“என்ன தோற்றம்?”, என்று நினைத்தவள் தன்னையே குனிந்து ஒரு முறை பார்த்து கொண்டாள். பார்த்தவளுக்கு அதிர்ச்சியில் விழிகள் விரிந்தன.
உள்ளாடையோடு அவன் முன் இருக்கும் கோலத்தை நினைத்து தலையில் அடித்து கொண்டே மஞ்சத்தில் கிடந்த பட்டு துணியை எடுத்து மேலே மூடினாள். பின் அவனை பார்க்க முடியாமல் வெட்கம் கொண்டு தலை குனிந்து கொண்டாள்.
“அந்த பட்டு துணியாக நான் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது தேவி”, என்றான் நரேந்திரவர்மன்.
சிவந்த முகத்தை மறைத்து கொண்டு “தங்களை யார் என்னுடைய அறைக்கு வர அனுமதித்தது?”, என்று முணுமுணுத்தாள்.
“உன்னுடைய இதயத்துக்குள்ளே கள்ளமாக நுழைந்த நான் உன் அறைக்குள் நுழைய கூடாதா?”
“யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள் இளவரசே?”
“எதையும் நினைக்க மாட்டார்கள். உன்னிடம் பேச சொல்லி அனுப்பியதே உன் தந்தையும், என் தந்தையும் தான். ஆனால் நீ இந்த கோலத்தில் இருப்பாய் என்று மட்டும் நான் கனவில் கூட நினைக்க வில்லை. என்னை பற்றிய கனவில் தானே இருந்தாய்?”
“ஆம். எனக்கு தங்களை காண தயக்கமாக இருக்கிறது இளவரசே. இப்படி ஒரு அரை குறை ஆடையோடு காட்சி அளித்து விட்டேனே?”
“என்னிடம் என்ன தயக்கம் வான்மதி? நீயே என் தேவி. இதை விட கவர்ச்சியாக காணத் தான் என் கண்கள் விருப்பம் கொள்கின்றன. ஆனால் சந்தர்ப்பம் தான் வரவில்லை. சரி அதை பிறகு பேசலாம். உன் தந்தை உன்னிடம் கூற சொன்ன விசயத்தை முதலில் உரைத்து விடுகிறேன்”
“என் தந்தை என்ன கூற சொன்னார்?”
“என்னை மணக்க உனக்கு விருப்பம் இல்லையாம். நீ அவருக்காக தான் உன் கொள்கையை விட்டு என்னை மணக்க சம்மதம் சொன்னாயாம்”
“அவ்வாறு என் தந்தை கூறினாரா? அவர் என்னை தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறார் இளவரசே. தங்களை மணக்க எனக்கு எப்படி விருப்பம் இல்லாமல் போகும்? தாங்கள், நான் மட்டுமே தங்களுடைய ராணி என்று வாக்கு கொடுத்ததை அவர் அறிய மாட்டார். அதனால் அவ்வாறு எண்ணி கொண்டார். எனக்கும் அதை பற்றி வருத்தம் இருக்கிறது”
“என்ன? வருத்தமா? என்ன வருத்தம் தேவி?”
“அன்று அவ்வளவு வீராப்பாக அனைவரிடம் வீர வசனம் பேசிய நான் தங்களை மணக்க சம்மதம் கூறினால் என்னை பற்றி அனைவரும் என்ன நினைப்பார்கள்? தனிமையில் தாங்கள் கொடுத்த வாக்கை மக்களும் என் பெற்றோரும் எவ்வாறு அறிவார்கள்? என்னை பற்றி தவறாக எண்ணுவார்களோ என்று என் மனம் பதைக்கிறது இளவரசே”
“கலங்காதே இளவரசி. உன்னை எப்போதுமே கம்பீரமாக பார்த்த மக்கள் இனியும் அவ்வாறே காண்பார்கள். இளவரசி. எதனால் இப்படி மாற்றி பேசினார் என்ற கேள்வியை அவர்கள் உன்னை பார்த்து கேட்க நான் விட மாட்டேன். அதற்கு நான் வழி செய்கிறேன். நீ இப்போது விரைவாக தாயாராகி வருகிறாயா வான்மதி? அங்கு என் உறவினர்கள் அனைவரும் காத்து கொண்டிருக்கிறார்கள். நீ இங்கு முழு அலங்காரத்தில் இருப்பாய் என்று எண்ணி ஆசையோடு காண வந்தேன். ஆனால் இங்கே நீ அறை குறை ஆடையோடு அதை விட கவர்ச்சியாய் என் கண்களுக்கு விருந்தளிக்கிறாய்”, என்று சிரித்தான் நரேந்திரவர்மன்.
