அனைவரின் கவலையையும் சரி செய்வது போல இரண்டு மணி நேரத்தில் கண் விழித்து விட்டாள் சாந்தா.

கண் விழித்ததும் முதலில் சாந்தா கண்டது கண்களில் நீருடன் தன்னையே பார்த்து கொண்டிருக்கும் வான்மதியை தான்.

“இளவரசி”, என்று உச்சரித்து எழுந்து கொள்ள பார்த்தாள். “அப்படியே படுத்திரு சாந்தா”, என்று கூறி அவள் தலையை வருடி விட்டாள் வான்மதி.

அதை வியந்து பார்த்த சாந்தா “நான் இளவரசியின் மணாளனின் மீது காதல் கொண்டிருந்தது தெரிந்தால் இப்படி என்னை பரிவுடன் நோக்குவாரா?”, என்று எண்ணி கொண்டாள்.

பின் அந்த அறையை சுற்றி அவள் பார்வை சென்றது.

மகாராஜாவும், மகாராணியும் இளவரசரின் உயிரை காப்பாற்றியதற்கு நன்றி  கூறி விட்டு சென்று விட்டார்கள்.

வாசுதேவச்சக்கரவர்த்தியும், அருந்ததியும் தங்கள் பெண்ணின் வாழ்க்கையை காப்பாற்றி தந்ததாக கூறி கண்ணீருடன் நன்றி கூறி விடை பெற்றார்கள்.

வைத்தியர் “இரண்டு நாள் இந்த மருந்தை கொடுங்கள்”, என்று விசாலத்திடம் கூறி விட்டு சென்று விட்டார்.

அனைவரும் சென்ற பின்னர் இவர்கள் ஐவர் மட்டும் இருந்தார்கள்.

இப்போது சாந்தாவின் பார்வை நரேந்திரவர்மன் மீது காதலாக இருந்தது. அதை வான்மதி விரும்ப வில்லை. “காதல் வருவது இயல்பு தான். ஆனால் என் கண் முன்னே என் கணவனை மற்றொரு பெண் தவறான பார்வை பார்த்தால் என்னால் எப்படி பொறுத்து கொள்ள முடியும்?”, என்று நினைத்தவளின் மனசாட்சி “அவள் குறுக்கே வர வில்லை என்றால் உன் கணவனே உனக்கு கிடைத்திருக்க மாட்டானே”, என்று கூறியது.

அதில் வாயடைத்து போனாள் வான்மதி. வெறுப்புக்கும், நன்றி உணர்ச்சிக்கும் இடையில் அவள் மனது ஊஞ்சல் ஆடியது.

“ஆனாலும் நன்றி கடனுக்காக என் கணவனை அவள் இப்படி பார்ப்பதை பொறுக்கவும் முடியாது. இளவரசரையே நினைத்து கொண்டு அவள் வாழ்வை அவள் அழிப்பதையும் பார்த்து கொண்டிருக்கவும் முடியாது. இதற்கு இன்றே முடிவு கட்ட வேண்டும். என் வார்த்தை இந்த பெண்ணின் மனதை காய படுத்தினாலும், முடிவில் அவள் நிம்மதியாக இருப்பாள்”, என்று எண்ணி கொண்டு பேச தக்க தருணத்துக்காக காத்திருந்தாள் வான்மதி.

சாந்தா அருகில் சென்ற நரேந்திரவர்மன் “எதனால் நீ இப்படி செய்தாய் பெண்ணே? உன் உயிரை கொடுத்து தான் நான் உயிர் வாழ வேண்டுமா? எனக்காக இப்படி நீ சாக தெரிந்தாயே? இந்த வருத்தம் எல்லாம் எனக்குள்ளே இருக்கிறது. ஆனால் நான் உனக்கு நன்றியும் உரைக்க வேண்டும். எனக்கு எதாவது ஆகி இருந்தால் என் வான்மதியும் இந்த உலகை விட்டு சென்றிருப்பாள். அவளுக்காகவாது நீ என்னை காப்பாற்றியதுக்கு நான் உனக்கு நன்றி கூற தான் வேண்டும். உனக்கு என்னுடைய நன்றிகள் அம்மா”, என்று கரம் கூப்பினான்.

“இளவரசே தாங்கள் என்னை பார்த்து கரம் குவிப்பதா? கூடவே கூடாது”, என்று மெது குரலில் கூறினாள் சாந்தா.

“இளவரசர் கூறியதில் தவறில்லை சாந்தா. உனக்கு எத்தனை முறை நன்றி கூறினாலும் தகும். அந்த அளவுக்கு உயர்ந்தவள் நீ. உனக்கு நாங்கள் கடமை பட்டிருக்கிறோம். இளவரசர் மீது நீ வைத்திருக்கும் அன்பு அபூர்வமானது தான். அவருக்காக நீ உயிரை விட துணிந்தாயானால் அது எப்படி பட்டது என்று புரிகிறது. ஆனால் இவ்வளவு பெரிய காரியம் செய்த நீ, உண்மையான காதலுக்கும், ஈர்ப்புக்கும் வேறுபாடு தெரியாத பெண்ணாக உன் வாழ்க்கையை அழித்து கொள்ள பார்க்கிறாயே”,  என்று கூறினாள் வான்மதி.

