வான்மதி தவிர மற்ற மூவரும் அதிர்ச்சியானார்கள். “உனக்கு என்ன பைத்தியம் பிடித்திருக்கிறதா நண்பா? என்ன கூறுகிறாய் என்று தெரிகிறதா? காலையில் தான் உனக்கு திருமணம் முடிந்திருக்கிறது. இப்போது சேர்ந்து வாழ மாட்டோம் என்று உறைகிறாய்?”, என்று கோபத்துடன் கேட்டான் சுதமன்.

“சேர்ந்து வாழ மாட்டேன் என்று உரைக்க வில்லை சுதமன். என் சகோதரி போன்ற இந்த பெண்ணுக்கு நல்ல வாழ்க்கை அமைந்தால் தான் எங்கள் வாழ்வை தொடருவேன் என்று தான் கூறினேன். அப்படி செய்யாமல் இந்த பெண்ணுக்கு மனக்காயத்தை கொடுத்து விட்டு இவள் இருக்கும் இதே நாட்டில் எங்களை பிள்ளை குட்டிகளுடன் வாழ சொல்கிறாயா? வாக்கு கொடுத்ததை ஒரு நாளும் மீற மாட்டான் இந்த நரேந்திரவர்மன். அந்த பெண் யோசிக்கட்டும். நாம் செல்லலாம். வா தேவி”, என்று திரும்பினான்.

“இளவரசே”, என்று அழைத்தாள் சாந்தா.

“என்ன சகோதரி?”

“இத்தனை பேர் கூறும் போது என் மீது தான் தவறு இருப்பதாக தோன்றுகிறது. ஆனாலும் என் தவறை பொறுத்து கொண்டு எனக்கு நல்லது நடக்க எண்ணுகிறீர்கள். அப்படி பட்ட நீங்களும், இளவரசியும் வெகு மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும். உயர்ந்த மனம் படைத்தவர் நீங்கள் என்று நான் அறிந்ததே. ஆனால் இன்று கண்கூடாக கண்டு கொண்டேன். உங்களுக்கு இடையூறாக நான் ஒரு போதும் இருக்க மாட்டேன். நான் மகிழ்ச்சியாக வாழ்வது தான் உங்களுக்கும், இளவரசிக்கும் மகிழ்ச்சி என்றால் நான் கட்டாயம் திருமணம் புரிந்து கொள்கிறேன். ஆனால் எனக்கு இளவரசி ஒரு வாக்கு தர வேண்டும்”, என்றாள்.

அவள் திருமணத்துக்கு ஒத்து கொண்டது அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. காதல் என்று மாயத்தில் மூழ்கி இருக்கும் அவள் வெளியே வந்தால் போதும் என தான் அனைவரும் நினைத்தார்கள். அதையே அவள் கூறியதும் எல்லாருக்கும் புன்னகை அரும்பியது.

வெறித்த பார்வையை விட்டு காதல் பார்வை பார்க்க ஆரம்பித்தான் சுதமன். ஆனால் அவள் கேட்க போவது என்ன வாக்கு? என்று குழப்பமாக இருந்தது.

ஆனால் வான்மதி மட்டும் சாந்தாவை  ஆராய்ச்சி பார்வை பார்த்தாள். அவளுக்கு எதுவோ சரி இல்லை என்று மட்டும் தோன்றியது.

“நீ எங்களுக்காக இந்த முடிவுக்கு வந்திருக்கிறாய் சகோதரி. அது மட்டும் அல்லாமல் என் வான்மதிக்கு நான் தான் உயிர். என் உயிரையே மீட்டு தந்திருக்கிறாய். அதனால் அவள் உனக்காக என்ன என்றாலும் செய்வாள். ஏன் மிக பெரிய மாளிகையை கூட உனக்காக கட்டி தருவாள். கேள் சகோதரி”, என்றான் நரேந்திரவர்மன்.

“பொறுங்கள் இளவரசே. அவசர படாதீர்கள்.  என்னால் அவள் கேட்கும் வாக்கை கொடுக்க முடியாமல் கூட போகலாம். இந்த உலகத்தில் செய்ய முடியாத விஷயங்களும், விட்டு கொடுக்க முடியாத உறவுகளும் உண்டு. அதனால் அவள் கேட்கும் வாக்கை அறிந்த பின்னர் தான் என்னால் அதை கொடுக்க முடியுமா, முடியாதா என்று தெரியும். தாங்கள் கூறியது போல மாட மாளிகைகளை அவளுக்காக கேட்டால் நிச்சயமாக கட்டி தருவேன் தான். ஆனால் அவள் அதை கேட்க போவதில்லை என்று என் உள் உணர்வு கூறுகிறது. முதலில் நீ கேட்ட வாக்கு என்ன சாந்தா? பின் நான் என்னால் தர முடியுமா, முடியாதா என்று கூறுகிறேன். என்ன வாக்கு என்று அறியாமல் உனக்கு சத்தியத்தை செய்து விட்டு பின்னால் அந்த தசரத மகாராஜா கலங்கியது போல் நான் கலங்க விரும்ப வில்லை”, என்று கூறி அவளுடைய புத்தி கூர்மையை நிரூபித்தாள் வான்மதி.

