பின் புரோகிதர் கையில் மற்றொரு நாணை எடுத்து கொண்டு இருவரையும் வெளியே அழைத்து சென்றார்.

அனைத்து மக்களும் உள்ளே வந்து இளவரசன் இளவரசி திருமணத்தை காண இயலாதே. அதனால் வெளியே வந்து அனைத்து மக்களின் முன்னிலையில் அந்த நாணை மட்டும் இளவரசன் இளவரசி கழுத்தில் கட்ட வேண்டும்.

அதற்காக தான் இருவரையும் அழைத்தார். மாலையும் கழுத்துமாக வந்த மணமக்களை மக்கள் ஆர்வமாக பார்த்தார்கள்.

ஒரு வித விரக்தியோடு அவர்களை பார்த்து கொண்டிருந்தாள் சாந்தா. அப்போது தான் நரேந்திரவர்மன் மீது கத்தி வீச குறி பார்த்து கொண்டிருந்தான் செங்கல்வராயன் அனுப்பிய வீரன். அனைவரும் மனமக்களையே பார்த்து கொண்டிருந்ததால் அவனை ஒருவரும் கவனிக்க வில்லை.

திருமணத்துக்கு முன்பே நரேந்திரவர்மனை கொலை செய்ய தான் ஆணையிட்டிருந்தான் செங்கல்வராயன். ஆனால் சாதாரண மனிதனான அவனால் ஆலயத்தின் உள்ளே பிரவேசிக்க முடிய வில்லை. அதனால் தான் வெளியே வந்தவுடன் கத்தியை வீச தருணம் பார்த்தான்.

வானத்தை பார்த்தும், அங்கு கூடி இருந்த மக்களை பார்த்தும் அந்த நாணை உயர்த்தி காட்டிய புரோகிதர் “இளவரசி கழுத்தில் இதை அணிவியுங்கள் இளவரசே”, என்று கூறி அவன் கரத்தில் கொடுத்தார்.

சிறு புன்னகையோடு அதை பெற்று கொண்டவன் அவள் கழுத்தில் கட்டுவதற்காக அவளை நோக்கி திரும்பினான்.

ஆனால் அந்த காட்சியை காண முடியாமல் வேறு பக்கம் பார்த்தாள் சாந்தா. மங்கள நாணை வான்மதி கழுத்தில் கட்டி முடித்து விலகும் போது தான் அவன் கத்தியை வீசினான்.

ஆனால் மணமக்களை காணாமல் வேறெங்கோ பார்த்து கொண்டிருந்த சாந்தா கண்ணில் அந்த கத்தி வீசியவனும் இளவரசரை நோக்கி வந்து கொண்டிருந்த கத்தியும் பட்டது.  அந்த கத்தி நரேந்திரவர்மன் மார்பை துளைக்கும் முன் இடையில் புகுந்து அந்த விஷம் தடவிய கத்தியை தன் தோள்களில் வாங்கி கொண்டாள் சாந்தா.

அனைவரும் அதிர்ச்சியில் உரைத்து போனார்கள்.  ஒரு பக்கம் மக்கள் விலகி ஓடினார்கள். ஆண்கள் அந்த கத்தி எறிந்தவனை பிடித்து வைத்தார்கள்.

நிலை குத்தி போய் இருந்த வான்மதி சாந்தா தரையில் விழும் முன் தாங்கி கொண்டாள்.

மற்றொரு பக்கம் விசாலம் வந்து பிடித்து கொண்டாள். கத்தி எறிந்தவனை நரேந்திரவர்மன் அருகில் கொண்டு வந்தார்கள். “யார் வீச சொன்னது?”, என்று கேட்டதற்கு அவன் “செங்கல்வராயன் தான் இளவரசரை கொல்ல சொன்னார்”, என்று கூறி விட்டான்.

“அவனை சிறையில் அடையுங்கள். பிறகு  தண்டனை வழங்க படும்”, என்று கட்டளையிட்டு விட்டு “அரண்மனைக்கு  இந்த பெண்ணை தூக்கி செல் சுதமன். வைத்தியரே இந்த பெண் பிழைக்க வேண்டும்”, என்று உத்தரவிட்டான்.

அவன் சொல்லிய படி சுதமன், சாந்தாவை தன்னுடைய கைகளில் தூக்கி கொண்டான். “இளவரசரை காப்பாற்றி விட்டோம்”, என்று நிம்மதியாக நினைத்து நரேந்திரவர்மனையே பார்த்து கொண்டிருந்தாள் சாந்தா.

