அப்போது ஒரு பணியாள் வந்து “வணங்குகிறேன் இளவரசே, தங்களையும் இளவரசியையும் மகாராஜா உடனடியாக வர சொன்னார்”, என்றான்.
“இதோ வருகிறோம்”, என்று எழுந்த நரேந்திரவர்மன் வான்மதியை பார்த்தான்.
“ஓய்வெடு சாந்தா. உன்னை பிறகு வந்து பார்க்கிறோம். பார்த்து கொள் விசாலம்”, என்று கூறிய வான்மதி நரேந்திரவர்மனுடன் சென்றாள்.
அவர்கள் சென்ற பிறகு, “சேனாதிபதியாரே, சில கணங்கள் சாந்தாவை பார்த்து கொள்ளுங்கள். நான் என் கணவரிடம் இங்கிருக்கிறேன் என்று உரைத்து விட்டு வந்து விடுகிறேன்”, என்றாள் விசாலம்.
“போய் வாருங்கள், தாங்கள் வரும் வரை நான் இருக்கிறேன்”, என்றான் சுதமன்.
“இப்போது வந்து விடுகிறேன் சாந்தா”, என்று உரைத்து விட்டு அங்கிருந்து சென்றாள் விசாலம்.
அவள் போன பின்பும், சாந்தா கண்களில் கண்ணீர் வந்து கொண்டு தான் இருந்தது.
அதை துடைத்து விட்டு அவள் பஞ்சணையில் படுக்க எத்தனிக்கும் போது, கையை அசைத்தவள் ஆ என்று வலியில் முனங்கினாள்.
“பார்த்து, மெதுவாக கையை அசையுங்கள்”, என்று கூறி கொண்டே அருகில் ஓடி வந்தவன் அவளை படுக்க வைத்தான். ஆனால் தர்ம சங்கடத்துடன் அவன் உதவியை ஏற்று படுத்த சாந்தாவின் கண்கள் நிலை குத்தி போயின.
அவளை படுக்க வைத்து விட்டு எழுந்த சுதமன் கரங்களிலே அவள் பார்வை விழுந்தது. அவன் கரங்களில் அணிந்திருந்த அந்த சலங்கையை பார்த்து விதிர்த்து போனாள். மனம் முழுவதும் குழப்பமாக இருந்தது.
அந்த சலங்கை அவன் கரங்களில் இருப்பதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்க வேண்டும் என்பதை அவள் மனது புரிந்து கொண்டது. அவனை நிமிர்த்து அவன் முகத்தை கூர்ந்து கவனித்தாள். அதில் இருந்த கனிவும், காதலும் அவளை நிலை குலைய வைத்தன.
இளவரசி, இளவரசன் பற்றி சிந்தித்து கொண்டிருந்தவள் மனது இப்போது முழுவதும் சுதமனை பற்றியே எண்ணியது.
“இந்த சலங்கை சிறு வயதில் இருந்தே அவன் கரங்களில் இருக்கிறதா? இளவரசரை மாந்தோப்பில் வைத்து பார்த்த அன்று தான் அது தொலைந்து போனது. அப்படி என்றால் நான் இளவரசரை நினைக்க ஆரம்பித்ததில் இருந்து இவன் என்னை பற்றி நினைத்தானா? இப்படி என் நினைவாக சலங்கையை அணிந்து கொண்டிருக்கும் அவனுக்கு இவ்வளவு நேரம் நடந்த நிகழ்ச்சிகளை கண்டு மனம் எவ்வாறு கலங்கி இருக்கும்? என்னை பற்றி கேவலமாக அல்லவா எண்ணி இருப்பான். இவ்வளவு காதலை வைத்து கொண்டிருந்த இவன் முன்னமே வந்து இவனுடைய காதலை என்னிடம் கூறி இருந்தால் இளவரசர் பற்றி நான் எண்ணாமல் இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறதே? இப்போது என்னை பற்றி அறிந்து என்னையே வெறுத்திருப்பான். ஆம் அந்த கடவுளையே அடைய பேராசை கொண்ட என்னை எவருக்கும் பிடிக்காது”, என்று நினைத்து கொண்டே அவனை பார்க்காமல் கண்களை மூடி கொண்டாள்.
கண்களில் இருந்து மட்டும் கண்ணீர் பெருக்கெடுத்தது. “எனக்கு பெற்றவர்கள் இருந்திருந்தால் நல்லது கெட்டது எடுத்து கூறி இருப்பார்கள். அப்படி அவர்கள் என்னை வழி நடத்தி இருந்தியிருந்தால் இளவரசரை இறைவனாக எண்ணி பூஜை செய்திருப்பேன். இப்போது காதல் என்ற வார்த்தையை கூறி அந்த காதலையும் கலங்க படுத்தி என்னுடைய ஒழுக்கத்தையும் கலங்க படுத்தி கொண்டேனே”, என்று எண்ணி மனதுக்குள் குமுறினாள்.
