Advertisement

அத்தியாயம் எட்டு:

அசோக் குழந்தையை லாவகமாக வாங்கி கனிமொழியிடம் கொடுத்து கண்ஜாடையில் அவளை உள்ளேப் போகச் சொன்னதை ரத்னம் பார்த்துக்கொண்டு தான் இருந்தான்.

“போங்கடா போங்க! அண்ணனும் தங்கச்சியும் எங்கேப் போயிடப் போறீங்க! என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாதுடா!”, என்று  மனதிற்குள் கறுவிக்கொண்டான்.

அவன் அவர்களின் சொந்த பந்தங்களை கொண்டு அசோக்கையும் கனிமொழியையும் எடைப் போட்டான். ஒரு பிரச்சனை என்றால் யாரும் உயிரை பணயம் வைத்து துணிந்து வரமாட்டார்கள் என்று தெரியும்.

ஆனால் அவனுக்கு தெரியாதது அசோக்கின் பின்னால் செந்தில் இருப்பதும் கனிமொழியின் பின்னால் ஆகாஷ் இருப்பதும்…… அவர்கள் உயிரைக் கொடுப்பது என்ன? அதை அவர்களுக்காக எடுக்கவும் தயங்க மாட்டார்கள் என்று.

அதன் பிறகும் ஒரு அரை மணிநேரம் பேசிக்கொண்டு இருந்த பிறகே ரத்னமும் அவனின் அம்மாவும் கிளம்பினார்கள்.

கனிமொழிக்கு தன்னை மீறி எல்லாமே தன்னைச் சுற்றி நடப்பதாக ஒரு எண்ணம் தோன்ற ஆரம்பித்தது. அவர்கள் சென்றதும் அவளின் அண்ணனை தேடி வந்தவள், “என்னண்ணா இப்படி சொல்றாரு அந்தக் குத்தகைகாரரு! யாரு அவன்? என்ன பண்ணலாம்?”, என்றாள்.

“எனக்கேத் தெரியலைம்மா யோசிக்கலாம்……”,

“ஒரு தடவை நானும் நீயும் போயி அவங்களையெல்லாம் பார்த்துட்டு வரலாமா”,

“வேண்டாம்மா, இப்போ எதுவும் வேண்டாம்! உனக்கு குழந்தை பொறந்து பத்து நாள் தான் ஆகுது! இப்போல்லாம் நீ எங்கயும் போகவேண்டாம்!”, என்று விட்டார்கள் அவளின் அன்னையும் தந்தையும்.

பின்பு அசோக்கும் அவனின் தந்தையும் சென்று அவர்கள் எல்லோரையும் ஒரு முறை பார்த்து வருவது என்று முடிவாகிற்று.

இந்த பிரச்சனைகளில் கனி ஆகாஷிற்கு போனில் அழைக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்ததையே மறந்துப் போனாள். இப்போது அவள் நினைவில் எல்லாம் அந்த ரத்னமும் அந்த முகம் தெரியாத அவள் கணவனின் சித்தப்பா மகனும் தான் இருந்தனர்.

இருவருமே அவளுக்கு பெரிய பிரச்சனையாக இருப்பர் என்று உள் மனது சொல்லியது. என்ன மாதிரியான பிரச்சனைகள் கொடுக்கக் கூடும், எப்படி சமாளிப்பது என்று அந்த யோசனையிலேயே இருந்தாள்.

அவளுக்கு பல நினைவுகள் இருக்கலாம் ஆனால் ஆகாஷின் ஒரே நினைவு அவள் தானே. அவனுக்கு ஆபரேஷன் செய்ததால் நந்தனை அவனுடன் படுக்க விடாமல் அனிதா தன்னுடன் அழைத்துக்கொண்டாள்.

எப்போதும் போல பழைய பாடல் ஒன்று ஓடிக்கொண்டிருக்க உறக்கம் வராமல் தவித்துக்கொண்டிருந்தான்.

முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
உள்ளம் உறவாடுதுந்தன் அன்பாலே

வெள்ளியலை மேலே
துள்ளும் கயல் போலே
அள்ளி விழி தவலக் கண்டேன் என் மேலே…….

