சுதமன் நண்பன் தோளில் தட்டி கொடுத்து வான்மதி பக்கம் பார்க்க சொல்லி கண்ணை காட்டினான். அவள் கண்களால் நரேந்திரவர்மனை திருடி கொண்டிருந்தாள்.
போதை ஏறியவன் போல அவனும் அவளை பார்வையிட ஆரம்பித்தான்.
இரண்டு மகாராஜாக்களும் தாம்பூலத்தை மாற்றி கொண்டார்கள்.
நரேந்திரவர்மன் காதில் “நானும் ஒரு பெண் மீது காதல் கொண்டேன் மகனே. ஆனால் அவள் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவள். அவளை நான் மணக்க அப்போது மகாராஜாவாக இருந்த என் தந்தை ஒப்பு கொள்ள வில்லை. எனக்கு அரச குடும்பத்தை சேர்ந்த பெண்ணை நிச்சயம் செய்தார். அதை அறிந்த என் காதலி இறந்து போனாள். அந்த கொடுமையைத் தாங்க முடியாமல் தான் அரச வாழ்வும் வேண்டாம் அரியாசனமும் வேண்டாம் என்று கூறி என் சகோதரனை ராஜாவாக்கி விட்டு இந்த துறவறத்தை மேற்கொண்டேன். இன்று உன் உரையை கேட்டு நான் மகிழ்ந்து போனேன்”, என்றார் வராக சித்தர்.
“பெரிய தந்தையே தங்கள் வாழ்க்கையிலும் ஒரு காதல் இருந்ததா? கவலை கொள்ளாதீர்கள். அது தான் ஒரு அரச குமாரனின் விதி. ஒரு உண்மையை நான் கூறியே ஆக வேண்டும். வான்மதி இளவரசியாக இல்லாமல் சாதாரண குடிப்பெண்ணாக இருந்திருந்தால் எனக்கும் தங்கள் நிலைமை தான் வந்திருக்கும். அவள் சாதாரண பெண்ணாக இருந்திருந்தால் தந்தை அவளை மணக்க மறுத்திருப்பார். நானும் துறவறம் மேற்கொண்டிருப்பேன். கடவுள் காப்பாற்றினார்”, என்றான் நரேந்திரவர்மன்.
“உந்தன் நல்ல மனதுக்கு நீ மகிழ்ச்சியாக இருப்பாய் நரேந்திரவர்மா”, என்று கலங்கிய கண்களுடன் ஆசிர்வாதம் கூறினார் வராக சித்தர்.
அதன் பின் “விருந்து ஏற்பாடு செய்ய பட்டிருக்கிறது. மக்கள் விருந்துண்டு மணமக்களை வாழ்த்த வேண்டும். அது மட்டும் அல்லாமல் நாளை உங்கள் இளவரசி மேலை தேசத்துக்கு மணப்பெண்ணாக அழைத்து செல்லப்பட இருக்கிறாள். இன்றில் இருந்து ஆறாவது நாள் மேலை தேசத்தில் வைத்து திருமணம் நடை பெறும். குடிமக்கள் அனைவரும் உங்கள் இளவரசியின் மணக்கோலத்தை கண்டு கழிக்க வேண்டும். இப்போது விருந்துண்ண செல்லுங்கள்”, என்று உத்தரவிட்டார் மகாராஜா வாசுதேவச்சக்கரவர்த்தி.
விசாலமும் வந்திருந்த பெண்களுடன் உணவருந்த எழுந்த போது அவளை அழைத்தாள் வான்மதி. சந்தோசத்துடன் வான்மதியுடன் அவளுடைய அறைக்கு சென்றாள் விசாலம்.
“ஏய் விசாலம். என்னிடம் கூற வேண்டும் என்பதையே மறந்து போனாயா? உன் மேடிட்ட வயிறை பார்த்து தான் நீ பிள்ளை உண்டாகி இருப்பதை அறிந்து கொள்ள வேண்டுமா?”, என்று கேட்டாள் வான்மதி.
தோழியின் அலங்காரத்தை ரசித்து கொண்டிருந்த விசாலம் “தாங்களோ இளவரசி? அது மட்டும் அல்லாமல் நான் அந்நிய தேசத்துக்கு அல்லவா சென்று விட்டேன். பின் எப்படி இளவரசி தங்களிடம் கூற இயலும்?”, என்று வினவினாள்.
“அதுவும் சரி தான். ஆனால் நான் மேலை தேசம் வந்த பிறகு நீ என்னுடனே தான் இருக்க வேண்டும் புரிந்ததா?”
“நான் தங்களுடன் இருக்க சம்மதம் தான். ஆனால் இளவரசர் கோபித்து கொள்ள போகிறார்”
“போ விசாலம். நீயும் கேலி செய்கிறாயே. உன் கணவரும் உன்னை விட்டு பிரிய மாட்டார் என்று உன் வயிறை பார்த்தாலே தெரிகிறது. சரி எத்தனை மாதம்?”
