அத்தியாயம் ஏழு:
உறங்கும் கனிமொழியை விழிகளுக்குள் நிரப்பியவன்……… பிறகு குழந்தையை சென்றுப் பார்த்தான், யார் ஜாடையில் இருக்கிறது என்று. அவனுக்கு அதிகமாக பார்க்கத் தெரியாவிட்டாலும் கூட நன்றாக தெரிந்து குழந்தை கனியின் ஜாடை என்று.
“ஹப்பா”, என்று ஒரு நிம்மதி மூச்சு கிளம்பியது அவனிடமிருந்து……. அவன் பயந்துக் கொண்டே இருந்தான், “குழந்தை ஒருவேளை அவனின் தந்தையின் ஜாடையில் பிறந்து வைத்திருந்தால் அவன் வேறு அவனின் தந்தையை கனிமொழிக்கு ஞாபகப்படுத்திக் கொண்டிருப்பானே”.
இப்போது தான் அவனுக்கு நிம்மதி ஆகிற்று. அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே குழந்தை மெல்லிய குரலில் சிணுங்க ஆரம்பித்தது. அவசரமாக போய் கையை சோப்பு போட்டு கழுவிக்கொண்டு வந்து விரல்களை வைத்து இதமாக குழந்தையின் உடம்பில் தட்டிக் கொடுக்க அது சிணுங்கலை நிறுத்தியது.
அவனுக்கு நந்தனையும் அக்ஷராவையும் பார்த்துக்கொண்டது கை கொடுத்தது.
கனிமொழியை எழுப்ப அவனுக்கு மனமேயில்லை……. இருந்தாலும் ஒரு வார்த்தையாவது பேசிவிட்டு சென்றுவிட வேண்டும் என்று நினைத்து, “கனி”, என்றழைத்தான்.
களைப்பில் தான் சிறிது கண் அசந்திருந்தாள்……. அவனின் குரல் கேட்டதுமே விழித்தாள்.
ஆகாஷ் அவளைப் பார்த்து புன்னகைத்து, “கங்ராட்ஸ் பையன் பிறந்திருக்கான்”, என்றான்.
ஒன்றும் பேசாமல் கையை நீட்டினாள்…..
அவள் கையை நீட்டியது அவனுக்கு அவ்வளவு ஆச்சர்யத்தை கொடுத்தது, வேகமாக வந்து கைகளை பற்றினான்.
கையை இறுக்கமாக பற்றியவள், “தேங்க்ஸ்”, என்றாள்.
அவளின், “தேங்க்ஸ்”, அவனுக்கு இன்னும் ஆச்சர்யத்தை கொடுத்தது. ஏனென்றால் அவளை கத்திக்குத்தில் இருந்து காப்பாற்றிய போது கூட தேங்க்ஸ் சொல்லவில்லை.
அவள் பற்றிய கையின் மேல் இன்னொரு கையை வைத்தவன், “எதுக்கு”, என்றான்.
“நீங்க மட்டும் கட்டாயப்படுத்தி என்னை உடனே ஹாஸ்பிடல் போகலாம்னு சொல்லி கூட்டிட்டு வராம இருந்திருந்தா என் பையன் நடுவழில பொறந்திருப்பான்……. என்னால அப்படி ஒன்னை யோசிக்கக் கூட முடியலை……. எனக்கு ரொம்ப கஷ்டமா போயிருக்கும்…… அப்படி நடக்காம என்னைக் காப்பாத்தினதுக்கு”, என்ற அவளின் குரல் தழுதழுத்தது…… கண்களின் ஓரம் நீர் துளிர்த்தது.
பற்றியிருந்த அவளின் கையை விடாமல் ஒரு கையால் அதைத் துடைத்தவன்… “எப்பவும் உன்கூட நான் இருக்கேன்…… அதை எப்பவும் மறக்காத…….. எனக்கு உன்கூடத் தான் வாழ்க்கை அமையணும்……. உனக்கு எப்படி இருக்கணுமோ இருக்கலாம்…… நான் உன்னை எதுக்கும் கட்டாயப்படுத்த மாட்டேன்…….”,
“என்னால உன்னை விட்டுட்டு இருக்க முடியலை……. உன்னைப் பார்த்த இந்த பத்து நாள்ல நான் நானாவே இல்லை….. என்னோட வந்துடு…….. என் மனைவியா……….. அதுக்காக நீ என்னச் சொன்னாலும் செய்யத் தயாரா இருக்கேன்……. ஒரு தடவை யோசிக்கிறியா”, என்றான் இதமாக……
அவனை நேர் பார்வை பார்த்தவள், “எனக்கு கல்யாணம் பண்ற எண்ணமே இல்லை. அப்படி ஒரு எண்ணம் வந்ததுன்னா உங்களைத் தவிர வேற யாரையும் நான் கல்யாணம் பண்ண மாட்டேன். இட்ஸ் எ ப்ராமிஸ்!”, என்றாள்.