“கூறுகிறேன் இளவரசி. இளவரசர் என்னை சகோதரி என்று கூறி விட்டார். இனி அவரை என்னால் தவறான கண்ணோட்டத்தில் காண இயலாது. நான் செய்தது தவறு என்றும் ஒப்பு கொள்கிறேன். அதனால் தான் திருமணத்துக்கும் சம்மதிக்கிறேன். இனி என்னை மணக்கும்  மணாளனை மட்டுமே என் காதலனாக எண்ணுவேன்.  இப்பிறவியில்  எனக்கு  கிட்டாதே  தங்களுடைய  மணாளனின்  காதல்  அடுத்த  பிறவியாலாவது  எனக்கு   கிட்ட  வேண்டும். அந்த காதலை எனக்கு அடுத்த பிறவியிலாவது விட்டு கொடுப்பேன் என்று எனக்கு வரம் கொடுங்கள் இளவரசி”

மனதுக்குள் சிரித்து கொண்டாள் வான்மதி. ஆனால் சாந்தா அவ்வாறு கேட்டதும் அனைவருக்கும் கவலையாக இருந்தது. பொறுமையாக இருந்த நரேந்திரவர்மனுக்கே கோபம் வந்தது.

“அடுத்த பிறவி என்று ஒன்று உண்டா என்பதை எவருமே அறியார். ஆனால் எந்த பிறவி என்றாலும் என் வான்மதியை தவிர வேறு ஒரு பெண்ணை நினைக்க முடியுமா?”, என்று நினைத்து நரேந்திரவர்மன் உள்ளம் குமுறியது.

ஆனால் நிதானமாக இருந்த வான்மதியோ சிறு சிரிப்புடன் அங்கிருந்த ஆசனத்தில் ஒரு ராணிக்குரிய  கம்பீரத்துடன் அமர்ந்தவள் சாந்தாவை பார்த்து “இந்த வரத்தை  நான் உனக்கு  தந்து  தானே  ஆக  வேண்டும் சாந்தா. இளவரசரின் இதயத்தை  குறி பார்த்து தான் கத்தி  வீச  பட்டது. நீ இடையில்  வந்ததால்  உன் தோள்  பட்டையில்  பட்டது. அப்படி இல்லாமல் இருந்திருந்தால் இளவரசரின் இதயத்தில் பட்டு, விஷம் அவர் உயிரை குடித்திருக்கும். என்னவர் உயிருடன் இருப்பதற்கு நீ தான் காரணம் சாந்தா.

ஆனால் என்னவர் ஏழு பிறவியிலும் நான் தான் அவருடைய மணவாட்டி என்று கூறி இருக்கிறார். இப்படி பட்டவரின் காதலை அடைய நான் எண்ண பாக்கியம் செய்திருக்கிறேனோ? அவரை என்னால் இழக்க இயலுமா? உனக்காக இப்போது என் உயிரை வேண்டும் என்றாலும் தருவேன். ஆனால் என்னவரை எந்த பிறவியிலும் என்னால் விட்டு தர முடியாது. இனி பிறவிகள் உண்டா என்று கூட எனக்கு தெரியாது. ஆனால் பேருக்கு கூட என்னால் அடுத்த பிறவியில் நீ அவரை எடுத்து கொள் என்ற  வரத்தை கொடுக்க முடியாது. அதனால் நான் என் உயிரையே விட்டு விடுகிறேன். உனக்காக தருகிறேன் சாந்தா. அவருடைய மனைவியான பாக்கியமே எனக்கு போதும். இன்றே என் வாழ்வை முடித்து கொள்கிறேன். சரி தானா?”, என்று கூறி அனைவரையும் அதிர வைத்தாள் வான்மதி.

“இளவரசி ஏன் இவ்வாறு அறிவில்லாமல் பேசுகிறார்கள். இந்த பைத்தியக்கார பெண்ணுக்காக அவர்கள் உயிரையே கொடுக்க வேண்டுமா?”, என்று நினைத்தான் சுதமன்.

