ஒரு நொடியில் இந்த புதிரை கண்டு கொண்டான். அவன் கண்கள் அங்கே இவர்களை பார்த்து கொண்டிருந்த சுதமனை நோக்கின. சுதமனோ வாழ்வையே வெறுத்து போய் எங்கேயோ வெறித்து பார்த்து கொண்டிருந்தான்.
விசாலமோ சாந்தவையே முறைத்து கொண்டிருந்தாள். “அப்படி என்றால் இந்த பெண் மனதில் இருக்கும் ஆடவன் நான் தானா? என்னை பற்றி தான் இவர்கள் இவ்வாறு தர்க்கம் செய்கிறார்களா? எண்ணற்ற கனவுகளுடன் என் கை பிடித்து வந்த வான்மதிக்கு இவ்விசயம் எத்தனை வருத்தத்தை தரும்? அது தான் இப்படி கலங்கி போயிருக்கிறாளா? எப்போது வான்மதிக்கு தெரிந்தது? இன்று தெரிவதற்கு வாய்ப்பு இல்லை. அப்படி என்றால் முன்பே இந்த சாந்தாவை பற்றி வான்மதிக்கு தெரிந்திருக்க வேண்டும்”, என்று நினைத்தவனுக்கு அன்று ஒரு நாள் வான்மதி முகத்தில் இருந்த குழப்பத்தை பற்றிய நினைவு வந்தது.
“அன்று அவள் முகம் சோர்ந்திருந்ததுக்கு காரணம் இதை பற்றிய குழப்பமாக தான் இருக்கும். பாவம் அவள். ஆனால் நான் இந்த பெண்ணுக்கு என்ன கெடுதல் செய்தேன்? இவள் மனதில் நான் எப்போது குடியேறினேன்? எந்த பெண்ணையும் நான் தப்பான பார்வை பார்த்ததில்லையே. என் பார்வையையும் என்னையும் சலன படுத்தியது என் தேவி மட்டுமே. ஆனால் வீணான எண்ணங்களை மனதில் விதைத்து கொண்ட இந்த பெண்ணின் மனதில் இருக்கும் களையை நான் எவ்வாறு கலைவேன்? அதோடு நான் உயிரையே வைத்திருக்கும் என் நண்பனின் காதலி இவள் என்று புரிந்து கொண்ட பிறகு அவளுடைய மனதை அறிந்து எவ்வளவு துடித்து போய் நிற்கிறான்? பாசத்துக்குரிய எனக்கு நெருக்கமான என் மனைவியையும், என் நண்பனையும் நான் காய படுத்தி விட்டேனா? அதோடு இந்த பெண்ணையும் சேர்த்து. ஐயோ நான் எப்போது இந்த பெண் மனதில் சலனத்தை ஏற்படுத்தினேன்? இப்போது என்ன செய்வது?”, என்று துடித்து போனான்.
“கேட்டு கொண்டீர்களா இளவரசே? இனி தேவை இல்லாத கேள்விகளை நான் கேட்கிறேன் என்று என்னை கூறுவீர்களா?”, என்று கேட்டாள் வான்மதி.
இல்லை என்னும் விதமாய் தலை அசைத்தான் நரேந்திரவர்மன்.
“இப்போது தெரிகிறதா இளவரசே, என் மனதில் இருக்கும் கலக்கம்? இவள் மனதில் இருக்கும் அந்த ஆடவன் தாங்கள் தான். இவளுடைய காதல் தங்கள் மீது தான். அது தெரிந்தும் என்னால் எவ்வாறு இப்படி உரையாடாமல் இருக்க இயலும்? சரி என் கணவனையே நீ காதலனாக நினைத்து கொள். கடைசி வரை அவனையே எண்ணி கொண்டு உன் வாழ்க்கையை வீணாக்கி கொள் என்று என்னால் கூற முடியுமா இளவரசே?”, என்று வான்மதி கேட்டதும் “வான்மதி”, என்று கர்ச்சித்தான் நரேந்திரவர்மன்.
அவன் குரலில் அனைவரும் அதிர்ச்சியானார்கள். அந்த கம்பீரமான ஆளுமையான அரட்டலில் பயத்துடன் விசாலத்தின் கைகளை பற்றி கொண்டாள் சாந்தா.
வான்மதி மட்டும் மலர்ந்த முகத்துடன் நரேந்திரவர்மனை பார்த்தாள்.