அனைவரும் அதிர்ச்சியாக பார்த்தார்கள். “இளவரசிக்கு உண்மை தெரியுமா?”, என்று திகைத்து போனான் சுதமன்.

“இப்படி உண்மையை இந்த விசாலம் கூறி விட்டாளே?”, என்று விசாலத்தை முறைத்தாள்  சாந்தா.

“இளவரசி பிரச்சனையை ஆரம்பித்து விட்டார்கள். கட்டாயம் முடிவு கிடைக்கும்”, என்று எண்ணி கொண்டாள் விசாலம். ஏனென்றால் விசாலத்துக்கும் சாந்தா இளவரசரை பார்க்கும் பார்வையில் உடன்பாடு இல்லை. அவளும் ஒரு கணவனின் மனைவியாயிற்றே. ஒரு பெண்ணாக சாந்தாவின் காதலை மதிக்க தெரிந்த அவளுக்கு ஒரு மனைவியாக அவள் பார்வையை சகிக்க முடிய வில்லை.

“தேவி, நீ என்ன கூறுகிறாய்? இந்த பெண் காதலிக்கிறாளா? யாரை காதல் செய்கிறாள்? உனக்கு எப்படி தெரியும்? நீ இவளை முன்னே அறிவாயா?”, என்று கேள்விகளை எழுப்பிய நரேந்திரவர்மனுக்கு “இந்த பெண் வேறு யாரையோ காதலித்தால் என்னுடைய நண்பன் காதல் எப்படி நிறைவேறும்?”, என்ற கவலை வந்தது.

சுதமனோ அவர்களின் உரையாடலை கவனித்து கொண்டு இரும்பென நின்றிருந்தான்.

“ஆம் இளவரசே. இந்த பெண் ஒருவரை காதலிக்கிறேன் என்று பிதற்றி கொண்டிருக்கிறாள்”, என்றாள் வான்மதி.

“வான்மதி, நீ இவ்வாறு உரைப்பது சரியானது அல்ல. காதல் என்பது அவரவர் மனதை பொறுத்தது. நீ அவள் மனதை புண் படுத்தாதே”, என்று கண்டிப்புடன் கூறினான் நரேந்திரவர்மன்.

“என்னை மன்னித்து விடுங்கள் இளவரசே. நான் உண்மையை தான் கூறினேன். என் கூற்றில் தவறு ஒன்றும் இல்லை”, என்றாள் வான்மதி.

“என்னுடைய காதல் ஒன்றும் பிதற்றல் இல்லை இளவரசி. உண்மையானது தான்”, என்று நிமிர்வுடனே கூறினாள் சாந்தா.

“அப்படியா? சரி உன் காதல் ஈடேறுமா? நீ உன் மனதில் நினைத்திருப்பவர் உன்னை அறிவாரா? அவர் மனதில் நீ இருக்கிறாயா?”, என்று கேட்டாள் வான்மதி.

“தேவி நீ ஏன் இப்போது இவ்வாறு எல்லாம் கேள்வி எழுப்புகிறாய். இவளை பற்றி உனக்கு என்ன தெரியும்? இந்த பெண் காதலிப்பவர் யார்? எதனால் இவளுடைய காதல் நிறைவேறுமா என்று கேட்கிறாய்? அது மட்டும் அல்லாமல் உடல் நிலை சரி இல்லாமல் இருப்பவளிடம் இந்த உரையாடல் தேவைதானா?”, என்று கேட்டான் நரேந்திரவர்மன்.

“தேவை தான் இளவரசரே. இப்போது கூறினால் தான்  அவள் சரி எது தவறு எது  என்று யோசிப்பாள். காயத்துக்கு சிகிச்சை செய்வது போல கடினமாக என் வார்த்தைகள் இருந்தாலும் அது இந்த பெண்ணுக்கு நன்மை மட்டும் தான் பயக்கும். இப்போது நான் பேசவில்லை என்றால் இந்த பெண் நிறைவேறாத ஆசையை எண்ணி அவளுடைய வாழ்க்கையையே நாசமாக்கி கொள்வாள்”

“அப்படியா? எதனால் அப்படி? அழகும் குணமும் நிறைந்த இந்த பெண்ணை மறுக்கும் அந்த ஆடவன் யார்? என்னிடம் கூறு நானே இவளை அவனுக்கு திருமணம் செய்து வைக்கிறேன். என் உயிரையே காத்து தந்திருக்கிறவளுக்கு என் தலைமையிலே திருமணம் நடக்கும்”, என்று நரேந்திரவர்மன் கூறியதும் சாந்தா முகம் ஒளிர்ந்தது. மற்ற மூவரின் முகமும் கறுத்தது.

