் என்று கூறி வாளை நீட்டி விட போகிறார்”
“மகாராஜா அப்படி எல்லாம் கூற மாட்டார். தாங்கள் அவருக்கு செல்ல பிள்ளையாம்”
“யார் கூறியது?”
“மகாராஜா தான் கூறினார்”
“என்னவெல்லாம் கூறினார்?”
“தாங்கள் சரியான சேட்டை காரனாம். அது மட்டும் இல்லாமல் முயலுக்கு மூன்றே கால் என்று கூறும் பிடிவாத காரனாம்”
“அவ்வாறு கூறினாரா? சரி என் அன்னை என்ன கூறினார்கள்?”
“தாங்கள் அவர்களை விட அழகில் குறைந்தவள் என்று என்னை கூறினீர்களாம். அதை கண்டிப்புடன் விசாரிக்க சொன்னார்கள்”
“ஹா ஹா, என்னை பற்றி வத்தி வைத்திருக்கிறார்கள். அதில் உனக்கு எதாவது மனக்குறையா தேவி?”
“அல்ல இளவரசே. எந்த மகனுக்கும் அவன் தாயே அழகி. தகப்பனே அழகன். தாங்கள் கூறியதில் தவறொன்றும் இல்லை. ஆனால்”
“என்ன ஆனால்?”
“அன்னையை தவிர வேறு பெண் அழகென்று கூறினால் இந்த வான்மதியின் கோபத்தை தாங்கள் சந்திக்க வேண்டி இருக்கும்”
“ஹா ஹா, என் மீது கோபம் கொள்வாயா தேவி?”
“நிச்சயமாக, போர் பயிற்சி கூட எடுத்திருக்கிறேன். பின் தாங்கள் என் வாளுக்கு தான் பதில் கூற வேண்டும்”
“அப்படியா, உண்மையாகவே உன்னை விட அழகான பெண் இருக்கிறாளே. உன்னை விட வெகு அழகு. என் மனதில் பதிந்து இருக்கிறாள். தினமும் அவளை காண வில்லை என்றால் என் மனது துடித்து போகும்”
“இளவரசே என்னை வெறுப்பேற்றாதீர்கள். எவள் அவள்?”
“ஹா ஹா கோபம் வேண்டாம் தேவி. நம்முடைய நிதி அமைச்சரின் மகளை தான் கூறினேன். வயது ஆறு ஆகிறது”
“போங்கள் ஒரு நிமிடத்தில் என்னை பயமுறுத்தி விட்டீர்கள்”
“என் கற்பு விசயத்திலும், என் காதல் விசயத்திலும் நீ பயம் கொள்ள வேண்டாம் தேவி. அது ரெண்டுக்கும் சொந்தமானவன் நீ மட்டுமே”, என்று கூறி கண் சிமிட்டினான்.
அழகாக சிவந்து போனாள் வான்மதி. அவள் அழகை அடைய துடித்த மனதை அடக்கியவன் “சரி என்னை பற்றி என் அன்னை வேறு என்ன கூறினார்கள்?”, என்று கேள்வி எழுப்பினான்.
“அவர்கள் ஒன்றும் கூற வில்லை. ஆனால் உங்கள் பெரிய தந்தை தான் மிக பெரிய புகாரை தங்கள் மீது கூறி இருக்கிறார்?”
“அய்யகோ? அவருமா? யாது உரைத்தார்?”
“தாங்கள் அதிகமாக நகர்வலம் செல்வீர்களாம்”
“ஆம், அது அரச குமாரனின் கடமை அல்லவா? அவ்வாறு திடீரென்று மக்களிடையில் பிரவேசித்தால் தான் அவர்களின் பிரச்சனைகளை அறிய இயலும்? அதை ஏன் குறை கூறினார்?”
“அதை ஒன்றும் அவர் குறை கூற வில்லை. சில வேளைகளில் மாறுவேடங்களில் கூட செல்வீர்களாம். ஆனால் எந்த வேடம் அணிந்தாலும் மேல் சட்டை அணிந்து கொள்ள மாட்டீர்களாம். அதுவே புகார்”
“ஹா ஹா, சுதந்திர காற்றை என் உடலும் சுவாசிக்க வேண்டாமா தேவி?”
“சுதந்திர காற்றை உங்கள் நாசி சுவாசித்தால் போதும். அகன்ற தோளுடன் ஆணழகனாக இருந்து கொண்டு மேலாடை இல்லாமல் வெற்றுடம்பை காட்டி தாங்கள் பவனி வந்தால் பெண்கள் மயங்காமல் என்ன செய்வார்களாம்?”
