Advertisement

அத்தியாயம் ஒன்பது:

“பத்த வெச்சிட்டுப் போயிடாண்டா”, என்பதைத் தவிர ஆகாஷால் ஒன்றும் நினைக்க முடியவில்லை. கனிமொழி அவனைக் கண்களாலேயே எரித்துக் கொண்டிருந்தாள்.

“நான் ஒண்ணும் பண்ணலை, அவன் தான் ரொமான்ஸ் அது இதுன்னு ஏதோ உளறிட்டு போறான்”, என்று ஆகாஷ் பேசுவதற்கு தடுமாறினான்.

அந்த தயக்கங்கள் எதுவும் கனியின் கண்ணில் படவில்லை. மீண்டும் அவனிடம் சண்டைக்கு கிளம்பினாள். “அவங்க ஒண்ணும் உளறலை, நீங்க செய்யறது தான் அப்படி பேச வைக்குது”.

“இப்படி உடம்பு இன்னும் சரியாகாத நிலைமையில, இப்படி ராத்திரில கிளம்பி வேகமா வண்டி ஓட்டிட்டு வந்திருக்கீங்க. அவங்க எல்லாம் என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க! உங்க வீட்ல இருக்கறவங்க என்ன நினைப்பாங்க! ஏன் இப்படி பண்றீங்க? நீங்க பண்றது சரியான்னு நீங்களே யோசிச்சுப் பாருங்க!”,

“அது எனக்கு உன்னைப் பார்க்கணும் போல இருந்துச்சு! அதுல நீ வேற அழுதியா? என்னாலத் தாங்க முடியலை, வந்துட்டேன்!”, என்றான்.

“இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலை! ஏன் நான் அழுதா என்னக் கரைஞ்சா போயிடுவேன்.  நான் என்ன அவ்வளவு பெரிய வீ ஐ பீ யா நான் அழுத உடனே நீங்க இப்படி ஓடி வர்றதுக்கு…..”,

“நீ எனக்கு அதுக்கும் மேல”, என்றான்.

“ப்ச்!”, என்றாள்……… “ஐ ஹேட் தீஸ் டையலாக்ஸ், டோன்ட் சே திஸ்….. நம்ம என்ன சின்னப் பசங்களா இப்படி லவ் டையலாக் பேசிட்டு திரியறதுக்கு, கொஞ்சமாவது பொறுப்பா இருங்க…..”,

“என்னால இந்த மாதிரி பேசவும் முடியாது, இந்த மாதிரி பேசறதை சகிக்கவும் முடியாது. ப்ளீஸ் இப்படி என் பின்னாடி சுத்தி எல்லார் முன்னாடியும் என் மானத்தை வாங்காதீங்க. புரிஞ்சுக்கோங்க என்னை!”, என்றாள் மன்றாடிய குரலில்.

“நீங்க எனக்கு க்ளோஸ் தான்! நான் உங்களை ரொம்ப நம்பறேன்! நீங்க என்னை காப்பாத்தியிருக்கீங்க! இன்னும் எனக்கு ஏதாவது ப்ரச்சனைன்னாலும் முன்னால வந்து நிப்பீங்க! எனக்கு தெரியுது…..! ஆனா அது வேற இது வேற…. !!!!!!!”,

“அது ஒரு உரிமை! தோழமை குடுத்த உரிமை! எனக்கு உங்ககிட்ட தோழமை தான் வேணும். நீங்க இப்படி பேசிடுவீங்கலோன்னு தான் உங்களுக்கு போன் பண்ணனும்னு தோணினாலும் நான் பண்ணாமலே இருந்தேன்! இந்த மாதிரி பேச்சுக்கள் நான் உங்ககிட்ட நெருங்கனும்னு நினைச்சாலும் என்னை விலக்கித் தான் வைக்குது!”,

அவள் பேசப் பேச அது மனதுக்கு பிடிக்காமல் சட்டென்று மாறினான் ஆகாஷ்…….. “என்னப் பிரச்சனை அதை முதல்ல சொல்லு”, என்று.

கனி அமைதியாக இருக்க…… “நீ சொல்ற மாதிரி நான் நடந்துக்கணும்னா, நான் சொல்ற மாதிரி நீ கேட்கணும்! என்ன பிரச்சனை?”, என்றான் மறுபடியும்…

குத்தகைக்காரர் சொன்னதை சொன்னாள்……..