“ஆறு முடிய போகிறது இளவரசி”
“நல்லது. நீ நன்றாக இருக்கிறாய் தானே? உன் கணவர் உன்னை அன்பாக பார்த்து கொள்கிறாரா?”
“இளவரசர் இருக்கும் தேசத்தில் ஆண்கள் பெண்களை துன்ப படுத்த முடியுமா என்ன? என் கணவர் என்னை கண்ணுக்குள் வைத்து பார்த்து கொள்கிறார் இளவரசி”
“மகிழ்ச்சியாக இருக்கிறது விசாலம். சரி இன்று நீ என்னுடன் தான் உணவு உண்ண வேண்டும். புரிந்ததா?”
“மன்னித்து விடுங்கள் இளவரசி. சாந்தா என்று எனக்கு ஒரு தோழி கிடைத்திருக்கிறாள். அவள் எனக்காக அங்கே காத்திருப்பாள். அதனால்…”
“பார்த்தாயா விசாலம்? புது தோழி கிடைத்தவுடன் என்னை விலக்குகிறாயே”
“ஐயோ அப்படி அல்ல இளவரசி. அவள் பாவம். அருமையான பெண். தாய் தந்தை உறவினர் யாரும் இல்லாத அனாதை. நான் தான் வர மாட்டேன் என்று கூறியவளை அழைத்து வந்திருந்தேன். இப்போது தனியாக விட்டால் அது தவறாகி விடுமே”
“நான் கேலிக்காக தான் கூறினேன் விசாலம். வேண்டுமென்றால் ஒன்று செய்யலாமே. அந்த பெண்ணையும் அழைத்து வா. உனக்கு தோழி என்றால் அவள் எனக்கும் தோழி தானே? நாம் மூவரும் உணவு அருந்தலாம்”
“ஐயையோ அது எல்லாம் வேண்டாம்”, என்று அலறினாள் விசாலம்.
“என்னவாயிற்று விசாலம்? நீ ஏன் பதட்டமடைகிறாய்? உணவருந்த தானே அழைத்தேன்? என்னுடன் உன் தோழி உணவருந்த வர மாட்டாளா?”
“ஆம் இளவரசி”
“அப்படியா? ஏன்? என்னை இளவரசியாக எண்ணாமல் தோழியாக எண்ணி உன் தோழி வரமாட்டாளா?”
“ஆம் இளவரசி. அவள் உங்களை இப்போது தோழியாக எண்ண மாட்டாள். விரோதியாக தான் எண்ணுவாள்”, என்று சோகமாக கூறினாள் விசாலம்.
“விசாலம்”, என்று அதிர்ச்சியாக அழைத்த வான்மதி “என்னை உன் தோழி விரோதியாக எண்ணுவாளா? எதனால் அவ்வாறு உரைக்கிறாய் விசாலம்?”, என்று கேட்டாள்.
“அதை கூற வேண்டும் என்று ஒரு மனதும் வேண்டாம் என்று ஒரு மனதும் கூறுகிறது இளவரசி”
“நீ என்றுமே என் மகிழ்ச்சியையே எண்ணுபவள் விசாலம். இப்போதும் என் நல்லதுக்காக மட்டும் தான் இதை பற்றி நீ உரைக்க ஆரம்பித்திருக்க வேண்டும். ஆரம்பித்து விட்டாய் அல்லவா? அனைத்தையும் கூறிவிடு. முகம் அறியா பெண் என் மீது பகைமை கொள்ள காரணம் என்ன?”
“இளவரசர் தான் அந்த காரணம் இளவரசி”
“என்ன?”, என்று அதிர்ச்சியாக கேட்டாள் வான்மதி.
“ஆம் இளவரசி”, என்று ஆரம்பித்து சாந்தா பற்றி அனைத்தையும் கூறி வான்மதியின் தலையில் இடியை இறக்கினாள் விசாலம். துடித்து போனாள் வான்மதி.