நரேந்திரவர்மனின் கண்களில் இருந்த தவிப்பு சாந்தாவுக்கு ஆறுதலாக இருந்தது. அதையே எண்ணி கொண்டிருக்கும் போது தன் முகத்தில் ஏதோ நீர் துளி விழுவதை கண்டு நிமிர்ந்து பார்த்தாள்.

அவளை தூக்கி கொண்டு நடந்த சுதமன் தான் கண்ணீர் சிந்தி கொண்டிருந்தான். அதிச்சியாக அவனை பார்த்த சாந்தா  அப்படியே மயங்கி போனாள்.

சாந்தாவை, சுதமன் தூக்கி சென்ற பிறகும் அதே இடத்தில் அப்படியே அமர்ந்திருந்தாள் வான்மதி. அவள் தேகம் நடுங்கி கொண்டிருந்தது. அவள் இதயம் தாறுமாறாக துடித்தது.

“தேவி”, என்று அழைத்து கொண்டே அவளை தூக்கி நிறுத்தினான் நரேந்திரவர்மன்.

எழுந்து அவன் எதிரே நின்றவள் அவனையே இமைக்காமல் பார்த்தாள். அவள் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.

“ஒரு நிமிடம் அந்த பெண் குறுக்கே வரவில்லை என்றால் இந்நேரம் என்னவாகி இருக்கும்?”, என்று நினைத்து பார்த்து அவள் இதயம் நடுங்கியது.

அவளுடைய அதிர்ச்சியை வைத்தே அவள் மனநிலையை அறிந்த நரேந்திரவர்மன் அவளை ஆதரவாக அணைத்து கொண்டான்.

அவனுக்கும் நடந்து முடிந்ததில் அதிர்ச்சியாக தான் இருந்தது. இப்படி பட்ட கொலை முயற்சிகள் நடக்கும் தான். அப்படி அந்த கத்தி அவன் மீது பட்டிருந்தால்  வான்மதி உயிருடன் இருக்க மாட்டாள் என்பது அவனுக்கு தெரியும் தான். அவ்வாறு நிகழாதது ஒரு நிம்மதி என்றால் தனக்காக உயிரையே கொடுக்க துணிந்த அந்த பெண்ணின் செயல் அவனை மெய் சிலிர்க்க வைத்தது.

“அவள் மட்டும் அப்படி செய்ய வில்லை என்றால் என்னவாகி இருக்கும். ஆனாலும் அவள் எதற்காக இவ்வாறு செய்தாள்? ஒரு நாட்டின் இளவரசன் மீது இந்த அளவு பக்தி வைத்திருப்பார்களா? என்னை உயிரினும் மேலாக மதிக்கிறார்களா?”, என்று நினைத்து அவன் மனம் சிந்தனையில் இருந்தது.

வான்மதியும் அதே எண்ணத்தில் தான் இருந்தாள். ஆனால் அவளுக்கு தெரியும் நரேந்திரவர்மனை தவிர வேறு யார் அந்த இடத்தில் இருந்திருந்தாலும் சாந்தா தன்னுடைய உயிரையே இழக்க துணிய மாட்டாள் என்று. “இப்படி ஒரு காரியத்தை செய்து தன்னுடைய காதலை நிரூபித்து விட்டாளா? என்னுடைய வாழ்க்கையை, என்னுடைய உயிரான என் மணாளனை எனக்கு காப்பாற்றி தந்திருக்கிறாளே? இப்போது நான் அவளுக்கு என்ன கைம்மாறு செய்ய முடியும்? எனக்கு ஏன் இந்த நிலை? கடவுளே அந்த பெண் பிழைக்க வேண்டும். அவளுக்கு எதாவது ஆனால் என்னால் நிம்மதியாக இருக்க முடியாது”, என்று கலங்கி கொண்டிருந்தாள்.

“திருமணம் முடிந்து விட்டதே. நாங்கள் சென்று அந்த பெண்ணை பார்க்க போகிறோம்”, என்று புரோகிதரிடம் சொன்னான் நரேந்திரவர்மன்.

“இல்லை இளவரசே. இன்னும் சடங்குகள் முடிவடைய வில்லை. தங்களுடைய அங்கவஸ்திரம் இளவரசியின் முந்தானையில் பொதிந்து வைக்க பட்டுள்ளது. ஈசன் முன்னிலையில் அது பிரிக்க படாமல் தாங்கள் எங்கும் நகர கூடாது. அந்த சடங்கு ஒன்று தான் மீதம் இருக்கிறது. அது முடிந்தவுடன் தாங்கள் செல்லலாம்”, என்றார் புரோகிதர்.

“புரோகிதர் சொல்வதை கேள் நரேந்திரா. அந்த பெண்ணை வைத்தியர் கவனித்து கொள்வார். இந்த சிறு சடங்கையும் முடித்து விட்டு நாம் அங்கு செல்லலாம். ஆலயத்திற்குள் வா”, என்று கூறினார் இந்திரவர்மர்.