அதை உள்வாங்கியவன், “வேற என்னப் பிரச்சனை?”, என்றான்.

அவளுக்கு ரத்னத்தின் ஞாபகம் வந்தாலும், “வேற ஒண்ணுமில்லையே”, என்றாள்.

“இல்லை! நீ என்கிட்ட பேசினப்போ நீ ரெண்டு மூணு பிரச்சனை சொன்ன மாதிரி தான் எனக்கொரு ஃபீல், மறைக்காதச் சொல்லு!”, என்றான்.

“அது பிரச்சனையா இல்லை தற்செயலா நடந்ததா தெரியலை! ப்ரியாவைக் கல்யாணம் பண்ணிக்குடுக்கப்போற வீட்ல இருந்து நேத்து குழந்தையை பார்க்க அந்த மாப்பிள்ளையோட அம்மா வந்தாங்க, கூட அந்த மாப்பிள்ளையோட அண்ணனும் வந்தான்……. அது எனக்குப் பிடிக்கலை”, என்றாள்.

“அவனுக்கு தானே உன்னை பொண்ணு கேட்டாங்க”,

“ஆமாம்”, என்று தலையாட்டியவள், “அவன் பார்வையே எனக்கு பிடிக்கலை! இந்த டென்ஷன் எல்லாம் சேரவும் ராத்திரி உங்க கிட்ட போன்ல அழுதுட்டேன்! சாரி!”, என்றாள்.

“உன் சாரியை தூக்கி குப்பைல போடு! என்கிட்டே அழாம வேற யார்கிட்ட அழற ஐடியா உனக்கு! இவனுங்க கிட்ட எல்லாம் போய் அழுது என்னை விட்டுடுங்கன்னு கேட்கப் போறியா!”, என்றான் கோபமாக.

அவன் மிகவும் கோபமாக இருப்பதை உணர்ந்து அமைதி காத்தாள்.

“விடு! என்ன செய்யறதுன்னு யோசிக்கலாம்! இப்படி எல்லாத்தையும் மனசுக்குள்ள பூட்டாத! சின்னதா டிஸ்டர்ப் ஆனாலும் என்கிட்டே சொல்லு, சரியா!”, என்றான் தன்மையாக……

“ம்”, என்று தலையாட்டினாள்.

அதற்குள் அவளின் அம்மாவும் அண்ணனும் காபியை எடுத்துக்கொண்டு வரவும், “கழனித்தண்ணி வந்துடுச்சு”, என்றான் அவளுக்கு மட்டும் கேட்குமாறு….

“எங்கம்மா போடுற காபி, உங்களுக்கு கழனித்தண்ணியா”, என்றாள் முறைப்பாக.

“நான் எங்க சொன்னேன், நீதானே சொன்ன”,

“பெரிய உண்மை விளம்பி! எங்கம்மாவை காபியை அப்படியே எடுத்துட்டுப் போக சொல்லிடுவேன்!”, என்றாள் மிரட்டலாக.

“அப்படி எதுவும் செஞ்சிடாத தாயே! உன்னை பார்க்க வர்ற அவசரத்துல பச்சை தண்ணிக் கூட இன்னும் பல்லுல படலை! இந்த சுடு தண்ணியவாவது ஊத்திகிறேன்!”, என்றான்.

“கழனித்தண்ணி போய் சுடு தண்ணியா”, என்று சொல்லி பல்லைக் கடிப்பது போல கனிமொழி பாவனை செய்தாலும் முகம் புன்னகையை பூசியது.

சற்று லகுவானால் கனிமொழி. அவளின் புன்னகை பூசிய முகத்தை அப்போதுதான்  நன்றாகப் பார்த்தான். நைட்டியில் இருந்தாள், கூந்தலை கொண்டையிட்டு இருந்தாள், சிறு ஒப்பனையும் இல்லை. தேர்ந்த ஓவியம் போல இருந்தாள்.

அழகி நீ பேரழகி……. 