பற்றியிருந்த கைகளில் ஒரு அழுத்தம் கொடுத்து விடுவித்தான்.
“நான் ஊருக்கு கிளம்பறேன், எங்கேயும் தனியாப் போயிடாத! எதுன்னாலும் தயங்காத உடனே எனக்கு போன் பண்ணு! ஜாக்கிரதையா இரு! உன்னைச் சுத்தி என்ன நடக்குதுன்னு எப்பவும் கவனிச்சிகிட்டே இரு!”,
“உன்னைச் சுத்தி உனக்கு தெரியாமையே உன் பாதுக்காப்புக்கு ஆளுங்களை போட்டிருக்கேன்! அதனால பயம் இல்லாம இரு!”, என்று சொல்லி பிரியாமல் பிரிந்து சென்றான்.
செந்தில் தான் அவனின் காரை ஒட்டிக்கொண்டு சென்னை வரை வந்தான். “நீ ஏன் அலையற…… டிரைவர் ஏற்பாடு பண்ணிக் குடு போதும்!”, என்று ஆகாஷ் சொன்ன போது கூட மறுத்துவிட்டான்.
“நான் என்ன சும்மா சொல்றேன்னு நினைச்சியா! உன்னை பத்திரமா கொண்டு போய் உன் வீடு சேர்க்கலைன்னா நிஜமாவே என்னை ராஜி வீடு சேர்க்க மாட்டா! அதனால நீ எதையும் யோசிக்காம ரெஸ்ட் எடு! காலையில இருந்து ரொம்ப அலைஞ்சிட்ட!”, என்று சொல்லி அலுங்காமல் குலுங்காமல் அவனை சென்னை கொண்டு வந்து சேர்த்தான்.
அனிதாவிடமும் அப்பெண்டிக்ஸ் என்றே சொல்லப் பட்டது. அவள் பயந்து போவாள் என்று உண்மையாக நடந்ததை சொல்லவில்லை. ஆனால் வந்தவுடனே செந்தில் இருக்கும்போதே கனிமொழியை பற்றி அனிதாவிடம் சொல்லிவிட்டான்.
தன்னுடைய முந்தைய நிலைமையே அவனை இந்த மாதிரி ஒரு முடிவு எடுக்க தூண்டியதோ என்று அனிதா அவனிடம் ஐயப்பட…….
“இருக்கலாம்”, என்று அவளிடம் சொன்னவன்…… “ஆனால் இதையெல்லாம் மீறி ஐ லவ் கனி”, என்றான் ஆத்மார்த்தமாக.
அவன் ஒரு சமையத்தில் ராஜியை திருமணம் செய்ய இஷ்டப்பட்ட போதுகூட இப்படி வெளிப்படையாக பேசிய க்ஷணங்கள் குறைவு.
“சரி! அவ என்ன சொல்றா? அவளுக்கு சம்மதமா?”,
“அது தான் இப்ப பிரச்சனை….. அவளுக்கு இதுல சம்மதமில்லை”,
“அப்புறம் என்ன பண்ணப் போற?”,
“ஒண்ணும் பண்ணப்போறதில்லை! அவளா என்கிட்டே வருவான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு! முதல்ல கட்டாயப்படுத்தலாம்ன்னு நினைச்சேன், ஆனா இப்ப என் முடிவை மாத்திகிட்டேன்! அவளா என்கிட்டே வருவா!”, என்றான் நம்பிக்கையோடு.
“எப்படிடா சொல்ற?”,
“அவ என்கிட்டே சொல்லியிருக்கா, கல்யாணம் பண்றதுன்னு அவ முடிவெடுத்தா என்னைத் தான் பண்ணிக்குவேன்னு. அதனால எனக்கு நம்பிக்கை இருக்கு! வருவா!”, என்றான்.