பாடலின் ரம்மியம் அவனுக்கும் அந்த உணர்வுகள் வேண்டும் வேண்டும் என்று கேட்டது. எங்கே கனிமொழி தான் அவனை திரும்பிப் பார்ப்பதாகக் காணோமே!!!

அன்று அழைப்பாள் என்று வெகுவாக எதிர்பார்த்துக் காத்திருந்தவன் அவள் அழைக்கவில்லை என்றதும் ஏமாற்றத்தை விட கோபம் அதிகமாக வந்தது.

இதற்கு மேல் தாங்காது என்று முடிவு செய்தவன்… அவளை அழைத்தான்.

இரண்டு முழு ரிங் போய் கட்டானது. டென்ஷனானது அவனுக்கு இருந்தாலும் பேசாமல் விடுவதில்லை என்று மூன்றாவது முறையும் அழைத்தான். வெகு நேரம் போன் அடித்தப் பிறகே எடுத்தாள்.

“ஏன் போனை எடுக்க இவ்வளவு நேரம்”, என்று அவன் சத்தம் போட….

“அறிவிருக்கா உங்களுக்கு! ஒரு தடவை எடுக்கலைன்னா அப்புறம் கூப்பிடுவேன்னு விடமாட்டீங்களா! இப்படித் தான் விடாம கூப்பிடுவீங்களா”,

“ஆமா நீ என்னைக் கூப்பிட்டுக் கிழிச்ச”,

“மணி என்ன இப்போ தெரியுமா? முதல்ல அதைப் பாருங்க”, என்றாள்….

பார்த்தான், மணி நள்ளிரவு ஒன்றரை என்றது.

“நான் டைம் பார்க்கலை”, என்றான் முறைப்போடு.

“அங்க ரூம்ல அம்மாவும் குழந்தையும் தூங்கறாங்க……. இந்த நேரத்துக்கு போன் அலறுனா அவங்க எந்திரிக்க மாட்டாங்க…… அதை சைலென்ட் மோட்ல போட்டு வெளில ஹால்ல வந்து பேசறேன். இங்கயும் மெதுவா தான் பேசறேன். அண்ணா தூங்கறான் இங்க”, என்றாள்.

“அப்போ நான் வெச்சிடறேன்”, என்று பட்டென்று டிஸ்கனெக்ட் செய்துவிட்டான்.

அவன் வைத்த அடுத்த நிமிடம் அவனின் போன் அடித்தது. கனி மறுபடியும் அழைத்துக்கொண்டிருந்தாள்,

எடுத்த அடுத்த நிமிடம் பொறியத்துவங்கினாள்…… “மிட்நைட்க்கு கூப்பிட்டுட்டு இது என்ன கலாட்டா? இந்த நேரத்துக்கு போன் பண்ணினா என்ன ஏதுன்னு நினைப்பாங்க……. என்ன விஷயம் சொல்லுங்க?”,

“ஒண்ணுமில்லை! உன்கிட்ட பேசணும் போலத் தோணிச்சு! டைம் கவனிக்கலை! சாரி வெச்சிடறேன்”, என்று மறுபடியும் வைக்கப் போனான்…..

“ஏய் லூசு! உனக்கு ஒரு தடவை சொன்னாப் புரியாதா? என்ன விஷயம் சொல்லு”, என்று அவளையும் மீறிக் கத்திவிட்டாள். கத்தினப் பிறகு தான் அது இரவு, அசோக் உறங்குகிறான் என்று ஞாபகத்திற்கு வர குரலை தழைத்தாள். ஆனால் அவளின் லூசு என்ற அழைப்பிலேயே விழிப்பு வந்திருந்தது அசோகிற்கு.

கனி யாரிடமோ போனில் பேசுகிறாள் என்பது புரிந்தது. நேரம் பார்க்க நள்ளிரவு நேரம் ஒன்றரை என்றது.

கண்மூடி அவளின் பேச்சைக் கவனிக்க ஆரம்பித்தான்.

“லூசா இருக்கவும் தான் உன்னையே நினைச்சிட்டு உட்கார்ந்திருக்கேன்”, 

“இப்படிப் பேசாத! எதுக்கு கூப்பிட்ட அதை மட்டும் சொல்லு”,

“ஏய்! ஓவரா ஆடாத! கூப்டேன், இப்போ அதுக்கு என்ன?”,

“யாரு நான் ஆடறேன்….. கூப்பிட்டது நீ….. நீ பேசு!”, என்றாள்.