ஏற்கனவே முப்பது வயதை நெருங்கிக்கொண்டு இருந்தான் ஆகாஷ். “இன்னும் எத்தனை நாள் எனக்கு பிரம்மச்சர்ய விரதம் தெரியலையே”, என்று மனதிற்குளேயே புலம்பிக்கொண்டான்.

“இவள் வேறு என்னிடம் இவ்வளவு கடுமையாக நடந்துக்கொள்கிறாள். தோழமை அது இது என்று பிதற்றுகிறாள். ஒரு வேளை எனக்கு திருமண ராசி இல்லையோ”, என்று மனதிற்குள் திடுமென்று தோன்ற அவனின் முகம் அப்படியே விழுந்தது.

கனியின் அம்மா காபியைக் கொண்டு வந்து நீட்ட……. அதை எடுத்துக்குடிக்கவே மனமில்லை கவனம் சிதறிற்று.

முயன்று கண்மூடி திறந்து கட்டுக்குள் வந்தான். அவன் மனதின் போராட்டங்கள் முகத்தில் பிரதிபலித்தன.

அவனையேப் பார்த்துகொண்டிருந்த கனிமொழிக்கு நன்கு தெரிந்தது. அம்மா நீட்டிக்கொண்டே இருக்கவும், இவன் எடுக்காமல் இருக்கவும், உடனே அருகில் வந்தவள் அவனின் காபியை எடுத்து அவனிடம் நீட்டினாள், “பிடிங்க”, என்று….

மகளின் உரிமையான செயல் அவளின் அம்மாவுக்கு மிகுந்த ஆச்சர்யத்தை கொடுத்தது.

“என்னடா இவ இப்படிச் செய்யறா?”, என்பது போல அசோக்கைப் பார்க்க.

“நான் பார்த்துக்கொள்கிறேன்”, என்பது போல கண்மூடி திறந்தான். பிறகு செந்திலையும் அழைத்து அசோக் காபி எடுக்கச் சொல்ல……

கையில் வைத்த காபி வைத்தபடி இருந்தான் ஆகாஷ். “குடிங்க”, என்றாள் மறுபடியும் கனிமொழி, அதன் பிறகே வாயருகில் கொண்டு சென்று குடிக்க ஆரம்பித்தான். இருந்தாலும் அவனின் முகம் தெளியவில்லை.

“என்னச் சொன்னோம், ஏன் இப்படி ஆகிட்டாங்க!”, அவளுக்கு ஒன்றும் புரியவில்லை….

சாப்பிட்டதும், “கிளம்பலாம் செந்தில்”, என்றான் ஆகாஷ். அவன் முகம் சரியில்லாதது செந்திலுக்கும் புரிந்தது.

இவள் ஏதாவது அவனை திட்டி விட்டாளோ! அதான் இப்படி இருக்கிறானோ என்று கனிமொழியை முறைத்தவன், “என்ன பேசின அவனை?”, என்றான்.

“நான் ஒண்ணும் பேசலை”, என்று அவள் சொல்லும்போதே……

“விட்றா, அவ ஒண்ணும் சொல்லலை! நாம இப்போ கிளம்பலாம்!”, என்றான்.

“மாமா வெளில நிக்கறார் உன்னை வீட்டுக்கு கூட்டிட்டுப் போக!”, என்றான் செந்தில்.

“அவர் எப்படிடா இங்க வந்தார்”,

“உங்கக்கா உன்னைப் பாருங்கன்னு சொல்லியிருப்பாங்க போல”,

“எனக்கு எங்கேயும் போகற மூடில்லை…… யாராவது அது இதுன்னு சொன்னீங்க….. இப்படியே மறுபடியும் நான் சென்னை கிளம்பிடுவேன்”, என்றான்.

எல்லோரும் அதிர்ந்தனர்……..

அப்போது பார்த்து செந்திலின் போன் ஒலித்தது………. அழைத்தது ராஜி.

“ம்! சொல்லு!”, என்றான் செந்தில்.   

“எங்க இருக்கீங்க? என்ன பண்றீங்க? சொல்லாம கொள்ளாம காலையில எங்க எஸ் ஆனீங்க? குளிச்சிட்டு வந்து பார்த்தா ஆளைக்காணோம்”, என்று பொறிந்தாள்.