“இவனோட அளப்பற தாங்க முடியலைடா……. காவியக்காதல் ரேஞ்சுக்கு பேசிட்டு இருக்கான்”, என்று அவனை செந்தில் பார்க்க…….
“என்ன படத்தைடா மனசுக்குள்ள ஓட்டிட்டு இருக்க……”, என்று அவனின் முக பாவனைகளை பார்த்த ஆகாஷ் கிண்டலடிக்க…..
“ம்! படத்தின் பெயர் காவியக்காதல்! நாயகன் திருவாளர் ஆகாஷ்! நாயகி திருவளர்செல்வி கனிமொழி!”, என்று பாவனையோடு சொல்ல…….
அனிதா வாய்விட்டு சிரித்தாள்……
“படம் ஹிட்டாகுமா? ப்ளாப் ஆகுமா?”, என்று அனிதா கிண்டல் செய்ய………
“தானா விட்டா கூட ஹிட் ஆகிடும்….. ஆனா இவன் பிரமோட் பண்றன்னு செய்யற அலும்புல கொஞ்சம் சந்தேகம் தான்……… பாருங்க நேத்து கூட…..”, என்று அவன் அடிவாங்கியதைப் பற்றி சொல்ல வாய் திறக்க…… அவன் வாயை கைக்கொண்டு மூடிய ஆகாஷ்.
“அவ செஞ்சதென்னவோ ஒரு தடவை தான்! அதை நீ பத்தாயிரம் தடவை சொல்லிட்ட! விட்டுடா!”, என்றான் பரிதாபமாக.
“என்ன செஞ்சா? என்ன செஞ்சா?”, என்று ஆர்வமாக அனிதா கேட்க…
“ஒண்ணுமில்லைக்கா”, என்று செந்தில் சொல்ல……
“ஒஹ்! என்கிட்டே சொல்ல மாட்டீங்களா என்ன? அடியா வாங்கியிருப்பான்…. அதை மறைக்கறதுக்கு!”, என்று சொல்லிக்கொண்டே அனிதா எழுந்து போக……
செந்திலால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை…….
அதன் பிறகு அக்ஷராவை தூக்கிக் கொண்டே சுத்தினான் செந்தில். அவனுக்கு அவளை கீழே விடவே மனமில்லை அவளும் அவனிடம் நன்கு ஒட்டிக்கொண்டாள்.
“ஆசையா இருந்தா ஒண்ணு பெத்துக்கோடா”, என்றான் ஆகாஷ்.
“எனக்கு தான் படிப்பு கம்மியா போச்சு, அவளாவது படிக்கட்டும், அப்புறம் பார்க்கலாம்”, என்ற செந்தில்,
“எங்க ரெண்டு பேரையும் ஒரு போட்டோ எடு, நான் ராஜிகிட்ட காட்டணும்”, என்றான் ஆர்வமாக.
“ஏண்டா அவகிட்ட உதை வாங்கணுமா”,
“லைசென்ஸ் இல்லாத நீயே வாங்கும்போது லைசென்ஸ் இருக்குற நான் வாங்கமாட்டேனா எட்றா எட்றா”,…… என்று அக்ஷ்ராவை கொஞ்சுவது போல போஸ் கொடுத்தான்.
“உன்கூட இருந்தா சிரிச்சு சிரிச்சே எனக்கு தையல் வலித்குதுடா”, என்று முனகிக்கொண்டே ஸ்னேப்ஸ் எடுத்துத் தள்ளினான் ஆகாஷ்.
பிறகு அவன் ஊருக்கு கிளம்ப……… ஆயிரம் முறையாவது செந்திலிடம் கனிமொழியின் பத்திரத்தை பற்றி சொல்லியிருப்பான்.
“டேய்! நான் செவிடா பிறந்திருக்கலாம்னு என்னை ஃபீல் பண்ண வெச்சிடாதடா”, என்று செந்தில் அலறிய பிறகே ஆகாஷ் அவனுக்கு விடைகொடுத்து அனுப்பினான்.