“இனி அவ்வாறு செய்ய மாட்டேன் தேவி. வேண்டும் என்றால் என் பஞ்சணையில் கூட மேலாடையுடன் உறங்குகிறேன் போதுமா?”
“வேண்டாம் வேண்டாம். தாங்கள் வெளியே செல்லும் போது மட்டும் அணிந்தால் போதும். என் அருகில் இருக்கும் போது தேவை இல்லை”, என்று வெட்கத்துடன் முணுமுணுத்தாள் வான்மதி.
“கள்ளி, ஏனடி அவ்வாறு கூறுகிறாய்?”
“ஏன் என்றால் என் அருகில் இருக்கும் தங்கள் மீது நான் இப்போது சாய்ந்திருப்பது போல் சாய்வேனே? தங்களுடைய நெஞ்சத்தில் முகம் புதைந்திருக்கும் எனக்கு அந்த ஆடை இடையில் வந்து என்னை தங்களிடம் இருந்து பிரிப்பது போல இருக்கும்”, என்று கூறி அவன் நெஞ்சிலே முகம் புதைத்து கொண்டாள்.
அவளை இறுக்கி கொண்டவன் முகம் திடீரென்று சிரிப்பை தொலைத்தது போல ஆனது.
குழப்பமாக அவன் முகத்தை நோக்கினாள் வான்மதி. “என்னவாயிற்று இளவரசே? எதனால் தங்கள் முகம் திடீர் என்று களை இழந்து காண படுகிறது?”
“உன்னிடம் நான் மன்னிப்பை வேண்ட வேண்டும் தேவி”
“என்ன உளறுகிறீர்கள்? தாங்கள் என்னிடம் மட்டும் அல்ல. யாரிடமும் மன்னிப்பை வேண்டுவதை என்னால் ஏற்று கொள்ள முடியாது”
“உன்னுடைய இந்த காதலுக்கு நான் தகுதியானவனா தேவி?”
“இப்படி எல்லாம் உறைக்காதீர்கள் இளவரசே. எனக்கு வருத்தமாக இருக்கிறது. தங்களின் காதலை எண்ணி நான் பூரித்து கொண்டிருக்கிறேன் என்று இப்போது தானே கூறினேன்?”
“ஆனால், என் மீது உனக்கு கோபம் வந்திருக்கும் அல்லவா? அந்த பெண் மனதில் இவ்வாறு எண்ணுவாள் என்று நான் அறியேன் தேவி”
“எனக்கு தெரியாதா தங்களை பற்றி. நம் திருமணத்துக்கு முன்பே அந்த பெண்ணை பற்றி என் தோழி என்னிடம் கூறி விட்டாள். அவள் தவறாக எண்ணி கொண்டால் அதற்கு தாங்கள் எப்படி பொறுப்பாவீர்கள்? அது மட்டும் அல்லாமல் அதை நினைத்து தங்கள் மீது நான் ஏன் கோபம் கொள்ள வேண்டும்? தங்களின் அழகையும் கம்பீரத்தையும் கண்டு பெண்கள் மயங்காமல் இருந்தால் தான் அதிசயம்”, என்று கூறி புன்னகைத்தாள் வான்மதி.
அதில் அவன் முகத்திலும் முறுவல் வந்தது. “எல்லாரும் மயங்குவார்கள் என்று கூறிய நீ என்னிடம் மயங்கவே இல்லையே தேவி. அது எனக்கு பெரிய மனக்குறையாக இருந்தது தெரியுமா?”
“அப்படி தங்களை கண்டதும் மயங்கி விட்டால் நான் எப்படி வான்மதியாவேன். வான்மதி என்பது என்னுடைய நாமம். அது எனக்கு எவ்வளவு பிடித்தமானது என்று அறிவீர்களா? எப்படி அந்த வானத்துக்கு ஒரே மதியோ அது போலவே நானும். ஒன்றை நினைத்து ஒன்றிலே வாழ்பவள். என் பெயர் போல தான் என் குணமும். எனக்கென்று இருப்பதை தான் நான் எண்ண வேண்டும். தாங்கள் அழகாக இருந்தாலும், பெண்களை கவரும் மன்மதனாக இருந்தாலும் நான் மயங்காததற்கு காரணம் தாங்கள் அப்போது எனக்கானவர் அல்லவே. எப்போது எனக்கானவர் என்று புரிந்ததோ அடுத்த நொடியில் இருந்து தங்கள் மீது தான் பித்தாக இருக்கிறேன் என்று அறிவீர்களா? இதுவரை ஓவியத்தில் தெரிந்த ராமனின் முகம் கூட எனக்கு தங்கள் முகமாக தான் தெரிகிறது”
….