“என்னத்தைப் பேச! அதான் பையித்தியக்காரன் மாதிரி பத்து நாளா நீ இப்போ போன் பண்ணுவ அப்போ போன் பண்ணுவன்னு போனையே முறைச்சுப் பார்த்துட்டு உட்கார்ந்திருந்தேன். இன்னைக்கு என்னால உன்கிட்ட பேசாம இதுக்கு மேல இருக்க முடியாதுன்னு கூப்பிட்டேன்! போதுமா!”, என்று அவனும் பொறிந்தான்.

“நீ இப்படி யெல்லாம் உளறி வைப்பேன்னு தான் நான் உன்னைக் கூப்பிடலை போதுமா”, என்றாள் பதிலுக்கு அவளும்.  

“நான் உன்னை நினைச்சிட்டே இருக்கேன்றது உனக்கு உளறல் மாதிரி தெரியுதா”,

“ஆமாம்! எனக்கு இது உளறல் தான்! இனிமே இப்படிப் பேசாத!”, என்றாள் கட் அண்ட் ரைடாகா….

பன்மையில் இருந்து ஒருமைக்கு மாறியிருந்தாள்.

“நான் இப்படி தான் பேசுவேன், உன்னால என்னப் பண்ண முடியுமோ பண்ணிக்கோ”, என்றான்.

“என்னால……. என்னால……. ஒண்ணும் பண்ண முடியாதுன்னு நினைச்சு தானே ஆளாளுக்கு என்கிட்டே வம்புப் பண்றீங்க”, என்றவளின் குரல் கோபத்தை விட்டு தழுதழுக்க ஆரம்பித்தது.

“யாரு? யாரு வம்புப் பண்ணினா?”, என்று பதறினான்.

காலையில் இருந்து அவளின் மனதில் அரித்துக் கொண்டிருந்த ரத்னத்தின் விஷயமும் அவள் கணவனின் சித்தப்பா மகனின் விஷயமும் அவளின் மனதை அழுத்த அழுகையாக மாறிற்று, அழ ஆரம்பித்தாள்.

இவ்வளவு நேரம் கண்மூடிப் படுத்திருந்த அசோக்கால் அவளின் அழுகையைப் பார்த்த பிறகும் அப்படி இருக்கமுடியவில்லை, எழுந்து அமர்ந்தான்.

அங்கே அவள் அழுகிறாள் என்று புரிந்த ஆகாஷும், “என்னக் கனி? என்ன சொல்லுடா? சொன்னா தானே தெரியும்”, என்று கெஞ்சத் துவங்கினான்.

“கனி என்ன ஆச்சும்மா?”, என்று அசோக் ஒரு புறம் கேட்க, அவனின் சத்தம் இப்போது ஆகாஷிற்கு கேட்டது.

கனிக்கு அழுகை நிற்கவேயில்லை………. “கனி! போனை அசோக் கிட்ட குடு!”, என்றான் ஆகாஷ்.

பதில் பேசாமல் போனை அசோக்கிடம் கொடுத்தாள் கனிமொழி……..

“என்ன பிரச்சனை அசோக்? ஏன் கனி அழறா? என்ன நடந்தது சொல்லுங்க?”, என்றான் ஆகாஷ் அவனிடம்..

“எனக்கே சரியாய் தெரியலீங்கலே”, என்றான் அசோக். அவனுக்கு அந்த நேரத்திற்கு அவளின் அழுகையைப் பார்த்ததும் ஒன்றும் ஓடவில்லை. என்னவாக இருக்கும் என்று யோசிக்கத் தோன்றவில்லை.  

“வெளில எங்கேயாவது உங்களுக்கு தெரியாமப் போனாளா”,

“இல்லை! எங்கேயும் போகலை!”,

“அப்புறம் எப்படி உங்களுக்கு தெரியாம இருக்க முடியும். என்ன கவனிக்கறீங்க நீங்க அவளை?”, என்று அவனிடம் சத்தம் போட்டான்.

