அத்தியாயம் 20

காதல் போர்க்களத்தில்

நம் யுத்தம் நடந்தால்

உன் விழி என்னும் ஆயுதத்தால்

மட்டும் தோற்றுப் போகிறேன் நான்!!!

 

அன்றே அனைத்து படைகளையும் ஒன்றிணைத்து அவர்களுக்கான ஆணைகளை பிறப்பித்து அடுத்த நாளே புத்துணர்வுடன் போர்க்களம் புகுந்தான் நரேந்திரவர்மன்.

அவனுடன் சுதமனும் படைத்தளபதியாக இருந்தான். இந்திரவர்மர், விசாகதத்தனுக்கு எதிராக தேரில் இருந்தார்.

காலாட்படை, புரவி படை, யானை படை என அனைத்தும் தயாராக இருந்தன. கடைசியாக விசாகதத்தனுக்கும், செங்கல்வராயனுக்கும் எச்சரிக்கை விடுத்தார் இந்திரவர்மர்.

ஆனாலும் அதை அசட்டை செய்து போரை தொடங்க உத்தரவிட்டான் விசாகதத்தன். போர் தொடர்ந்தது. எதிரிகளை வெட்டி வீழ்த்தினார்கள் அனைவரும்.


அன்றைய சூரியன் மறைவு வரை போர் தொடர்ந்தது. அதன் பின் போர்க்களத்தை கண்டவர்கள் மனம் வெகுவாக வருந்தியது. காயம் பட்டவர்களுக்கு சிகிச்சை நடந்து கொண்டிருந்தது. வலியில் கதறியவர்களின் ஒலி அனைவரின் இதயத்திலும் ரத்தம் கசிய வைத்தது. ஆங்காங்கு  விளக்கை பிடித்து கொண்டு பச்சிலை வைத்தியம் பார்த்து கொண்டிருந்த வைத்தியர்களை கண்டு உள்ளம் கசிந்தது. அடுத்த நாளும் கடுமையாக தொடர்ந்த போரில் எதிரிகளை வீழ்த்த முடியாமல் முகலாயர் படை திரும்பி சென்று விட்டது.

அதனால் எதிரிகள் படை சற்று பின் வாங்கியது. அடுத்த நாளில் விசாகதத்தன் தன்னுடைய மைத்துனனான இந்திரவர்மரிடம் போரை கை விட வேண்டி கொண்டான். அது மட்டும் அல்லாமல் தங்களின் நாட்டுக்கு கீழ் அடிமை நாடாக இருக்கவும் சம்மதம் கூறி விட்டு போரை நிறுத்தி விட்டான்.

விசாகதத்தனுக்கு மன்னிப்பை வழங்குவதற்கு முன் நரேந்திரவர்மனின் வாள் செங்கல்வராயானின் தலையை கொய்திருந்தது. ரத்த வெள்ளத்தில்  கீழே  விழுந்து  உயிர்  விட்டான்  செங்கல்வராயன் . அவன் படையும் திரும்பி சென்று விட்டன.

வெற்றி பெற்ற வீரர்கள் வீர கோஷமிட்டார்கள். கோலாகலத்துடன் ஒருவரை ஒருவர் தழுவி கொண்டார்கள். நரேந்திரவர்மன் மட்டும் செங்கல்வராயனின் நாட்டை நோக்கி புரவியை  திருப்பி விட்டான். ஆனால் அவனை எதிர்க்க ஆள் இல்லாமல் அவனை வரவேற்றார்கள் செங்கல்வராயனின் அமைச்சர்கள்.

செங்கல்வாராயன் போரில் மரணம் அடைந்ததை அறிந்த வசுமதி  அக்னி பிரேவேசம் செய்து தன் உயிரை மாய்த்து கொண்டாள்.

அந்த நாட்டையும் தன் வசமாக்கி கொண்டு வான்மதியை சிறையில் இருந்து அழைத்து வர உத்தரவிட்டான் நரேந்திரவர்மன்.

தலை முடிகள் கலைந்திருக்க, சோர்ந்த முகத்துடன், சாதாரண உடையில் சிறையில் இருந்து வந்தாள் வான்மதி.