“வா வான்மதி”, என்று கூறி அவளை கை அணைப்பில் அழைத்து சென்றான் நரேந்திரவர்மன்.

உள்ளே சென்றதும் சில மந்திரங்களை கூறிய புரோகிதர் அவர்கள் முடிச்சை அவிழ்த்தார். பின் ஈசனை வணங்கி விட்டு வெளியே வந்தார்கள்.

திருமணத்துக்கு பின்  அலங்கரிக்க பட்ட ரதத்தில் இளவரசனும் இளவரசியும் அரண்மனைக்கு பிரவேசிப்பார்கள்.  ஆனால் இப்போது இருந்த சூழ்நிலையில் என்ன செய்வது?, என்று அனைவருக்கும் குழப்பமாக இருந்தது.

அவர்கள் குழப்பத்தை கண்ட புரோகிதர், “இப்போது இறைவனுக்கு வழிபாடு ஒழுங்காக நடை பெற வில்லை மகாராஜா. இளவரசனும், இளவரசியும் மாலை நடக்கும் வழிபாட்டில் கலந்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் ரத ஊர்வலம் நடக்கட்டுமே”, என்றார்.

அது சரியான யோசனையாக பட்டதால் “அப்படியே ஆகட்டும் புரோகிதரே. இப்போது என் மகனுக்காக உயிரையே கொடுக்க துணிந்த அந்த பெண்ணை நாங்கள் கவனித்தாக வேண்டும். வாருங்கள் அரண்மனைக்கு செல்லலாம்”, என்று கூறி விட்டார் இந்திரவர்மர்.

அரண்மனையில் உள்ள ஒரு அறையில் சாந்தாவை கிடத்தி விட்டு அருகிலே நின்றான் சுதமன். சாந்தா அருகில் அமர்ந்து அவள் தலையை வருடி விட்டு கொண்டிருந்தாள் விசாலம்.

வைத்தியர் சாந்தா மீது சொருகி இருந்த கத்தியை எடுத்தவர், அதில் ஒரு பொடியை தூவினார். பின் சுதமனிடம் திரும்பி “விசம் தடவிய கத்தியை வீசியிருக்கிறார்கள் சேனாதிபதி. அதனால் ஆபத்து அதிகம். இப்போது விசம் உள்ளே இறங்காதவாறு மருந்து தூவி இருக்கிறேன். ஆனால் ஏற்கனவே உள்ள சென்ற நஞ்சு நீங்க மருந்து கொடுக்க வேண்டும். நான் மூலிகை அரைத்து கொண்டு வருகிறேன். அதுவரை கவனித்து கொள்ளுங்கள்”, என்று கூறி சென்று விட்டார்.

அந்த அறையிலே குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான் சுதமன். அப்போது தான் அனைவரும் வந்தார்கள்.

“வைத்தியர் என்ன கூறினார் சுதமன்?”, என்று கேட்டார் வராக சித்தர்.

“விசம் தடவிய கத்தியை வீசியிருக்கிறான் அந்த கயவன். அது ஆழமாக பதிந்து விட்டதாம் சித்தர் ஐயா. விசம் மேலும் இறங்காமல் இருக்க மூலிகை பொடியை தூவி இருக்கிறார். நச்சு முறிவை எடுக்கும் மூலிகையை அரைத்து கொண்டு வர போயிருக்கிறார். ஆபத்து கொஞ்சம் அதிகம் தான் என்கிறார்”, என்றான் சுதமன்.

நரேந்திரவர்மனுக்கும் கவலையாக இருந்தாலும் சுதமனை உற்று கவனித்தான். சுதமன் கண்களில் இருந்த வலி நரேந்திரவர்மனை சிந்தனைக்குள்ளாக்கியது. “இவள் தான் இவனுடைய காதலியா?”, என்று நினைத்தவனுக்கு மனதுக்குள் மகிழ்ச்சியாக இருந்தது. “இவனுக்காகவேனும் இந்த சகோதரி பிழைத்து வர வேண்டும்”, என்று எண்ணி கொண்டான்.

மயங்கி கிடந்த சாந்தாவை வெறித்து பார்த்த வான்மதியோ அவள் அருகில் சென்று அவள் கைகளை இறுக்கி பிடித்து கொண்டாள். “உனக்கு ஒன்றுமே ஆகாது”, என்று மனதுக்குள் கூறி கொண்டாள்.

பின் வைத்தியர் வந்து நச்சு முறிவை கொடுத்து விட்டு இரண்டு மணி நேரம் கெடுவை வைத்தார்.