ஆயிற்று! பத்துநாள் ஆயிற்று! ஆகாஷ் இப்போது இன்னும் கொஞ்சம் நன்றாக தேறியிருந்தான். வேலைகளை வீட்டில் இருந்தே பார்க்க ஆரம்பித்தான்.
பத்து நாட்களாக கனிமொழியுடனும் எந்த தொடர்பும் இல்லை……. பேச வேண்டும் என்று மித மிஞ்சிய ஆவல் இருந்தாலும், அவள் தன்னிடம் பேசுவாளா? தன்னை தேடுவாளா? என்று தெரிந்துக்கொள்ள அதையும் விட ஆவல் இருந்ததால், மனதை கட்டுப்படுத்தி அவளை தொலைபேசியில் அழைக்காமல் இருந்தான்.
அங்கே கனிமொழிக்கும் ஆகாஷை பற்றி அவன் எப்படி இருக்கிறானோ? உடம்பு நன்றாகிவிட்டதா இல்லையா? என்று தெரிந்து கொள்ள வேண்டும் போல தோன்றினாலும் அவனை அழைக்க தயக்கமாக இருந்தது.
அவன் தான் சற்று இடம் கொடுத்தாலும் மடத்தை பிடுங்குகிற ஆசாமியாக இருக்கிறானே…… அந்த பயமே அவளை தயங்க வைத்தது.
கனிக்கு அவனோடு தோழமை வளர்த்துக்கொள்ள மிகுந்த விருப்பமாக இருந்தது. சற்று பிசகினாலும் வீணாக அவளுக்கு அவன் மேல் ஆர்வம் இருப்பதாக அவன் நினைத்துக்கொண்டால் என்ன செய்வது என்று ஒரே யோசனையாக இருந்தது. ஆனால் பேச வேண்டிய கட்டாயத்திலும் இருந்தாள்.
ஹாஸ்பிடலுக்கு அவன் முழுதாக பணம் கட்டியிருந்தான். இதில் இன்னொரு கூத்து என்னவென்றால் அவன் முன்பே அட்வான்சாக ஒரு பெரிய தொகையை கட்டியிருக்க அதன் மீதமே பதினேழாயிரம் ரூபாய் இருந்தது.
அவன் செலவு செய்த பணத்தை கட்டாயம் திரும்ப வாங்க மாட்டான் என்று தெரியும்….. அதற்காக அவள் அதை பற்றிக் கேட்கக் கூட மாட்டாமல் இருந்தால் எப்படி? அதை கேட்க வேண்டும் அப்படி வாங்கிக்கொள்ள மாட்டேன் என்று சொன்னால் மீதமுள்ள பணத்தையாவது திருப்ப வேண்டும் அல்லவா…..
செந்திலிடம் சொன்னால், “நீயாச்சு! அவனாச்சு! கனி நடுவுல நான் வந்தா அவனுக்கு பிடிக்காது! நீயேப் பேசிக்கோ!”, என்று விட்டான்.
ஆகாஷைக் கூப்பிடவா வேண்டாமா என்று காலையில் இருந்து யோசனையாக இருந்தது……..
கனிமொழிக்கு கூப்பிட எந்த அளவு ஆர்வம் இருந்ததோ அதைவிட தயக்கம் அதிகமாக இருந்தது.
அதற்குள் அவளையும் குழந்தையையும் பார்க்க விருந்தினர்கள் வந்திருப்பதாக அவளின் அம்மா வந்து சொல்லவும், “யாரும்மா”, என்றாள்.
“நம்ம பிரியாக்கு பார்த்திருக்கோம்ல மாப்பிள்ளை, அவங்கம்மாவும் அவங்க பெரிய பையனும் வந்திருக்காங்க”, என்றார் அவளின் அம்மா தயங்கி தயங்கி……
“அவங்கம்மா குழந்தையைப் பார்க்க வந்திருக்காங்க, அந்தாளு எதுக்கும்மா கூட வந்திருக்கான்”.
“எதுக்கு வந்தீங்கன்னு கேட்கவா முடியும் கனிம்மா”,
“அவனுக்கு தானேம்மா என்னை கல்யாணம் பண்றதுக்கு கேட்டாங்க”,
“ஆமாம்”, என்பது போல அவளின் அம்மா தலையாட்ட…….