ஒரு நிமிடம் அசோகிற்கு வார்த்தையே வரவில்லை.

உடனேயே தன் தப்பை உணர்ந்த ஆகாஷ், “சாரி”, என்றான்.

இருபுறமும் ஆழ்ந்த அமைதி இப்போது….. அதற்குள் சுதாரித்து இருந்தக் கனி, அவனிடம் இருந்து போனை வாங்கியவள்……. “வெச்சிடறேன் நாளைக்கு காலையில கூப்பிடறேன்”, என்றாள்.

“இரு! இரு! போனை வைக்காத! என்ன விஷயம்னு சொல்லு?”,

“ஒண்ணுமில்லை, நான் பார்த்துக்கறேன்”, என்றாள்.

“என்ன பார்ப்ப நீ? முதல்ல என்கிட்டே விஷயத்தை சொல்லு! இல்லை காலையில என்கிட்டே நீ போன்ல பேசமாட்ட, நேர்ல தான் பேசுவ! நான் அங்க இருப்பேன்!”, என்றான்.

“சும்மா பூச்சாண்டிக் காட்டாத! எல்லோரையும் விட நீதான் இப்போ பெரிய தலைவலி எனக்கு, போனை வை!”, என்று வைத்தாள்……….

ஒரு நிமிடம் கூட ஆகாஷ் தயங்கவில்லை……. அனிதாவிடம் சொன்னால் அவள் விடமாட்டாள் என்று தெரிந்து யாரிடமும் சொல்லாமல் காரை எடுத்துக்கொண்டு அப்போதே கிளம்பினான்.

“சாரி அண்ணா! காலையில இருந்து ஏதோக் குழப்பம். அதுல இவங்க வேற போன் செஞ்சாங்களா…… கண்ட்ரோல் பண்ண முடியாம அழுதுட்டேன்!”, என்றாள்.

“நான் உன்னை சரியா கவனிக்கலையா கனிம்மா”, என்றான் தழுதழுத்த குரலில்.

“ச்சே! ச்சே! என்ன அண்ணா நீ? யார் சொன்னது அப்படி?”,

“இந்த ஆகாஷ் தான் சொல்றான்”, என்றான்.

“அவங்க கிடக்கறாங்க விடுங்க! நான் அழுதேன் இல்லையா….. டென்சன் ஆகியிருப்பாங்க. வேற ஒண்ணுமில்லை! நீ அதையெல்லாம் எடுத்துக்காத, தூங்கு!”, என்று அவள் சொல்லும்போதே குழந்தை சிணுங்கும் ஓசைக் கேட்க குழந்தையை பார்க்க ஓடினாள்.

அசோகிற்கு புரியவில்லை, இவள் தனக்கு சப்போர்ட் செய்தாளா இல்லை ஆகாஷிற்கு செய்தாளா என்று………

அன்று கனியின் வீட்டில் எல்லோரும் அசந்து உறங்கி விட்டனர். எழும்போதே ஏழு மணியாகிவிட்டது. கனியின் சிறிய தங்கை லக்ஷ்மி வாசல் தெளித்து கோலம் போட வெளியே வந்தாள்.

தங்கள் வீட்டு வாசலின் முன் பெரிய கார் நிற்பதைப் பார்த்தவள் தான் தண்ணி தெளித்தால் காரின் மேல் சேறாக படுமென்று, அதை எடுத்தவுடன் தெளித்துக்கொள்ளலாம் என்று நினைத்து உள்ளேப் போனாள்.

எதிரே வந்த கனி, “என்ன லக்ஷ்மி இப்போதான் போன அதுக்குள்ள வந்துட்ட”, என்று கேட்க……

“வாசல்ல ஒரு பெரிய கார் நிக்குது. தண்ணி தெளிச்சா அதுமேல எல்லாம் படும். அதான் வந்துட்டேன்”, என்றாள்.

“அவன் தானா சொன்னது போல வந்துவிட்டானா”, என்று ஒரு நொடி தோன்ற வேகமாக ஓடினாள்………

ஓடிச் சென்று பார்க்க கார் நின்றுக் கொண்டிருந்தது. அது அவனின் வேறொரு கார். அதனால் அவளுக்கு அது அவன் தான் என்று தெரியவில்லை. சற்று நேரம் ஏற்றியிருந்த கருப்புக் கண்ணாடியை வெறித்துப் பார்த்தவள், திரும்ப நினைக்கும் போது  கண்ணாடி இறங்க ஆரம்பித்தது.