“அப்படியா? இவள் மனதில் இருக்கும் அவனுக்கே இவளை மனம் முடித்து வைப்பீர்களா? அவனுக்கு வேறு திருமணம் ஆகி இருந்தால்?”, என்று கேள்வி எழுப்பினாள் வான்மதி.

“தேவி என்ன கூறுகிறாய்? இவள் மற்றொரு பெண்ணின் கணவன் மீதா காதல் கொண்டிருக்கிறாள்?”

“ஆம். ஆனால் அவன் மற்றொரு பெண்ணுக்கு கணவனாக மாறும் முன்னே காதல் கொண்டிருக்கிறாள்”

“ஓ, அப்படி என்றால் என்ன செய்வது? பெண்ணே, உன்னை நினையாமல் வேறு பெண்ணை மணந்த அவனை ஏன் நீ நினைக்கிறாய்? இப்போது அவனுக்கு மணமாகி விட்டதென்றால் நீ வேறு ஆடவனை மணந்து கொள்ளலாமே”

“அது என்னால் இயலாது இளவரசே. தற்போது கூறினீர்களே? தங்களுக்கு எதாவது நடந்து விட்டால் இளவரசியும் உயிரையே விட்டு விடுவார் என்று. அது எதனால்? இருவருக்கும் இடையில் இருக்கும் காதலினால் தானே அவ்வாறு கூறினீர்கள்? நான் மட்டும் என் காதலை மறக்க வேண்டுமா?”, என்று கேட்டு அவனையே வாயடைக்க வைத்தாள் சாந்தா.

“நீ கேட்ட கேள்வியிலே விடை இருக்கிறது சாந்தா. இருவருக்கும் இடையில் இருக்கும் காதலினால் தானே ஒருவருக்கொருவர் உயிர் விடுவோம். ஆனால் உன் மனதில் மட்டும் உள்ள காதல் என்ன நன்மை பயக்கும்? உன் மனதில் இருப்பவருக்கு உன்னை போன்ற ஒரு பெண் இருப்பதே தெரியாதே”, என்றாள் வான்மதி.

இப்போது சாந்தா பதில் கூற முடியாமல் திணறினாள். ஆனாலும் வான்மதியை நேருக்கு நேராக பார்க்க முடியாமல் “என்னுடைய காதல் ஒருதலை காதல் தான். ஒரு தலை காதல் தவறு என்று யாராலும் கூற முடியாதே?”, என்றாள்.

“ஏன் கூற முடியாது? நான் கூறுவேன். ஒரு தலை காதல் தவறு தான். அடுத்தவர் மனதில் என்ன உள்ளது, யார் இருக்கிறார்கள் என்று அறியாமல் அவர்களை தன்னுடைய மனதில் நினைப்பது அந்த ஆண்டவன் மீது கொண்ட காதல் போல தான். அது ஒரு காலும் நிறைவேறாது. அது மட்டும் அல்லாமல் அந்த ஆண்டவனை பற்றி நாம் கேள்வியுறும் போது நமக்கு தோன்றுவது ஒரு ஈர்ப்பும் பக்தியும் தானே தவிர காதல் இல்லை. காதல் என்பது உணர்வு பூர்வமானது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் வரும் ஒரு உன்னத உணர்வு. இரு பக்கமுமே அந்த உணர்வு இருக்க  வேண்டும். உன் மனதில் அந்த ஆடவன்  மீது இருப்பது  பக்தியே  தானே தவிர காதல் அல்ல சாந்தா”

“இல்லை நீங்கள் வேண்டும் என்றே என்னை வஞ்சிக்க நினைக்கிறீர்கள். நான் தங்களுக்கு எதுவும் கெடுதல் செய்ய வில்லையே. பிறகு ஏன் என் மனதை கூறு போடுகிறீர்கள்? என் மனதில் அவரையே நினைத்து பூஜிப்பது தவறா? என் காதலையே எண்ணி கொண்டு வாழ்வேன் என்று எடுத்த முடிவு தவறா? என்னை என் போக்கில் போக விடுங்கள் இளவரசி. என் காதலை மட்டும் குறை கூறாதீர்கள்”, என்றாள் சாந்தா.

மனதுக்குள் “இளவரசிக்கு என் காதல் தெரிந்து விட்டதே. என்ன செய்ய போகிறார்களோ?”, என்ற பயம் இருந்தாலும் தன்னுடைய காதலை இளவரசி குறை கூறுவதை சாந்தா விரும்ப வில்லை. அதனால் தைரியமாகவே எதிர்த்து பேசினாள்.