“அவனை எதுக்கும்மா இங்க கூட்டிட்டு வந்திருக்காங்க……. இந்தம்மாவுக்கு கூடவா அறிவில்லாம போச்சு! நான் யார் முன்னாடியும் வந்து நிக்க முடியாது! எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை, தூங்கறேன்னு சொல்லுங்க, குழந்தையை மட்டும் கொண்டு போய் காட்டுங்க”, என்றாள்.
அவளின் அம்மாவுக்குமே அவன் வந்தது பிடிக்கவில்லை. அதனால் கனி செய்வது சரியல்ல என்று தெரிந்தாலும் ஒத்துழைத்தார்.
குழந்தையை மட்டும் தூக்கிக்கொண்டு போனார்.
அங்கே வெளியே ஹாலில் அமர்ந்திருந்தவனின் கண்கள் கனிமொழியை எதிர்பார்த்து காத்திருந்தது. அவன் ரத்னம் ப்ரியாவுக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளையின் அண்ணன்…. இவர்களை போல தறி நெய்வது தான் அவனின் தொழிலும்…. அவனுக்கு அவனின் மனைவிக்கும் சில சிறிய பிரச்சனைகள். அது இருவரும் வளைந்துக் கொடுக்காததால் வளர்ந்து பெரிதாகி விவாகரத்தில் முடிந்திருந்தது.
பல கணவன் மனைவியின் மனக்கசப்புகளை மீறி அவர்களை இணைக்கும் பாலமாக விளங்கும் குழந்தைகளும் அவர்களுக்கு இல்லாதது இன்னும் குறையாகப் போய்விட அவனின் மணவாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்தது.
இப்போது ப்ரியாவை அவனின் தம்பிக்கு உறுதி செய்யும் விழாவில் கனிமொழியை பார்த்ததில் இருந்து அவளின் அழகு அவள் மேல் அவனை பித்துக் கொள்ள செய்திருந்தது.
அது மட்டுமன்றி அவளின் பின்புலம் அதாவது அவளின் கணவன் மூலம் அவளுக்கு வந்திருந்த சொத்துக்கள் அவனின் ஆசையை இன்னும் அதிகரிக்க செய்தது. அவ்வளவு சொத்துக்கள்.
எப்படியாவது அவளை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை அவனுள் ஆழமாக விதைத்திருந்தது.
அவனின் எண்ணத்தை அவனின் பெற்றோரிடம் சொல்லி அவர்கள் மூலமாக அவளை பெண்கேட்டிருந்தான். கனிமொழி மறுத்துவிட்டாள் என்ற செய்தி அவனை எட்டியிருந்தது. எப்படியாவது அவளின் சம்மதத்தை வாங்கிவிட வேண்டும்.
அதற்கு முதலில் அவளுடன் ஒரு அறிமுகத்தை ஏற்படுத்தி அவளுடன் பழக வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் அவனின் அம்மா குழந்தையைப் பார்க்க கிளம்பிக்கொண்டிருந்த போது அதை சாக்காய் வைத்து அவனும் உடன் கிளம்பியிருந்தான்.
கனிமொழியை பார்க்க அவன் கண்கள் எதிர்பார்த்திருக்க அவள் வராமல் குழந்தை மட்டும் வந்தது அவனுக்கு மிகுந்த ஏமாற்றம். அவளைப் பார்க்காமல் கிளம்புவதாக அவனுக்கு எண்ணம் இல்லை. எத்தனை சிரமப்பட்டு அவனின் அம்மாவை சரிகட்டி அழைத்து வந்திருக்கான் அவ்வளவு சீக்கிரம் கிளம்பி விடுவானா என்ன?
அவன் நேரம் வீட்டில் ஆண்கள் யாரும் இல்லை அவளின் அப்பாவும் இல்லை அண்ணனும் இல்லை…….. ப்ரியா அமர்ந்து அவளின் மாமியாராக வரப்போகிறவரிடம் பேசிக்கொண்டு இருந்தாள்.
அந்த பெண்மணியின் கைகளில் குழந்தையைக் கொண்டு வந்து கொடுத்தார் கனிமொழியின் அம்மா.
“அவளுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை தூங்கிட்டு இருக்கா! அதுதான் குழந்தையை மட்டும் தூக்கிட்டு வந்தேன்!”, என்றார்.
