மகாராஜா இந்திரவர்மர் கட்டளை படி மேலை தேசம் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது அவர்களுடைய இளவரசரை வரவேற்க.
செய்தி அறிந்து நெஞ்சம் முழுவதும் பூரிப்புடன் அவனை காண காத்திருந்தாள் சாந்தா. அவளுடைய ஆனந்தத்தை கண்டு கவலை கொண்டாள் விசாலம்.
சீறி பாய்ந்த புரவி மீது அமர்ந்து பின்னே படைகள் வர வெற்றி புன்னகையோடு வந்து கொண்டிருந்தான் நரேந்திரவர்மன்.
அவனை காண மக்கள் அணிவகுத்து நின்றார்கள். அவனுக்கு பூத்தூவி மரியாதை செலுத்தினார்கள். பாண்டிமா தேவி அவனுக்கும், சுதமனுக்கும் ஆரற்றி சுற்றினாள்.
வராக சித்தரின் பாதம் பணிந்து எழுந்த நரேந்திரவர்மன் பின் இந்திரவர்மர் மற்றும் பாண்டிமாதேவியின் கால்களில் விழுந்து வணங்கினான்.
பெருமையாக தன் மகனை பார்வையிட்ட இந்திரவர்மர் அவன் தோள் மீது கைகளை போட்டு கொண்டு அரண்மனைக்கு உள்ளே அழைத்து சென்றார்.
பின் சபை ஆரம்பிக்க பட்டு போரை பற்றிய செய்திகளை கண்டறிந்து மக்களுக்கு விருந்து என்ற செய்தியை அறிவித்து பின் வீரர்களுக்கு பரிசையும் அறிவித்தார் இந்திரவர்மர்.
சபை கலைந்ததும் “நான் ஓய்வெடுக்க செல்கிறேன்”, என்று உரைத்து விட்டு சென்றான் நரேந்திரவர்மன்.
“இப்போதே வாசுதேவச்சக்கரவர்த்திக்கு ஓலை அனுப்பலாம் தானே தமையனாரே?”, என்று கேட்டார் இந்திரவர்மர்.
“ஆம் ஆம், இதுவே திருமணத்துக்கு சரியான தருணம். விரைவில் நம் மகனை அரியணையில் அமர்த்த வேண்டும்”, என்றார் வராக சித்தர்.
தூதுவனை அழைத்தார் மகாராஜா. பின் மகாராஜா வாசுதேவச்சக்கரவர்த்திக்கு அவருடைய மகள் வான்மதியை நரேந்திரவர்மனுக்கு மணம் முடிக்க கேட்டு ஓலை வரைய பட்டது.
அந்த தூதை கொண்டு சென்றவனுக்கு தங்கள் இளவரசருக்கு திருமணம் என்று நினைத்து மகிழ்ச்சியாக இருந்தது.
வாசுதேவச்சக்கரவர்த்தியும், அருந்ததி தேவியும் அரியணையில் அமர்ந்து சபையில் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்து கொண்டிருக்கும் போது தூதுவன் வந்திருப்பதாக அறிவித்தான் வாயிற்காப்பாளன்.
“யாரிடம் இருந்து?”, என்று கேட்டார் மகாராஜா.
“மகாராஜா இந்திரவர்மரிடம் இருந்து வந்திருக்கிறது மகாராஜா”, என்றான் காவலன்.
“உடனே வர சொல்”, என்று உத்தரவிட்ட வாசுதேவச்சக்கரவர்த்தி முகம் முழுவதும் புன்னகையுடன் அவனை வரவேற்றார்.
ஓலையில் இருந்த செய்தியை படித்து முடித்தவருக்கு ஒரு பக்கம் அளவிடாத மகிழ்ச்சியும் மறு புறம் கவலையும் வந்து சேர்ந்தது.
“என்ன தூது?”, என்று அறிந்து கொள்ள அனைவரும் ஆவலாக இருந்தார்கள்.
வான்மதிக்கு உலமெல்லாம் பட படத்தது. ஒரு குறுகுறுப்புடன் மேகவேந்தனின் கைகளை பற்றி கொண்டாள்.
“வேறு எந்த இளவரசனோ இவளை பெண் கேட்டு விட்டான் என்று நினைத்து சகோதரி பதட்டம் கொள்கிறாள் போல”, என்று நினைத்து ஆறுதல் சொல்ல அவள் முகத்தை பார்த்த மேகவேந்தன் திகைத்தான்.
வான்மதி முகம் ஆனந்தத்துடன் கூடிய ஒரு எதிர்பார்ப்பை சுமந்திருந்தது.
அதை விசித்திரமாக பார்த்தான் மேகவேந்தன்.
தமக்கையின் முகத்தில் இருந்த உணர்வுக்கு விடை கிடைக்க வில்லை என்றாலும் எதுவோ சரி இல்லை என்று அவனுக்கு தோன்றியது.