அவள் எதற்காக கண்ணீர் விடுகிறாள் என்பதற்கு காரணம் தெரியாமல் இருந்தாலும் அவள் கண்ணீரை கண்டு மனம் வருந்தினான் சுதமன். அதை துடைத்து தன் நெஞ்சோடு அவளை அணைத்து நான் இருக்கிறேன் உனக்கு என்று ஆறுதல் கூற துடித்த மனதை அடக்கியவன் அவளுக்கு துணையாக அங்கிருந்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டான்.
பின் விசாலம் வந்ததும் சிறிது நேரம் கழித்து “நாம் வீட்டுக்கு செல்லலாம்”, என்று கூறி விட்டாள் சாந்தா.
விசாலமும் அவளை அழைத்து கொண்டு வந்து விட்டாள். சுதமனும் அவனுடைய வேலையை பார்க்க சென்றான்.
அங்கே நரேந்திரவர்மனுக்கும், வான்மதிக்கும் அரண்மனையில் நடக்கும் சடங்குகள் செய்ய பட்டன. அது முடிந்ததும் சுதமனிடம் “சாந்தா எவ்வாறு இருக்கிறாள்?”, என்று விசாரித்தார்கள் வான்மதியும் நரேந்திரவர்மனும்.
“அவர்கள் வீட்டுக்கு சென்று விட்டார்கள் இளவரசி. உணவையும் அவர்கள் வீட்டுக்கு அனுப்ப சொல்லி விட்டேன். மற்ற மக்களுக்கு விருந்து நடந்து கொண்டிருக்கிறது”, என்றான் சுதமன்.
“நல்லது சுதமன். உன்னிடம் நான் சிறிது உரையாட வேண்டும். மாலை பூஜை முடிந்து ரத வலம் வந்த பிறகு அரண்மனை சடங்குகள் முடிந்ததும் உன்னுடன் ஒரு முக்கியமான விஷயம் பற்றி உரையாட வேண்டும்”, என்றான் நரேந்திரவர்மன்.
இளவரசியின் காதில் விழாதவாறு “அரண்மனை சடங்குகள் முடிந்த பிறகும் வெகு முக்கியமான சடங்கை செய்வதுக்காக உன் அறையில் அலங்காரம் நடந்து கொண்டிருக்கிறது நண்பா. அதனால் அதை பற்றி சிந்தித்து இளவரசியுடன் உரையாடு. என்னிடம் அடுத்த நாள் கூட நீ நினைத்ததை கூறலாம்”, என்று கண் சிமிட்டி விட்டு சென்று விட்டான்.
“குறும்பு காரன்”, என்று நினைத்து சிரித்த நரேந்திரவர்மன் “அவனிடம் அவனுடைய காதலி யார் என்று விசாரித்து அறிந்த பிறகு வான்மதியிடம் கூறி கொள்ளலாம்”, என்று நினைத்து கொண்டான்.
அதன் பின் இளவரசிக்கு அளிக்க பட இருக்கும் சீர்வரிசைகள் அனைத்தும் அரண்மனைக்கு விருந்தினர் மாளிகையில் இருந்து கொண்டு வர பட்டன.
பின் மாலை வேளை பூஜைக்கு அனைவரும் கிளம்பினார்கள்.
மனமக்களுக்காக நடந்த பூஜையில் நிம்மதியுடன் ஈசனை அனைவரும் வணங்கினார்கள்.
கோயிலை விட்டு வெளியே வந்ததும் நரேந்திரவர்மனின் ரதம் அழகாக அலங்கரிக்க பட்டு நிறுத்த பட்டிருந்தது.
அதில் குதித்து ஏறியவன் கீழே நின்றிருந்த வான்மதிக்காக தன் கரங்களை நீட்டினான்.
புன்னகைத்தவாறே அவனுடைய கரத்தின் மீது தன் கரத்தை வைத்து ஏறினாள் வான்மதி. இருவரும் அமர்ந்ததும் ரதம் மெதுவாக செல்ல ஆரம்பித்திருந்தது. சாலையின் இருமருங்கிலும் நின்றிருந்த பெண்கள் பூக்களை அவர்கள் மீது தூவினார்கள். அவர்களுக்கு பின்னே நின்று மணமக்களை வேடிக்கை பார்த்தார்கள் மக்கள்.
அனைவருக்குமே அது மகிழ்ச்சியான தருணமாக இருந்தது.
அரண்மனைக்கு வந்ததும் கீழே இறங்கியவர்களுக்கு கோலாகலமான வரவேற்பு கிடைத்தது. ஆரற்றி சுற்ற பட்டு உள்ளே அழைத்து வர பட்டர்கள்.