பரவாயில்லை எங்களுக்கு ஒண்ணும் அவசரமில்லை முழிக்கட்டும் இருந்து பார்த்துட்டுப் போறோம் என்றார் அந்த பெண்மணி.
“இதேதடா வம்பு! இவர்களை எப்படி சமாளிப்பது!”, என்று கனிமொழியின் அம்மா யோசித்துக் கொண்டிருந்தார்.
குழந்தையும் அவர்களின் கையில் சற்று நேரமே அமைதியாக இருந்தது பிறகு சிணுங்க ஆரம்பிக்க….. “குழந்தைக்கு பசி போல”, என்றார் அந்த பெண்மணி…..
வேறுவழியில்லாமல், “ப்ரியா, அக்காகிட்ட குழந்தையை கொண்டு போ”, என்று அவளின் அம்மா கொடுத்தனுப்பினார்.
ப்ரியா உள்ளே குழந்தையை கொண்டு வரவும், “அவங்க போயிட்டாங்களா”, என்றாள் கனிமொழி.
“இல்லைக்கா”, என்றாள் சங்கடமாக ப்ரியா.
“ப்ச்!”, என்ற கனி…….. “என்ன இம்சைடி இது”, என்று அவள் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே அசோக் வீட்டிற்கு வந்துவிட்டான்.
அவன் அங்கே அந்த பெண்மணியுடன் இருந்த அவரின் மூத்த மகனை எதிர்பார்க்கவில்லை.
இருந்தாலும் பேசியாக வேண்டுமே சம்மந்தம் செய்ய போகிறவர்கள் ஆயிற்றே என்று ரத்தினத்திடம் கடனே என்று பேச்சு கொடுத்துக்கொண்டிருந்தான்.
அப்போது பார்த்து கனிமொழியின் குத்தகைக்காரர் ஒருவர் வேறு கனிமொழியை பார்க்க வந்தார்.
அவரைப் பார்க்க கனிமொழி வெளியே வந்தே ஆகவேண்டிய ஒரு கட்டாயம்……
கனிமொழி அவசரமாக நைட்டியிலிருந்து புடவையை மாற்றிக் கொண்டு வெளியே வந்தாள்.
“வாங்க”, என்று பொதுவாக வந்திருந்தவர்களை பார்த்து மரியாதை நிமித்தம் ஒரு வணக்கத்தை வைத்தாள்.
பிறகு குத்தகைக்கராருடன் அமர்ந்து பேச ஆரம்பித்தாள்….. அசோக்கும் அவளுடன் சென்று அமர்ந்துகொள்ள, ரத்னம் மற்றும் அவனின் அன்னையின் பார்வை அவர்களின் மேல் தான் இருந்தது.
“குத்தகை பணம் கொண்டு வந்து இருக்கேன் தாயி”, என்றார் அவர்.
அவர் கொடுக்க, “எண்ணுண்ணா”, என்று அசோக்கிடம் அப்படியே கொடுத்தாள் கனிமொழி.
அவன் எண்ணி பார்த்து, “நான்கு லட்சம் இருக்கிறது”, என்றான்.
“இந்த வருஷம் இது இருக்கட்டும்ங்க அய்யா, அடுத்த வருஷம் கொஞ்சம் சேத்திக் குடுக்கணும்”, என்றாள் கனிமொழி.
“விளைச்சல் இருந்தா கட்டாயம் கொடுக்கறேன்”, என்று அவரும் வாக்குறுதி கொடுத்தார்.
“நீங்க மட்டும்தான் அய்யா வந்திருக்கீங்க, இன்னும் உங்களுக்கு பக்கத்துல விட்ட காட்ல இருந்தெல்லாம் யாரும் வரலையே…….”,
“அதும்மா”, என்று சொல்ல வந்தவர்….. ஹாலில் இன்னும் சிலரும் இருப்பதால் தயங்கினார்.
அவர் தயங்குவதை பார்த்தவள், “அண்ணா நீ இந்த பணத்தை எடுத்து வை!”, என்றுச் சொல்லி……..
“வாங்க அய்யா அப்படிப் போய் பேசலாம்”, என்று அவரை அழைத்துக்கொண்டு முன்னிருந்த வராண்டாவுக்கு வந்தாள்.
பணத்தை வைத்துவிட்டு அசோக்கும் அவளுடன் வந்து இணைந்து கொண்டான்.