அவனுடைய கோபம் அவளுக்கு எதையோ உணர்த்தியது.
எல்லாரும் நரேந்திரவர்மன் என்ன உரைக்க போகிறான் என்பதிலே கவனம் வைத்திருந்தார்கள்.
“என்னுடைய மனைவியான நீ, இவ்வாறு பேசுவது தவறு தேவி. நாளைய மகாராணியாக ஆக போகும் உனக்கு நாவடக்கம் தேவை. எதை வேண்டும் என்றாலும் உரைக்கலாம் என்று இல்லை. எதை பேச வேண்டும் என்று யோசித்து பேசு. உறவில் மட்டும் அல்ல. என் உணர்விலும் நீ தான் கலந்திருக்கிறாய் வான்மதி. என்னை வேறு ஒரு பெண்ணுடன் விளையாட்டுக்கு கூட சம்பந்த படுத்தி பேசாதே. உன்னுடைய கலக்கம் எனக்கு இப்போது புரிகிறது. ஆனால் ஆத்திரத்தில் மதி இழக்க கூடாது. உனக்கு மட்டுமே கணவன் நான். நான் கொடுத்த வாக்குக்கு அனைவருமே சாட்சி. சாட்சி இல்லையென்றாலும் கூட உன்னை தவிர வேறு பெண் என் வாழ்வில் இல்லை. இனி ஒரு தரம் அவ்வாறு கூறாதே. மணாளனாக இருந்தாலும் சரி, காதலனாக இருந்தாலும் சரி. அது உனக்கு மட்டும் தான்”
….
“உன்னை தவிர நான் இன்னும் இரு பெண்களை அறிவேன். ஒன்று என் தாய், மற்றொன்று என் அத்தை. உங்கள் மூவரை தவிர எனக்கு இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து பெண்களும் சகோதரிகளே. இந்த பிறவியில் மட்டும் அல்ல. நான் எடுக்கும் அனைத்து பிறவிகளிலும் என் தேவி நீயே. நீ இந்த பெண்ணிடம் தர்க்கம் புரிந்தது சரி தான் தேவி. நீ கொஞ்சம் பொறுமையாக இரு. நான் அவளுக்கு புரியும் படி உரைக்கிறேன்”, என்று கூறி சாந்தா அருகில் அமர்ந்தான்.
ஒரு படபடப்புடன் அமர்ந்திருந்தாள் சாந்தா. ஆனால் முதல் வார்த்தையிலே அவளை அதிர்ச்சியை அடைய செய்தான் நரேந்திரவர்மன்.
“இதோ பார் சகோதரி. உன் நாமம் சாந்தா என்பதை கூட நான் இப்போது தான் அறிவேன். உன்னை இதற்கு முன் பார்த்தது கூட எனக்கு நினைவில் இல்லை. அப்படி இருக்கும் போது உன் மனதில் என் மீதான விருப்பம் ஏற்பட்டதற்கு நான் எவ்விதத்திலும் காரணம் அல்ல. எப்படி என்னை அறியாமல் உன் மனதில் சலனத்தை ஏற்படுத்தினேன் என்பதை நான் அறியேன். என்னை அறியாமல் எதாவது தவறு செய்திருந்தால் என்னை மன்னித்து கொள்ளம்மா”
“இளவரசே, யார் யாரிடம் மன்னிப்பை வேண்டுவது? தாங்கள் அப்படி எல்லாம் உரைக்காதீர்கள். தங்கள் மீது எந்த தவறும் இல்லை. அனைத்து தவறும் என் மீது தான். என்னை மன்னித்து விடுங்கள்”, என்று அவனை நிமிர்ந்து பார்க்காமல் உரைத்தாள் சாந்தா.
“இதோ பார் சகோதரி. இப்போது நீ செய்வது தவறு என்று என்னாலும் கூற இயலாது. ஏன் என்றால் காதல் என்பதை இப்பூவுலகில் எவராலும் எதிர்க்க இயலாது. ஆனால் என் தேவியின் கூற்று படி உனக்கு என் மீது இருப்பது காதலே அல்ல. அது ஒரு வித ஈர்ப்பு தான். இந்த தேசத்தின் இளவரசன் நான். அனைவரும் என்னை கொண்டாடுகிறார்கள். நான் சிறுவனாக இருந்த போது இங்கிருக்கும் அனைத்து பெண்களும் என்னை மகனாக எண்ணி கொஞ்சுவார்கள். ஆண்களும் அப்படியே. என் வயதில் இருக்கும் ஆண்கள் என்னை நண்பனாகவும் சகோதரனாகவும் எண்ணுவார்கள். இதையும் நான் அறிந்ததே. இது போல மற்றொரு உண்மையும் நான் அறிந்ததே. அது என்னவென்றால் உனக்கு மட்டும் அல்ல. நம் தேசத்தின் பல இளம் பெண்களின் நெஞ்சத்திலும் நான் குடியிருப்பவன் தான்”
….