இறங்கும் கண்ணாடி வழியாக ஆகாஷின் முகம் தெரிய ஆரம்பித்தது…….

“சொன்னதுப் போல செய்துவிட்டான்”, என்றதும் கனியின் முகம் கோபத்தை பூச ஆரம்பித்தது.

“உடம்பு சரியில்லாதவன் இவ்வளவு தூரம் வண்டி ஒட்டி வந்திருக்கிறானே, ஏதாவது ஒன்று ஆகிவிட்டால்”, என்று அவளின் மனம் பதைத்தது.

அவனை முறைத்துப் பார்த்தவள்…. வெடுக்கென்று உள்ளே சென்று விட்டாள். சென்றவள் போனை எடுத்து செந்திலை அழைத்தவள், “அண்ணா உடனே வீட்டுக்கு வர்றீங்களா”, எனவும்……

அவன் என்ன ஏதென்று பதறி, “என்னம்மா? என்ன?”, என்றான்.

“ஒரு இம்சை என்வீட்டு வாசல்ல நிக்குது! அஞ்சு நிமிசத்துல நீங்க இங்க இருக்கீங்க!”, என்று போனை வைத்துவிட்டாள்.

செந்தில் வேறு பதறிப் போனான். ஆகாஷ் வேறு அவனிடம் கனிமொழியை பார்த்துக்கொள்ளச் சொல்லி அத்தனை முறை சொல்லி அனுப்பினானே! என்ன பிரச்சனையோ தெரியவில்லையே என்று பதறியவன் உடைக் கூட மாற்றவில்லை, இருந்த லுங்கி மேல் ஒரு சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு ராஜியிடம் கூட சொல்லாமல் விரைந்தான்.

அங்கே சென்றுப் பார்த்தால் வாசலில் இருந்தது ஆகாஷின் கார். இவன் எப்பொழுது வந்தான் என்று அவசரமாக வண்டியை ஸ்டான்ட் போட்டு கூட நிறுத்தாமல் சுவர் மேல் சாய்த்து விட்டு போய் பார்த்தான்.

இவன் இவ்வளவு வேகமாக வருவதைப் பார்த்துக்கொண்டு அசையாமல் உட்கார்ந்து இருந்தான் ஆகாஷ்.

“நீ எப்போ வந்த ஆகாஷ்”, என்று செந்தில் கேட்க……

“அரை மணி நேரம் ஆச்சு”.

“நீயே வா டிரைவ் பண்ணிட்டு வந்த”,

“ஆமாம்”, என்றான்.

“அறிவிருக்காடா உனக்கு! சர்ஜெரி பண்ணி இருபது நாள் தான் ஆகுது! அதுக்குள்ள நீ டிரைவ் பண்ணியிருக்க! ஏதாவது ஒண்ணுக் கிடக்க ஒண்ணு ஆச்சுன்னா… ஏண்டா உயிரை எடுக்கற! எங்கேயாவது வலிக்குதா?”, என்றான் அவசரமாக.

“ஆமாம்”, என்று ஆகாஷ் தலையாட்ட…

“எங்கடா?”, என்று இன்னும் பதறினான் செந்தில்.

“இங்க”, என்று இதயம் இருந்த பகுதியை தொட்டுக் காட்ட…….

“வாயத்தொறந்து சொல்லு! எனக்கு புரியலை!”, என்றான் செந்தில்.

“என் மனசு வலிக்குதுடா”, என்றான் ஆகாஷ்.

“டேய்!”, என்று பல்லைக் கடித்தவன்……. “உன்னை”, என்று கழுத்தை நெரிப்பது போல கையை கொண்டு சென்றவன்………. “ம்கூம்! இதெல்லாம் சரிவராது!”, என்று அவனின் கழுத்தை அவனே நெரிப்பது போல செய்ய……

“செந்தில் வந்துவிட்டானா இல்லையா…….. இன்னும் இவர்கள் என்ன செய்கிறார்கள்”, என்று எட்டிப் பார்த்தக் கனி……… அவர்களின் பாவனைகளை பார்த்து இன்னும் கோபமானாள்.

