என்றைக்கு மணப்பெண்ணை பார்க்க செல்லலாம் என்று ஆலோசனை கேட்கவும், திருமணத்தை என்று வைக்கலாம் என்று அறியவும், ஜாதகத்தை கணிக்கவும் அரண்மனை ஜோதிடர் வரவழைக்க பட்டார்.

நரேந்திரவர்மன் தான் பதறி  போனான். அவர் வாய் மொழியாக வரும் வார்த்தை அவ்வளவு முக்கியம் என்று அவனுக்கும் தெரியும். ஏன் என்றால் அவர் கணித்து சொன்னது அனைத்தும் நடந்திருக்கிறது.

அவர் மட்டும் ஜாதகம் பொருந்த வில்லை என்று கூறி விட்டால் யார் நினைத்தாலும் அவனால் வான்மதியை மணக்க இயலாது.

நெஞ்சம் முழுவதும் நடுக்கத்துடன் கண் முன் இருந்த ஈசனை பார்த்து  “எனக்கு அவள் தான் என்று நீ முடிச்சு போட்டதால் தான் அவளை என் கண்ணில் காண்பித்திருக்கிறாய் என்று நம்புகிறேன். அப்படி பட்ட நீ தான் எந்த தடங்கலும் வராமல் எங்களை சேர்த்து வைக்க வேண்டும்”, என்று வேண்டி கொண்டான்.

ஜோதிடரும் கணித்து விட்டு “இளவரசருக்காகவே படைக்க பட்டவர் தான் கந்த தேசத்தின் இளவரசி”, என்று கூறி நல்ல நாளையும் குறித்து கொடுத்து மங்களமாக வாழ்த்தினார்.

அதன் பின் பெண்ணை காண எல்லா ஏற்பாடுகளும் செய்ய பட்டது. மணபெண்ணுக்காக அணைத்து பொருள்களும், ஆபரணங்களாகட்டும், பட்டாடைகளாகட்டும், மற்ற பொருள்களாகட்டும் அனைத்தும் தாம்பூலங்களாக  அடுக்கி வைக்க பட்டன.

திருமண வேலைகள் சூடு பிடிக்க ஆரம்பித்தன. மக்கள் அனைவரும் திரு விழா போல் கொண்டாட ஆரம்பித்தனர்.

அதே நேரம் ஆத்திரத்தின் உச்சத்தில் மேல் மாடத்தில் உலாவி கொண்டிருந்தான் செங்கல்வராயன். அவன் முகம் கருத்திருந்தது.

அவனால் இந்த தோல்வியை ஏற்று கொள்ள முடியவில்லை. கிழவனை வெற்றி கொண்டு அந்த வான்மதி தேவியை விலங்கிட்டு இழுத்து வர எண்ணி இருந்தவன் இப்படி புறமுதுகிட்டு ஓடி வந்ததை அவனால் தாங்கி கொள்ள இயல வில்லை.

அவன் முகத்தில் இருந்த உக்கிரத்தை பார்வை இட்டு கொண்டிருந்தாள் அவன் ராணி வசுமதி தேவி.

“நியாய தர்மத்துக்கு கட்டு படாதவர்களுக்கும், அக்கிரம காரர்களுக்கும் தோல்வி வராமல் வெற்றியா வரும்?”, என்று நினைத்து கொண்டாள்.

அப்போது “தமையனாரே”, என்று அழைத்த படி உள்ளே வந்தான் வல்லவரையன்.

“உன்னால் தான் வல்லவரையா இந்த நிலை. நீ மட்டும் காரியத்தை சரியாக செய்திருந்தால் இந்நேரம் நமக்கு வெற்றி கிட்டி இருக்கும். அனைத்தையும் கெடுத்து விட்டாய்”, என்று கர்ச்சித்தான் செங்கல்வராயன்.