“இரு! இரு! கேப் விடு! பேசிட்டேப் போற! இங்க ஆகாஷ் வந்திருக்கான். கனி வீட்ல இருக்கோம். அவனே வண்டி ஓட்டிட்டு வந்திருக்கான்”, என்று செந்தில் சொல்லவும் அவளும் பதறினாள்.

“என்ன அவரே வண்டி ஓட்டிட்டு வந்திருக்காங்களா”, என்று அவள் அதிரும் போதே….

இங்கே ஆகாஷ், “சொல்லாதடா”, என்று சிக்னல் செய்யும் போதே செந்தில் சொல்லிக் கொண்டிருந்தான்.

“யாரிடம் பேசுகிறார் இந்த செந்தில் அண்ணா! யாரிடம் சொல்லாதே என்பது போல இவர் சைகை செய்கிறார்!”, என்று கனிமொழி நினைக்க……

“இது கூடப் பரவாயில்லை! இப்போ உடனே மறுபடியும் சென்னை கிளம்பறேன்னு நிக்கிறான்…. என் மாமனார் இவனை கூட்டிட்டுப் போக வெளியே நிக்கறார்! இவன் அவர் வீட்டுக்கு போகமாட்டானாம்!”, என்று வத்தி வைக்க……

“போனை அவர்கிட்ட குடுங்க”, என்றாள்………

செந்தில் போனை நீட்டவும்……. ஆகாஷ், “நான் பேசலை திட்டுவா”, என்றான்.

“திட்டுனா வாங்கு! முதல்ல போனை பிடி! இல்லைன்னா நான் திட்டு வாங்குவேன்”,  என்றான்.

யாரிடம் இப்படி இருவரும் பயப்படுகிறார்கள் என்பது போல கனிமொழி அவர்களையே ஆராய்ச்சி பார்வை பார்த்திருந்தாள்.  

ஆகாஷ் போனை வாங்கவும் ராஜி ஏன் எதற்கு என்று எதுவும் கேட்கவில்லை, “இப்போ நீங்க எங்கம்மா வீட்டுக்குப் போறீங்க! ரெஸ்ட் எடுக்கறீங்க! எதுவா இருந்தாலும் அப்புறம் பேசலாம்! போங்க போய் சாப்பிட்டிட்டு ரெஸ்ட் எடுங்க!”, என்றாள்.

ஆகாஷும் அவளிடம் மறுத்து எதுவும் பேசவில்லை, “சரி”, என்றான் உடனே.

யாரிடம் அடங்கி இப்படி பேசுகிறான் இவன் என்பது போல கனிமொழி பார்த்திருந்தாள்.

ஆகாஷ் உடனே எழுந்தும் விட்டான், “போகலாம்”, என்று அப்போது பார்த்து குழந்தை சிணுங்கும் ஓசை கேட்க கனிமொழியைப் பார்த்தான்…….. அவனையாவது காட்டேன் என்பது போல…..

கனி குழந்தையைக் கொண்டு வந்தாள், அண்ணாமலை வெளியே  நிற்பதால் செந்திலும் அசோக்கும் வெளியேப் போக……. கனியின் அம்மா முன்னேயே உள்ளே சென்றிருந்தார்……

கனியும் ஆகாஷும் தனித்திருந்தனர், குழந்தையை லாவகமாக கையில் வாங்கினான்.

அவன் குழந்தையிடம் பார்வையை செலுத்தும் முன்னரே, “யார் போன்ல?”, என்றாள் கனி.

“ராஜேஸ்வரி”, என்றான் ஒற்றை சொல்லாய்.

“யார் ராஜேஸ்வரி?”, என்றாள் செந்திலின் மனைவியின் பெயர் என்பது அவளுக்கு தெரியவில்லை. ராஜி என்று தான் செந்தில் சொல்வான்.

“செந்தில் வைஃப்”, என்றான்.

“என்னச் சொன்னாங்க”,

“அவங்க அம்மா வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுக்கச் சொன்னா”,

அவளுக்கு இன்னும் இவர்களின் உறவு முறைகள் தெரியாது, அசோக் அவளிடம் எதுவும் பேசிக்கொண்டது இல்லை. இவளும் இதுவரை தெரிந்துகொள்ள விருப்பப்பட்டு கேட்டது இல்லை. கேட்டிருந்தால் அசோக் சொல்லியிருப்பான் தான். இப்போது தெரிந்து கொள்ளவேண்டும் என்று போல தோன்றியது.    