அந்த சோர்ந்த நிலையிலும் அழகுடன்  இருந்த மனைவியை ரசித்து கொண்டே அவள் அருகில் வந்தவன் சுற்றி யார் இருக்கிறார்கள் என்று பாராமல் அவளை இறுக அனைத்து கொண்டான்.

இத்தனை நாட்கள் பிரிந்திருந்ததால் அவளுமே  உலகம் மறந்து அவனை தழுவி கொண்டாள்.

அவள் நெற்றியில் முத்தமிட்டவன்  “இனி உன்னை எங்கேயும் தனியே அனுப்ப மாட்டேன் தேவி. எங்கு சென்றாலும் நீ என்னுடன் தான் செல்ல வேண்டும். வா நம் அரண்மனைக்கு செல்லலாம்”, என்று கூறி அவளை தூக்கி குதிரை மீது அமரவைத்தவன், அவனும் அவள் பின்னே ஏறி கொண்டு அவள் இடையில் ஒரு கையும் குதிரையின் கடிவாளத்தை ஒரு கையிலும் பற்றி கொண்டு “வர்மா செல்”, என்று அந்த புரவிக்கு உத்தரவிட்டான்.

அதுவும் சீறி பாய்ந்து சென்றது. சிறிது நேரத்திலே வர்மனின்  கடிவாளத்தை கூட விட்டு விட்டான் நரேந்திரவர்மன். அதுவும் தன் எஜமானனின் மனதறிந்து அவனுடைய நாட்டை நோக்கி சென்றது.

எதை பற்றியும் சிந்திக்காமல் முழு கவனத்தையும் வான்மதி மீது வைத்தான் நரேந்திரவர்மன். இடையில் இருந்த கரம் செய்யும் சேட்டைகளை தாங்க முடியாமல் தவித்தாள். முதுகில் பயணிக்கும் அவனுடைய உதடுகளின் ஊர்வலத்தில் அவள் பெண்மை சிலிர்த்தது.

அவளை அவன் உள்ளமும், உடலும் தேடியதில் பெருமிதம் கொண்டாள். அவன் காதலில் சிக்குண்டவள் “சுவாமி நாம் இன்னும் அரண்மனைக்கு செல்ல வில்லை”, என்று எச்சரித்தாள்.

அவளுடைய வெற்று தோள்களின் மீது உதடு பதித்தவன் “இங்கு நீ, நான், நம் வர்மனை தவிர வேறு யாரும் இல்லை”, என்றான்.

“அப்படியா?  ஆனால் வர்மன் இருக்கிறானே? எனக்கு தங்களுடைய செய்கை அனைத்தும் கூச்சத்தையே  தருகிறது இளவரசே”

“அவன் இதை போல எதையும் காண கூடாது என்று தான் அவன் கண்கள் முன்னே இருக்கின்றன தேவி. அதனால் நீயும் கலங்கி, என்னையும் தடுக்காதே? எத்தனை நாள் பிரிவு தெரியுமா? உன்னை கண்ணால் காணும் வரை மனதுக்குள் பரதேசி போல் உணர்ந்தேன்.  காதல் கனவில் மூழ்கி இருந்த நான், உன் தோழியை சந்தித்து விட்டு விரைந்து வந்து விடுவாய் என்று எண்ணி இருந்தேன். ஆனால் உன்னை சிறை எடுத்ததை அறிந்து எவ்வாறு துடித்து போனேன் என்று அறிவாயா? நீ இல்லை என்றால் எனக்கு எதுவுமே இல்லை என்று தோன்றியது. உன் வாசம் என்னையே சுற்றி இருப்பது போல உணர்ந்தேன். உன் பிரிவை என்னால் தாங்க இயலவே  இல்லை. நீ சயனித்திருக்கும்  மஞ்சத்தை பார்க்கும் போது எனக்கு அந்த செங்கல்வராயன் மீது கொலை வெறியே உண்டானது”

….

“உன் வாசனை என்னை சுற்றி பயணித்து கொண்டே இருந்தது. என்னை நம்பி வந்தவளை காக்காமல் விட்டுவிட்டேன் என்று என் மனசாட்சியே என்னை கேள்வி கேட்டு கொன்றது.  உன்னை நெருங்க என் உடலும் மனதும் எப்படி பரபரத்தது தெரியுமா? உன்னை எப்படியாவது கண்டு விட மாட்டேனா என்று ஏங்கினேன். ஆனால் இடையே போர் வந்து நிற்கிறதே. ஆளாளுக்கு யோசனை சொல்கிறேன் என்று என்னை வதைத்தார்கள்.