செந்திலுக்கு மறுபடியும் செல்லில் அழைத்தவள்…….. “முதல்ல அவரை கூப்பிட்டிகிட்டு இடத்தை காலிப் பண்ணுங்க”, என்றாள்.

“ஏம்மா இப்படிப் பேசற?”, என்றான் செந்தில்.

“வேற எப்படி பேசுவாங்க! எனக்கு பார்க்க பார்க்க ஆத்திரமா வருது…… அந்த தண்டத்துக்கு தான் அறிவில்லைனாலும் உங்களுக்குமா அறிவில்லை! உடம்பு சரியில்லாம எவ்வளவு தூரம் வண்டி ஓட்டிட்டு வந்திருக்காங்க! வந்ததுமில்லாம இங்க எங்க வீட்டு வாசல் முன்னாடி நின்னுட்டு என்ன லுக்கு!”,

“எங்கப்பா என்னை மட்டும் பெத்து வெச்சிருக்கலை! என்னோட சேர்த்து இன்னும் ரெண்டு பொண்ணுங்களையும் பெத்து வெச்சிருக்காரு! இப்படி தெருவுல வந்து எங்க வீட்டு முன்னாடி என்ன சீன் இது? யாரவதுப் பார்த்தா என்ன நினைப்பாங்க? முதல்ல அவரை கூப்பிட்டுகிட்டு இங்கிருந்துப் போங்க!”, என்றாள்.

செந்தில் கனியிடம் தான் பேசுகிறான் என்று புரிந்த ஆகாஷ், “என்ன சொல்றா அவ?”, என்றான்.

“அவ திட்டுற திட்டு காது குடுத்து கேட்க முடியலை……… உன்னை இங்கிருந்து கூப்பிட்டுகிட்டு போறதாம்”, என்றான்.

“அதெல்லாம் போக முடியாதுன்னு சொல்லு”, என்றான் அலட்சியமாக.

“அதெல்லாம் போக முடியாதுன்னு சொல்றான்மா”, என்றான் செந்தில்.

“அந்த போனை அவர்கிட்ட குடுங்க”, என்று இங்கே கனி சொல்லும்போதே….. வாசலுக்கு வந்த அசோக், அப்போது தான் செந்திலையும் காருக்குள் இருந்த ஆகாஷையும் பார்த்தான்.

இவ்வளவு காலையில் இவர்கள் இங்கே என்ன செய்கிறார்கள் என்று அவர்களின் அருகில் போனான்.

அங்கே போனில் ஆகாஷை காய்ச்சி எடுத்துக்கொண்டு இருந்தாள் கனிமொழி….. “முதல்ல நீ இங்கிருந்து கிளம்பு……. இப்போ கிளம்பலை! நான் என்ன செய்வேன்னு எனக்கேத் தெரியாது? போ! முதல்ல நீ”, என்று கத்தினாள்.

அவள் கத்தியதில் என்னவோ ஏதோவென்று அவள் குடும்பம் மொத்தமும் வந்து அவளருகில் நின்று கொண்டது.

“சும்மாக் கத்தாத! நீ கத்துற கத்துக்கு போனே தேவையில்லை! நீ அங்க பேசுறது இங்க கேட்குது! மொதல்ல இந்த கத்துறத நிறுத்து”, என்றான் அசால்டாக ஆகாஷ்……

அதற்குள் அருகே வந்த அசோக் ஆகாஷையும் செந்திலையும் பார்த்து, “வாங்க! வீட்டுக்குள்ள போகலாம்”, என்றான்.

“அவளுக்கு இப்போ இருக்கிற கோபத்துக்கு நான் வந்தேன்! எதையாவது தூக்கி எல்லார் முன்னாடியும் என்மேல வீசினாலும் வீசிடுவா! ரௌடி அவ”, என்றான் ஆகாஷ்.

“நான் இருக்கேன் வாங்க!”, என்று அசோக் அவனை அழைத்தான்.