அவங்க அம்மா வீட்டுக்கு ஏன் போகணும் என்ற கேள்வி எழுந்தாலும், “நீங்க என்ன சொன்னீங்க”, என்றாள்.

“சரின்னு சொன்னேன்”, என்றான்.

“அவர்களிடம் ஏதாவது சொன்னால் நான் இப்படியே சென்னை கிளம்பி விடுவேன் என்று அந்த முறை முறைத்தான். அவள் ஒரு வார்த்தை சொன்னதும் உடனே சரியென்று விட்டானே”.

ராஜெஸ்வரியிடம் பேச பயந்து தயங்கியது, பின்பு அவள் சொன்னதும் ஒரு வார்த்தை மறுத்து பேசாமல் ஒத்துக்கொண்டது கனிக்கு ஒரே யோசனையாக போயிற்று   

அவர்கள் தொலைபேசியில் உரையாடிய சில நொடிகளுக்கு இந்த கேள்வி அதிகம் தான் இருந்தாலும் தோன்ற உடனே கேட்டாள்,

“ராஜேஸ்வரி க்ளோஸ்ங்கறதால செந்தில் க்ளோஸ்ஸா இல்லை செந்தில் க்ளோஸ்ங்கறதால ராஜேஸ்வரி க்ளோஸ்ஸா”, என்றாள்.

என்ன கேள்வி இது என்பது போல ஆகாஷ் அவளை பார்த்தாலும்….. பதில் சொல்ல தயங்கவில்லை, அவளிடம் மறைக்க இதில் எதுவும் இருப்பதாக தோன்றவில்லை, “ராஜேஸ்வரி க்ளோஸ்ங்கறதால தான் செந்தில் க்ளோஸ் ஆனான்”, என்றான்.

“ஒஹ்!”, என்றாள்…. பொறாமை என்று சொல்லமுடியாது, ஆனாலும் ஏதோ இனம் புரியாத உணர்வு அவளுக்குள்.

“நல்லாத் தானே இருந்தீங்க………. திடீர்ன்னு ஏன் அப்செட் ஆனீங்க”,

“என்னை என் ஒவ்வொரு அசைவையும் இவள் கண்டுபிடிக்கிறாள், ராஜேஸ்வரியுடன் பேசிய சில நொடிகளிலேயே இவள் என்னை கண்டுக்கொண்டாள்”, என்று நினைத்தவன்……….. “ஒண்ணுமில்லை”, என்றான்.

“இல்லை! ஏதோ இருக்கு சொல்லுங்க”, என்று கட்டாயப்படுத்தினாள்…..

மனதில் உள்ளதை மறைக்காமல் சொன்னான், “எனக்கு கல்யாண ராசி இல்லையோன்னு நினைச்சேன்”, என்று.

அந்தக் குரல்………. அதில் தெரிந்த வலி! “ஏன் இப்படி பேசுகிறான்”, என்று தோன்றினாலும்…….  

“என்னப் பேச்சு இது! நான் ஒருத்தி வேண்டாம்னா எல்லோரும் சொல்லுவாங்களா என்ன?”,

“அதான் ஏற்கனவே ஒருத்தி சொல்லிட்டா! இப்போ நீ!”, என்றான் மனதிற்குள்.

அதற்குள் மேலே மேலே பேசிக்கொண்டு இருந்தாள்…… “நீங்க எவ்வளவு ஹான்ட்சம்! நிறையப் படிச்சிருக்கீங்க! பெரிய கன்செர்ன் இருக்கு! அதை நிர்வாகம் பண்றீங்க! இதையெல்லாம் விட நீங்க ரொம்ப நல்லவங்க!”, என்றாள்.

“இவ்வளவு இருந்தும் நீ என்னை வேண்டாம்னு தானே சொல்ற”,

“ப்ச்! நான் வேற! நான் இன்னொருத்தரோட மனைவி! ஒரு குழந்தைக்கு அம்மா!”,

அவள் இந்த வார்த்தைகளை சொல்லச் சொல்ல அவனுக்குள் ஒரு பிரவாகமாக உணர்வுகள் எழுந்தது…..