“ச்சி தங்களால் எப்படி தான் இப்படி எல்லாம் பேச முடிகிறதோ? கனவில் இருந்து தான் எழுப்பி விட்டீர்களே? இனி தாமதம் செய்யாமல் தயாராகி விடுவேன். தாங்கள் செல்லுங்கள்”
“ஏன் இங்கே இருந்து நீ உடை மாற்றுவதை நான் காண கூடாதா தேவி?”
“உங்களை… தயை கூர்ந்து இங்கிருந்து செல்லுங்கள்”
“சரி சரி, விரைவாக வந்து சேர். அப்படியே தேவதை போல ஜொலிக்க வேண்டும். என் அன்னை உன் அழகை புகழ வேண்டும். மங்கள நாணை உன் கழுத்தில் கட்டிய பிறகு உன்னை கவனித்து கொள்கிறேன்”, என்று புன்னகையுடன் கூறி விட்டு அங்கிருந்து சென்று விட்டான்.
“இப்படியா அமர்ந்திருப்பது?”, என்று தன்னையே நொந்து கொண்டு தயாராக ஆரம்பித்தாள் வான்மதி.
அனைவரின் முன்பு வந்து அமர்ந்த நரேந்திரவர்மன் வாசுதேவச்சக்கரவர்த்தியை பார்த்து புன்னகைத்தான். அந்த புன்னகையே அவருக்கு மகள் பற்றிய கவலையில் இருந்து விடுதலை கொடுத்தது.
தோழிகள் சூழ பரிபூரண அலங்காரத்தில் தேவதையாக அழைத்து வர பட்டாள் வான்மதி. மனம் முழுவதும் பூரிப்புடன் குனிந்த தலையுடனும் வந்து அமர்ந்தாள் வான்மதி.’
அனைவரும் அவளையே தான் பார்த்து கொண்டிருந்தனர். ஏற்கனவே பார்த்திருந்தாலும் “எப்படி பட்ட அழகு”, என்று வான்மதியின் அழகை வியந்தாள் சாந்தா.
“என் மகன் பொய் கூறுவான் என்று இப்போது தான் எனக்கு தெரிகிறது”, என்றாள் பாண்டிமாதேவி.
“அன்னையே நான் என்ன பொய் உரைத்தேன்?”, என்று கேட்டான் நரேந்திரவர்மன்.
“கந்த தேசத்தின் இளவரசி அழகா என்று கேட்டதற்கு என் அன்னையை விட அழகில்லை என்று நீ உரைத்தாய் அல்லவா? அதை தான் உன் அன்னை கூறுகிறாள். உன் அன்னை என்ன? அவளை விட பல தேவதைகளை சேர்த்து வைத்தது போல இருக்கிறாள் இளவரசி”, என்றார் இந்திரவர்மர்.
அனைவரும் சிரித்தார்கள். அதை கேட்ட வான்மதிக்கு மட்டும் “அப்போது அவன் கண்களுக்கு நான் அழகியாக தெரிய வில்லையா?”, என்ற வினா எழுந்தது. அவள் முகத்தையே உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்த நரேந்திரவர்மனுக்கு அவள் மன சிணுங்கல் புரிந்தது.
“அன்னையே திருமணத்துக்கு முன்பே எனக்கும், இளவரசிக்கும் யுத்தத்தை மூட்டி விடுவீர்கள் போலவே? நான் கூறிய அடுத்த வார்த்தையும் தாங்கள் உரைத்திருக்க வேண்டும் அல்லவா? என் மனதுக்கு பிடித்த இளவரசி என் அன்னையை விட அழகில்லை. ஆனால் என் கண்களுக்கு அவள் மட்டுமே அழகி என்று நான் உரைத்ததையும் சேர்த்து கூறுங்கள். மகனாக என் அன்னை அழகு என்று கூறுவேன். காதலனாக என் இளவரசி என்று கூறுவேன். மகாராஜா வாசுதேவச்சக்கரவர்தி தன் மகளுக்கு போர்கலையும் கற்பித்திருக்கிறார். நீங்கள் இப்படி பகை மூட்டி விட்டீர்களானால் மணமேடையில் இளவரசி எனக்கு மாலை அனுவிப்பதற்கு பதிலாக வாளை தூக்கி விட போகிறார்கள்”, என்று கூறி சிரித்தான்.