“மா, உங்க பங்காளி ஒருத்தன்”, என்று அவர் ஆரம்பிக்க…..
“பங்காளின்னா யாரைச் சொல்றீங்க?”, என்று முதலிலேயே தெளிவுபடுத்திக்கொள்ள விரும்பினாள்.
“உங்க வீட்டுக்காரரோட சித்தப்பா மவன்ங்க! அவரு குத்தகைப் பணத்தை எல்லாம் என்கிட்டே தான் கொடுக்கணும் நான் தான் உரிமைப்பட்டவன் என்கிட்டே தான் கொடுக்கணும்னு தகராறு பன்றாருங்க…..”,
“இவங்கெல்லாம் அதுதான் சாக்குன்னு அவர்கிட்டையும் கொடுக்காம உங்ககிட்டையும் கொடுக்காம தள்ளிப் போட பாக்குறாங்க. என்கிட்டயும் குடுக்க வேண்டாம்னு சொன்னாங்க! எனக்கு மனசு கேக்கலை! நான் குடுத்தது அவங்களுக்கு தெரிய வேண்டாம்மா”, என்றார்.
“யார் அந்த சித்தப்பா மவன்”, என்று கனிமொழிக்கு சுத்தமாக ஞாபகமில்லை. “உனக்கு தெரியுமாண்ணா”, என்றாள்.
“இல்லை கனி! எனக்கு சரியா ஞாபகமில்லை. பார்த்தா தெரியுமோ என்னவோ?”, என்றான்.
அவளுடைய பதினைந்து நாள் திருமண வாழ்க்கையில், என்ன? ஏது? யார்? உறவுக்காரர்கள் என்றெல்லாம் கனிமொழிக்கு சரியாக பிடிப்பட்டதில்லை.
“நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்! உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராதுங்க அய்யா! ஆனா உங்களால முடிஞ்சா என்ன நடக்குதுன்னு மட்டும் எனக்கு சொல்றீங்களா! நான் அதுக்கு தகுந்த மாதிரி ஏற்பாடு பண்ணிக்குவேன்!”, என்றாள்.
“அதுக்கென்னா அதுக் கூடச் செய்ய மாட்டேனா, நான் சொல்றேன் தாயி”, என்றார் அவர். பின்னர் அவரை உள்ளே அழைத்து சென்று அவருக்கு காபி கொடுத்து விடைகொடுக்க……. அதுவரைக்கும் சட்டமாக ரத்னமும் அவனின் அம்மாவும் அமர்ந்திருந்தனர்.
அவன் அமர்ந்திருந்ததைப் பார்த்த அசோகிற்கு இன்னும் கவலையாகப் போயிற்று…. கனிக்கு இத்தனை பிரச்சனைகளா என்று.
அந்த ரத்னத்தின் பார்வை தன்னை தொடர்வது கனிமொழிக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.
ஆத்திரம் தலைக்கேறியது இருந்தாலும் அந்த வீட்டில் ப்ரியாவை திருமணம் செய்து கொடுக்கப் போகிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அமைதிக் காத்து அந்த இடத்தை விட்டு அகன்றாள்.
கனியின் பார்வையே தன்னை முறைத்து பார்ப்பதை உணர்ந்த ரத்னம், அவளுக்கு தன்னைப் பிடிக்கவில்லை என்பதை உணர்ந்துக் கொண்டான். “உனக்குப் பிடிச்சா என்ன? பிடிக்காட்டி என்ன? என்னைத் தான் கண்ணு நீ கல்யாணம் பண்ணிக்கணும்”, என்று மனதிற்குள்ளேயே சொல்லிக்கொண்டான்.
அவளின் குழந்தையை வேறு அப்போது கையில் வைத்திருந்தான். அது இன்னும் கனிமொழிக்கு பிடிக்கவில்லை. “அண்ணா குழந்தையை வாங்கு! அவனைத் தூங்க வைக்கணும்!”, என்று மெதுவாக அசோக்கின் காதைக் கடிக்க….. அவன் பேச்சு கொடுத்துக்கொண்டே லாவகமாக குழந்தையை கையில் வாங்கி, கனிமொழியிடம் கொடுத்து அவளை உள்ளே போகுமாறு சைய்கை செய்து அவளை அனுப்பினான்.