“மகாராஜா இந்திரவர்மர் என்ன செய்தி அனுப்பி இருக்கிறார் மகாராஜா? அவையில் உள்ளோர்களும் மக்களும் அதை அறிய ஆவலாக காத்திருக்கிறார்கள்”, என்று கூறினாள் அருந்ததி தேவி.
“சுப செய்தி தான் அனுப்பி இருக்கிறார். ஆனால்…”, என்று இழுத்தார் மகாராஜா.
“சுப செய்தியா? அப்படி என்றால் தயங்காமல் உரைக்கலாமே? எதனால் தயக்கம் காட்டுகிறீர்கள் மகாராஜா?
வான்மதியின் இதய துடிப்பு எகிறியது.
“வான்மதி தேவியை இளவரசர் நரேந்திரவர்மனுக்கு மணமுடிக்க வராக சித்தரும், மகாராஜா இந்திரவர்மரும் சம்மதம் கேட்டு ஓலை அனுப்பி இருக்கிறார்கள்”, என்று மகாராஜா உரைத்ததும் கூட்டத்தில் சலசலப்பு கேட்டது.
வான்மதி மேகவேந்தனின் கைகளை இன்னும் நெருக்கினாள். “இவளுடைய உணர்வுகளை நேரடியாக அனைவருக்கும் காட்டாமல் என் கைகளுக்கு கட்டு போட வைத்து விடுவாள் போல? அப்படி இறுக்குகிறாள்”, என்று நினைத்து கொண்டு தன் தமக்கையின் திருமுகம் பார்த்தான்.
அவள் முகம் வெட்கத்தில் சிவந்திருந்தது. இந்த முறை அவள் மனதில் இருந்ததை அப்படியே தெரிந்து கொண்டான் அந்த சகோதரன். அதை விசித்திரமாக பார்த்தாலும் அவனுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.
“சுப செய்தி தானே மகாராஜா? அருமையான மணமகன் தான் இளவரசர். பின் ஏன் தங்கள் முகம் கவலையாக இருக்கிறது?”, என்று கேட்டாள் அருந்ததி தேவி.
“அருமையான சம்பந்தம் தான். ஆனால் இதற்கு வான்மதி சம்மதிக்க மாட்டாளே”, என்று கவலையாக கூறினார் மகாராஜா.
“ஐயோ தந்தை என்ன இப்படி கூறுகிறார்? இந்த இளவரசரை மணக்க மாட்டேன் என்று நான் எப்போது உரைத்தேன்?”, என்று கவலையாக சிந்தித்தாள். அதை பார்த்து புன்னகைத்து கொண்டான் மேகவேந்தன்.
“அவள் என்ன சம்மதிப்பது மகாராஜா? செல்லம் கொஞ்சுவதற்கும் ஒரு அளவு இருக்கிறது. அவளுக்கு வயது ஏறி கொண்டே போகிறது. காலாகாலத்தில் திருமணத்தை நிகழ்த்தியே ஆக வேண்டும்”, என்றாள் அருந்ததி.
“அப்படி கூறாதே தேவி. போன முறை அவள் திருமணத்தை பற்றி பேச்சை எடுத்ததற்கு கழுத்தில் வாளை வைத்து கொண்டு நின்றதை பார்த்தாய் தானே? மகளின் மனதை அறிந்து என்னால் எப்படி இதற்கு சம்மதம் கூற முடியும்?”
“உங்கள் இருவரையும் என்னால் மாற்ற முடியுமா என்ன? இப்போது என்ன தான் செய்ய போகிறீர்கள்?”
“என் மகளுக்கு விருப்பம் இல்லை என்று பதில் உரைக்க போகிறேன்”, என்று மகாராஜா சொன்னவுடன் அதிர்ச்சியாக விழித்தாள் வான்மதி.
“போச்சு போச்சு நான் அந்த செங்கல்வராயனை மணக்க மாட்டேன் என்று தானே சாக போனேன்? தந்தை தவறாக எண்ணி விட்டாரே. இப்போது எனக்கு சம்மதம் என்று நான் எவ்வாறு உரைப்பது? அப்படியே உரைத்தாலும் எதுவோ ராமர், சீதை என்று கதை அளந்தாயே? இப்போது அது என்னவாயிற்று என்று அனைவரும் என்னை பார்த்து கேள்வி எழுப்புவார்களே? என் காதலை எப்படி நான் சபையில் கூற முடியும்?”, என்று கலங்கி கொண்டிருந்தாள்.
அவள் கலக்கத்தை பார்த்து கொண்டிருந்த மகாராஜாவுக்கு அவளுக்கு விருப்பமில்லாமல் தான் இவ்வாறு இருக்கிறாள் என்று தோன்றியது. வந்திருந்த தூதுவனை ஓய்வெடுத்து செல்ல சொல்லி அனுப்பி விட்டு தன் நாட்டின் தூதுவரை அழைத்தார்.