“இன்னொரு தடவை நீ இதைப் பத்தி என்கிட்டே பேசக்கூடாது. பேசினே எனக்கு வர்றக் கோவத்துக்கு அப்படியே நாலு அப்பு அப்பிடுவேன்….”,

அவனின் கோபத்தைப் பார்த்து பயந்துப் போனாள்……..

“நீ என்ன ப்ரூவ் பண்ண இதை அடிக்கடி சொல்லிட்டே இருக்க! நான் அடுத்தவன் பொண்டாட்டி மேல ஆசைப்படறன்னா! அவ்வளவு கீழ்த்தரமனவனா நானு!”, என்று ஆகாஷ் ஆத்திரப்பட்டான்.

கனியின் வார்த்தைகளில் மனதே விட்டது அவனுக்கு….. “நான் உன்கிட்ட கல்யாணத்தைப் பத்தி பேசக்கூடாதுன்றதுக்காக என்னை இதுக்கு மேல அசிங்கப்படுத்தாத”, என்றான்.

தன் வார்த்தைகள் அவனை மிகவும் தாக்கிவிட்டதை உணர்ந்தவள், “சாரி”, என்றாள்.  

“இன்னும் எத்தனை சாரி தான் கேட்ப நீ”, என்றான் அவளையேப் பார்த்தவாறு……  

அதற்குள் குழந்தை அழத்துவங்க……. பசியாற்றும் நேரம் என்று உணர்ந்தவள், “பசிக்குது போல அழறான்”, என்று பேச்சை மாற்ற முயன்றாள்.

குழந்தையை பார்த்து தன் மனதை அமைதிப்படுத்த முயன்றான்…….. “நான் ஒரு முத்தம் குடுக்கட்டா குழந்தைக்கு”, என்றான்.     

“ப்ச்! என்ன கேள்வி இது குடுங்க”, என்றாள்.

அதன் நெற்றியில் மென்மையாக இதழை ஒற்றி எடுத்தவன்….. “இவன் பேர் என்ன?”, என்றான்.

“அதான் யோசிக்கறேன் ஒண்ணும் சிக்க மாட்டேங்குது! என் கணவரோட குல தெய்வம் பேரு வீர ராகவப் பெருமாள்! முதல் குழந்தைக்கு அது தான் வெப்பாங்க! இங்க இவனைப் பார்க்க வந்த எங்க சொந்தக்காரங்க எல்லாம் சொன்னாங்க!”, என்றாள்.

“இவள் இறந்துபோன இவளின் கணவனை விடவே மாட்டாளா! எங்க சொந்தக்காரங்கலாம் என்கிறாள்….. அப்போ நான் இவளுக்கு யாருன்னு தெரியலையே!”, என்று மனதிற்குள்ளேயே நினைத்தவனுக்கு…….

“நமக்கு திருமண ராசியே இல்லையா”, என்ற எண்ணம் ஒங்க ஆரம்பித்தது.

ஒன்றும் பேசாமல் குழந்தையை குடுத்து வெளியே போகப் போனான்.

அவனை தடுத்து, “நீங்க சொல்லுங்களேன் என்ன பேர் வைக்கலாம்னு?”, என்றாள்.

நிஜமாகவே சலிப்பாக இருந்தது ஆகாஷிற்கு, இவளை எந்த வகையில் சேர்ப்பது என்று……..

“முன்னாடி வந்தா கடிக்கிற நீ, பின்னாடிப் போனா உதைக்கிற நீ. மொத்தத்துல என்னைக்  கொல்ற நீ”, என்றான் மனதை மறையாமல். சொன்னவன் குழந்தைக்கு பேரைக் கூடச் சொல்லாமல் சென்றுவிட்டான்.

கனிக்கு அவனின் பேச்சில் அழுகை வரும் போல இருந்தது…. அதற்கு கூட விடாமல் குழந்தையின் தேவைகள் முன்நிற்க அவனைத் தூக்கிக்கொண்டு  ரூமிற்கு விரைந்தாள்.