“என்னை மன்னித்து விடுங்கள் தமையனாரே. அந்த காண்டவன் இப்படி மாட்டி கொள்வான் என்று எனக்கு தெரியாது. அவனை கண்டறிந்தது அந்த நரேந்திரவர்மன் தான். நம் படை தோற்றத்துக்கும் அவன் தான் காரணம்”

“ஆம், அவன் குறுக்கிடாவிட்டால் அனைத்தும் சுபமாக இருந்திருக்கும். எனக்கெதிராக படையை கிளப்பி அனைத்தையும் கெடுத்து விட்டான்.  அவனை அளிக்க வேண்டும் வல்லவரையா?”

“அது அவ்வளவு எளிதல்ல தமையனாரே. நரேந்திரவர்மன் படை அத்தகையது. மிகவும் பெரியது. இந்த போரில் கூட வாசுதேவருக்கு உதவ வந்தது அவன் படையில் சிறு பகுதி தான். அவன் படையை நம்மால் எளிதாக வீழ்த்தி விட முடியாது. அது மட்டுமல்லாமல் இப்போது தான் நம் பெரிய இழப்பை வேறு சந்தித்திருக்கிறோம்”

“அதுவும் சரி தான். ஆனால் அந்த நரேந்திரவர்மனையும், எனக்கெதிராக படை அனுப்ப சொன்ன இந்திரவர்மரையும் கொல்ல வேண்டும். அந்த வாசுதேவரை அடிமை படுத்த வேண்டும். அதற்கு ஏதாவது வழி இருக்கிறதா?”

“ஒரே ஒரு வழி தான் இருக்கிறது”

“அது என்ன வழி வல்லவரையா?”

“விசாகதத்தன்”, என்று உரைத்தான் வல்லவரையன்.

அதிச்சியானான் செங்கல்வராயன்.  “வல்லவரையா நீ என்ன கூறுகிறாய்? இப்போது எதுக்கு அந்த கொடூரன் விசாகதத்தனை பற்றி கூறுகிறாய்? அவனை நினைத்தாலே எனக்கு நெஞ்சம் பதறுகிறது? கண்ணில் தெரியும் எதிரிகளை எல்லாம் வெட்டி கூறு போடுபவன் அவன்”

“ஆம் தமையனாரே. தாங்கள் கூறுவது அனைத்தும் சரியே. அவன் படையுடன் நாம்  சேர்ந்தால் நம்மால் அந்த நரேந்திரவர்மனை வெல்ல முடியும்”

“உனக்கு புத்தி பேதலித்து விட்டதா வல்லவரையா? விசாகதத்தன் யார் தெரியுமா? இந்திரவர்மரின் சகோதரி கோசலையை மணந்தவன். தன்னுடைய மைத்துனன் மீது அவன் எப்படி படை எடுப்பான்? உனக்கு என்னவாயிற்று வல்லவரையா?”

“எனக்கு ஒன்றும் ஆக வில்லை தமையனாரே. தன்னுடைய மைத்துனன் மீது படை எடுக்க அந்த விசாகதத்தன் எண்ணமாட்டான் தான். ஆனால் அதற்கான சூழ்நிலை தற்போது உருவாகி இருக்கிறது தமையனாரே”

“என்ன சூழ்நிலை வல்லவரையா?”

“அந்த காரணம் தங்களுக்கும் கவலை அளிக்க கூடியது தான் தமையனாரே”

“என்ன கூற விளைகிறாய் வல்லவரையா?”

“ஆம் தங்களுக்கு கசப்பான செய்தியை கொண்டு வந்திருக்கிறேன் தமையனாரே”

“கசப்பான செய்தியா? என்ன அது?”

“இந்திரவர்மரின் அரண்மனை விழாக்கோலம் பூண்டிருகிறது”

“எதற்காக வல்லவரையா?”, என்று செங்கல்வராயன் கேட்கும் போது வசுமதியின் முகத்திலும் ஒரு ஆர்வம் வந்திருந்தது.

“அது வந்து… நரேந்திரவர்மனுக்கு வான்மதியை மணமுடிக்க முடிவெடுத்துள்ளார்களாம்”

“என்ன? நீ என்ன கூறுகிறாய் வல்லவரையா?”