“சாதாரண மயக்கம் என்ன? தங்கள் மீது ஆழ்ந்த மயக்கத்தில் இருக்கிறேன். தெரியுமா உங்களுக்கு? அதோ தெரிகிறதே அந்த பிறை மதி. அதற்கு வெளிச்சம் கொடுக்கும் சூரியன் போல தான் தாங்கள். தங்களிடம் இருந்து ஒளியை பெற்று தான் நான் பிரதிபலிப்பேன். என்று அந்த ஆதவன் ஒளி இளக்கிறானோ அன்று மதி எவருடைய கண்ணுக்கும் தெரியாது. அது போல் தாங்கள் இல்லை என்றால் நானும் ஜீவித்திருக்க மாட்டேன். அந்த அளவுக்கு தங்கள் மீது மயக்கம் கொண்டிருக்கிறேன்”, என்றாள்.
“அவ்வாறு கூறாதே தேவி. மானிடராய் பிறப்பெடுத்த நாம் ஒரு காலகட்டத்தில் இவ்வுலக வாழ்வை நீங்க வேண்டும் தான். ஆனால் என் மனதில் இருந்து நீயும், உன் மனதில் இருந்து நானும் ஒரு போதும் நீங்க மாட்டோம். இது இறைவன் நமக்கு கொடுத்த பாக்கியம். எனக்காகவே படைக்க பட்டவள் நீ. உனக்காகவே படைக்க பட்டவன் நான். நமக்கு எப்பிறவியிலும் பிரிவில்லை. இன்று நமக்கு மணமாகி விட்டது. என் அருகில் நீ இருக்கும் தருணத்தை எண்ணி எனக்கு பலவிதமான கனவு இருந்தது. ஆனால் அந்த பெண்ணுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுக்காமல் நம் வாழ்வை தொடுங்குவதில் எனக்கு உடன் பாடு இல்லை தேவி”
“தங்களுடைய மனதை நான் அறிவேன் இளவரசே. சாந்தா திருமணத்துக்கு சம்மதம் கூறியதே பெரிய விசயம். கூடிய விரைவில் நல்லது நடக்கும். அது வரை நாம் நல்ல நண்பர்களாக இருக்கலாம். நானும் அவ்வாறு தான் எண்ணி கொண்டிருந்தேன்”
“சரி இன்றைய இரவை எவ்வாறு போக்குவது? உனக்கு நித்திரை வருகிறதா?”
“தங்களிடம் உரையாடி கொண்டிருக்கும் போது நித்திரையாவது ஒன்றாவது?”
“எனக்கும் அவ்வாறு தான் தேவி. அதனால் தான் இரவு முழுவதும் உரையாடலாம் என்று கூறினேன்”
“எதை பற்றி உரையாடுவது இளவரசே?”
நாடியில் விரலை வைத்து சிந்தித்தவன் “உன் மேனி பற்றி உரையாட ஆசை தான். ஆனால் சாந்தா என்ற தடை கல் இருக்கிறதே. பார்க்கலாம் எப்போது சரியாகும் என்று. உறங்க செல்லலாமா தேவி?”, என்று கேட்டான்.
வெட்கத்துடன் சிரித்து விட்டு “வாருங்கள் செல்லலாம்”, என்று கூறி எழுந்தாள் வான்மதி. அவளை மஞ்சத்துக்கு அழைத்து சென்ற நரேந்திரவர்மன் மஞ்சத்தில் படுத்து நித்திரை கொள்ள ஆரம்பித்தான்.
“சாந்தா விசயத்தை எப்படி சரி செய்ய போகிறேன்?”, என்று எண்ணி தூக்கத்தை தொலைத்தாள் வான்மதி.
தூக்கத்தை தொலைத்தவள் அருகில் உறங்கி கொண்டிருந்த நரேந்திரவர்மனை பார்த்தாள்.
அலை அலையாக கேசம் அவன் நெற்றியில் புரண்டு காற்றில் ஆடி கொண்டிருந்தது. அடர்த்தியான புருவம் அவனுக்கு தனி கம்பீரத்தையே கொடுத்தது. கூரான நாசி, அழுத்தமான உதடுகள் என்று ஆணழகனாக இருந்தான்.