“எப்போ கிளம்பின ஆகாஷ்! ஏன் வர்றேன்னு ஒரு வார்த்தை கூட சொல்லலை!”, என்றான் செந்தில்.

“நைட் ரெண்டு மணிக்கு தான் கிளம்பினேன்”, என்றான் ஆகாஷ்.

“நைட் ரெண்டுக்கு கிளம்பி ஏழுமணிக்கு வந்துட்டியா! இவ்வளவு ஃபாஸ்டா வந்தியா நீ!”, என்று செந்தில் ஒரு புறம் கேட்க……..

“அப்போ நைட் போன் பேசினதுக்கு அப்புறம் கிளம்புனிங்களா”, என்று அசோக் கேட்டான்.

“ஆமாம்”, என்று ஆகாஷ் சொல்ல………. செந்தில் முழித்தான், “என்னடா நடக்குது”, என்று.

அசோக்கை செந்தில் பார்க்க…….. “அதொன்னுமில்லைடா, நேத்து கனிக்கு இவர் நைட் ஒன்னரை மணிபோல போன் செஞ்சார்…… என்ன பிரச்சனையோ அவ போன்ல அழுதுட்டா! அது தாங்காம இவர் கிளம்பி வந்துட்டார் போல!”, என்று காதைக் கடித்தான்…

“மச்சி! ஒண்ணு சொன்னா கோவிச்சுக்க மாட்டியே”, என்றான் செந்தில் அசோக்கை பார்த்து….

“என்னடா?”,

“இவங்களுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வெச்சிடலாம்டா…….. மீ பாவம்டா! இவன் காவியக் காதல் என்னால தாங்க முடியலைடா!”, என்றான்.

“வா! வா! நானும் நேத்து நைட்டே அந்த முடிவுக்கு வந்துட்டேன்! நாங்க வீட்ல இத்தனை பேர் இருக்கோம் எங்ககிட்ட எதுவும் சொல்லி புலம்பலை! அவன் போன் பண்ணினதும் அவன்கிட்டத் தானே இவளுக்கு அழத் தோன்றது. அழுதுட்டு ஒன்னரைமணிக்கு அவ போனை வைக்கிறா…….. காலைல ஏழு மணிக்கு சார் வந்து நிக்கறாரு”,

“இதுல நைட் என்னை வேற போன்ல திட்டறாண்டா…… நான் அவளை சரியா பார்த்துக்கலைன்னு”, என்று அசோக்கும் புலம்பினான்.

“போன்ல அழுதாளா? என்னை வேற இன்னும் என்னென்ன சொல்லப் போறானோ தெரியலையே! கடவுளே என்னை மட்டும் காப்பாத்துறா”, என்று எப்பொழுதும் போல ஒரு வேண்டுதலை வைத்தான் செந்தில்.

இவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டும் கேட்காமல் அவர்களோடு வீட்டுக்குள் வந்தான் ஆகாஷ்.

அங்கே அவனை கண்களாலேயே எரித்துக் கொண்டு நின்றிருந்தாள் கனிமொழி. அவளோடு அவளின் மொத்த குடும்பமும் நின்றிருந்தது, அவளின் அப்பா அம்மா மற்றும் இரண்டு தங்கைகள்.

கனியின் அம்மா ஆகாஷை ஹாஸ்பிடலில் பார்த்து இருகிறார்கள். ஆனால் கனியின் அப்பாவுக்கு அவனை யார் என்பது தெரியாததால், “யார் இவர்”, என்பது போல பார்த்தார்.

“நம்ம செந்திலோட பாஸ்பா, அவன் மில் ஓனர்”, என்று அசோக் அறிமுகப்படுத்த…..

“அசோக் தப்பா சொல்றாங்க!”, என்ற ஆகாஷ்…….

“நான் செந்திலோட பார்ட்னர், ஓனர் இல்லை! அப்புறம் இவங்களுக்கு ஃபிரன்ட்”, என்றான்.

ஓரளவுக்கு அண்ணாமலையின் விஷயம் தெரியும் என்பதால், “அப்போ அண்ணாமலைக்கு”, என்று அசோக்கின் தந்தையிழுக்க………

“மச்சினன்”, என்றான் மறைக்காமல் ஆகாஷ்.