“அனைத்து பெண்களிடமும் கேட்டு பார்த்தால் என்னை போல் ஒருவன் தான் மணாளனாக வர வேண்டும் என்று கூறுவார்கள். அவர்களுக்கு என் மீது ஒரு வித ஈர்ப்பு. என்னுடைய அழகின் மீது, கம்பீரத்தின் மீது காதல். நான் பவனி வந்தால் காத்திருந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை. இவை அனைத்தும் எல்லா பெண்களிடமும் உண்டு. அது போல தான் உன் மனதில் இருப்பதும். உன் கண்களுக்கு இளவரசனாக அறிமுகமான என் மீது ஈர்ப்பை கொண்டிருப்பது தவறு அல்ல. ஏன் என் வான்மதி கூட தான் அவளறிந்த அந்த ஸ்ரீராம சக்கரவர்த்தி மீது தீரா காதல் கொண்டு அவனை போல மணாளன் வேண்டும் என்று காத்திருந்தாள். அவரை போல் நான் இருப்பேன் என்று வாக்களித்ததால் என் மீது காதல் கொண்டு திருமணமும் புரிந்தாள். அப்போது அந்த ராம பிரான் மீது வான்மதி வைத்திருப்பது காதலா? அல்ல சகோதரி. அது ஒரு வித பக்தி. ஒரு வித தேடல். அந்த விநாயகர் அன்னை போல ஒரு மணப்பெண் வேண்டும் என்று கூறினார் அது போல தான். இப்படி ஒரு துணை வேண்டும் என்ற தேடல் தான் அது. அதை போய் காதல் என்று கூற முடியாது”
…..
“என்னை போன்ற ஒரு கணவன் கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டிய நீ என்னையே வேண்டும் என்று எண்ணியது தான் விதி. உனக்கென்று இருப்பவன் உன்னை விரைவில் தேடி வருவான் அம்மா. அவன் மீது தான் உனக்கு ஒரு பற்று வரும். அந்த வேறுபாடை நீ அப்போது அறிந்து கொள்வாய். இதற்கு மேல் உனக்கு விளக்கமாக எப்படி கூற என்று தெரியவில்லை. ஆனால் உன் மனது என்னால் சலன பட்டிருக்கிறது என்றால் அதற்கு எனக்கும் பங்கு உண்டு. உன் மனக்காயத்துக்கு என்ன மருந்து என்று தெரியவில்லை. இந்த துயரில் இருந்து நீ வெளிவந்து, உண்மை எது என ஆராய்ந்து பார்க்க வேண்டும். உன் தவறை திருத்தி கொண்டால் உனக்கு ஒரு நல்ல மணாளனை தேடி நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுப்பது என் பொறுப்பு. ஆனால் நான் உன்னை கட்டாய படுத்தவும் முடியாது அல்லவா. அதனால் நீ இந்த பைத்தியக்காரத்தனத்தையே சரி என்று எண்ணி இளவரசியிடம் கூறியது போல் கடைசி வரை தனிமரமாக தான் இருப்பேன் என்று உரைத்தால் உனக்கு கொடுமை செய்ததாக எண்ணி அதற்கு முழு பொறுப்பை நாங்கள் ஏற்று கொள்கிறோம். நீ தனிமரமாக இருந்தால் உனக்கு துணையாக நானும் என் தேவியும் கடைசி வரை தனியாகவே வாழ்ந்து கொள்கிறோம். உனக்கு ஒரு நல்லது நடக்காமல் எங்கள் வாழ்வு சிறக்காது. அது வரை நாங்களும் சேர்ந்து வாழ மாட்டோம். இது வான்மதி மீது நான் கொண்ட காதல் மீது சத்தியமாக உரைக்கிறேன்”, என்று கூறி எழுந்தான்.