“ஆம் தமையனே. அதற்காக தான் மேலை தேசம் முழுவதும் கோலாகலமாக இருக்கிறார்கள்”

“அப்படி நடக்க வாய்ப்பே இல்லை வல்லவரையா? வான்மதியின் எண்ணம் தெரியும் அல்லவா? அவள் சம்மதிக்க மாட்டாள்”

“இல்லை, வான்மதி திருமணத்துக்கு சம்மதித்து விட்டாள். திருமண தேதியும் முடிவு செய்ய பட்டு விட்டது”

“இது எப்படி நடந்தது. அந்த வான்மதி எனக்கே சொந்தம். அவளை விட்டு கொடுக்க முடியாது”

“அதை தான் நான் கூற வந்தேன் தமையனே. இந்த திருமணத்தை நம்மால் நிறுத்த முடியுமா என்று தெரிய வில்லை”

“இல்லை திருமணத்தை நிறுத்தியே ஆக வேண்டும். அவள் வேறு எவருக்கும் மாலை சூட்ட கூடாது”

“எவ்வாறு தமையனாரே? நம்மால் விரைவில் அதை தடுக்க முடியாது. பொறுத்திருந்தால் தான் அவர்களை வெல்ல இயலும்.  எதிரிகளை ஒளித்து கட்ட சந்தர்ப்பம் வர இருக்கிறது தமையனாரே”

“இல்லை உறுதியாக திருமணத்தை நிறுத்தியே ஆக வேண்டும். அதற்காக என் மனதில் ஒரு திட்டம் உருவாகி உள்ளது. சரி நீ என்ன சந்தர்ப்பத்தை பற்றி கூறுகிறாய்?”

“எதிரிகளை மொத்தமாக அழிப்பதற்கான சந்தர்ப்பம் தான். இந்திரவர்மர், வாசுதேவச்சக்கரவர்த்தி இருவரையும் வெற்றி கொள்ள நம்மால் இயலும்

“எவ்வாறு வல்லவரையா?”

“இந்த திருமணத்தால் நம் பகையை மட்டும் அல்ல. அந்த விசாகதத்தனுடைய பகையையும் சம்பாதித்து கொண்டான் நரேந்திரவர்மன் தமையனாரே”

“பாசமுள்ள மருமகன் மீது எதற்காக அந்த விசாகதத்தன் பகை கொள்ள போகிறான்?”

“விசாகதத்தன் மகள் கீர்த்தி தேவியை நரேந்திரவர்மனுக்கு மணம் முடிக்க தான் வெகு நாள்களாக கனவில் இருக்கிறான் அந்த விசாகதத்தன். இப்போது நரேந்திரவர்மன் வான்மதியை மணக்க இருப்பதால் விசாகதத்தனை தாங்கள் சிறிது தூண்டி விட்டாலும் பகை பெரியதாக பற்றி கொள்ளும்”

“ஹா ஹா சரியான யோசனை வல்லவரையா? ஆனால் அதற்கு முன் அந்த நரேந்திரவர்மனை கொல்ல நான் முடிவு செய்து விட்டேன்”

“என்ன கூறுகிறீர்கள் தமையனாரே? இவ்வளவு விரைவில் போர் புரிவது எப்படி சாத்தியம்?”

“போரில் அவனை யார் கொல்ல போகிறார்கள்? நான் அவனை கொல்ல ஆள் அனுப்ப போகிறேன் வல்லவரையா. எனக்கே அந்த அழகு தேவதை வான்மதி சொந்தம்”

“தமையனாரே, இது தவறு அல்லவா?”

“என் ஆசைக்கு முன் தவறு என்ன, சரி என்ன வல்லவரையா? நம் படையில் ஈட்டி எரியும் சிறந்த வீரனை என்னிடம் அழைத்து வா. அவன் தான் மக்களோடு மக்களாக கலந்து மணமேடையில் அமர்ந்திருக்கும் நரேந்திரவர்மனின் மீது கத்தியை வீச வேண்டும். அதுவும் விசம் தடவிய கத்தி ஹா ஹா”, என்று கொக்கரித்தான் செங்கல்வராயன்.