அண்ணாமலை யார்? அவருக்கு ஆகாஷ் என்ன வேண்டும்? என்றெல்லாம் இன்னும் கனிக்கு தெரியவில்லை.

அவளோ அவனை முறைத்து பார்ப்பதையே தலையாய கடமையாய் வைத்திருந்தாள்.

ஆகாஷோ அவளின் பார்வையை தவிர்த்து சுற்றி இருந்தவர்களிடம் பார்வையை ஓட்டினான்.

அதற்குள் வீட்டு ஆளாய், “உட்காருங்க தம்பி”, என்று ஆகாஷை உபசரித்த அவளின் தந்தை, “இவ்வளவு காலையிலே வந்திருக்கீங்க, என்ன விஷயம் தம்பி”, என்றார்.

“அப்பா அவர் என்னைப் பார்க்க வந்திருக்கார்”, என்று பேச்சை முடித்தான் அசோக்.

“அப்போ சரி! நீ தம்பி கிட்ட பேசிட்டு இரு! நான் நம்ம ஃபாக்டரிக்கு போய் தறி போட ஆரம்பிச்சிட்டாங்கலான்னு பார்க்குறேன்!”, என்று எழுந்தவர்………

“கனி! யார்கிட்ட அவ்வளவு கோபமா பேசிட்டு இருந்த!”, என்றார் அப்போது தான் ஞாபகம் வந்தவராக…. எல்லோரும் இருப்பதையும் மறந்து.

“ப்ச்! வேலையைப் பார்த்து கிளம்புங்கப்பா”, என்றாள் கோபமாக…  

அப்போதுதான் வெளியாட்கள் இருப்பதை உணர்ந்தவர்… “எப்பவும் கனி இப்படி பேசமாட்டா! என்னவோ இன்னைக்கு கொஞ்சம் மூடு சரியில்லை!”, என்று இவர்களிடம் சமாளித்தார்.

ஆகாஷ் வந்த சிரிப்பை வாய்க்குள் அடக்கினான்.

அதைப் பார்த்த கனிக்கு இன்னும் கோபம் அதிகரித்தது.

“அம்மா குடிக்க ஏதாவது கொண்டு வாம்மா”, என்று அவனின் அம்மாவிடம் அசோக் சொல்ல……

“ம்! கழனிதண்ணி கொண்டுவாங்க”, என்று கனிமொழி வாய்க்குள் முனுமுனுத்தாலும் வெளியே நன்றாகக் கேட்டது.

“என்ன கனி இது?”, என்று செந்திலும் அசோக்கும் ஒரு சேர கோபப்பட….

“விடுடா! விடுடா!”, என்றான் ஆகாஷ்.

அப்போதும் செந்தில் கோபப்பட்டான், “நீ பேசறது சரியில்லை கனி!”, என்று…..

அதற்கும் கனிமொழி ஆகாஷைப் பார்த்து முறைத்தாள்.

அசோக் அவனின் அம்மா அழைக்கவும் எழுந்து உள்ளேப் போக……

“டேய்! நீ கம்முனு இருடா! நீ அங்க ஏதாவது சொன்னா, அதோட எஃபக்ட் எல்லாம் இங்க தாண்டா வரும்”, என்றான் ஆகாஷ்.

“ஏண்டாப்பா! ரெண்டு பேரும் சேர்ந்து எங்களை பையித்தியக்காரங்க ஆக்கிடுவீங்க போல இருக்கே! என்ன ரொமான்ஸ்டா மாமு இது! உலகம் தாங்காதுடா சாமி!”, என்றான் கிண்டலாக செந்தில்.

அப்போதுதான் செந்தில் கவனித்தான் ஹாலில் அவர்களை தவிர யாரும் இல்லை என்று. கனிமொழிக்கும் ஆகாஷிற்கும் தனிமை கொடுத்து அவனும் அந்த இடத்தை விட்டு அகன்றான்.

செந்தில் ரொமான்ஸ் என்றதும் கனியின் கோபம் அளவில்லாமல் போனது,

“என்ன ரொமான்ஸா?”, என்று ஆகாஷைப் பார்த்து கேட்டவளின் பார்வை அவனை தீயில்லாமலேயே பற்றி எரிய வைத்தது.

Advertisement