“இப்போது தங்களிடம் நான் கூறியதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன இளவரசி. ஒன்று உங்கள் சந்தோசத்தை சாந்தா கண்டால் அவள் மனதில் பொறாமை வரும். அந்த பொறாமை தீ உங்களையும் இளவரசரையும் நிம்மதியாக வாழ விடாது. மற்றொரு காரணம் அறியா பெண் சாதாரண ஈர்ப்பை காதல் என்று எண்ணி கொண்டு வாழ வேண்டிய வயதில் வாழ்க்கையை இழந்து விட கூடாதல்லவா? என்னால் அவளை மாற்ற முடியும் என்று தோன்றவில்லை. தங்களிடம் கூறினால் அவள் மனதை மாற்றி அவளுக்கு ஒரு வாழ்க்கையை அமைத்து கொடுப்பீர்கள் அல்லவா? அதனால் தான் கூறினேன் இளவரசி”
“நீ கூறியது சரி தான் விசாலம். அந்த பெண்ணும் பாவம் தான். சாதாரண குடியில் பிறந்த பெண் இளவரசன் மீது காதல் கொண்டால் அதை நிறைவேற்ற அந்த கடவுளாலும் முடியாது தான். அவள் கண்ணீரில் நாங்கள் மகிழ்ச்சியாக வாழ முடியாது. அவளுக்கு ஒரு வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது என் கடமை விசாலம். இளவரசருக்கு இந்த உண்மை தெரிந்தால் தன்னால் ஒரு பெண்ணின் மனது காய பட்டுவிட்டது என்று எண்ணி துடித்து போய் விடுவார். முதலில் எங்கள் திருமணம் நடக்கட்டும். அதன் பின் அந்த பெண்ணை நான் வாழவைப்பேன் விசாலம். நீ அவளுடனே போய் உணவு அறுந்து. ஆனால் அவள் யாரென்று தூரத்தில் இருந்தே எனக்கு கண்ணை காட்டு சரியா?”
“அப்படியே ஆகட்டும் இளவரசி. நான் பிறகு தங்களை காண்கிறேன்”, என்று சொல்லி விசாலம் சென்றவுடன் அப்படியே அமர்ந்திருந்தாள் வான்மதி.
“இது என்ன புது தலை வலி? இப்படி இளவரசரை மனதில் நினைத்து கொண்டிருக்கும் அவள் முன்னே நாங்கள் எப்படி கணவன் மனைவியாக உலா வர முடியும்? அந்த பெண்ணின் மனது அதிகம் காய பட்டு விடாதா? என்னுடைய பொருள்கள் மீது ஆசை பட்டால் அப்படியே அளித்து விடலாம். ஆனால் என்னவன் மீது ஆசை வைத்தால்? இதை எப்படி என்னால் பொறுக்க முடியும்? அவள் வாழ்வு சரியாகாமல் என்னால் இளவரசருடன் எப்படி வாழ முடியும்? அவள் மனதில் இளவரசர் பற்றிய நினைவுகளை அகற்ற வேண்டும். அவரை யாரும் தவறான கண் கொண்டு பார்க்க கூடாது. அவர் எனக்கு மட்டுமே சொந்தம். எப்படி அவளை மாற்றுவது?”, என்று எண்ணி குழப்பத்தில் இருக்கும் போது “கள்ளத்தனமாக காதலை வெளியே கூறாமலே காதலில் ஜெயித்து விட்டாய் என்று ஒரே கனவிலே மிதக்கிறாய் தமக்கையே”, என்று சிரிப்புடன் கூறி கொண்டே அங்கு வந்தான் மேகவேந்தன்.
“சும்மா இரு டா. நீ வேறு?”
“நான் வேறு தான். நீ தான் இளவரசர் நினைவில் இருக்கிறாயே? அங்கே அவரும் அப்படியே தான் இருக்கிறார். சரி சரி எனக்கு பசிக்கிறது நீ வா”
“உனக்கு பசித்தால் நீ சென்று உணவு அறுந்து. எனக்கு வேண்டாம்”
“அன்னை உன்னை அழைத்து வர சொன்னார்கள். நீ இல்லாமல் போனால் எனக்கு உணவு தர மாட்டார்களாம். அதனால் வா”, என்று கையை பிடித்து அழைத்து சென்றான்.
அதன் பின் அவன் கேலிக்கெல்லாம் பதில் கொடுத்து கொண்டே உணவு அருந்தினாள் வான்மதி. திரும்பி அறைக்கு வரும் போது தூரத்தில் இருந்தே சாந்தாவை காட்டினாள் விசாலம்.
“இந்த மென்மையான முகத்தை பார்த்தால் கோபம் கூட வராது”, என்று நினைத்த வான்மதிக்கு தலை வேதனையாக இருந்தது.
“என்ன செய்ய?”, என்று தெரியாமல் குழம்பி போனாள். சாந்தாவின் மேல் கோபமும், பரிதாபமும் மாறி மாறி வந்தது.
இப்படியே யோசித்து கொண்டிருந்தவளுக்கு “அந்த பெண்ணின் காதலை இளவரசர் அறிந்தால் அவர் மனம் சலன படுமா?”, என்ற கேள்வி எழுந்தது.
இந்த கேள்வியில் விறுவிறுத்து போனாள் வான்மதி. “இரக்க குணம் கொண்ட இளவரசர் அந்த பெண்ணை பற்றி எண்ணினால் பரிதாப படுவார். அப்போது அவளுடைய காதலுக்கு மதிப்பளித்து விடுவாரா? அவள் பக்கம் அவருடைய சிந்தனை திரும்புமா?”, என்ற நினைவு அவளை அலைக்கழித்தது.