உள்ளே வந்தவர்களை அலங்கரிக்க பட்டிருந்த ஆசனங்களில் அமர வைத்து, அவர்களுக்கு பாலும் பழமும் வழங்க பட்டது.
பின், நரேந்திரவர்மன் எழுந்து இளவரசியின் முன்னே மண்டியிட்டு அமர்ந்து அவள் பாதங்களை எடுத்து தன் மடி மீது வைத்து விரலில் மெட்டியை அணிவித்தான். சிறு கூச்சத்துடன் அவனை பார்த்தாள் வான்மதி.
அவளுடைய வெட்கத்தில் மலர்ந்தவன் எவரும் அறியாதவாறு அவளுடைய பாதத்தை விரலால் சுரண்டினான்.
அடி கண்ணால் அவனை முறைத்தாள் வான்மதி. பின் இரவு உணவு வழங்க பட்டது. பின் அலங்கரிக்க பட்டிருந்த இளவரசரின் மாளிகைக்கு இருவரும் அனுப்ப பட்டார்கள்.
அவளுடன் புன்னகையுடன் நடந்தவன் அவனுடைய அறைக்கு வந்ததும் அவள் கரத்தை பற்றி கொண்டான்.
அதில் அவனை பார்த்து புன்னகைத்தாள் வான்மதி. அது மட்டும் அல்லாமல் அவள் எதையோ கூற விளைவது போலவும் இருந்தது.
“எதையாவது என்னிடம் கூற வேண்டுமா தேவி?”, என்று கேட்டான் நரேந்திரவர்மன்.
“ஆம் இளவரசே. அது என்னவென்றால் தங்களுக்காக அமைக்க பட்டிருக்கும் அந்த புரத்தை கண்களால் தேடினேன். ஆனால் என் கண்ணில் சிக்க வில்லை. அது எங்கே இருக்கிறது?”, என்று குறும்புடன் கேட்டாள் வான்மதி.
“இப்படி கேலி பேசினாயானால் நான் உனக்கு வேறு மாதிரியான தண்டனை கொடுக்க வேண்டி இருக்கும். அனைத்து இளவரசர் மற்றும் மகாராஜாக்களுக்கும் தனியே ஒரு மாளிகையும், அவருடைய மகாராணிக்காக ஒரு மாளிகையும், பின் மற்ற ராணிகள் தங்க ஒரு அந்தபுரமும் அமைக்க படுவது மரபு. ஆனால் நமக்கோ என் மாளிகையை அந்தபுரம். இதுவே உன் மாளிகையும் கூட. உனக்கென்று ஒரு மாளிகை கூட தனியே கிடையாது. இன்றில் இருந்து இங்கே தான் நீ சிறை இருக்க வேண்டும்”
“ஹா ஹா, அழகான சிறை தான். ஆனால் மேலை தேசத்தின் இளவரசராக இருந்து கொண்டு அவருடைய மணவாட்டிக்கு ஒரு மாளிகை கட்டி தரமாட்டாரா? சரியான கஞ்சனாக இருக்கிறீர்களே”
“நான் உன் விசயத்தில் மட்டும் மிகவும் வறியவன் தேவி. உனக்கென்று மாளிகை அமைத்து கொடுத்தால் உன்னை காண்பது அரிதாகி விடும். அப்படி அல்லாமல் நீ என்னுடனே இருக்க வேண்டும். என் நெஞ்சமே நீ தலை வைத்து உறங்கும் மஞ்சமாக இருக்க வேண்டும். காலையில் சூரியன் உதித்ததும் உன் திருமுகத்தை காண வேண்டும். அப்படி நான் எண்ணி இருக்க உனக்காக தனி மாளிகை கட்டி தருவேனா?”
“போங்கள் இப்படி எல்லாம் கூறாதீர்கள். எனக்கு என்னவோ போல் உள்ளது”
“எதனால் இளவரசி?”
“தங்களின் காதலை அறிந்து என் உள்ளம் பூரிக்கிறது இளவரசே”
“எனக்கும் அவ்விதமே தேவி. உன்னிடம் விசயம் பற்றி உரையாற்ற வேண்டும். தேவி இப்படி வா”, என்று கூறியவன் அவள் கை பிடித்து மேல் மாடத்துக்கு அழைத்து சென்றான்.
அங்கே பூக்களால் அலங்கரிக்க பட்டிருந்த ஒரு ஊஞ்சல் இருந்தது. அதை ஆசையாக பார்த்தவளை தூக்கி அதில் அமர வைத்தான் நரேந்திரவர்மன். பின் அவளின் அருகில் அமர்ந்து கொண்டான். பிறை மதி அவர்களை பார்த்து கொண்டிருந்தது.