தன்னுடைய காதலுக்கு  நிகரான  காதலை காட்டிய  வான்மதியை நினைத்து உள்ளம் பூரித்து  போனான் நரேந்திரவர்மன். கற்பனையில் இருக்கும் அடுத்த பிறவிகளில் கூட என்னை விட்டு கொடுக்க முடியாது என்று கூறி தன் காதலை மெய்ப்பித்த தன்னுடைய தேவியை பார்த்து கொண்டே இருந்தான்.

பின் “நீ கூறியது  மிக சரியானது  தேவி. இந்த  பெண்ணுக்கு  நாம் கடமை  பட்டிருக்கிறோம். இவள் வாய் விட்டு ஒரு வரம் கேட்டும் நம்மால் அதை கொடுக்க முடியாமல் போய் விட்டது. அப்படி இருக்கும் போது இவளுக்காக உயிரை கொடுப்பது சிறந்த விஷயம் தான். ஆனால் நீ மட்டும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நீ இல்லாத இவ்வுலகில் நான் மட்டும் இருந்து என்ன பயன்? அதனால் இந்த உலகத்தை விட்டே நாம் செல்லலாம். அது தான் இவள் மனதில் ஏற்பட்டிருக்கும்  மனக்காயத்துக்கு மருந்தாகவும், என்னை காப்பாற்றியதுக்கு  நன்றி  கடனாகவும்  இருக்கும். மணம் முடித்த  இந்த நாளே  நம்முடைய  இறுதி  நாளாகட்டும்”, என்று உரைத்த  நரேந்தரவர்மன், வான்மதி அருகில்  வந்து அவளை எழுப்பி  அவளை தோளோடு  அணைத்து கொண்டான்.

அவளும் அவனை பார்த்து அழகாக புன்னகைத்தவாறே அவன் தோள்களில் சாய்ந்தாள்.

“செத்து  விடுகிறோம்”,  என்று முகத்தில்  புன்னகையுடன்  கூறிய  இளவரசனையும்,  இளவரசியையும்  வியந்து  பார்த்தாள்  சாந்தா. அவள் கண்களில்  இருந்து கண்ணீர்  வடிந்தது. இதுவல்லவோ காதல். இதுவல்லவோ நேசம். சிறந்த காதலர்கள் என்று மட்டும்  நிரூபிக்காமல் சிறந்த மனிதர்கள்  என்றும் நிரூபித்து விட்டார்கள். கெட்டாலும் மேல் மக்கள் மேல்மக்களே.

சாந்தா கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நரேந்திரவர்மனையும், வான்மதியையும் நிமிர்த்து பார்த்து கை கூப்பினாள்.

“என்னை மன்னித்து விடுங்கள் இளவரசி. தாங்களும் என்னை மன்னியுங்கள்  இளவரசே. நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க கூடிய தருணத்தில் உங்கள் நிம்மதியை கெடுத்து விட்டேன். ஒருவர் மீது உண்மையான காதலை வைப்பது என்பதை பற்றி  எனக்கு இருவரும்  விளக்கி விட்டீர்கள். காதலுக்காக எதையும் விட்டு கொடுக்கலாம் என்றும் எதற்காகவும் காதலை விட்டு கொடுக்க கூடாது என்றும் தங்கள் இருவரையும் பார்த்து புரிந்து கொண்டேன். அது மட்டும் அல்லாமல் இளவரசி, இளவரசர் மீது வைத்திருந்த காதலை புரிந்த எனக்கு இப்போது தான் எனக்கு அவர் மீது இருந்தது காதலே இல்லை என்பதும் புரிந்தது.

எனக்காக உங்கள் இன்னுயிரையும் தியாகம் செய்ய இருந்த உங்கள் இருவரையும் நான் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். இருவரும் ஒருவருக்கொருவர் இணை பிரியாமல் வாழ வேண்டும். நிச்சயமாக அதை கண்டு நான் ஆனந்த படுவேன். தங்களின் மகிழ்ச்சியான இல்வாழ்விற்கு ஒரு போதும் நான் தடையாக இருக்க மாட்டேன். என்னை சகோதரி ஆக்கி பெருமை படுத்திய இளவரசருக்கும், என் மீது கோபம் கொண்டு கொன்று போடாமல் என் நன்மையை கருதி என்னுடன் பொறுமையாக பேசிய இளவரசிக்கும் நான் வாக்கு கொடுக்கிறேன். தாங்கள் எனக்கு எந்த மணமகனை தேர்ந்தெடுத்தாலும் முழுமனதுடன் திருமணத்துக்கு சம்மதிக்கிறேன். என்னை மன்னியுங்கள்”, என்று கண்ணீருடன் கூறினாள்.

அவள் அருகில் சென்று அவள் கண்ணீரை துடைத்து விட்டாள் வான்மதி. அனைவருக்கும் நிம்மதியாக இருந்தது.