தூதுவரிடம் ஓலை எழுத சொல்லி விசயத்தை ஆரம்பிக்கும் போது “சற்று பொறுங்கள் தந்தையே. தாங்கள் இந்த முறை என் தமக்கையிடம் சம்மதத்தை கேளுங்கள்”, என்று கூறினான் மேகவேந்தன்.
தன்னுடைய சகோதரனை நினைத்து பெருமையாக எண்ணி கொண்டாள் வான்மதி.
மகாராஜாவும் “அவள் விருப்பம் தான் அனைவரும் அறிந்ததே மேகவேந்தா”, என்றார்.
“எதற்கும் ஒரு முறை கேட்கலாம் அல்லவா?”
“சரி மேகவேந்தா. நடப்பதை பார்த்து கொண்டு தானே இருக்கிறாய் வான்மதி. உன் விருப்பம் நாங்கள் அனைவரும் அறிந்ததே. அதனால் உன்னை கட்டாய படுத்த மாட்டோம். உனக்கு விருப்பம் இல்லை என்று தான் ஓலை வரைய சொல்ல போகிறேன். இருந்தாலும் உன் சகோதரன் உன்னிடம் கேட்க சொல்கிறான். அதனால் கேட்கிறேன். உன் விருப்பத்தை கூறு மகளே”
குனிந்த தலை நிமிராமல் அசையாமல் நின்றவள் “தங்களுடைய விருப்ப படி இந்த திருமணத்துக்கு சம்மதம் கூறுகிறேன் மகாராஜா. எனக்கு பரிபூரண சம்மதம்”, என்று கூறி விட்டு ஓடி விட்டாள்.
அனைவருக்கும் அவள் திருமணத்துக்கு சம்மதம் என்று சொன்னது வியப்பாகவும் ஆனந்தமாகவும் இருந்தது.
ஆனால் மகாராஜா அவளுடைய வெட்கத்தை அழுகை என்று தவறாக புரிந்து கொண்டார். அதை அருந்ததி தேவியிடம் அவர் கூறிய போது “தேவை இல்லாமல் எதையும் எண்ணாதீர்கள். அவளே அதிசயமாக சம்மதம் கூறி இருக்கிறாள். போக போக வாழ்க்கையின் நிதர்சனத்தை அவளே புரிந்து கொள்வாள். நீங்கள் சம்மதம் என்று கூறி ஓலை வரையுங்கள்”, என்று ஆறுதல் கூறினாள்.
அரை மனதுடன் தான் சம்மதம் கூறினார் மகாராஜா.
அவர் சம்மதம் கூறியவுடன் அவர் சொல்படி ஓலை வரைய பட்டு அனுப்ப பட்டது. வான்மதி கல்யாண கனவுகளில் மூழ்கி விட்டாள். ஆனால் அவள் சோகத்தில் மூழ்கி இருப்பதாக எண்ணிய மகாராஜாவுக்கு கவலையாக இருந்தது.
வாசுதேவச்சக்கரவர்த்தி அனுப்பிய ஓலையை படித்த இந்திரவர்மருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அதை அனைவரிடமும் பகிர்ந்து கொண்டார். அதை அறிந்த நரேந்திரவர்மனும் மனம் முழுவதும் மகிழ்ச்சியுடன் உலாவினான்.
இளவரசருக்கு திருமணம் என்று எட்டு திக்கும் விசயம் பரவியது. அரண்மனையே அழகாக அலங்கரிக்க பட்டது.
செய்தி அறிந்த சாந்தா முகம் இருண்டது. இப்படி நடக்கும் என்று அவளும் அறிந்ததே. ஆனால் கண் முன் நடக்கும் போது அதை தாங்கி கொள்ள தான் அவளால் இயல வில்லை. கண்ணீரில் கரைந்தவளை விசாலம் தான் ஆறுதல் சொல்லி தேற்றினாள்.
“விசாலம் உங்கள் நாட்டின் இளவரசி தானே மணப்பெண்? அந்த இளவரசி கொடுத்து வைத்தவள்”, என்று கூறிய சாந்தாவின் வார்த்தைகளில் பொறாமை தெறித்தது. அதை அறிந்து உள்ளம் கடுத்தாலும் “எங்கள் இளவரசியை மணக்கும் இளவரசரும் கொடுத்து வைத்தவர் தான். அதை நீ போக போக அறிந்து கொள்வாய். மனதில் இருக்கும் கசப்பை அகற்றி விட்டு வேலையை கவனி சாந்தா. அது தான் அனைவருக்கும் நல்லது”, என்று கொஞ்சம் காட்டமாகவே உரைத்தாள் விசாலம்.
“இனி இளவரசரை நாம் நினைக்க கூடாது”, என்ற உண்மை புரிந்தாலும் அதை செயல் படுத்த அதிகமாகவே தவித்து போனாள் சாந்தா.