வெளியே வந்த ஆகாஷின் முகத்தைப் பார்த்த அசோகிற்கு புரிந்தது அவன் மூட் அவுட் என்பது. அவனுக்கே புரியும் போது செந்திலுக்கு புரியாதா என்ன? செய்யும் வகையறியாது பார்த்தான்.

அதற்குள் அவன் அருகில் வந்த அண்ணாமலை எதுவும் அவனிடம் கேட்காமல் காரின் சாவிக்கு கையை நீட்டினார். அவரிடம் சாவியை இயந்தரகதியில் நீட்டினான்.

அவரிடம் செந்தில், “நீங்க போங்க மாமா! நான் வீட்டுக்குப் போய்க் குளிச்சிட்டு வர்றேன்!”, என்று அவர்களை அனுப்பி வைத்தான் செந்தில். அசோக்கிடம் ஒரு சிறு தலையசைப்போடு விடை பெற்றான் ஆகாஷ்.

அங்கே அண்ணாமலையின் வீட்டிற்கு சென்றவன் தேவிக்காவிடம் ஒன்றிரண்டு வார்த்தைகள் மரியாதை நிமித்தம் பேசி அவர் பரிமாறக் காலை உணவை உண்டு விட்டு அமைதியாக போய்ப் படுத்துக்கொண்டான்.

படுத்தவன் மாலை வரை நன்கு உறங்கினான் யாரும் அவனை எழுப்பவில்லை. மாலை அவன் எழும்போது ராஜி வீட்டில் இருந்தாள் இவனைக் காண…….

இவன் எழுந்துவந்ததும் காபியை நீட்டி அவன் எதிரில் அமர்ந்தவள்…… “என்ன லவர் பாய்! உங்க லவ்வரை பார்க்க அட்வென்ச்சர் பண்ற மாதிரி ரிஸ்க் எடுத்து வந்திருக்கீங்க! ஏற்கனவே ஒரு கத்திக் குத்து வாங்கியாச்சு! இன்னும் என்னப் பண்றதா உத்தேசம்!”, என்று கிண்டலாக கேட்டாலும் அதில் அவன் மேல் இருந்த அக்கறையுடன் கூடிய கோபம் நன்றாக வெளிப்பட்டது.

“அதான் தெரியலை”, என்றான்.

“என்னத் தெரியலை? கனி அக்காவைப் பார்த்து எத்தனை நாள் இருக்கும்! அதுக்குள்ள அவங்களுக்கு ஏன் இவ்வளவு பிரஷர் குடுக்கறீங்க! விட்டுப் பிடிங்க……..”,

“ஆமாம்! விட்டுப் பிடிக்கலாம்னு தான் உன்னை நினைச்சேன்! அதுக்குள்ளத் தான் நீ பறந்துப் போயிட்டியே! அப்படி ஏதாவது நடந்துடுச்சின்னா…….”, என்று மனதிற்குள்ளேயே நினைத்துக்கொண்டான் வெளியில் சொல்லவில்லை.

ராஜியும் மேலே பேசி அவனை சங்கடப்படுத்தவில்லை.

“எல்லாம் நல்லதாவே நடக்கும் அவசரப்படாதீங்க”, என்று மட்டும் சொன்னவள்…….

“நான் இன்னும் கனி அக்காவுக்கு பொறந்தக் குழந்தையை பார்க்கவே இல்லை! போகலாமா!”, என்றாள்.

கனியின் நான் இன்னொருத்தருடைய மனைவி என்ற வார்த்தைகள் அவனை மிகவும் காயப்படுத்தி இருந்தது. அதனால் “நான் வரலை நீ போயிட்டு வா”, என்றான் ஆகாஷ்.

“இப்படி எல்லாம் சொல்லக் கூடாது! முதல்ல எழுந்து ரெடி ஆகுங்க! கிளம்புங்க! கிளம்புங்க!”, என்றாள்…..

ஆகாஷ் இன்னும் யோசிக்கவும், “கிளம்புங்க நான் இன்னும் உங்க பியுட்டியோட  பேசினது கூட இல்லை! போலாம்! வாங்க! வாங்க!”, என்றாள்.