அவன் கேலியில் அவள் முகமும் மலர்ந்தது. அனைவரும் சிரித்தார்கள். சாந்தா முகம் மட்டும் வெறுப்பை காட்டியது.
மணமகளுக்கு என்று கொண்டு வந்த சீர்கள் எல்லாம் வழங்க பட்டன. தலை வணங்கி அதை அனைத்தையும் பெற்று கொண்ட வான்மதியும் அனைவரின் கால்களிலும் தனி தனியே விழுந்து வணங்கினாள்.
“இன்றே நிச்சய தாம்பூலம் மாற்றி விட்டு எங்கள் நாட்டின் மருமகளை எங்கள் நாட்டிற்கு அழைத்து செல்லும் முடிவோடு தான் நாங்கள் வந்தோம். அப்படியே செய்து கொள்ளலாமா வாசுதேவரே?”, என்று கேட்டார் இந்திரவர்மர்.
“தங்கள் முடிவு சிறந்தது தான். ஆனால் நீங்கள் அனைவரும் வெகு தூரம் பயணம் செய்து வந்திருக்கிறீர்கள். இன்று தாம்பூலம் மாற்றி விட்டு நாளை பயணம் செய்தாலும் திருமண நாளுக்கு முன் மேலை தேசத்தை அடைந்து விடலாம் என்பது என் கருத்து”, என்றார் வாசுதேவச்சக்கரவர்த்தி.
“அதுவும் சரி தான். பெண்கள் அனைவரும் களைப்பாக இருக்கிறார்கள். ஓய்வு எடுத்து விட்டே செல்லலாம். இப்போது தாம்பூலம் மட்டும் மாற்றி கொள்ளலாம்”
“அப்படியே ஆகட்டும் மகாராஜா. அருந்ததி தாம்பூலத்தை தயார் செய்”, என்று கூறினார் வாசுதேவச்சக்கரவர்த்தி.
பின் வாசுதேவரும் இந்திரவர்மரும் அவையோர் முன்பு எழுந்து நின்று தட்டை மாற்றி கொள்ளும் போது “சிறிது பொறுங்கள் தந்தையே. தட்டை மாற்றி கொள்வதுக்கு முன் இந்த அவையோரிடமும் தங்களிடம் நான் ஒன்று உரைக்க வேண்டும்”, என்று கூறினான் நரேந்திரவர்மன்.
மாற்ற இருந்த தட்டுக்கள் கீழே வைக்க பட்டன.
“என்னவாயிற்று நரேந்திரா?”, என்று கேட்டார் இந்திரவர்மர். “எதாவது பிரச்சனையா இளவரசே?”, என்று கேட்டார் வாசுதேவச்சக்கரவர்த்தி.
“இரண்டு மகாராஜாக்களும் பதட்டம் கொள்ளாமல் இருங்கள். என் மகன் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியே எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறுகிறது. பின் ஏன் கலங்க வேண்டும்? அவன் மனதில் இருப்பதை அவன் உரைக்கட்டும்”, என்றார் வராக சித்தர்.
அந்த அவையே அவன் என்ன கூற போகிறான் என்று செவி மடுத்தது. வான்மதிக்கும் குழப்பமாக இருந்தது.
“எல்லாரும் காத்திருக்கிறார்கள் நரேந்திரா. நீ கூற நினைப்பதை கூறு”, என்றார் வராக சித்தர்.
“கூறுகிறேன் தந்தையே. நான் இப்போது உங்கள் அனைவர் முன்னிலையில் இளவரசிக்கு வாக்களிக்க வேண்டும். அதுக்கு முன் மகாராஜா வாசுதேவர் மற்றும் கந்த தேசத்தின் மக்கள் மனதில் இருக்கும் குழப்பங்களுக்கும் நான் விடை கூற வேண்டும்”
“என்னது குழப்பமா? நீ புதிர் போடாமல் விரைவாக கூறு நரேந்திரா”, என்றாள் பாண்டிமா தேவி.