என் தந்தை வேறு என் மனத்தை எண்ணாமல் நாட்டின் மகாராஜாவாக  இருந்து கொண்டு என்னை அதிகமாக வார்த்தையால் கொன்று விட்டார்”

….

“எனக்கு எப்போதுமே உன்னை போல் ஒரு பெண்ணை பெற்று தந்து என் வாழ்வையே மலர வைத்த உன் தந்தை மீது அதிக மரியாதை உண்டு. ஆனால் இன்று நான் என்ன செய்ய போகிறேன் என்று தவித்து கொண்டிருக்கும் போது, என் தந்தையே என் மீது நம்பிக்கை வைக்காத போது, உன்னுடைய தந்தை என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு பக்கபலமாக அனைத்து காரியங்களையும் செய்திருக்கிறார். காலம் முழுவதும் அவர் மீதுள்ள அன்பு மாறாது தேவி”

“அப்படியா? என் தந்தை புகழ் பாட காரணம் என்னவோ?”, என்று புன்னகையுடன் கேட்டாள் வான்மதி.

“அதை நீ அரண்மனைக்கு வந்த பிறகு தெரிந்து கொள்”

“ஏன், அதை நான் இப்போது தெரிந்து கொள்ள கூடாதா?”

“ஆம் கூடாது தான். ஏனென்றால் இப்போது உன் கவனம் அனைத்தும் என் மீது மட்டுமே இருக்க வேண்டும். மிக பெரிய மனப்போராட்டத்தில் நிம்மதி இழந்து, போர்க்களத்தில் வாழ் ஏந்தி, ரத்த கறைகளை கண்டு, மனம் நொந்து, உன்னை எப்படி மீட்பேனோ என்று அச்சம் கொண்டு, நிம்மதி இல்லாமல் இருந்தேன் தேவி.  இப்போது உன்னிடம் அமைதியாக இளைப்பாற எண்ணுகிறேன்.  உன்னுடன் வாழ்ந்தால் தான் என் மனசஞ்சலம் அனைத்தும் என்னை விட்டு சென்று என் மனதில் அமைதி கிட்டும். உன்னை எனக்கு இப்போது தருவாயா தேவி?”

அவன் கேள்வியில் நாணம் கொண்டவள், “இதற்கெல்லாம் அனுமதி கேட்கலாமா? ஆனால் அதற்கு நாம் அரண்மனைக்கு செல்ல வில்லையே?”, என்றாள்.

“ஏன் பஞ்சணையில் தான் என்னுடன் கூடுவாயா தேவி?”

“அவ்வாறு உறைக்காதீர்கள் சுவாமி. தங்களுடன் இருந்தால் மண் தரையும் எனக்கு பஞ்சு மெத்தை தான். நான் தனியிடம் இல்லை என்று தான் அவ்வாறு கூறினேன்”

“என் தேவி”, என்று அவளை உச்சி முகர்ந்தவன் அவளை இறுக்கி கட்டி கொண்டான். ஒரு மலை அடிவாரம் அருகே புரவியை நிறுத்தியவன், வர்மனுக்கு புல்லும் நீரும் இருக்குமாறு ஒரு இடத்தில் உள்ள மரத்தில் கட்டி போட்டான்.

அவன் செயலில் அவளுடைய உடல் முழுவதும் பரபரப்பானது. அவள் ரத்தநாளங்கள் அனைத்தும் சூடானது.

அவன் எதற்காக இந்த முன்னேற்பாடுகளை செய்கிறான் என்று அறிந்து கொண்டவளுக்கு வெட்கம் மிகுந்தது. அடுத்து என்ன செய்வான் என்ற ஆவலும் எதிர்பார்ப்பும் போட்டி போட்டது.

வர்மனை இளைப்பாற வைத்து விட்டு அதன் தலையை அன்புடன் தடவி கொடுத்தவன் போரில் அடிபட்டிருந்த அதன் காலில் ஒரு மருந்தை தூவினான். பின் அவள் அருகே வந்தவன் அவள் கை பற்றி அழைத்து சென்றான்.