ஆகாஷ் கிளம்பி வந்தவன்……. காரை எடுக்கப் போக, “நோ! நோ! நீங்க ஸ்ட்ரெய்ன் பண்ணாதீங்க! இதை ஓட்ட என் டிரைவர் வந்துக்கிட்டே இருக்கார்!”, என்று அவள் சொல்லவும் செந்தில் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

ஆகாஷிற்கு தானாக புன்னகை மலர்ந்தது.

“நான் இப்போ தான் உங்களுக்கு ஒரு புது பிரமோஷன் குடுத்தேன்! என்னன்னு இவங்க கிட்ட கேளுங்க?”, என்று ஆகாஷை கைக் காட்டினாள்.

“என்ன பிரமோஷன்? அப்பாவா!”, என்றான் செந்தில் அவளைப் பார்த்து கண்ணடித்தபடி….

“அடங்கவே மாட்டியா நீ!”, என்று அவன் தலையில் செல்லமாக குட்டிய ராஜி,

“ம்! நான் உன்னை என்னோட டிரைவர்ன்னு சொன்னேன்”, என்றாள்.

“சரியாத்தான் சொல்லியிருக்க! இதுல பிரமோஷன் எங்க இருந்து வந்தது. நிறைய ஹஸ்பண்ட்ஸ் அவங்க வைஃப்க்கு பார்க்கிற உருப்படியான வேலை இதுதான்”,

“சரிங்க புருஷா! நீங்க சம்சார சாகரத்துல தொபுக்கடீர்ன்னு குதிச்சு, அதுல நீந்தி கரையேறி, டாக்ட்ரேட் வாங்கிடீங்கன்னு எனக்கு தெரியும்! இப்போ வண்டியை எடுக்கறீங்களா!”, என்றாள் கைகட்டி வாய் பொத்தி போலி பணிவுடன்.  

“உத்தரவு மகாராணி”, என்று செந்தில் அவளின் முன் ஒரு சல்யூட் வைத்து அவளுக்கு காரின் கதவை திறந்து விட…… மறுபடியும் அவனை செல்லமாக தலையில் குட்டு குட்டி ஏறினாள்.

அவர்களின் சீண்டலகளை பார்த்த ஆகாஷின் மனம் லேசானது. காலையில் இருந்து இருந்த சஞ்சலங்கள் மறைந்துப் போனது. புன்னகை முகத்துடனே கனியின் வீட்டிற்கு கிளம்பினான்.

இவர்கள் வருவது முன்னமே அசோகிற்கு தெரிந்ததால், அவனின் அப்பாவை அவன் ஃபாக்டரிக்கு அனுப்பி விட்டு இவர்களுக்காக காத்திருந்தான். கனிமொழியிடம் இவர்கள் வருவது எதுவும் சொல்லவில்லை.

ராஜி, செந்தில், ஆகாஷ் மூவரும் வீட்டுக்குள் நுழைந்ததும் யாரோ வந்திருக்கிறார்கள்  என்ற  அரவம் கேட்க……… யார் என்று பார்க்க கனி வெளியில் வந்தாள்.

அப்போதுதான் முதன் முதலில் ராஜியை பார்க்கிறாள் கனி…….. இதுவரை அவளை பார்க்கும் சந்தர்ப்பங்கள் அமைந்ததில்லை. கனியின் திருமணத்திற்கு ராஜி போயிருந்தாலும் அந்த ஞாபகங்கள் எல்லாம் கனிக்கு இல்லை.

“வாங்க!”, என்றாள் பொதுவாக….. கனியின் அம்மாவும் வந்து, “வாம்மா”, என்றார் ராஜியைப் பார்த்து……

“இது ராஜ ராஜேஸ்வரி, என் மனைவி!”, என்று கனிக்கு அறிமுகப்படுத்தினான் செந்தில். செந்தில் அறிமுகப்படுத்தவும் ராஜி அவளைப் பார்த்து பளிச்சென்று புன்னகைத்தாள்.

அவளைப் பார்வையால் அளந்தாள் கனி. அழகி என்று சொல்லமுடியாவிட்டாலும் பார்ப்பதற்கு நன்றாக இருந்தாள். அதையும் விட அவளிடம் ஒரு நிமிர்வு இருந்தது. கம்பீரம் இருந்தது. நேர் பார்வை இருந்தது. ஒரு செல்வச் செழிப்பு தெரிந்தது.  

Advertisement